Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 13

நிலா முற்றம் 13

சர்வஜனனுக்கு ரசிகாவின் இந்த ஒதுக்கம் உறுத்திக் கொண்டே இருந்தது, அதனை பெரிதாய் நினைக்காமல் இருக்க இப்போதும் ரசிகா இப்படி ஒதுங்கிப் போக, அது அவனைப் பெரிதாய்த் தாக்கியது, கோபம் செய்தது.

என்ன செய்தேன் இவளை இப்படி என்னை விலக்குகிறாள்? இத்தனை நாளாய் அவள் மீதிருந்த கோபம் கூட அவள் மன்னிப்புக் கேட்கவும் குறைந்து மறைந்திருக்க, சிவசங்கரை சீண்டுவது கூட அவரைக் கடுப்பேற்றத்தான். உமா மீது மட்டுமே அவனுக்கு வருத்தம், மனத்தாங்கல் எல்லாம்!

சிவசங்கரன் அப்பாவாய் செய்ததைக் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் வளர்த்தவராய் உமா அவனை நம்பிருக்க வேண்டாமா? ஒரு கேள்வியாவது கேட்டிருக்கலாமே? என்ற வருத்தம் நீங்காமல் அவனில் தங்கி இருந்தாலும் ரசிகாவிடம் நட்புடனும் நல்லவிதமாகவும்தானே நடக்கிறான்.

இருந்தும் இவளின் செய்கை, கடுப்பேற்றியது அவனை. இவன் முறைத்து நிற்க, ரசி மௌனமாய் இருக்க பத்ரி அழைத்துவிட்டான்.

“அங்கேயே என்ன நிக்கிறீங்க ரெண்டு பேரும், உள்ள வாங்க” என்றதும் இருவரும் பத்ரியின் பின் செல்ல,

“என் பக்கத்துல உட்காரு ரசி” என்ற ரேஷ்மியிடம் சிரித்த முகமாய்,

“நீங்க அண்ணா பக்கத்துல உட்காருங்க க்கா, நான் இங்க உட்காரேன்” என்றவள் அவர்கள் புக் செய்திருந்த சீட்டில் ஓரமாய் இருந்த ஒன்றில் உட்கார்ந்து கொள்ள, ரேஷ்மி, அவளுக்கு அடுத்து பத்ரி, சர்வா அடுத்து ரசி உட்கார்ந்தாள்.

படம் தொடங்கும் முன் டிரெயல்ர்கள் சில ஓடிக்கொண்டிருக்க, பத்ரியும் ரேஷ்மியும் அவர்களுக்குள் பேச, சர்வா அருகே இருந்த ரசிகாவிடம்,

“பரவாயில்லையே பயமில்லாம என் பக்கத்துல உட்கார்ந்திட்ட” என்றான் நக்கலாக.

“எனக்கென்ன பயம்?” என்ற ரசிகாவின் தைரியமான பேச்சில் ஒரு நொடி அவளை உற்று நோக்கியவன்,

“ஓஹ்! மேடமுக்குப் பயமில்லாமதான் என்னைப் பார்த்தாலே தெறிச்சு ஓடுறியா?”

“நான் எங்க ஓடினேன்?” என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.

“அன்னிக்குக் காலேஜ்ல வேண்டா வெறுப்பா விஷ் பண்ற, எங்கிட்ட பேசறதே இல்லை, இன்னிக்குக் கூட கேள்வி கேட்டா அமைதியா நிக்கிற”

ரசிகா இயல்பாய் நடந்திருந்தால் சர்வாவுக்கு ஒன்றும் தோன்றியிருக்காது, ஆனால் அவளின் ஒதுக்கம் அப்பட்டமாய்த் தெரிய, சர்வாவை மிகவும் குழப்பியிருக்க மனதில் உள்ளதையெல்லாம் கேள்வியாய்க் கேட்டு அவளைப் பார்க்க,

“அன்னிக்கு டயர்டா இருந்துச்சு க்ளாஸ் முடிஞ்சு வந்தேன், அதனால சரியா பேசல. நமக்கு அங்க பேச என்ன வேலை இருக்கு? நீங்க என்னைக்காவது என்னைக் கூப்பிட்டுப் பேசி நான் பேசாம போனேனா?” என்று அவனைத் திருப்பிக் கேள்வி கேட்டாள் ரசிகா.

யுவி இவளின் மாற்றங்களைக் கண்டுகொண்டபின், தனக்கு சர்வாவின் மீதான மயக்கங்களும் அதன் காரணமாய் தன்னுள் தோன்றிய தயக்கங்களும் வெளியே தெரியாதவண்ணம் இருக்க முயற்சி செய்து, அதனையே இப்போது சர்வாவிடமும் காட்டினாள்.

ரசிகாவின் கேள்வியில் அவள் கேட்பது சரியென சர்வாவின் மனம் சொன்னாலும் கூட ஒரு உறுத்தல் இருந்தது.

“இப்போ ஏன் ஒழுங்கா பேசல நீ?”

“நீங்க நான் அவாய்ட் பண்றேனு தீடீர்னு வந்து சொன்னா? நான் என்ன நினைக்கிறது?” என்று மீண்டும் அவனையே கேள்வி கேட்க,

“படம் போடப்போறாங்கடா அப்படி என்ன சீரியஸ் டிஸ்கஷன்?” என்ற பத்ரியின் கேள்வியில் அமைதியானான் சர்வா. ரசிகாவும் எப்படியோ சர்வாவை சமாளித்த திருப்தியில் படத்தில் கவனம் வைத்தாள்.

படம் பார்த்து முடியவும் அங்கே ஃபுட் கோர்ட்டில் நால்வருமாக உட்கார்ந்து சாப்பிட்டனர். ரேஷ்மி மெதுவாகவே உண்டவள் ரசிகாவைப் பார்த்து,

“நீ எவ்வளவு அழகா பாடுற தெரியுமா ரசி? சர்வா நீ பாடின ஆடியோ அனுப்பினார். செம”

“அப்படியா? எப்பவுமே ரசி நல்லா பாடுவா. எங்க அந்த ஆடியோவைக் காட்டுடா” என்ற அண்ணனைப் பார்த்த சர்வா,

“அறிவு ஜீவி! பாடினவ முன்னாடியே இருக்காளே, அவளையே பாட சொல்லு” என்றதும்,

“ஆமாம்ல, பாடு ரசி” என்றதும் அவள் முகம் தன்னால் தலைவனைப் பார்த்தது.

“என்ன என்னைப் பார்க்கிற? மேடம் இப்படித்தான் டா பத்ரி ரொம்ப பிகு பண்ணுவாங்க, அன்னிக்கு ஸ்டுண்டன்ஸ் கேட்கிறாங்க பாடல. இப்போ என்ன நம்ம தானே பாடு ரசி” என்றான் சர்வா.

‘நிலா காய்கிறது…’ என்று ரசிகா பாட ஆரம்பிக்க,

“நிலாவுக்குக் காய்ச்சல் வரது, சூரியனுக்கு சுளுக்குப் பிடிச்சிக்குதுன்னு எல்லாம் பாடாத, அன்னிக்குப் பாடின பாட்டு பாடு ரசி” என்று சர்வா சொல்ல,

பாட்டுடன் இவனும் நினைவில் நிற்பானே? என்று எண்ணம் போனாலும் அவன் கேட்டு அவளால் மறுக்கமுடியவில்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், இந்த நொடி இந்த இனிமையை, இவனுடன் இருக்கும் பொழுதை ரசித்துவிடு என்று ரகசியமாய் மனம் சொல்ல கண்மூடினாலும் கண்ணுக்குள் நின்றான் சர்வா.

‘உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
அசைத்து இசைத்தது
வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது
புது ஸ்வரம்தான்’ என்று ரசிகா ரசித்து பாட, அவளின் கரம் மேஜையில் தாளமிட அவள் இசைக்க, அவள் வளைக்கரம் அசைய அதனை ரசித்துப் பார்த்தான் சர்வா.

“ஆஸம் ரசி” என்று அவளின் கையைப் பிடித்து சர்வா பாராட்ட, ரசிகாவிற்குள் மழை!

அவள் விழிகளில் அவ்வளவு மகிழ்ச்சி, வெகு வருடம் கழித்து இப்படி மனம் நிறைய பாராட்டுகிறான் சர்வா.

“தேங்க்ஸ்” என்று அவள் சந்தோஷத்தில் சொல்ல,

“செம ரசி, உன்னைப் பாட வச்சுக் கேட்டுட்டே இருக்கலாம் போல” என்று ரசிகாவின் கன்னம் தட்டினாள் ரேஷ்மி.

“ரேஷன் அண்ணி, நல்ல காலம் இவளுக்கு மிலிட்டரி மாதிரி வாய்ஸ் இல்லை” என்று அப்போதும் சர்வா சிவசங்கரனை இழுத்துப் பேச அப்பாவைப் பேசுகிறானே என்று சர்வாவை முறைக்க,

“என்ன முறைக்கிற?” என்று அவள் தலையில் தட்ட,

“சர்வா!” அதட்டினான் பத்ரி.

“அது என்ன அவ சின்னப்பொண்ணு மாதிரி ட்ரீட் பண்ற? அவளும் படிச்சு லெக்சரரா இருக்கா. இப்படி அவளை தலையில தட்டுற” என்று திட்டிவிட்டான்.

“டேய் அண்ணா! சின்ன வயசுல இருந்தே பழகிடுச்சு” என்றான் சர்வா.

“இனிமே நிறுத்திக்கோ” என்று ஒற்றை வார்த்தையும் விழிகளில் கண்டிப்புடனும் சொல்ல,

“அட விடுங்கப்பா” என்று ரேஷ்மி எல்லாரையும் சமாளித்தாள்.

“ஏன் சர்வா எங்க பேரை சொல்லி நீ கல்யாணத்துல இருந்து எஸ் ஆகுறியாமே?” என்று ரேஷ்மி சர்வாவிடம் கேட்க,

“அட யார் எஸ்கேப் ஆகுறா? எனக்கும் அன்பான மனைவி, அழகான குழந்தைன்னு ஆசையெல்லாம் இருக்கு அண்ணி. கொஞ்சம் டைம் கேட்டா அதுக்குள்ள இந்த அம்மா இப்படி அவசரப்படுறாங்க”

“இப்பவே பார்க்க ஆரம்பிச்சாதானே டா சரியா இருக்கும்” என்றான் பத்ரி.

“டேய் அண்ணா இப்போதானே இங்க வந்திருக்கேன், கொஞ்ச நாள் போகட்டும். உனக்கு என்ன அவ்வளவு அவசரம்?”

“எங்களுக்காக எல்லாம் தள்ளிப் போடாதடா” என்று பத்ரி சொல்ல,

“பின்ன, டக்குனு அமைஞ்சுப் போச்சுன்னா அமைஞ்சு வரும்போது இவன் தள்ளிப்போடுறான்னு சொல்லுவாங்க, எனக்கு மேரேஜ்ன்றது ஒரு சம்பவமா இருக்க கூடாது”

“ஒஹ், சரித்தரமா இருக்கனுமா?” என்று கிண்டலாய் ரேஷ்மி கேட்க,

“அண்ணி, நான் அப்படி சொல்லவரல. ஒரு எஞ்சாய்மெண்டா இருக்கணும், சும்மா டென்ஷனா எல்லாம் செய்யக் கூடாது. இவன் கல்யாணத்துக்கு எல்லாம் நான் அவசர அவசரமா வந்துட்டுப் போனேன்” என்று சர்வா சொல்ல இவர்களின் பேச்சைக் கேட்டு ரசிகாவிற்கு என்னவோ போல் ஆனது.

இதுதான் நிதர்சனம்! நிஜம்! என்று அவளுக்குப் புரிந்தது. அவளுக்கு அவள் அப்பா வரன் பார்ப்பது போலவே சர்வாவுக்கும் பார்க்கிறார்கள் என்று தெரிந்தது. இவளின் எண்ணங்கள் இவளுடன் மட்டுமே இனி.

இவனிடம் இருந்து தள்ளி நிற்பதே தனக்கு நல்லது என்று நினைத்தாள். காதல், அது சொல்ல தைரியமில்லை, மனமுமில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற போக்குடன் எழுந்தவள்,

“அண்ணி, நான் கிளம்புறேன். டைம் ஆச்சு” என்றதும்,

“இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாமே அப்பு” என்றான் பத்ரி.

“இல்லண்ணா, வீட்ல வேலை இருக்கு” என்று ரசிகா சொல்ல,

“சரி அடிக்கடி வீட்டுக்கு வா ரசி, கல்யாணமாகி போன பின்னாடி உனக்கு டைம் இருக்குமோ என்னவோ?” என்றாள் ரேஷ்மி.

ரசிகா கிளம்ப,

“நானும் கிளம்புறேன், நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் எங்க தொல்லை இல்லாம இருங்க” என்று எழுந்தான் சர்வஜனன்.

“எரும, தொல்லைன்னா உன்னைக் கூப்பிடுவேனா? என்னவோ புதுசா கல்யாணமானவங்க பாரு நாங்க” என்று பத்ரி திட்ட,

“டேய் டெய்லி டியுட்டி டியுட்டின்னு இரண்டு பேரும் ஓடுறீங்க, ஒரு நாள் ரிலாக்ஸ் ஆகுங்க. திரி உன் காதல் தீபத்தை ஏற்றிப் பிரகாசப்படுத்து. அண்ணி என் அண்ணனைப் பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு தன் பைக் சாவியை பாக்கெட்டில் இருந்து எடுத்து சுழற்றியபடி நடந்தவன் முன்னால் போன ரசிகாவை நிற்க சொல்லி அவளுடன் பேசியபடி நடக்க,
ரசிகாவும் மனதைக் கட்டுக்குள் கொண்டுவந்து அவன் கேட்டதுக்கு எல்லாம் இயல்பாய்ப் பதில் பேசினாள்.

இவள் ஸ்கூட்டியை எடுக்க, அவனும் பின்னால் தன் வண்டியில் இவளுடன் வர,

“சர்வா ஏன் பின்னாடி வரீங்க?” என்று கேட்டு அவள் வண்டியை ஓரங்கட்ட,

“சும்மா உன் சேஃப்டிக்கு ரசி” என்றதும்

“அதெல்லாம் நானே பார்த்துப்பேன், எனக்குப் பயமில்ல. இத்தனை வருஷம் என்னைப் பார்க்க நீங்க இருந்தீங்களா என்ன?” என்று கேட்டவளுக்குத் தான் பேசிய பேச்சு அதிகமாய்த் தெரிய அமைதியாகிவிட்டாள்.

“அதுக்குத்தான் உனக்கு மிலிட்டரி பாதுகாப்பு இருந்துச்சே, இன்னிக்கு எங்க கூட நீ வெளியே வந்த, ஸோ நான் துணைக்கு வரேன்” என்று அவன் இயல்பாய் சொல்லி முடிக்க,

“அப்பாவுக்குத் தெரிஞ்சா திட்டுவார் சர்வா, உங்களை” என்று தயங்கி அவள் பேச,

“திட்டினா என்ன? என் மேல தப்பு இல்லைனு அன்னிக்கு சொல்லாம இருந்த, இப்பவும் அப்படியே இருப்பியா ரசி?” என்றவனின் கேள்வியை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

அவன் பேச்சு நியாயம்தான்.

“இங்க பாரு ரசி, அப்பாவுக்கு மரியாதைக் கொடுக்கலாம், தப்பே இல்லை. ஆனா இவ்வளவு படிச்சு, நல்ல வேலையில் இருந்தும் கூட ஒரு சாதாரண விஷயம் அப்பா கிட்ட பேச ஏன் யோசிக்கிற நீ? சரியோ தப்போ அப்பா கிட்ட என்ன பயம் உனக்கு? அப்படி என்ன பேசாம நல்லப்பெயர் எடுக்க நினைக்கிற? இங்க நிறைய பேர் நல்லப்பெயர் எடுக்கணும் நினைக்கறாங்களே தவிர நல்லவங்களா இருக்கணும்னு நினைக்கறதில்லை. நீயும் அப்படி இருக்காத ரசி” என்றவனின் பேச்சு சுட்டது.

“சாரி சர்வா” என்றாள் உடனே.

“சாரி எல்லாம் வேண்டாம், நீ வண்டியை எடு. லேட்டா போனா எல்லைக்குள்ள விடாம விசாரிப்பார் மிலிட்டரி” என்றவன் அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து,

கிண்டலாய் ரசியைப் பார்த்து,
“ஓய்! இன்னிக்குக் காப்பாத்துவியா இல்லை மிலிட்டரி அடியா?” என்று கேட்டான்.

“அப்படி எல்லாம் இனிமே செய்யமாட்டேன்” என்று ரசிகா சொல்ல,

“வெரி குட்” என்றபடி அவனும் அவள் பின்னேயே வண்டியை ஓட்டினான்.

✅ End of Episode 13
How did you feel about this episode?
❤️ 7 more...

You must Log in or Register to react here

💬 9 Replies
Srichitra Reader 3 weeks ago

Very nice. 

❤️ 2 more...
Pavithra Narayanan 3 weeks ago

Thank you ma ☺️

Roja Saradha Mary Reader 3 weeks ago

அருமை

❤️ 1 more...
Pavithra Narayanan 3 weeks ago

Thank you 😊

Geethazhagan Reader 3 weeks ago

ஆனாலும் ரசிய ரொம்ப தவிக்க விடுறீங்கப்பா

😂 1 more...
Pavithra Narayanan 3 weeks ago

Hahaa , en sis Ava enga love ah sona

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 3 weeks ago
என்னுள பூத்த காதலை எப்படி சொல்ல...

எச்சரிக்காய் தள்ளி நிற்கிறேன் 

எதார்த்தமாய் நெருங்கி வருகிறான்....


❤️ 2 more...
Pavithra Narayanan 3 weeks ago

I like this lines sis 😍

@Pavithra Narayanan thanks da...🙏🏻🙏🏻🙏🏻again 4 days ah open agala 🤧🤧😭😭asusual athe open ஆகிடுச்சு... எனக்கு மட்டும் yen என்று தெரியலை.... உங்களை disturb பண்ணவும் manasu இல்ல...

Wait பண்ணேன்..... வந்துட்டேன்👏🏻👏🏻👏🏻🔥🔥❤️❤️❤️👍🏻👍🏻💐💐💐
😢 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top