Episode 23
மலரின் மனம் உற்சாகமாய் இருந்தது, இதுதான் முதல்முறை திருமணமான பின் கணவனுடன் அவள் தாய்வீடு செல்கிறாள். கூடவே சாத்வீகாவையும் அழைத்துப் போகும் பெருமிதம். அவளின் அப்பா மகிழ்ந்து போவார், சாத்வீ பிறந்தபோது அவளைக் காண அவர் தவித்த தவிப்பு இன்னும் மறக்கவில்லை அவளுக்கு. அந்த மகிழ்வில் அவள் இருக்க, ஜனா வந்து அணைத்துக் கொண்டான்.
ஜனாவின் அணைப்பில் அவளால் இணக்கமாய் இருக்க முடியவில்லை. நெஞ்சினிலே நெருடல்!
அது அவளின் உடல்மொழியில் தெரியவும் ஜனாவிற்கு அவள் புதிதாய்த் தெரிந்தாள். மலர் எப்போதும் அவனின் அணைப்பில் இப்படி உணர்ந்த நினைவு கொஞ்சமும் அவனிடமில்லை. அவளை உணர்ந்தவன் விலகி நின்று,
“என்ன மலரே போகலாமா?” என்று சிரிப்புடன் கேட்டான்.
“போகலாமே, டென் மினிட்ஸ்” என்றபடி அவள் தலைவார
“எப்படியோ சாத்வீயை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறதுக்கு பெர்மிஷன் வாங்கிட்ட” என்று பாராட்டினான்.
“பெர்மிஷன் வாங்குறாங்களா? அய்யோடா…! அதெல்லாம் அவனுக்கு அமிழ்தா மேல என்ன உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கு சாத்வீ மேல இருக்கு. அன்னிக்கு எல்லாரும் சும்மாதானே இருந்தீங்க, இன்னிக்கு அவன் விட மாட்டேன் சொல்லியிருந்தா சிக்ஸ்டி ஃபைவ் ஆக்கியிருப்பேன் உங்க ப்ரண்டை” என்று கண்சிமிட்டினாள்.
“ஓகே ஓகே, சீக்கிரம் ரெடியாகி வா” என்றவன் கீழே போக பிரசன்னா அவனிடம் அவனின் கார் சாவியை நீட்டினான்.
“என் கார் எங்கடா?” என்று ஜனா கேட்க,
“அதைதான் அப்பளமாக்கிட்டியே டா, சர்வீஸ் விட்டிருக்கு. அப்புறம் அதை சேல் பண்ணிடலாம் டிசைட் பண்ணிட்டேன், நீ புது கார் வாங்கு. எத்தனை நாள் பழைய கார் வச்சிருப்ப? இப்போ என் கார் எடுத்துட்டுப் போ” என்று சொல்ல,
“அந்த கார்ல மலர் என்னோட நிறைய டிராவல் பண்ணிருக்கா” என்றான் ஜனா.
“அதான் மலர் வந்தாச்சே, புது கார் வாங்கிக்கோ. மாமா உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆனபோதே சொன்னார். பார்த்துப் போய்ட்டு வாங்க” என்றவன் வேலையைக் கவனிக்க,
“ஏன் டா உனக்குதான் உன் அப்பா மேல கோவமில்லன்னு நேத்து சொன்னியே, இப்போ வந்தா என்ன?” என்று எல்லார் மனத்திலும் இருந்த கேள்வியை ஜனார்த்தன் கேட்டான்.
“கொஞ்சம் டைம் வேணும் ஜனா, இஷ்டத்துக்கு அவரை ஹர்ட் பண்ணிட்டேன். உடனே பேச முடியல” என்று சொல்ல,
“இப்போ மட்டும் அவர் மேல தப்பில்லன்னு எப்படி தெரிஞ்சது உனக்கு?” என்று ஜனா கேட்கவும் மனத்தில் சுருக்கென ஒரு உணர்வு. மனத்திலுள்ளதை மறையாமல் நண்பனாகப் பழகியவனிடம் கூட பகிரமுடியவில்லை.
“தாத்தா பேசினதை வச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன், அவர் மேல தப்பில்ல. அது மட்டும் உண்மை” என்றான் இறுக்கமான குரலில். அவனின் உணர்வுகள் ஜனாவிற்குப் புரிந்தது, இத்தனை நாள் வெறுத்த உறவு, உடனே ஏற்கமுடியவில்லை. ஏற்க நினைத்தாலும் இயல்பாய் ஒட்ட முடியாமல் ஒரு உணர்வு தடுக்கிறது. அது புரிந்தவன் பிரசன்னாவின் தோள்சுற்றி,
“சீக்கிரமே சரியாகிடும். கூல் மச்சான்” என்று சொன்னான். அவனுக்குமே அதே உணர்வுதான், என்ன அவன் உணர்ந்தது மலரிடம். அவள் மீது இன்னும் கோபம் நிறைய நிறைய இருந்தாலும் அதே நேரம் விலகவும் முடியவில்லை.
எல்லாரும் சேர்ந்து முரளிதரனின் வீட்டிற்குப் பயணப்பட்டார்கள். மலருக்குப் பல வருடங்கள் கழித்து கணவனுடன் ஒரு பயணம்! வீடு வரவும் மலருக்கு மனத்திலோ பெரும் திருப்தி. குழந்தையும் கணவனுமாக வீட்டிற்குள் அடியெடுத்துவைத்தவள்,
“சர்ப்ரைஸ்” என்று கத்த,
“அக்கா!” என்று கிருஷ்ணப்ரியா வந்து கட்டிக்கொள்ள, உற்சாக வரவேற்புதான். முரளிதரன் அறையில் உட்கார்ந்து பத்திரிக்கையில் பெயர் எழுதிக்கொண்டிருக்க, சாத்வீயை கையில் பிடித்துக்கொண்ட மலர்,
“அப்பா!” என்று அழைத்து சாத்வீயை முன்னே நிற்க வைக்க, முரளிக்கு நெஞ்சம் நெகிழ்ந்து போக, பேத்தியைக் கண்ணீருடன் பார்த்து இருந்தார்.
“தாத்தா கிட்ட போ சாத்வீ” என்று மலர் சொல்லவும்,
“தாத்தா” என்று அவரருகே போய் நின்றாள். சாத்வீகா அமிழ்தாவைப் போல் கிடையாது, குழந்தைப்பருவம் முதலே உறவுகள் சூழ வளர்ந்த குழந்தை. இதில் நேற்று முரளிதரனைப் பார்த்திருக்க, தயக்கமில்லாமல் தாத்தாவிடம் பேச,
குழந்தையின் கையைப் பிடித்தவர்
“எப்படிம்மா இருக்க?” என்று கேட்டார்.
“நல்லா இருக்கேன் தாத்தா? நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்கவும்,
“தாத்தா நல்லா இருக்கேன்டா ராஜாத்தி” என்றவர் மகளைப் பார்த்தார்.
“எப்படி டா அழைச்சிட்டு வந்த? பிரசன்னா வந்திருக்கானா?” என்றவர் ஒரு பரபரப்போடு எழுந்தார்.
“இல்லப்பா, நாங்க தான் இவளை அழைச்சிட்டு வந்தோம். ஜனா வந்திருக்கார்” என்று சொல்லவும் முரளிக்கு ஒரு நொடி மகன் வரவில்லை என்ற கவலை முகத்தில் தெரிய, உடனே அதனை மாற்றிக்கொண்டார்.
வெளியே வந்து ஜனாவிடம் நலம் விசாரித்தவர் சாத்வீயையும் அமிழ்தாவையும் அருகருகே உட்கார வைத்துப் பேச, வடிவு பாட்டி ஜனாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“உன்னைப் பார்க்க வந்திருப்பேன்ப்பா, அந்த ராங்கி ரங்கநாயகி இருக்கான்னு வரல, ஆமா என் பேரன் எப்படி இருக்கான்? அவனையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமில்ல?” என்று ஆசையுடன் கேட்க,
“நல்லா இருக்கான் ஆத்தா, சீக்கிரமே வருவான்” என்று புன்னகையுடன் சொல்ல, மலர் அவனை குறுகுறுவென பார்த்தாள்.
சாரதாவுக்கும் சாத்வீ வீட்டிற்கு வந்ததில் அவ்வளவு சந்தோஷம். மகளிடம்,
“சாத்வீ என்ன குடிப்பா மலர்?” என்று ஆர்வமாய்க் கேட்க,
“அவ பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் குடிப்பாம்மா” என்றாள்.
“ஜனா என்ன குடிப்பார்?” என்று மருமகனையும் விடாது அவர் கேட்டாலும் மலரின் மனத்திலே உறுத்தல்தான். யாருக்குமே நினைவில்லை, இதுதான் மலரும் ஜனாவும் ஒன்றாய் அவர்கள் வீட்டிற்கு வருவது முதல்முறையென!
என்னவோ சட்டென ஒரு ஒட்டாத தன்மை அவளையுமறியாமல் உருவானது. தங்கையின் திருமணத்திற்கு நடக்கும் வேலைகளைப் பார்க்கையில் ஒரு ஏக்கம். பொறாமை என்றில்லை, தானே தன்னிஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால் அதற்கான அங்கீகாரமோ மரியாதையோ கிட்டவில்லை என்று நினைத்தாள்.
அது உண்மை என்பது போலவே, முரளி பேத்திகளுடன் பேசியவர் ஜனாவிடம் நலம் கேட்டார். அதன்பின் பேச்சொன்றுமில்லை. அவன் தனியே ஒரு சோஃபாவில் உட்கார்ந்து இவர்கள் பேசுவதைக் கேட்டிருக்க, கிச்சனில் அம்மாவும், அப்பத்தாவும் இருக்க குழந்தைகளிடம் வந்தாள்.
“கிருஷ்ணா, நீ இவங்களை உள்ளே அழைச்சிட்டுப் போ” என்று தங்கையிடம் சொன்னவள் ஜனாவிற்கு சூடாய் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். அவன் குடித்துக்கொண்டிருக்கையில் போன் வர, வாசலுக்கு சென்று பேசினான். மலர் அப்பாவின் அருகே உட்கார்ந்தவள்,
“ஏன்ப்பா ஜனா கிட்ட சரியா பேச மாட்டேங்கிறீங்க?” என்றாள் கோபத்துடன்.
“இல்லையேடா நான் அவரை விசாரிச்சேனே” என்று முரளிதரன் சொல்ல,
“நேத்தே நீங்க அவர் ஹெல்த் பத்திக் கேட்டாச்சுப்பா, நேத்து கூட சரியா பேசல, சரி அவங்க வீட்ல உங்களுக்குக் கஷ்டமா இருக்குன்னு நினைச்சேன். இப்பவும் ஏன்ப்பா?” என்று வருந்தினாள் மலர். அவளைப் பொருத்தவரையில் ஜனாவை அவள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அடுத்தவர் ஒரு சொல் சொன்னாலும் தாங்க முடியாது.
மகளின் மனவருத்தம் முரளியையும் தாக்கிட,
“அது ஒரு அப்பாவுக்கு இருக்க ஈகோடா, என்னோட பொண்ணுக்கு என்னை விட அவன் முக்கியமா போய்ட்டானேன்னு கூட இருக்கலாம். இல்லை உங்க பொண்ணை உங்களை விட நல்லா பார்த்துப்பேன்னு சொன்னவன் என் பொண்ணை இத்தனை வருஷம் கண்டுக்காம இருந்த கோவமா கூட இருக்கலாம்” என்றார்.
சுதந்திர மலர் அவரின் செல்லமகள்! அவருக்குப் பிரசன்னா எல்லாரையும்விட முக்கியம்தான், ஆனால் அப்பா என்ற உணர்வை பிரசன்னா எப்போதும் முழுமையாய் அனுபவிக்க விட்டதில்லை. பிரசன்னாவினால் உண்டான காயம் யாவுக்கும் தளிராய் வந்தவள் சுதந்திர மலர்! அது மலருக்குமே தெரியும். அதனால்,
“அப்பா! என்னப்பா” என்றவளுக்கு விழிகளில் நீர் சேர, அவரின் தோள்சாய்ந்து கொண்டாள்.
“அப்பா நீங்கதான் எனக்கு எப்பவும் ப்ர்ஸ்ட்ப்பா, பட் ஜனா ரொம்ப நல்லவர்ப்பா” என்று சொல்ல,
“அந்த நல்லவன் ஏன் இத்தனை வருஷம் உன்னைக் கண்டுக்காம இருந்தானாம்?” என்றார் பட்டென்று.
“இந்த ஈகோவெல்லாம் மருமகன்கிட்ட மட்டும்தானாப்பா? உங்க மகன்கிட்ட கிடையாதா? அவனும்தானே உங்களை இத்தனை வருஷம் பார்க்கலை” என்று மலரும் பேச, உடனே தணிந்தார் தந்தை.
“அண்ணாடா சுதந்திரா” என்று மகளிடம் சொல்ல,
“உங்க பையனு வேணும்னா சொல்லிக்கோங்க, எனக்கு அவன் வருவோட ஹஸ்பண்ட் அவ்வளவுதான்” என்று மலர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே ஜனா உள்ளே வந்தான்.
அவன் காஃபியைப் பருகவும், மலரை சாரதா அழைக்க எழுந்துபோனாள். ஜனாவின் விழிகள் மனைவியைத் தொடர, அவள் சென்றதும் முரளியையே பார்த்தான். அவரிடம் எவ்வளவு சவாலாகப் பேசினான் திருமணத்திற்கு முன். மலர் அவளின் காதல் விஷயத்தை சொல்லிவிட, முரளிதரன் யாராக இருந்தாலும் ஒத்துக்கொள்வேன் என்றவர் ஜனா மட்டும் வேண்டவே வேண்டாம் என்றார் பிடிவாதமாக. ஒரு முறை அவனை சந்தித்துப் பேசியவர்,
“ஜனா நீ எவ்வளவு நல்ல பையனா இருந்தாலும் என்னோட பொண்ணுக்கு வேண்டாம், உங்க குடும்பத்தில யாரும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க” என்று அவர் ஆரம்பிக்கவுமே முடிக்கும்படியாகப் பேச ஜனார்த்தனுக்கு ஆளாளுக்கு அவனின் காதலை நிராகரிக்க கோபம் கூடியது.
“சும்மா என்னோட ஃபேமிலியை ரீசனா சொல்லாதீங்க அங்கிள், உங்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கலை, அதை சொல்லுங்க”
“ஜனா உன்னோட குடும்பத்துக்கும் எங்களுக்கும் செட் ஆகாதுப்பா புரிஞ்சிக்கோ, நீ வேண்டாம்னா உன்கிட்ட குறை இருக்குன்னு இல்ல” என்று முரளிதரன் பொறுமையாகவே பேசினார். அவரைப் பொறுத்தவரையில் ஜெயப்பிரகாஷத்தின் வீட்டில் சென்று என் பெண் கஷ்டப்பட வேண்டாம் என்பதே எண்ணமாய் இருந்தது.
“மலருக்கு என்னைப் பிடிச்சிருக்கு அங்கிள், அதைக் கன்சீடர் பண்ணுங்க” என்றவனிடம்
“எல்லாம் கன்சீடர் பண்ணித்தான்ப்பா சொல்றேன், என் பொண்ணுக்கு எது நல்லது கெட்டதுன்னு எனக்குத் தெரியும். நீ அவளுக்கு வேண்டாம்” என்றார் உறுதியாக.
“நீங்க என்ன சொன்னாலும் மலர்தான் என்னோட மனைவி, உங்களை விட என்னால மலரை நல்லா வச்சுக்க முடியும் அங்கிள். இதான் என்னோட முடிவு” என்றான் அவ்வளவு கர்வமாக.
இப்போது முரளிதரனைப் பார்க்கவும் தானாய் அந்த பேச்சு மனத்தில் ஓட, அவரைப் பார்க்கவே பெரும் தயக்கம். என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், மலர் இருக்குமிடம் தெரிந்தும் அவளைத் தேடாமல் இருந்த பிழை அவனுடையது அல்லவா?
‘கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசின?’ என்று அவர் கேட்பது போலவே இருக்க, அவனின் பார்வையில்,
“ஜனா! உனக்கு எதுவும் மறக்கலதானே?” என்று அந்த நேரம் பார்த்து முரளிதரன் கேட்க, அதிர்ச்சியில் குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேறியது.
“பார்த்து ஜனா” என்று அவர் கனிவாய் சொல்ல,
“மாமா..!” என்றான் அதிர்ச்சியுடன்.
அவனின் அதிர்ந்த பாவனையில் “ஆமாவா இல்லையா?” என்று அவர் விடாப்படியாகக் கேட்க,
“ப்ளீஸ் மலர் கிட்ட சொல்லிடாதீங்க” என்றதிலேயே முரளிக்கு உண்மை விளங்கியது.
✅ End of Episode 23
Very nice.