Episode 21
அடுத்த நாள் காலையில் கார்த்தி மெத்தையில் புரண்டு கொண்டிருக்க, காளிதாஸன் குளித்து முடித்திருந்தான்.
“கமான் கண்ணா! ஒரு ரொமாண்டிக் குட் மார்னிங் சொல்லு” என்றான் விரிந்த புன்னகையுடன். நேற்று நடந்ததெல்லாம் கனவோ என்பது போல் அவ்வளவு அழகான காலை வேளை. கணவனின் பேச்சில் உற்சாகம் தானாய் எழ, மற்ற நினைவுகளை ஒதுக்கி,
“உங்களுக்கு வாய் இல்லை, நீங்க சொல்லுங்க” என்றாள் மெத்தையில் உட்கார்ந்து கொண்டு.
“நேத்து நான் சொன்னேன், இப்போ நீ சொல்லு. நீ பாதி, நான் பாதி” என்றான் ராகமாக.
அவனின் ராகத்தை ரசித்தவள், “என்ன உங்க அலெக்ஸா மவுன விரதமா? பாடவே இல்லை” என்று கார்த்தி கிண்டலாய்க் கேட்க,
“அவகிட்ட என் பொண்டாட்டி தூங்குவா. ஸோ, கொஞ்ச நேரம் பேசாத சொல்லியிருக்கேன்” என்றான்.
“முழிச்சிட்டேன்ல, இப்போ பாட சொல்லுங்க. எனக்குப் பிடிச்ச பாட்டா பார்ப்போம்” என்று மனைவி சொல்லி மெத்தையில் இருந்து எழ,
“பிடிச்ச பாட்டா இல்லைனா?” என்றான் கணவன்.
“எனக்குப் பிடிச்சவருக்குப் பிடிச்சு பாட்டுன்னு நினைப்பேன், சிம்பிள் ரைட்?” என்றாள் அவனைப் போலவே.
“கிரேஸீ” என்று புன்னகைத்தவன், “அலெக்ஸா! ப்ளே சாதி மல்லி பூச்சரமே” என்று உத்தரவிட,
“சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி”
என்று எஸ்பிபி மென் குரலில் பாடினார்.
“வாவ்! ராஜா ராஜா தான்! எஸ்.பி.பி வாய்ஸ் bliss” என்றாள் சிலாகித்தவளாக.
“ராஜா இல்லை. மரகதமணி கம்போஷிஸன் இது, இதுதான் நம்ம ஆளுங்க. ராஜா, ரஹ்மான் எல்லாம் நல்ல பாட்டு போட்டிருக்காங்க. ஆனா, நல்ல பாட்டு போட்டதெல்லாம் அவங்க மட்டும் இல்லை, அவங்க லெஜன்ட்ஸ்னால எல்லா கிரெடிட்டும் அவங்களுக்கு போயிடுது. கண்ணுக்குள் நூறு நிலவா ரொம்ப நல்லாயிருக்கும், நானும் அது ராஜான்னு நினைச்சேன், தேவேந்திரன்னு ஒருத்தரோடது. எல்லாருக்கும் பெஸ்ட் வர்ஸ்ட்னு இருக்கும்” என்று காளிதாஸன் காலை வேளையில் தன் சொற்பொழிவைத் தொடங்க,
“பாஸ்! தெரியாம சொல்லிட்டேன், விட்டுடுங்க. வேணும்னா பனிஷ்மென்ட் கொடுங்க இப்படி பேசினா அவ்வளவுதான்” என்றாள் கார்த்தி கடுப்பாக. அவள் பாத்ரூம் சென்று வர, வந்தவளைப் பார்த்து,
“பனிஷ்மெண்ட் ஏன் கொடுக்கணும், உனக்குக் காலையில அற்புதமா ஒரு பாட்டு போட்டிருக்கேன், நீ எனக்குக் கிஃப்ட் கொடு கண்ணா” என்றான் ஆவலாக.
“ரொம்ப நல்லா போட்டிருக்கீங்க! கடுகு போல் உன் மனம் இருக்கக் கூடாது, கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும். இந்த லைனுக்காகவே உங்களுக்கு இந்த பாட்டு பிடிச்சிருக்கும். இதுல ரொமாண்டிக் மார்னிங் வேறயாம். ஏன் சங்கீத ஸ்வரங்கள் பாட்டு உங்க அலெக்ஸாவுக்குத் தெரியாதோ?” என்றாள் நக்கலாக.
“ஹேய் கண்ணா! அது நைட்ல வர சாங்” என்று காளிதாஸன் சொல்ல,
“தாஸ், நீங்க இருக்கீங்களே?! சிட்டிவேஷனுக்குத் தான் போடுவீங்களோ?” என்று கார்த்தியாயினி சிரித்தே விட்டாள்.
“இனிமே பாரு சிட்டிவேஷனுக்கு ஏத்த மாதிரி போடுறேன்” என்று காளிதாஸன் வீராப்பாய் சொல்ல, சிரிப்புடன் இருவரும் கீழே இறங்கி வந்தனர். ஒன்றாய் சமைத்து உண்டு முடித்தனர். இருவராலுமே இயல்பாகப் பழக முடிந்தது.
“கார்த்திமா, எனக்கு இன்னிக்கு பொதுக்குழு இருக்கு. எங்கேயும் போக முடியாது, உனக்கு வீட்ல என்ன சேஞ்ச் பண்ணணும் பார்த்து வை. ஷாப்பிங் போகணும்னா கார் எடுத்துக்கோ, பட் ஜாக்கிரதை” என்றான்.
“கண்ணா! உனக்கு அம்மாவைப் பார்க்கணும்ல, ஈவினிங் நான் முடிஞ்சதும் வரேன், இல்லைனா வாலியை அனுப்பி விடுறேன். நீ போய்ட்டு வா. யார் பேசினாலும் நெவர் மைண்ட்” என்ற கணவனை பெருமையாய்ப் பார்த்தாள் கார்த்தியாயினி.
“இல்ல வேண்டாம்ங்க, ராஜீவ்வே என்னைப் புரிஞ்சிக்கல, என் மேல தப்பில்லனாலும அம்மாவோட இந்த நிலைக்கு என்னைக் காரணமாக்கிட்டாங்க. நான் பார்த்தா இன்னும் டென்சன் ஆவாங்க. நீங்க டாக்டர் கிட்ட அவங்க ஹெல்த் நல்லா இருக்கான்னு மட்டும் கேட்டு சொல்லுங்க, போதும்” என்றதற்கு தலையசைத்துப் போனான்.
ஹாலைக் கடந்தவனை வேகமாய் அழைத்தவள் நெருங்கி நின்று அவன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு,
“ஹாப்பி மார்னிங் காளிதாஸன்” என்று சொல்ல, அவள் செயலில் அவனின் புன்னகை விரிய, தனக்குக் கிடைத்ததை தன்னவளுக்கும் கிட்ட செய்தான்.
அடுத்த நாள் கார்த்தியை முதன் முதலில் கண்ட ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றான். கார்த்திக்கு உடைகள் தேர்ந்தெடுத்து விட்டு இருவருமாக கேஃபேயில் ஜூஸோடு உட்கார்ந்தனர்.
காளிதாஸனுக்குப் போன் வரவும், அவன் பேசிக்கொண்டிருக்க, கார்த்தி அவனுக்குக் கிஃப்ட் வாங்கலாம் என்று ஒரு கடைக்குள் நுழையப் பார்க்க, அவள் பெயர் சொல்லி அழைத்தான் நவீன்.
“ஹாய் நவீன்!” என்று கார்த்தியும் மரியாதையாகப் பேச,
“எப்படி உன்னால இவ்வளவு சந்தோசமா ஹாய் சொல்ல முடியுது காது? எங்கிட்ட இனி கல்யாணமே வேண்டாம் சொல்லி, உன் ஹஸ்பண்ட் பார்த்தேன் நியுஸ்ல, ஃபார்ட்டி இயர்ஸ் அவருக்கு. ஹவ் குட் யூ டூ திஸ்? உன்னை ப்ளாக்மெயில் பண்ணீனாரா அவரு?” என்றான் ஒரு கோபத்துடன்.
நவீனின் பேச்சு எல்லைக் கடக்க, நங்கையின் கோபமும் எல்லைக் கடந்தது.
“ஷட் அப் நவீன்! என்னையோ, என் ஹஸ்பண்ட் பத்தியோ பேச உங்களுக்கு எந்த ரைட்ஸூம் இல்லை. உங்களோட, என்னோட ரிலேஷின்ஷிப் முடிஞ்சு ஆறு மாசம் ஆகுது. நான் ஒன்னும் குழந்தை இல்லை, எனக்கும் அறிவு இருக்கு. அவர் என்னோட சாய்ஸ்! நான் ஒன்னும் உங்களை ஏமாத்தல, என்னால உங்களுக்கு ஒருவகையில வருத்தம்ன்றதால நானே வந்து மன்னிப்புக் கேட்டு பேசினேன். அத்தோட எல்லாம் முடிஞ்சது. இஷ்டமிருந்தா நல்லதா பேசுங்க, இப்படி பேசறதை எல்லாம் என்னால டாலரேட் செய்ய முடியாது” என்று கார்த்தி அவனிடம் அதட்டலாய் பேசிக் கொண்டிருக்க, காளிதாஸன் வந்து,
“கண்ணா! ஏன் இவ்வளவு கோபம்? லீவ் இட்” என்றான், அவள் கடைசியில் சொன்ன வார்த்தைகளை வைத்து.
“நீங்க அமைதியா இருங்க தாஸ், இஷ்டத்துக்குப் பேசுவாரா இவர்? என் வாழ்க்கையோட முடிவை எடுக்கிற பக்குவம் எனக்கு இருக்கு. முதல்ல ஒன்னு யோசிங்க, உங்களை விட என் அப்பா பார்த்த அத்தனை பேரையும் விட்டு இவரை ஏன் எனக்குப் பிடிச்சதுன்னு? என் ஹஸ்பண்ட் எல்லாரையும் விட பெட்டர் இல்லை, ஹி இஸ் தி பெஸ்ட் அண்ட் திஸ் இஸ் லாஸ்ட்! இந்த பேச்சு இனி கூடாது” என்று விரல் நீட்டி மிரட்டியவள்,
“வாங்க நீங்க” என்று காளிதாஸன் கைப்பிடித்து, அவனுடன் கிளம்பினாள். வீட்டிற்குச் சென்றதும் காளிதாஸன் கார்த்தியிடம்,
“என்னை ப்ரஸ்ட் டைம் மிரட்டின கார்த்தியை இன்னிக்குப் பார்த்தேன்” என்றான் ரசனையாக.
கார்த்தி பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“ஆனா, இந்த கோபத்தை உன் தம்பி கிட்ட காட்டியிருக்கலாம், பாவம் அந்த நவீன்” என்றான் கிண்டலாக.
“என்ன பாவம்? என்னையே கொஸ்டின் பண்றான், என்னமோ காதலிச்சு கை விட்ட மாதிரி… இடியட். ராஜீவ் பேசினப்போ நான் கொஞ்சம் எமோஷனலா ஆகிட்டேன், என் தம்பி என்னைப் புரிஞ்சக்கவே இல்லைன்ற ஆதங்கம். அந்த நவீன் என்னமோ உங்களை வில்லன் மாதிரி பேசுறான், பரதேசி” என்றாள் எரிச்சலுடன் பல்லைக் கடித்து.
“பரதேசியா?! அய்யோ என்னம்மா பேசுறடா நீ? ஆனாலும், அவனுக்கு நான் வில்லன் தானே?” என்று காளிதாஸன் சிரிக்க,
“என்ன சிரிப்பு? அவனை திட்டும் போது லீவ் இட் சொல்றீங்க ” என்று அவனிடமும் காய்ந்தாள்.
“இனிமே எவனாவது உங்களைப் பேசட்டும், மண்டையை உடைக்கிறேன்” என்ற மனைவியை ரசித்தான் கவிஞனாக!
“பேசிட்டு இருக்கேன், சிரிக்கிறீங்க?” என்று அவனைப் பேச,
“கண்ணா, ரிலாக்ஸ் ஆகு! அவன் நமக்கு யாருமே இல்லை. அப்போ அவங்க சொல்றதை ஏத்தாத. அதை பழகிட்டா சரியாகிடும்” என்றவன்,
“ஆபிஸ்க்குப் போவோம், நீ சும்மா டென்ஷன் ஆகுற” என்று சொல்லி அவளை ஆபிஸ் அழைத்துச் சென்றான். அவனின் அலுவலகம் டீவிக்கான செட் அப் பாக்ஸ் தயாரிக்கும் ஒன்று. காளிதாஸ் தன் அறைக்கு கார்த்தியை அழைத்துச் சென்றவன்,
“இதான் நம்ம பிஸீனஸ், அரசியல் மனசுக்காக. இது பணத்துக்காக” என்றான்.
“இனி நீதான் இதை மேனேஜ் செய்யப்போற கார்த்தி. எனக்கு எலெக்ஷன் வொர்க் இருக்கும். உன்னையும் வீட்ல சும்மா விட்டா, நீ யார் மண்டையை உடைப்பேன்னு என்னால பார்க்க முடியாது. பேசறவங்க பேசத்தான் செய்வாங்க, நம்ம நமக்காக வாழணும்”
கார்த்திக்கு வேலையைப் பற்றி விளக்கி சொல்ல, அதிலே பகல் பொழுது முடிந்து போனது.
மதிய உணவை வெளியே முடித்திருக்க, மாலை வேலையாய் காளிதாஸன் வெளியே சென்றான். இரவு நெருங்கும் வேளையில் அவன் வீடு வந்த போது, ஹாலில் இருந்த டீவியில்,
“அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி” என்று பாடல் ஓட, அலுவலக அறையில் இருந்து ஹாலுக்குள் நுழைந்தவன் ஒரு நொடி நின்று சிரிப்புடன் டீவியைக் கடந்து கிச்சனுக்குள் பார்க்க, கார்த்தி சமையல் செய்துகொண்டிருந்தாள்.
கிச்சன் கதவருகே நின்று, “வேற யார்கிட்டவும் பேச வேண்டாம் கண்ணா, நான் வந்துட்டேன். நாள் இன்னிக்கே பார்த்துடுவோமா?” என்று கேட்டு கண்சிமிட்ட கார்த்திக்கு நிஜமாய் ஒன்றும் புரியவில்லை.
“என்ன?” என்று அவள் பார்க்க, அலெக்ஸாவிடம் டீவி சத்தத்தை அதிகம் வைக்க சொல்ல, இப்போது கிச்சன் வரை பாடல் சத்தமாய்க் கேட்க கார்த்தி சிவந்து போனாள்.
“சிவகாமி மகனுக்கு நீ சொன்ன செய்தி கேட்டுடுச்சு கண்ணா” என்று சொல்லி அவன் பார்த்த பார்வைக்குப் பாவையால் பதில் பார்வை பார்க்க முடியவில்லை.
அவனைப் பார்க்காமல் பாத்திரத்தைப் பார்த்தபடி, “நான் டீவியை ஆன் பண்ணிட்டு பாட்டு சேனல்ல வச்சிட்டேன், பழைய பாட்டு போடுவாங்க தெரியல. சிட்டிவேசனுக்கு எல்லாம் நான் போடல” என்று முணுமுணுக்க,
“கேட்கல கார்த்தி” என்று அவன் நெருங்கி வந்தான்.
“அப்போ இதான் சிட்டிவேஷனு புரியுது உனக்கு” என்று சொல்லி அவள் முகம் பார்க்க,
“தாஸ்! ப்ளீஸ்! எனக்கு சமையல் சொதப்பிடும்” என்று கெஞ்சலாய்ப் பார்க்கவும்,
“நான் சிட்டிவேஷன் சாங் போடுறேன் நைட்ல” என்று சொல்லி அவன் மாடியேறினான்.
உண்ணும் போது விசாலாட்சி பற்றி கார்த்தி கேட்க, காளிதாஸன் பதில் சொன்னான். எல்லாம் எடுத்து வைத்து கார்த்தி உறங்கப் போக, அவன் சொன்னது போலவே பாடல் ஒடியது.
‘கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்’ என்று காளிதாஸனும் கூட சேர்ந்து பாடியவன்,
“என்ன கவிதைப் பாடிடலாமா?” என்று அவளிடம் கேட்க,
“எனக்கு கவிதை எல்லாம் தெரியாது” என்று வேண்டுமென்றே கார்த்தி அவனிடம் வம்பு செய்ய, அவளை அப்படியே வளைத்துத் தூக்கினான்.
“புதுக்கவிதைப் படிக்கப் போறேன், எப்படி இருக்குன்னு நீ சொல்லு” என்றவன்,
“சிட்டிவேஷன் சாங் ரைட்?” என்று கேட்க, நாணத்துடன்,
“ரைட்! ரைட்!” என்றாள் கார்த்தி.
காளிதாஸனின் கவிதையானாள் கார்த்தி.!!
புதிதாய் இருவருக்குள்ளும் உணர்வுகள் உதித்திட, யாரும் காணாத காளிதாஸனையும், கார்த்தியையும் ஒருவருக்கொருவர் கண்டனர்.
சில நேரம் கவிஞனாக, சில நேரம் ரசிகனாக என்று கணவனாகத் தன்னை கார்த்தியிடம் உணர்த்தினான் காளிதாஸன்.
புலரும் வரை புதுக்கவிதை வாசித்தவன், புலர்ந்த பின் மலர்ந்து தன் மேல் உறங்கிய கவிதையின் கார்குழலை ஒதுக்கி விட்டு நிறைவாய் அவள் நெற்றிய முத்தமிட்டான். கார்த்திக்கு இந்த காளிதாஸனையும் மிகவும் பிடித்தது. அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டு, இறுக்கி அணைத்துக் கொள்ள,
“காற்று அடிக்கக் கூடாது, தொட வேண்டும். அதுதான் சுகம்! பிரபஞ்சனோட கவிதை” என்று காளிதாஸன் கவிதை சொல்லி மனைவி முகம் பார்த்தான்.
“அந்த காத்து பேரு காளிதாஸா?” என்று கார்த்தி, அவனின் காதோரம் நீவிக் கொண்டு கேட்க,
“கண்ணா! இது அவர் இயற்கைக்கு சொன்னதுடா, என்னவோ இந்த காலையில, உன் பக்கத்துல இருக்கவும் தோனுச்சு சொன்னேன். சிட்டிவேஷனுக்கு மேட்ச் பண்ற பார்த்தியா கார்த்தி நீ” என்று சிரிக்க,
“போங்க, போங்க. உங்க பாட்டெல்லாம் மோசம்” என்றாள் கார்த்தி சிணுங்கலுடன். அனுராகத்தின் ஆரோகணமாய் அந்த காலை வேளை அமைந்தது.!!
Read and Share your thoughts
தினமும் இரண்டு பதிவுகள்.
✅ End of Episode 21
மிகவும் அருமை. மூன்றாம் பத்தியில் உபன்யாசம் என்பதற்கு பதிலாக உபவாசம் என வந்துள்ளது பவி மா.
தப்பா எழுதியிருக்கேன் மா. நன்றி மா. மாத்திடுறேன். ☺️
கவிதை படிக்கும் நேரம்