சர்வஜனன் வீடு வந்த சேர்ந்தபோது மிகுந்த சோர்வுடன் இருந்தான். அவன் நண்பன் உதவியுடன் ரசிகாவின் வீட்டில் அவள் வண்டியை விட்டு, பின் அவன் வண்டியை எடுத்து என்று நிறைய அலைச்சல். சர்வாவின் வண்டி சத்தம் கேட்கவுமே வெளியே எட்டிப் பார்த்தான் பத்ரி. காம்பவுண்டினுள் நின்றபடி சர்வாவிடம்,
“எங்களுக்கு முன்னாடி கிளம்பின, எங்கடா போன?” என்று கேட்க,
“ரசிகா விழுந்துட்டா டா” என்று எல்லாம் சொல்ல,
“அச்சோ, ஓகேதானே சர்வா?” என்ற பத்ரியின் கேள்விக்கு,
“ஓகேதான், கால்ல ஸ்பரெயின் இருக்கு. கொஞ்சம் கீறல்” என்றவன்,
“எனக்கு டயர்டா இருக்கு. நான் அப்புறம் உன்னைப் பார்க்கிறேன்” என்று சொல்லி வீட்டினுள் நுழைந்தான்.
பத்ரி இங்கே வீட்டில் விஷயம் சொல்ல உமா உடனே,
“நம்ம போய் அவளைப் பார்த்துட்டு வந்திடலாம்” என்று பறக்க,
சக்தியும் “ஆமா, சிவா வேற கவலைப்படுவான்” என்று இருவரும் கிளம்ப,
“நானும் வரேன்மா” என்ற பத்ரியிடம்,
“நீ ரேஷ்மி கூட துணையா இருடா, காலையில இருந்து அவளுக்கு அலைச்சல். நாளைக்கு நீங்க போய் பார்க்கலாம்” என்று சொல்லி அவர்கள் இருவருமாக மட்டும் கிளம்பி ரசிகாவின் வீட்டிற்குப் போனார்கள்.
குளித்துவிட்டு தன் மெத்தையில் பொத்தென சாய்ந்த சர்வாவின் மனதில் எல்லாம் ரசிகாவைப் பற்றிய யோசனையே!
இதுவரை அவன் ரசிகாவின் மனம் அறியாதவன், ரசிகா அவளின் மனதை வெளிப்படுத்தினால்தானே இவனுக்கும் அவளின் உணர்வு தெரியும்?
ரசிகாவின் பதினாறு வயது செய்கையும், அந்த நிலா முற்றத்து முத்தமும் இப்போது யோசித்தால் பெரிதான பாதக செயல் இல்லை என்றே அவனின் மனம் நினைத்தது. அவன் படித்த படிப்பா, இல்லை வெளி நாட்டு கலாச்சாரமா என்னவோ ஒன்று அப்போது அத்தனை கோபம் தந்த செயல் இப்போது அப்படியான உணர்வைத் தரவில்லை.
அதனால் அதனை மறந்து கடந்து இயல்பாய் ரசிகாவுடன் ஒரு நட்புணர்வை வளர்க்க முடிந்தது.
நட்புதான்! நிச்சயம் அதுதான்!
அதனைத் தாண்டி அவன் அவளைப் பார்க்கவே இல்லை. அதனாலேயே ரசிகா ஒதுங்கி ஒதுங்கிப் போக அவளின் விலகலுக்கு விளக்கம் தெரியாமல் இருந்த போதும் காதலென அவன் நினைக்கவில்லை. சிவசங்கரனுக்குப் பயந்து பேசாமல் இருக்கிறாள் என்றே எண்ணினான்.
ஆனால் இப்போது இருப்பவள் அவசரத்தில் காதல் சொன்ன அந்த பதினாறு வயது ரசிகா இல்லையென மட்டும் இவனுக்கு சர்வ நிச்சயமாய் தெரிந்தது.
இன்று அவள் மனதை அப்படி அழுகையுடன் சொல்லியிருக்க, இவனுக்குள் சில குழப்பங்கள்.
தன்னை ஒருத்தி விரும்பி தயக்கத்தில் சொல்லாமல், தன்னை தவிர்க்கவும் செய்து இன்று மனதை உடைத்துவிட்டாள். இருந்தும் இவனால் அவளிடம் பதில் சொல்லமுடியவில்லை.
இதற்கு முன் இப்படி ஒரு அனுமானம் கூட அவனிடம் இல்லாமல் போக அவன் அகமே அறியா ஒன்றை எப்படி அவளிடம் சொல்லுவான்?
ஒரே ஒரு மாற்றம் மட்டும் நிகழ்ந்தது அவனுள். ரசிகாவின் மீது காதல் வரவோ வளரவோ இல்லையென்றாலும் தன் மீதான அவளின் காதலைப் பற்றிய யோசனை அவனை விடாது தொடர்ந்து.
சர்வாவின் எண்ணமாய் மாறிப்போனாள் ரசிகா!
ரசிகாவோ முன்பை விடவும் பெரும் உளைச்சலில் உழன்றாள். சக்தியும் உமாவும் வந்து பார்த்து சென்றிருக்க, உண்டு முடித்தவளுக்கு பால் எடுத்து வந்தார் சிவசங்கரன். அவரும் மகளிடம் ஒன்றும் கேட்கவில்லை, பேசவுமில்லை. அது ரசிகாவை காயப்படுத்த,
“என் மேல கோவமாப்பா?” என்று அவர் கொடுத்த பாலை வாங்காமல் கேள்வி கேட்க,
“அதெல்லாமில்லை அப்புக்குட்டி, நீ முதல்ல பாலைக் குடி” என்று அவர் அழுத்தி சொல்ல பாலை வேகமாய்க் குடித்தவள்,
“ஸாரிப்பா” என்று சொல்லும்போதே கண்கள் கலங்கிப் போனது.
“விடுடா, அதெல்லாம் நடந்து ரொம்ப வருஷம் ஆகுது. நீ அப்போ சின்னப்பொண்ணுடா” என்று மகளுக்கு ஆறுதல் சொல்ல,
“சர்வா கிட்ட மட்டும் ஏன்ப்பா அவ்வளவு கோவப்பட்டீங்க? இப்போ என் மேல தப்புனதும் ஒன்னுமே சொல்ல மாட்றீங்க?” என்று கேட்ட மகளின் மனம் நன்றாய்ப் புரிந்தது அவருக்கு. சர்வாவைப் பேசியதைத் தாங்க முடியாத அளவு அவனைப் பெண்ணுக்குப் பிடித்திருக்கு என்று புரிந்து கொண்டார் பெற்றவர்.
“ஏன்னா நீ என்னோட பொண்ணுடா. அப்பாவால உன் மேல கோவப்பட முடியாது, நீ எதையும் நினைக்காம நல்லா ரெஸ்ட் எடுடா அப்பு” என்றவர்
“மாத்திரையெல்லாம் கரெக்டா போட்டியா?” என்று நின்று கேட்டார்.
“போட்டேன் ப்பா” என்றதும்,
“ரெண்டு நாள் நம்ம காலேஜ் போக வேண்டாம், நீ நல்லா தூங்கு. நாளைக்கு சமையலுக்கு ஆள் வந்துடுவாங்க” என்ற சிவசங்கரன் கதவை சாற்றிவிட்டு செல்ல, ரசிகாவிற்கு உறக்கம் கொஞ்சமும் வரவில்லை.
சர்வா தன்னை என்ன நினைப்பான்? முதலில் இனி என்னை நினைப்பானா என்று இவளின் எண்ணம் நீள, அங்கே சர்வாவின் எண்ணமெல்லாம் இவள்தான்.
சர்வாவின் உள்ளத்தில் ஓரத்தில் ஒரு உல்லாச எண்ணம் உருவாகியிருந்தது. சிறு வயதில் ரசிகா சொன்ன விருப்பத்தின் போது இப்படியான உணர்வே இல்லை. நிச்சயம் அந்த வயதில் அவளின் செயலை மன்னிக்க முடிந்தாலும், அது அவசியமில்லாதது என்ற எண்ணம் திண்ணம். தன்னை ஒரு பெண்ணிற்குப் பிடிக்கிறது என்பது அவனில் ஒரு புதுவித உணர்வை புலர செய்திருக்க, தனக்கும் அப்படி ரசியைப் பிடிக்குமா என்று யோசித்தான்.
பிடித்தம், பிடிக்கும்தான். அவள் மீது அன்பு, நேசம், அக்கறை எல்லாம் இருக்கிறது. இருந்தும் இந்த காதல்?
அதுதான் அவனை தடை செய்தது. இருந்தும், இல்லாத காதலை விட எப்போதும் இருக்கும் அக்கறையானது அகத்தின் கரை உடைக்க, பத்து மணி ஆன போதும் ரசிகாவிற்கு அழைத்தான்.
சர்வாவிடமிருந்து அழைப்பு வரவும் ரசிகாவிற்கு பதற்றம், என்ன சொல்வானோ என்று எதிர்ப்பார்ப்பு கூடியது. இருந்தும் போனை எடுக்காமல் அதனைப் பார்த்தபடியே இருக்க, இரண்டு முறை ஒலித்த சத்தம் ஓய்ந்துவிட, ரசிகாவினுள் சின்னதாய் ஏமாற்றம். அவளாகவும் அழைக்க மனமில்லை.
போனையே வேடிக்கைப் பார்க்க, மீண்டும் அழைத்தான் சர்வா.
ரசிகா அழைப்பை எடுக்க, சர்வாவோ சர்வ சாதாரணமாய்,
“தூங்கிட்டியா நீ? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று கேட்கவும்,
‘பல வருஷமா நீ என்னை டிஸ்டர்ப் பண்ற சர்வா’ என்று நினைத்தவள்
“இல்லை, இப்போதான் ரூம்க்கு வந்தேன்” என்றாள் சோர்வாய்.
“சாப்பிட்டியா? டேப்லெட்ஸ் போட்டியா?” என்று அவன் பேச பேச இவளுக்கு அவன் தான் பேசியதைக் கேட்டானா என்று சந்தேகமே வந்துவிட்டது. எப்படி இவன் இவ்வளவு இயல்பாய்ப் பேசுகிறான், குரலில் கூட சின்னதாய் ஒரு வேறுபாடும் இல்லை.
ரசிகா அவனைப் பற்றி யோசித்து பதில் சொல்லாமல் இருக்க,
“உங்கிட்ட பேசுறேன் ரசி, இருக்கியா?” என்று அவன் கொஞ்சம் குரல் உயர்த்தவும்,
“இருக்கேன், சாப்டாச்சு, டேப்லெட்ஸ் கூட போட்டாச்சு” என்றதும்,
“ஓகே டேக் கேர், மிலிட்டரி கூப்பிடுறாரு நாளைக்குக் காலேஜ் வந்து நிக்காத என்ன?” என்று அவன் அதட்டலாய் சொல்ல,
“ம்ம்” என்றாள்.
“ஓகே, நீ டயர்டா இருப்ப. நாளைக்குப் பேசுறேன்” என்று சொல்லி அவன் வைத்துவிட ரசிகாவிற்கு இரண்டே எண்ணங்கள் மட்டுமே தோன்றியது.
ஒன்று அவன் இவள் பேசியதைக் காதில் கேட்காமல் இருக்க வேண்டும், இல்லையா காதில் கேட்டாலும் இவள் கேட்ட காதல் அவனிடம் இல்லாமல் இருக்க வேண்டும்.
அந்த முடிவுக்கு வந்த பின் ரசிகாவிடம் ஒரு தெளிவு பிறக்க அமைதியாகப் படுத்துறங்கினாள். அடுத்த நாள் மாலை யுவி இவளைக் காண வீட்டிற்கு வந்திருந்தாள்.
“ஏன் டி நீ எப்பவும் செம ஜாக்கிரதையா வண்டி ஓட்டுவ, எப்படி விழுந்த?” என்று யுவி கேள்வி கேட்க,
“எப்படியோ விழுந்துட்டேன் விடேன்” என்று நீட்டிய தன் கால்களைப் பார்த்தபடி ரசிகா பேச,
“அப்புறம் எப்படி ஹாஸ்பிட்டல் போன?” என்றாள். இன்று காலை இவள் கல்லூரி வராமல் இருக்கவும் யுவி ப்ரேக்கில் அழைத்துக் கேட்க இப்படி விழுந்துவிட்டேன் என்று மட்டும் சொல்லியிருக்க, விளக்கமாக எல்லாம் ஒன்றும் அவளுக்குத் தெரியாது. அதனால் நேரில் பார்த்துவிடலாம் என்று வந்தவள் கேள்வியாய்க் கேட்க, ரசிகா பதில் சொல்லியே சோர்ந்து போனாள்.
சர்வஜனன் ரசிகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான் என்று தெரிய,
“ஓ, மேடமுக்கு சர்வா பின்னாடியே வரவும் கவனமில்லாம போச்சோ?” என்று கிண்டலாய்ப் பேசிய யுவியிடம் ஒரு பெருமூச்சுடன்,
“சர்வா கிட்ட நான் லவ் பண்றேன்னு சொல்லிட்டேன்” என்று சொன்னதும் போதும் யுவியோ,
“என்னடி சொல்ற?” என்று உற்சாகமாய்க் கத்திவிட அவசரமாய் அவளின் வாயை மூடிய ரசிகா
“மெதுவா பேசேன்” என்று திட்டினாள்.
“வாட் எ மெடிக்கல் மிரக்கிள் டி? எப்படி நீ சர்வா கிட்ட ப்ரோபோஸ் பண்ணின? சொல்லுடி” என்று ஆர்வமாய் ரசியின் வாய் பார்க்க,
“ப்ரோபோஸல் எல்லாம் இல்லை” என்று நடந்ததை சொல்ல,
“உலகத்துல ப்ரோபோஸ் செய்ய ஆயிரம் வழி இருக்கும்போது, இப்படி ஹாஸ்பிட்டல்ல வச்சு, அங்க கூட சிலர் ரொமாண்டிக்கா சொல்லியிருப்பாங்க. நீ என்னடி இப்படி கோவத்துல கத்திட்டு வந்திருக்க” என்று சலித்துக்கொண்டவள்,
“நீதான் இப்படி சொதப்பிட்ட, சர்வா என்ன சொன்னார். முசோலினி என்ன சொன்னார்?” என்று கேட்க,
“இரண்டு பேரும் ஒன்னுமே சொல்லல. எப்பவும் போல நார்மலா நடக்கிறாங்க” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
“என்ன ரசி நீ சிரிக்கிற? சர்வா ஒன்னுமே சொல்லாம இருக்கிறது கஷ்டமா இல்லையா?” என்று யுவி தோழிக்காக வருந்தி கேட்டாள். அவளுக்குமே சர்வா பிடிக்கும் பிடிக்காது என்று ஒன்றை சொல்லியிருக்க வேண்டும், என்று தோன்றியது. இப்படி அவன் மௌனமாயிருந்து தன் தோழிக்குக் கஷ்டம் தருகிறானே என்று எண்ணம் போக,
“நேத்து கஷ்டமா இருந்துச்சு டி யுவி, இப்போ எனக்கு மனசு அவ்வளவு லேசா இருக்கு. இதுவரைக்கும் இப்படி ஒரு அமைதியை நான் அனுபவிச்சதில்லை, உண்மையை சொல்லாம இருக்க வலி இருக்கே, அது தர ப்ரஷர்..ப்பா. நேத்து அப்பாவுக்கும் சர்வாக்கும் உண்மையை சொன்ன அப்புறம் ஐ ஃபீல் பெட்டர் நவ்” என்ற ரசிகா புதிதாய்த் தெரிந்தாள்.
“ரசி, கால்ல மட்டும்தானே டி அடி? தலையை எதுக்கும் ஸ்கேன் பண்ணுவோமா? வித்யாசமா பேசுற பக்கி. பக்குன்னு இருக்கு எனக்கு” என்றதும் ரசிகா வாய்விட்டு சிரிக்க,
“அச்சோ, காதல் தோல்வின்னால பைத்தியமாகிட்டியா? அந்த சர்வா இல்லைன்னா சூர்யா, ஆர்யான்னு போகலாம். இப்படி சிரிச்சு பயமுறுத்தாத” என்ற யுவியின் தோளில் அடித்த ரசி,
“காதல் என்ன விளையாட்டா? இல்லை போரா? அதுல தோற்கறதுக்கும் ஜெயிக்கறதுக்கும். அது ஒரு அனுபவம், எப்பவுமே போகாத ஒரு உணர்வு. அம்மா மேல வச்சிருக்க பாசம் மாதிரி அதுவும் ஒருவித அன்பு, அவ்வளவுதான்!”
“எப்படி டி இந்த தெளிவு? அந்த ஏரியா எதுன்னு சொல்லு, நானும் விழுந்து வாரி எழுந்து நிற்கும்போது இப்படி ஞானமெல்லாம் வருதான்னு பார்க்கிறேன்” யுவி கடுப்பாய் சொல்ல, ரசியோ,
“ஞானமெல்லாம் இல்லை லூசு. முன்னாடி மனசுக்குள்ள சர்வாவை இப்படி எல்லாரும் தப்பா பேச வச்ச குற்றவுணர்வு இருக்கும், அவர் மன்னிச்சாலும் கூட ஒன்னுமே மாறலதானே? நேத்து அதை சொல்லவும் ஒரு நிம்மதி. அடுத்து இத்தனை நாளா சர்வாவை பிடிக்குறது காதலா இல்லையான்னு ஒரு கன்ஃபியுஷன், இப்போ எனக்குத் தெரியுது இது காதல்னு. இல்லைன்னா அப்பாவை விட உலகத்துல எனக்கு யாரும் முக்கியமில்லை, அப்படிப்பட்டவர் கிட்ட என்னோட தப்பை தைரியமா சொல்லியிருக்கேனா அது கண்டிப்பா காதலாலதான்” என்றதும்,
“ரைட்டூ” என்ற யுவியைப் பார்த்து புன்னகைத்தவள்,
“அது மாதிரி இந்த காதலை சர்வா கிட்ட சொல்ல முடியாம, அதை மனசுல வச்சுக்கிட்டு சர்வா கிட்ட சாதாரணமா பழக முடியாம ஒரு ஸ்ட்ரெஸ் இருந்துச்சு. இப்போ இரண்டுமே இல்லை” என்றாள் தெளிவாக.
“சொல்லாம மனசுல வைக்கிறது கஷ்டம், சொன்னது நல்லது. ஆனா சர்வா ஒன்னுமே சொல்லாம இருக்காரே?”
“பரவாயில்லை, அது அவரோட இஷ்டம். என்னோட உணர்வை நான் சொல்லிட்டேன்ல அது போது எனக்கு. சர்வாவுக்கு அதே மாதிரி எங்கிட்ட ஃபீலிங்க்ஸ் இருக்கணும்னு என்ன சட்டமிருக்கு சொல்லு? மனுஷங்க மாதிரி அவங்க உணர்வுகளும் மாறுபடுமில்லையா? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உனக்கும் என்னை பிடிக்கணும்னு சொல்றதில்லை காதல். என்னோட உணர்வை சர்வா கிட்ட திணிக்க முடியாது, கூடவும் கூடாது” என்றாள் அழுத்தமாக.
“அதெல்லாம் சரி டி. அடுத்து என்ன?”
“அடுத்து இரண்டு நாள் கழிச்சு காலேஜ் வரணும், பசங்களுக்கு இண்டர்னல்ஸ் இருக்கு”
“பன்னிக்குட்டி! அடிச்சிடுவேன். உன்னோட வாழ்க்கையில அடுத்து என்ன?”
“நேத்து நான் விழுவேன்னு நினைக்கல, விழுந்தேன். காதலை சொல்லுவேன்னு நினைக்கல, சொல்லிட்டேன். என்ன நடக்குதோ அது நடக்கட்டும்”
“முசோலினி எப்படி டி ஒன்னுமே சொல்லாம இருக்கார்? சந்தேகமா இருக்கே?” என்று யுவி தலையில் தட்ட,
“வெளியே இருக்கார், கூப்பிடுறேன். நீயே கேட்டுத் தெரிஞ்சிக்கோ” என்றதும்,
“கொய்யால கோர்த்துவிடப் பார்க்கிறியா?” என்று திட்ட,
“பின்ன அப்பா சர்வா கிட்ட ஸாரி கேட்டார், எங்கிட்ட பழசைப் பேசாதன்னு சொல்லிட்டார். அவ்வளவுதான்” என்று பெருமூச்சு விட்டான்.
“எதுவும் வீணா நம்பிக்கை வைக்காத ரசி, நீ ஃபீல் பண்றமாதிரி ஆகிடக் கூடாது” என்று யுவி ரசிகாவின் கையைப் பிடித்து சொல்ல,
“ஹே! அதெல்லாமில்லை. அம்மா இல்லாம நான் இருப்பேன்னு கனவுல கூட நினைச்சதில்லை, ஆனாலும் இருக்கேன் இல்லையா? அப்படிதான். காதலும் கடந்து போகும். சொல்லாம இருந்தா சொல்லியிருக்கலாமோன்னு ஒரு எண்ணம் இருந்துட்டே இருக்கும், சொன்ன பின்னாடி அது இல்லை” என்று அவ்வளவு தெளிவாய்ப் பேசிய தோழியிடம் வேறு பேச எண்ணமில்லை யுவராணிக்கு.
நடப்பது எதுவும் நம் கையில் இல்லையே, என்ன நடந்தாலும் நல்லவையாக இருக்கட்டும் என்றபடி யுவி எழுந்தவள்,
“ஓய்! நாளைக்கு மட்டும் லீவ் எடுத்துக்கோ, நான் இல்லாம உனக்கு ரொம்ப போர் அடிக்கும், மரியாதையா காலேஜ் வந்து சேரு, ஸ்டூடன்ட்ஸ் மாதிரி இதான் சாக்குன்னு லீவ் போடாம அழகா லெக்சரரா நடந்துக்கோ” என்றதும்,
“மேடமுக்கு நான் இல்லாம ரொம்ப கஷ்டம் போல” என்று ரசிகா சிரித்தபடி கேட்க , யுவிக்கு ரசிகா என்றால் அவ்வளவு பிரியம், ஆனாலும் வார்த்தையால் சொல்லாமல் வம்பு வளர்த்து சந்தோஷம் கொள்வாள்.
“அப்படி எல்லாம் இல்லை, ஐ அம் வெரி பிஸீ. உனக்காக சொன்னேன்” என்று அவள் கிளம்ப,
சிவசங்கரன் வந்தவர் “வாம்மா யுவி, உன்னை நான் வீட்ல விட்டுடறேன்” என்று சொல்ல,
“இல்ல அங்கிள், நானே போய்ப்பேன். நீங்க ரசியைப் பாருங்க” என்று கிளம்ப, அவளை கேப் ஏற்றிவிட்டு அதன்பின்னே அவர் வீடு வர, அவர் கேட்டை மூடிவிட்டு இரண்டடி வைக்க,
“மாமா” என்ற குரலில் திரும்பினால் சர்வா நின்றிருந்தான்.
“வா சர்வா” என்று அவர் கேட்டைத் திறக்கப் போக,
“வேண்டாம், இருங்க” என்றவன் அவர் நகரும் முன் கேட்டைத் தாண்டி குதிக்க,
“டேய்!” என்று இவர் பதற,
“எப்படி என்னோட ஜம்ப்?” என்று கேட்க,
“மிலிட்டரிக்குப் போயிருக்கலாம் நீ” என்று சிவசங்கரன் சொல்ல,
“எப்பா சாமி உங்க கிட்ட போய் கேட்டேனே?” என்று அவன் கடுப்பாய் சொன்னான்.
“ஹாஹா, உள்ள வா” என்று அழைத்து செல்ல,
“ரசி எப்படி இருக்கா?” என்று கேட்க,
“அவ ரூம்ல இருக்கா, போய் பாரு” என்றவரின் பேச்சே அவர் அவனை எத்தனை தூரம் நம்புகிறார் என்று சொல்ல,
“ஓகே மாமா” என்றபடி அவன் ரசிகாவின் அறைக்கதவைத் தட்டினான்.
“வாங்கப்பா” என்றாள் ரசிகா. சிவசங்கரன் எப்போதும் கதவைத் தட்டிவிட்டே உள்ளே வருவார், அவர் என நினைத்திருக்க வந்தவனை நிச்சயம் அவள் எதிர்ப்பார்க்கவில்லை.
“என்ன சர்வா தீடீர்னு?” என்று அவன் வருகையை எதிர்ப்பாராமல் அவள் கேட்க,
“ஹ்ம்ம். பொண்ணு பார்க்க வந்தேன்” என்ற சர்வாவின் பேச்சில் ரசிகாவின் விழிகள் விரிந்தன.
ஆஹா பொண்ணு பார்க்க வந்தியா....பார்த்துட்டு இப்பவே பிடிக்சிருக்குனு சொல்லிட்டு போ...போயிட்டு சொல்லற வேலை எல்லாம் வேண்டாம்
Nice
ரசி யுவியிடம் பேசுவது அருமை
Very nice.