ரசிகாவின் புன்னகையை ரசிக்கும் மன நிலை கொஞ்சமும் சர்வஜனனிடம் இல்லை. காலையில் கூட எதார்த்தமாகவே அவளைக் கண்டான், சீண்டினான். இப்போது சிவசங்கர் அவனை அவ்வளவு மோசமாய்ப் பேசியிருக்க அந்த கோபம் மனதில் கனலாய் இருக்க, அதைக் காட்டுமிடமாய் ரசிகா ஆகிப்போனாள்.
இவன் அருகே செல்லவும், அவர்கள் உண்டு முடித்து எழவும் சரியாய் இருக்க, ரசிகா அவனை அங்கு எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அவளின் பார்வை உரைக்க, அதில் பயமே அதீதமாய் இருக்க, பாவை பார்வையும் பரவி இருந்த பயமும் இன்னும் சர்வாவை எரிச்சல் செய்தன.
“ஏய்! என்ன லுக் இது? உன்னை என்ன பண்ணிடப்போறேன் நான் இப்படி பார்க்கிற? சும்மாவே அந்த மிலிட்டரிக்கு நானா ஆகாது, நீயும் இப்படி பார்த்து வைக்காத” என்றான் அதட்டலாக.
அவன் அதட்டவும் இன்னும் டென்ஷன் ஏறியது ரசிகாவுக்கு. உடல் வியர்க்கத் துவங்க முயன்று தன்னை சமன்செய்து “ஸாரி சர்வா” என்றாள்.
“உன் ஸாரி யாருக்கு வேணும்?” என்று சர்வா கேட்கும்போதே யுவராணிக்கு சர்வா ரசிகாவிடம் நடக்கும் முறை பிடிக்காமல் இருக்க,
“ஸர், அவ செஞ்சது தப்புதான். முதல்ல அவளை பேசவிடுங்க. நீங்க உங்க இஷ்டத்துக்குத் திட்டினா எப்படி?” என்று சர்வாவிடம் நேருக்கு நேராய்க் கேட்க இவள் யார் என்ற பார்வை பார்த்தவன்
“மேம், ஒன்னும் தெரியாம இடையில வராதீங்க ஓகே. மைண்ட் யுவர் பிஸீனஸ்” என்றான் சர்வா கட்டளையிடும் குரலில்.
“ஓ ஐ சீ! பட் எனக்கு பிஸீனஸ் எல்லாம் இல்ல ஸர், நீங்க பார்த்துக் கொடுத்தா பார்ப்பேன். என்னோட மைண்ட் கூட லஞ்ச் டைம் ஆனா வாடகைக்கு விட்டிருவேன், ஸோ நோ மைண்ட் நோ பிஸீனஸ்” என்ற யுவாவின் நக்கல் பேச்சில் சர்வா முறைத்தான். ரசிகாவோ தவித்தாள்.
சர்வா யுவியைப் பேசிவிடுவானோ என்று நினைத்து
“யுவி பேசாத” என்று அடக்க,
“என்ன பேசாத? இவரைப் பேசாத சொல்ல உனக்கு வாய் இல்லை, என்னை சொல்ற. இங்க பாருங்க ஸர், உங்களுக்கும் இவளுக்கும் பிரச்சனைனா அதைப் பேச வேற இடம் பாருங்க, கேண்டீன்ல இவ்வளவு ஸ்டூடன்ட்ஸ் இருக்கப்போ வந்து உங்க கோபத்தைக் காட்டுவீங்களா?” என்றாள் மிகவும் நிதானமாக.
அதில் நியாயம் இருக்கவும் சுற்றிப் பார்த்தான், மாணவ மாணவியர் எல்லாம் வகுப்புகளுக்கு நேரமாக கேண்டீனை விட்டு வெளியே சென்றாலும், சிலரின் பார்வை இவர்கள் மீது படிந்து விலக தன்னை நிதானப்படுத்தியவன், ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
“ஹேய் யுவி அறிவிருக்கா உனக்கு? சர்வா கிட்ட போய் அப்படி பேசுவியா?” என்று தோழியைக் கண்டிக்க,
“கேண்டீன்ல ஸ்டூடன்ட்ஸ் இருக்காங்க, அதை கூட யோசிக்காம உன்னைப் பேசினா நான் பார்ப்பேனா? போடி” என்றவாறே அவள் அவளின் வகுப்புக்குப் போக, ரசிகாவிக்கு அப்போது ஃப்ரீ ப்ரீயட் என்பதால் அவள் கொஞ்சம் புத்தகம் ரெஃபரன்ஸ் எடுக்க வேண்டி நூலகம் போனாள்.
மனம் புத்தகத்தில் நிலைக்கவில்லை. சர்வாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும் என்பதே அவளது இத்தனை வருட ஏக்கமாகத், தவமாக இருக்கிறது. அது மட்டும் செய்துவிட்டால் போதும் அகத்தினை அழுத்தும் குற்றவுணர்வு அவளை விட்டு நீங்கிவிடும்.
இதையெல்லாம் யோசித்தபடி அவள் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஸ்டாஃப் ரூம் செல்ல, அங்கு போனால் அவளை கரெஸ் ரூமிற்கு வர சொல்லியிருந்ததாக சொல்லவும் அவளின் அப்பா இருக்குமிடம் அதுதானே?
கல்லூரி விஷயமாய் அழைத்திருப்பார் என்று நினைத்து அவள் போக, அங்கு போனால் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேனா ஒன்றை கையில் வைத்து காற்றில் என்னமோ கிறுக்கிக் கொண்டிருந்தான் சர்வா.
“மே ஐ கம் இன்?” என்று கேட்டு இவள் உள்ளே போக, உள்ளிருந்தவனை அவள் உள்ளம் எதிர் நோக்கவில்லை என்பதை அவனை நோக்கிய விழிகளே சொல்லிவிட,
“ரசிகா உன் கூட இருந்தவங்க யாரு கேண்டீன்ல? ப்ரண்டா?” என்றான் அவளின் முகத்தை ஆராய்ந்தவண்ணம்.
“ஆமா” என்றாள் ஒற்றைவார்த்தையாய். முன்பே அவள் அதிகம் பேசமாட்டாள்தான். இப்போதோ அது ஆர்வமான ஆசையான பேச்சுகளாய் இல்லாது எல்லாரிடமும் அளவான பேச்சு, அவசியத்திற்கான பேச்சு!
“எப்படி ப்ரண்ட்?” என்று அடுத்த கேள்வி சர்வாவிடம் இருந்து வந்தது. ஏன் இதையெல்லாம் கேட்கிறான் என்று தெரியவில்லை, தெரிந்து கொள்ள நினைத்தாலும் முன்பு போல் சர்வாவிடம் அந்த உரிமை வரவில்லை, வரவும் வேண்டாம்!
“என்னோட ஒரே காலேஜ்”
“ஓஹ்” என்றவாறே உட்கார்ந்தவன் எழுந்து கொண்டான். அவளருகே நின்றவன்,
“அந்த பொண்ணு அவ செஞ்சது தப்புதான்னு சொன்னாளே, அப்போ அவ கிட்ட அன்னிக்கு நடந்ததை சொன்னியா?” என்றான் அழுத்தமாக.
அவன் சொன்னதில் அன்றைய நாள் அழியாமல் அகத்தில் உலாவர, உலா வந்து உள்ளம் மகிழும் நிகழ்வல்லவே அது, அதனால் அவளிடம் மௌனம்.
“ரசிகா! உங்கிட்ட தான் பேசுறேன். ஆன்ஸர் மீ” என்றான் கட்டளையாக.
“ச..சர்வா..அவளுக்குத் தெரியும். நான் தான் சொன்னேன்” என்றதும்,
“இடியட்!” என்று மேஜை மீது குத்தியவன்,
“உனக்கு ஏன் டி அறிவே இல்லை? உங்கப்பன் மிலிட்டரியோட மூளையா உனக்கு? எதை யார்கிட்ட சொல்லணும்னு ஒரு சென்ஸ் இல்லை” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.
“அவ என்னோட க்ளோஸ் ப்ரண்ட், அதான் சொன்னேன்” என்று ரசிகா திக்கித் திணறிப் பதில் பேசினாள்.
“க்ளோஸ் ப்ரண்ட்னா எல்லா விஷயமும் சொல்லணும்னு அவசியமே இல்லை ரசிகா” என்று சொல்லும்போது கதவுத் தட்டும் ஓசைக் கேட்க,
“எஸ்” என்று இவன் குரலில் உள்ளே வந்தார் சிவசங்கர்.
அங்கு ரசிகா இருக்க, அதை அவர் எதிர்ப்பார்க்கவில்லை.
“நீ ஏன் இங்க வந்த?” என்று சிவசங்கரன் மகளிடம் கோபமாய்க் கேட்க,
சட்டென்று அடுத்த மாதம் நிகழப்போகும் கல்லூரி விழா பற்றிய notice கண்ணில் பட சர்வா உடனே
“ஸர், நான்தான் அவங்களை வர சொன்னேன்” என்றதும் அவர் முறைக்க,
“என்ன மிலிட்டரி முறைக்கிறீங்க? பார்டர்ல நிக்கிற பாகிஸ்தான்காரனா நான்? கொஞ்சம் பாசமா பாருங்க ஜி, ஐ அம் இந்தியன் அங்கிள்” என்றவனின் கிண்டல் பேச்சில் ரசிகாவுக்கே சிரிப்பு வந்தது. சர்வா இப்படித்தான் ஆள் யாராய் இருந்தாலும் அவனின் பேச்சு அப்படித்தான்.
ஆனால் அப்பாவின் முன் ரசிகாவின் சிரிப்பெல்லாம் கூட அடக்கியே அடக்கத்துடன் வரவேண்டும்.
எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தாலும் அளந்து வந்த முறுவல்தான் இருக்க வேண்டும். அது இத்தனை ஆண்டுகளில் பழகி இருக்க, லேசாய் வளைந்தன ரசிகாவின் இதழ்கள்.
“டேய்!” என்று சிவசங்கர் குரல் உயர்த்த,
“நோ நோ! இந்த டே மந்த் இயர் எல்லாம் எங்களுக்கும் தெரியும் ஜி, நான் நெக்ஸ்ட் மந்த் நடக்கப் போற காலேஜ் டே ஃபங்கஷ்னுக்கு இவங்களையும் ஒன் ஆஃப் தி கோ ஆர்டினேட்டரா அப்பாயிண்ட் பண்ணிருக்கேன். அதுல உங்களுக்கு என்ன ப்ராப்ளம்?” என்றான் நிதானமாக.
அவனது இருக்கையிலும் போய் உட்கார்ந்துகொண்டான்.
“அதெல்லாம் இவ அந்த வேலைப் பார்க்க மாட்டா” என்றார் சிவா. அந்த வேலையில் இருந்தால் வீடு சேர ஆறு மணி ஆகிவிடும், கல்லூரி முடிந்தும் கூட வேலையிருக்கும். விழா விஷயமாக வெளியே எல்லாம் கூட போக வேண்டி வரும், எல்லா இடங்களுக்கும் இவரால் எப்போதும் துணையாய்ப் போக முடியுமா என்ன? அதுவும் இப்போது சர்வா வந்த பின் மகளை அவன் இருக்கையில் தனியே விட முடியாது என்பது திண்ணமாய்த் தோன்றியது.
“என்ன ஜி நீங்க? பிரின்ஸி என்னமோ நீங்க கேம்பஸ்குள்ள உறவு முறையெல்லாம் பார்க்காத ஸ்டிரிக்ட் ஆபிஸர்னு சொன்னார். உங்க டாட்டர் மட்டும் மணி அடிச்சதும் வீட்டுக்குப் போகணும், மத்தவங்க உட்கார்ந்து வேலை செய்யனுமா? என்று சர்வா தெளிவாய்ப் பேசினான்.
இவனிடம் பேசினால் வேலைக்காகாது என்றுணர்ந்தவர், சக்திவேலனிடம் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.
“நீ போம்மா, நான் பார்த்துக்கிறேன்” என்றதும் ரசிகா நகரப்போக,
“ரசிகா மேம்! நாளைக்கே நீங்க உங்க வொர்க்கை ஸ்டார்ட் பண்றீங்க. திஸ் இஸ் மை ஆர்டர். யார் என்ன பார்க்கிறான்னு நானும் பார்க்கிறேன்” என்றான் கண்கள் எல்லாம் சிரிக்க.
சிவசங்கர் கோபமாய் அறையை விட்டுப் போனவர் நேராய் சென்று நின்றது முதல்வரின் அறையில்தான்.
“சக்தி, இந்த சர்வா பண்றது கொஞ்சமும் நல்லா இல்லை” என்றார் எடுத்தவுடன்.
“என்ன சிவா? தீடீர்னு வந்து இப்படி சொன்னா எப்படி? இன்னிக்குதானே ஜாயின் பண்ணினான். எதாவது தெரியாம தப்பு பண்ணியிருப்பான். நீ கேப்டனா உன் சோல்ஜர்ஸை நடத்துற மாதிரி இல்லாம அவனுக்கு சொல்லிக் கொடு சிவா” என்ற சக்தியின் பேச்சில்,
‘உன் மவனுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தா தெரியனும், கிராதகம்’ என்று மனத்தினுள் வைதவர்
“ரசிகாவை காலேஜ் டே கோ ஆர்டினேட்டரா போட்டிருக்கான் டா, அவளுக்கு என்ன தெரியும் இதையெல்லாம் பத்தி? யாரைக் கேட்டு இதெல்லாம் செய்றான் அவன்?” என்றார் கொதிப்புடன்.
“ப்ச், இவ்வளவுதானா? ஏன் டா அவளை விட எக்ஸ்ப்ரியன்ஸ் கம்மியானவங்க எல்லாம் காலேஜ் டேல இருக்காங்க, இதுல தப்பென்ன இருக்கு? நான்தான் சர்வா கிட்ட இந்த பொறுப்பைக் கொடுத்தேன், ப்ர்ஸ்ட் ஒவ்வொன்னா கத்துக்கட்டும், இதை ஆர்கனைஸ் பண்றது அவன் தான், அவன் சொல்றதுதான் முடிவு. போடா எப்பவும் அவளை ஸ்கூல் விட்டா அழைச்சிட்டுப் போற மாதிரி காலேஜ் விட்டதும் அவ வீட்டுக்குப் போயிடுறா, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆகிப் போற பொண்ணு. காலேஜ் கல்ச்சுரல்ஸ்னு ஜாலியா இருக்கட்டும். போடா போய் வேற வேலையைப் பார்” என்றதும் சிவாவும்,
“என்னமோ செய்ங்க” என்றபடி வெளியே வந்தவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து போனது. அவர் யோசித்த விஷயம்தான், ஆனால் செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்றுணர்ந்தார்.
கல்யாணம் ஆகப் போற பொண்ணு என்ற சக்தியின் வார்த்தைகளை மெய்யாக்க நினைத்தார் சிவசங்கர்.
மாலை கல்லூரி விட்டதும் சர்வா அவனின் வீடு சென்றவன் பக்கத்திலே இருக்கும் பெரியப்பாவின் வீடு சென்றான்.
டீஷர்ட்டும் ட்ராக்குமாக அவன் வெளியே கிளம்பும்போது எங்கு போகிறான் என்று புரிந்து போனது புஷ்ப லதாவிற்கு.
“என்ன சர்வா நீ? நேத்து தானே வந்த, காலையில காலேஜ் போயிட்ட, இப்பவும் அவங்க வீட்டுக்குப் போகனுமா?” என்றார் வருத்தமாக.
“ம்மா, என்ன அவங்க வீடு? நம்ம வீடுதானே அதுவும். அண்ணா வந்திருப்பான். காலையில அவனை நான் பார்க்கல, ஸோ இப்போ பார்த்துட்டு வரேன்”
“நீதானே இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்க, அவனே உன்னை வந்து பார்த்தா என்னவாம்?” என்றார் கடுப்புடன்.
“என்ன அம்மா நீங்க? அவனுக்கு நைட் டியுட்டி போல, அவனைக் காலையில பார்க்க முடியல. வந்து தூங்கியிருப்பான், யார் பார்த்தா என்ன?” என்றபடி நடந்து சென்ற மகனை அவரால் தடுக்க முடியவில்லை, தெரியவில்லை என்பதுதான் சரி!
அவன் பிறந்து, புகுந்து வீடு வந்தது முதல் எல்லாம் அவனுக்காக செய்தவர் சக்தியின் மனைவி உமாதான். அப்போது குழந்தையைக் கவனிப்பது பயங்கர சிரமமாய் இருக்க கொஞ்சுவதற்கு மட்டுமே அம்மாவாய் இருந்தார் புஷ்பா. எல்லா வேலையும் உமா பார்ப்பது அவருக்கு வசதியாகிப் போக அதுவே பின்னாளில் வழக்கமாகிப் போனது, இவருக்கோ அந்த வயதில் தோழிகளுடன் ஊர் சுற்றுவதே பெரிய விஷயமாய் இருக்கும்.
அதுவும் தோழிகள்,
“உனக்கெல்லாம் பரவாயில்ல புஷ்பா, வீட்ல உன் பையனைப் பார்த்துக்க ஆள் இருக்கவும் மேரேஜ் ஆனாலும் முன்ன மாதிரியே நீ இருக்க. இப்படி பார்லர் மீட்டிங்க்னு எல்லாத்துக்கு நினைச்ச உடனே வர முடியுது, மாமியாரும் இல்லை நல்ல கோ சிஸ்டர் வேற. ம்ம், எங்களுக்கெல்லாம் மாமியாருக்கு மனு கொடுத்து இப்படி பெர்மிஷன் வாங்கி வரதுகுள்ள அய்யோ முடியல” என்று சலிக்கும்போது புஷ்பாவிற்கு பெருமைதான்.
ஆனால் எல்லாம் ஓரளவிற்குதான். வருடங்கள் ஓடி வாலிபம் குறையத் துவங்கவுமே தோழிகளுக்கெல்லாம் குடும்பம் பிடித்துக் கொள்ள, இவர் எங்கே தனியே சுற்றுவது? வீட்டில் இருந்தாலும் கூட மகன் அவரிடம் பெரிதாய் ஒட்டவில்லை.
எல்லாவற்றிற்கும் அவனின் பெரியம்மாதான்! அது பெரிதாக இன்னும் பெரிதானதே தவிர குறையவில்லை. அப்பா அம்மாவிடம் பாசம் நிறைய இருக்கும் சர்வாவிற்கு. ஆனால் பிடித்தம், ஒட்டுதல் எல்லாம் அவர்களிடம்தான். காலம் செல்லவும் அண்ணன் தம்பி இருவரும் தனியாய் வீடு கட்டிக்கொண்டாலும் அப்போதும் மகன் அன்னையிடம் அதிகம் ஒட்டவில்லை.
அதிலும் அங்கே விளையாட அவனின் அண்ணன் பத்ரி இருக்க, தனியாய் அவன் ஏன் வீட்டில் இருக்கப் போகிறான்?
இன்னும் மகனிடம் அவர் எதிர்ப்பார்க்கும் நெருக்கம் புஷ்பாவிற்குக் கிட்டவில்லை. கிட்டிய இடத்தில் ஒட்டிக்கொண்டான். ஆனால் ஒட்டிக்கொண்ட இடம் வெட்டிக்கொண்டது அவர்களறியாதது.
“பத்ரி! டேய் பத்ரி!! டேய் பத்து திரி!“ என்று சத்தம் போட்டபடி வீட்டினுள் நுழைந்தான் சர்வா.
“சர்வா! என்ன நீ? என்னைப் பார்க்காம உன் பெரியப்பாவை மட்டும் பார்த்திருக்க?” என்று உமா அவனிடம் கொஞ்சம் கோபமாய்க் கேட்க,
“நான் அண்ணாவைப் பார்க்க வந்திருக்கேன்” என்றான் பட்டென.
“அவன் ரூம்ல இருக்கான் சர்வா, இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்க, எங்கிட்ட பேசமாட்டியா?” என்று உமா அவனைப் பார்த்து கேட்க,
“நான் மாடிக்குப் போறேன்” என்றபடி சர்வா மாடியேறினான்.
“சர்வா! நீ செஞ்சது தப்பு. அதனால்தான் நான் கோவப்பட்டேன், அதுக்காக என்னோட பேசாம இருந்திடுவியா டா நீ?”என்று மாடியேறியவனைப் பார்த்தபடி உமா கத்த,
“ஏன் நீங்க பேசாம இல்லை”
“ரொம்ப திமிராச்சு உனக்கு”
“உங்க கிட்ட தானே வளர்ந்தேன், ஒட்டியிருக்கும்” என்றபோது கடைசி படியில் இருந்தான். உமா அடுத்து பேசும் முன் சர்வா பத்ரியின் அறைக்குள் போனவன்,
“அடேய் அண்ணா!” என்று கத்த,
“சர்வா” என்று மகிழ்ச்சியில் கூவியவன்,
“ரேஷ்! சர்வா வந்துட்டான், ஐ வில் கால் யூ பேக்” என்று சொல்லி ஃபோனை வைத்தான். ரேஷ்மி அவனது மனைவி, பிள்ளை உண்டாகியிருப்பவள் அம்மா வீட்டிற்குச் சென்று ஒருவாரம் இருந்துவருகிறேன் என்று போயிருக்கிறாள்.
“அடேய் அழகாயிட்ட! வாட் எ கலர் டா தம்பி” என்று அவனைக் கட்டிக்கொள்ள,
“ஐ மிஸ்ட் யூ டா அண்ணா” என்று சர்வாவும் கட்டிக்கொண்டான். இருவருமே உடன்பிறந்தவர்கள் போலவேதான் பழகுவார்கள், அவர்களின் பெற்றோரும் அப்படிதான், என்ன புஷ்பா மட்டும் அப்படி நினைக்கமாட்டார். அவருக்கு எப்போதும் தான், தனது, தன் குடும்பம் என்ற உணர்விருக்கும். உமாவிற்கோ எப்போது நம்ம நாம் என்ற பேச்சுதான்.
அண்ணன் தம்பி இருவரும் கதையளந்தபடி கீழே வர, உமா சர்வாவிற்குப் பிடிக்கும் என்பதற்காக கார போண்டாவும் தேங்காய் சட்னியும் செய்தவர் அதனை ஒரு பவுலில் போட்டு சட்னியுடன் அண்ணன் தம்பி இருவர் முன்னும் வைக்க,
“ம்மா, வச்சிட்டுப் போறீங்க, சாப்பிடுங்கன்னு சொல்லிட்டுப் போக மாட்டீங்களா?” என்று பத்ரி கேட்க,
“நான் சொல்லி சிலர் சாப்பிடலன்னா?” என்று உமா கேட்க, பத்ரிக்கும் புரியவில்லை. புரிந்த சர்வாவோ,
“ஏன் அவங்க சொல்லலனா நம்ம சாப்பிட மாட்டோமா? வா டா ப்ரதர்” என்று சொல்லி சர்வா சகஜமாய் உண்ணவும்தான் உமாவிற்குத் திருப்தியாய் இருந்தது.
உண்டு முடித்தவனை இரவு உணவுக்கும் இருக்க சொல்லி பத்ரி கட்டாயப்படுத்த,
“இல்ல டா, அம்மா எனக்காக வெயிட் செய்வாங்க. நான் கிளம்புறேன்” என்றவன் சுவர் ஏறிக் குதித்து அவன் வீட்டிற்குப் போனான். எப்போது தனியாய் வீடு கட்டி காம்பவுண்ட் வைத்தார்களோ கேட்டைத் திறந்து போகும் வேலையெல்லாம் செய்ய மாட்டான் சர்வா. இப்படித்தான் தாண்டி செல்வான்.
மகன் இரவு உணவுக்கும் வர மாட்டான் என்று எண்ணியிருந்ததுக்கு மாறாய் அவன் வந்துவிட, புஷ்பாவின் உள்ளத்தில் புஷ்பங்கள் மலர வெகு வருடம் கழித்து மகனுடனும் கணவனுடனும் உணவருந்தினார்.
உணவுக்குப் பின் மூவரும் உட்கார்ந்திருக்க, புஷ்பா
“என்னங்க சர்வாவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யனும், அவனுக்கும் வயசாகுதுல” என்றதும்
“அதுக்கு?” என்றார் சுகுமாறன்.
அதையே அவர் மகனும்,
“ஸோ வாட்?” என்றான் தோளைக் குலுக்கிக் கொண்டு.
“என்ன அதுக்கா? நான் அவனுக்காக பொண்ணு பார்த்திருக்கேன், எனக்குப் பிடிச்ச பொண்ணுங்க பத்து பேர் இருக்காங்க, இதுல யாரைப் பிடிச்சிருக்குன்னு சொல்லுடா சர்வா” என்று அவர் போனை
மகனிடம் நீட்ட அதனை வாங்காதவன்,
“ம்மா, உங்களுக்குப் பிடிச்ச பொண்ணை நான் ஏன் கல்யாணம் செய்யனும்?” என்று சர்வா கேட்க சுகுமாறன் சிரித்தபடி,
“ரைட்!” என்றார்.
புஷ்பாவிற்கு கோபம் ஏறியது. உள்ளத்தினுள் உறுத்தல் பெரிதானது, அவரைப் பொருத்தவரையில் உமாவிற்குத்தான் அந்த வீட்டினில் செல்வாக்கு, மகன் எப்போதும் அவர் சொல்வதைதான் கேட்பான் என்று நினைத்தவர் அவனின் திருமண விஷயத்திலாவது தன்னுடையை முடிவே முடிவாக இருக்க வேண்டும் என்று உறுதியாய் இருந்தார்.
அவர் சொல்லும் பெண்ணென்றால் பெண்ணும் அடங்கியிருப்பாள், மகனும் தன் பேச்சைக் கேட்பான் என்று எண்ணியிருக்க, மகனோ அவரின் வண்ண எண்ணங்களுக்கு எல்லாம் வெள்ளையடித்து வெறும் தாளாக்கி அவரை வெறுப்பேற்றினான்.
சந்தோசமாய்
Very nice
Very nice epi