Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 24

காளிதாஸன் 24

இரண்டு நாள் கழித்து காளிதாஸன் வந்த போது கார்த்தி உறக்கத்தில் இருந்தாள். அன்று அவர்கள் தலைவருடன், அவன் தொகுதி செல்ல திட்டம். காளிதாஸ குளித்து விட்டு வெள்ளை வேஷ்டியில் மேல் சட்டையின்றி வர,

‘உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே
பகல் இரவா’ என்று அலெக்ஸா உபயத்தில் பாடல் ஓடியது. கார்த்தி கணவன் குளிக்கும் சத்தத்தில் விழித்தவள், அவன் வருவதற்காக மெத்தையில் போர்வையை சுருட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“அலெக்ஸா, என்ன காலையில செம ரொமாண்டிக்கா பாடுது” என்று கேட்டபடி, மனைவியின் அருகே வந்து உட்கார்ந்தான் காளிதாஸன். அவன் உட்காரவுமே கார்த்தி அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

“நீங்கதான் ரொமாண்டிக்கா இல்லை, கழுத அதுவாச்சும் இருக்கட்டும்” என்றாள் முணுமுணுப்பாக.

“என்ன நான் ரொமாண்டிக் இல்லையா?” என்றான் கண்ணில் கேலியுடன் கார்த்தியின் முகம் நிமிர்த்தி.

“ரொம்பத்தான் ரொமாண்டிக் நீங்க. என்னைப் பார்த்து இவ்வளவு நாளாகுது. வந்ததும் என்னைக் கூப்பிடாம பாருங்க வேஸ்டியோட ரெடியா நிக்குறீங்க. நானாதான் வந்து சாஞ்சுருக்கேன்” என்று கார்த்தி குறைபட,

“நான் இப்படி சும்மா சாயறதோட நிறுத்த மாட்டேன்” என்றான் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு.

“நானும் கார்த்தியை மிஸ் பண்ணினேன்” என்றவன், அவள் முகமெங்கும் முத்தங்களால் நிறைக்க, அவன் மோகத்தில் இவள் கரைய, இவள் மோகனத்தில் அவன் கரைந்தான். அலெக்ஸா இன்னும் பாடிக் கொண்டிருக்க லாளிதமான காலை வேளை.

இடையே போன் வர, காளிதாஸன் சட்டென எழுந்து கொண்டு பேசினான். கார்த்தியின் முகம் ஏமாற்றத்தைக் காட்டவும்

“சாரிம்மா, இப்போ கிளம்பினாதான் கட்சி ஆபிஸ் போக கரெக்டா இருக்கும், இல்லை ட்ராஃபிக்ல மாட்டினா கஷ்டம் கார்த்தி” என்றதும், கார்த்திக்கு அவ்வளவு கோபம். வேகமாய் மெத்தையை விட்டு எழுந்து,

“இதுதான் என்னை மிஸ் பண்றதா? கட்சி ஆபிஸ் போக கிளம்பிட்டு என்னை சும்மா சமாதானம் செய்றீங்க, இதுல கவிதை கீவிதைன்னு பேச்சு மட்டும்” எரிச்சலாய் சொல்லியவள் அறையை விட்டு போக பார்க்க, காளிதாஸனின் கை அவளை விடவில்லை. இறுகப் பற்றிக் கொண்டான்.

“விடுங்க உங்க கட்சியையே கட்டிக்கோங்க”

“நான் எதைக் கட்டிக்கணும்னு நீ சொல்லாத” என்றவன் பிரிவின் ஏக்கம் தீர, ஓரு நீள் முத்தம் தந்தான்.

காளிதாஸன் முத்தமிட்டு விலகி, அவள் கழுத்தோடு கரம் கோர்த்து, “எப்படி என் கவிதை?” என்றான். ஏக்கம் தீர அவன் செய்த செயல் அவளின் ஏக்கத்தை அதிகப்படுத்தியிருக்க,

“ஓஹோ, இதான் கவிதையா?” என்று கார்த்தி கேட்க,

“இது ஹைக்கூ கவிதை கண்ணா!! எனக்கும் பெருசா ஒரு கவிதை சொல்ல ஆசைதான். ஆனா நேரமில்லையே” என்றவன்,

“ப்ளீஸ் கண்ணா! இப்படி நீ சோகமா இருந்தா எனக்குமே கஷ்டமா இருக்கும்மா. கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, எலெக்ஷன் முடிஞ்சதும் ஹனிமூன் போறோம்” என பேசியவனின் கை இறுக்கமாகக் கார்த்தியை அணைத்துக் கொண்டது.

ஒரு வழியாக தேர்தல் முடிந்தது. யாருக்கு சந்தோஷமோ இல்லையோ, கார்த்தி மிகவும் மகிழ்ந்து போனாள். இனியாவது கணவனுடன் தனக்கான நேசமும், அதைக் காட்டும் நேரமும் கிடைக்கும் என கனவுகளுடன் இருந்தாள்.

தேர்தல் முடிந்தாலும் முடிவுகள் அறிவிக்கப்படுவது அடுத்த மாதம் ஒத்திவைத்திருக்க, எல்லா கட்சியினரும் வாக்கு எண்ணும் மையங்கள் சுற்றி பாதுகாப்பை இருந்தனர். பெட்டி மாற்றம் எதுவும் நடக்கக் கூடாது என கண்காணிப்பு தீவிரமாய் இருந்தது.

அன்று காலையில் காளிதாஸனின் கட்சி ஆட்கள் ஆளுங்கட்சியினருடன் மோதலில் ஈடுபட்டிருக்க, அந்த வாக்குச்சாவடி இருந்த இடம் காளிதாஸனின் வீடு இருக்கும் பகுதி. காலையில் காளிதாஸனுக்கு இது பற்றி செய்தி வர, அவசரமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தான்.

கார்த்தியோ, இது பற்றி அறியாதவள் அலெக்ஸாவில் பாடலை ஒலிக்க விட்டு காலை சமையலை முடித்து கணவனை அழைக்கப் போனாள்.

காளிதாஸ் சட்டையை மாட்டிக் கொண்டிருக்க, வெகு நாள் கழித்து கிடைத்த அவனின் அருகாமையில் கார்த்தி கணவனைப் பின்னிருந்து கட்டிக் கொண்டாள்.

“குட் மார்னிங் காளிதாஸ்” என்று சொல்லி அவன் முதுகில் முத்தமிட, காளிதாஸனோ காதல் கொள்ளும் நிலையில் இல்லை. அவசரமாய் அவளை விலக்கியவன்,

“அர்ஜண்டா போகணும் கார்த்தி, பை” என்று சொல்லி அவன் போனை எடுத்துக் கொண்டு கிளம்பி விட, அப்போது அதனை சாதாரணமாய் எடுத்தாள். ஆனால், வீட்டிற்கு மதியம் போல வந்த போதும் அலுவலக அறையில் இருந்தான். எப்போதும் அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க, கார்த்தி அவன் கவனத்தில் சுத்தமாய் இல்லை. மீண்டும் ஐந்து மணிக்கு இவளிடம் சொல்லி விட்டு வெளியே சென்றான்.

கார்த்திக்குப் பெருத்த ஏமாற்றமாய்ப் போனது. அவன் இருந்தாலும் ஒரு தனிமை! கொடிதினும் கொடிதாய் இருந்தது! நேரம் சரியில்லை போல, அன்று பார்த்து சிவகாமி அம்மா வந்தார்.

“கண்ணா எங்க கார்த்தி?” என்று கேட்டார்.

சிவகாமியின் கண்ணா என்ற விளிப்பு கணவனை நினைவூட்ட, இத்தனை நாள் ஏமாற்றமும் வெடிக்கக் காத்திருந்தது.

“வீட்ல இல்லைம்மா” என்றவளின் குரலில் அவ்வளவு சோர்வு.

“எலெக்ஷன் முடிஞ்சும் என்ன பண்றான் இவன்? இத்தனை நாள் அலைஞ்சது பத்தலையாமா?” என்றார் கோபமாக. கார்த்தியின் முகம் பார்த்தே அவள் இயல்பாய் இல்லை என்பதை உணர்ந்தவர் அவளுடன் பேசிக் கொண்டு இருந்தார். சிவகாமியிடம் பேசினாலும் கணவன் வருவானா என்று கவனமெல்லாம் கதவருகே இருந்தது கார்த்திக்கு.

சிவகாமியும் மணி ஏழாகி விட, “சரி கார்த்திமா, அவன் வந்தா சொல்லு. நான் கிளம்புறேன்” என்றார்.

“மா, நீங்களும் போய்ட்டா நான் தனியா இருக்கணும். ப்ளீஸ் இன்னிக்கு இருங்களேன்” என்று கார்த்தி கேட்டே விட்டாள்.

“என்னாச்சு கண்ணா?” என்று சிவகாமி மருமகளின் குரலில் இருந்த உணர்வை உள்வாங்கிக் கேட்க கார்த்திக்கு அவரின் வாஞ்சை கூட தாங்கவில்லை. அவர் மடியில் படுத்து அழுது விட்டாள். இத்தனை நாள் ஏக்கங்களும், இறுக்கங்களும் உடைத்து விடுமளவு அழுகை.

தலைவன் மீது தலைவி கொண்ட தாளாத காதல் தந்த அழுகை!

காளிதாஸன் சோர்வுடன் அலுவலக அறையைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அம்மாவைக் காணவும், “ம்மா? எப்போ வந்தீங்க?” என்று கேட்டான் சந்தோஷமாக.

“நான் வரது இருக்கட்டும், நீ ஏன் லேட்?” என்றார். ஈர நிலாவாய் நின்றிருந்தாள் பெண்.

அம்மாவின் கேள்வி விசாரணைத் தொனியில் வர, “ம்மா, எலெக்ஷன் டைம். கொஞ்சம் கலாட்டாவா ஆகிடுச்சு அதான்.” விளக்கினான் காளிதாஸன்.

“சரி, கார்த்தியை ஏன் அழ விடுற?” என்று கேட்க, “என்ன நான் அழ விட்டேனா? கார்த்தி என்னாச்சு?” என்று மனைவியிடம் கேட்க,

“அவளுக்கு என்னாச்சுன்னு கூட தெரிஞ்சிக்க முடியல உன்னால. அந்தளவு நேரமில்லை, உன் மனைவி உன் வீட்ல இருந்துட்டு என்னால தனியா இருக்க முடியலம்மான்னு அழறா” என்றதும்,

“கார்த்தி?” என்று கண்டிப்பாய் மனைவியைப் பார்த்தான்.

“ம்மா, எலெக்ஷன் டைம் இப்படித்தான் இருக்கும். கார்த்தி புரிஞ்சிக்காம நடக்குறா” என்று காளிதாஸன் சொல்லவும்,

“அதையே அவளும் நினைக்கலாம் கண்ணா, உங்க விசயம் நீங்களே பேசிக்கணும். நான் தலையிட்டா தப்பு. ஆனா, தேவையான நேரத்துல பேசணுமே” என்ற சிவகாமி,

“உன்னோட எதிர்ப்பார்ப்ப எல்லாம் கார்த்தி சொல்லாம புரிஞ்சிக்கிட்டா கண்ணா, நான் பார்த்திருக்கேன். ஒன்னு சொல்லிக்கிறேன் கண்ணா, எதிர்ப்பார்ப்பு எதிர்ப்பார்ப்பா இருக்கவரை பிரச்சனை இல்லை. அது ஏமாற்றமா மாறிட்டா வாழ்க்கை கஷ்டமாகிடும்” என்றார் அழுத்தமாக. 

“உன்னோட கணிப்புக்குள்ளேயே எல்லாரும் இருக்கணும் நினைக்காத, ஒவ்வொருத்தர் உணர்வும் ப்ரத்யேகமானது. நீ புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன். கார்த்தியைப் பார்த்துக்கோ கண்ணா”

சிவகாமி மகனிடம் பேசியவர், “இவன் உன்னைக் கண்டுக்காம இருந்தா அழுவியா? மைக் பிடிச்சு பிடிச்சிருக்குன்னு சொன்ன தைரியம் எங்க போச்சு உனக்கு? உன் புருஷன் இவன், சட்டையைப் பிடிச்சுக் கேள்வி கேளு. சும்மா விட்டுக் கொடுக்க கூடாது” என்று கார்த்தியிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டு கிளம்பினார்.

காளிதாஸனுக்கு, அம்மா சொன்னது புரிந்தது. அவனின் மீதும் தவறு இருக்கிறதை மனம் ஏற்றது. இத்தனை வருட தனி வாழ்க்கை, அவன் வீடு, அவன் ராஜ்ஜியம்! என இருந்து விட்டு இப்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. நிச்சயம் கார்த்தி அவனின் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த துணை. தன்னால் அவள் அழுதாள் என்பதே பெரும் வலியாய் இருந்தது அவனுக்கு.

தன்னை சரிப்படுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவன், “கொஞ்ச நேரத்துல வந்துடுறேன் கார்த்தி” என்று சொல்லி அலுவலக அறைக்குள் போகக் கார்த்தி வெடித்தே விட்டாள்.

அதனையும் விட அம்மா இவ்வளவு பேசிய பின்னும் அவளை சமாதானம் செய்யாமல் அலுவலக அறைக்குள் அவன் போகப் பார்க்க, அது மொத்தமாய்க் கார்த்தியை நிலையிழக்க செய்தது.

“என் கூட பேச முடியாத அளவு நான் முக்கியமில்லாம போய்ட்டேனா?” என்றாள் அழுத்தமான குரலில்.

“கார்த்தி என்ன பேசுற நீ? அப்படி இல்லைம்மா” என்று காளிதாஸன் சொல்ல,

“அப்படித்தான் என்னை நினைக்க வைக்கிறீங்க” என்றாள் குற்றச்சாட்டாக.

“கார்த்தி ப்ளீஸ்! அவசரப்படாத, நம்ம அப்புறம் பொறுமையாப் பேசுவோம். கொஞ்ச நேரம் எனக்கு டைம் கொடு” என்று கேட்டான் பொறுமையாகவே. ஆனால், பொறுத்திருந்த பெண் வெறுத்துப் போயிருக்க,

“அதைத்தான் தாஸ் நானும் கேட்கிறேன், எனக்கு டைம் கொடுங்க. என்னை விட எப்பவும் உங்களுக்கு உங்க அரசியல், கட்சி அதான் முக்கியமா? தேர்தல் டைம் ஓகே. ஆனா, என்னை யோசிக்கவே மாட்டீங்களா?” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.

“என்ன பேசுற கார்த்தி? உன்னை யோசிக்காம என்ன? முதல்ல ஒன்னு புரிஞ்சிக்கோ கார்த்தி, உனக்கு முன்னாடியே இப்படித்தான் என் லைஃப்  இருந்துச்சு, எல்லாம் தெரிஞ்சுதானே கல்யாணம் பண்ணின?” என்று காளிதாஸன் கேட்க,

“தெரிஞ்சு பண்ணினதால என்னை இக்னோர் பண்ணுவீங்களா? இல்லை நானே வந்ததால என்னை இன்சல்ட் பண்றீங்களா?” என்றாள் ஆவேசமும், அழுகையும் சேர்ந்த குரலில்.

“என்னை கல்யாணம் செஞ்சா எக்ஸ்பெக்டேஷன் கூடாது சொன்னேன் கார்த்தி, எத்தனை தடவ யோசிக்க சொன்னேன் உன்னை?” என்றான் அவனும் கோபமாக. 

சிவகாமி சொன்ன செய்தி எல்லாம் காற்றில் போனது. அந்த நேர கோபம், அந்த நேர வாதமாய் மாற, இருவரும் வார்த்தைகளை விட்டனர்.

அப்படியே பேச்சு நீள, ஒரு கட்டத்தில் காளிதாஸன் பேச்சை விட்டு அறைக்குள் போய் விட, அந்த செய்கை நிராகரிப்பாய்த் தோன்ற, கார்த்தி இருந்த மனவருத்தத்தில் தன்னை அவன் கண்டுகொள்ளாமல் இருக்க தானும், அவனை தவிக்க விட  வேண்டி வீட்டை விட்டுப் போனாள். 

அத்தனை நாள் தவிப்பை ஒரே நாளில் காளிதாஸனை உணர வைத்தாள் கார்த்தியாயினி.

✅ End of Episode 24
How did you feel about this episode?
❤️ 4 🔥 1 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Kavi Natarajan Reader 6 days ago

💞💞💞💞💞💞

❤️ 2 more...
Mrs Beena loganathan Reader 6 days ago

எந்நேரமும் அரசியலுக்காய் உழைக்கும் கணவன் எதிர்பார்ப்போடு ஏங்கும் மனைவியின் மனம்…
எத்தனை இரவுகள் தனிமையில் கழிந்தாலும் எங்கே போனாய் என்ற கேள்வி கேட்கத் தயங்கும் உள்ளம்…
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாய் மாற, 
எரியும் வார்த்தைகள் 
எல்லை மீறிப் பாய…
எதையும் தாங்கிய இதயம் ஒருநாள் உடைய, 
எதிர்பாராத பிரிவு இருவர் வாழ்விலும் நுழைய… 
எங்கே செல்லும் இந்த பாதை????
❤️ 2 more...
Srichitra Reader 5 days ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top