Episode 9
“மை மம்மி இங்க டாடி அங்க, அக்கா டாடி இங்க மம்மி இங்க, அக்காவுக்கு மத்தும் மாமா இக்காங்க, எனக்கு எங்க?” என்று அமிழ்தா மிழற்றிட, அந்த விஸ்தாரமான ஹாலின் அமைதியில் எல்லாருக்கும் நன்றாகவே கேட்டது. அமிழ்தா கேட்டது என்னவோ அம்மாவிடம். ஆனால் அவள் பதில் பேசவில்லை.
சௌந்தர்யா பேத்திகாகப் பதில் சொல்ல வர, அதற்குள் அவரே எதிர்ப்பாரா வகையில், பிரசன்னா அமிழ்தாவின் பக்கம் பார்த்து,
“அமிழ்து பேபியோட மாமா இங்க இருக்கேன்” என்றதை மொத்த குடும்பமும் ஆச்சரியமாகவே பார்த்தது.
மலரோ,
‘இவனுக்குப் ப்ரண்டு பொண்டாட்டியைத் தான் ஏத்துக்க முடியாது போல, பொண்ணைப் பார்த்தவுடனே பாசத்தைப் பாரு’ என்று மனத்தினுள் நினைத்தாள். பிரசன்னாவிற்கும் நண்பனின் மகளைத் தூக்கிக் கொஞ்சி முத்தாட ஆவல் பிறக்க, இத்தனை நாள் அதற்கான அவகாசமோ ஆசுவாசுமான சூழ்நிலையோ அமையவில்லை என்பதால், இப்போது அவனாகவே அமிழ்தாவைப் பார்த்து,
“பேபி நீயும் வாயேன் மாமா கிட்ட” என்று கைகளை விரிக்க, எல்லார் பார்வையும் அமிழ்தாவிடம் இருக்க, அமிழ்தா வழக்கம்போல் அம்மாவைப் பார்க்க, அவள் ‘போ’ என்பதாகத் தலையசைத்தாள். உடனே தத்தித் தாவி அவனிடம் ஓட, பிரசன்னாவே எழுந்துவந்து அவளை தூக்கிக் கொண்டான். நண்பனின் அருகே போய் உட்கார்ந்தவன்,
“என்னடா உன் பொண்டாட்டி உன்னை மாதிரி உன் பொண்ணையும் அவ கண்ணசைவில வச்சிருக்கா, அவ போ சொன்னதான் வரா?” என்று கிண்டல் செய்ய,
“நீ என் தங்கச்சியைக் கண்ணசைவில நடத்துறியே, அதுமாதிரிதானே?” என்று ஜனாவும் திருப்பிக் கொடுத்தான். ஜெயப்பிரகாஷத்தில் ஆரம்பித்து வர்ணவி வரை அவனை தாங்கத்தான் செய்வார்கள்.
ஜனா சொன்னதிற்கு ஒன்றும் பேசாமல் அவன் அமிழ்தாவிடம் பேச ஆரம்பிக்க, அப்பாவின் மடியில் அமிழ்தா உட்கார்ந்திருப்பதைக் கண்ட சாத்வி,
“அப்பா, என்னைத் தூக்குங்க” என்று சொல்லி மாமனிடமிருந்து தாவ,
“சாத்வீ, நான் பாப்பாவை வச்சிருக்கேன்ல, கொஞ்ச நேரம் மாமா கிட்ட இருடா” என்றான் பிரசன்னா. சாத்வியும் சின்ன குழந்தைதானே? இத்தனை வருடங்களாக அவள் மட்டுமே அந்த வீட்டின் செல்லக்குட்டி, எல்லாரும் பிரசன்னாவை எப்படி பார்ப்பார்களோ அப்படிதான் சாத்வீகாவையும் பார்த்து பார்த்து வளர்த்தார்கள். இப்போது புதிதாய் ஒரு குழந்தை அந்த கவனத்தை ஈர்த்துவிட, சாத்விக்கு அது பொறுக்கவில்லை.
“இல்ல, நான்தான் அப்பா கிட்ட இருப்பேன், என்னைத் தூக்குங்கப்பா” என்று சாத்வீ கத்த, பிரசன்னா உடனே,
“சாத்வீ அப்பா சொல்ற பேச்சைக் கேளு, நீ எப்பவும் மாமா கிட்ட இருப்பதானே? கொஞ்ச நேரம் அமிழ்தா அவ மாமா கிட்ட இருக்கட்டுமே” என்று அதட்டலாகப் பேச, அது இன்னும் சாத்வீயைத் தூண்டிவிட்டது.
“நோ நோ என்னோட அப்பா என்னைத் தான் தூக்கணும், அந்த பாப்பா அவ அப்பா கிட்ட போட்டும்” என்று அழுகையுடன் கத்த, அமிழ்தா பயந்துவிட்டாள். அமிழ்தா பிரசன்னாவிடம் இருந்து நழுவப் பார்க்க, அவன் விடாது பிடிக்க அமிழ்தாவும் அழத்துவங்கிட, வீட்டினர் எல்லாருக்கும் ஒரே சங்கடம். ஜெயப்பிரகாஷமும் ரங்க நாயகியும் மட்டுமே அங்கில்லை, அவர்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை.
சுதந்திரா என்ன நினைப்பாளோ என்று பிரசன்னாவும் மற்றவர்களும் அவளைப் பார்க்க, அவளோ ஒன்றும் பேசாமல் மகளிடம் வந்தவள், அமிழ்தாவைத் தூக்கினாள்.
“சாத்வீ அக்கா அவ அப்பா மடியில உட்காரட்டும், நீ உன் அப்பா மடியில உட்கார்ந்துக்கோ பேபி” என்று சொல்லி ஜனாவின் மடியில் உட்கார வைக்க, அமிழ்தாவும் அம்மாவின் பேச்சைக் கேட்டு ஜனாவின் மடியில் ஜம்மென்று உட்கார, ஜனா மகளைத் தனக்குள்ளே பொத்தி வைத்துக் கொண்டான்.
சாத்வீகாவைத் தூக்காமல் பிரசன்னா மகளை முறைத்துப் பார்க்க, மலர் சாத்வீயைத் தூக்கிப் பிரசன்னாவின் மடியில் உட்கார வைத்து,
“இப்போ கேர்ள்ஸ் எல்லாம் அவங்க அப்பா மடியில உட்காந்தாச்சா, ஹாப்பியா சாத்வீ பாப்பா?” என்று கேட்க, ‘ம்ம்’ என்று சாத்வீ தலையாட்டினாள். ஆளாளுக்கு அவர்கள் பெண்களை வைத்திருக்க, சௌந்தர்யா கிச்சனுக்குள் புகுந்தவர் மருமகளை உள்ளே அழைத்து,
“எப்பவும் எல்லாரும் அவளையே கொஞ்சிட்டு இருப்பாங்க இல்ல மலர், இன்னிக்குப் புதுசா நம்ம எல்லாம் அமிழ்தாவையே பார்க்கவும் அவ கோச்சிட்டா, நீ மனசுல எதுவும் வச்சிக்காத” என்றார்.
“அச்சோ அத்தை, குழந்தைங்கன்னா அப்படிதான் இருப்பாங்க, அவ என் வர்ணவி பொண்ணு, என் ஜனாவோட தங்கச்சி பொண்ணு நீங்க இப்படி சும்மா சீரியல் மாமியார் மாதிரி டயலாக் விடாதீங்க என்ன?” என்று அவரைக் கலாய்த்துவிட, சௌந்தர்யா சும்மா இருக்காமல்,
“எனக்கு ஒரு டவுட், ஜனாவுக்கு இப்போ அம்னீசியா ஓகே, உனக்கு அம்னீசியா இல்லைதானே? வார்த்தைக்கு வார்த்தை என் ஜனான்னு சொல்றவ ஏன் அவனை விட்டுப் போன?” என்று விட்ட இடத்தில் தொடங்கினார்.
அவர் அதையே பேச கடுப்பான மலர்,
“ம்ம், அமெரிக்காவுக்கு ஃப்ரீயா டிக்கெட் கொடுத்தாங்க, அதான் சுத்திப் பார்க்கப் போனேன் அத்த” என்று நக்கலாகப் பதில் சொல்ல,
“உனக்குக் கொஞ்சமாச்சும் மாமியார்னு பயமிருக்கா எங்கிட்ட?” என்று அவர் விளையாட்டாகக் கேட்டார்.
“எனக்கு என்ன பயம் அத்தை? அதுவும் உங்களைப் பார்த்து?” என்றவளுக்கு சிரிப்பு வந்துவிட,
“சிரிக்கிறியா வாயாடி” என்று அவர் மலரின் தோளில் தட்டிக்கொடுத்தார்.
“ஒரு உண்மை சொல்லவா?” என்று கேட்டவளிடம்,
“அம்மாடி அதைத்தான் உங்கிட்ட கேட்டுட்டு இருக்கேன் இத்தனை நாளா” என்று அவர் சொல்ல,
“நான் நீங்க நினைக்கிறதுக்குப் பதில் சொல்லப்போறதில்ல அத்த, ஆனா கண்டிப்பா உங்க கூட கல்யாணமான பின்னாடி இருந்திருந்தா நாங்க பிரிஞ்சி இருக்க மாட்டோம்னு தோணுது” என்றவளின் முகம் வாடி விட, பிரிவும் பிரிந்த நாட்களும் கண்முன்னே தோன்ற, கண்களில் நீர் ததும்பி நிற்க விழிகளை மூடிக்கொண்டாள்.
“மாமியார் கொடுமை இல்லாம பீல் பண்ணின ஒரே மருமக நீதான் டி” என்று அவர் அவளை அணைத்துக்கொள்ள,
“ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கல?” என்று கேட்டாள்.
“நான் எப்போ அப்படி சொன்னேன்?
“அப்புறம் ஏன் எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கல, அப்புறமும் ஜனா உங்க கிட்ட பேச ட்ரை பண்ணினப்பவும் நீங்க பேசவே இல்ல” என்றாள் வருத்தமாக,
“உன்னைப் பிடிச்சதாலதான் இந்த வீட்டுக்கு நீ வேண்டாம்னு நான் நினைச்சேன், அது ஏன்னு உனக்கே புரியணும். அத்தை மாமா எல்லாம் உன்னை மரியாதையா நடத்த மாட்டாங்க. அவங்களை மீறி இந்த வீட்ல எதுவும் நடக்க விடமாட்டாங்க, ஜனாவும் நாங்க சொன்ன பின்னாடி உன்னோட பேச்சுவச்சுக்கலன்னு நாங்க நினைச்சிருக்க, அவன் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னது எனக்கு அவ்வளவு கோவம் மலர், இப்பவும் அந்த கோவம் எங்கிட்ட இருக்கு”
“இப்பவுமா?” என்று அவள் அதிர்வாய்ப் பார்க்க,
“என்ன இப்பவுமா? எனக்கு என் பசங்கதான் எல்லாமே, உங்க மாமாவுக்கு எப்பவும் செங்கல், சிமெண்ட், ஜல்லின்னு தான் பேச்சு. பிரசன்னாவை நான்தான் வளர்த்தேன்னாலும் அவன் எப்பவும் கொஞ்சம் மெச்சுர்டா இருப்பான், ஆனா ஜனா அப்படியில்ல, அவன் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், பசங்க எப்பவும் அம்மா கிட்ட க்ளோஸ் சொல்வாங்க இல்ல, அப்படிதான் இருப்பான். உனக்கு நான் ஒரு உண்மை சொல்லவா? நீங்க இரண்டு பேரும் திருட்டுத்தனமா கல்யாணம் செஞ்சிங்க இல்லையா? அட்லீஸ்ட் அதுக்கு என்னைக் கூப்பிட்டிருந்திருக்கலாம்” என்றதும் மலர் பக்கென்று சிரித்துவிட்டாள்.
“எனக்கு ரொம்ப வருத்தம் என்னதுன்னா ஜனா எங்கிட்ட சொல்லாம அப்படி செய்வான்னு நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல. என்னோட நம்பிக்கை உடைஞ்சிப்போச்சு, அதான் கோபம்” என்றதும் அவரின் கையைப் பிடித்தவள்,
“சாரி அத்தை, இங்க எல்லாரும் ஒத்துக்கலன்னதும் அவர் உடனே கல்யாணம் செஞ்சுக்கலாம் சொல்லிட்டார், உங்களைக் கஷ்டப்படுத்திட்டோம்” என்று தலைகுனிந்தவாறே சொன்னாள்.
“பரவாயில்லன்னு சொல்ல ஆசைதான், ஆனா அது முடியல. விடுங்க இனிமே சந்தோஷமா இருங்க” என்றவர் வெளியே எட்டி மணி பார்த்தார். ஆறாகிவிட,
“முதல்ல வந்து நீ விளக்கேத்து மலர், நேரமாச்சு” என்று அழைக்க, அவளும் விளக்கேற்ற, சரியாக அப்போது சாமி கும்பிடவென ரங்கநாயகியும் ஜெயப்பிரகாசமும் வந்துவிட்டனர்.
மலர் விளக்கேற்றுவதைப் பார்த்த ஜெயப்பிரகாஷ் மனைவியைப் பார்க்க, அவரும் கோபத்துடன்,
“ஏய் சௌந்தரி, என்ன இது, இவ ஏன் நம்ம வீட்ல விளக்கேத்துறா?கொஞ்சம் இடம் கொடுத்தா எல்லாம் உங்க இஷ்டத்துக்கு ஆடுவீங்களா? என்று அவர் சௌந்தர்யாவைத் திட்டினார்.
ஜகன் உடனே
“மா, வீட்டு மருமக விளக்கேத்துறதுல என்ன தப்பு கண்டுபிடிச்ச?” என்று அம்மாவைப் பேச, அவரோ
“அந்த பொண்ணுக்காக என்னைப் பேசுவியா நீ?” என்று சொல்லிவிட்டார்.
ஜகன் அம்மாவை முறைக்க, பிரசன்னா உடனே
“என்ன அந்த பொண்ணு? அவ இந்த வீட்டு மருமக, உங்க பேரனோட மனைவி. அதைவிட உங்க நாட்டாமையெல்லாம் உங்க மருமகளோட நிறுத்திக்கோங்க அம்மாச்சி. அத்தை அவங்க மருமகளைப் பார்த்துப்பாங்க” என்றான் அதட்டலாக. அவர் பதில் பேசக்கூட இடம் கொடுக்காதவன்,
“அத்தை நீங்க அவளை செய்ய சொல்லுங்க” என்று சௌந்தர்யாவைப் பார்க்க, சௌந்தர்யா மருமகளைப் பார்க்க மலரும் விளக்கேற்றி சாமியை வணங்கினாள். இதை ஜனார்த்தன் வருத்தமுடன் பார்த்தான், இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று.
அவன் அமைதியாக மகளுடன் உட்கார்ந்திருக்க, ஜெயப்பிரகாஷ் அவனைப் பார்த்தவர்,
“என்ன ஜனா வலியெல்லாம் பரவாயில்லையா? முதல்ல உன்னோட பழைய கார் மாத்து, பிரசன்னா உன்னை மாதிரி இவனுக்கும் நல்ல கார் வாங்கிக் கொடுடா” என்றார்.
“வலியெல்லாம் இருக்குதான், எனக்கு என்னோட காரே போதும். ஏழெட்டு வருஷம்தான் ஆகுது அந்த கார் வாங்கி, அதை ஏன் மாத்தணும்?” என்று மறுத்துவிட்டான்.
“தாத்தா அதை அப்புறம் பார்க்கலாம்” என்று பிரசன்னா முடித்துவிட, ரங்க நாயகி பேரனிடமிருந்த அந்த குட்டி குழந்தையைத்தான் பார்த்தார். ஆனாலும் அவரின் கெத்தைவிட்டு குழந்தையைக் கேட்க மனம் வரவில்லை.
“டேய் ஜனா, உடம்பைப் பார்த்துக்கோ டா” என்றவர் சௌந்தர்யாவிடம்,
“இவனுக்குத் திருஷ்டி சுத்திப் போடு” என்று உத்தரவிட்டு போனார்.
ஜனார்த்தன் குழந்தையுடன் மாடியேறி போய்விட, மலரும் அவனுடன் போனாள். அமிழ்தா மாடிக்குப் போனதும் அம்மாவிடம் தாவப் பார்க்க,
“அப்பாவை விட்டு நீ இறங்க கூடாது” என்று கண்டிப்பாய் சொல்லி ஜனாவின் அருகே உட்கார்ந்தாள்.
“ஏன் மலர் நம்ம கல்யாணம் முடிஞ்சதும் இவங்க நம்மளை ஏத்துக்கலையா?” என்று கேட்க,
‘அட இவன் வேற’ என நினைத்த மலர்,
“ஆமா, நம்ம இத்தனை வருஷம் தனியா இருந்தோம், இப்போ நான் யூஸ் போன பின்னாடி நீங்க இங்க வந்தீங்க” என்று பதில் சொன்னாள்.
‘இவ நடிப்பைப் பாரேன்’ என்று மனதுக்குள் நினைத்தான் ஜனா.
மலர் “அமிழ்தா அப்பாவுக்கு ரைம்ஸ் சொல்லு” என்றதும் அமிழ்தா உற்சாகமாக சொல்லத் துவங்க, அப்படியே அவர்கள் பொழுது போக, இரவு உணவுக்கு சௌந்தர்யா கீழே அழைத்தார்.
“எனக்கு மேல கொடுத்துவிடு மா, டயர்டா இருக்கு” என்று ஜனா மறுத்துவிட, அமிழ்தாவை சௌந்தர்யாவிடம் கொடுத்தவள் ஜனாவிற்கு உணவினை எடுத்து சென்றாள். அவனுக்கு சாப்பிட கொடுத்து அவள் வீட்டினரிடம் பேசிவிட்டு கீழே வரும்போது அமிழ்தா அவளின் தாத்தா பாட்டி அறையில் இருக்க, குழந்தையை வாங்கப்போனவளிடம் ஜகன்,
“மலர், அம்மா பேசினதை மனசுல வச்சுக்காதம்மா” என்று சொல்ல,
சௌந்தர்யா உடனே,
“அவ அவ மாமியாருக்கே பயப்பட மாட்டா, உங்கம்மாவையெல்லாம் அவ கண்டுக்கவே மாட்டா, வேணும்னா உங்கம்மாவை என் மருமக கிட்ட ஜாக்கிரதை இருக்க சொல்லுங்க” என்று கணவரிடம் சொன்னதும், மலர் அவரை முறைத்தாள்.
“என்னை வச்சு உங்க மாமியாரைத் திட்டிக்கிறீங்க போல அத்தை” என்றாள்.
“போல எல்லாம் இல்ல, அதான் உண்மை” என்றவர்,
“நீ வா சாப்பிடலாம்” என்று அழைத்துப் போனவரும் அவளுடனே உட்கார்ந்து சாப்பிட்டார்.
“ஏன் அத்தை இன்னும் சாப்பிடாம இருக்கீங்க?” என்று அக்கறையில் கேட்டவளிடம்,
“நீ போய் ரூம்ல ஒளிஞ்சிட்ட, கீழே வரவே மாட்டேங்கிற. உனக்கு தனியா உட்கார்ந்து சாப்பிட கஷ்டமா இருக்கும், அதான்” என்றவரைப் பார்த்து புன்னகைத்தவள்,
“இவ்வளவு நல்ல மாமியார் எல்லாம் இருக்காதீங்க” என்றாள் மலர்.
“இருந்துட்டுப் போறேனே அதுக்கென்ன? உன்னோட ப்ரண்ட் உன்னைக் கவனிப்பா பார்த்தா அவ மாமா பின்னாடியே தான் சுத்துறா” என்று மகளைக் கிண்டல் செய்தவர்,
“வர்ணவிக்கு ஏன் நீ ஒன்னும் சொல்லாம இருந்துட்ட மலர்?”
“அத்தை, எனக்கு அப்போ நிறைய கோவம், வருத்தம் அதான் சொல்லாம இருந்துட்டேன், சாரி அத்தை” என்றவளின் முகம் வாடியிருக்க பாவம் பார்த்து அப்போது விட்டார் சௌந்தர்யா.
ஜகன் சௌந்தர்யாவிடம்,
“சௌ! இப்போதான் சந்தோஷமா இருக்கு, எப்படியோ ஜனா குடும்பமா இருக்கான். ஆனா அவனுக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்தா என்னாகுமோன்னு பயமா இருக்கு” என்றதும்,
“அவனுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு” என்று பட்டென்று சொன்னார் சௌந்தர்யா.
“சௌ, என்ன சொல்ற நீ?” என்றார் ஜகன் அதிர்ச்சியாகி.
“என்ன சொல்றாங்க, உங்க பையனுக்கு அம்னீசியா எல்லாம் ஒன்னுமில்ல, எல்லாம் சும்மா ட்ராமா” என்றவர் நடந்த எல்லாம் சொல்ல,
“எதுக்கு நீ எங்கிட்ட சொல்லாம மறைச்ச?” என்று சண்டைக்கு வர
“ஆமா சொல்வாங்க, நானே தானே கண்டுபிடிச்சேன், நீங்களும் அப்படி கண்டுபிடிக்க வேண்டியதுதானே?” என்றதும் அவர் முகம் வருத்தம் காட்டியது.
“எனக்கு என் பசங்கள தெரியவே இல்ல சௌ” என்ற கணவரின் பேச்சும் அதன் வருத்தமும் புரிய,
“அய்யோ இதுக்கு ஏன் ஃபீல் பண்றீங்க நீங்க? உங்க பையன் ஆக்டிங் பண்ண சொன்னா ஓவர் ஆக்டிங் பண்றான், அதான் நீங்க கண்டுபிடிக்கல”
“பையன் மட்டுமா? பையனோட அம்மாவும்தான்” என்றார் முறைப்புடன்.
“ஹிஹி நான் ஸ்கூல் ட்ரமாவுல எல்லாம் அப்போ நடிப்பேன்” என்று அவர் பெருமை சொல்ல,
“ரொம்ப பெருமையோ? அறிவிருக்கா சௌ உனக்கு? அவனுங்கதான் சின்னப்பசங்க அறிவில்லாம பண்றானுங்க, மலருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா எவ்வளவு பிரச்சனை ஆகும். இது ஒன்னும் விளையாட்டு இல்ல, அந்த பொண்ணு அவனுக்கு அடிப்பட்டப்போ நம்ம கூட வந்தா இல்ல, நீங்க எல்லாம் அவளை ஏமாத்துறீங்க, ஒழுங்கா உண்மையை சொல்றதுக்கு என்ன?” என்று திட்டிவிட்டார்.
“உண்மையை சொல்லிட்டு என்ன செய்ய சொல்றீங்க? உங்க மகனும் மருமகளும் எப்படா நேரம் கிடைக்கும், சண்டை போடலாம்னு சுத்துற ஆளுங்க. இப்பவே உங்க பையன் சான்ஸ் கிடைச்சா அவளைப் பேசிடுறான். அவளுக்கும் அவன் மேல பாசம் இருக்கு, ஆனா அவங்க இரண்டு வருஷம் பிரிஞ்சி இருந்துட்டாங்க. இப்பவும் பழசெல்லாம் பேசினா பிரச்சனைதான் ஆகும். அதைவிட அமிழ்தா ஒரு நல்ல சூழ்னிலையில் வளர வேண்டாமா? அப்பா அம்மா அடிச்சிட்டே இருந்தா நல்லா இருக்குமா?”
“அப்போ எத்தனை நாள் நடிப்பான் அவன்? இப்படியே எல்லாம் போயிடும்னு நினைக்கிறியா?” என்று அவர் கடுப்போடு கேட்க,
“அதெல்லாம் போகாதுதான், ஆனா இத்தனை நாள் பிரிஞ்சவங்க சேர்ந்திருந்தா கொஞ்சமாச்சும் புரிஞ்சிப்பாங்க. மறுபடியும் சண்டை வந்தாலும் அவ போக மாட்டா, அதைவிட ஜனாவை நம்ம பையனா மட்டும் பார்க்காதீங்க. அவன் இப்போ ஒரு குழந்தைக்கு அப்பா, அவன் பொண்ணோட இருக்கணும்னு ரொம்ப ஏங்குறான், இப்போ அதுதானே முக்கியம். சும்மா மலரோட சண்டைப்போட்டு அது எல்லாம் தேவை இல்லைதானே?”
“இப்போ அமிழ்தா அவன் கூட இருக்கணும், அதுவும் எந்த சண்டை சச்சரவுமில்லாம நல்லபடியா இருக்கணும், அதுதான் முக்கியம். மலரும் இப்போ கொஞ்சம் மாறிட்டுதான் வரா, அவனுக்காக எல்லாம் செய்றா. அவங்களுக்குள்ள அன்பெல்லாம் அப்படியேதான் இருக்கு. அதைக் காட்டுற நேரம் சூழ்னிலை அமையல போல, இப்போ அது எல்லாம் நடக்குது, அது நல்லதா இருக்கும்போது ஏன் வேண்டாம் சொல்லணும்?” என்று கணவரைக் கேட்டார்.
“ம்ம், நீ சொல்றது புரியுதுதான் சௌ, ஆனா பாரு உண்மைத் தெரியற அன்னிக்கு உன் மருமக உன்னைப் பிச்சு எடுக்கப்போறா” என்று அவர் சிரிக்க,
“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், நீங்க கவலைப்பட வேண்டாம்” என்று அவரும் சிரித்தபடி பதில் தந்தார்.
சுதந்திரா அறைக்குள் சென்று பார்க்க, ஜனா குழந்தையைப் பார்த்தபடி நடந்து கொண்டே இருந்தான். மலர் சென்று,
“ஏன் தூங்காம நடக்குற ஜனா?” என்று விசாரித்தாள்.
“எனக்கு ஒரு டவுட், எப்பவும் நம்ம மூணு பேரும் எப்படி தூங்குவோம்?” என்று கேட்க, மலர் யோசிக்காமல்,
“நம்ம மூணு பேரும் எப்ப ஒன்னா தூங்கினோம்?” என்று மறந்து வார்த்தை விட்டாள்.
‘மாட்டினியா டி ராங்கி?’ என்று அவளைப் பார்த்தவன்
“என்ன சொல்ற மலர்?” என்று அவன் அதிர்ச்சியானவன் போல் நடித்தான்.
‘அச்சோ’ என்று தன் தவறு மலருக்குப் புரிய,
“அ..அது வந்து நம்ம இங்க தூங்கினதில்லை இல்லையா? அந்த ஞாபகத்துல சொல்லிட்டேன், அதைவிடு ஒன் இயரா யூஎஸ்ல இருந்தேன் இல்ல” என்று சமாளிக்க, அவளை ஆராய்வது போல் பார்த்தவன்,
“சரி, நம்ம தனியா இருந்த வீட்ல எப்படி தூங்குவோம்?” என்று மீண்டும் அதே கேள்வி கேட்டான்.
“இப்போ ஏன் இந்த ஆராய்ச்சி?” என்று கடுப்போடு அவனைப் பார்த்தவள்,
“நீ அந்த பக்கம், நான் இந்த பக்கம், நடுவுல குழந்தை அப்படிதான் தூங்குவோம்” என்று கைகளைக் காட்டி சொன்னாள் மலர்.
‘எஸ்கேப் ஆகுறியா டி?’ என மனத்தினுள் அவளைக் கறுவியவன்,
“சரி சரி இப்போ நீ குழந்தையை நல்லா சுவர் பக்கத்துல படுக்க வை. நீ நடுவுல, நான் அப்புறம்” என்று அவன் விளக்க, அவளோ விளக்கெண்ணெய் குடிப்பது போல் அவனைப் பார்த்தாள்.
“அதெல்லாம் வேண்டாம்” என்று உடனடியாக மறுத்தவளிடம்,
“எனக்குக் கையில காயமிருக்கு, நான் குழந்தையை இடிச்சிட்டா, நீ நடுவுல படுத்து எங்களை பத்திரமா பார்த்துக்கோ” என்றவன் அவன் சொன்னது போலவே போய் படுத்துக்கொண்டான்.
அமிழ்தாவை சுவரோரம் தள்ளிப்படுக்க வைத்த சுதந்திர மலர் நடுவே படுத்துக்கொள்ள, என்னமோ அச்சங்கள் அகமெல்லாம்.
அவள் அச்சப்பட்டது போலவே, அவள் அமிழ்தாவைப் பார்த்தபடி அமைதியாகப் படுத்திருக்க, பின்னால் இருந்து ஜனாவின் கைகள் அவளை அணைத்துக்கொள்ள, அவனின் முகம் அவள் முகம் அருகே.
“ஜனா தூங்கு” என்று அவள் அதட்ட,
“ம்ம் ஒரு வருஷம் என்னை விட்டு அமெரிக்கா போன தானே டி? இத்தனை நாள் தனியா தானே இருந்திருப்பேன், இப்ப ஐ ஜஸ்ட் வாண்ட் டூ ஃபீல் யூ” என்றவன் ஒன்றும் செய்யவில்லை, அணைத்தபடியே மருந்தின் வீரியத்தில் உறங்கிப்போனான். ஆனால் மலரின் உறக்கம் மொத்தமாக போயிற்று. ஏற்கெனவே பகலில் உறங்கிவிட்டாள், அப்போது அவனை அணைத்துதான் கிடந்தாள். அது அந்த நேரம் அமிழ்தாவைப் பற்றிய அவனது கவலையைப் போக்கிட வேண்டும் என்பதே முக்கியமாக இருந்தது.
இப்போதோ தன்னுணர்வு பற்றி எரிய, அவனின் அணைப்புக்குள் அவஸ்தையின்றி உறங்கிட முடியவில்லை. இவ்வளவு பாசம் இருப்பவன் என்னை விட்டு எப்படி இருந்தான் என்ற எண்ணங்கள் எழும்ப, மெல்லமாக அவனை விட்டு விலகி எழுந்தவள் அங்கிருக்கும் ஸோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள். அப்படியே அந்த அறையில் ஒளிர்ந்த மெல்லிய வெளிச்சத்தில் அவனின் புத்தக அலமாரி கண்ணில் பட, அருகே செல்ல அங்கே மேஜை மீது, ட்விலைட் ப்ரேக்கிங் டான்(Twilight: Breaking Dawn) என்ற Stephanie Meyer புத்தகம் இருக்க, பால்கனி பக்கமாக நகர்ந்தவள் வேகவேகமாய் அதன் பக்கங்களைப் புரட்டினாள்.
முதல் பக்கத்தில் எப்பவும் போல் ‘ஜே’ என்றும் அதன் பக்கத்தில் ‘எம்’ என்றும் ஆங்கில வார்த்தைகள் இருக்க, அதனைத் தடவிக் கொடுத்தாள்.
ஜனாவின் எல்லா புத்தங்களிலும் முதல் பக்கம் ‘ஜே’ என்று எழுதுவது அவன் பழக்கம், மலரின் மீதான காதல் மலர்ந்த பின் ‘ஜே’ அருகே ‘எம்’ வந்துவிட்டது. ஒருவேளை தன்மீதான கோபத்தில் அதனை அடித்திருப்பானோ என்று நினைத்து இருக்க, அப்படியெல்லாம் இல்லையென்றதும் என்னவோ ஒரு பெரும் நிம்மதி.
பக்கங்களைப் புரட்டியவளின் பார்வையில் ஹைலைட் செய்யபட்ட சில வரிகள் விழுந்தன. அவனிடமிருந்து அவளும் கற்றுக்கொண்டது அந்த பழக்கம்.
‘I wanted him like I wanted air to breathe..not a choice.. a necessity’ என்ற வரிகளில் ‘அவன்’ என்பதற்குப் பதில் ‘அவள்’ என்று மாற்றியிருந்தான், அதனை சுற்றி மலர் மலர் என்று எழுதியிருக்க, அவனுக்குப் புத்தங்களில் கிறுக்குவது சுத்தமாகப் பிடிக்காது.
அப்படியிருக்க அந்த கிறுக்கல் எல்லாம் காதலாகி, காதல் மீகி அவன் செய்தவை என்பது உள்ளத்தில் உறைக்க, காற்றைப்போல் நான் இன்றியமையாதவளாகிப் போனேன் என்றால் ஏன் என்னை விட்டு இருந்தாய்? என்ற கேள்வி அவளைக் குடைந்தெடுக்க, அப்போதே போய் சண்டை போடும் வேகமும் கோபமும் முளைக்க, அவனின் உடல் நிலைக் கருதி, முயன்றுத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
அப்படியே அந்த நிலாவின் நிழலில் அவள் கண்மூடி நிற்க, பின்னிருந்து இரு கைகள் அவளை அணைத்துக்கொள்ள, அவன் எனத் தெரிந்தாலும் அவள் திரும்பவில்லை.
அவளின் அமைதி அவனைத் தூண்ட காற்று தீண்ட இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டான். இருவரின் அகங்களிலும் அலையாய் அலையாய் பல கேள்விகள், கோபங்கள். ஆனாலும் அதை மீறிய, மீகிய காதல் மட்டுமே அங்கே!
‘ஒரு அலை உனது, ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா?’
✅ End of Episode 9
Nice
அலைகள் போலவே