Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 11

நிலா முற்றம் 11

இரவு உணவு உண்ண சிவசங்கரன் அழைக்க ரசிகா வழக்கம்போல் அமைதியாக உண்டாள்.

“இப்ப வலி போச்சாம்மா?” என்ற அப்பாவின் கேள்விக்குப் பதிலாய்,

“கொஞ்சம் பரவாயில்லைப்பா” என்றதும்

“உமா சொன்ன மாதிரி வீட்டு சமையலுக்கு அப்பா ஆள் வச்சுடுறேன் டா, கல்யாணமாகிப் போகப் போற நீ கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு” என்றதும் ரசிகாவின் கண்கள் நீரால் நிறைந்தது.

“என்ன அப்பு?” என்று பதறினார் சிவசங்கரன்.

“நான் கல்யாணமாகிப் போய்ட்டா நீங்க தனியா ஆகிடுவீங்களேப்பா, நான் கல்யாணமெல்லாம் செஞ்சுக்கல.உங்களை விட்டுப் போகமாட்டேன்” என்றாள் தேம்பலுடன். ஏற்கனவே சர்வாவின் மீதான எண்ணங்கள் அலைக்கழிக்க, அப்பாவின் பேச்சில் அவரைத் தனியே விட வேண்டுமே என்ற நினைப்பு வலிக்க செய்தது.

ரசிகா அப்படி அழுகையுடன் பேச சிவசங்கரனுக்கும் கண்கள் கலங்கிப் போனது. அதற்காகவே அவர் முன் அழமாட்டாள் அவள். இப்போது அவளையும் மீறி கண்ணீர் வந்துவிட்டது.

“அதெல்லாம் அப்பாவுக்கு ஒரு கஷ்டமும் இல்லைடா, எல்லாத்துக்கும் ஆள் வச்சிப்போம். இப்படி பேசாத ரசிகா” என்றார்.

“இல்லப்பா, என்னால உங்களை விட்டுப் போக முடியாது” என்றவள் அழுகையுடன் தன்னறைக்குள் புகுந்துகொள்ள சிவசங்கரன் செய்வதறியாது திகைத்தார்.

ரசிகாவின் அழுகையை எப்படி சமாளிக்க என்று தெரியாமல் விழித்தார் சிவசங்கரன். இதுவரை இப்படி அவள் பெரிதாய் அழுததில்லை, அவர் பார்க்க அழுவதில்லை என்று கூறலாம். அம்மா இறந்தபோது அழுதிருக்கிறாள், அதன்பின் இவர் கடுமையாகக் கூட மகளைப் பேசியதில்லை. ஆனால் அவர் இயல்பான பேச்சே அவ்வளவு கண்டிப்புடன் வருகிறதென அவர் அறியவில்லை.

மனத்துக்கு பாரமாகிப் போனது அவருக்கும் மகளின் கண்ணீரால். மனைவியை நினைத்துப் பார்த்தார், அவர் இருந்திருந்தால்? நினைக்க மட்டுமே முடிந்தது. ராதிகாவின் தைரியம்தான் எல்லையில் நிற்கும் இவரின் பலம்! அவர் போனதுமே இவர் தளர்ந்துவிட்டார், இருந்தும் மகளுக்காக அதனைக் காட்டாமல் வாழ்ந்து வர, மகள் வாழ்வின் அடுத்தக் கட்டம் செல்ல வேண்டிய நிலையில் இப்படி ஒரு பேச்சு, அழுகை!

நெருங்கிய உறவுகள் என்று யாருமில்லை. இவரும் சரி ராதிகாவும் சரி ஒற்றைப்பிள்ளைகள், மீதியிருப்பது ஒன்றுவிட்ட உறவுகள், ஒன்றாத உறவுகளும் கூட!

மிகுந்த மன குழப்பம் சிவசங்கரனுக்கு, மகளை எப்படி அணுகவென்று தெரியவில்லை. சக்திவேலனுக்கு அழைத்து பேசினார், அவரோ

“நீ உமா கிட்ட பேசுடா, எனக்குமே ஒன்னும் புரியல” என்று மனைவியிடம் தந்துவிட,

“அண்ணா, நீங்க கவலைப்படாதீங்க. பொதுவாவே பொண்ணுங்களுக்கு கல்யாணமாகி ஒரு புது வீட்டுக்குப் போகணும்னா இப்படி பயம் வரும்தான். நம்ம ரசிகா வேற அம்மா இல்லாத பொண்ணு, உங்களை நினைச்சு யோசிக்கிறது நியாயம்தானே?” என்றார் உமா.

“இருக்கட்டும் உமா, நான் அவளுக்குப் பிடிச்ச மாதிரி மாப்பிள்ளைதானே பார்க்கப் போறேன். இப்படி அவ அழுதா என்ன நினைக்கிறது நான்? ராதிகா இருந்திருந்தா இப்படி அவ அழமாட்டா தானே?” என்றவருக்கும் கண்கள் கலங்கிப் போக,

“அய்யோ அண்ணா, இதெல்லாம் ரொம்ப சாதாரணம். ரேஷ்மி கூட இங்க கல்யாணமாகி வர அன்னைக்கு அழுதா. நீங்க இதைப் பெருசு பண்ணாம விடுங்கண்ணா. அவளே சரியாகிடுவா” என்று வெகு நேரம் பேசி சமாதானம் செய்தார்.

அடுத்த வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்றுவிட கல்லூரி தினம் வெகு சிறப்பாய் நடைப்பெற்றது. சர்வஜனன் எப்போதையும் விட சிறப்பாய் பெரிதாய் நேர்த்தியாய் நடத்தி முடித்திருந்தான். சிவசங்கரனே மனத்துக்குக்குள் மெச்சிக்கொண்டார், வேலையென்றால் இவன் சரியாக இருக்கிறான் என.

இரண்டு நாட்கள் ஓடியிருந்தன, அன்று காலை ரசிகா வழக்கம்போல் சமையல் செய்து கொண்டிருந்தாள். எப்போதும் இசைக்கும் இசையின்றி அன்று இசைத்தது மௌனமே!

அன்று ரசிகா அழுத பின் அதைப் பற்றி பேசவில்லை சிவசங்கரன், மகளின் அழுகை அந்த மனிதரை அசைத்துப் பார்த்திருக்க மீண்டும் அதைப் பற்றி பேசும் தைரியமில்லாமல் போனது. ஆனால் மாப்பிள்ளைப் பார்க்கும் படலம் மட்டும் அமைதியாய் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

டீ குடித்த பின் க்ளாசை சமையலறையில் வைக்க வந்தவருக்கு என்னவோ ஒரு வேறுபாடு தெரிய, சுற்றி பார்வையை ஓட்டினார். சிறிது நேரம் கழித்துதான் அந்த வித்தியாசம் உணர்ந்தார்.

“என்ன அப்பு? எப்பவும் பாட்டு கேட்டுட்டே சமைப்ப, அமைதியா இருக்கே டா கிச்சன்?” என்ற அப்பாவின் கேள்வி அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

“ஆ…ஹ்ன்ன்.. என்னப்பா?” என்றாள் அவர் சொன்னதை கவனிக்காமல்.

“சமைக்கும்போது பாட்டு கேட்பியே டா, ஏன் இன்னிக்குக் கேட்கலையா?” என்றார் மெதுவாக.

“கேட்கலப்பா” என்றவள் வெங்காயத்தை வதக்கி அதில் கவனம் வைத்தாள்.

“உனக்குப் பிடிக்குமே டா, ஏன் கேட்கல? அப்பா வேணும்னா மியுசிக் சேனல்ல பாட்டு வைக்கவா?” என்றார்.

பிடிக்கும்தான்!

அம்மா இல்லாமல் போன பின் அம்மாவின் நினைவாய், அவருடன் இருப்பது போல் ஒரு உணர்வைத் தருவது இசை மட்டுமே! காற்றாய் கரைந்த அம்மாவைப் போலதானே காற்றில் மிதக்கும் கீதமும் நாதமும்!

இப்போதோ பாட்டோடு சேர்ந்து பாட்டுடைத் தலைவனாய் சர்வா அல்லவா அவள் விழிகளுக்குள் வந்து நிற்கிறான். பிடித்த எல்லாவற்றிலும் பிடித்தவனாய் அவன் கலந்திருக்க காயப்பட்டாள் பெண்.

மகளின் யோசனையை சிவசங்கர்,
“அப்பு? பாட்டு போடவா?” என்று கலைக்க,

“இல்லப்பா வேண்டாம்” என்றவள் சமையலில் சிரத்தை உள்ளவளாக நடந்து கொள்ள, சிவசங்கரனும் அந்த கேள்வியை விட்டார்.

“அடுத்த வாரம் சமையலுக்கு ஆள் வந்துடுவாங்க டா, இனிமே நீ நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவர் வெளியே போய்விட ரசிகாவின் விழிகளில் நீர் சேர்ந்து கொள்ள, அழக்கூட முடியாமல் அதனை அடக்கி அதனால் வந்த தொண்டை வலியை அடக்க தண்ணீரைப் பருகி முகத்தை நீர் விட்டு அடித்தாள்.

இப்போதெல்லாம் கல்லூரியில் சர்வாவை சந்திக்கும் வேலையுமில்லை, இவள் உண்டு, இவளின் வகுப்பு உண்டு என்று இருந்து கொள்கிறாள். அவன் எதிரே ரவுண்ட்ஸ் வந்தாலும் கூட மரியாதைக்காக ஒரு குட் மார்னிங் சொல்வது கூட இல்லை.

யுவராணிக்கு இவளின் மாற்றங்கள் புரிந்தாலும் காரணம் புரியவில்லை.

“என்னாச்சு ரசிகா? ஒரு மாதிரி டல்லா இருக்க?” என்று கேட்க,

“வீட்ல வேலை அதான்” என்றாள்.

“வீட்ல வேலை இருந்தா வீடு தானே டல்லா இருக்கணும், நீயேன் டி இருக்க?” என்றதும் அவளை முறைத்தாள் ரசிகா.

“நோ முறைச்சிங், மை அழகை ரசிச்சிங்” என்று சிரித்தவள்,

“என்ன மிலிட்டரி ஆர்மிக்கு ஆள் எடுக்கிறாரா? அந்த டென்ஷனா?” என்று கேட்க,

“இல்லையே, அப்பா கிட்ட எனக்கு ஆர்ம்ட் ஃபோர்ஸ்ல இருக்க ஆளுங்க வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள்.

“ப்பா, செம ரசி! அப்புறமென்ன யாராவது ஒருத்தரைப் பார்த்து செலெக்ட் பண்ண வேண்டியதுதானே?” என்ற யுவியின் ஆர்வமான பேச்சைக் கண்ட ரசி,

“எனக்கு யாரையும் பிடிக்க மாட்டேங்குது” என்றாள் சோர்வாக.

“அப்போ யாரைப் பிடிக்குது?” என்று யுவி சரியாய்க் கேள்வி கேட்க,

“அப்படி யாருமில்லை” என்றாள் பட்டென்று.

“என்னடி இப்படி சொல்ற?”

“வேற என்ன சொல்றது? எனக்கு ஒன்னுமே பிடிக்கல” என்றாள் விரக்தியாய்.

பேசும்போதே பெல் அடிக்க, இருவரும் அவரவர் வகுப்பு முடிந்து வெளியே வர, அன்று இருவருமே பக்கத்து பக்கத்து வகுப்புகள்.

“இண்டர்னல்ஸ் டேட் பசங்க கிட்ட சொல்லிட்டியா?” என்று அவள் வகுப்பறையை விட்டு வந்த ரசிகா யுவியிடம் கேட்க,

“ம்ம், சொல்லிட்டேன்” என்றபடி இருவரும் பேசிக்கொண்டு வர, எதிரே சர்வா வந்தான்.

யுவி மரியாதைக்காக,
“குட் ஆஃப்டர்னூன் ஸர்” என்று சொல்ல,

“குட் ஆஃப்டர்னூன் மேம்” என்றான் சர்வாவும். யுவி சொல்லவும் எப்படி தான் மட்டும் சொல்லாது இருப்பதென ரசிகாவும் சொன்னாள்தான், அவனின் முகம் பார்க்காது அவள் கடமைக்கென சொல்லிவிட்டு செல்ல, ரசிகாவின் விலகல் வெட்டவெளிச்சமாய் அன்று சர்வாவுக்கு விளங்கியது.

கல்லூரி தினம் முடிந்ததிலிருந்து அவள் சரியே பேசுவதில்லை என்று இவனுக்குத் தோன்றினாலும் பேசும் வாய்ப்புகளும் இல்லையே என மனம் நினைத்திருக்க, இப்போது இந்த விலகல் இயல்பானது அல்ல, இவள் விலக்கி வைக்கிறாள் என்பது சர்வாவிற்குத் தெளிவாய்த் தெரிந்தது.

விலகலின் காரணம் மட்டும் தெரியவில்லை. சர்வாவுக்குத் தெரியாமல் இருந்த விலகலும் அதன் விளக்கமும் யுவராணிக்கு சொல்லாமல் புரிந்துவிட,

சர்வஜனன் அவர்களைக் கடந்து சென்றிருக்க, யுவி சுற்றும் முற்றும் அந்த நீண்ட காரிடாரைப் பார்த்தவள் மெதுவாய் ரசிகாவிடம்,

“நீ சர்வா ஸாரை லவ் பண்றியா ரசி?” என்று கேட்டுவிட ரசிகா அதிர்ந்து விழித்தாள்.

‘இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்’

✅ End of Episode 11
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 5 days ago

Very nice 

❤️ 2 more...
Geethazhagan Reader 5 days ago

இவளின் தவிப்புகள் பாவம்.

சர்வா இனியாவது அவளை கவனிக்கனும்
❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 3 days ago

சிறு வயது சலனமே 

சிதைத்தது போதுமே....
சற்றே தள்ளி வைத்து 
சர்வாவை 
❤️ 1 more...
Mrs Beena loganathan Reader 3 days ago

சர்வாவை மீண்டும் சந்தித்து மனம்

சலனம் படும் விந்தை 
சிரிக்கிறது விதி 
செல்ல தடை போடுது மதி 
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top