Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 8

நிலா முற்றம் 8

சர்வா இத்தனை வருடம் வெளி நாட்டில் இருந்த போது தெரியவில்லை, ஆனால் அருகாமையில் ரசிகாவின் அகம் அனுமதியின்றி சர்வாவை ரசிக்கத் தொடங்கியிருந்தது.

அடுத்தவருடனான போர்களையும் போராட்டங்களையும் விட அகத்தினுள்ளே தனக்குள்ளே நடக்கும் போராட்டங்கள் ஒவ்வொன்றும் போர்கள்தாம்! கொன்றாலும் வென்றாலும் பாதிப்பு நமக்குத்தானே?!

அப்படியான நிலைதான் ரசிகாவிற்கு, அவன் கோபம் கொண்டு விலகி நின்ற பொழுதிலும் கூட புரியவில்லை, மன்னித்து அவன் சகஜமாய்ப் பேச, அதுவும் கல்லூரி தினத்தை முன்னிட்டு அவன் எவ்வளவு சாதாரணமாய் பேசினாலும் எல்லாவற்றையும் மனம் மிச்சமின்றி ரசித்து வைத்தது.

அவளும் முடிந்த வரையில் அவனிடம் விலகி நிற்கப் பார்க்க, இன்றோ பாடும்போதும் கூட கண்ணுக்குள் வந்து நின்றான் சர்வா! நெஞ்சுக்குள் இருந்தவன் விழிகளில் விஸ்தாரமாய் எழுந்து நிற்க முடியவில்லை பெண்ணால்.

இந்த உணர்வு காதலா என்று கூட குழப்பம். இது போல பல வருடம் முன் நினைத்திருந்தாள் அவன் மீது காதலென! உண்மையில் உடனிருந்தோர் நினைக்கவைத்திருக்க இன்றைய உணர்வின் உண்மை நிலை தெரியாமல் உள்ளுக்குள் பெரும்போராட்டம்!

அவள் பதினொன்றாம் வகுப்பு படித்த சமயம், அப்போது அவளின் அம்மா இல்லை, அப்பா மட்டுமே! வார இறுதியென்றால் அவள் சக்தியின் வீட்டுக்குச் சென்றுவிடுவாள். சர்வா அவளின் தோழன், எதுவென்றாலும் சர்வாவிடம் கேட்டு செய்வாள்.

அம்மா இறந்த பின் உருவான வெற்றிடம், அதனை தன் அன்பால் நிறைத்தார்கள் உமாவும் சர்வாவும். சக்தியின் வீடென்பதால் சிவசங்கரனும் பெண்ணைப் பயமின்றி இங்கே விட்டுச் செல்வார், பத்ரி பாண்டிச்சேரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தான். அண்ணனும் உடன் இல்லாது இருக்க சர்வாவிற்கும் ரசிகாவுடன் பொழுதினைக் கழிப்பது மகிழ்வான தருணங்களாகவே இருந்தன.

அம்மா இல்லாத பெண் என்பதாலும் அப்பாவுடன் சகஜமான ஒட்டுதல் இல்லா காரணத்தாலும் ரசிகாவிற்கு தோழிகள் மிகவும் இன்றியமையாதவர்கள் ஆகிப்போயினர். வீட்டில் இருந்தால் தனியே தானே இருக்க வேண்டும், அவளின் பாட்டியும் தாத்தாவும் ஒருவர் பின் ஒருவர் இறந்திருக்க, அப்பாவும் பெண்ணும் மட்டுமே. அதனால் பள்ளி செல்வதென்றால் சந்தோஷமாகவே செல்வாள் ரசிகா.

ஒரு நாள் பள்ளியில் தோழிகளுக்குளான பேச்சில்,
“நம்ம ஸ்ருதி சீனியர் ப்ரதீப்பை லவ் பண்றாளாம் தெரியுமா உனக்கு?” என்றாள் ரசிகாவின் தோழி வைஷாலி.

“என்ன வைஷ் சொல்ற, சீனியர்னா அந்த அண்ணா ஸ்கூல் விட்டே போயாச்சே? காலேஜ் படிப்பாங்களே இப்போ” என்று ரசி யோசிக்க,

“அவனே தான், லயோலாவுல படிக்கிறான். நேத்து அவ பர்த்டேக்கு சிக்ஸ்டின் கிஃப்ட்ஸாம் டி” என்றாள் வைஷாலி.

“ஓஹ்” என்று ரசிகா எல்லாம் கேட்டுக்கொண்டாள்.

“ஏய் வைஷ்! நம்ம கேங்க்ல எல்லாருமே கமிட் ஆகிட்டோம், இந்த ரசிகா மட்டும்தான் டி சிங்கிள்” என்று வினிதா சொல்ல,

“யார் சொன்னா அவ சிங்கிள்னு?” என்று சிரித்தவண்ணம் கேள்வி கேட்டாள் சாந்தினி.

“அதானே, இவளுக்கு இவ மாமா பையன் சர்வான்னா ரொம்ப பிடிக்கும்” என்று வைஷாலி சொல்லிவிட,

“நிஜமாவா டி ?” ஆர்வமாய்ப் பார்த்த வினிதாவிடம் பதில் சொல்லாமல் வைஷாலியிடம்,

“நான் ஒன்னும் லவ் பண்ணல” என்று ரசிகா ரோஷமாய் சொன்னாள்.

“சும்மா சொல்லாத, எப்பவும் அவங்க வீட்டுக்குப் போயிடுற. எது சொன்னாலும் சர்வா சொல்லிக்கொடுத்தான் சொல்ற. உனக்குப் பிடிக்காதா என்ன?” என்று சாந்தினி எடுத்துக் கொடுக்க,

“அவளுக்கே இன்னும் லவ் பண்றது தெரியல போல, உனக்கு சர்வாவைப் பிடிக்குற மாதிரி வேற யாராச்சும் பிடிக்குதா சொல்லு” என்றாள் வினிதா.

“இல்லையே” பதில் பட்டென வர,

“நீயும் அப்போ கமிட்டெட்னு சொல்லு” என்றாள் சாந்தினி.

“அதெல்லாம் இல்லை” என்றாள் ரசிகா திட்டவட்டமாக.

அடுத்துவகுப்புகள் ஆரம்பிக்க இந்த பேச்சு நின்றது. மாலை வீடு வரும்போது ரசிகாவும் வைஷாலியும் ஒன்றாய் சைக்கிளில் வருவார்கள். அப்போது ரசிகாவிற்குள் கேள்வி பிறந்தது. தெளிந்த நட்பில் நலமாய் போன உறவில் தோழிகளின் பேச்சு ஒரு குழப்பத்தை விதைத்திருக்க, அதற்கான விடையையும் அவளாய்த் தேடாமல் தோழியிடமே கேட்டாள் ரசிகா.

“ஏன் வைஷு? நிஜமா நான் சர்வாவை லவ் பண்றேனோ?” என்றவள் கொஞ்சம் யோசித்து,

“லவ் பண்ணினா என்ன செய்வாங்க சொல்லேன்” என்றாள்.

“நீயும் சர்வாவும் அடிக்கடி பேசிப்பீங்களா?”

“ம்ம், ஆனா அது பத்ரி அண்ணா கிட்டவும் பேசுவேனே”

“லூசு பத்ரியை அண்ணா சொல்றதானே?” என்றதும் அவளுக்கும் யோசனையானது.

சர்வாவை அண்ணா என்று ஆரம்பத்தில் சொன்னாள்தான் ரசிகா. சர்வாதான்,

“நீ சர்வண்ணான்னு சேர்த்து சொல்றப்ப என் காதுல சரவணான்னு விழுது ரசி. இல்லையா ஒரு ப்ளோவுல சர்வர்ணானு சொல்ற , பெயர் சொல்லியே கூப்பிடு டி சர்வான்னு எப்படி கெத்தா இருக்கு என் நேம்” என்று பெருமையடித்தான்.

“ஆமா டி” என்று இப்போது அதனை நினைத்து வைஷாலியிடம் ரசிகா சொல்ல,

“சர்வாவை விட்டு பார்க்காம பேசாம இருக்க முடியுமா உன்னால?” என்று வைஷாலி விவரம் கெட்டு வினா எழுப்ப, விவரமில்லாமல் விடை சொன்னாள் ரசிகா.

ரசிகாவிற்கு அப்போது தெரியவில்லை. நட்பென்றாலும் ஒரு காலத்தில் பேச முடியாது போகலாம்தானே? ஆனால் அந்த வயதில் மனிதர்களை எளிதில் தேடி நாடி, அவர்கள் மேல் நம்பிக்கை வைக்கவே தோன்றும்.

வாழ்க்கையில் பிரிவு என்று ஒன்று உண்டு என்பதை நினைக்கவே தெரியவில்லை. அதுவும் அம்மா இல்லாத ரசிகாவின் அகிலத்தில் சகலமாய் இருந்தனர் உமாவும் சர்வஜனனும். சிவசங்கரன் கல்லூரி வேலையில் இருக்க, வீட்டில் இருந்தாலும் கூட அப்பாவிற்கும் மகளிற்கும் நடுவே ஒரு எல்லைக்கோடு இருந்தது.

“அது எப்படி முடியும்?” என்று ரசிகா எதிர்கேள்வி கேட்க,

“ஓகே, உனக்கு சர்வா உன்னை விட்டுட்டு வேற யார்கிட்டவாச்சும் பேசினா பிடிக்குமா என்ன? ” என்று கேட்டாள்.

“ஏன் நீ கூட எப்பாவாச்சும் வினிதா கூட பேசுவதானே? எனக்கு அதுவும் பிடிக்காதே” ரசிகா கொஞ்சம் யோசித்து சொல்ல,

“லூசு! நான் உன் ப்ரண்ட், ஆனா சர்வா வேற கேர்ள்ஸ் கிட்ட பேசினா உனக்குப் பிடிக்குமா?”

“தெரியலையே” என்றாள் ரசிகா.

“போ ரசி! உனக்கு சர்வா ஸ்பெஷலா இல்லையா?” என்றதற்கு யோசிக்காமல்,

“ஸ்பெஷல்தான்! எனக்கும் சர்வாவையும் பிடிக்கும், உமா அத்தையும் பிடிக்கும். எப்பவுமே அவங்க எனக்கு ஸ்பெஷல்” என்றாள் ரசிகா அவ்வளவு உற்சாகமாய்.

“எப்பவும் எப்படி இருப்பாங்க, சர்வா வேற யாரைச்சும் லவ் பண்ணினா இல்ல கல்யாணம் பண்ணினா உன் சர்வா உன்னோட சர்வாவா எப்படி இருப்பார்” என்று வைஷாலி சொல்லி வைக்க,

‘என் சர்வா, என்னோட சர்வா’ இந்த எண்ணம் ரசிகாவினுள் விதையாய் இருந்து விஸ்வரூபம் எடுத்து வளரத் தொடங்கியது.

“சரி, சர்வா உனக்கு யாரு சொல்லு” வைஷாலி விடாது கேட்டாள். அவளுக்குத் தங்கள் தோழிமார் அத்தனை பேரும் காதல் கடலில் மூழ்க வேண்டும் என்ற எண்ணம். காதலிக்காமல் இருப்பது என்னவோ பெரும் குற்றமாய் நினைத்தாள்.

“ப்ரண்ட்”

“ப்ரண்ட் இல்லை, பாய் ப்ரண்ட்” என்று திருத்தினாள் வைஷாலி.

“இதே நம்ம க்ளாஸ்ல வேற யாராவது உனக்குப் பாய்ஸ்ல ப்ரண்டா இருக்காங்களா? சர்வா மட்டும்தான் உனக்குப் பிடிச்சிருக்கு. ரசி யு ஆர் இன் லவ்”

“லவ் தப்பில்லையா?” ரசிகாவின் கேள்வி பயத்தில் வர, இளமை வேகத்தில் இருந்த வைஷாலியோ,

“லவ் மேக்ஸ் லைஃப் பியுட்டிஃபுல் சினிமாவுல சொல்றது இல்லை. நானும் தீபக்கும் முதல்ல ப்ரண்ட்ஸ்தான், இப்போ பார் லவ் பண்றோம், அது மாதிரி பாரு நீயும் ஒரு நாள் சர்வாவை லவ் பண்றேன்னு சொல்லுவ” என்றாள் உறுதிபட.

“எனக்குத்தான் இது லவ்னு தெரியல, சர்வா பெரிய பையன் தானே? அவர் ஏன் எங்கிட்ட லவ் சொல்லாம இருக்கார்” ரசிகா விடவில்லை. மொத்தமாய் தெளிய நினைத்து குழம்பிப் போனாள்.

“நீ சின்னப் பொண்ணுன்னு சொல்லாம இருப்பார், இல்லையா உங்கப்பா ஆர்மி கேப்டன் ஸ்டீரிக்ட்னு சொல்லியிருக்க இல்ல, அதுக்குப் பயப்படுவார். இல்ல உனக்குப் பிடிக்குமோ பிடிக்காதான்னு யோசிப்பார்” என்று எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருந்தாள் வைஷாலி.

அன்பைக் காட்டும் இயல்பான ஒரு நேசம், பாசத்திற்குப் பெயர் கொடுக்கிறேன் என்று பெயரில் அந்த பாசத்தை இல்லாமல் ஆக்கினாள் பெண். வைஷாலி காட்டிய தவறான பாதையில் தடம் புரண்டாள் ரசிகா. தெளிந்து யோசிக்காது தோழிகள் காட்டிய வழியை வழித்தடமாய்ப் பின் பற்றினாள்.

 

பெயரில்லா அவர்களின் பந்ததிற்கு காதலென்று பெயர் வைத்து அதனை ரசிக்க ஆரம்பித்தாள் ரசிகா. அதுவும் தோழிகள் எல்லாருக்கும் காதலன்கள் இருக்க தனக்கும் சர்வா இருக்கிறான் என்று சொல்வதில் ஒரு கர்வம்! இல்லாவிடில் அவர்கள் தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்ற ஐயம், அச்சம்!

அப்போதுதான் சர்வா இளங்கலை முடித்து மேல்படிப்பு படிக்க இங்கிலாந்தில் வாய்ப்பு வர, அவன் இன்னும் இருபது நாளில் இங்கிலாந்து புறப்பட வேண்டும். இந்த செய்தியை தன் தோழிகளிடம் சென்று சொன்ன ரசிகா,

“சர்வா யுகே போய்ட்டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்றவளுக்கு என்ன முயன்றும் கண்ணீர் வந்தது. அது இந்த ஐந்து வருடமாய் அவன் நல்ல பழக்கம், அவனது நட்பில்லாமல், கிண்டல் பேச்சில்லாமல் இயல்பாய் பிரிவால் உருவாகும் கண்ணீர். ஆனால் இளமை வாசலில் இருந்த தோழியர்களோ,

“ச்ச, பாவம்டி நீ. லவ் பண்றவர் உன்னை விட்டுப் போனா கஷ்டம் தானே?” என்றாள் வைஷாலி.

“நான்தான் அப்படி நினைக்கிறேன், சர்வா எங்கிட்ட ஒன்னுமே அப்படி சொல்லவே இல்லையே” ரசிகா சோகமாய் சொன்னாள்.

“என்னடி சொல்ற?” என்று அதிர்ச்சியானாள் சாந்தினி.

“ஒரு வேளை அண்ணா படிச்சு முடிச்சிட்டு வரும்போது நீயும் காலேஜ் கம்ப்ளீட் பண்ணிடுவ இல்லை, அப்போ சொல்லுவார் போல” என்ற ஸ்ருதியின் பேச்சுக்கு மறுப்பாய்த் தலையசைத்த வினிதா,

“ஏய் ஸ்ருதி! அப்படி இல்லாம அந்த அண்ணா யுகேல வேற பொண்ணைப் பார்த்து லவ் பண்ணிட்டார்னா நம்ம ரசிகா பாவம்பா” என்றாள்.

“ஆமா ஆமா, நம்ம பக்கத்து க்ளாஸ் ப்ரதிக்ஷா இருக்காளே அவ முன்னாடி நம்ம சீனியர் சுரேந்தரை லவ் பண்ணினா. அவன் காலேஜ் போனதுமே இவ கூட ப்ரேக் அப் பண்ணிட்டு அவன் காலேஜ் பொண்ணை லவ் பண்றானாம், ரசிகா நீ பேசாம உன் லவ்வை சர்வா கிட்ட சொல்லிடு” சாந்தினி அவசரமாய் அட்வைஸ் செய்தாள்.

ரசிகாவின் மனம் அதன்பின் படிப்பில் நிலைக்கவில்லை, வீடு வந்தபின் அப்பா கொடுத்த உணவினை உண்டவளுக்கு சர்வாவின் நினைவே, ஒருவேளை சர்வாவுக்கு வெளிநாட்டில் வேறு பெண்ணைப் பிடித்துவிட்டால்? அதன்பின் சர்வாவைப் பார்க்க முடியாதே, உமா அத்தை அவங்களும் என்னை விட்டுடுவாங்களோ?

இதே சர்வாவை நான் மேரேஜ் பண்ணினா சர்வா கூடவே இருக்கலாம், உமா அத்தை எப்பவும் என்னை நல்லா பார்ப்பாங்க என்ற எண்ணம் ரசிகாவினுள் ஓடிக்கொண்டிருந்தது.

✅ End of Episode 8
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 5 Replies
Srichitra Reader 1 week ago

Nice 

❤️ 1 more...
Sathya Velusamy Reader 1 week ago

நல்ல தோழிகள்.....இப்படித்தான் படிக்கிற வயசுல பல பேர் வழி மாறி போறாங்க

😂 1 more...

Nallaaaaa frienddddssss dhaaan😉😉😉

Mrs Beena loganathan Reader 1 week ago

கூடா நட்பு 

கேடாய் முடியும் 
காதல் என்று
கட்டுக்கதை கட்டி 
கலக்கிய நெஞ்சம் 
கலங்கமானதோ....
❤️ 1 more...
Geethazhagan Reader 1 week ago

பாவம் ரசிகா தோழிகளின்  தவறான வழிகாட்டல்

இப்பையும் அவனை நினைத்தே மருகுகிறாள்.
இந்த சர்வாக்கு ஏன் ரசி ரசிக்கவில்லை
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top