Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 25

காளிதாஸன் 25

“என்ன எக்ஸ்பெக்டேஷன் கூடாதுன்னு அதையே சொல்றீங்க? இந்த கல்யாணத்துல உங்களைக் கூட எதிர்ப்பார்க்க கூடாதுன்னா என்ன கல்யாணம்?” என்றாள் கார்த்தியாயினி ஆவேசத்துடன்.

கார்த்தியின் ஏக்கங்கள், ஏமாற்றங்கள், அதைக் காட்டவும் முடியாமல் மனத்தில் வைத்து அழுத்திய இயலாமை எல்லாம் ஒற்றைப் புள்ளியில் சங்கமித்து வெடித்து விட்டது.

கார்த்தியாயினியின் கோபம் பார்த்த காளிதாஸன், “கார்த்தி! போதும். அமைதியா இரு” என்று சொல்ல, அவள் கேட்கவில்லை.

“இப்பவும் உங்களைக் கல்யாணம் செஞ்ச என் முடிவு சரியில்லைன்னு எப்படி நீங்க சொல்லலாம்?” என்றாள் கண்ணில் நீர் மல்க.

அவளால் அதைத் தாளவே முடியவில்லை. அவன் சொன்னது வேறு, இவள் புரிந்தது வேறு.

“கார்த்தி, நான் எங்க அப்படி சொன்னேன்? முன்னாடியே என்னோட வாழ்க்கை இப்படித்தான் கார்த்தி. நீ, வந்தவுடனே உடனே மாறணும் நினைச்சா எப்படி?” என்றான் அவனும் கோபத்துடன்.

நிதர்சனம் பேசினான் அவன். கார்த்தியின் அறிவுக்கு எட்டினாலும் ஏற்கப் பிடிக்கவில்லை. 

“ஓஹ், எனக்காக நீங்க மாற மாட்டீங்களா?”

“என்ன மாறணும் கார்த்தி? இந்த இடம் எனக்கு சாதாரணமா கிடைக்கல, அவ்வளவு உழைச்சிருக்கேன். கொஞ்சமும் அதைப் புரிஞ்சிக்காம பேசினா எப்படி?”

“என்ன புரியணும்? உங்களுக்குப் புரியுதா என்னை? என்னை விட அரசியல் வாழ்க்கைதான் உங்களுக்கு முக்கியம் இல்லையா?”

கார்த்திக்கு நிதானமே இல்லை. காளிதாஸன் என்பவனே அவளில் நிறைந்து இருந்தான். திருமணத்திற்கு முன்பே அவன் அத்தனை முறை சொன்னான்தான், அப்போது அவனைத் தவிர வேறெதுவும் வேண்டவில்லை அவள்.

இப்போதும் அப்படியே!! அவன் வேண்டும்! அதனால்தான் இந்த ஆற்றாமை, கோபம், அழுகை அத்தனையும் அவளிடம்.

“எனக்கு இரண்டுமே முக்கியம் கார்த்தி. என்னாச்சு உனக்கு தீடீர்னு? எலெக்ஷன் டைம்னா இப்படித்தானே இருக்கும், உனக்குத் தெரியாதா?”

“எலெக்ஷன் முடிஞ்சுப் போச்சு, எலெக்ஷனுக்கே இப்படி என்னை விட்டுட்டீங்க, நெக்ஸ்ட் போஸ்டிங் கிடைச்சிட்டா என்னை மொத்தமா மறந்துடுவீங்களா?” என்றாள் ஆத்திரமாக.

மனைவியை மறப்பவனா அவன்? இவளின் பாதுகாப்புக்காக அத்தனை செய்து விட்டுப் போனவனைப் பார்த்து இப்படி பேசுவாளா என்று காளிதாஸனுக்கும் கோபம் கனன்றது.

“ஸ்டாப் இட்! அதிகம் பேசுற கார்த்தி நீ” என்றான் அதட்டலாக.

அந்த அதட்டல் கூட இன்னும் கார்த்தியைத் தூண்டி விட்டது.

“முடியாது! நான் பேசுவேன்” என்று கார்த்தி பிடிவாதம் கொள்ள, அவளின் மென் உணர்வுகள் இவனுக்கு விளங்கவில்லை. இப்படி சண்டைக் கொள்வதும் அவனுக்குப் பிடித்தமில்லை.

அதனால், “என்னால இப்படி வீணா சண்டை போட முடியாது” என்றவன் மாடியேறி அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

காளிதாஸனின் அந்த செயல் கார்த்திக்கு பெரும் வலியைத் தந்தது. நிராகரிப்பாகத் தோன்றியது. நான், என் வேதனையை சொல்லிக் கொண்டிருக்க, இவன் கேட்கக் கூட மாட்டானா என்று அவ்வளவு கோபம்.

கார்த்திக்கு, அவனின் ஒற்றை அணைப்போ, ஆறுதலான பேச்சோ போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், வார்த்தைகள் வாக்குவாதங்களாக மாறி இருவரையும் குறையாமல் வதைத்தது.

அறைக்குள் சென்ற காளிதாஸனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இத்தனை ஆண்டுகள் அவனின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளும் அவன் எடுத்தவையே. எதற்கும், யாருக்கும் பதில் சொல்லும் நிலை இல்லை. 

இந்த வீடு, அறை எல்லாம் அவனின் ஆளுகை மட்டுமே! 

காளிதாஸனின் வேலையில் யார் தலையீடும் இருக்காது, வருவது போவது எல்லாம் அவன் இஷ்டம்.

பழக்கங்கள் வழக்கங்கள் ஆகிவிட, வழக்கங்கள் வாழ்க்கையாகி விட அதில் மாற்றம் வருவது என்பது சுலபமானது அல்ல! அதுவும் பல ஆண்டு பழக்கங்களை மாற்றுவது அந்த மனிதனையே வேறாக காட்டும். அப்படி காளிதாஸின் வேறு பரிமாணம் காட்டியது கார்த்திதான், கார்த்தியின் காதல்தான்!

கார்த்தியாயினி என்ற பெண், அவள் கொண்ட காதல் அதுவே காளிதாஸனுக்குள்ளும் இருந்த காதலை வெளிக்கொண்டு வந்தது. அவன் எப்போதும் சொல்வது போல் கார்த்தியினால்தான் அவர்களின் கல்யாணம். ஏதோ ஒரு பிடித்தம், அவள் மீது ஒரு மரியாதை, அதுவே கார்த்தியை அவனைத் திருமணம் செய்ய வைத்தது.

வாழ்க்கையை எப்படி இருவரும் கொண்டு போகப் போகிறோம் என்ற எண்ணம், அது தந்த பயம் எல்லாம் அவனுக்கு இருக்க கார்த்தியாயினி, காளிதாஸனின் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்த்தாள். 

காளிதாஸனின் கவிதையானாள்! காளிதாஸனை காதலிக்க வைத்தாள்.!

இன்றைய கார்த்தியின் பேச்சு, கோபம் எல்லாம் அவனுக்குப் புதிது. அவளைக் கஷ்டப்படுத்தி அழ வைத்துவிட்டோமே என்று மிகவும் சங்கடமாகப் போயிற்று. அம்மா சொன்னது போல் திருமணம் என்றால் இருவருக்குமாக யோசிப்பதுதானே? என் கனவு, என் இஷ்டம் என்று இருந்தாலும் எனக்காக யோசித்து, எனக்காக விட்டுக் கொடுத்து என் தாயிடம், ஏன் நண்பர்களிடமும் கூட என்னை விட்டுக் கொடுக்காத என் மனைவியை அழ வைத்து விட்டேனே என்று உண்மையில் உணர்ந்து வருந்தியவன் வேகமாக மனைவியிடம் மன்னிப்புக் கேட்க நினைத்து இறங்கி வந்தான்.

“கார்த்திமா!” என்று இறங்கும் போதே குரல் கொடுக்க, கார்த்தி வீட்டில் இல்லையே. இவன் எல்லா அறையிலும் தேடி கிச்சனுக்குள் நுழைந்தான்.

“கண்ணா!” என்று வீடெங்கும் தேட, கார்த்தி கிடைக்கவில்லை. சட்டென  நெஞ்சில் ஒரு பாரம்.

பொழுது சாய்ந்துவிட எங்கும் இருள். அந்த இருளே மங்கைக் குறித்த மருளை அதிகமாக்கியது.

வாட்ச்மேனிடம் கேட்க, “மேடம் போய் ஒன் ஹவர் ஆச்சே சார்” என்றார். எங்கே போயிருப்பாள் என்ற கேள்வியும், பயமும் காளிதாஸனை ஆட்டிவைத்தது.

வேகமாக வீட்டினுள் நுழைந்தவன், அவன் அலைப்பேசியை எடுத்து கார்த்திக்கு அழைத்தான். இவன் அழைக்க, அழைக்க கார்த்தி கட் செய்து கொண்டே இருந்தாள்.

‘கண்ணா, ப்ளீஸ் பிக் அப்’ என்று காளிதாஸன் குறுஞ்செய்தி அனுப்ப, அதனைப் படித்த கார்த்திக்குக் கோபமாய் வந்தது. இத்தனை நாள் என்னைக் கண்டுக் கொண்டானா என்று கடுப்பானாள். மீண்டும் மீண்டும் காளிதாஸன் அழைத்துக் கொண்டே இருக்க, கார்த்தியின் காதல் மனம் அவன் தவிப்பைத் தாங்கவில்லை.

கார்த்தி அழைப்பை ஏற்கவும், “கண்ணா! எங்க இருக்க நீ?” காளிதாஸனின் குரல் வேகமாய்ப் பாய்ந்து வந்தது. குரலில் அவ்வளவு தவிப்பு இருக்க, கார்த்தியின் தாகத்தைக் கொஞ்சமாய்த் தீர்த்தது.

“கண்ணா, பேசும்மா” என்று காளிதாஸன் கத்த,

“என்னைப் பேச வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப என்ன பேசணும்?” என்றாள் சிடுசிடுப்பாக.

“ஸாரிடா! எதுவானாலும் வீட்டுல பேசணும். சொல்லாம போவியா  நீ?” என்றான் கொஞ்சம் கோபத்துடன்.

“ஏன் சொல்லிட்டுப் போகணும் நான்? என்னோட பேசக் கூட நேரமில்லாதவர் இப்போ ஏன் என்னைத் தேடணும். போங்க, உங்க கட்சியில ஆயிரம் வேலை இருக்கும், போய் செய்ங்க. அப்போதான் பீச்ல சிலை வைப்பாங்க. நான் யார் உங்களுக்கு?” அழுகையுடனும், ஆற்றாமையுடனும் குரல் கலந்து வந்தது.

“நீதான் கண்ணா எனக்கு எல்லாம். எங்க இருக்க சொல்லு, நான் வரேன்” என்ற காளிதாஸனுக்குக் கார்த்தியை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. அப்போது மணி சத்தம் கேட்கவும் கோவிலில் இருக்கிறாள் என்று கண்டுக்கொண்டான்.

“எப்படியும் வீட்டுக்கு வந்துடுவேன். அதுவரைக்கும் தனியா விடுங்க என்னை, வந்தா சண்டை போடுவேன். நீங்க கதவை சாத்துவீங்க” என்றாள் கோபத்துடன்.

ஏற்றங்கள், இறக்கங்கள், மாற்றங்கள், தடுமாற்றங்கள், தவிப்புகள், கொதிப்புகள் எல்லாம் வாழ்வில் இயல்புதானே. தட்டுத்தடுமாறி, விட்டுக்கொடுத்து, புரிந்து நடந்துதான் இதனைக் கடக்க வேண்டும். அதுவும் வெவ்வேறு மனிதர்கள் ஒன்றாய் வாழ்கையில் இணையும்போது ஒருவருக்காக ஒருவர் யோசித்து வாழ வேண்டும். இவ்வளவு கோபத்திலும், கார்த்தி தன்னை விட்டு இருக்க முடியாது என்று சொல்ல தலைவியின் மனம் உணர்ந்தான் தலைவன்.

கார்த்தி வருவேன் என்று சொன்னாலும் அவளைத்தானே போய் அழைத்து வரவேண்டும் என்ற எண்ணத்துடன் காளிதாஸன் காரை எடுத்துக் கொண்டு அந்த ஏரியாவில் இருந்த கோவில்கள் பக்கம் போனான். முதலில் பெரிய கோவில்களுக்கு செல்வோம் என்று நினைத்தவன் காரை அந்தப் பக்கம் ஓட்டினான்.

கார்த்திக்குக் காளிதாஸன் மீது நிறைய கோபமிருந்தாலும் அவனை விட்டு செல்லும் எண்ணமெல்லாம் இல்லை. அவனை விட முடியாமல்தானே கோபமே! எப்படியும் கோவில் எல்லாம் அவன் கண்டுபிடிக்க மாட்டான் இன்னும் கொஞ்ச நேரம் என்னை தேடட்டும் என்று  நினைத்தவள் கோவில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அழுத தடம் தெரிந்தது அவள் முகத்தில், அவ்வளவு சோர்வும் கூட.

கண்கள் கலங்கி, சுவரில் சாய்ந்து ஏதோ ஒரு யோசனையில் இருந்த அக்காவைத்தான் ராஜீவ் கண்டான். பார்த்த கணம் பாசம் மேல் எழுந்தது. இப்படி அழுது கொண்டு கோவிலில் உட்காரவா வீட்டை எதிர்த்து திருமணம் செய்தாள் என்று நினைத்தவன் வேகமாக அவள் முன் போய் நின்று,

“என்னாச்சு காது? ஏன் இப்படி இருக்க?” என்று கேட்டான். ராஜீவ் வந்து தன் முன் நிற்க, கார்த்திக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அவனை பார்க்கவுமே அழுகை வந்தது, அடக்கிக் கொண்டாள். இவனும் என்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆற்றாமை வர, தம்பியைக் கடந்து கோவிலின் வாசலுக்குச் சென்றாள்.

ராஜீவ் அக்காவின் பின்னே செல்ல, கார்த்தி வாசலில் அப்படியே நின்றாள். காளிதாஸன் காரை விட்டு இறங்கி,

“கண்ணா” என்ற அழைப்புடன் முன்னே வந்தான். அப்போதுதான் மனைவியின் பின்னே நின்ற ராஜீவைப் பார்த்தான், கண்கள் சுருங்கியது. அவன் பார்வை படித்த பாவை உடனே சண்டையெல்லாம் மறந்து,

“வாங்க போகலாம்” என்று காளிதாஸின் அருகே போகப் பார்க்க, ராஜீவோ அவளை போக விடாமல் அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு, “என்ன பிரச்சனை காது? என்ன செஞ்சார் இவர் உன்னை?” என்று கேட்க, கார்த்திக்கு அப்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

“எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. நீ, உன் வேலையைப் பாரு” என்று கையை உதறினாள் கார்த்தியாயினி. காளிதாஸனின் அருகே சென்று வாங்க என்று அழைக்க,

“உன்னைப் பேசினானா கார்த்தி இவன்?” என்றான் கணவன் ராஜீவை முறைத்துக் கொண்டு.

“அவன் இப்போதான் என்னைப் பார்க்கிறானே, ஒன்னும் பேசலங்க. நீங்க வாங்க” என்றவள் காரில் போய் ஏறிக்கொள்ள, காளிதாஸனும் காரை எடுக்கப் போக, ராஜீவ் காளிதாஸன் முன் கோபமாய் நின்றான்.

விசாலாட்சி அந்த கோவிலுக்கு மாதம், மாதம் அபிஷேகம் செய்ய வருவார். இந்த மாதம் அவருக்கு முடியாமல் இருக்க, அதற்கான பணத்தை செலுத்த வந்த ராஜீவ், அழுத கார்த்தியைக் கண்டு பதறிப் போனான். அக்காவின் மீது கோபம், வருத்தம் இருந்தாலும் இன்று கண்ட பின் விட்டு செல்ல மனமில்லை.

காளிதாஸன் காரினுள் ஏறப் பார்க்க, கதவைப் பிடித்துக் கொண்டு அவனைத் தடுத்து நின்றான் ராஜீவ்.

தம்பியின் இந்த செய்கைப் பார்த்த கார்த்தி காரை விட்டு இறங்கி, “ராஜீவ்! வீணா பிரச்சனை பண்ணாத, போ” என்று சொல்ல,

அக்காவை முறைத்தவன், “நான் உங்கிட்ட பேச வரல, இவர்கிட்ட பேசணும்” என்றான் காளிதாஸனைக் காண்பித்து. அதுவே கார்த்திக்குப் பதற்றம் தந்தது.

“உனக்கு இவர் கூட என்ன பேச்சு? தாஸ், நீங்க வாங்க. போலாம்” என்று கார்த்தி கணவனை அழைக்க காளிதாஸோ,

“இரு கார்த்தி, என்ன பேசணும் கேட்போம்” என்றான்.

“நான் சொல்லிட்டே இருக்கேன், இவன் கூட  நமக்கு ஒன்னும் பேச்சில்ல. எல்லாத்தையும் ஹாஸ்பிட்டல்ல அன்னிக்கே பேசிட்டான்” குரல் அடைக்க சொன்னவள்,

“தாஸ், வருவீங்களா மாட்டீங்களா?” என்று கணவனிடம் கண்டிப்புடன் கேட்டாள்.

“கார்த்தி, இரு” என்று காளிதாஸ் அவளை அமைதிப்படுத்த, அவளோ அடம்பிடித்தாள்.

“வரலன்னா நானே கார் எடுத்துட்டு போய்டுவேன் தாஸ்” என்று மிரட்டினாள். அவள் மிரட்டலில் சிரிப்பு வர மெல்ல புன்னகைத்தவன்,

“கண்ணா! சொன்னா கேளு. டூ மினிட்ஸ், நான் பேசிட்டு வந்துடுறேன். உனக்குப் பிடிக்கலன்னா கார்ல உட்கார்” என்றான்.

ராஜீவின் பார்வை மொத்தமும் அக்காவின் மீதுதான். எப்படி கணவனை மிரட்டுகிறாள் என்று பார்த்தான். அவன் அக்கா ஆளுமையான பெண் என்று தெரிந்தவன்தான். காளிதாஸனை அவள் அடக்குவதும், அவன் அடங்கிப் பேசுவதும் அவனுக்கு அதிசயமாக இருந்தது. எப்படி இவளுக்கு இவரைப் பிடித்தது என்று இன்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இந்த பிடித்தம் கட்டாயத்தினால் வந்ததில்லை என்று இன்று அவர்கள் பேசவுமே ராஜீவ் கண்டுக்கொண்டான். 

ஒரு அன்யோன்யம் கண்டான். அக்காவுக்கும், அவள் கணவனுக்கும் இடையே. அக்காவிற்கு இவன் மீது காதலோ என்று யோசிக்க, என்ன முயன்றும் அப்படி நினைக்க முடியவில்லை. இவனை ஒரு முறை கூட அக்காவுடன் கண்டதே இல்லை. இவர்கள் திருமணம் முதலே இந்த கேள்வி மனத்தில் ஓடும், அப்படி காதல் இல்லையென்றால் ஏன் இந்த திருமணம்?? பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லியிருக்கலாமே என்று தம்பியாய் அவன் மனம் துடிக்கும். அதுவே அக்காவைப் பற்றி ஒரு கவலை, அழுத்தம் கொடுக்கும்.

இவர்கள் பேசினால் சண்டையாகி விடும் என்று பயந்த கார்த்தி கணவனை முறைத்தபடி காருக்கு வெளியே காளிதாஸுக்குப் பக்கமாய் வந்து நின்றாள்.

“என்ன பேசணும்?” என்றான் காளிதாஸன், இப்போது ராஜீவைப் பார்த்து.

 

✅ End of Episode 25
How did you feel about this episode?
❤️ 3 😂 1 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Kavi Natarajan Reader 6 days ago

😍😍😍😍😍😍😍

❤️ 2 more...
Roja Saradha Mary Reader 5 days ago

ராஜிவ் ! நல்ல தம்பி தான்.

❤️ 2 more...
Mrs Beena loganathan Reader 5 days ago

மாமன் தாஸ் கூட 

மல்லுக்கு  நிற்கும் 
மச்சான் ராஜீவ்....
மறைந்து போன கோவம்
மனைவியோ பதட்டத்தில்....
❤️ 2 more...
Srichitra Reader 5 days ago

Nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top