Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 16

காளிதாஸன் 16

“ஒன்னு கேட்டா லெக்சர் எடுக்காம உண்மையை சொல்வீங்களா?” என்று கார்த்தி தயங்கி கேட்ட விதத்தில், “லெக்ஸரா? ஹாஹா” என்று சிரித்த போதிலும்,

“கேளு கார்த்தி” என்றான்.

“அது…உங்கம்மாவுக்கு நம்ம கல்யாணத்துல இஷ்டமில்லையா? அவங்க அன்னிக்கு எங்கிட்ட பேசினதோட சரி, அப்புறம் அவங்க வரவே இல்லையே? நாளைக்கு வருவாங்களா? எனக்குத்தான் அம்மா வரமாட்டாங்க. என்னால உங்களுக்கும் ..” என்று கார்த்தி தயங்கி நிறுத்தினாள்.

“நோ, கார்த்தி. உன்னைக் கல்யாணம் செய்றதுல அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். அவங்க சொன்னது ஒரே விஷயம்தான்! உன்னை, உனக்காக கல்யாணம் செய்யணும், உனக்காகவும் சேர்த்து யோசிக்கணும்னு அட்வைஸ் பண்ணினாங்க. அம்மாவுக்கு இந்த சாஸ்திரம் இதெல்லாம் தெரியாது, உனக்குத் தெரியுமா? அம்மாவும், அப்பாவும் தாலி மறுப்புக் கல்யாணம் செஞ்சவங்க” என்றான்.

“அப்படின்னா? லிவிங் டுகெதரா?!” என்று கார்த்தி வாய் பிளக்க,

“இல்லை அப்படி கிடையாது, ரெஜிஸ்டர் மேரெஜ் பண்ணிட்டு மாலை மாத்தினாங்க அவ்வளவுதான். அப்பா சொன்னது இதுதான், அது என்ன நீயும்தான் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கற, அப்போ எனக்கு என்ன அடையாளம்னு கேட்டாராம். அம்மா, அப்பா இரண்டு பேரும் ஒரு செயின் மாத்திக்கிட்டாங்க, அவ்வளவுதான். என் அப்பா மாதிரி எல்லாம் ஒருத்தரை பார்க்கவே முடியாது” என்றான் பெருமிதமாக.

கார்த்தியின் மனத்தில் சின்னதாய் ஒரு வலி. இப்படித்தானே அவளும் அப்பா, அண்ணன் என்று இறுமாந்து இருந்தாள். அதனை ஒதுக்கியவள் காளிதாஸனைப் பார்த்து,

“உங்களை மாதிரி ஒருத்தரைக் கூட நான் பார்த்ததே இல்லை” என்றதும் காளிதாஸனிடம் புன்னகை.

“அம்மா, மாமா கிட்ட கல்யாண விஷயம் சொல்லிட்டாங்க, மாமாவுக்கு சொல்லவே வேண்டாம், அவர் நான் எப்படா கல்யாணம் பண்ணுவேன்னு காத்துட்டு இருந்தார், ஸோ அவர் பார்த்துப்பார்னு அம்மா வரல. அம்மாவுக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ், முடிச்சிட்டு வந்துடுவாங்க. அண்ட் கார்த்தி மேடம் உங்களுக்கு இந்த ஜென்மத்துல மாமியார் கொடுமை எல்லாம் கிடையாது, ஸோ ரிலாக்ஸ்” என்றான்.

“நான் ஒன்னும் அதுக்காக சொல்லல” என்று கார்த்தி முகம் சுருங்கச் சொல்ல,

“எனக்குத் தெரியுது கண்ணா. நீ, எதையும் யோசிக்காத. கல்யாணப் பொண்ணு சந்தோஷமா இரு” என்று கன்னம் தட்டி போனான்.

அடுத்த நாள் காளிதாஸன், கார்த்தியாயினி திருமணம் கோவிலில் எளிதாக முடிந்தது. மாலை மிகப் பிரமாண்டமாக வரவேற்பு நடந்தது. மகாதேவனுக்கு, காளிதாஸ் மகன் ஸ்தானத்தில் இருப்பவன். அதைவிட அவரின் நண்பரின் மகன். அதனால், அமர்க்களப்படுத்தி விட்டார். முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் என அரசியல் கூட்டம் போல அவ்வளவு மக்கள். மகாதேவன் மத்திய அமைச்சராக இருக்க, மிக மிக முக்கிய பிரமுகர்கள் அத்தனை பேரும் வந்திருந்தனர்.

திருமணத்திற்கான ஆர்வமெல்லாம் பெரிதாக அவளிடம் இல்லையென்றாலும் நித்தி விடவில்லை. அவளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள்.

ஐந்து மணிக்குத் தொடங்கிய வரவேற்பு நிகழ்ச்சி பதினொன்றை வரை நடந்தது. இடையில் சில நிமிடங்கள் உட்கார்ந்தாலும் கூட வெகு நேரம் நிற்க வேண்டியதாகவே இருந்தது.

“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ கண்ணா, மாமா எல்லாரையும் இன்வைட் பண்ணிட்டார். அவாய்ட் பண்ண முடியாது” என்று காளிதாஸன், கார்த்தியிடம் சமாதானமாய் மெல்லிய குரலில் சொல்ல, அவனும் தானே தன்னுடன் நிற்கிறான். இருந்தாலும் தன்னை சமாதானம் செய்பவன் மேல் காதல் பெருக,

“பரவாயில்ல, இன்னும் கொஞ்ச நேரம்தானே?” என்று புன்னகைத்தாள்.

ஆனால், கணவனாய் காளிதாஸனாய்க் காண பெரிதும் விரும்பியது பெண்மனம். கனிவாய்ப் பார்த்தான், கரிசனத்துடன் நடந்தான். ஆனால், காதல்? கணவனாய் ஒரு ஆவல்?? ஒன்றுமே இல்லை அவனிடத்தில்.

நித்தி, கார்த்தியைப் பார்த்து பார்த்து அலங்காரம் செய்திருக்க, காளிதாஸனின் பார்வை இவளிடம் மிகவும் கண்ணியமாகவே இருந்தது. இன்றுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதற்குள்ளாகவே அவனிடம் மாற்றம் காண நினைப்பாயா? என்று நினைத்து சமாதானம் செய்தாலும் கூட திருமண நாளில்  ஆசைப் பார்வைகள், காதல் பேச்சுகள் எல்லாம் தானாய் மனம் எதிர்ப்பார்த்தது.

சிவகாமி முன்னிருக்கையில் உட்கார்ந்து மகனையும், மருமகளையும் கண்டு ரசித்தார், மனம் நிறைவாய் உணர்ந்தது. சிவகாமியைப் பார்க்கவுமே கார்த்தியின் முகம் புன்னகையில் விரிந்தது. அவர் மேல் அவளுக்கு ஒரு பயம் இருந்தது. கோபக்காரர் என்று நினைத்திருந்தாள். திருமணம் முடிந்தவுடன் அவர் இவர்களிடம்,

“உங்களை இப்படி பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷம், நீங்க இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, சந்தோஷமா வாழனும். நல்ல கணவன் மனைவின்னு பார்க்கிறவங்க சொல்றதை விட ஒருத்தருக்கொருத்தர் அப்படி இருக்கணும். எதுனாலும் சேர்ந்தே முடிவெடுங்க. ஆனாலும், தனிப்பட்ட விருப்பங்களுக்கும் மதிப்புக் கொடுங்க” என்று சொன்னவர் கார்த்தியின் நெற்றியில் முத்தமிட்டார்.

என்னவோ அந்த நொடி மிகவும் நெகிழ்ச்சியாய் உணர்ந்தாள் கார்த்தி.

“டேய்! கவி. ஜூஸ் எடுத்துட்டு வா, கார்த்திக்கு டயர்டா இருக்கு” என்று கார்த்தியின் களைத்த முகம் பார்த்து காளிதாஸன் சொல்ல,

அவன் சொல்வதைக் கேட்ட கார்த்தி, “எனக்கு வேண்டாம், நீங்க குடிங்க” என்று மறுத்தாள்.

“எனக்கு இப்படி நிக்குறது எல்லாம் பழகிடுச்சு கண்ணா, நீதான் பயங்கர டயர்டா தெரியற, கொஞ்சம் ஜூஸ் குடிச்சா தெம்பா இருப்ப, இப்ப நம்ம சாப்பிடவும் போக முடியாது” என்றான் காளிதாஸன்.

“இல்லை, ஜூஸ் வேண்டாம். ஏற்கெனவே நிறைய குடிச்சிட்டேன், இனிமே குடிச்சா எனக்கு வாஷ்ரூம் போகணும்” என்று அவள் முகம் சுருக்கி மெல்ல சொல்ல, அந்த பாவனையில்,

“க்யூட்!” என்றான் சின்ன சிரிப்புடன்.

அவன், அவள் பேச்சைக் கேட்டு ரசித்திருக்க, இவளோ கடுப்புடன், “இப்போதான் கண்ணு தெரியுதா?” என்று கேட்டு விட்டாள்.

“என்ன?” என்று காளிதாஸன் வியந்து கேட்க,

“நான் க்யூட்னு இப்போதான் தெரிஞ்சதா?” என்றாள் முணுமுணுப்பாக. இவள் முகம் மாறுவதைக் கண்ட நித்தி மேடைக்கு வந்து,

“என்னாச்சு? கார்த்தி ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க, காளிதாஸன் பதில் சொல்லிடுவானோ என்று நினைத்து கார்த்தி உடனே அவனைக் கண்களால் மிரட்டினாள். அந்த பாவனை இன்னுமே அவனுக்குப் பிடித்தது.

“என்னடா?” என்று கவினும் அருகே வந்து கேட்க,

“ஒன்னுமில்லடா” என்று இருவரிடமும் சொன்னவன், அவர்கள் நகரவும் காளிதாஸன், கார்த்தியிடம்,

“நான் சொல்லித்தான் நீ க்யூட்னு தெரியணுமா?” என்று கேட்டு விட கார்த்திக்கு அதிலும் கோபமே வந்தது.

“உங்களுக்கு சொல்ல விருப்பமில்லன்னா விடுங்க, இப்படி தத்துவம் பேசினா ஏற்கெனவே டயர்ட்ல இருக்க நான் ஸ்டேஜ்லயே தூங்கிடுவேன்” என்றாள் மிரட்டலாக.

“கண்ணா! நிஜமா நீ க்யூட்தான்” என்று காளிதாஸன் சிரிப்புடன் சொல்ல, இவள் பதில் பேசுவதற்குள் ஆளுங்கட்சி ஆட்கள் சிலர் வந்து விட அவர்களிடம் கைகூப்பி வணக்கம் சொன்னான். அவர்களைப் பார்க்கவும்,

“இவங்க அன்னிக்கு டிவில உங்களை ரொம்ப திட்டிட்டு  இப்படி சிரிச்சுப் பேசுறாங்க” என்று கார்த்தி கோபத்தில் சொல்ல,

“அரசியல்ல எல்லாம் சாதாரணம்” என்று கண் சிமிட்டினான்.

பதினொன்றரைக்கு எல்லாம் முடிந்து விட, இவர்கள் உண்டு முடித்து வர, புகைப்படக்கலைஞரை வைத்து ஜோடியாய் படம் பிடிக்கச் சொன்னான். காளிதாஸன், கார்த்தியின் தோளில் கைப் போட்டுக் கொள்ள, கார்த்தி இப்போது கொஞ்சம் தெளிந்து இருந்தாள். உணவு உள்ளே போயிருக்க, உறக்கம் வந்தாலும் கணவனின் நெருக்கத்தில் புது மயக்கம் உண்டானது.

புகைப்படக்காரர் இன்னும் நெருக்கமாய் நிற்க சொல்ல, காளிதாஸனுக்கு மற்றவர் முன் அப்படி நிற்க சங்கோஜமாய் இருக்க, கவின் உடனே,

“டேய் மச்சான்! எனக்குத்தான் நீ இதெல்லாம் பண்ணல, நான் அதெல்லாம் நினைக்காம, உனக்காக எவ்வளவு ஜோரா ஏற்பாடு பண்றேன். உன் கட்சிக்காரனை பிடிக்கற மாதிரி நிக்காம அவர் சொல்ற மாதிரி நில்லுடா” என்று அதட்டினான். காளிதாஸன் உடனே முறைத்தான்.

“தாஸேட்டா! நில்லு” என்று நித்தியும் சேர்ந்து சொல்ல கார்த்தி மறுக்காமல் நிற்க, அதுவே அவள் விருப்பம் சொல்ல, இடையில் கை வைத்து நிற்க, இருவருக்குள்ளும் புது புது உணர்வுகள் புலர்ந்தன.

காளிதாஸனுக்கு பெண்ணின் அருகாமை புது அனுபவம். அதை அனுபவிக்கும் இடம்தான் அவனுக்குப் பிடித்தமில்லை. மனைவியிடம் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்று அறிந்தவன்தான். ஆனால், இப்படி நாலு பேர் பார்க்க நிற்பது அவன் சங்கடமாய் உணர்ந்தான்.

“ஸர், இன்னும் நெருங்கி நில்லுங்க” என்று அந்த புகைப்படக்காரர் சொல்ல,

காளிதாஸனுக்கு அவர்கள் சொன்ன, ‘போஸ்’ எல்லாம் பிடிக்கவில்லை. அவன் விருப்பமின்மையைக் காட்டி நித்தியை முறைத்தான். அதற்குள் மகாதேவன் வந்தவர்,

“இன்னும் கிளம்பாம என்ன செய்றீங்க நீங்க? நித்தி மணி ஆச்சு” என்று மகளிடம் கத்த,

“ப்பா, போட்டோ எடுக்க வேண்டாமா?” என்று அவளும் கத்தினாள்.

“அதெல்லாம் அப்புறமா ஆள் வீட்டுக்கு வர சொல்லி எடுக்கலாம், மணி பன்னண்டு ஆகப் போகுது, டிரைவரை ரெடியா இருக்க சொல்லிட்டேன், நீங்க கிளம்புங்க” என்றார்.

நித்தியும், கவினும் இவர்களுடன் வருகிறேன் என்றதற்கு,

“மது அம்மாவோட வீட்ல தனியா இருப்பா, நீங்க வீட்டுக்குப் போங்க. நாங்க போய்க்கிறோம்” என்றான் காளிதாஸ்.

வாலி, அங்கே வரவேற்பு நடந்த இடத்தில் வேலையில் இருக்க, மகாதேவன் ஏற்பாடு செய்திருந்த டிரைவருடன் அவனின் வீடு சென்றான்.

காரில் போகும் போதே கார்த்தி இருந்த களைப்பில் உறங்கிப் போனாள். தள்ளாடி தள்ளாடி தூங்கியவளை தன் மேல் சாய்த்து நன்றாய் உறங்க வைத்தான் காளிதாஸன். வீடு வரவும், அவளை எழுப்பி உள்ளே அழைத்துப் போனான். காலையிலேயே ஆரத்தி எல்லாம் எடுத்திருக்க, இப்போது வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே.

அவன் அறைக்கு முன் சென்று நின்றவன், அங்கிருந்த ஃபிங்கர் ப்ரிண்ட் சென்ஸாரில் தன் ரேகையை வைக்க, அது திறந்து கொண்டது.

“நாளைக்கு உன் ஃபிங்கர் ப்ரிண்டும் ஏட் பண்ணிடலாம்” என்று சொல்லி அவன் உள்ளே போக, கார்த்திக்கு அப்படியே சாயலாம் என்று வந்தது.

உள்ளே சென்றதும் மெத்தையில் உட்கார்ந்து கொண்ட காளிதாஸன், “உனக்குத்தான் நிறைய ஜூஸ் கொடுத்தேன், முதல்ல நீ வாஷ்ரூம் போய்ட்டு வா கார்த்தி. உன்னோட டிரஸ் நித்தி நேத்து இங்க கொண்டு வந்து வச்சிட்டா, வேணும்ன்றதை எடுத்துக்கோ” என்று வார்ட் ரோபைக் காட்டினான்.

“டிரஸ் சேஞ்ச் பண்ணணும்” என்று அவனிடம் சொல்ல,

“பாத்ரூம் சைட்ல டோர் இருக்கு, அதான் டிரஸிங் ரூம்” என்று சொல்ல, இவள் அதனுள் புகுந்துக் கொண்டாள். அவள் மேக்ஸீ ஒன்றுக்கு மாறி வர, காளிதாஸன் ஒரு க்ளாஸில் பாலுடன் நின்றான்.

“டயர்டா இருப்ப, குடிச்சா நல்லா இருக்கும்” என்று சொல்லி நீட்ட, கார்த்திக்கு அவனின் அக்கறை புரிந்தாலும், இதெல்லாம் நான் செய்யணும் என்று நினைத்தவளுக்கு சிரிப்பு வர மெல்ல சிரித்தாள்.

“நீ என்ன நினைச்சு சிரிச்சன்னு தெரியுது எனக்கு. குடி” என்று சொல்லி அவன் குளியலறைக்குள் புகுந்து டீஷர்ட், ஷார்ட்ஸுக்கு மாறி வந்தான்.

“பரவாயில்லையே டிரஸ்ஸீங்க்ல எல்லாம் பாஸ் மாடர்ன்தான்” என்று மனத்தில் நினைத்தவள், அவன் வரவும் அவனுக்கான பாலை நீட்ட அதனை வாங்கியவன்,

“அலெக்ஸா. ஸ்விட்ச் ஆன் ஏசி” என்று உத்தர விட்டான்.

“உங்களை மாதிரி ரூமும் ஸ்மார்ட்தான்” என்று கார்த்தி பாராட்ட,

“வெளியே வேலை முடிஞ்சு வந்தா எனக்கு செம டயர்டா இருக்கும், வீட்ல பேசவும் யாருமில்லை. எழுந்து எதையும் செய்ய தோனாது, அதான் இப்படி” என்றான்.

“அம்மாவை இங்கயே இருக்க சொல்லலாமில்ல” என்று கார்த்தி சொல்ல,

சின்ன சிரிப்புடன், “நீ வேணும்னா சொல்லிப் பாரேன்” என்றான்.

அவனின் பேச்சில் தெரிந்த நக்கல் கார்த்திக்குப் புரிய, “கிண்டல் பண்ணாம சொல்லுங்க” என்றாள்.

“அம்மா, அப்பாவோட வாழ்ந்த வீடு, அதை விட்டு வர மாட்டாங்க கண்ணா. அதை விட இது அரசியல்வாதி வீடு, அவங்களுக்குப் பிடிக்காது” என்றதும்,

“நீங்க ஒன்னும் மத்தவங்க மாதிரி கிடையாது. நீங்க நேர்மையான அரசியல்வாதிதானே?” என்று கணவனுக்காக, கார்த்தி வாதாட காளிதாஸன் வாய்விட்டு சிரித்தான்.

“நேர்மையும் அரசியலும்ன்றது ஒரு முரணான விஷயம். நான்  நேர்மையான மனுஷனா இருக்கலாம். ஆனா, அரசியல்வாதி கிடையாது. எனக்காக இல்லைனாலும் நான் இருக்க கட்சிக்காக என்னோட கொள்கைகளைத் தளர்த்திக்கத்தான் வேணும். நான் தப்பு செய்யாம இருக்கலாம். ஆனா, மத்தவங்க செய்ற தப்பை என்னால தடுக்க முடியாது. அப்போ அது எப்படி நேர்மையாகும்?” என்று கேட்டான்.

“அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காதா?”

“பிடிக்காதுதான். அப்பா, அரசியல் கட்சியில இருந்தாலும் அதிகாரம் தனக்குத் தேவையில்லன்னு நினைச்சார். கடைசி வரைக்கும் அப்படியே இருந்தார். அதனால, அம்மாவும் அப்படிதான். என்னைப் பொறுத்தவரை நீ நல்லது செய்யவும் ஒரு அதிகாரம் வேணும், உங்கிட்ட பணம் இருக்கலாம் செய்ற மனசு இருக்கலாம். ஆனா, அதை சரியானவங்களுக்குக் கொண்டு சேர்க்க அதிகாரம் வேணும். இது என்னோட கொள்கை, அம்மாவுக்கு இது பிடிக்காதுனாலும் தடுக்க மாட்டாங்க” என்றதும்,

“ஆஹ்ஹ்!” என்று காலைப் பிடித்துக் கொண்டு கத்தினாள் கார்த்தி.

“ஏய்! கண்ணா! என்னாச்சு?” என்று இவன், அவள் அருகே போய் நிற்க,

முகம் சுருக்கி வலி தாளாமல், “கால் இழுத்துக்கிச்சு, முடியல” என்றாள் காலை நீட்ட முடியாமல்.

“ரொம்ப நேரம் நின்ன இல்லையா? ஒன்னும் செய்யாது. காலை விடு” என்று சொல்லி அவன் காலை மெல்ல இழுக்க, வலியில் கத்தியவள் அவனின் தோளை நன்றாய்ப் பிடித்துக் கொண்டாள்.

“அய்யோ! இழுக்காதீங்க, எனக்கு வலிக்குது” என்றவளுக்குக் கண்ணீரே வந்து விட்டது.

கார்த்தி சொன்னதைக் கேட்காது காளிதாஸ் மெல்ல அவள் காலை நீட்ட செய்தவன் மெல்ல பிடித்து விட்டான். ஆரம்பத்தில் அதிக வலியெடுக்க, பின்பு அது கொஞ்சமாய்க் குறைந்தது.

“ரொம்ப முடியலன்னா சொல்லு, நித்திக்குக் கால் பண்றேன்” என்றதும்,

“உளறாம இருங்க” என்றாள் வலியிலும், அவன் வார்த்தையிலும்.

“என்ன உளறினேன்?”

“இன்னிக்கு இப்ப அவங்களுக்கு நம்ம கால் பண்ணினா என்ன நினைப்பாங்க? இப்போ வலி குறைஞ்சிருச்சு, காலை விடுங்க” என்று காலை இழுக்க அவன் விடவில்லை.

அவள் பேச்சில் சிரித்தவன், “வலி ஜாஸ்தியா இருக்கும் போது அதெல்லாம் பார்க்க கூடாது கண்ணா!” என்றான்.

“அலெக்ஸா ப்ளே மை ப்ளேலிஸ்ட்” என்று உத்தரவிட,

கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச” என்று மலேசியா வாசுதேவனின் குரலில் பாடல் ஒலிக்க கார்த்திக்கு ஒரு நொடி தலையே சுற்றியது.

✅ End of Episode 16
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Mrs Beena loganathan Reader 1 week ago

கட்டி வெச்சுக்க எந்தன் அன்பு மனச....

கட்டி வெச்சுடேன் காளிதாசன் தாசேட்டா வை.....
❤️ 1 more...
Srichitra Reader 1 week ago

Nice 

❤️ 1 more...
Kavi Natarajan Reader 1 week ago

Nice 💞💞💞💞💞

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top