Episode 22
“அண்ணா, ப்ளீஸ் எனக்கு நீங்க இவரோட ரிலேஷன்னு தெரியாது” என்று சுதந்திர மலர் தன்னைப் புரிய வைக்க முயல, கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை பிரசன்னவாசன்.
அவனின் பார்வை பாவை அதுவரை கண்டிராத பாவம் அது! வெறுப்பின் மொத்தமாய் அவன் விழிகள். அப்போதுதான் கல்லூரி முடித்திருந்த சுதந்திர மலருக்கு அதையெல்லாம் தாங்கும் பக்குவமில்லை.
என்று பிரசன்னாவின் மாமன் மகன்தான் ஜனார்த்தன் என்று மலருக்குத் தெரிந்ததோ, அப்போதிலிருந்தே மனத்துக்குள் மறுகல்தான். அவனால் எதாவது சிக்கல் வரும் என்று சிந்தை முழுவதும் பயம்! ஜனார்த்தனிடம் சொல்ல அவனோ,
“நான் என்ன ஆசைப்பட்டாலும் எங்கப்பாவுக்கு முன்னாடி அதை எனக்கு செஞ்சுக் கொடுப்பான் பிரசன்னா, அத்தை மகன்றதைத் தாண்டி அவன் எனக்குக் க்ளோஸ் ப்ரண்ட். நீ பழைய விஷயம் நினைச்சு டென்ஷன் ஆகாத, அவன் நெக்ஸ்ட் மந்த் உங்க செமெஸ்டர் எக்ஸாம் முடியவும் வருவான். அப்போ பேசிக்கலாம். அதுவரைக்கும் வர்ணவி கிட்ட எதுவும் சொல்லிக்காத” என்று சொல்லியிருந்தான். அதுபோலவே பிரசன்னா வந்ததும் ஒன்றும் சொல்லாமல் மலரை சந்திக்க அழைத்து வந்திருந்தான் ஜனார்த்தன்.
மலர் அண்ணா என்றதுதான் போதும், வெகுண்டான் பிரசன்னா.
“ஷட் அப் டேமிட்! யாருக்கு யார் அண்ணா” என்று அந்த கடற்கரையில் நின்று கத்த மலருக்கு அகம் முகம் எல்லாம் கசங்கி கலங்கியது. கண்ணில் நீர் நிறைந்து போக, அதனுடன் ஜனாவைப் பார்க்க,
“டேய்! கொஞ்சம் அவ பேசுறதைக் கேளுடா, நிஜமா எங்களுக்குத் தெரியாதுடா அவ உன்னோட சிஸ்டர்னு” என்று பேசிய ஜனாவையும் விடவில்லை பிரசன்னா.
“ஜனா! ஸ்டாப் இட்! யார் யாருக்கு சிஸ்டர், ப்ளடி” என்று ஆத்திரத்துடன் மணல் தெறிக்க தன் ஷூவால் தரையை உதைத்தான்.
“இப்போ தெரிஞ்சிடுச்சுல, என்ன முடிவு பண்ணியிருக்க?” என்றான் கேள்வியாக. துளைக்கும் பார்வையுடன் ஜனாவைப் பார்க்க, அவனோ கண்ணீருடன் நின்ற மலரைப் பார்த்தான்.
“என்னால மலரை விட முடியாது பிரசன்னா, அவகிட்ட லவ் சொன்னது நான். வேண்டாம்னு சொன்னவளை ஒத்துக்க வச்சது நான், எனக்கு வாழ்க்கைன்னா அது மலர் கூட மட்டும்தான்” என்றான் உறுதியாக. அந்த உறுதியில் உள்ளம் பனியாய் உருகியது மலருக்கு. பிரசன்னாவுக்கோ இறுகியது.
“எப்படி ஜனா உன்னால இப்படி பேச முடியுது? எல்லாமே ப்ளான் ஜனா, இவ அப்பா சொத்தையெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணினதாலதான் அம்மா இறந்தாங்கடா, இப்பவும் இது இவங்க ப்ளானாதான் இருக்கும்” என்றான் தாத்தாவின் போதனையினால்.
“அப்படியே இருந்தாலும் அதுல இவ தப்பு ஒன்னுமில்ல, அத்தை இறந்ததுக்கு அவ அப்பா காரணம்னா இவ என்ன செய்வா அதுக்கு?” என்று கேட்ட ஜனாவை வெறுமையாகப் பார்த்தான் பிரசன்னா. அதுவரை விழிகளில் வெறுப்பினை மட்டும் தேக்கியிருந்தவன் இப்போது வலியுடன் நண்பனை பார்த்தான்.
அவன் பேசுவதற்குள் அப்பாவைப் பேசியது பொறுக்காது மலர்,
“ஜனா! என் அப்பா எந்த தப்பும் செய்யல, அதை முதல்ல் புரிஞ்சிக்கோங்க, என் அப்பா யாரோட சொத்துக்கும் ஆசைப்படுறவர் இல்லை” என்றபோது அவளின் துணிவும் துணிச்சலும் மீண்டிருக்க, அந்த நிமிர்வு இன்னும் பிரசன்னாவைத் தாக்கியது.
“பார்த்தியா நீ? இதான் இவங்க” என்றான் வெறுப்புடன்.
அதனையும் விட ஜனாவைப் பார்த்து,
“இந்த காதல் வந்தா அறிவெல்லாம் காத்தோட போயிடுமா ஜனா? என்னோட அம்மா இல்லாம நான் எவ்வளவு ஃபீல் பண்ணியிருக்கேன், இப்போ அதையெல்லாம் மறந்துட்டு இவளுக்காக நீ பேசுற?” என்றவனுக்கு எப்படியாவது ஜனாவை மலரிடமிருந்து பிரிக்க வேண்டும் என்ற பிடிவாதம் எழுந்தது.
அவனைப் பொறுத்தவரையில் பிறந்தது முதலே அவன் தான் எங்கும் முதன்மையானவன்! எல்லா விஷயங்களிலும் ஜனாவை விட பிரசன்னாவையே முன்னிறுத்துவார் ஜெயப்பிரகாஷம். அப்படியிருக்க ஜனாவும் வர்ணவியும் அவனிடம் சுதந்திரமலரைப் பற்றி பேசியிருக்க ஒரு இனம் புரியா வெறுப்பு அவள் மீது அவளைக் காணாமலே உருவாகியிருக்க, நண்பனுக்காக அவளைப் பார்க்க வந்தான்.
இங்கு வந்தபின் ஜனா உன் தங்கைதான் அவள் என்று சொல்லியிருக்க, சின்னதாய் அகக்கரையில் இருந்த அந்த வெறுப்புணர்வு வேகவேகமாய் விஸ்வரூபம் எடுத்திருக்க, மலரை வார்த்தையால் வலிக்க வைத்தான்.
“அண்ணா, நீங்க ஒரு தடவை அப்பா சைட்ல இருந்து யோசிங்களேன்” என்றவளிடம் விரல் நீட்டியவன் அவ்வளவு கோபத்துடன்,
“அண்ணான்னு சொன்ன நான் மனுஷனா இருக்க மாட்டேன், இந்த வார்த்தை இன்னொரு தடவ உங்கிட்ட இருந்து வரக்கூடாது” என்றான்.
“பிரசன்னா, இவ்வளவு கோபம் வேண்டாம்டா. மலர் ரொம்ப நல்லப்பொண்ணு” என்றவனைக் கைகாட்டி நிறுத்தியவன்,
“இவ எவ்வளவு நல்லவளா வேணும்னாலும் இருக்கட்டும், பட் ஐ டோண்ட் கேர். அந்தாளோட பொண்ணுன்ற ஒன்னு போதும் இவளை நான் வெறுக்க, உனக்கு இவ வேண்டாம் ஜனா. நம்ம உறவு, ப்ரண்ட்ஷிப் எல்லாமே போயிடும்டா” என்றான் பிரசன்னவாசன்.
மலருக்கு அவன் பேச பேச அவனுக்குக் குறையா கோபம் உருவானது அண்ணனின் மீது. பத்து நிமிடம் முன்வரை எப்படி பேசினான், நான் அவன் அப்பாவின் மகள் என்றதும் எப்படி மாறிவிட்டான் என்றவளுக்கு அவன் மீது ஜனா சொல்லி, வர்ணவி சொல்லி உருவாகியிருந்த மரியாதையெல்லாம் போனது.
“வெல் செட் மிஸ்டர்.பிரசன்னா, நீங்களும் அதே முரளிதரனோட மகன் அதை மறந்துடாதீங்க” என்றாள் பட்டென்று.
அந்த வார்த்தை பிரசன்னாவை இன்னும் கடுப்பேற்ற,
“ஏய்!” என்று அவளை அடிக்க கை ஓங்க, ஜனா வந்து மறைத்து நின்றான்.
“என்ன இவளுக்காக என்னை அடிக்கப் போறியா?” என்று பிரசன்னா கேட்கவும், ஜனாவின் முகம் கசங்கியது.
ஜனார்த்தன் என்றுமே பிரசன்னாவை தனக்குப் போட்டியாக நினைக்க மாட்டான். உறவோடு சேர்ந்த நட்பு அவர்களுக்குள் ஒரு இணைபிரியா நெருக்கத்தைப் பிரிக்கவியலா பிணைப்பினை உண்டு செய்திருக்க இப்போது அதில் விரிசல் விழக் கண்டவனுக்குத் தாளவில்லை.
ஜெயப்பிரகாஷின் பேரன் என்றால் முதலில் எல்லார் மனத்திலும் வருவது பிரசன்னவாசன்தான். ஜனா இரண்டாம்பட்சம்தான், ஆனால் எதையும் பெரிதாய் எடுக்காத ஜனாவின் குணமும், அனுசரித்துப் போகும் அவன் அம்மாவினாலும் வீட்டில் அமைதி நிலவியிருக்க, இப்போது பிரசன்னா இப்படி பேச மனம் கலங்கியது.
“ப்ளீஸ்டா, அப்படி பேசாத. நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியும்தானே?” என்றான் இறைஞ்சுதலாக.
“அப்படிதான் நான் நினைச்சேன், பட் இப்போ அப்படி இல்ல, இங்க பார் ஜனா உனக்கு நான் முக்கியம்னா நான் மட்டும்தான் முக்கியமா இருக்கணும், வேற யாரும் இருக்கக் கூடாது. யூ ஹேவ் ஒன்லி ஒன் சாய்ஸ், நானா இவளா? முடிவு பண்ணிக்கோ” என்றான் தீர்மானமாக.
“பிரசன்னா நீ என்னோட உறவுடா, என் ப்ரண்ட். பட் மலர் உனக்குப் புரியுதுதானே? ஷி இஸ் மை லவ்” என்று ஜனார்த்தன் தன்னை நண்பனுக்குப் புரியவைக்க முயன்றான்.
பிரசன்னா முடிவெடுத்தால் அதுதான் முடிவு! சின்ன வயதிலிருந்தே அப்படி வளர்த்துவிட்டிருந்தார் ஜெயப்பிரகாஷ். அந்த பிடிவாதம் அடுத்தவரைப் பற்றி யோசிக்கவிடவில்லை.
“ஷிட் லவ்! இன்னுமா உனக்குப் புரியல? இவ வர்ணவி கூட ப்ரண்ட்ஷிப் வச்சது, உன்னை லவ் பண்றன்னு சொல்றது எல்லாம் பக்கா ப்ளாண்ட்” என்றான் அவனின் பிஎம்டபிள்யூ மீது சாய்ந்து நின்று. கைகளைக் கட்டி அவன் பார்த்த பார்வையில் அவ்வளவும் அலட்சியம்.
“உனக்கு எத்தனை தடவ வாசு சொல்றது? அவளுக்கு நாங்க யார்னே தெரியாது. லாஸ்ட் மந்த் தான் எங்களுக்குத் தெரியும்” என்றவனின் பேச்சை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை பிரசன்னா.
“அப்படியே இருந்தாலும், இவ வர்ணவி கூட ப்ரண்ட்ஷிப் வச்சுக்கும்போதே தெரிய வேண்டாம், எல்லாம் வர்ணா ரிச் அப்படிங்கறதாலதான் ப்ரண்ட்ஷிப் ட்ராமா, நெக்ஸ்ட் உன் கூட பழகினதும் அதுக்காகத்தான். இந்த பொண்ணுக்கு அப்படியே அவங்க அப்பா புத்தி, பணக்கார வீட்ல கல்யாணம் செஞ்சு செட்டில் ஆகிடனும்னு”
“இந்த ப்ளான் எல்லாம் உன் அப்பாவோடதா, இல்லை நீயே ப்ளான் பண்ணினதா? ஜனா இவ உன் ப்ரோபோசலை ரிஜெக்ட் செஞ்சா சொன்னியே அதுவும் கூட எல்லாம் நடிப்புதான், என்ன இருக்கு உன்னை வேண்டாம் சொல்றதுக்கு? அப்படியும் இவ சொல்லக் காரணம், உன்னை சுத்த விட, இந்த காதல் எல்லாம் சும்மா அட்ராக்ஷன். நீயே சொல்வதானே உனக்கு பெஸ்ட்டானதை உன்னை விட நான்தான் செலெக்ட் செய்வேன்னு, பெட்டர் லீவ் இட் டூ மீ” என்றான் இரக்கமற்று.
“இந்த விஷயம் மட்டும் என்னோட சாய்ஸ்தான் வாசு” என்றவனின் உறுதியான பேச்சில்,
“தட்ஸ் இட்! நீ சொன்ன டைம் முடிஞ்சிப்போச்சு ஜனா. டென் மினிட்ஸ் இவ பேச்சைக் கேட்க சொன்ன, கேட்டாச்சு. போகலாம் வா” என்றவன் காரில் ஏறி உட்கார்ந்துகொண்டான்.
“மலர்! நான் அப்புறம் பேசுறேன், நீ கிளம்பு” என்று சொல்ல, மலரின் கண்கள் இன்னும் கலங்கியிருக்க, பொது இடம் என்பதால் அவளின் கையைப் பிடித்து அழுத்திக்கொடுத்தவன்,
“நீ மட்டும்தான் என் மனைவி” என்று சொல்லி சென்றான். இன்னும் அந்த அழுத்தம் கைகளில் இருக்க மலரின் தோளை யாரோ உலுக்க உணர்வுக்கு வந்து பார்க்க ஜனா நின்றான்.
“ஏய் சாப்பிட அம்மா கூப்பிடறாங்கன்னு சொல்றேன், என்ன யோசனை?” என்று கேட்க,
“ஒன்னுமில்லை” என்றவள் அவனின் தோள் சாய்ந்தாள். தோள் சேர்ந்தவளை ஒற்றைக் கையால் அணைத்தவன், அவளின் கன்னங்களை வருடிக் கொடுக்க, இன்னும் அவன்மேல் அழுத்தமாய் சாய்ந்தாள்.
உண்மையில் எல்லாரிடமும் போராடியவன் அவன்தான், அவர்களின் காதல் திருமணத்தில் முடிய காரணம் ஜனா மட்டுமே! யாரும் ஒத்துக்கொள்ளாதபோது துணிந்து உறவுகளைத் துறந்து அவளை ஏற்றவன் அவன்தான்!
“சாப்பிட்டு வந்து என்னைக் கொஞ்சலாம் மலர்” என்று சொல்லி அவளை ஜனார்த்தன் கீழே அழைத்துப் போக, அவர்கள் எல்லாம் உண்டு கொண்டிருக்க, பிரசன்னாவைக் காணவில்லை. ஜகன் மகளிடம் கேட்க
“மாமா சாப்பிட வரலைன்னு சொல்லிட்டாங்கப்பா” என்றாள்.
சௌந்தர்யா, “அப்போ பால் எடுத்துட்டுப் போ” என்றவர் ஜகனிடம்,
“இன்னும் உங்க அப்பா அம்மா சாப்பிடல” என்றார்.
“அதை முதல்ல சொல்ல மாட்டியா நீ?” என்று திட்டியபடி எழுந்தவர் அப்பா அம்மாவின் அறைக்குள் சென்று அவர்களை சாப்பிட சொல்ல அவர்கள் கேட்கவில்லை. சோர்ந்து போய் வந்த தந்தையிடம் ஜனா,
“நான் போய் அவங்களை சாப்பிட வைக்கிறேன்” என்று சொல்ல,
சௌந்தர்யா, “முதல்ல நீங்க எல்லாரும் சாப்பிடுங்க, அவங்க நம்ம சொன்னா கேட்க மாட்டாங்க, அவங்க பேரன் சொன்னாதான் கேட்பாங்க, சாப்பிட்டு நீ பிரசன்னாவை அழைச்சிட்டு வா வரு” என்றார் மகளிடம்.
வர்ணவியும் கணவனை அழைத்து வந்தாள். பிரசன்னா இறங்கி வந்தவன் மனைவியிடம்,
“தாத்தாவுக்கும் அம்மாச்சிக்கும் சாப்பாடு எடுத்துட்டு நீ மட்டும் வா” என்றவன் அறைக்குள் போனான்.
உணவு கொடுத்து வெளியே வந்த வர்ணவியிடம் மலர் ,
“அப்பா! என்ன ட்ராமா இதெல்லாம். என்னமோ அவன் சொன்னாதான் இந்த வீடே அசையுற மாதிரி” என்று அலுத்துக்கொள்ள,
“அப்படி பேசாத மலர்” என்று வர்ணவி முகம் சுருக்கினாள்.
‘இதைவிட மோசமாய் உன் கணவன் என்னைப் பேசியிருக்கிறான், என் நட்பை, என் காதலை எல்லாம் நாடகம் என்று சொல்லியிருக்கிறானே’ என்று கேட்கத் தோன்றினாலும் கேட்கவில்லை சுதந்திரமலர். கேட்டு வர்ணவியைக் கலங்கவைக்க விரும்பாதவள் உள்ளுக்குள்ளே எல்லாம் புதைத்தாள்.
ஒன்றும் சொல்லாமல் அமிழ்தாவைத் தூக்கிக் கொண்டு அவர்கள் அறைக்குள் வந்துவிட்டாள். ஜனா மாடியேறி வருகையில் அமிழ்தாவை அணைத்துக் கொண்டு மலர் உறங்கியிருக்க, இவனின் வருகையில் விழித்தவள்
“அவங்க சாப்பிட்டாங்களா?” என்றாள்.
“ம்ம், சாப்பிட்டாங்க” என்றவன் அவள் பக்கமாய் வந்து படுத்துக்கொண்டான். மகளை மனைவி அணைத்திருக்க, அவன் மனைவியை அணைத்துக் கொண்டு அவன் உறங்க, மலரும் தடுக்கவில்லை.
ஜனாவிற்கு மனம் நிறைந்திருந்தது. மனத்தினுள் பிரசன்னாவிற்கு நன்றி சொல்லிக் கொண்டான், அவனால்தானே இன்று மனைவி மகளுடன் ஒன்றாய் இருக்க முடிகிறது. இல்லாவிடில் அவனின் கோபமும் மலரின் கோபமும் சேர்ந்து இன்னும் பிரிவு நீண்டிருக்குமே, அது நடக்காமல் செய்து சாமர்த்தியமாய் செயல்பட்டு விபத்து நடந்த பின்னே அம்னீசியா என்றெல்லாம் பொய் சொல்லி இன்று மலர் அவனின் கைகளுக்குள்.
இருவருக்குள்ளும் சரியாகவில்லை! ஆனாலும் ஒருவர் அருகாமையில் ஒருவர் இருக்க, அதுவே அகத்திற்கு ஆறுதலாய் இருந்தது.
அடுத்த நாள் விடுமுறை தினமாய் இருக்க, மலர் ஜனாவோடு அம்மா வீட்டிற்குப் போக பிரியப்பட்டாள். மலர் வர்ணவியிடம்,
“நான் சாத்வீயை எங்கூட அழைச்சிட்டுப் போகவா?” என்று கேட்க அவளோ பதிலின்றி அமைதியானாள். அவளின் பார்வை ஹாலில் உட்கார்ந்து லேப்டாப்பில் வேலை செய்த கணவனைத் தொட்டு மீள,
“வரு நான் அவளை அழைச்சிட்டுப் போறேன், அமிழ்தாவும் இல்லை சாத்வீக்குப் போர் அடிக்கும்” என்றாள்.
“இல்லடி மாமா கிட்ட ஒருவார்த்தைக் கேட்கணும்” என்றவள் பிரசன்னாவிடம் போய் நிற்க,
“வரு, வேலையா இருக்கேன். எனிதிங் இம்பார்ட்டெண்ட்?” என்று லேப்டாப்பில் பார்வையை விலக்காமல் கேட்க வர்ணவி சொன்னதும் ஒரு நொடி யோசித்தவன் மறுத்துவிட்டு வேலையில் மூழ்கிவிட்டான்.
சுதந்திர மலர் ஒன்றும் சும்மா இல்லை, ஜனாவைத் துணைக்கழைத்தாள்.
“ஜனா! அன்னிக்கு அமிழ்தா விஷயத்தில் எல்லா முடிவு எடுக்க இவருக்கு உரிமை இருக்கு சொன்னீங்க, அதே உரிமை உங்களுக்கும் சாத்வீ மேல இருக்குதானே?” என்று கேட்க,
எல்லாரும் மலரை மெச்சுதலாகப் பார்த்தனர். ஆனால் பிரசன்னாவின் நேற்றையைப் பேச்சுக்கும் இன்றையைப் பேச்சுக்கும் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை, அவன் எப்போதுமே புரியாத புதிர்தான்! அவனின் மனத்தில் என்ன ஓடுகிறது என்பது அவன் மட்டுமே அறிவான்.
ஜனாவும் பிரசன்னாவிடம்,
“அழைச்சிட்டுப் போய்ட்டு வரேனே” என்று கேட்டான்.
ஜனாவை மலரின் முன் விட்டுக்கொடுக்க முடியாதே? அவனின் மனத்தில் வேறு எண்ணம் இருந்தாலும் ஒத்துக்கொண்டான்.
“சரி ஜனா, சாத்வீயை அழைச்சிட்டுப் போய்ட்டு வா” என்றான் பிரசன்னா. குழந்தைகளைத் தயார் செய்ய வர்ணவி மாடியேற, என்னவோ ஒரு உந்துதலில் பிரசன்னா தலையுயர்த்திப் பார்க்க, அதே சமயம் மலரும் பிரசன்னாவைப் பார்த்தாள்.
சுதந்திரமலரின் விழிப்பார்வை வெற்றிப்பார்வையாய் இருக்க, பிரசன்னாவின் பார்வைக்கான பொருள் அவளுக்கு விளங்கவே இல்லை.
✅ End of Episode 22
Nice