Episode 29
“தாத்தா மட்டும் அப்பா பத்தி பொய் சொல்லாம இருந்திருந்தா உன்னையும் வர்ணவி மாதிரி நாங்களும் இருந்திருப்போம்ல. ஏன் என்னை ஏமாத்தினார்?” என்று பிரசன்னா புலம்ப,
“ஜனா போதும்…இவன் இப்படியே பேசிட்டே இருப்பான்போல, முதல்ல தூங்க வைங்க” என்று மலர் சொல்ல நண்பனைத் தோளில் சாய்த்து அவனை நடத்தி அறைக்கதவு வரை அழைத்து வந்தான் ஜனா. அறையை விட்டு வெளியேறும் முன்,
“ஹேய் மலர், கம் ஹியர்” என்று சொல்ல,
“மலர், ப்ளீஸ் வா” என்ற ஜனாவின் பேச்சைக் கேட்டு மலரும் அருகே வர,
“இங்க பார் இனிமே நீ ஜனாவை விட்டு போக நினைச்சா அவ்ளோதான், உனக்கு சண்டைப் போடனும்னா எங்கூட மட்டும் போடு. ஜனா கூடலாம் போதக் கூதாது” என்று ஏகத்திற்கும் உளறினான். விரல் நீட்டி வேறு மிரட்டிப் பேச அவனின் தோரணையில் மலருக்கு சிரிப்பு.
“போட மாட்டேன் போதுமா, நீ போய் தூங்கு” என்று மலர் சொல்ல,
“குட் கேர்ள், கையைக் கொடு” என்று புன்னகைத்தபடி கேட்டான்.
“எதுக்குடா?” என்று ஜனா கேட்க,
“நீயும் கொடு மாப்ள” என்று கேட்க, ஒற்றைக் கையால் பிரசன்னாவைப பிடித்திருந்தவன் இன்னொரு கையை அவன் புறம் நீட்ட, இருவரின் கைகளையும் சேர்த்துப் பிடித்த பிரசன்னா,
“இனிமே நீ அமெரிக்க, ஆஃப்ரிக்கா எல்லாம் போகவே கூடாது, அப்புறம் நான் டென்ஷன் ஆகிடுவேன்” என்றவன் ஜனாவின் கன்னம் பிடித்து,
“நீயும் சண்டைப் போதக் கூடாது, மலர் கூட இருக்கணும்” என்று சொல்லி அவன் மேல் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டு பிரசன்னாவைக் கொண்டு போய் அதே மாடியில் இருந்த கெஸ்ட் ரூமில் படுக்க வைத்தான் ஜனா.
மீண்டும் அவன் வந்து பார்த்தபோது,
“ஸ்வீம்மிங் பூல் கிட்ட இருக்கேன்” என்று மலர் பதில் சொல்ல ஜனா அந்த பக்கம் போனான். அந்த விசாலமான அறையின் ஒருபக்கம் பார் இருக்க, அகன்ற கதவின் இன்னொரு பக்கம் சின்னதாய் நீச்சல் குளம்.
மேற்கூரையின் மேல் சதுர வடிவில் கண்ணாடி கூரை. நீந்தி கொண்டே வானும் நிலவும் கண்டுகளிக்கலாம்.
“ம்ம், அந்த பக்கம் இந்த தண்ணீ, இங்க இந்த தண்ணி. இரண்டு சைடும் மிதக்கலாம் போலயே” என்று கிண்டலாக மலர் சொன்னவள் தன் கால்களை நீரில் விட்டு இருந்தாள். அவள் பக்கமாய் வந்து உட்கார்ந்த ஜனா அவளின் கிண்டல் பேச்சுக்கு ஒன்றும் பதில் பேசவில்லை, அமைதியாய் இருந்தான்.
இருவரும் இருக்குமிடம் அமைதியாய் இருந்ததே இல்ல, ஒன்று எதையாவது ரசித்துப் பேசுவார், இல்லையா கொஞ்சல்களும் கெஞ்சல்களுமாய் இருக்கும்.
மலர்,“பிரசன்னாவை நினைச்சு ஃபீல் பண்றியா?” என்று கேட்க
“நீ ஃபீல் பண்ணலையா?” என்று அவளைத் திருப்பிக் கேட்டான்.
“ஃபீலிங்க்ஸ் லைட்டா இருக்கு, ஆனா அதைவிட எனக்கு சிரிப்பு வருது” என்றவள் சிரிக்கவும் அவளை அவன் கேள்வியாய்ப் பார்த்தான்.
“என்ன லுக்? பின்ன அவனை எப்பவும் அவ்வளவு கெத்தா பார்த்துட்டு இப்படி குடிச்சிட்டு உளறுறான்? அய்யோ அதுவும் எப்படி ஜனா கூட சண்தை போதக் கூதாதா?” என்று அண்ணனைப் போலவே பேசி அவள் சிரிக்க,
“போடி” என்றான் சலிப்பாக.
“இவ்வளவு பேசுறவனே கிடையாது அவன்” என்று வருத்தமாய் ஜனா சொன்னான்.
“அதுதான் தெரியுமே, எவ்வளவு பேசுறான்… இப்படி குடிக்கிறான் இவன்? நீ கேட்க மாட்டியா? என்ன ப்ரண்ட் நீயெல்லாம்?” என்று மலர் இப்போது கொஞ்சம் கடுமையாகக் கேட்க, கடுமையில் உடைந்தான் ஜனா.
“பார்ட்டில கூட ஒரு ஸ்மால் மேல் எடுக்க மாட்டான். அவன் இவ்வளவு தனியா ஃபீல் பண்ணியிருக்கான்னு எனக்கு இத்தனை வருஷம் தெரியாம போச்சு மலர், இந்த தாத்தா ஏதோ பண்ணியிருக்கார் மலர். ஆனா சொல்லவும் மாட்டேங்கிறான் ராஸ்கல்” என்றான் எரிச்சலாய்.
“அவன் சொல்லாம இருக்கவும் காரணம் இருக்கலாம் ஜனா, இனிமே அது தெரிஞ்சாலும் என்ன யூஸ்? தெரியவேண்டியவனுக்குத் தெரிஞ்சா போதாதா?” என்று மலர் கேட்கவும்,
“தட்ஸ் ரைட். எனக்கு மனசு என்னமோ செய்யுது மலர்” என்று நெஞ்சில் கைவைத்து அவளைப்போலவே தண்ணீரில் காலை நனைத்தான்.
“விடுங்க ஜனா, இப்போதானே அவன் தன்னோட தப்பை ரியலைஸ் செய்றான். இத்தனை வருஷம் நம்பின ஒருவிஷயம் இல்லன்றபோது அதை அவன் ஓவர்கம் பண்ண டைம் வேணுமில்லையா?”
மலர் சொல்வது சரியென்று புரிய,
“உனக்குக் கோவமில்லையா அவன் மேல..? உன்னை எனக்குத் தெரியாம கூட பேசியிருக்கான் போல? ஏன் சொல்லாம இருந்த? உங்கப்பா கிட்ட கூட இந்த கேடி பேசியிருக்கான் பாரேன்” என்றான் ஜனா கொஞ்சம் சிரிப்புடன்.
“உனக்குக் கோவம் வருதா என்ன? இல்லைதானே? அவன் அப்படித்தான் தெரிஞ்ச பின்னாடி அதை உங்கிட்ட சொல்லி என்ன யூஸ்? அவன் என்னதான் சொல்லியிருந்தாலும் கூட அப்பாவுக்கு என்னை உனக்குக் கல்யாணம் செஞ்சுக் கொடுக்க கொஞ்சமும் இஷ்டமில்லை ஜனா. அதான் உண்மை” என்றாள் மலர் தெளிவாக.
“அவன் இவ்வளவு பண்ணியும் உன்னால அவனை விட்டுக்கொடுக்க முடியல இல்ல ஜனா?” என்று கேட்க,
“அது அப்படியே பழகிட்டேன் மலர், விட்டுக்கொடுக்கிறதா தெரியல. பிரசன்னாவுக்கு அம்மாவும் இல்லை, அப்பாவும் கூட இல்லை. அதனால அவனுக்காக யோசிச்சே அப்படியே பழகிட்டேன்” என்று சொன்னவனை பெருமையாகப் பார்த்தாள்.
“அவனுக்கு அப்பா அம்மா கூட இல்லாம இருக்கலாம், ஆனா எங்க தேடினாலும் உன்னை மாதிரி ஒரு ப்ரண்ட் கிடைக்கவே மாட்டான் ஜனா. எனக்குப் பேசாம அடுத்த ஜென்மத்தில உன்னை மாதிரி ஒரு ப்ரண்ட் வேணும்னு தோணுது” என்றதும்,
“அடிப்பாவி, நல்ல ஹஸ்பண்ட் இல்லன்னு இப்படியும் சொல்லலாமில்ல” என்றவன் அப்போதுதான் ஒன்று தோன்ற மலரைப் பார்த்தான்.
“மலர், நீ ஒரு மணி வரை தூங்காம எதுக்கு இங்க வந்த?” என்று கேள்வி கேட்க,
“பரவாயில்லையே அதுக்குள்ள ஞாபகம் வந்துடுச்சா?” என்று நக்கல் செய்தாள்.
“ப்ச், சொல்லுடி”
“தூக்கம் வரல, மொட்டை மாடி போகலாம் வந்தா. இங்க லைட் எரியவும் இந்த நேரம் யார்னு பார்த்தான் இவன்” என்றதும்
“உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனைன்னு மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணினா அப்படியென்ன கௌரவக் குறைச்சல் டி? நீ மொட்டை மாடிக்குப் போக வந்திருக்க, அவன் மட்டையாக வந்திருக்கான். இம்சைங்க” என்று தரையில் குத்தினான்.
அவளின் பிரச்சனை அவன் தானே? அதை எப்படி அவனிடம் பகிர? என்று நினைத்தவள் அமைதியாகிவிட்டாள்.
அந்த நள்ளிரவு நேரத்தில் காலை தண்ணீரில் விட்டு இருந்தவள் சில நிமிடங்களுக்கு மேல் குளிர்தாங்காது காலை எடுக்க, ஜனா கப்போர்டில் இருக்கும் துண்டை எடுத்து வந்து மலரின் கால்களைத் தூக்கித் தன் காலின் மேல் வைத்து ஈரம் போக நன்றாய்த் துடைத்துவிட
“அதுவே காஞ்சிடும் ஜனா, விடுங்க” என்றாள் மலர்.
“அப்புறம் ஏன் நடுங்கிற, கால் விரைச்சுப் போச்சு பாரு” என்றவன் நன்றாய்த் தேய்த்துவிட்டு அவள் கால்களைப் பிடித்துவிட,
“என்ன கால்ல விழ ட்ரை பண்றியா?” என்று விளையாட்டாகப் பேசவும்,
“எங்கம்மா அந்த ஐடியாதான் கொடுத்தாங்க” என்றான்.
“அய்யோ அத்தையா?” என்றவளுக்குச் சிரிப்பு வந்தது.
அதன்பின் இருவரின் பார்வையும் நீரில் நிலைத்து இருக்க ஜனாவாகவே பேச்சைத் தொடங்கினான்.
“மலர் நான் என்ன தப்பு செஞ்சேன் சொல்றியா?” என்று ஜனா மிக மிக நிதானமாய்க் கேட்க,
“நீங்க தப்பு செஞ்சீங்கன்னு ஒத்துக்கிறீங்களா ஜனா?” என்றாள் மலர் ஆச்சர்யத்துடன்.
“இத்தனை வருஷம் அப்படி நினைக்கல, நான் என்ன செஞ்சிருந்தாலும் நீ என்னை விட்டுப் போயிருக்க கூடாதுன்னு தோணுச்சு. மும்பை போய்ட்டு வந்த பின்னாடி நீ வீட்ல இல்லனதும் என்னால ஏத்துக்கவே முடியல மலர். அதுவே எனக்குப் பெரிய அடியா இருந்துச்சு. நானா உனக்குப் போன் செஞ்சா நீ யூஸ்ல இருக்கேன்னு சொன்ன, சண்டைப் போடுற மாதிரியே பேசின. என்னால தாங்கவே முடியல”
“நீ ஒரு மாசமா எங்கிட்ட பேசல…அதைவிட நீ என்னைப் பேசினதைத் தாங்கவே முடியல, எங்காச்சும் போயிடலாம்னு மட்டும்தான் மைண்ட்ல ஓடுச்சு. சண்டை போடுற மாதிரி பேசினா என்னை விட்டுடுவியா ஜனா?” என்று அவள் அதையே திரும்ப சொல்ல, அது ஒவ்வொரு முறையும் அவனை அதிகமாகவே காயப்படுத்தியது.
அவன் பிறழ்ந்த இடமில்லவா? அப்போது என்னை விட்டு போனாளே என்ற பெருங்கோபமும் ஈகோவும் பெரிதாய் இருக்க இப்போது காலம் கடந்த பின் காயங்கள் மட்டுமே மிச்சம்!
அவள் விட்டுப்போயிருந்தால் இவன் விட்டுக்கொடுத்துப் போயிருக்கலாமே?
“நான் சண்டைப் போட்ட அப்புறம் என்னை சமாதானம் பண்ண நீங்க வருவீங்க நினைச்சேன் ஜனா” என்றவளின் பேச்சைக் கேட்டு காதல் ஏன் இத்தனை வலியாய் இருக்க வேண்டும் என்றுதான் ஜனாவிற்கு அக்கண்ணம் தோன்றியது.
“போதும் மலர், அது என் தப்புதான். முதல்ல நீ ஏன் என்னை விட்டுப் போன சொல்லு” என்று அவன் அவசரம் காட்ட,
“உங்களுக்குத் தெரியலையா?” என்று அவனிடம் கேட்க
“நிஜமா தெரியல மலர், எப்பவும் போல தானே சண்டைப்போட்டோம். அதுவும் நான் ஆபிஸ் டென்ஷன்ல இருந்தேன், நீ அப்போ கிஸ் பண்ணவும் நான் திட்டினேன்” என்றவனை கை நீட்டி நிறுத்தினாள்.
“என்ன திட்டினீங்க?” என்று கேட்கும்போதே கண்களில் கண்ணீர் நிறைந்துவிட
“கோவத்துல திட்டினது எப்படி மலர் ஞாபகமிருக்கும்?” என்றவனின் பேச்சில் உண்மை இருந்தது. மலரோ அவனின் முகத்தையே பார்த்தவள்,
“எனக்கு ஞாபகமிருக்கு ஜனா, ஒவ்வொரு நாளும் அதை மறக்க முடியாத அளவுக்கு ஞாபகமிருக்கு” என்று அவன் பேசிய வார்த்தைகளை சொல்லி,
“அம்மாவாகப்போறேன்னு சொல்ல வந்தவ கிட்ட நீங்க அப்படி பேசினீங்க ஜனா” என்றபோது மலர் முழுவதுமாய் உடைந்துவிட்டாள்.
ஜனாவோ,
“மலர்..” என்றவனுக்கு அடுத்து என்ன பேசவென்றே தெரியவில்லை. அவள் அமிழ்தா பற்றி சொல்லாமல் இருந்ததை வைத்து எவ்வளவு பேசியிருப்பான்? கடைசியில் இந்த காயங்களுக்கு எல்லாம் முழுமுதற் காரணம் அவனா?
“மலர்…நிஜமா உன்னை நான் அப்படி தப்பா நினைச்சு சொல்லல, ட்ரஸ்ட் மீ” என்று அவன் மன்றாட,
“எப்படி நினைச்சாலும் பேசினது பேசினதுதானே ஜனா, அந்த வார்த்தைகளோட அர்த்தம் அதுதான். என்னோட தேடலை நீங்க கொச்சைப் படுத்திட்டீங்க, வேற எந்த டைமா இருந்தாலும் நான் அவ்வளவு ஹர்ட் ஆகியிருப்பேனா தெரியல. பட் குழந்தையோட இருந்த சமயத்துல என்னால அதை ஹாண்டில் செய்ய முடியல ஜனா. ஏன் என்னை அப்படி சொன்ன…அவசரம்…அது இதுன்னு?” என்றவள் அழுகையுடன் அவனிடம் கேட்க வார்த்தைகள் வற்றிப்போக விழிகளில் ஈரம் கசிய, இறுக அணைத்தான் அவனின் மலரை!
✅ End of Episode 29
விட்டுப் போன வலியே
Nice