Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 16

நிலா முற்றம் 16

“பொண்ணு பார்க்க வந்திருக்கேன்” என்ற சர்வாவின் வார்த்தைகள் தந்த தாக்கத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அந்த அதிர்வோடு அவனைப் பார்த்த ரசிகா,

“சர்வா?” என்று கேள்வியாய்ப் பார்த்தாள்.

“ப்ச், அடிப்பட்ட பொண்ணைப் பார்க்க வந்தேன், அது ஒரு தப்பா? இப்படி ஷாக் ஆகுற நீ?” என்று கேட்டுக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் சர்வஜனன். அவனின் பேச்சு ரசிகாவிடம் இருக்க பார்வை பாவை விழிகளில் இருக்க, அந்த விழிகளில் முதலில் ஒரு வியப்பு, அதிர்வு, இப்போது ஒரு ஏமாற்றம், மீண்டும் ஒரு நிமிர்வு. இப்படி நவசரத்தையும் காட்டிய நாயகியைப் பார்த்துக் கொண்டிருந்தான் நாயகன்.

ரசிகாவிற்கு அவன் அப்படி சொல்லவும் விளையாடுகிறான் என்று தோன்றினாலும் கூடவே சின்னதாய் ஒரு சிலிர்ப்பு, சிந்தையினில் சிந்தனையின்றி சில துளி காதல் சாரல் சிந்தவே செய்தது! ஆனால் சர்வா அடுத்து சொன்னதில் காதல் சாரல் எல்லாம் கானலாகிவிட பெருமூச்சோடு மனதைக் கட்டுப்படுத்தினாள்.

இப்படியான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதே என்று தனக்குக் கடிவாளமிட்டவள்,

“ஹோ! அதுல தப்பெல்லாம் இல்லை சர்வா” என்று புன்னகைத்தாள்.

“அப்புறம் வலி குறைஞ்சு இருக்கா? மாத்திரையெல்லாம் ஒழுங்கா போடுறியா நீ?” என்று சர்வா கேட்க,

“போடுறேன், போடாம அப்பா விட மாட்டார்” என்றாள் சின்ன சிரிப்போடு.

“ஹாஹா அது என்னவோ சரிதான்” என்று சர்வா சிரிக்கும்போது சிவசங்கரன் குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தார் கையில் இரண்டு ஜூஸ் டம்ப்ளருடன்.

“மாமா, இவதான் அடிப்பட்டிருக்கா, எனக்கெதுக்கு?” என்று கேட்டபடி அவன் ஜூஸை வாங்கிக் கொள்ள,

“ஃப்ரஸ்ட் டைம் வந்திருக்க இத்தனை வருஷம் அப்புறம், இது கூட குடிக்கலன்னா எப்படி சர்வா?” என்ற சிவசங்கரன் மகளிடம் ஜூஸை நீட்ட, ரசிகா அதனை வாங்கி மெல்ல பருகினாள்.

“சும்மா இவளைப் பார்க்கணும்னு வந்தேன் மாமா, நல்லா மிலிட்டர் கவனிப்பு போல, நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா அப்பாவும் பொண்ணும் காலேஜ் வாங்க” என்று அவன் ஜூஸைக் குடிக்க,

“இரண்டு பேரும் பேசிட்டு இருங்க, நைட் சமைச்சுட்டாங்க, நீ இருந்து சாப்பிட்டு போ சர்வா” என்றதற்கு,

“இல்ல மாமா, அம்மா எனக்காக வெயிட் பண்ணுவாங்க, இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்” என்றதும்,

“நீங்க பேசுங்க, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொல்லி சிவசங்கரன் வெளியே போய்விட்டார்.

அவர் போவதைப் பார்த்தவன் “முடிஞ்சா ஒருவாரம் கழிச்சு கூட வா ரசி, மிலிட்டரியும் உங்கூடவே இருக்கட்டும்” என்றதும்,

“இது என் மேல இருக்க அக்கறையா? இல்லை எங்கப்பா இல்லாம காலேஜ்ல ஜாலியா இருக்க ப்ளானா?” என்று ரசிகா கேட்க,

“இரண்டும்தான் ரசி” என்று சிரித்தவன்,

“ஒகே டேக் கேர்” என்று கிளம்பினான்.

“தேங்க்ஸ் சர்வா” என்று ரசிகா சொல்லவும் கதவு வரை சென்றவன் நின்று திரும்பி,

“எதுக்கு?” என்றான்.

“எல்லாத்துக்கும்” என்று ரசிகா சொல்ல தலையசைத்த சர்வா ஒன்றும் பேசாமல் ஒரு நிமிடம் நின்றிருப்பான். ரசிகா எதாவது சொல்லுவாள் என அவன் எதிர்ப்பார்க்க, ஒன்றும் பேசாமல் அவள் அமைதியாய் இருக்க, இவன் வெளியே வர

“சாரி டா சர்வா” என்று சிவசங்கரன் சர்வாவிடம் மீண்டும் மன்னிப்புக் கேட்டார்.

“மாமா, அதெல்லாம் நடந்து ரொம்ப வருஷம் ஆகுது. இப்போ ஏன்? ப்ளீஸ் லீவ் இட்” என்றதும்,

“இல்லை, நான் உன்னை நிறைய இன்சல்ட் பண்ணிட்டேன். அட்லீஸ்ட் நீ அப்புறமாவது எங்கிட்ட உண்மையை சொல்லியிருக்கலாமில்ல?” என்றவரின் கேள்விக்கு,

“சொன்னாலும் நீங்க நம்பியிருக்க மாட்டீங்க” என்றதும் சிவாவின் முகம் அதிருப்தியைக் காட்டியது.

“எஸ்! உங்க நம்பிக்கையைத் தப்புன்னு சொல்ல மாட்டேன் மாமா, எனக்கு பெரியம்மா மேலதான் ரொம்ப வருத்தம், அவங்களும் என்னைத் தப்பா புரிஞ்சிட்டாங்கன்னு கோவம். அதைவிட ரசி அப்போ சின்ன பொண்ணு, டீனேஜ்ல ஒரு க்ரஷ், அதை அவ தப்பா புரிஞ்சிட்டா. அதை சொல்லி என்னாகப்போகுது, ஏற்கனவே அம்மா இல்லாத பொண்ணு அவ, நீங்க ரொம்ப ஸ்டிரிக்ட் வேற, என்னை விட்ட அடி பத்தாதா? அதான் சொல்லாம இருந்துட்டேன்” என்றதும் சிவசங்கரனுக்கு வருத்தமாய்ப் போனது.

இவரும் கொஞ்சம் பெருந்தன்மையாய் நடந்திருக்கலாம், பொறுமையாய் நிதானமாய் இருந்திருக்கலாம், அப்படியே அன்று அவரின் பார்வையில் சர்வா மகளிடம் எல்லை மீறி இருந்தாலும் கூட அவள் எதிர்க்கவோ தடுக்கவோ இல்லையே!

அப்போது அந்த கண நேரத்தில் கோபம் ப்ரதானமாய் இருக்க, இதையெல்லாம் யோசிக்கவில்லை. இப்போது நிதானத்து பார்க்க நிஜம் என்னவென்று புரிந்தது.

“மாமா நான் கிளம்புறேன், நீங்க ரசியைப் பாருங்க. பை” என்றவன் சிவசங்கரன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வந்தது போலவே கேட்டின் அந்த பக்கம் குதிக்க,

“டேய்! வண்டி எதாவது வரப்போகுது” என்றார் பதறியவராய்.

“ரோடு எங்க இருக்கு, வீடு எங்க இருக்கு? வண்டி வருதாம்” என்று அவன் சிரிக்க,

“சக்தி கொடுக்கிற செல்லம்டா உனக்கு, இந்த வயசுல இப்படி கேட்டைத் தாண்டுற” என்று திட்ட,

“மிலிட்டரி மாம்ஸ், கிழிச்சக் கோட்டைத் தாண்டக் கூடாதுன்னுதானே எல்லாரும் சொல்வாங்க, ஸோ கேட்டைத் தாண்டலாம் தப்பில்லை, எல்லாம் ஒரு உடற்பயிற்சி” என்று அவன் பாவனையாய் சொல்ல,

“அப்படி பயிற்சி செய்ய ஆசை இருந்தா எங்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாமே, உன்னை ஆர்மியில சேர்த்து விட்டிருப்பேன்” என்றதும்,

“நல்ல வேளை இத்தனை வருஷம் உங்க சங்காத்தம் இல்லாம இருந்தேன், இல்லைன்னா தேசத்துக்கு என்னைத் தத்துக் கொடுத்திருப்பீங்க” என்றான் கடுப்பாக.

மனதிலோ,
‘இவர் பொண்ணுக்கு என்னை மாப்பிள்ளையா செலெக்ட் பண்ண சொன்னா, ஆர்மிக்கு ஆள் எடுக்கிறார். போயா யோவ்’ என்று மைண்ட் வாய்ஸில் திட்டியவன்,

“நீங்க மிலிட்டரிக்கு ஆள் எடுக்கிற வேலையை அப்புறம் பாருங்க, போய் உங்க பொண்ணைக் கவனிங்க” என்றவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

அவன் சென்றதும் அங்கேயே நின்ற சிவசங்கரனுக்கு இப்போதும் மகளுக்கு சர்வாவின் மீது விருப்பம் என்று தெரிகிறது, ஆனால் சர்வாவுக்கு அப்படி இருப்பது போல் தெரியவில்லையே என்று அவன் மனம் தெரியாது கவலைப்பட்டார். எப்படி அவனிடம் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, மறுத்தால் மகள் தாங்குவாளா என்று கவலையாக இருந்தது. சர்வாவின் விருப்பம் இல்லையென்றால் அவனை கட்டாயப்படுத்தவும் முடியாதே என்று பல கலக்கங்கள் அவருள் ஓடின.

வீட்டிற்கு வந்த சர்வாவின் எண்ணமெல்லாம் ரசியே!! என்னவோ இன்று பார்த்த ரசிகா புதிதாய் அவனுக்குத் தெரிந்தாள். தன் மீது இத்தனை நேசமிருந்தும் அதனை வெளிக்காட்டாது அவள் இயல்பாய் நடந்தது அவனுக்கே வியப்பாய் இருந்தது.

பாவை பாடிடா காதல் கூட இவனுக்கு இனித்தது!! சொல்லா காதல் கூட சுகம் போலவே! இப்படியான எண்ணங்கள் ஓட, ரசிகா மட்டுமே முழுவதுமாய் அவன் அகத்தினுள்!

பெண் பார்க்க வந்திருக்கிறேன் என்றதும் அவள் விழி சிந்திய வியப்பும், பின் சில நொடி தவிப்பும் அதன் பின் அதனை மறைத்து, அவள் காட்டிய இயல்பும் முதல்முறையாய சர்வாவை ஈர்த்தது.

இப்போது சர்வா தெளிவாய் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். அவனுக்கு ரசிகா என்றால் பிடிக்கும், அந்த பிடித்தத்தின் எல்லை எதுவரை என்று அவன் இதுவரை ஆராயவில்லை. ஆனால் ரசிகா அப்படியில்லை ஏதோவொரு வகையில் அவள் மனதில் சர்வா இத்தனை ஆண்டாய் இருந்திருக்கிறான்.

அதுவும் அவள் வாயால் இப்பவும் பிடிக்கும் என்று கேட்டபின், அந்த அழுகை குரலில் அகத்தின் வெளிப்பாடு புரிந்து விட, அவளை வருந்தவிட அவனுக்கு மனமில்லை.

ஒருவேளை வேறு பெண்ணைக் காதலித்திருந்தால் பரவாயில்லை, அப்படி ஒரு நிலை இருந்திருந்தால் நிச்சயம் ரசிகா புரிந்துகொள்வாள் என்று இன்றைய அவளின் செய்கையின் மூலம் தெரிந்துவிட, ரசிகா வளர்ந்துவிட்டாள் என்றே தோன்றியது.

அதை நினைக்கையில் மென்மையாய் ஒரு புன்னகை இவன் இதழில் புலர்ந்தது!

‘அந்த வயசுல கிஸ் அடிச்சு லவ் சொல்லிட்டு, இப்போ சொல்லாமலே இருக்க அளவு மேடம் வளர்ந்துட்டாங்க’ என்று நினைக்க இன்னும் இன்னும் புதிய உணர்வுகள் ப்ரவாகம் எடுத்தன.

காதலிப்பதை விட காதலிக்கப்படுவது எத்தனை சுகம்? அதனை அனுபவிக்க அவ்வளவு ஆவல் அவனிடம் கொட்டிக் கிடந்தன, எப்படியும் ஒருத்தியோடு வாழத்தான் வேண்டும், அது தன்னைப் பிடித்தவளாய் இருந்தால் என்ன என்று தோன்றிய கணம் அம்மாவின் முன் சென்றான் சர்வஜனன்.

“ம்மா, அன்னிக்கு சில பொண்ணுங்க போட்டோஸ் இருக்குன்னு சொன்னீங்களே, காட்டுங்க” என்றபடி சோபாவில் வந்து உருண்ட மகனை சுகுமாறன் விசித்திரமாய்ப் பார்க்க, புஷ்பாவோ மலர்ந்த முகத்துடன்,

“நிஜமாவா டா?” என்று கேட்க, அவன் முறைக்கவும் உடனே அவர் போனை கொண்டு வந்து கொடுத்தார்.

“டேய்! என்னடா அன்னிக்கு ஆறு மாசம் டைம் வேணும் சொன்ன?” என்று மகனை அறிந்தவராக சுகுமாறன் கேட்டார். இவன் திடீரென இப்படி சொல்கிறான் என்றால் எதாவது காரணம் நிச்சயம் இருக்கும் என்று நினைத்தார்.

புஷ்பாவோ,
“அவனே மாறினாலும் நீங்க மாறாதீங்க” என்று கடிய,

சர்வாவோ சிரித்தபடி, “எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சு” என்று கண்ணடிக்க, சுகுமாறனோ மகன் வேறெதுவோ சொல்ல போகிறான் என்று யுகித்துவிட, புஷ்பா பூரிப்போடு மகனின் முகம் பார்த்தார், கொஞ்ச நேரத்தில் ‘பூரி’த்த முகம் சப்பாத்தியாகப் போவது தெரியாமல்.

அம்மாவின் போனில் இருந்த பெண்களின் படத்தைப் பார்த்தவனுக்கு மனம் ஒன்றவே இல்லை, ரசிகாவே வந்து நின்றாள்.

ரசிகாவை திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தவன் அந்த முடிவில் தான் உறுதியாக இருக்கிறோமா இல்லை எந்த பெண்ணை பார்த்தாலும் தான் ஈர்க்கப்பட்டுவிடுவோமா என்று யோசித்தான், திருமணத்திற்கு என்று அம்மா காட்டிய பெண்களைப் பார்த்தபோதும் ரசிகாவை விட மனதில்லை, அதற்காக அவன் காதலித்தான் என்றில்லை!

ரசிகாவின் காதலுக்காக, ரசிகாவிற்காக என்றே அவன் அப்படியொரு முடிவெடுத்தான். அவள் மீது அக்கறை அகத்தில் நிறைய இருக்க, அவளின் அன்பைத் தெரிந்தே உதாசீனப்படுத்தி, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய அவன் மனம் விடவில்லை.

எத்தனை பெண்ணைப் பார்த்தாலும் எல்லாரையும் விட, தன்னை விரும்பும் ரசிகா என்னவோ மனதிற்கு நெருக்கமானவளாய்த் தெரிந்தாள்.

அம்மாவை அருகே வர சொன்னவன்,
“ம்மா, எனக்கு இதுல யாரும் செட் ஆக மாட்டாங்கம்மா” என்றதும் புஷ்பா ஒரு நொடி கவலையாய் இருந்தவர்,

“பரவாயில்லை, வேற பொண்ணு பார்க்கலாம்” என்று சொல்ல சுகுமாறனோ,

“யாரு உனக்கு செட் ஆவாங்கன்னு சொல்லு சர்வா?” என்றார் நேரடியாக.

“ரசிகா ப்பா, எனக்கு ரசியைக் கல்யாணம் பண்ணிக்கணும். நீங்க இரண்டு பேரும் சிவா மாமா கிட்ட பேசுங்க” என்றதும் சுகுமாறன் புன்னகை செய்ய
புஷ்பாவோ கடுப்பாகிவிட்டார்.

“யாரை வேணும்னாலும் உனக்காக நான் போய் பொண்ணு கேட்கிறேன், ரசிகா வேண்டாம்” என்றார் உறுதியாய்.

“ம்மா, நீங்க தானே எனக்கு எந்த பொண்ணை பிடிச்சாலும் கட்டிவைப்பேன் சொன்னீங்க?”

“ரசிகாவைத் தவிரன்னு சேர்த்துக்கோ இப்போ” என்று அவர் எரிந்து விழ, சோஃபாவில் அதுவரை உருண்டவன் இப்போது எழுந்து உட்கார்ந்து விளையாட்டுத்தனம் விட்டு,

“ஏன் உங்களுக்கு ரசியைப் பிடிக்கல சொல்லுங்க” என்றான் தீவிரமாக.

“ப்ச், அந்த பொண்ணுக்கு எடுத்து செய்ய அம்மா இல்லை, கூடப்பிறந்தவங்களும் கிடையாது. அதை விட அவங்க எல்லாம் உன் பெரியப்பா வீட்டுக்குக் க்ளோஸ், அதுவும் ரசிகா உங்க பெரியம்மாவுக்கு ரொம்ப க்ளோஸ், என்னோட மருமக எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கணும், அவ மருமகளா வந்தா அவளும் உங்க பெரியம்மா பேச்சைக் கேட்டுத்தான் நடப்பா” என்றார் கடுப்பாக.

மகனைப் போல் மருமகளும் உமாவோடு நெருக்கமாகிவிடுவாளோ என்ற பயம்தான் அவரை தானாகவே மகனுக்குப் பெண் தேட வைத்தது. தான் பார்க்கும் பெண் என்றால் தன் பேச்சைக் கேட்பாள் என்று அவர் நினைக்க, மகன் அத்தனைக்கும் முடிவுரை எழுத இந்த முறை புஷ்பா தன் பிடிவாதத்தையும் பிடியையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

“ம்மா, இப்போ நீங்க சொன்னா ரேஷ்மி அண்ணி கேட்க மாட்டாங்களா, அது மாதிரிதான்” என்ற சர்வாவைப் பார்த்தவர்,

“நான் சொல்லியா ரேஷ்மியைக் கட்டி வச்சாங்க, அவங்க மருமக அவங்க பார்த்தாங்க. என்னதான் இருந்தாலும் நான் அவ சின்ன மாமியார், என்னை விட அவ உமா அக்காவைத்தானே மதிப்பா” என்றதும்,

“ரைட்! அப்போ பெரியம்மாவை விட ரசியும் நாளைக்கு உங்களைத்தான் மதிப்பா” என்றான்.

“அது எப்படி, எல்லாத்துக்கும் அந்த பொண்ணு உமாக்காவுக்குத்தானே போன் பண்ணிப் பேசுவா?” என்று புஷ்பா கேட்க,

சுகுமாறன் அதுவரை அமைதியாய் இருந்தவர், “ நீயும் அவகிட்ட நெருங்கி பழகியிருந்தா உங்கிட்ட பேசியிருப்பா புஷ்பா, இப்போ உன் மகனுக்குப் பிடிச்ச பொண்ணுன்றதை விட, உனக்கு உமா அண்ணிக்குப் பிடிச்ச பொண்ணு இங்க வரதுதான் பிரச்சனை இல்லை” என்று சுகுமாறன் கடுப்பாய்க் கேட்டார்.

“ஆமா அதான் என்னோட பிரச்சனை” என்று புஷ்பா ஒத்துக்கொள்ள,

“ப்ச், இதெல்லாம் ஒரு விஷயமா? நீங்க ரசி கிட்ட அன்பா நடந்தா அவளும் அன்பா இருப்பா” என்றதும்,

“அதெல்லாம் நான் ஒத்துக்க முடியாது” புஷ்பா மறுத்தார்.

“ஓகே! நீங்க ஒத்துக்காதீங்க, ப்பா உங்களுக்கு ஓகேவா?” என்று சர்வா அம்மாவைக் கண்டுகொள்ளாமல் பேச,

“எல்லாம் உன் பெரியம்மா ஏத்திவிடுறதுதானே? நீ என் புள்ளையா என்னைக்கு நடந்திருக்க?” என்று புஷ்பா கொஞ்சம் வருத்தம் அதிக கோபத்துடன் பேசியவர்,

“நான் அவங்களை விடப்போறதில்லை, எல்லா முடிவும் அவங்களே எடுப்பாங்களா?” என்று சண்டைக்குக் கிளம்பினார்.

“ம்மா, லூசு மாதிரி பண்ணாதீங்க. அவங்களுக்கு இந்த விஷயமே தெரியாது, ஏன் ரசிக்குக் கூட தெரியாது” என்றான் சர்வாவும் கடுப்பாக.

“அவங்களுக்குத் தெரியாம எப்படி இருக்கும்? நீ சொல்லாம இருந்தியா? நான் நம்ப மாட்டேன்” என்று புஷ்பா பேச,

“அவங்களுக்கு நான் சொல்லாம எப்படி தெரியும்? நீங்கதானே என்னோட அப்பா அம்மா உங்க கிட்ட முதல்ல சொல்றேன். அதைப் புரிஞ்சிக்காம…” என்று எரிச்சலானவன் எழுந்து அவனின் அறைக்குச் சென்றுவிட்டான்.

சுகுமாறனோ மனைவியின் கையைப் பிடித்தவர் பொறுமையாய்,
“உனக்கு என்ன பிரச்சனை புஷ்பா?” என்று தன்மையாய்க் கேட்டார்.

“அவனுக்கு எல்லாம் நான் செய்யனும்னு நினைச்சா, போங்க” என்றவருக்கு அழுகை வர,

“ப்ச், இதுக்குப் போய் அழுவியா?” என்று சமாதானம் செய்தவர்,

“இப்பவும் அவனுக்குப் பிடிச்ச பொண்ணு கிட்ட நீ பிடிச்ச மாதிரி நடந்துகிட்டா அவனுக்கு சந்தோஷம்தானே? அவன் அண்ணா அண்ணிகிட்ட அன்பா இருந்தாலும் நம்ம தான் அவன் பேரண்ட்ஸ், நமக்கான மரியாதையைத் தராம அவன் இருந்ததில்லை, இப்பவும் நமக்கிட்ட அவனோட ஆசையை சொல்றான். அதைப் புரிஞ்சிக்கோ புஷ்பா” என்றார். புஷ்பா அமைதியாகவே இருந்தார்.

அந்த அமைதி அடுத்து வந்த நாட்களும் தொடர, சர்வா அதன்பின் அவனின் திருமண விஷயம் குறித்துப் பேசவில்லை.

**************************

ரசிகா கல்லூரிக்கு வந்துவிட்டாள், மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து. கூடவே முசோலினியும்.

அப்போது மதிய உணவு இடைவேளை, ரசிகாவும் யுவியும் கதைப் பேசியபடி உண்ண, அங்கு வந்தான் சர்வஜனன்.

“ஹாய் ரசி, ஹாய் மேம்” என்று சொல்லிக் கொண்டு அவர்கள் முன்னிருக்கையில் உட்கார்ந்தவன்,

“என்ன செஞ்ச ரசி?” என்றபடி ரசிகாவின் முன் இருந்த லஞ்ச் பாக்ஸைப் பார்த்தவன்,

“தக்காளி சாதமா? நல்லா சமைப்பியா நீ” என்று கேட்டான்.

இவன் என்ன வீட்டில் பேசுவது போல் பேசுகிறான் என்று நினைத்து ரசிகா அமைதியாய்ப் பார்க்க யுவியோ,
“சாப்பிட்டா தெரியும் ஸர்” என்றாள்.

“வெரி குட்!” என்றபடி அவன் ரசிகாவின் லஞ்ச் பாக்ஸை அவன் பக்கம் நகர்த்தி சாப்பிட்டுக்கொண்டே,

“கால் வலி ஓகேவா? டாக்டர் கிட்ட போனியா? இந்த வாரம் படத்துக்குப் போகலாமா?” என்று சர்வா இயல்பாய்ப் பேசினான்.

“சர்வா, இது காலேஜ். வீடு இல்லை. இங்க நான் ஸ்டாஃப்” என்று கத்தரித்தாள் ரசிகா.

“முசோலினி பெத்த முத்தே, ஓவரா பண்ணாதடி” என்று அவன் கடுப்பில் சொல்ல,

“பாருங்க ஸர், இப்படி ஒரு ஆள் கூட நான் குப்பைக் கொட்டுறேன்” என்று யுவியும் சேர்ந்து கிண்டல் செய்ய ரசிகா இருவரையும் முறைத்தாள்.

“இனிமே அந்த குப்பையை நான் கொட்டிக்கிறேன், நீங்க கொஞ்ச நேரம் எங்களை தனியா விடுங்களேன் ப்ளீஸ்” என்று யுவியிடம் சொல்ல,

“ஏன் விடணும்?” என்று யுவி கண்களில் கேலியுடன் பார்க்க,

“யுவி” என்று அதட்டினாள் ரசிகா.

“சர்வா என்ன நினைச்சிட்டிருக்கீங்க நீங்க?” என்று அவனிடமும் காய, அவன் சிரிப்போடு அமைதியாய் அவளைப் பார்த்தான். ஆனால் அவள் கண்களில் இருந்த எதிர்ப்பார்ப்பை இவன் கண்கள் கண்டுகொண்டன.

யுவி இவர்கள் பேசட்டும் என எழுந்து கொண்டாள்.

“உங்கிட்ட ஒன்னே ஒன்னு சொல்லிட்டுப் போய்டுறேன், ஏன் இவ்வளவு டென்ஷன்?” என்று அவளைப் பார்த்தவனின் மனமோ,

‘இப்பவும் என்னை லவ் பண்றேன், நேருக்கு நேர் சொல்ல மாட்டேங்கிறாளே, உண்மையில எனக்குக் காது நல்லா கேட்டுச்சுதானே?’ என்று சந்தேகம் வந்தாலும் ரசிகாவின் விழிகள் அவளைக் காட்டிக்கொடுக்க,

“சொல்லுங்க” என்று அவள் சொல்லவும் அவனும் சொல்லிவிட்டுப் போக, அவனைக் கடுப்போடு பார்த்த ரசியிடம் ஆர்வமாய் வந்தாள் யுவி.

“என்ன சொன்னார் டி அவர்?”

“தக்காளி சாதம் நல்லா இருந்துச்சாம்” என்று ரசிகா கடுப்பாகச் சொல்ல,

“ப்ச், உண்மையை சொல்லு” என்று கேட்டாள்.

“சத்தியமா அதான் டி சொன்னான் அவன்” என்ற ரசிகா அவன் சென்ற திசையைப் பார்க்க, அவள் பார்ப்பாள் என்று நின்றிருந்த சர்வா கண்சிமிட்டி விட்டு செல்ல,

“ரசி, நிஜமாவா? இதை சொல்லவா என்னைப் போக சொன்னார்?” என்று யுவி நம்பாது கேட்க,

“உங்கிட்ட பொய் சொல்லுவேனா? அவனுக்குத் திமிர் டி, உமாத்தை நெய்யும் வெண்ணையும் ஊட்டி வளர்த்தாங்க இல்லை, அதான் என்னை இரிட்டேட் பண்றான்” என்ற ரசிகாவிற்கு மரியாதையெல்லாம் பறந்து போனது.

‘என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன்?’ என்றவளுக்கு கொஞ்சமும் என்னை நினைக்கிறானோ என்ற எண்ணமில்லை.

——————————————–

Read and Share your thoughts friends, சாரி இன்னிக்கு schedule பண்ணல, ஊருக்குப் போயிட்டேன். நாளை அருகினில் என் தூரமே பதிவு வரும்.

✅ End of Episode 16
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Geethazhagan Reader 6 hours ago

சர்வ அம்மா பாவம் ஓவர் பொசஸிவ்

சர்வா ரசியிடம் விளையாடுவது அருமை
❤️ 2 more...
Srichitra Reader 6 hours ago

Very nice. 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top