Episode 23
“ஹலோ!” கார்த்தி அந்த பக்கம் கணவன் தன் அழைப்பை ஏற்றுப் பேசுவான் என ஆவலில் அழைக்க, எடுத்ததோ வாலி.
“அண்ணி! நான் வாலி” என்றதுமே கார்த்திக்கு மனம் சுணங்கியது.
“அவர் எங்கண்ணா?” ஏமாற்றத்துடன் கேட்க,
“அண்ணன் மீட்டிங்ல இருக்கார், கால் ஃபார்வர்ட் ஆகிடுச்சு” என்று பதில் சொன்னான்.
“சென்னைக்கு எப்போ வருவாங்க அவங்க?”
“இன்னும் இரண்டு மூணு நாள் ஆகும், இங்க பிரச்சாரம் இருக்கு. அங்க எந்த பிரச்சனையும் இல்லையே செந்தில் உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கான் தானே?” என்று வாலி, கார்த்தியின் நலம் கேட்க,
“அதெல்லாம் ஒன்னுமில்லை. அவர் வரப்ப, எனக்குக் கால் பண்ண சொல்லுங்க” என்று சொல்லி வைத்து விட்டாள்.
கார்த்தியின் மனம் இது நாள் வரை பசுமை காடாய் இருக்க, இப்போதோ தலைவனைப் பிரிந்த தலைவியாய் பாலைக் காடாய் பள்ளம் பள்ளமாய் வெடித்து இருந்தது. கண்கள் கலங்க, அப்படியே தனது இருக்கையில் இருந்து முன்னே இருந்த டேபிளில் சாய்ந்து கொண்டாள். போனில் இருந்த காளிதாஸனின் படத்தை வருடிக் கொடுத்தாள்.
நிஜத்தில் அவனின் கேசம் வருட, ஸ்பரிசம் உணர ஏங்கியது அகம். கார்த்தியின் கைவிரல்கள் கன்னம் தொடவும் விரியும் அவன் இதழ்களும், காதில் அவன் பெயர் உச்சரித்தால் அவளை விழுங்கும் அவன் விழிப்பார்வைக்கும் தவித்தாள் தலைவி.
தேர்தல் தேதி அறிவித்த பின் காளிதாஸன் வீட்டுக்கு வருவதே கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து, இப்போது இல்லை என்ற நிலைதான். சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்க, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்தது. எதிர்க்கட்சி ஆட்சியமைக்க வேண்டி அவ்வளவு முயற்சி எடுக்க, காளிதாஸனும் அதில் அடக்கம்.
அவனுக்கு ஓய்வு நேரம் ஒன்று இல்லைவே இல்லை. கட்சியின் முக்கிய பொறுப்பில் அவன் இருக்க, அவன் தொகுதி மட்டுமல்லாது, எல்லா தொகுதியிலும் அவனுக்கு வேலைகள் எல்லா வேளையிலும் இருக்க, பிரச்சாரத்திற்காகப் பயணம் சென்றவன் பதினைந்து நாட்களாகியும் இன்னும் வீடு வரவில்லை.
தனிமையின் வெறுமையும், கொடுமையும் கார்த்தியை பலமாய்த் தாக்கியது. இதற்கு ஒன்றும் அவள் சும்மா இல்லை, காலை எழுபவள் எதாவது எளிதாய் சமைத்து விட்டு, அலுவலகம் சென்று விடுவாள். அங்கு செந்தில் இருப்பான். அவன் நல்ல திறமைசாலி, சில நாட்களிலேயே அந்த அலுவலகத்தின் இயக்கம் அவளுக்குப் பிடிப்பட்டு விட்டது. மாலை ஆறு மணி ஆகிவிடும் வீடு வர, வந்து கொஞ்ச நேரம் அப்படியே மெத்தையில் உருளுவாள். காளிதாஸனையும், அவனின் கவிதையையும் காணாமல் தவித்துப் போவாள்.
வெளியே வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால், ‘கண்ணா’ என்ற அவனின் அழைப்பைக் கேட்க செவிகள் தவித்திடும். காணும் சில கணங்களில் கூட இருவரும் இயல்பாய் இளைப்பாறிட முடியாது. அப்போதும் அவனுக்கு அழைப்புகள் வரும், அலுவலகத்திலும் அவனுக்குத்தானே எல்லாம் தெரியும். அந்த வேலைகளும் அவனைப் பிடித்துக்கொள்ளும். காளிதாஸன் அத்தனை வேலைகளையும் முகம் சுழிக்காது செய்து விடுவான். உற்சாகமாய் ஓடிக் கொண்டிருப்பான். ஆனால், கார்த்தி என்பவள் அவனின் கவனத்தில் அவனையும் அறியாமல் பின் சென்று விட்டாள்.
கார்த்திக்காக நம்பிக்கையான டிரைவர் ஏற்பாடு செய்தான். வீட்டிற்கு ப்ரைவேட் செக்யூரிட்டி வைத்து விட்டான். அலுவலகத்திலும் செந்திலிடம் சொல்லி விட்டான். எங்கும் அவன் கவனமும், கவனிப்பும் குறையவில்லை. ஆனால், அவன் அருகே இருந்து பார்ப்பது வேறல்லவா? அவன் அவளின் வேரல்லவா?
அறிவுக்குப் புரிந்தது, தேர்தல் என்றால் வேலை இருக்கும். அவள், அப்பாவே அரசியல்வாதிதானே? தேர்தல் சமயம் என்றால் அப்பா வீட்டுப்பக்கம் வருவதே அரிது. வீட்டில் அம்மா, அண்ணி, தம்பி என்று எல்லாரும் இருக்க, கார்த்தியாயினி தனிமையை உணர்ந்ததே இல்லை. வீட்டிற்குள் வந்ததும் உண்டு முடித்தவள் ஹாலில் இருந்த சோஃபாவில் தலை வைத்து,
“அலெக்ஸா ஸ்விட்ச் ஆன் ஹால் ஏசி” என்றாள். என்னவோ அவளும், அலெக்ஸாவும் மட்டுமே அந்த வீட்டில் இருக்கும் உணர்வு.
“ஏன் டி அலெக்ஸா? நான் அவரை இவ்வளவு மிஸ் பண்றேனே? அவர் என்னை மிஸ் பண்ண மாட்டாரா?” என்று கேட்டாள். அலெக்ஸா பதில் சொல்லாமல் இருக்க,
“ஹேய்! அலெக்ஸா பேசு டி” என்று கத்த,
அந்த அப்பாவி அலெக்ஸாவோ, “sorry! couldnt understand what you say” என்றது.
“ஆமா! உனக்குப் புரியாது, அவருக்கும் புரியாது. அத்தனை பேர் சுத்தி இருந்தா என்னை மறக்குமா? எனக்கும் கூட ஆபிஸ்ல நிறைய பேர் இருக்காங்க… ஆனா, மனசெல்லாம் அவர் மட்டும்தானே இருக்கார். என் மனசு அவரை ஒவ்வொரு நிமிஷமும் தேடிட்டே இருக்கே” என்று வாய் விட்டு கத்தியவளுக்கு அழுகை வந்தது.
யாவுமாய் ஒருவனுடன் இருந்து விட்டு யாருமின்றி இருப்பது கொடுமையல்லவா? என்னதான் கார்த்தி தன்னை சமாதானம் செய்து கொண்டாலும் அவளால் காளிதாஸனைத் தேடாமல் இருக்க முடியவில்லை. அப்படியே உறங்கிப் போனாள் கார்த்தி. தன் அலைப்பேசி ஒலிக்கவும் மணியைப் பார்க்க பத்து.
அழைத்தது காளிதாஸன்.
“கார்த்தி! தூங்கிட்டியா? அப்புறம் பேசவா?” என்று இப்போதும் காளிதாஸ் குரல் அக்கறையில் வர, கார்த்திக்கு சொல்லொண்ணா ஏக்கம்.
“வச்சிடாதீங்க காளிதாஸ்” என்றவள் குரலில் அவ்வளவு தவிப்பு, தேடல். இதுவரை இப்படியான அழைப்பை யாரிடமும் காளிதாஸ் கேட்டதில்லை, ஏன் கார்த்தியிடம் கூட.
அவளின் அந்த கரகரப்பான குரலில் பதறியவன், “கண்ணா, என்னம்மா ஆச்சு? ஆர் யூ ஒகே?” என்று காளிதாஸ் கேட்க,
“உங்களை ரொம்ப மிஸ் பண்றேங்க” அழுதே விட்டாள் சொல்லும் போது.
உடனே விடியோ காலில் அழைத்தவன், “கண்ணா, என்ன இது? அழாத” என்று சமாதானம் சொல்ல,
“எனக்கு உங்களைப் பார்க்கணும்ங்க” கார்த்தி பிடிவாதமானக் குரலில் சொல்ல, காளிதாஸனுக்கு அது பிடிபடவில்லை.
“இன்னும் இரண்டு மூனு நாள்ல வந்துடுவேன் கார்த்தி, இதுக்காக எல்லாம் அழக் கூடாது கண்ணா. எலெக்ஷன் டைம்ல பெர்சனல் ஸ்பேஸ் கம்மியாதான் இருக்கும். உனக்கு இதெல்லாம் தெரியும்தானே?” என்றான்.
கார்த்திக்குதான் இவனை இந்தளவு தேட, அவன் கொஞ்சமும் அசராமல் இரண்டு நாளில் பார்க்கலாம் என்று சொன்னது அவளையும், அவள் காதலையும் காயப்படுத்தியது.
“சரி, இரண்டு நாள்ல பார்க்கலாம். இப்ப என்னோட பேசுங்க, வீட்ல பேசக் கூட ஆள் இல்லை எனக்கு” என்றாள் வருத்தமான குரலில்.
“இப்படி லோன்லியா ஃபீல் பண்ண வேண்டாம்னுதான் உன்னை கவின் வீட்டுக்குப் போக சொன்னேன் கார்த்தி. இப்ப தனியா இருந்து ஃபீல் பண்ற” கடிந்து கொண்டான் தன் சொல்பேச்சுக் கேட்காததற்கு.
“நான் கவியண்ணா வீட்டுக்குப் போனாலும் உங்களை மிஸ் பண்ணுவேன், அதை முதல்ல புரிஞ்சிக்கோங்க” என்றாள் கார்த்தியாயினி கடுப்பாக.
“எனக்கும் புரியுது கண்ணா. ஆனா, நம்ம வீட்ல யாருமில்லை, அங்க போனா அவங்களோட பேசிட்டு இந்த மிஸ்ஸீங் கொஞ்சம் குறையும்” என்றதும்,
“நீங்க, நான் என்ன நினைப்பேன்னு எல்லாம் சொல்ல வேண்டாம். ஆயிரம் பேர் என்னை சுத்தி இருந்தாலும் நான் உங்களைத்தான் தேடுவேன், உங்களை மாதிரி இல்லை” என்றாள் கோபத்துடன்.
காளிதாஸுக்குக் கார்த்தியின் பேச்சில் விழிகள் விரிய, அவன் முகத்தில் அவ்வளவு களைப்பு. தொண்டைக் கூட மாலையிலிருந்து பிரச்சாரம் செய்ததில் வலியெடுத்தது. தொண்டைக் கட்டியிருக்க குரலே மாறியிருந்தது அவனுக்கு.
“ஆயிரம் பேர் இருந்தாலும் நீ என் மனைவி கார்த்தி. என்னோட செல்லக் கவிதைடா நீ! கோவப்படாத, ரிலாக்ஸா தூங்கு. எங்க போயிடப் போறேன் நான்? வீட்டுக்குத்தானே வரணும். இரண்டு நாள் டக்குன்னுப் போய்டும்” என்றான் சமாதானமாக.
காளிதாஸனின் குரலில் அவ்வளவு சோர்வு இருக்க, கார்த்திக்கு அவன் குரலின் அத்தனை பரிமாணமும் தெரியுமே. அதனால்,
“ஏன் இப்படி இருக்கு உங்க வாய்ஸ்? ரொம்ப ஸ்டெர்யின் பண்ணிக்காதீங்க” என்றாள்.
“வேற வழியில்லை! இன்னும் இருபது நாள் எலெக்ஷன் முடிஞ்சிட்டா இந்த கஷ்டமெல்லாம் ஒன்னுமில்லை” என்றான்.
✅ End of Episode 23
Very nice.
கணவனின் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவி கலங்கும் விழிகளில்