Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 33

காளிதாஸன் 33

தேன்நிலவு முடிந்து வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிற்று. இயல்பாக சென்றது வாழ்க்கை. அன்று காலை, கார்த்தி காலை உணவு செய்யும் போது காளிதாஸன்,

“கார்த்தி! இங்க வாம்மா” என்று ஹாலில் இருந்து குரல் கொடுத்தான். அவள் வரவும்,

“ராஜீவ் உங்கிட்ட பேசணுமாம், பேசு” என்றவன் மனைவியின் தோளை சுற்றி கைகளைப் போட்டுக் கொண்டான். ஆசையாக இல்லாமல், ஏதோவொரு அழுத்தம் அதில். 

நானிருக்கிறேன் என்ற வகையிலானது.

“இவன் கால் பண்ணினதுக்குதான் இத்தனை கத்தா? காலையில என்னவாம்?” என்று பேசிக் கொண்டே கணவனிடம் போனை வாங்கிய கார்த்தி,

“சொல்லுடா! என்ன அதிசயம்? காலையில உன் மாமா நம்பர் கூப்பிட்டிருக்க..?” என்றாள். அந்த பக்கம் அமைதி.

“ராஜீவ்! பேசுடா” என்று கார்த்தி சொல்ல,

“எதுனாலும் நான் இருக்கேன் கார்த்திம்மா உனக்கு” என்றான் காளிதாஸன் அழுத்தமாக.

“என்ன தாஸ்?” என்ற கார்த்தியின் குரலிலும் ஒரு பதற்றம் தெரிய, அந்த பக்கம் ராஜீவ் சொன்ன செய்தியில் அதிர்ச்சி. பதில் பேசவே முடியவில்லை. என்ன முயன்றும் கார்த்திக்கு அழுகை வந்தது, காளிதாஸன் அவளை அணைத்துக் கொண்டான்.

அவள் அப்பா ராஜரத்னம் இறந்து விட்டார். அதை சொல்லத்தான் ராஜீவ் அழைத்திருந்தான். காளிதாஸனுக்கு மனைவியிடம் அதனை சொல்லும் மனநிலை இல்லை.

தேர்தல் முடிவுகள் வந்தபின் செல்வரத்னத்தின் செய்கைகளினால் ராஜரத்னம் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். செல்வா அவருக்குப் பிடித்த மகன்தான். அதற்காக மற்ற பிள்ளைகளை அவரால் விட முடியாதே, ஏற்கெனவே மகள் தன்னை விட்டு சென்றதே பெரிய அடி அவருக்கு. செய்த பாவமெல்லாம் செல்வாவினால் வடிவம் கொண்டது.

தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாதவனுக்கு அவ்வளவு ஆத்திரம். தேர்தலுக்காக என்று நிறைய பணம் செலவளித்திற்க, தோல்வியை மறக்க வேண்டும் என்று குடித்தே அழிந்தான் அவன். ராஜரத்னம் கண்டித்தும் கேட்கவில்லை, கண்டிக்கும் காலமும் முடிந்திருக்க, அதற்கான தகுதி இல்லாத ஒருவர் சொல்வது எப்படி செல்லுபடியாகும்?

தொழிலும் சரிவு! செல்வா தொழில் கவனமின்றி தோல்வி தந்த கோபத்தில் இருந்தான். அதுவும் நாளுக்கு நாள் காளிதாஸனுக்குக் கட்சியில் உயர்வும் வெவ்வெறு பதவிகளும் அவனை கொதிக்க வைத்தது.

“பாருய்யா! அப்பன் இல்லாத புள்ள, அவன் எலெஷன்ல ஜெயிச்சிட்டான். அந்த மகாதேவன் ஜெயிக்க வச்சான். நீ அப்பன்னு இருந்தும் என்ன செஞ்ச எனக்கு? முதல் தேர்தல்ல என்னை தோக்க வச்சிட்டியே?” என்று அந்த ஆளிடம் எகிறினான்.

அவரோ, “அவன் தானா ஜெயிச்சான்டா, நான் சொல்றதைக் கேட்காம தறிகெட்டு அலைஞ்சிட்டு என்னைப் பேசுறியா நீ?” என்று அவரும் எகிறினார்.

“நீ பெரிய யோக்கியம்? உன் பொண்ணு வீட்டுக்கு அடங்காம ஓடிப் போய்தான்யா எனக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்தா, ஓடுகாலி…..” என்று மோசமாய் கார்த்தியாயினியைப் பேச, ராஜரத்னம் மற்றதில் எப்படியோ அவரின் மகள் என்றால் அவருக்கு உயிராற்றே! மகன் என்றும் பார்க்காமல் அடித்து விட்டார்.

“உன் பொண்ணுக்கு ஒழுக்கமில்லய்யா..” என்று இன்னும் மோசமாக பேச, அப்பாவிற்கும் மகனும் பயங்கர சண்டை. மூன்று மக்கள் இருந்தும் மூத்தவனின் கூடா நடத்தை, அதைத் தட்டிக் கேட்காத தந்தையின் செயலால் மொத்தமாக மற்ற இருவரும் விலகி இருந்தனர். செல்வாவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்க, சொத்தையெல்லாம் பிரித்து எழுதினார்.

அதுவரை வீட்டிற்குத் தெரியாமல் இருந்த அனைத்தும் தெரிய வந்தது. சொத்தைப் பிரித்து எழுதியது தெரிந்த செல்வா வீட்டிற்கு வந்து கலாட்டா செய்து விட்டான். ராஜீவ் அண்ணனிடம் சண்டையிட,

“என்னையே எதிர்த்துப் பேசுறியா? அவளோட சேர தைரியமா உனக்கு? அவளாலதான் குடும்பத்தோட மானம் போச்சு, கட்சியில பெயரும் போச்சு” என்று செல்வா தங்கையைப் பேச,

“வாயை மூடுடா! அக்காவால குடும்பம் மானம் போச்சா? உன்னாலதான் எல்லாம். நீ ஒழுக்கமா இல்லை, அப்பா உன்னை அப்படி வளர்க்கல. நீ செஞ்ச கேவலமான விஷயத்தாலதான் டா காது வீட்டை விட்டுப் போனா” என்று கத்தி விட்டான்.

அதனைக் கேட்ட விசாலாட்சி, “ராஜா, என்ன சொல்ற?” என்று பதறிக் கொண்டு சின்ன மகனைக் கேட்க,

“என்னன்னு இப்போ கேளுங்க, அக்கா பேச வந்தா அடிச்சு விரட்டி அடைச்சு வச்சிட்டு, அவ கல்யாணமே வேண்டாம்னு சொல்றான்னா ஏன்னு யோசிக்க மாட்டீங்களா? நம்மை எல்லாரையும் விட்டு அந்த மனுஷன் பின்னாடி போனாளே? ஏன்னு யோசனை வேண்டாம். பாசமா இருக்கலாம், ஆனா முட்டாளா இருக்கக் கூடாது” என்றான் கோபத்தில்.

“என்ன என்ன பேசுற ராஜீவ்?” என்று கயலும் பயத்தில் கேட்டாள். மனத்தில் அவ்வளவு பயம். ஏதோ சொத்துக்காக, உரிமைக்காக பேசுகிறான் என்று பார்த்தவளுக்கு பெரிய அதிர்ச்சி.

இன்றையை சூழ்நிலை அவளுக்குப் பெரும் தவிப்பையும் அழுத்தமும் தர, “என்னைக் கேட்காதீங்க? உங்க புருஷனைக் கேளுங்க?” என்று கத்தியவன் அண்ணனிடம் திரும்பி,

“இவ்வளவு நேரம் அக்காவை வாய் கூசாம பேசுனியே? நீயும், அப்பாவும் எல்லா தப்பு செஞ்சும், நம்ம வீட்டு பொண்ணை அவர் எப்படி வச்சிருக்கார் தெரியுமா? இப்போ பேசுடா! கேட்கிறாங்க இல்லை பேசு” என்றான் செல்வாவை முறைத்துக் கொண்டு.

“ஏய்! என்னடா என்னை மிரட்டிப் பார்க்குறியா? எவளுக்கும் பதில் சொல்லணும் எனக்கு அவசியமில்லை” என்றான் எடுத்தெறிந்து. கார்த்தி ஒருத்தியாக தாங்கிய பாரத்தை அன்று மொத்த குடும்பமும் தாங்கியது.

“நீயெல்லாம் என்ன மனுஷன் டா? வீட்டுப் பொண்ணையும் மதிக்கிறதில்ல, வெளியிலயும் பொண்ணுங்களை நிம்மதியா வாழ விடுறதில்லை” என்று செல்வாவை ராஜீவ் பேச, விசாலாட்சிக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கயல் கணவனைக் கேள்வி கேட்க,

“ஹே! என்னடி என்னை எதிர்த்துப் பேசுறியா?” என்று அவளின் கன்னத்தில் அறைந்தான்.

குடும்பமே நிலைக் குலைந்தது. அடுத்த சில நிமிடங்களில் கயல் அவளின் அப்பா வீடு சென்றாள். எல்லாம் சேர்ந்து ராஜரத்னத்தை அழுத்த, ஹார்ட் அட்டாக்கில் உயிர் பிரிந்தது.

கார்த்தி, கணவனின் நெஞ்சில் சாய்ந்து மௌனமாய்க் கண்ணீர் விட்டாள். என்ன இருந்தாலும் அவரின் மகளாகிற்றே, துடித்தது நெஞ்சம்.

காளிதாஸ், “கார்த்தி! நம்ம போகணும், வா” என்றான்.

காளிதாஸ், அவள் வீட்டிற்கு எப்படி வருவான் என யோசித்தாள். யோக்கியனோ, அயோக்கியனோ அவளின் அப்பாவாகப் போய் விட்டார். மகளாக, அவள் செல்லவேண்டும். ஆனால், கணவன்??

“எனக்காக நீங்க பார்க்க வேண்டாம் தாஸ்” என்றாள் தேம்படலுடன். அவளின் முதுகில் தட்டிக் கொடுத்தான் காளிதாஸ்.

“என் கட்சி சார்பா நான் போய்த்தான் ஆகணும்” என்று பெருமூச்சு விட்டவன்,

“வாம்மா” என்று அவளை இழுத்துக் கொண்டு போனான். அங்கு போனதும், வாலி மாலையை எடுத்து வந்து தர, கண்ணாடி பாக்ஸில் இருந்த ராஜரத்னத்திற்கு மாலையைப் போட்டவன், ராஜீவிடம் சொல்லிவிட்டு வெளியே போய் விட்டான். கார்த்தி, அழும் அம்மாவைப் பார்த்தவளுக்குக் கால்கள் அவரிடம் போக நினைக்க, கண்ணீருடன் நின்றாள். வேறு யாரும் கார்த்தியின் கண்ணில் தெரியவில்லை. இவளைக் கண்டதும் செல்வா சண்டையிட எழ, கட்சிக்காரர்கள் அவனைப் பிடித்து வைத்தனர்.

காளிதாஸன் வெளியே செல்லவும் அவன் பின்னே வந்து விட்டாள் கார்த்தி.

“கார்த்தி, நீ இருக்கணும்னா இருந்துட்டு வா. வாலியை இருக்க சொல்றேன்மா” என்றான். அதிலே அவனின் விருப்பமின்மை தெரிந்து விட, கடைசியாக ஒருமுறை அப்பாவைப் பார்த்து விட்டாள். அதற்கு மேல் அங்கிருக்க கார்த்திக்கும் விருப்பமில்லை.

“இல்லைங்க, உங்க கூடவே வரேன்” என்று கார்த்தி சொல்ல, காளிதாஸன் மறுக்கவில்லை. விஷயம் கேள்விப்பட்டு சிவகாமி மருமகளைப் பார்க்க வந்து விட்டார்.

கார்த்திக்கு ஆச்சர்யம்.

“எப்படி அத்த? உங்களுக்கு அப்பா மேல கோபமில்லையா?” என்றாள் குற்றவுணர்வுடன்.

“நான் வந்தது உனக்காக கார்த்திமா, என் மருமகளுக்காக” என்றார், அழுத்தமாக.

எப்படியான மனிதி இவர்? இப்படி சொல்லவும் மனம் வேண்டுமே? ஆனால், தன் வீட்டினர்??

அன்று முழுவதும் கார்த்தியுடன், சிவகாமி இருக்க, கார்த்திக்கு உணவு இறங்கவில்லை. தலை குளித்தவள், மௌனமான அழுகையுடன் அன்றையை நாளை ஓட்டினாள்.

ஒரு வாரம் கார்த்தி, அப்பாவின் மறைவில் துவண்டிருந்தாள். உண்பது, உறங்குவது கூட ஒழுங்கற்றுப் போனது. காளிதாஸன்தான் அவளைத் தேற்றினான்.

அதுவும் கூட கார்த்திக்குக் கஷ்டமாக இருந்தது.

“இப்படி ஒரு அப்பாவுக்காக ஃபீல் பண்றேன், அழறேன் நினைக்கிறீங்களா? கொஞ்சமும் என் மேல கோபமில்லையாங்க உங்களுக்கு?” கார்த்தி குரல் கம்ம கேட்க,

அவளை ஆதரவாக அணைத்தவன், “கண்ணா! உன் அப்பா எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம். யார்னே தெரியாதவங்களுக்காகக் கூட அவங்க இடத்துல இருந்து ஃபீல் செய்ற எம்பதி உங்கிட்ட இருக்கு. சில எமோஷனஸ் மத்தவங்களைப் பாதிக்காத வரைக்கும், சரியா தப்பான்னு ஆராய்ச்சி செய்றதை விட அமைதியா அதை உணர்ந்து கடந்திடணும்”

“உன்னோட அப்பா இல்லை, அவர் எப்படியோ இத்தனை நாள் அப்பான்னு பூமியில இருந்தார். இப்ப இல்லைனும்போது ஏத்துக்க கஷ்டமாத்தான் இருக்கும். நான் உன்னை ஜட்ஜ் பண்ணுவேன்னு நீயே நினைச்சு, உன்னோட உணர்வுகளை அடக்காத” என்று சொல்ல இன்னும் உடைந்துதான் போனாள். கண்ணீருடன் அவன் நெஞ்சில் சாய,

“என் மனைவியோட அப்பா இறந்துட்டார். அதனால, அவ அழறா. அதான் என் எண்ணம். உனக்கும் அதான் எண்ணமா இருக்கணும். எப்பவும் நீ காளிதாஸ் வைஃப் தான்!” என்றான் அழுத்தமாக.

அவனின் பேச்சில் மிகப் பெரிய ஆறுதலை உணர்ந்தாள் கார்த்தி. கொஞ்சம் கொஞ்சமாய்த் தன்னை மீட்டுக் கொண்டாள்.

வாழ்க்கை இயல்புடன் சென்றது.

✅ End of Episode 33
How did you feel about this episode?

You must Log in or Register to react here

💬 0 Replies
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top