Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 18

காளிதாஸன் 18

கார்த்தியும் காளிதாஸனும் காலை உணவு முடிக்க, கார்த்தி அவனிடம், “பூஜை ரூம் இங்க இல்லையா?” என்று வீட்டின் கீழ்த்தளத்தைச் சுற்றிப் பார்த்தபடி கேட்டாள்.

“அவசியப்படல, அதனால வைக்கல. நான் தெரிஞ்சவங்களை வர சொல்றேன். எங்க உனக்கு பூஜை ரூம் வேணுமோ வெச்சிக்கோ. ஆனா, அந்த டோர் தாண்டக் கூடாது, தட்ஸ் அஃபிஷியல்” என்றான்.

“ஒரு சாமி போட்டோ கூட இல்லையா?” என்று கார்த்தி மீண்டும் கேட்க, “ஹே! கடவுள் தூண், துரும்பு எல்லாத்திலேயும் இருக்கார்” என்று அவன் கிண்டலாய் சொன்னதை அவள் உண்மை என்றே நினைத்தாள்.

“எனக்கு ஆபிஸ் ரூம் வேணும், அதே நேரம் வீடு கூடவே இருந்தா நல்லா இருக்கும் தோனிச்சு. என்னோட ரூம், ஐ மீன் நம்ம ரூம் மட்டும்தான் என் சாய்ஸ்படி செட் அப் பண்ணினது, மத்தபடி வீட்ல இந்த ஹால் தவிர எல்லா இடமும் சும்மா இருக்கு. உனக்குப் பிடிச்சபடி நம்மை வீட்டை ரெடி பண்ணிக்கோ கண்ணா” என்றான்.

தம்பதிகளாக இருவரும் சென்று கடவுளை வணங்க, அவனின் தொகுதிக்கு உட்பட்ட கோவில் அது. ஆனாலும், அங்கு சென்றதே இல்லை அவன். கோவிலுக்கு என்று சொல்லி ஏதேனும் உதவிகள் கேட்டால் வேறு வழியின்றி செய்து கொடுப்பான். அவனை வரும்படி அழைத்தால் அன்று வேலை இருக்கிறது என சொல்லி மறுத்துவிட்டு வேறு ஆட்களை அனுப்பி வைப்பான்.

வாலி கோவில் அலுவலகத்தில் சென்று இவன் வந்திருப்பதை சொல்ல, எம்.எல்.ஏ என்றதும் அமோக கவனிப்புதான். காளிதாஸனுக்கும், கார்த்திக்கும் மாலை எல்லாம் கொடுத்து, ஸ்பெஷல் தரிசனம். கார்த்தி ஒவ்வொரு ப்ரகாரமாய் சுற்றிவர, இவனும் கூட நடந்தான். சாமி தரிசனம் முடியவும்,

“கவி, வீட்டுக்குப் போ வாலி” என்று காளிதாஸன் சொல்ல, கார்த்தி அவனிடம்,

“உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டாள்.

“எப்படி கண்டுபிடிச்ச?” என்று இவன் சிரிப்புடன் கேட்க,

“நீங்க எங்க சாமியைப் பார்த்தீங்க? என்னவோ எனக்குப் பாடிகார்ட் மாதிரி கூடவே வந்தீங்க, அதான் கேட்கிறேன்” என்றாள்.

“கடவுள் மேல நம்பிக்கை இல்லாம இல்லை, கடவுள்னு ஒருத்தர் இருக்கார்ன்ற நம்பிக்கையே எனக்கில்லை” என்ற கணவனை வித்தியாசமாகத்தான் பார்த்தாள் கார்த்தியாயினி. அவள் வீட்டில் எல்லோருக்குமே கடவுள் பக்தி உண்டு. அவளுக்குத் தெரிந்து யாரும் இவனைப்போல் நாத்திகவாதி இல்லை.

“ஏன் இப்படி சொல்றீங்க? கடவுள்தானே நம்மை படைச்சார்?” என்று கார்த்தி தாங்காமல் கேள்வி கேட்க,

“அவர் வந்து சொன்னாரா நான் படைச்சேனு?” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

“சும்மா விதாண்டாவாதம் செய்யாதீங்க, ஏன் சாமி கும்பிட மாட்டேங்கிறீங்க?”

“அதான் சொன்னேனே எனக்கு நம்பிக்கை இல்லை”

“அப்போ ஏன் கோவிலுக்கு வரமாட்டேன் சொல்லல நீங்க?”

“நான் கோவிலுக்கு வந்தது கடவுளுக்காக இல்லை கார்த்திக்காக, முதல்தடவ எங்கிட்ட கேட்கிற, எப்படி முடியாதுன்னு சொல்ல சொல்ற?” என்று காளிதாஸன் அவளைப் புன்னகையுடன் பார்க்க,

இவளோ குழப்பமாய்ப் பார்த்து, “அப்போ இனிமே வரமாட்டீங்க அப்படித்தானே?” என்று கேட்டாள்.

“உனக்கு நான் வரது சந்தோஷம்னா முடியும் போதெல்லாம் உனக்காக வருவேன். என்னோட நம்பிக்கை எனக்கு, உன்னோட நம்பிக்கையில நான் தலையிட மாட்டேன்” என்றான்.

“கடவுள் காத்து மாதிரி நம்மை சுத்தி இருப்பார், கடவுளைக் கண்ணாலப் பார்த்துதான் நம்புவேன்னு விவாதம் செஞ்சா, காத்தைப் பார்க்க முடியுமா? அப்படித்தான்” என்று கார்த்தி தன் கணவனுக்குக் கடவுள் பக்தி இல்லையே என்ற ஆற்றாமையில் பேச, 

“அப்போ வீட்லயே கும்பிட வேண்டியதுதானே? ஏன் இவ்வளவு தூரம் வரணும்?” என்றான் கொஞ்சம் நக்கலுடன்.

அவனின் நக்கலில் கடுப்பானவள், “அப்புறம் ஏன் நம்ம வீட்டு வெளியே குட்டி கோவில் மாதிரி வச்சிருக்கீங்களாம்?” என்றாள் முறைப்புடன்.

“அது மகாதேவன் மாமா பண்ணின வேலை. அந்த இடம் அவர் எனக்காகக் கொடுத்தது, அவரோட நம்பிக்கை அங்க சாமி சிலை இருந்தா நல்லா இருப்பேன்னு. அவருக்காக ஒத்துக்கிட்டேன்” என்றதும்,

“பாருங்க, கடவுள் உங்களை எவ்வளவு நல்ல நிலைமையில வச்சிருக்கார், அதுக்காகவாச்சும் நன்றியோட இருக்க வேண்டாமா?” என்று கார்த்தி கேட்டு விட, கை நீட்டி அவள் பேச்சை நிறுத்தியவன்,

“போதும் கார்த்தி! இவ்வளவு ஆர்கியுமெண்ட்ஸ் ஏன்? உன்னோட நம்பிக்கையை நான் குறை சொல்லல, அது போல என்னை விட்டுடு. எனக்கு நல்லது செஞ்சிட்டு மத்தவங்களுக்குக் கெடுதல் செய்ற கடவுள் எனக்கு வேண்டவே வேண்டாம்.”

“இதெல்லாம் முன்னாடியே பேசி உன் மூட் ஸ்பாயில் பண்ண வேண்டாம்னுதான் அமைதியா வந்தேன். நீயே என்னைப் பேச வைக்கிற” என்றான் சோர்வாக.

“அது அவங்க அவங்க செஞ்ச கர்மா, அதான்” என்று கார்த்தி மெல்ல சொல்ல,

அவளை இப்போது நேராய் முறைத்தவன், “என்ன கர்மா? குருமான்னுட்டு? பிஞ்சு குழந்தையில இருந்து கஷ்டம் தரார் உன்னோட கடவுள், அது என்ன பாவம் பண்ணிச்சு? அக்கிரமம் செய்ற ராஸ்கல் எல்லாம் நல்லா வாழறானுங்க, கற்பனைக்கே எட்டாத அளவு அநியாயம் நடக்குறதைக் கூட தடுக்க மாட்டேங்கிறார் அவர். இதுல பாதி சண்டை அவராலதான், கடவுளோட இடத்துக்காக எல்லா நாட்லயும் சண்டை, மதக்கலவரம் நடக்குது. அதைத் தடுக்கிறாரா உன்னோட கடவுள். நம்மை மட்டும் நல்லா வச்சா கடவுள் நல்லவரா கார்த்தி?” என்று கொஞ்சம் கோபமாய் பேசியவன்,

“என் கருத்தை முடிஞ்சா ஏத்துக்கோ, இல்லைன்னா விடு. மாத்த முயற்சி செய்யாத. இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்” என்றான் அழுத்தமாக.

அவன் சொல்வதை ஒரு மனம் ஏற்றாலும், இன்னொரு மனமோ,

“அய்யோ கடவுளே, இவர் தெரியாம பேசிட்டார், அவரை தண்டிச்சிடாத” என்று கடவுளிடம் அவசர வேண்டுதலையும் வைத்தது. அவளின் கையை இழுத்து தன் கைக்குள் பொத்தி வைத்தான் காளிதாஸன்.

தன் மேல் கோபம் கொண்டு பேசியவன் இப்படி கையைப் பிடித்திருக்க, மலர்ந்த முகத்துடன் கணவன் பக்கம் பார்த்தாள்.

அவளுக்குமே தோன்றியது, சில விஷயங்கள் தனிமனிதன் சார்ந்தவை. அதில் கணவன் மனைவியாகினும் தலையிட கூடாது! அவள் அப்பா, அண்ணன் எல்லாம் இருவேளை கடவுளை வணங்கி என்ன பயன்? இழிசெயல் செய்து இறைவனை வணங்கினால் ஆகிற்றா? என்று நினைத்துக் கொண்டாள்.

சில எல்லைகள் அழகானவை! அர்த்தமுள்ளவை!

அவன் பேச்சில் தெளிந்தாள் பெண்.

கவினின் வீட்டிற்குச் செல்ல, நித்தியும், கவியும் ஆர்ப்பாட்டமாய் வரவேற்றனர். சிவகாமி கூட வந்திருந்தார்.

“என்னடா பட்டையெல்லாம் போட்டிருக்க?” என்று கவி சிரிப்புடன் நண்பனைப் பார்த்துக் கேட்டான்.

“கோவில் போனோம் டா, அங்க பூசிவிட்டாங்க” என்றவன்,

“மது பேபி எங்க?” என்று கேட்டு அவர்கள் வாங்கி வந்த பையை கொடுத்தான்.

“அவ அக்கா வீட்டுக்குப் போயிருக்கா, இங்க நம்ம பெரியவங்க பேசவோம், அதான்” என்று சொல்ல காளிதாஸன் தந்த பையைப் பார்த்த நித்தி,

“டேய்! என்ன உன் ப்ரண்ட்க்கு பிடிச்ச மைசூர் பா மட்டும் இருக்கு, எனக்கு எங்க லட்டு?” என்று முறைத்தாள்.

“கடையில உனக்குப் பிடிச்ச லட்டு இல்லை நித்திமா, நான் நாளைக்கு வாங்கி அனுப்புறேன்” என்று அவளை சமாதானம் செய்ய, கார்த்தி மாமியாரிடம் நலம் விசாரித்தவள் இவர்களின் பேச்சை அமைதியாகப் பார்த்திருந்தாள்.

“என்ன கார்த்தி? டாக்டரம்மா பஞ்சத்துல அடிப்பட்ட பன்னிக்குட்டி மாதிரி ஸ்வீட் கேக்குறா பார்க்குறியாம்மா?” என்று கவி கிண்டல் செய்ய,

“தாஸ், உன்னாலதான். இவருக்குப் பிடிச்சதை வாங்கிட்டு வந்துட்டன்னு என்னை எப்படி சொல்றார் பாரு” என்று நித்தி அவளின் தாஸேட்டாவிடம் புகார் வாசித்தாள்.

“டேய்! பன்னிக்குட்டி லட்டு சாப்பிடுமா?” என்று காளிதாஸன் நண்பனிடம் சந்தேகம் கேட்கிறேன் என்று அவனும் நித்தியை சீண்டினான். இவர்களை முறைத்த நித்தி,

“மதிய சமையல் நான்தான்டா, இரண்டு பேருக்கும் ஞாபகம் இருக்கட்டும்” என்றவள் கார்த்தியைப் பார்த்து அசடு வழிந்தாள்.

உடனே சிவகாமி இவர்களைப் பார்த்தவர், “அது நித்திக்கு தாஸ் வாங்கிக் கொடுத்தா ஒரு சந்தோஷம்” என்றார்.

“இனிமே நானும் உங்களுக்குப் பிடிச்ச லட்டு வாங்கிட்டு வரேன் அண்ணி” என்று நித்தியைப் பார்த்து புன்னகையுடன் கார்த்தி சொல்ல,

“கேட்டுக்கோ, ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஓட்டுவீங்களே, இப்போ எனக்கும் கார்த்தி இருக்கா. இனி அவளே எனக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கித் தருவா” என்றாள்.

“நான் வேற கார்த்தி வேற இல்லையே?” என்று கேட்ட காளிதாஸனைக் கண்டு கவினும், நித்தியும் ஒரு நொடி அதிர்ச்சியாகி பின் உற்சாகத்துடன் அவனைக் கிண்டல் செய்ய, கார்த்திக்கு அவன் பதிலில் காதல் கூட, சிவகாமி நிறைவாக உணர்ந்தார்.

கவின் எல்லோரும் உண்ணும் போது, “சரி, நேத்துதான் போட்டோ வேண்டாம்னு அடம் பிடிச்ச வீட்லயே எடுப்பாங்க, எப்போ வர சொல்ல?” என்று கேட்க,

“என்ன போட்டோ?” என்று சிவகாமி விசாரித்தவர் பின் மகனிடம் கோபமாய், “என்ன பழக்கம் இது கண்ணா? உனக்கு விருப்பமில்லைனா கார்த்தியை ஒருவார்த்தைக் கேட்க மாட்டியா? அவளுக்கும் ஆசை இருக்கும்தானே? இன்னும் நானே ராஜா, நானே மந்திரினு இருக்காத” என்று மகனைக் கடிந்து கொண்டார்.

“நல்லா சொல்லுங்கம்மா, கார்த்திக்கும் ஆசை இருக்கும்தானே?” என்று கவியும் பேச, எல்லாரும் கணவனைப் பேசுவதைப் பொறுக்காத கார்த்தி,

“மா, அவர் எங்கிட்ட பேசிட்டார். இரண்டு பேருக்குமே வேண்டாம்னுதான் முடிவு பண்ணினோம். எனக்கும் அதுல இஷ்டமில்லை” என்று சொல்ல, மற்றவர்கள் நம்பாமல் பார்க்க உற்றவனின் கண்ணுக்கோ கவிதையாய்த் தெரிந்தாள் கார்த்தி.

“சரி, அது போகட்டும், விடுங்க. உங்களுக்கு எங்க ஹனிமூன் போகணும் சொல்லுங்க, நான் டிக்கெட் போடுறேன்” என்று கவின் கேட்க,

“எதுக்கு டா நீ அதெல்லாம் செய்ற?” என்று காளிதாஸன் நண்பனைப் பார்க்க,

“ஹேய் நித்தி, என்ன பேசுறான் இவன். இவந்தானே நமக்கு எல்லாம் செஞ்சான். நான் செய்யக் கூடாதா?” என்று கவினும் கோபம் கொண்டான்.

“அப்படி சொல்லல பக்கி நான்” என்று காளிதாஸும் கோபம் கொள்ள, கார்த்தி கணவனின் முகம் பார்த்தவள்,

கவினிடம், “இப்போ நாங்க ஒன்னும் ப்ளான் பண்ணலண்ணா, போகும் போது கண்டிப்பா உங்ககிட்ட சொல்றோம். நீங்களே எங்களுக்கு டிக்கெட் போடுங்க” என்றாள் புன்னகையுடன்.

✅ End of Episode 18
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Mrs Beena loganathan Reader 1 week ago

கடவுள் நம்பிக்கை

கருத்து அற்புதம்....
கண்ணுக்குத் தெரியாத காரணமாய் இருந்தாலும், காற்றைப் போல சுவாசத்தில் 
கலந்திருப்பது 
கடவுளின் இருப்பு!

காணும் உலகம் கடந்து, காணாத சக்தியை நம்புவது கார்த்தியின் நம்பிக்கை
கருத்தை திணிக்காமல்
கடந்து செல்வது 
காளிதாஸ் அடி போலி....

❤️ 2 more...
Kavi Natarajan Reader 1 week ago

💞💞💞💞💞💞

Srichitra Reader 1 week ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top