Episode 20
கார்த்தியை இழுத்து இரண்டடி வைத்தவன் கோபமாய் மீண்டும் ராஜீவிடம் போனான்.
“ப்ரச்சனை வேண்டாம் விடுங்க” என்று கார்த்தி அழுகையை அடக்கிக் கொண்டு அவன் கையைப் பிடித்துச் சொல்ல, அதைக் கண்டுகொள்ளாது ராஜீவின் முன் நின்றவன்,
“என் மனைவியை மரியாதை இல்லாம நீ பேசுறது இதான் லாஸ்ட்! இன்னொரு சான்ஸ் எல்லாம் எங்கிட்ட கிடையாது” என்றான் அழுத்தமான குரலில்.
“என்ன மினிஸ்டர் சப்போர்ட் இருக்குன்னு ஆடுறீங்களா?” என்று ராஜீவ் பேசி விட, கார்த்தியின் தோளில் கைப் போட்டு அணைத்து நின்றவன்,
“என் மனைவிக்காக நான் பேச மினிஸ்டர் சப்போர்ட் இருக்கணும் அவசியமில்லை. உங்கப்பனுக்கும்தானே எல்லா சப்போர்ட்டும் இருக்கு, என்ன செய்ய முடியும் உன்னால? இனிமே இப்படி பேச்சே உங்கிட்ட இருக்கக் கூடாது ராஜீவ்! மைண்ட் இட்!” என்று அதட்டி சொல்லி தோளோடு அணைத்தபடியே கார்த்தியாயினியை வீட்டிற்கு அழைத்துப் போனான்.
காளிதாஸன் காரை எடுத்து வந்திருக்க, இருவருக்குள்ளும் போகும் வழியெல்லாம் பேச்சே இல்லை. கார்த்தி, தன் தம்பி இப்படி பேசுவான் என எதிர்ப்பார்க்கவே இல்லை. என் பக்கம் இருந்து யோசிக்க மனமில்லையா என்று மனம் நொந்து போனாள்.
இதில் அம்மாவின் நிலைக்குத் தானும் ஒரு காரணம் என நினைக்க நினைக்க, என்ன முயன்றும் அடங்காமல் ஒரு அழுகை. தன் வாழ்க்கைப் பெரிதென வந்திருக்க, தாயின் நிலையை எண்ணி தவித்துப் போனாள் பெண்.
அழும் மனைவியைப் பார்த்தாலும் காளிதாஸனின் கவனம் சாலையில் மட்டுமே. ஆனால், உள்ளம் உலைக்களம்! இன்னும் நன்றாய் ராஜீவை அடிக்க வேண்டும் போல் மனதெல்லாம் ஒரு ஆத்திரம் கிளம்பியது.
வீட்டிற்குள் செல்லவும் ஹாலில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்தபடி கார்த்தி அழ, காளிதாஸன் தண்ணீர் எடுத்து வந்து அவளிடம் கொடுக்க, இன்னும் உடைந்தாள்.
“ஸாரி, அவன் தெரியாம பேசிட்டான்” என்று கார்த்தி தம்பிக்காக மன்னிப்புக் கோர,
“அதனாலதான், அடிச்சேன்” என்றான், அவளுக்கு அடுத்த இருந்த சோஃபாவில் உட்கார்ந்த காளிதாஸன்.
“இல்லைங்க, அவன் அம்மாவுக்கு இப்படியான டென்ஷன்ல பேசிட்டான். உங்களைப் பேசினதுக்கு அவனுக்குப் பதிலா நான் மன்னி…ப்” என்று கார்த்தியின் இதழை தன் கரம் கொண்டு மூடியவன்,
“நான் அவன் என்னைப் பேசினதுக்கு அடிச்சேன் நினைக்கிறியா கார்த்தி?” என்றான் கொஞ்சம் கோபமாக.
கார்த்தி கணவனின் கேள்வியில் அதிர்ச்சியுடன் பார்க்க, அவளின் இருகரங்களையும் தனக்குள் பொத்தி வைத்து,
“அவன் என்னை என்ன பேசினாலும் நான் பெருசா எடுக்க மாட்டேன் கார்த்தி. நீ சொன்ன மாதிரி அவனுக்கு என்னைத் தெரியாது. அரசியல்வாதி நான், சும்மா ஒருத்தர் பேசுறதுக்கு எல்லாம் நிதானமிழக்க மாட்டேன். ஆனா, உன்னை மரியாதை இல்லாம பேசுறான்” என்றான் இன்னும் கோபம் தீராதவனாக.
கார்த்தியின் முகம் பார்த்து கோபம் விட்டு, “உங்கம்மாவுக்கு இப்போ சீரியஸ் இல்லை கார்த்தி, டாக்டர்ட்ட பேசினேன். உனக்கு எப்போ பார்க்க போகணும்னாலும் சொல்லு. நம்ம போகலாம்” என்றான். கார்த்தி தலையசைக்க,
“என்ன சாப்பாடு ஆர்டர் பண்ண உனக்கு?” என்று கேட்டவனை ஒரு இயலாமையுடன் பார்த்தாள்.
“எனக்குப் பசிக்கல” என்றவள், “உங்களுக்கு மட்டும் ஆர்டர் பண்ணுங்க” என்றாள் உடனே.
மறுப்பாய்த் தலையசைத்து, “எனக்குக் கண்டிப்பா ஆர்டர் செய்வேன்தான், சும்மா சோகமா இருக்கோம்னு காட்ட பட்டினி இருக்கறது வழியில்லை. டெய்லி வர பசி இன்னிக்கு வராதா?” என்று கடிந்து கொண்டான்.
“ப்ளீஸ், நீங்க சாப்பிடுங்க” என்றவள் அறைக்கு செல்ல மாடியேறினாள். அவளின் கைரேகைக்கும் அக்சஸ் இருக்க, கணவனை எதிர்ப்பார்க்கவில்லை. அவள் படியேறவும் இவனும் உடன் வந்தான்.
“நான் எப்பவும் இந்த வீட்ல சாப்பிடுடுவேன் கார்த்தி, இன்னிக்கு நீ இருக்கும்போது உன்னை விட்டு சாப்பிட எனக்கு எப்படி மனசு வரும், சொல்லு? நீ இருப்பியா?” என்று கேட்க, கார்த்தி,
“எனக்கு முடியல” என்று சொல்லி மெத்தையில் படுத்து விட்டாள். அமைதியாக கீழே இறங்கியவன், உணவு வரவும் எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தான்.
“சொன்னா கேட்கவே மாட்டீங்களா தாஸ்?” என்று கார்த்தி கொஞ்சம் கத்தியே பேச,
“கேட்காததாலதானே சாப்பாடோட வந்திருக்கேன் கண்ணா” என்று கண்சிமிட்டினான் ஒரு புன்னகையுடன். கார்த்தியால் கணவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு கோபமாய் இருந்தவன் இப்படி ஒன்றுமே நடவாதது போல் நடக்கிறானே என்று பார்க்க,
“எதுவானாலும் சாப்பிட்டு தெம்பா பேசலாம், மனசு வருத்தம்னு வயிறு காஞ்சா, இன்னுமே முடியாதது மாதிரிதான் இருக்கும். வா சாப்பிடலாம்” என்று அவள் கைப்பிடித்து எழுப்பியவன், டேபிளை அவள் பக்கம் நகர்த்தி தட்டை வைத்தான். கார்த்திக்கு வேறு வழியில்லை. அவன் வழிக்கே வந்தாள். இருவரும் உண்டு முடிக்க, கீழே சென்று எல்லாம் கார்த்தியே வைத்து வந்தாள்.
இவன் வழக்கம்போல் டீஷர்ட், ஷார்ட்ஸில் இருந்தான். கார்த்திக்கு மனபாரம் அதிகமாய் இருக்க, உடை மாற்றக் கூடத் தோன்றவில்லை. எத்தனை அழகான காலை வேளை, இதோ அதற்கு நேர் எதிராய் ஒரு இரவு..
ஒன்றும் பேசாமல் அமைதியாக அவனுக்கு முதுகுக் காட்டிப் படுத்தாள். சத்தமில்லாமல் ஒரு அழுகை. அம்மாவிற்கு நன்றாக ஆகிவிட வேண்டுமே என்ற வேண்டுதல் அவளிடம்.
அவளாகவே தேறட்டும் என்று அவளுக்கான இடைவெளி கொடுத்து காளிதாஸன் அமைதியாய் இருந்தான். எப்போதும் அவன் அறையில் தவழும் இசை இன்றில்லை. நிசப்தம் நிறைத்தது, அதில் சிறு ஸ்வரமாய் அவளின் அழுகை.
கார்த்தி அழவும், “கார்த்தி அழாத” என்றான் பொறுக்க முடியாமல்.
“அவன் தெரியாம பேசிட்டான் தாஸ், எல்லாமே என் தப்பு. என்னால உங்க மரியாதைக் கெட்டுப்போச்சு” என்று கார்த்தி தேம்பலுடன் சொல்ல,
“கண்ணா! ப்ளீஸ்! மரியாதைன்றது நம்ம மனசு பொறுத்தது. அவன் பேசினது எனக்குக் கோபமில்லை. ஐ டோண்ட் மைன்ட்!” என்றான் அவளை அணைத்துத் தன் முகம் பார்க்க வைத்தவண்ணம்.
“கோபமில்லாமதான் அப்படி அறைஞ்சீங்களா?” என்று கார்த்தி அவன் தோளில் அழுகையில் தேம்பிக் கொண்டு கேட்க,
“என்னைப் பேசினது ஐ டோண்ட் மைண்ட் சொன்னேன், உன்னை எப்படி அவன் பேசலாம்? தெரியாமனு சொல்லாத கார்த்தி, தெரியாம பேசினதாலதான் அந்த அறை! தெரிஞ்சிட்டு பேசணும்” என்றான் கோபத்துடன்.
“நீ என் மனைவின்றதால நான் சொல்லல, அன்னிக்கு நீ எவ்வளவு டென்ஷனோட என்னை வந்து கட்டிப்பிடிச்ச? எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது கண்ணா அப்போ. இந்த பொண்ணை இப்படி கஷ்டப்படுத்துறானுங்களேன்னு, வீட்டுப்பொண்ணுக்குக் கூட இவனுங்க நல்லது செய்ய மாட்டாங்களானு ஒரு ஆத்திரம் எனக்கு. ஒரு குழந்தை தன்னோட பெத்தவங்க கிட்டவே பாதுகாப்பா உணரலன்னா என்ன வீடும்மா அது?” என்று அவன் பேச பேச காளிதாஸன் என்பவன் மேல் பித்தாகிப் போனாள் கார்த்தியாயினி.
“உனக்கு, உங்க வீட்ல ஒருத்தர் கூட சப்போர்ட் இல்லை, முகில் உனக்கு ஹெல்ப் செயல்லன்னா உன்னோட நிலைமை? நீ என் மனைவி ஆனது வேற விஷயம் கண்ணா, வேற முடிவு எடுத்திருந்தா? என்னை அவனுக்குத் தெரியாது, ஓகே! ஆனா உன்னைத் தெரியும்தானே? ஒன்னாவேதானே வளர்ந்தீங்க, இப்படி ஒரு முடிவெடுத்தா ஏன்னு யோசிக்க கூட மாட்டானா அவன்? தெரிஞ்சக்கணும்னு கூட நினைக்காம என்ன அப்படி ஒரு பேச்சு” என்றான் எரிச்சலுடன்.
காளிதாஸன், கார்த்தியை அணைத்தது போய், இப்போது கார்த்தியும் அவன் நெஞ்சில் நன்றாய் சாய்ந்து கொண்டாள்.
அவனைத் தவிர வேறு ஆறுதலை மனம் எதிர்ப்பார்க்கவில்லை. அவன் சொல்வது சரியே! தன்னுடனே வளர்ந்தவன் தன் முடிவு எதனால் என்று தன் பக்கம் யோசிக்க மாட்டானா என்ற ஆற்றாமை மீண்டும் எழுந்தது.
அந்த ஆற்றாமையுடன், “என்னை யாருமே நம்பல தாஸ், அம்மா கிட்ட செல்வா பத்தி ஒரு வார்த்தை சொன்னேன், அதுக்கே என்னை அடிச்சிட்டாங்க. அப்போ கூட அவன் மாறல, ராஜா எனக்கு சப்போர்ட்டாதான் இருந்தான். ஆனா, அந்த டைம்ல வேணும்னே அவனை கான்பூர் அனுப்பிட்டாங்க. ஏதோ, நான் கல்யாணம் வேண்டாம்னு சும்மா அடம்பிடிக்கிறேன்னு எல்லாரையும் நம்ப வச்சிட்டான் அந்த ராஸ்கல்” என்றாள் கார்த்தி.
“எனக்கு அந்த டைம்ல வாழவே ஆசையில்லாம போச்சு, நீங்க சொன்னீங்களே அவங்களோட செய்கைக்கு நான் பொறுப்பில்லன்னு அது ஒன்னுதான் என்னை கொஞ்சமா நடமாட வச்சது. அப்படியும் திரும்ப திரும்ப கல்யாணத்துக்கு என்னை ஃபோர்ஸ் செய்யவும், என்னால முடியல” என்று அழுகையுடன் தன்னுள் புதைந்தவளை தாயாய் அரவணைத்துக் கொண்டான். அவள் தலையை வருடி, முதுகைத் தட்டிக் கொடுத்தவன்,
“அம்மா நல்லா இருக்காங்க, அதை மட்டும் நினைச்சிக்கோ. நாங்க எல்லாம் எதிர்க்கட்சி காரன் எவ்வளவு பேசினாலும் கண்டுக்க மாட்டோம். நீயும் அப்படியே இக்னோர் பண்ணிடு கார்த்திமா… உன்னை ஏன் இவ்வளவு வருத்திக்கிற?” என்றான் வாஞ்சையாக.
“இல்லை, ராஜா கூட என்னைப் புரிஞ்சிக்கல. என்னோட ப்ரண்ட்ஸ்கிட்ட ஈவினிங் பேசினேன், அவங்களும் என்னைப் புரிஞ்சிக்கவே இல்லை தாஸ். நான் என்ன குழந்தையா நீங்க ஏமாத்தி கல்யாணம் செய்ய? நான் ஏன் இப்படி செஞ்சேன்னு என் பக்கமிருந்து யாருமே யோசிக்கல” என்றாள் வருத்தமாக.
அவள் நெற்றியில் முட்டியவன், “கண்ணா! ஒன்னு சொல்ல. ஏன் என்னைக் கல்யாணம் செஞ்ச?” என்று காளிதாஸன் கேட்க, என்ன கேள்வி இது என்று விழித்தாலும்,
“உங்களைப் பிடிச்சது அதனால” என்றாள் உடனே.
“அது எனக்குத் தெரியும். ரைட்?! அது போதும். கணவன், மனைவியா நம்ம சந்தோஷமா இருக்கறது நம்ம இரண்டு பேருக்குத் தெரிஞ்சா போதும். இல்லையா, நம்ம மேல அக்கறைப்பட்டு நமக்காக யோசிக்கிற நாலு பேருக்குத் தெரிஞ்சா போதும். உன்னோட ப்ரண்ட்ஸ், ராஜீவ் எல்லாம் அவங்க கேள்விப்பட்டதை, தெரிஞ்ச விஷயத்தை பேசுறாங்க. யாரும் புரிஞ்சிக்கிட்டுப் பேசல, அதான் நிஜம்”
“புரியாம பேசறவங்களுக்கு எப்பவும் புரியவைக்க முடியாது, அதுக்கு அவங்களா யோசிக்கணும். எப்படியும் விட்ட அறையில உன் தம்பி யோசிப்பான், இல்லைனாலும் நமக்கு ஒன்னுமில்லை. நீ காளிதாஸன் மனைவி, அதுல உனக்கு சந்தோஷம் இருக்கா இல்லையா?” என்று மனைவியின் முகத்தில் வந்து ஒட்டிய கருங்கூந்தலை ஒதுக்கி காளிதாஸன் கேட்க,
“என்ன கேள்வி இது? இப்ப என்னோட ஒரே சந்தோஷம் நீங்க மட்டும்தான்” என்றாள் அழுத்தமாக.
“தட்ஸ் ஃபைன்! இப்போ ரிலாக்ஸா தூங்கு. யாரும் உன்னைப் புரிஞ்சிக்கணும் நினைக்காத” என்று சொல்ல, அவனின் கைப்பற்றியவள்,
“என்னைப் புரிஞ்சிக்கலன்ற வருத்தம் விட, என்னால உங்களை எல்லாம் தப்பா புரிஞ்சிக்கிறாங்களே அதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க” என்றாள்.
“கண்ணா! கண்ணா! நான்தான் சொன்னேனே. அடுத்தவங்க ஒபினியன்ஸை எல்லாம் நான் மண்டையில எடுக்க மாட்டேன். நான் முன்னாடி கல்யாணம் செய்யாம இருந்தப்பவும் என்னைப் பத்தி கமெண்ட் பண்ணினாங்க, இப்பவும் செய்றாங்க. அண்ட் எப்பவும் செய்வாங்க, அடுத்தவங்க வாழ்க்கையை அலசுறது மனுஷங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. நீ என்னைப் புரிஞ்சிக்கிட்டா போதும்டா” என்றவன் தட்டிக் கொடுக்க, சிறிது நேர அமைதிக்குப் பின் இருவருக்குமே நல்ல உறக்கம்.
✅ End of Episode 20
Nice ud ma
Very nice. அடுத்த வங்க வாழ்க்கையை அலசுவது மனுஷங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. மிகச்சிறந்த வார்த்தை.