Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 10

நிலா முற்றம் 10

அங்கு கோபத்தில் நின்றிருந்தார் சிவசங்கரன், சிவனாய்!

அப்படி ஒரு ரௌத்திரம்!!

அதில் அதிர்ந்து ரசிகா சர்வாவை விட்டு விலகி நிற்க, உமாவும் ரசிகா இன்னும் உறங்கவரவில்லையே என்று எழுந்து வந்தவரின் பார்வையில் ரசிகாவை அணைத்தவண்ணம் குனிந்து நின்ற சர்வாதான் கண்ணில் விழுந்தான்.

“சின்னப் பொண்ணை என்ன பண்றடா ராஸ்கல்” என்று சர்வாவை அறைந்துவிட்டிருந்தார் சிவசங்கரன்.

அப்பா வரவும் ரசிகாவிற்குள் அத்தனை நேரம் வயதும் வாலிபமும் தந்த தைரியமெல்லாம் வடிந்து போனது, உடலில் ஓடிய நடுக்கத்துடன் சர்வாவை விட்டு விலகி நிற்க, என்னவென்றே விசாரிக்காமல் சிவசங்கரன் சர்வாவை விட்ட அறையில் அவளின் அகத்தின் அறையில் எல்லாம் அதிர்வலைகள்!

“ரசிகா!” என்று அவர் கத்திய கத்தலில் கண்ணீர் பொழிந்தாள் பெண். காரணமின்றி அவளின் கன்னங்கள் நனைய,

“ப்பா, சர்வா…..நான் லவ்” என்று திணறியவளுக்கு ஒன்றும் சொல்ல வரவில்லை. தொண்டை அடைக்க ஒரு இனம்புரிய பயம் மனதினைக் கவ்வ அழத்தொடங்கினாள்.

அதுவே சர்வாவிற்கு எதிராய் மாறிப்போனது.

“சின்ன பொண்ணுட்ட காதல்னு சொல்லுவியா சர்வா நீ?” என்ற உமாவின் பேச்சில் சர்வாவிற்கு இன்னும் அதிர்ச்சி.

அந்த ஐந்து நிமிடத்தில் அவனுக்குள் ஆயிரமாயிரம் அதிர்ச்சிகள்! எதையுமே அவன் கொஞ்சமும் அனுமானிக்கவில்லை, ரசிகா என்னவென்றால் கன்னத்தில் முத்தமிட்டு,

“ஐ லவ் யூ சர்வா” என்றதே பேரதிர்ச்சி! ரசிகா சொன்னதை உள்ளம் உள்வாங்கி, அவன் அவளை விலக்குவதற்குள் சிவசங்கரனின் ரௌத்திரம். அதைவிட பெரியம்மாவின் குற்றச்சாட்டு.

“பெரியம்மா!” என்று அவன் தன்னைப் புரிய வைக்க முயல,

“பேசாத நீ” என்று அவனை அதட்டினார் உமா.

“பாரு உமா, நீங்க பிள்ளை வளர்த்திருக்க லட்சணத்தை. சின்னப்பொண்ணு கிட்ட காதலிக்கிறேன்னு சொல்லி…ச்ச நின்ன கோலத்தை நீயும் பார்த்ததானே?” என்ற சிவசங்கரன் அழும் மகளை அணைத்துக் கொண்டார். ரசிகாவிற்கு சர்வாவை எல்லாரும் திட்டவும் அழுகை இன்னும் பெருகியது.

உண்மையை சொல்ல நினைத்தாலும் உள்ளம் அனுமதிக்கவில்லை. இவள் சொல்லி சர்வாவை அடித்ததுபோல் தன்னையும் அப்பா அடித்துவிட்டால்? வெறுத்துவிட்டால்? என்ற பயம் பிரதானமாய் இருக்க உண்மை ஊமையானது.

“மாமா, நான்” என்ற சர்வாவை உமா,

“சின்னக்குழந்தை டா அவ. படிக்கிற பொண்ணுகிட்ட போய் காதலிக்கிறேன்னு சொல்லி இப்படி கட்டிட்டு நிப்பியா?” என்று உமா கேட்டுவிட சர்வா அமைதியாகிவிட்டான்.

அவனுடன் உண்மையும்!

“சக்தியோட பையன்னு நம்பிதானே உமா இவனை என் பொண்ணோட தனியா விட்டேன், சின்னப்பொண்ணுட்ட எப்படி நடக்கிறான் பாரு” என்றவருக்குத் துளியளவும் பெண் சர்வாவை விரும்பியிருப்பாள் என்று தோன்றவில்லை.

தன் பெண்ணை அவன் காதல் சொல்லி ஏமாற்றுகிறான் என்றே நினைத்தார். அதனையும் விட ரசிகாவின் வயது பள்ளிக்குச் செல்லும் பெண்ணா காதல் செய்ய போகிறாள் என்று எண்ணிவிட்டார்.

“அண்ணா அவனும் சின்னப்பையன் தானே? நம்ம ரசியை விரும்பிட்டான் போல ” என்று உமா சமாதானம் செய்ய வர,

“இங்க பாரு உமா, இப்பவும் இவனை சக்திக்காக மட்டும்தான் சும்மா விடுறேன், ஸ்கூல் படிக்கிற சின்னப்பொண்ணைக் கட்டிப்பிடிச்சிட்டு நிக்கிறான், என்ன புள்ளை இவன்?” என்றவருக்கு அதன் பின் சர்வஜனன் வேண்டாதவனாகிப் போனான்.

சர்வஜனன் வெளிநாடு செல்கையில் கூட, சக்தியிடம் வேறு முக்கிய வேலை இருக்கிறதென சொல்லி அவனை வழியனுப்ப போகவில்லை. அன்றைய நாளுக்குப் பின் ரசிகாவினால் அப்பாவிடம் உண்மையை சொல்ல முடியவில்லை.

அப்படி நினைக்கும்போதே அப்பா சர்வாவைப் பேசிய பேச்சும் அடியும் நினைவில் நிற்க, தன்னால் அப்பாவின் வெறுப்பையும் பேச்சையோ தாங்க முடியாது என்று நினைத்து அமைதியாகிப் போனாள். ஆனால் தவறே செய்யாமல் சர்வாவைக் காயப்படுத்தியதற்கு மட்டும் மனதினுள் எப்போதும் மறுகினாள் மங்கை.

வெகு நேரமாய் மகள் அறையை விட்டு வராது இருக்க,
“அப்பு! கதவைத் திறடா? ரொம்ப முடியலயா?” என்று சிவசங்கரன் கதவைத் தட்ட,

முகத்தைக் கூட துடைக்காமல் பாத்ரூம் வாசலில் உட்கார்ந்திருந்தவள் மீண்டும் முகம் கழுவி துடைத்த பின் கதவைத் திறந்தாள்.

“என்னாச்சும்மா? டாக்டர்ட்ட போலாமா?” என்ற சங்கரனின் கேள்விக்கு,

“இல்லப்பா, ஸ்டோமேக் பெயின் வேற ஒன்னுமில்ல. கொஞ்சம் தூங்கினா சரியாகிடும்” என்றாள்.

“அஞ்சு நிமிஷம் இரு, அப்பா வரேன்” என்றவர் அவளுக்கு எலுமிச்சை சாறு பிழிந்து கொடுத்தார்.

அதனை வாங்கி ரசிகா குடிக்கவும்,

“நீ ரெஸ்ட் எடு, இன்னிக்கு டியுஷன் வேண்டாம். நைட்டுக்கு அப்பாவே எதாவது செய்றேன்” என்று சொல்லி அவர் கதவை சாற்றிவிட்டுப் போக, அப்பாவின் அன்பில் நெஞ்சம் நெகிழ்ந்தது.

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை ஒழுக்கத்தை எதிர்ப்பார்த்து கண்டிப்புடன் இருந்தாலும் சங்கரனுக்கு மகள் மீது அலாதி அன்புதான்! அந்த அன்பே ரசிகாவை மிகுந்த குற்றவுணர்வுக்குள்ளாக்கியது.

அப்பாவிடம் உண்மையை சொல்ல முடியாத பயம்! அவள் காலம் தாழ்த்த தாழ்த்த அவளது பயம் கூடிக் கொண்டே போனதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.

அது போலவே சர்வா! அவன் மீது காதல் என்று நினைத்திருக்க உண்மையில் காதலித்திருந்தால் அவனை அப்பாவிடம் அடி வாங்க விட்டு வேடிக்கைப் பார்த்திருப்போமா என்ற எண்ணம் இன்னும் வாட்டியது.

எவ்வளவு சுய நலம் தனக்கு? என்று நினைத்து நினைத்து மறுகினாள்.

இப்போது வருடம் கடந்தும் மீண்டும் அதே போல் அவன் மீது ஒரு உணர்வு உருவாகியிருக்க உள்ளமெல்லாம் அழுத்தம்!

இதனை யோசித்தபடி அவள் கீழே உட்கார்ந்து மெத்தையில் தலைசாய்ந்து கண்ணீர் வடிக்க, அவளது அலைப்பேசி சத்தம் போட பார்த்தாள் வாட்ஸப்பில் குறுஞ்செய்தி.

‘சூப்பரா பாடின ரசி’

‘அண்ணிக்கும் அனுப்பினேன், அவங்களுக்குப் பிடிச்சதாம். சொல்ல சொன்னாங்க’

‘அங்க காலேஜ்ல மத்த ஸ்டாஃப் இருக்கும்போது ரொம்ப பேச முடியாதுல அதான் மெசெஜ். கால் பண்ணியிருப்பேன் மிலிட்டரி இருப்பாரே’ என்று தமிழை ஆங்கிலத்தில் அடித்து ஒரு கண்ணடிக்கும் ஸ்மைலி.

‘இன்னும் நிறைய பாடு. உன் வாய்ஸ் டிவைன்’ என்றதுடன் முடித்திருந்தான்.

சர்வாவின் குறுஞ்செய்தியைப் படிக்க படிக்க இன்னும் கண்ணீர் பெருகி வழிந்தது. அவனது பாராட்டைக் கூட மனம் பாரமின்றி ஏற்கமுடியவில்லை.

சர்வா எவ்வளவு பெருந்தன்மையாய் இருக்கிறான். எல்லாம் மறந்து இயல்பாய் இருப்பவன் இவளின் எண்ணம் தெரிந்தால் என்ன நினைப்பான்? தன் மனம் ஏன் இப்படி இருக்கிறது என்ற கழிவிரக்கம் இன்னும் கண்ணீர் பெருக்கியது.

இவள் மன்னிப்புக் கேட்டு அவனிடம் நின்ற நாளை நினைத்துப் பார்த்தாள்.

“காலேஜ் டைமிங்க்ஸ் முடிஞ்சிப்போச்சு சர்வா, ப்ளீஸ் ஒரு ஃபைவ் மினிட்ஸ் என்னைப் பேச விடுங்க” என்றவளின் கெஞ்சலுக்கு செவி சாய்த்தான் சர்வஜனன்.

“ஓகே! சொல்லு” என்றவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவனது இருக்கையில் உட்கார்ந்து இவளை பார்க்க,

“அன்னிக்கு நான் செஞ்சது தப்பு சர்வா. ஐ அம் ரியலி ஸாரி” என்றவள் பேசும்போதே கண்கள் கலங்க,

“ப்ச், உட்கார்ந்து பேசு ரசி. அழாத” என்றவனின் பேச்சில் இன்னும் அழுகை கூடியது. அவள் உட்காராமல் இருக்க,

“ஐ சே சிட்” என்றான் மீண்டும் அழுத்தமாய்.

அவன் சொல் கேட்டு உட்கார்ந்தவள், “அப்போ எனக்கு உன்..உங்களை ரொம்ப பிடிக்கும் சர்வா. பட் நம்ம ப்ரண்ட்ஷிப்பை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். முழுக்க முழுக்க என்னோட தப்புதான்” என்றவளை பெருமூச்சுடன் பார்த்தவன்,

“ம்ம், நானும் அதுக்குப் பின்னாடி யோசிச்சிருக்கேன். எங்க நான் தப்பு செஞ்சேன்? உன் மனசுல அந்த எண்ணம் வர அளவுக்கு நான் என்னோட எல்லையை எங்க மீறினேன் அப்படின்ற கேள்வி எனக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு” என்றதும்,

“நோ! உங்க மேல தப்பில்லை. அந்த ஏஜ்ல என்னோட க்ளாஸ்ல நிறைய பேருக்குப் பாய் ப்ரண்ட்ஸ் இருந்தாங்க, அவங்க அவங்களோட பாய்ப்ரண்ட்ஸ் பத்தி பேசும்போது எனக்குப் பேச நீங்கதான் இருந்தீங்க. அவங்க எல்லாம் கமிட்டட்னு சொல்லும்போது எனக்கும் ஒரு வேளை நம்ம லவ் பண்றமோன்னு ஒரு தாட். கண்டிப்பா தப்புதான்”

“ஆனா நிஜமா அப்போ எனக்கு தப்பாவே தோணல, என் ப்ரண்ட்ஸ் கூட அதை தப்புன்னு சொல்லவே இல்லை, அவங்களும் அந்த அடலசண்ட்ல இருக்க அந்த infactuation, attraction அஹ் லவ்னு நேம் பண்ணிக்கிட்டாங்க, எனக்கு அது புரியவே லேட் ஆச்சு”

“எனக்குப் புரியுது ரசி, என்னோட கோபம் அதனால மட்டும் இல்லை” என்றான் சர்வா.

“என்னால அப்பாவோட பார்வையில கீழறங்க முடியல, ரொம்ப ரொம்ப பயமா இருந்துச்சு, அதுவும் அப்பா உங்களை அடிச்ச அப்புறம் அந்த பயம் ரொம்ப அதிகமாகிடுச்சு” என்றதும் அந்த கனமான சூழ் நிலையில் கூட சர்வா சிரித்துவிட்டான்.

“மிலிட்டரி அடி ம்ம்…கொஞ்சம் பலத்த அடி” என்றான் கன்னத்தைத் தேய்த்தபடி இன்னும் சிரிப்புடன்.

“ஸாரி” மெல்லமாய் வந்த மன்னிப்பில் மென்னகை செய்தவன்,

“விடு” என்றான் பெருந்தன்மையாக.

“உன் மேல எனக்குக் கோவம் இருந்துச்சு ரசி, நீ லவ் பண்றேன்னு சொன்னதுக்கு இல்ல. பட் உண்மையை சொல்லாம இருந்த பார்த்தியா? அதுக்காக இப்ப வரை அந்த கோவம் இருக்கு”

“என்..எனக்குப் பயமா இருக்கு சர்வா” என்றாள் இன்னும் அந்த பயம் குறையாதவளாக.

“ரிலாக்ஸ் ரசி! அந்த டாபிக் விட்டுடு” என்றதும்,

“சர்வா! நான் அன்னிக்கு அப்படி பேசினது தப்பு, அப்பா கிட்ட உண்மையை சொல்லாம அப்போ பேசாம இருந்ததும் தப்பு. என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்” என்றாள் தவிப்புடன்.

அவளின் பேச்சில் இவள் இதனை நினைத்து நிறைய நிறைய வருந்தியிருக்கிறாள் என்று புரிய,

“ரசிம்மா! ஜஸ்ட் லிவ் இட். எனக்கு அப்போ புரியலனாலும் இத்தனை வருஷத்தில் உன்னோட அந்த நாளோட செய்கை ஜஸ்ட் அட்ராக்ஷன்னு புரிஞ்சது. உன்னோட ஏஜ் அப்படி, நீ அன்னிக்கு உண்மைப் பேசாத வருத்தமும் இப்போ இல்லை எனக்கு. ஐ கேன் அண்டர்ஸ்டண்ட் யூ, இவ்வளவு ஃபீல் செய்யாத நீ. இட்ஸ் காமன் தீஸ் டேய்ஸ்” என்றான் மேஜையில் தாளமிட்டவாறே. அதற்குப் பிறகு சர்வா எப்போதும் போல் சாதாரணமாகவே நடக்கிறான்.

அப்படி ஒரு பரந்த மனத்துக்குடன் தன்னுணர்வை புரிந்து நடப்பவனுக்குத் தான் மீண்டும் அதே போல் நடந்தால் அவன் பார்வையில் நான் இன்னும் தாழ்ந்து போவேனே என்று நினைத்தாள் ரசிகா.

வேண்டவே வேண்டாம்! இது காதலா என்ற ஆராய்ச்சி கூடவும் வேண்டாம்!

இருந்தாலும் இது எட்டாதது! எனக்குக் கிட்டாது! என்ற எண்ணம்தான் பெண்ணுக்கு.

இப்படி நினைத்தவள் உடனே,
‘தேங்க் யூ’ என்ற ஒரு குறுஞ்செய்தியை சர்வாவுக்கு அனுப்பியவள் அவனின் குறுஞ்செய்திகள் கண்ணில் படாவண்ணம் archive செய்தாள்.

✅ End of Episode 10
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Sathya Velusamy Reader 6 days ago

மிலிட்டரிக்கு கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்னு தெரியாதா.....

விசாரணையே இல்லாம தண்டனை தராரு...
❤️ 3 more...
Srichitra Reader 6 days ago

Very nice. 

❤️ 2 more...
Geethazhagan Reader 6 days ago

பாவம் இவ்ளோ காதலை வச்சுகிட்டு, சர்வா அப்பா இருவரையுமே சமாளிக்கனுமே

❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 3 days ago

முற்றத்தில் ஒரு முத்தம்

முடிந்தது எல்லாம்
மொத்தமும்....
மங்கையின் பதட்டம்
மறைத்த உண்மை
மறுகும் நிலை.....

மறப்போம் மன்னிப்போம் 
மன்னவன் சொன்னாலும்
மாறிடுமா தவிக்கும்
மங்கை மனம் ....
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top