Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 14

நிலா முற்றம் 14

ரசிகாவின் பின் சர்வா இடைவெளி விட்டு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான், இருவருமாக ஒரு சின்ன சாலையில் செல்லும்போது அந்த திருப்பத்தில் ரசிகா முதலில் திரும்பிவிட, எதிர்ப்பக்கம் வந்த வண்டியை அவள் கவனிக்கவில்லை, எங்கே மோதிவிடுவோமோ என்று பயந்தவள் வேகமாய்ப் பிரெக்கை அழுத்த அந்த திடீர் செய்கையில் தடுமாறி கீழே விழ,

“ரசி” என்று பதறி சர்வஜனன் அவளருகே சென்றவள் அவளைப் பிடித்து நிறுத்த கால்களில் சிராய்ப்பு, கைமுட்டியிலும் சின்ன காயம்.

“வலிக்குது சர்வா, நிக்க முடியல” என்று சொல்ல, அதற்குள் எதிரே வந்த மனிதரும் வண்டியை நிறுத்திவிட,

“ஏன் ஸார் பார்த்து வர மாட்டீங்களா?” என்று சர்வா அவனைக் கத்த,

“இல்ல, என்னோட தப்பு” என்று ரசிகா சொல்லவும்

“நான் ஒழுங்காதான் வந்தேன் ஸார், இவங்கதான் தடுமாறிட்டே வண்டியை ஓட்டினாங்க” என்றவன் ரசிகாவின் வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.

“தேங்க்ஸ் ஸார்” என்று சர்வா சொல்ல

“பார்த்துக்கோங்க” என்று சொல்லி அவன் போய்விட, ரசிகாவுக்கு சிராய்ந்ததில் எரிய, கண்கள் கசிந்தன.

“ப்ச், அழாத ரசி. சின்ன காயம்தானே? மிலிட்டரி பொண்ணு அழுவியா நீ?” என்று கேட்டுவிட

“எங்கப்பாதான் மிலிட்டரி நான் மிலிட்டரிக்குப் போனேனா? என்னோட வலியைக் கூட நான் சொல்லக் கூடாதா?” என்று அவனை திட்டியவள்

“விடுங்க” என்று அவனின் கையில் இருந்து விலகப் பார்த்தாள்.

“அடி வாங்காத டி” என்று அதட்டியவன் ஆட்டோ ஒன்றைப் பிடித்து அவளை மருத்துவமனை அழைத்துப்போனான்.

அங்கு அவளுக்கு சிகிச்சை நடக்கும்போதே ரசிகாவிற்கு சிவசங்கரன் அழைக்க,
“உன் அப்பா” என்றவன் அழைப்பைக் கட் செய்ய

“ஏன் கட் பண்றீங்க? அப்பா காணும்னு தேடுவாங்க. கொடுங்க எங்கிட்ட” என்றதும் அவள் இப்படி இங்கே இருக்கிறேன் என்று சொல்லி வைக்க, அவளுக்கு டிரெஸீங் செய்து வலிக்காமல் இருக்க ஊசி செலுத்தப்பட்டிருக்க, அவள் படுத்திருக்க இவளையே சர்வாவின் பார்வை துளைக்க,

“என்ன சர்வா?” என்று கேட்டாள்.

“இன்னும் ஒரு அரைமணி நேரம் நீ வீட்டுக்குப் போய்டலாம், அதுக்குள்ள ஏன் டென்ஷன் பண்ணி உன் அப்பாவை வர சொல்ற?” என்று கேட்டான்.

“நான் வரலன்னாதான் அப்பா டென்ஷன் ஆவாங்க. அண்ட் அவர் நீங்க சொன்ன மாதிரி மிலிட்டரி, இதுக்கெல்லாம் பயப்பட மாட்டார்”

“அப்படி சொல்லாத நீ, ஆர்மிக்குத்தான் அவர் கேப்டன், உனக்கு அவர் அப்பா. அப்பாவா அவர் கண்டிப்பா ஃபீல் பண்ணுவார்”

ரசிகா அமைதியாய் தலையாட்டியவள் கண்களை மூடிக்கொண்டாள். சர்வாவின் அருகாமையை எல்லாம் உணர்ந்து உளமாற ரசிக்கும் எண்ணமெல்லாம் அக்கணம் இல்லை, காலில் சிறியதாய் சுளுக்கு இருக்க, அவளுக்கு அந்த வலி பெரிதாய் இருந்தது.

சர்வா ரசிகா கண்கள் மூடியதைக் கவனித்தவன்,
“ரசி! தூங்காத” என்று அதட்டல் போட்டான்.

“பெயின் கில்லர் கொடுத்திருக்காங்க, தூக்கம் வராதா?” ரசிகா களைப்பில் பேச,

“அது கொஞ்ச நேரம் கழிச்சு வரட்டும், இப்போ மிலிட்டரி வந்துடுவார். அப்புறம் வீட்டுக்குப் போகப் போறோம். ஸோ தூங்காம முழிச்சிட்டு இரு” என்றதும்,

“நம்ம பைக்” என்று ரசிகா அவனைப் பார்க்க,

“அங்க அந்த வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்லிட்டுதானே வந்தேன், நைட் போய் எடுத்துக்கலாம். உன்னோட கீ கூட எங்கிட்ட இருக்கு, நானே எடுத்துட்டு வந்து தரேன்” என்றான்.

அவள் தலையசைத்து சுவரை வேடிக்கைப் பார்க்க,

“என்ன சுவரைப் பார்க்கிற, பெரிய சைனா வால் அது? எதாவது பேசேன் நீ, முன்னாடியெல்லாம் நல்ல பேசுவ. இப்போ ரொம்ப அமைதியாகிட்ட நீ”

“நான் எப்பவும் போல இருக்கேன், நீங்கதான் யுகே போய்ட்டு என்னை மாறிட்டேன் சொல்றீங்க” என்றதும்,

“யுகே போகறதுக்கு முன்னாடி என்னம்மா அழுத நீ, அப்புறம் போற அன்னைக்கு வரலை”

“வந்தா மட்டும் பேசியிருப்பீங்களா? பத்ரீண்ணா கல்யாணத்தப்ப கூட நீங்க பேசல”

“நீ வந்து பேசியிருந்தா நான் பேசியிருப்பேன்”

“பொய் சொல்லாதீங்க, காலேஜ் வந்தன்னைக்கே என்னைத் திட்டினீங்கதானே?”

“ப்ச், அது கோபம்” என்றவன்,

“நீ ஸாரி கேட்ட பின்னாடி நான் நார்மலா இருக்கேன், நீ அப்படியில்லை” என்றான்.

“தெரியல, நான் யார்கிட்டவும் இப்ப ரொம்ப பேசறதில்லை”

“ம்ம். நானும் நோட்டீஸ் பண்ணினேன். காலேஜ்ல கூட உன்னோட ப்ரண்ட் மேம் தவிர வேற யார்கூடவும் நீ நல்லா பேசுறதில்லை?”

“அவ என்னோட யுஜி ப்ரண்ட். மத்தவங்க எல்லாம் அங்க எங்களை விட பெரியவங்க, அதனால் ஒரு கனெக்ட் இல்லை”

“வீட்ல இருக்கவங்க கிட்டவும் நீ அப்படிதான் இருக்க ரசி, பத்ரிக்கு வேணும்னா உன்னை அவ்வளவு தெரியாம இருக்கலாம். எனக்கு உன்னைத் தெரியும்” என்றதும் ரசிகாவின் விழிகளில் வியப்பு.

‘என்ன தெரியும் இவனுக்கு? இவன் என் எண்ணமாக இருப்பது தெரியுமா என்ன?’ என்று கேள்வியோடு அவனைப் பார்க்க,

“என்ன நினைக்கிற? வலிக்குதா?” என்று அவன் கேட்டான்.

“ம்ம்” என்றவள் “நான் கொஞ்ச நேரம் கண்ணை மூடிட்டு இருக்கேன், அப்பா வந்தா எழுப்புங்க” என்று சொல்ல,

“உன்னை, அவர் வந்து என்னை திட்டினாதான் வாயைத் தொறப்பியா? நல்லா சாஞ்சு உட்காரு நீ” என்று சர்வா திட்ட,

“அவர் பேசினா நீங்க பேசாம இருக்கப் போறீங்களா? உங்க வாய் எனக்குத் தெரியும். போங்க சர்வா வலிக்குது” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.

கண்களை மூடி தன் முன் இருப்பவனிடமிருந்து தப்பிக்க நினைத்தாள் ரசிகா. அவன் அருகாமையில் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருந்தாள்.

அவனைப் பிடித்தது, அவனின் பேச்சு பிடித்தது!

மொத்தத்தில் சர்வாவை சர்வமாய்ப் பிடித்துத் தொலைத்து. ஆனாலும் அதனை சொல்லவோ செயல்படுத்திக் கொள்ளவோ பயம், தயக்கம்!

இருபது நிமிடத்தில் சிவசங்கரன் மகள் சொன்ன மருத்துவமனைக்கு வந்து அவளுக்கு அழைக்க, அவள் இருக்கும் அறையை சொல்ல அங்கு போனவருக்கு மகள் பெட்டில் இருக்க, அருகே இருந்த சர்வாவைப் பார்த்து அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இதில் மகள் காலில் சின்னதாய் Compression band போடப்பட்டிருந்தது.

“அப்பு என்னடா ஆச்சு?” என்று சிவசங்கரன் மகளை நெருங்க, சர்வா அவர் வரவும் எழுந்து நின்றான்.

“ஒன்னுமில்லப்பா, சின்ன அடிதான், ஸ்லிப் ஆகிட்டேன்” என்று சொல்ல,

“எப்படிம்மா?”

“நான் சரியா கவனமில்லாம வந்துட்டேன்ப்பா” என்றதும் சர்வாவைப் பார்த்த சிவசங்கரன்,

“நீ எங்க இங்க?” என்று அவனை முறைக்க,

“சர்வாதான் என்னை இங்க அழைச்சிட்டு வந்தார்பா”

“இவன் எப்படி அங்க வந்தான்?”

“ஆர்மின்னு நினைச்சேன், சிபிஐனு தெரியாம போச்சே மாமா, இவ்வளவு கேள்வி கேட்கிறீங்க?” என்று சர்வா கிண்டல் செய்ய,

“நீ பேசாதடா, உன்னாலதான் என் பொண்ணுக்கு இப்படி ஆகியிருக்கும்” என்று அவர் பேச,

“ஆமா, நானே அவளை பிடிச்சு தள்ளிவிட்டேன்” என்ற சர்வாவின் நக்கல் பேச்சில்,

“ரொம்ப பேசுறடா நீ” என்று அவர் இன்னும் கோபமாய் அவனிடம் பேசினார்.

“ப்பா..! போதும். சர்வா மேல தப்பில்லை” என்று ரசிகா சொல்ல,

“நீ சும்மா இரு அப்பு” என்று அவளை அதட்டியவர் சர்வாவை முறைத்து,

“இத்தனை வருஷம் வண்டி ஓட்டுறா, இப்படி ஆனதே இல்லை. இன்னிக்கு இப்படி ஆச்சுன்னா காரணம் நீதானே?” என்று சர்வாவின் மேல் காரணமின்றி அவர் காய, சர்வா அமைதியாக கையைக் கட்டிக் கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள் என்று அழுத்தமாய் நிற்க, அவன் மீது வீணாய் அப்பா பழிபோடுவது பெண்ணால் பொறுக்கமுடியவில்லை.

“அப்பா! நிறுத்துங்கப்பா. எப்பவும் ஏன் சர்வாவையே தப்பு சொல்றீங்க?” என்று கத்திவிட,

மகள் இப்படியெல்லாம் கத்திப் பேசியதில்லை என்பதால் அவள் கத்தவும் இவரின் குரலும் உயர்ந்தது.

“பின்ன இவன் அப்படிப்பட்டவன் தானே?” என்றதும்,

“இல்லை, சர்வா மேல தப்பில்லை” என்று ரசிகா குரலை உயர்த்திவிட்டிருந்தாள். ஏற்கனவே கீழே விழுந்திருந்த வலி, இதில் கீழ்மையாய் சர்வாவை அப்பா பேசவும் காதல் மனம் பொறுக்கவில்லை.

கண்களில் நீரோடும் பெரும் ஆவேசத்துடன்,
“எப்பவும் சர்வா மேல தப்பில்லை” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.

அவள் உண்மையை சொல்லப் போகிறாள் என்று உணர்ந்த சர்வாவுக்கு அதில் விருப்பமில்லை. அவள் அவளின் அப்பா பார்வையில் அவருக்குப் பிடித்த மகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்த அவன் மனம்,

“ரசி! உளறாம அமைதியா இரு” என்று அதட்டினான்.

“யார் உளறுறா? பேசாம இருந்தா உண்மையை சொல்லுன்னு சொல்வீங்க, உண்மையை சொன்னா உளறுறேன் சொல்வீங்களா?” என்று அவனிடம் கத்தியவள்,

“அன்னிக்கு சர்வாவை கிஸ் பண்ணினது நான், நீங்க அடிப்பீங்கன்னு பயம், அதான் சொல்லாமலே இருந்துட்டேன். அப்பவும் சர்வாவை லவ் பண்ணினது நான், இப்பவும் நாந்தான் சர்வாவை லவ் பண்றேன், ஆனா நீங்க எப்பவும் ஏன் அவரை தப்பா சொல்றீங்க? உங்க நம்பிக்கையை நான் எப்பவும் காப்பாத்தலப்பா” என்றவள் உணர்ச்சிவசத்தில் உள்ளத்தில் உள்ளதை சொல்லி அழுகையில் கரைந்தாள்.

‘இப்பவும் சர்வாவை லவ் பண்றேன்’ என்ற வார்த்தைகளில் அதிர்ச்சியில் நின்றனர் சர்வாவும் சிவசங்கரனும்.

அமைதியோடு அழுகையில் கரையும்போது ரசிகாவிற்குத் தான் உளறியது புரிய நிமிரவே முடியவில்லை. சிவசங்கரன் மகளைப் பார்த்தவண்ணம் அப்படியே அந்த நாற்காலியில் உட்கார்ந்துவிட,

“ரசி அழாத” என்று சர்வாதான் முதலில் பேசினான். அதுவும் அவ்வளவு இயல்பாய் இவள் பேசியதை கவனித்தானா இல்லையா என்று ரசிகா சந்தேகிக்கும் வண்ணம் அவன் பேச,

சிவசங்கரனும்,
“ஸாரி சர்வா” என்று சர்வாவின் முகம் பார்க்க,

“ப்ச், விடுங்க மாமா. ஒரு அப்பாவா நீங்க செஞ்சது சரிதான்” என்று சொல்ல இன்னும் வருத்தமாய்ப் போனது சிவசங்கரனுக்கு. அதனையும் விட பெண்ணின் மனம் இத்தனை நாள் தெரியாமல் போனதே என்ற வருத்தம். ஒருவேளை தன் மனைவி இருந்திருந்தால் இதையெல்லாம் கவனித்திருப்பாளோ என்று எண்ணம் போனது.

அப்படியே யாரும் பேசாமல் அந்த அறையில் அமைதி நிலவ,
“இப்போ டிஸ்சார்ஜ் செஞ்சிடலாம் மாமா, நான் போய் சொல்லிட்டு மெடிசன் வாங்கிட்டு வரேன்” என்று சர்வா வெளியேறிவிட,

ரசிகாவின் மனம் அப்பாவிற்கும் அவனுக்கும் தெரிந்துவிட இவளுக்கு அவளின் அப்பா என்ன நினைக்கிறார் என்றும் தெரியவில்லை, சர்வாவின் மனமும் தெரியவில்லை.

சர்வாவோ வெளியே வந்து நின்றவனுக்கு ரசிகாவின் மன நிலை புரிய, அதிர்ச்சி, அதனுடன் கூடிய ஆச்சரியமும்!

எல்லா வேலையும் முடிந்து உள்ளே வந்து வாங்கி வந்த ஜூஸை ரசிகாவிற்குக் கொடுக்க, ரசிகாவினால் சர்வாவை நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை. முன்பே ஒதுங்கினாள், இப்பொழுது அவளின் மனம் சொன்ன பின், இவன் இயல்பாய் நடக்க, அவளால் இயல்பாய்ப் பார்க்க கூட முடியவில்லை.

“ரசி, ஃப்ர்ஸ்ட் இதை குடி. டயர்டா இருக்க” என்று சொல்லி அவளின் கையைப் பிடித்து அவன் குடிக்க வைக்க, அவனின் அக்கறை இன்னும் வேண்டும் வேண்டும் என்று அகம் ஆவல் கொண்டது.

அவர்கள் மூவரும் வீட்டிற்கு வந்து சேரும்வரை எந்த பேச்சுமில்லை. வீடு சேர்ந்தபின் அவன் உணவினை இருவருக்கும் ஆர்டர் செய்தவன்,

“மாமா நான் கிளம்புறேன், சாப்பாடு ஆர்டர் செஞ்சுட்டேன். அவளுக்கு சாப்பிட்டு மாத்திரைக் கொடுங்க. அவ ஸ்கூட்டி கொண்டு வந்து விட சொல்லிடுறேன். பார்த்துக்கோங்க” என்றவன் ரசிகாவைப் பார்த்து,

“ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரைப் போடு” என்று சொல்லிவிட்டு போக, எந்த உரிமையில் இவன் என்னை அதிகாரம் செய்கிறான் என்று தோன்றியது.

கூடவே இப்படியா உன்னை அவனிடம் தெரியப்படுத்துவாய் என்று வருத்தமாய்ப் போனது. அதிலும் அவன் இயல்பாய் நடக்க அதுதான் அவளை மிகவும் காயப்படுத்தியது.

பிடிக்கும், பிடிக்காது என்று பதிலன்றி என்ன செய்கை இது என்ற எண்ணம்தான் அவளுள் ஓட, அப்பாவைப் பார்க்க அவரோ மகளைத் தான் சரியே கவனிக்கவில்லை என்ற கழிவிரக்கத்தில் இருந்தார்.

✅ End of Episode 14
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Sathya Velusamy Reader 3 days ago

எப்படியோ தெரிய வேண்டியவர்களுக்கு தெரிய வந்தாச்சு

❤️ 2 more...
Geethazhagan Reader 3 days ago

ரசி கோபத்தில் அவளின் லவ்வை சொன்னது ரொம்ப சந்தோசம்.

இல்லனா அவ வாய திறப்பாளா. Interesting epi
❤️ 2 more...
Srichitra Reader 2 days ago

Very nice.

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top