Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 9

காளிதாஸன் 9

கார்த்தி திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து அதனை வீட்டிலும் சொல்ல, “உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்ன அப்புறம்தானே கனிம்மா நான் பேசினேன். இப்போ என்ன ஆச்சு, ஏன் மாப்பிள்ளைகிட்ட போய் கல்யாணம் வேண்டாம் சொன்ன?” என்றார் ராஜரத்னம் ஆற்றாமையுடன்.

கார்த்தியோ, ராஜரத்னத்திடம், “எனக்கு இஷ்டமில்லன்னா விடுங்க” என்றாள் பட்டென்று.

“என்ன இஷ்டமில்ல? அப்பா உன்னைக் கேட்டுதானே முடிவெடுத்தாங்க?” என்று எகிறினான் செல்வரத்னம்.

அண்ணனை நேர்க்கொண்டு பார்த்தவள், “என்னோட வாழ்க்கை, என் இஷ்டம்! என்னைக் கேள்விக் கேட்க, நான் பதில் சொல்ல வேண்டிய ஒரே ஆள் நவீன்தான்! அவர்கிட்ட நான் பேசிட்டேன். உங்க யாருக்கும் நான் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றாள் அழுத்தமாக.

குடும்பமே கார்த்தியின் இந்த அவதாரத்தில் ஆடிப் போயினர். ஏன் என்ற கேள்விதான் எல்லார் மனதிலும், அத்தனை சந்தோஷமாய் நிச்சயத்துக்குத் தயாரானவள் திடிரென நிறுத்த நினைக்கும் காரணம் புரியாமல் கவலையில் ஆழ்ந்தனர்.

அந்த நிச்சயம் நின்று போக, வீட்டில் கலகலப்பே இல்லை. விசாலாட்சியும், ராஜரத்னமும் மகளின் திருமணம் நின்று, உறவுகளுக்குப் பதில் சொல்லியே ஓய்ந்து போனார்கள்.

திருமணம் வேண்டாம் என்ற முடிவில் உறுதிபட நின்றாள்! ஒற்றையாய் நின்று அவள் அப்பாவின் நிம்மதியைக் கெடுக்க நினைத்தாள். இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வந்துவிடும். அதில் எதிர்க்கட்சி ஜெயிக்கவும் வாய்ப்பிருக்க, அப்போது காளிதாஸன் இவர்களை களைந்து விடுவான் என்று மனம் சொன்னது.

இப்போதைக்கு அவளைத் திருப்திப்படுத்தியது அவளின் திருமண விஷயம் மட்டுமே! அதனை வைத்து வீட்டினரைக் கலவரப்படுத்தினாள். அப்பா, அண்ணனுடன் சேர்ந்து அம்மாவையும் கஷ்டப்படுத்துகிறோம் என்று மறுகினாலும் வேறு வழி தெரியவில்லை. தங்களால் மற்றவர்கள் படும் துயரத்தின் முன் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது.

அவளின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியர், கோவில் என்று சுற்றினார் விசாலாட்சி. இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் நடக்காவிட்டால் அதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்று அவர்களின் ஆஸ்தான ஜோதிடர் சொல்லிவிட விசாலாட்சிக்கு அதில் நம்பிக்கை அதிகம். கணவரிடமும் இதனை சொல்ல, ராஜரத்னம் என்ன செய்து மகள் மனத்தை மாற்ற என்று யோசித்தார்.

“இந்த விஷயத்தை எங்கிட்ட விடுங்க. நான் அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்” என்றான் செல்வா. மீண்டும்  திருமண பேச்சை எடுக்க கார்த்தி மறுத்தாள்.

செல்வரத்னமோ, “ஏய்! என்ன கொஞ்சம் டைம் கொடுத்தா ரொம்ப பண்ற நீ? இங்க பாரு கனி, உனக்கு விருப்பமா இல்லையான்னு எல்லாம் நாங்க கேட்கல, இதுதான் உனக்கு நாங்க பார்த்திருக்க மாப்பிள்ளை. இவரோடத்தான் உனக்குக் கல்யாணம். முடியாதுன்ற பேச்சே வரக்கூடாது” என்றான் ஆவேசமாக. ராஜரத்னம் கூட  மகனை அதட்டினார்.

“செல்வா, பாப்பா கிட்ட இப்படிதான் சத்தமா பேசுவியா?” என்று.

“அண்ணா, அக்காவுக்குப் பிடிக்காம மேரேஜ் பண்ணினா அவ எப்படி நல்லா இருப்பா, கொஞ்சம் பொறுமையா பேசுங்க” என்று ராஜீவும் அக்காவிற்காகப் பேச,

“ராஜா,  நீ சின்னப்பையன் அது மாதிரி நடந்துக்கோ. நாலு மாசம் டைம் கொடுத்தாச்சு, நாளுக்கு நாள் பிடிவாதம் அதிகமாகிட்டே போகுது இவளுக்கு. அம்மா எவ்வளவு சொல்றாங்க, கேட்காம இருக்கா” என்று எரிந்து விழுந்தான்.

“எல்லாரும் செல்லம் கொடுத்தது போதும். மினிஸ்டர் வீட்டு மருமகளாக கசக்குதா இவளுக்கு? சுகனுக்கு சொந்தமா சிட்டிக்குள்ள நாலு ஹாஸ்பிட்டல் இருக்கு. இவ நல்ல இடத்துல வாழணும்னு பார்த்து பார்த்து வரன் கொண்டு வந்தா வீணா அடம்பிடிச்சு எல்லாத்தையும் தடுப்பாளா?” என்று எகிறினான்.

கார்த்திக்கு கடந்த மூன்று மாதங்களில் வாழ்க்கை காரிருளாய் மாறி விட்டது, அதெல்லாம் ஒன்றுமில்லை எனுமளவு இந்த ஒருவாரம் இருக்கிறது.

செல்வா, காளிதாஸன் குறித்து கார்த்தியிடம் பேச, இவளும் பொறுக்க முடியாமல் அவனிடம் சண்டையிட, அதில் தங்களின் மறுபக்கம் தங்கைக்குத் தெரிந்து விட்டது என்று உணர்ந்தாலும் கொஞ்சமும் வருந்தவில்லை செல்வரத்னம்.

அப்படி வருந்துபவன் இழிசெயல் செய்ய துணிவானா என்ன? அப்போதும் அகங்காரத்துடனே தங்கையிடம் பேசினான்.

“இங்க பாரு கனி! நான் ஆம்பள எப்படி வேணும்னாலும் இருப்பேன். ஒழுங்கா சொல்றதைக் கேட்டு நடக்கிற வழியைப் பாரு. இப்போ எவளுக்கு என்ன நடந்தா உனக்கென்ன? உன்னை நல்லாதானே நாங்க பார்த்துக்கிறோம், மினிஸ்டர் மருமகளா உன்னை ஆக்க நினைச்சா நீ திமிரெடுத்துப் போய் அந்த டாக்டர் மாப்பிள்ளைகிட்ட வேண்டாம்னு சொல்லியிருக்க, எல்லாம் அந்த காளிதாஸ் கொடுக்கிற தைரியமா?” என்று ஆத்திரப்பட,

“அவரைப் பத்தி பேசாத நீ! ச்ச, உன்னைப் பார்க்கவே எனக்கு அருவெறுப்பா இருக்கு. எனக்கு எவனையும் கல்யாணம் செய்ய இஷ்டமில்லை. உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ போடா” என்று சொல்ல, தங்கை தன்னை மரியாதையின்றி பேசியதில் கன்னத்தில் அறைந்தான்.

“என்னையே எதிர்த்துப் பேசுறியா? மகாலஷ்மினு அப்பா கொடுக்கிற செல்லம் உனக்கு? அதுதான் அப்பாவையே எதிர்த்துப் பேசுறவன்கிட்ட  நீ பேசியிருக்க, அதுக்கே உன்னைக் கொல்லணும்.  இனி நான் சொல்றதுதான் நீ கேட்கனும், கேட்கிற! கேட்க வைக்கிறேன் இருடி!” என்று எச்சரித்து விட்டுப் போனான்.

கார்த்தியும், அவனின் வார்த்தைகளை பெரிதாய் எடுக்கவில்லை. என்ன செய்து விடுவான் அவன் என்ற எண்ணமே! ஆனால்,  செல்வாவை மீறி ஒன்றுமே செய்ய முடியவில்லை.

பெரிய இடத்து வரன்களை எல்லாம் கார்த்தி தட்டிக் கழித்துவிட, அவர்களுக்கும் நவீனுடனான நிச்சயம் நின்றது தெரிந்திருக்க, செல்வா தன் நண்பன் ஒருவனின் தம்பியைக் கார்த்திக்குத் தேர்ந்தெடுத்தான். அவனும் பணம், வசதி பார்த்து திருமணத்துக்கு ஒத்துக் கொண்டான்.

கார்த்தி ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காது, “இவன் சொல்றான்னு எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்க்கிறியாம்மா? இவனே ஒரு பொறுக்கி” என்று கத்தி விட விசாலாட்சி மகளை அறைந்து விட்டார்.

ராஜீவை லெதர் ஃபாக்டரி சம்மந்தமாய் கான்பூர் அனுப்பி விட, அவன் ஒருவன் மட்டுமே அக்காவிற்காகப் பேசுவான், அதிகம் அவளுடன் ஒட்டுதலுடன் இருப்பான் என்று செல்வாவிற்குத் தெரிய, கார்த்திக்கு இந்த முறை தப்பிக்க வாய்ப்பே அளிக்கவில்லை அவன்.

தங்கையின் திருமணம் என்பதை விட தன்னை எதிர்த்துப் பேசியதற்குத் தண்டனை என்றே வஞ்சம் கொண்டான் அந்த வஞ்சகன்.

கார்த்தி இந்த முறையும் மாப்பிள்ளையிடம் போனில் பேசி திருமணத்தை நிறுத்த சொல்ல, அந்த நல்லவன் உடனே செல்வாவிடம் சொல்லிவிட, வீட்டிற்கு வந்து கொந்தளித்தான் செல்வரத்னம்.

கார்த்தியின் செல்போன் பறிக்கப்பட்டது, அவளின் அறையில் தொலைத்தொடர்புக்கு என்று இருந்த அத்தனை சாதனங்களையும் அகற்றினான். வீட்டினரையும் அவளிடம் போன் கொடுக்கக் கூடாது என்று சொல்லி வைத்தான். தாங்க முடியாமல் அப்பாவிடம் பேசினாள் கார்த்தி.

“ஊர்ல இருக்க பொண்ணுங்க வாழ்க்கையை எல்லாம் உங்க பையன் அழிச்சிட்டிருக்கான், உங்க பொண்ணு வாழ்க்கை மட்டும் நல்லா இருக்கணுமா? எனக்கு கல்யாணமும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம். முடிஞ்சா உங்க பையனை எந்த பாவமும் செய்யாம இருக்க சொல்லுங்க” என்று அவரிடம் சொல்ல,

“அதெல்லாம் உனக்கெதுக்கு கனி? அவன் ஆம்பளப்பையன் அப்படித்தான் இருப்பான். நீ அதையெல்லாம் யோசிக்காத, அப்பா உனக்கு நல்லது தானே செய்வேன்” என்று அவர் தந்தையாய் உருக, உடைந்துதான் போனாள் கார்த்தி.

இவர்கள் சொல்லி நான் திருமணம் செய்ய வேண்டுமா, உயிரோடு இருந்தால்தானே திருமணம் என்று சாகக் கூட யோசித்தாள். அவர்களின் இழிசெயலுக்கு என் வாழ்வை நான் அழிக்க வேண்டுமா? இவர்களை சும்மா விடக்கூடாது என்று முடிவு செய்தாள்.

ஒரே வாரத்தில் திருமணம் முடிக்கத் திட்டமிட்டிருக்க, இப்போது அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்றே தத்தை மனம் தவித்தது. கைதியாய் இருந்தாள் கல்யாணப்பெண்.

என் மனதை விட, இந்த திருமணம்தான் முக்கியமா என்று அம்மாவை நினைத்து மனம் வருந்தினாள். இப்படி கண்மூடித்தனமாய் நம்புகிறார்களே, நான் சொல்கிறேன் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று நம்ப மாட்டார்களா என்று குமைந்து போனாள்.

அடுத்த நாள் கார்த்தியின் திருமணம் செல்வா பார்த்த மாப்பிள்ளையுடன். வீட்டிலே திருமணம் வைக்க ஏற்பாடு, மண்டபத்தில் செய்து தங்கை தப்பி விட்டால் என்ன செய்வது என்று மிகவும் கவனமாய் யோசித்து அத்தனையும் செயல்படுத்தினான் செல்வா. ரிஷப்ஷனைப் பெரிதாய் நடத்திக் கொள்ளலாம் என்று வீட்டினரை சமாதானம் செய்தான்.

அன்று மாலை கார்த்தியைப் புடவையில் தயாராகச் சொல்ல, மறுத்தபடி அவள் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க, வெளியே கூச்சல்! ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, காளிதாஸனின் கார் நின்றிருக்க, கூடவே போலீஸ், மீடியா என்று நிறைய பேர் குழுமியிருந்தனர். செல்வாவும் ராஜரத்னமும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.

எங்கிருந்தோ ஒரு நம்பிக்கை வெளிச்சம் நங்கையினுள் பிறக்க, அவளை மறைத்து நின்றிருந்த அண்ணி, அம்மா எல்லாரையும் தள்ளி விட்டு வாசலுக்கு ஓடி வந்தாள்.

ஒட்டுமொத்த கவனமும் அவள் மீது இருக்க, கேமிராக்கள் எல்லாம் அவளைப் பார்க்க, அவள் கவனம் அதில் இல்லை.  அத்தனை நாள் வேதனைக்கு விடையும், வெளிச்சமும் கிடைத்த உணர்வு. காக்க வந்த காளிதாஸனைக் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டாள் கார்த்தியாயினி.

அவளின் செயலில் எல்லாருமே அதிர்ந்து போக, அடுத்த நாள் தலைப்பு செய்தியானாள் அவள். 

அவளால், காளிதாஸனும்!

✅ End of Episode 9
How did you feel about this episode?
❤️ 4 😂 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Kavi Natarajan Reader 1 week ago

💞💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Srichitra Reader 1 week ago

Very nice 

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 1 week ago

காளிதாஸ் வந்தாச்சு 😂😂😂😂 

கண்ணீர் சிந்திய 

கார்த்தாயினியை காப்பாற்ற.....
😂 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top