Episode 22
காளிதாஸனின் கையணைப்புக்குள் இருந்து கார்த்தியால் வெளிவர முடியவில்லை.
“என்னை, என்ன செஞ்ச கண்ணா?” என்றான் காளிதாஸன், அவள் கன்னத்தில் கைவிரல் கொண்டு வருடியவாறே.
“நீங்கதான் என்னைக் கண்ணா, கண்ணா சொல்லி கண்ணன் வெண்ணெய்த் திருடுற மாதிரி என்னைத் திருடிட்டீங்க” என்றாள் கார்த்தி, அவன் கைவிரலைத் தன் கன்னத்தில் அழுத்திக் கொண்டு.
“என்னது திருடுனேனா? நீதான் காளிதாஸ்ன்னு சொல்லி சொல்லி என்னை என்னவோ பண்ணீட்ட…” என்ற காளிதாஸனுக்கு இரவெல்லாம் அவள், அவன் காதில் காதலாய் சொன்ன அவன் பெயர் பிடித்தது.
“காளிதாஸ்!” என்று கார்த்தி அவன் பெயரைக் கவிதையாக்கிட, அவளில் கவிதை இயற்றினான் கவிஞனாக கணவன்!
அவன் அப்படி சொல்ல மீண்டும் வேண்டுமென்றே கார்த்தி, அவன் காதில் காதலாய் அவன் பெயர் உச்சரிக்க, இவன் அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான்.
“உன்னை விடவே முடியல கண்ணா” உருக்கமாய் சொன்னான் அவளில் உருகியவனாக.
“விடாதீங்க” என்று கார்த்தியின் கரங்கள் கணவனை அணைத்துக் கொள்ள,
இதழ்களோ, “அது என்ன கண்ணா?” என்று கண்ணில் கேள்வியுடன் கேட்டாள் கார்த்தி.
“ம்ம், அம்மா என்னை அப்படி சொல்லுவாங்க. அம்மாவுக்கு நான் ஸ்பெஷல், எனக்கு நீ ஸ்பெஷல்! அதான்” என்று காளிதாஸன் பதில் சொல்ல, கார்த்தி புன்னகையுடன் அவன் கன்னத்துடன் கன்னம் இழைந்தாள். வாலி போன் செய்ய இருவரும் ஒரு வழியாக எழுந்தனர்.
காளிதாஸன் குளித்து வருவதற்குள், கார்த்தி இன்னொரு அறையில் இருந்த பாத்ரூமில் குளித்து வந்தவள் கிச்சனில் அவனுக்காக சமைத்துக் கொண்டிருந்தாள்.
இவன் கீழே இறங்கி வரவும், “நான் சாப்பிட ரெடி பண்ணிட்டேன், டூ மினிட்ஸ். சாப்பிட்டு போங்க” என்று கத்தினாள்.
“ஷ்! கத்தாத கார்த்தி. வரேன்” என்று சொல்லிக் கொண்டே கிச்சன் சென்றான். அவனின் ஆஸ்தான வெள்ளை ஷர்ட், ஜீன்ஸுக்குப் பதிலாய் கறுப்பு பேண்ட்.
“கட்சி ஆபிஸ் போறீங்களா என்ன?” என்றாள், அவனின் உடையைப் பார்த்து.
“எஸ்! இன்னும் இரண்டு நாள்ல EC- ல டேட் சொல்லிடுவாங்க, கூட்டணி பேச்சுவார்த்தை ஓடுது. தொகுதி, பங்கீடுன்னு எல்லாம் அங்கேதான் நடக்குது.” என்றவன்,
“உன்னை யார் டயர்ட்ல சமைக்க சொன்னா கார்த்தி? வீட்ல பொருளும் இல்லை” திட்டினான் கணவன்.
“டயர்டா இருந்தாலும் உங்களுக்கு செய்றதுன்னா எனக்கு சந்தோஷம், ரொம்ப மிரட்டாதீங்க” என்றவள் ப்ரட்டை டோஸ்ட் செய்தாள்.
“ப்ரட் இருந்தது, ஸோ french toast” என்றவள், “ஃப்ரஸ்ட் டைம் உங்களுக்காக பண்ணியிருக்கேன், திட்டாம சாப்பிடுங்க” என்றாள் உத்தரவாக.
“உனக்கு எங்க?” என்று கேட்க,
“உங்களுக்காக ஸ்பெஷலா பண்ணினேன், இப்போ எனக்குப் பசிக்கல. நான் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுப்பேங்க” என்று சொல்ல,
“இதுதான் எனக்குப் பிடிக்காது” என்றவன், அவளுக்கு ஒரு ப்ரட் பீஸ் எடுத்து வைத்தான்.
“காளிதாஸ்! நான் ஆர்டர் பண்ணிப்பேன்” என்று கார்த்தி கடுப்பாய் சொல்ல,
“உன்னைப் பார்க்க வச்சிட்டு எல்லாம் எனக்கு சாப்பிட முடியாது. எப்படியும் அங்க கட்சி ஆபிஸ் போனதுமே டீ, ஸ்னாக்ஸ்னு இன்னிக்கு அமர்க்களமா இருக்கும். ஸோ நீ சாப்பிடு” என்று அவனும் மல்லுக்கட்ட இருவரும் உண்டு முடித்தனர்.
“ஓகே கண்ணா! நான் கிளம்புறேன். இன்னிக்கு முடிஞ்சா நம்ம ஆபிஸ் கூட போ கண்ணா. எனக்காக சாப்பிட வெயிட் பண்ணாத” என்றான்.
“ஒன்னு மறந்துடீங்க” என்று கார்த்தி அவனை நிறுத்த,
“என்ன கண்ணா மறந்தேன்?” என்று கேட்டான்.
“உங்க கண்ணாவை மறந்துட்டீங்க, ரொமாண்டிக் குட் மார்னிங் இல்லை. அலெக்ஸா இன்னிக்குப் பாடல” குறையாகவே சொன்னாள்.
கார்த்தியின் பேச்சில் வாய்விட்டு சிரித்தவன், “அது எல்லாம் ஒரு பொண்ணு மாத்திட்டா” என்றவன்,
“ஏன் கண்ணா, எனக்கு நீ ரொமாண்டிக் குட் மார்னிங் சொல்ல மாட்டியாடா?” என்றவனின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு குட் மார்னிங் சொன்னாள் கார்த்தியாயினி. பதிலுக்கு கணவனும் சொல்ல,
“இன்னிக்கு நைட் அலெக்ஸாவைப் பாட வைப்போம்” என்று கண்சிமிட்டி விட்டுப் போனான். அவன் சென்றதும் உணவு ஆர்டர் செய்தவள் அப்படியே சிறிது நேரம் உறங்கிப் போனாள்.
வீட்டின் தனிமை அதிகமாய் வாட்டியது. அம்மாவிற்கு எப்படி இருக்கிறதோ என்று வீட்டு நினைவும் வந்தது.
இங்கு இருந்தால் நிறைய யோசிப்போம் என்று உணர்ந்தவள் அவர்கள் அலுவலகம் சென்றாள், மாலை போல் வீடு வந்தவள் பூஜை அறை அமைப்பதற்கு எல்லாம் சொல்லி, இரவு உணவு செய்து விட்டு காளிதாஸனுக்காகக் காத்திருந்தாள். அவன் வரும் போது மணி பதினொன்று.
“குளிச்சிட்டு வரேன்” என்று சொல்லி அவன் மாடியேறினான். அவன் வரும் போது கார்த்தி, டைனிங் டேபிளில் சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.
காளிதாஸுக்குத் தட்டில் சப்பாத்தி வைத்து, மஷ்ரூம் மசாலா பறிமாறியவள் தனக்கும் ஒரு தட்டில் சப்பாத்தி வைக்க, அதைப் பார்த்த காளிதாஸின் கண்கள் சுருங்கின.
“நீ இன்னும் சாப்பிடலையா?” என்று அவன் கேட்க,
“உங்க கூட சேர்ந்து சாப்பிடலாம்னு வெயிட் பண்ணினேன்” என்றதும் சப்பாத்தியில் கைவைக்காமல் மனைவியை முறைத்தான் காளிதாஸன்.
“காலையில போகும்போதே உங்கிட்ட சொல்லிட்டுப் போனேன், வெயிட் செய்யாதன்னு”
“நான் செய்ய மாட்டேன்னு உங்ககிட்ட சொல்லலயே?” என்று ராகமாய் இழுக்க, அவன் இன்னும் முறைத்தான்.
“குழந்தை இல்லை கார்த்தி நீ, உன் ஹெல்த் நீதான் பார்க்கணும். சாப்பிடுறதுக்கு எல்லாம் நீ வெயிட் செய்யணும் கிடையாது, இனி கூடாது! அதை நான் எதிர்ப்பார்க்க மாட்டேன். நீயும் எதிர்ப்பார்க்காத!” என்றான் அழுத்தமாக.
“வீட்ல இருக்கறது இரண்டு பேர், ஒன்னா சாப்பிட ஆசைப்பட்டா தப்பா?” கார்த்தி ஏக்கமுடன் கேட்க, அப்போதும் தலைவன் தணியவில்லை. அவன் பேச்சில் உறுதியாக நின்றான்.
“தப்புதான்! யார் ஆரம்பிச்சுவிட்டா இதெல்லாம்? பசிச்சா சாப்பிடணும். ஓகே, என்னோட சாப்பிட ஆசைன்னா முன்னாடியே சாப்பிட்டு இப்போ கொஞ்சம் சாப்பிடலாம். இப்படி பதினொரு மணி வரை பட்டினி கிடக்கக் கூடாது” என்றவனிடம் பேச முடியாதென புரிந்தவள்,
“பாஸ், பதினொரு மணி வரைக்கும் சாப்பிடல, இப்பவாச்சும் சாப்பிடலாம் ப்ளீஸ். கோபம் வேண்டாமே, காலையில இருந்து கார்த்தி உங்களை ரொம்ப மிஸ் பண்ணினா, இப்பவும் ஏன் சண்டை போடணும்?” என்று கார்த்தி கேட்க, அவளும் இன்னும் சாப்பிடவில்லை என்பதால் அமைதியானான்.
“சரி கண்ணா! சாப்பிடு” என்று சொல்லி அவனே மனைவிக்கு ஊட்டிவிட, அவளோ ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.
“திட்டிட்டு ஊட்டிலாம் விடுறீங்க, நீங்களும் சாப்பிடலதானே. ப்ரஸ்ட் சாப்பிடுங்க” என்றாள் கார்த்தி கணவன் கொடுத்ததை மென்று கொண்டே.
“திட்டலனாலும் ஊட்டி விட்டிருப்பேன். என் அப்பா வரதுக்கு முன்னாடியே நான் சாப்பிட்டிடுவேன். ஆனா, அவர் வரப்போ அவரோட உட்கார்ந்து கதைப் பேசிட்டு அவர் ஊட்டி விடும்போது அது ரொம்ப நல்லாயிருக்கும்” என்றான் அப்பாவின் நினைவில் மூழ்கியவனாக. அவன் அப்பாவின் மறைவுக்குத் தன் அப்பா காரணம் என்பது நினைவில் வர உள்ளே மறுகினாலும் வெளியே கார்த்தி காட்டிக் கொள்ளவில்லை.
“அப்போ, அம்மா ஊட்டி விட மாட்டாங்களா?” என்று கார்த்தி அவளின் தட்டில் இருந்த சாப்பாத்தியைக் கணவனுக்கு ஊட்டிவிட சிரித்தபடி வாங்கிக் கொண்டவன்,
“அம்மாவுக்கு அப்பா கொடுப்பார். எனக்கு சின்ன வயசுல ஊட்டி விடுவாங்க, பெருசானதும் இல்லை. அப்பா அவர் இருந்தவரைக்கும் இந்த பழக்கம் மாறல. எவ்வளவு சாப்பிட்டாலும் அவர் எனக்கு ஊட்டிவிட்டு ஒரு வாய் சாப்பிடாத்தான் நைட்ல எனக்கு சாப்பிட்ட ஃபீலே இருக்கும். அதைவிட அப்பா எப்பவும் வீட்ல இருக்க மாட்டாங்க. அவர் போராட்டம், கூட்டம்னு போயிடுவார், லேபர் யுனியன்ல இருந்தாங்க. ஸோ, அவர் இருக்க நேரம் எனக்கு அவரோட பேசிட்டு இருக்க ரொம்ப பிடிக்கும்”
“அம்மாவும் நானும் கூட பேசிட்டு சாப்பிடுவோம்தான். ஆனா, ஊட்டி விடுறது இல்லை. இப்போ என்னவோ உன்னைப் பார்க்கவும் அப்பா ஞாபகம். நான், அப்பாவுக்காக வெயிட் பண்ற மாதிரி நீ எனக்காக வெயிட் பண்றடா கண்ணா. இனி நீ முன்னாடியே சாப்பிட்டுடு, நான் வரும் போது ஊட்டி விடுறேன். அதை விட்டு இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்கறது நல்லதில்லை” என்றான் காளிதாஸன்.
“அட்வைஸ் எல்லாம் கார்த்திக்குத்தான், காளிதாஸுக்கு இல்லை” என்று கார்த்தி முணுமுணுக்க,
“கிரேஸி!” என்று அருகே இருந்தவளின் கன்னம் கிள்ளியவன்,
“எவ்வளவு கோபம் உனக்கு?” என்று கேட்டவன், “நான் எட்டு மணிக்கு ஜூஸ் குடிச்சேன், ஈவினிங் சாலட் சாப்பிட்டேன். என்னோட ஹெல்த் எப்பவும் நான் பார்த்துப்பேன் கார்த்தி, நீ வீட்ல சமைச்சிட்டேன் மெசெஜ் அனுப்பவும்தான் நான் சாப்பிடாம இருந்தேன். இல்லைன்னா நைட் அங்க எங்களுக்கு சாப்பாடு வந்தது” என்றான் காளிதாஸன்.
அவன் சொல்வது புரிந்தவள், “இனிமே இப்படி செய்ய மாட்டேன்ங்க” என்றதும்,
“தட்ஸ் குட்! நல்லா சமைக்கிற நீ” என்று பாராட்ட, “தேங்க்ஸ்” என்று சொல்லி புன்னகைத்தாள்.
“நீங்க எந்த தொகுதின்னு முடிவு பண்ணியாச்சா?” என்று கார்த்தி கணவனைக் குறித்து ஆர்வமாய்க் கேட்க,
“நான் இப்ப இருக்க தொகுதிதான் கேட்டுருக்கேன். எதிர்க்கட்சியா இருந்து அவங்களுக்குப் பெருசா எதுவும் செய்ய முடியல. நமக்கு இருக்க பவர்ஸ் கூட முழுசா யூஸ் பண்ண விட மாட்டாங்க. நம்ம நல்லது செஞ்சா கூட அதை தடுக்கப் பார்ப்பாங்க ஆளுங்கட்சி. ஆனாலும், என்னை நம்பி வோட் பண்ணின மக்கள் அவங்க. அதனால நான் பழைய தொகுதிதான் வேணும்னு உறுதியா சொல்லியிருக்கேன், பார்ப்போம்” என்றான்.
“என்னோட வோட்டர் ஐடி எல்லாம் எங்கிட்ட இல்லையே, நான் எப்படி உங்களுக்கு வோட் போடுறது? எனக்கு எதாவது செஞ்சு இங்க மாத்திக் கொடுங்க” என்று கார்த்தி கேட்க காளிதாஸன் சிரித்தபடி,
“நம்ம வீடு என் தொகுதியில வராது கண்ணா, இது வேற தொகுதியில வரும்” என்றான்.
“நீங்க எந்த தொகுதியில நிப்பீங்க சொல்லுங்க, அங்க வோட் போடுற மாதிரி ஏற்பாடு செய்யுங்க” என்று சொல்ல,
“ஹேய் கண்ணா! அப்படியெல்லாம் செய்ய முடியாது. உனக்கு இந்த தொகுதியில நான் வோட் செய்ய ஏற்பாடு பண்றேன்” என்றவன் கொஞ்சம் யோசனையுடன்,
“ஆமா, என்ன எப்பவும் எனக்கே வோட் போட்ட மாதிரி இப்ப இவ்வளவு ஆசைப்படுற? ஆளுங்கட்சி எப்போ எதிர்க்கட்சிக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பிச்சது?” என்று மனத்தில் இருந்ததைக் கேட்டு விட்டான்.
“இனிமே ஆளுங்கட்சி எதிர்க்கட்சி எல்லாம் இல்லை. நான், உங்க கட்சி” என்றாள் சிரித்துக் கொண்டே.
காளிதாஸன் உடனே, “அப்போ இது வரைக்கும்?” என்று கேள்வியாய் நிறுத்த,
ஒரு தயக்கத்துடனே, “நான் எப்பவும் அப்பாவுக்குத்தான் வோட் போடுவேன். இல்ல, அவர் சொல்றவங்களுக்குத்தான் போட்டே பழகிட்டேன்” என்றவளின் பேச்சில் குற்றம் செய்த தொனி.
“அப்பா சொல்றதை மத்த விஷயத்துல கேட்கிறது சரி. ஆனா, வோட் போடுறது கூட?..” காளிதாஸனால் நம்ப முடியவில்லை.
இப்போது பேசக் கூட முடியவில்லை கார்த்தியால். உள்ளே அழுத்தியது, எத்தனை மடத்தனமாக எல்லாவற்றிற்கும் அப்பாவை நம்பினாள். அவர் பேச்சின்படி நடந்தாள். கோபமும் இயலாமையும் ஒன்றாய் சேர்ந்த உணர்வில் அமைதியாகி விட்டாள்.
அவளின் அமைதியில், “கண்ணா! நான் சும்மா கேட்டேன். உன்னை குறை சொல்லணுமில்லை, ஓட்டுரிமைன்றது தனிமனிஷன் சம்மந்தப்பட்டதில்லையா? நீ டென்ஷன் ஆகாதடா” என்று காளிதாஸன் சொல்லிவிட, அதுவும் கார்த்திக்கு உறுத்தலைத் தர,
“இல்லைங்க. நான் ஏன் இப்படி இருந்தேன் தெரியல. படிச்சு கம்பெனி பார்த்தாலும், நிறைய விஷயத்துல அப்பா பேச்சை மீறினதே இல்லை. என்னோட அப்பா, அவர் ஜெயிக்கணும் இல்லை அவர் கட்சி ஜெயிக்கணும் தோனுமே தவிர, அவங்களாம் நல்லவங்களா, கெட்டவங்களா ஆராயத் தோனினது இல்லை. சின்ன பசங்களா இருக்கும்போது நமக்கு எப்பவும் நம்ம அப்பா, அம்மா தானே பெஸ்டா இருக்கணும், ஜெயிக்கணும் தோனும்? அப்படி பழகிடுச்சுங்க. ஆனா, அவங்க பெஸ்டாவே இல்லை. இத்தனை வருஷம் நான் முட்டாளாவே இருந்துட்டேன்”
பேசிக் கொண்டே வந்தவளின் குரல் தேய்ந்து ஒலிக்க, கண்ணை மூடியவளின் கண்களை மீறி கார்த்தியின் கன்னம் நனைத்தது கண்ணீர்.
சில காயங்கள் வலியாக இல்லாவிடினும் வடுவாகிடுமே. அப்படித்தான்! இன்னும் வடுவாகாமல் வலியாகவே வஞ்சியை வதைத்தது. இப்போது நினைக்க தன் மீதே அவ்வளவு கோபம் கார்த்திக்கு. எப்படி யோசிக்காமல் அப்பா சொன்னதை செய்தேன் என.
“கண்ணா! விடு. நான் ஏதோ ஒரு ஆர்வத்துல கேட்டேன். ஆனா, இனிமே யார் நல்லது செய்வாங்கன்னு நினைக்கிறியோ, எந்த வேட்பாளருக்குத் தகுதி இருக்கோ, அவங்களுக்கு வோட் பண்ணு. நான் இருக்க கட்சியில எல்லாம் நல்லவங்கன்னும் கிடையாது, அப்போ வேற வேட்பாளர் பரவாயில்லை தோனினா அவங்களுக்குப் போடு”
“நான், உன் ஹஸ்பண்ட். ஆனா, அதுக்காக நான் செய்ற விஷயத்தை நீ ஏத்துக்கணும், ஒத்துக்கணும் கிடையாது. நம்ம ஃபேமிலிக்காகன்னா ஓகே. மத்த எந்த விஷயத்துக்கும் நீ யோசி, உனக்கு சரின்னா செய் கார்த்தி. அதான் எனக்கு சந்தோஷம், உனக்கும் சந்தோஷம் தரும்” என்ற காளிதாஸ் ஆறுதலாய் அவளை அணைத்துக் கொண்டான். கார்த்தியின் அழுகை நின்று, அவனின் அணைப்பில் ஆசுவாசமாக உணர்ந்தாள்.
காளிதாஸனுடனான தருணத்தை இழக்க விரும்பாதவள் மனத்தில் இருந்த மறுகலை எல்லாம் ஒதுக்கி வைத்தாள். அகத்தில் அவனை மட்டுமே நிறைத்தாள்.
“யாரோ நைட் அலெக்ஸா பாடும் சொன்னாங்க?” என்று காளிதாஸின் தோளில் இருந்து முகத்தைத் தூக்கி அவன் முகம் பார்த்து கார்த்தி கேட்க,
“ம்ம், என்ன பாட்டு போடலாம்?” என்று காளிதாஸன் யோசிக்க,
“நான் சொல்லவா?” என்று கார்த்தி கேட்க, அவன் தலையசைக்க, அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு இதழ்களும், இதயமும் ஒன்றாய் விரிந்தது.
‘காளிதாஸன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்’
அலெக்ஸாவின் வாயிலாய்ப் பாடல் ஒலிக்க, பாவை பாடலில் இசை உள்ளும், புறமும் காளிதாஸனுக்கு இசைத்தது.
“ஜெயச்சந்திரன் வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல பாட்டு” என்று சொல்லி காளிதாஸன் மனைவியைப் பார்க்க, கார்த்தியோ முறைத்தபடி அவன் அணைப்பு விட்டு எழுந்தாள்.
“அடியே அலெக்ஸா! வாயை மூடு” என்று கத்தினாள்.
“என்ன கண்ணா?” என்று காளிதாஸன் கேட்க, முறைத்தபடியே மாடியேறினாள்.
“இந்த பாட்டு எப்பவோ கேட்டிருக்கேன், உங்க பெயர் வரதால ஆசையாய்த் தேடி கண்டுபிடிச்சுப் போட்டா.. அதை நோட்டீஸ் பண்ணாம..” என்று பல்லைக் கடித்தாள்.
“கண்ணா?!” என்று காளிதாஸனின் சிரிப்பு அறை முழுக்க எதிரொலிக்க, கூடவே ஜெயச்சந்திரனின் குரலும். மாடியேறிய மனைவியைக் கைகளில் தூக்கியவன்,
“நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்..னு பாட்டைப் போட்டு நெருங்காம போகலாமா?” என்றான் ரசிகனாக. கார்த்தி உடனே,
“போங்க, போங்க. போய் உங்க அலெக்ஸா பாடுறதைக் கேளுங்க” என்றாள் கடுப்பாக.
“அதைக் கேட்டதாலதானே இப்படி” என்றவன் அவளுடன், அறைக்குள் சென்றான். கார்த்தியை மெத்தையில் விட்டவன் அவள் முகத்தை வருடி,
“உண்மையா காளிதாஸன் கவிதைதான் கண்ணா நீ” என்று சொல்லி மனைவியின் முகத்தை மையலாய்ப் பார்க்க, அரங்கேறியது அனுராக கவிதை அங்கே!
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
✅ End of Episode 22
உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் பவி மா. மிகவும் அருமை.
நன்றி மா ❤️