Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 19

காதல் 19

ஜனாவின் பேச்சைக் கேட்ட எல்லாருக்கும் உவகைதான், இருவரைத் தவிர. சுதந்திர மலருக்கும் ப்ரசன்னவாசனுக்கும் மட்டும் உவப்பாய் இல்லை. ஜனா பட்டென்று அப்படி சொல்லிவிட மலருக்கு அவனை அப்படியே விட மனமில்லை, ஆனால் அவளுக்கு முக்கியமான வேலை இருந்த காரணத்தினால் மட்டும் அவள் அமைதியாய் இருந்தாள். ஒன்றும் பேசாமல் அவள் குழந்தையைத் தூக்கி,

“பேபி சாப்பிட்டு சமத்தா இருக்கணும், அம்மாவுக்கு வொர்க் இருக்கு” என்றவள் பொதுவாய் ‘வரேன்’ என்று சொல்லிவிட்டு போனாள். அதுவரை அமைதியாய் இருந்த ஜகன் மனைவியிடம்,

“என்ன இது சௌ? வீட்டு மாப்பிள்ளை அவன். என்ன தப்பா சொல்லிட்டான்னு மலர் இப்படி பட்டுன்னு பேசுறா?” என்றார் ஆதங்கமாக.

பிரசன்னாவோ பொறுமையாய் உண்டு முடித்தவன்,
“சாத்வீ ஷூ போடு” என்று அமைதியாய் சொல்ல, மருமகனை ஆச்சரியமாகத்தான் எல்லாரும் பார்த்தனர். பிரசன்னா சின்ன வயதில் இருந்தே அதிகம் மரியாதை எதிர்ப்பார்ப்பான், அப்படித்தான் நடந்தும் கொள்வான். அவனை யாரும் உதாசீனமாக பேசவோ நடத்தவோ முடியாது. அப்படியிருக்க மலரின் பேச்சை அவன் இயல்பாய் கடக்க, யாரும் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தனர். அவர்களின் பார்வையைப் படித்தவன்,

“மாமா! அவ சொன்னதுல என்ன தப்பு? அவளுக்கும் அமிழ்தா பத்தின ஆசையெல்லாம் இருக்கும்தானே? இதை பெருசாக்காம விட்டுடுங்க” என்றவன் மனைவியை அழுத்தமாகப் பார்த்து,

“உனக்கும்தான் சொல்றேன், இத்தோட இதை விடணும்” என்றான் கட்டளையாக. பின் அவன் சாத்வீயைப் பள்ளிக்கு அழைத்துப்போக, வர்ணவியும் அவன் பின்னே வந்து,

“இன்னிக்குப் பேரண்ட்ஸ் மீட், நானும் வரேன்” என்றாள்.
“அப்போ அதை முடிச்சிட்டு அங்க அமிழ்தாவை சேர்க்கறதைப் பத்திக் கேட்டு வை, நான் சைட் போய்ட்டு அங்க வரேன்” என்று சொல்ல, அவனின் சொல்லுக்கும் செயலுக்குமான முரணைப் பார்த்த வர்ணவி,

“இப்போதானே அவ அப்படி பேசிட்டுப் போறா, நீங்களும் அவ இஷ்டம்னு சொல்லிட்டு இப்போ ஏன் என்னை விசாரிக்க சொல்றீங்க?” என்றாள் கடுப்பாக.

“அவ என்னதான் சொன்னாலும் கடைசியா சாத்வீ ஸ்கூல்லதான் அமிழ்தா படிப்பா, ஜனா பேச்சை அவ மீறமாட்டா” என்றான்.

அந்த பெரிய வீட்டின் ஹாலில் ஒரு அழுத்தமான அமைதி. ஜனா மகளை மடியில் வைத்துக்கொண்டவன் ஒன்றும் பேசாது இருக்க, சௌந்தர்யாவுக்கோ வீட்டில் நடப்பதை ஏற்க முடியவில்லை. அவருக்கு மலரின் பேச்சு காதில் ஓட அப்படியே அசையாமல் நிற்க,

ஜகன், “எனக்குப் பசிக்குது சௌ, சாப்பாடு வை” என்றதும் அவர் கணவருக்குப் பரிமாற,

“சௌ, அதெல்லாம் அவங்க செட் ஆகிடுவாங்க, நீ கவலைப்படாம இரு” என்றார்.

அவரோ கண்கள் கசிய,
“கவலைப்படாம இத்தனை வருஷம் இருந்ததுதான் தப்பு” என்றார் பட்டென்று.

“இவனையெல்லாம் நம்பி இருந்திருக்க கூடாது நாம, அவ வார்த்தைக்கு வார்த்தை நீங்க பார்த்த மருமக’னா விட்டிருப்பீங்களானு கேட்கிறா, போனா போகட்டும் இனியாவது சந்தோஷமா இருப்பாங்கன்னு பார்த்தா இப்படி தினமும் ஒரு வாக்குவாதம்” என்றவர் சோர்ந்து போய் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார்.

“அம்மா!” என்று ஜனா அவரருகே போக,

“என்னையே ஏன் பார்க்குறீங்க? போடா முதல்ல மலருக்குப் போன் செஞ்சு சாப்பிட சொல்லு, அவளுக்கு ‘ம்’ ன்றதுக்குள்ள கோவம் வந்துடுது” என்று மகனிடம் காய்ந்தார்.

கணவரிடம் “இப்ப நான் கவலைப்பட்டு என்னவாகப்போகுது? இதுங்களை எல்லாம் திருத்த முடியாது, நான் போய் அத்தைக்கும் மாமாவுக்கும் சாப்பாடு கொடுத்துட்டு வரேன், அப்புறம் அதுக்கும் பேச்சு வாங்கணும்” என்று சொல்லி அவர் எழுந்துபோக, குழந்தையுடன் ஜனா மட்டும் உட்கார்ந்திருந்தான்.

மகன் உம்மென்று உட்கார்ந்திருக்க, சௌந்தர்யா அவனருகே வந்தவர்,

“இப்பவே ஏன்டா இவ்வளவு சோகமா இருக்க? எப்படியும் நீ பேசினதுக்கு சாயங்காலம் வந்து விளாசுவா உன் பொண்டாட்டி, அப்போ சோகமா இரு ராஜா” என்றதும் அம்மாவை முறைத்தான்.

அவரோ கொஞ்சம் கலவரமான குரலில்,
“டேய் அவ இப்படி பேசினா பிரசன்னா என்னைக்காவது எதாவது பேசிடுவான், வருவுக்கும் அவளுக்கும் ஒத்துப்போகுதுன்னு எனக்கு ஒரு சந்தோஷம் இருந்துச்சு. இன்னிக்கு அதுவும் போச்சுடா மகனே” என்று அவர் புலம்ப,

“மா, அவ எப்பவும் வர்ணவி மனசுக்கஷ்டப்படுற மாதிரி நடக்கமாட்டா, நான் சொல்றேன்ல நம்பும்மா. என் கூட பேசாம இருந்தப்ப கூட அவ வருவோட ப்ரண்ட்ஷிப்பைக் கட் பண்ணல. நாங்க எப்பவும் ஒத்துமையாத்தான் இருப்போம்” என்றவனின் பேச்சில்தான் அவருக்கு நம்பிக்கை மீண்டது.

பின் ஞாபகம் வந்தவராக, “ஜனா அமிழ்தாவை உன் அப்பத்தா அழைச்சிட்டு வர சொன்னாங்கடா, நான் மறந்துட்டேன்” என்றதும் புன்னகையுடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவர்களின் அறைக்குச் சென்றான். இப்போதெல்லாம் இதுவொரு தினசரி வாடிக்கையாகி இருந்தது. ஆனால் மலரிடம் கொஞ்சமும் இணக்கம் காட்டவில்லை வீட்டின் பெரியவர்கள்.

மாடியேறி வந்து மனைவிக்கு அழைத்தான். “சாப்பிட்டியா மலர்?” என்றான். அவன் காலையில் தன்னை எடுத்தெறிந்து பேசிய உணர்வு உள்ளத்தை இளகவிடாமல் செய்திருக்க,

“அப்புறம் பேசுறேன்” என்று அவள் வைத்துவிட மலருக்குக் கணவன் பேசவும்தான் மனது சமாதானமானது. அவள் வேலையெல்லாம் முடிந்து மாலை வீடு வந்த போது, அவளின் இருகைகளையும் இருப்பக்கமும் சாத்வீயும் அமிழ்தாவும் பிடித்துக்கொண்டு,

“அம்மா, பிக் சர்ப்ரைஸ்” என்று சந்தோஷமாய் அமிழ்தா சொல்ல, அமிழ்தாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

“அப்படியா என்னடா பேபி?” என்று அவளும் ஆவலாய்க் கேட்க

அமிழ்தா, “மா, சீ தட் ஸைட்” என்று சொல்லவும் ஒரு நிமிடம் அந்த ஹாலில் உள்ள விளக்குகள் அணைந்து மீண்டும் ஒளிர, மகள் காட்டிய பக்கம் பார்த்தாள்.

அங்கே அவளும் அவளவனும் அமிழ்தாவுடன் இருக்கும் புகைப்படம், சுற்றிலும் சின்ன சின்ன விளக்குகளால் ஃப்ரேம் செய்யப்பட்டு மின்னியது. அவள் எடிட் செய்த படம்தான், இருந்தும் இப்படி பெரிதாக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு மின்னுவதைப் பார்க்க கண்கள் தானாய் கலங்கின.

மாமியாரைக் கண்டவள் கண்கள் மின்ன புன்னகை செய்ய, சௌந்தர்யா மருமகளின் அருகே வந்தவர்,

“பிரசன்னா இப்போ அரைமணி நேரம் முன்னாடி வந்து எல்லாம் செட் பண்ணினான்” என்று சொல்லவும் காலையில் கிளம்பும் அவசரத்தில் பென் டிரைவை அறைக்குள் மறந்து வைத்துவிட்டது நினைவில் வந்தது.

இருந்தும் பிரசன்னா நினைத்து இதை இவ்வளவு அழகுற செய்திருக்க, அமிழ்தாவின் அழகு முறுவலின் முன் காலையில் நடந்த பேச்செல்லாம் மறந்து போனது. சௌந்தர்யா மறக்கவில்லை என்பதுபோல அவளிடம் பேசினார். அந்த நிழற்படத்தின் அழகிலேயே லயித்து இருந்தவளிடம்,

“மலர்! உனக்கு பிரசன்னா கூட உறவு வேண்டாம்னு நினைக்கலாம், அது தப்பில்லை. ஆனா அவன் இந்த வீட்டு மாப்பிள்ளை, அவனுக்குண்டான மரியாதையை இந்த வீட்டு மருமகளா நீ கண்டிப்பா தந்துதான் ஆகணும்” என்று சொல்லி மலரின் முகம் பார்க்க அதுவரையில் அலர்ந்திருந்த அவள் முகம் அவர் பேச்சைக் கேட்டு அப்படியே வாடிவிட்டது.

இருந்தும் “சரிங்கத்த” என்றவள் மெதுவே மாடியேறினாள். இந்த வீட்டின் மருமகளாக நான் அவனை மதிக்க வேண்டும், மருமகனாய் அவன் என்னை மதிக்கத் தேவையில்லை என்று கசப்பாய் எண்ணம் எழுந்தது.

“ஜனா நான் சொல்றதைத்தான் கேட்பான், கேட்க வைப்பேன் நான்! என்னை மீறி நீ எப்படி அவனைக் கல்யாணம் செய்றேன்னு நானும் பார்க்கிறேன்” என்று சொடக்கிட்ட பிரசன்னாவின் வார்த்தைகள் இன்னும் காதில் கேட்டது.

“அவனைக் கல்யாணம் பண்ணிட்டா மட்டும் நீ அவனோட வாழ்ந்திட முடியுமா? அவனோட பணத்துக்காகத்தானே இவ்வளவும்? வர்ணவியோட ப்ரண்ட்ஷிப், ஜனாவோட காதல் எல்லாமே ரிச் லைஃப்காகத்தானே? நான் அந்த வீட்ல இருக்கவரைக்கும் உனக்கு அங்க இடமில்லை!“ என்ற பேச்செல்லாம் மறக்க முடியுமா என்ன? பேசாமல் கணவனைப் போல தனக்கும் எல்லாம் மறந்திருந்தால் நன்றாய் இருக்கும் என்ற எண்ணம் எழாமல் இல்லை.

இப்போது அவன் நல்லவனாகிவிட நான் எல்லாருக்கும் பொல்லாதவளாகிவிட்டேன், யாரையும் மதிக்கத்தெரியாதவளாகிவிட்டேன் என்ற எண்ணத்துடன் அவர்கள் அறைக்கு வந்தவள் பாத்ரூமினுள் புகுந்து கொண்டு சிறிது நேரம் கழித்து வெளியே வர, ஜனாவைப் பார்க்க அவன் கட்டிடத்திற்குப் ப்ளான் வரைந்து கொண்டிருந்தான். அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தவள் அவனை விட்டு நகர, அவள் எதிர்ப்பார்க்கவண்ணம் அவளை அப்படியே இழுத்து தன் மடிமீது அமர்த்தினான் ஜனார்த்தன்.

“என்ன வந்ததும் கடல் கொந்தளிக்கும்னு பார்த்தா அமைதியா இருக்கே?” என்று கன்னத்தைக் கிள்ளிக் கேட்க,

“ப்ளான் வரைஞ்சிட்டு இருந்த இல்ல, அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு” என்றாள்.

“அது சும்மா ரஃப் வொர்க்தான்” என்று மனைவியின் முகம் பார்த்தான். அவளுக்கோ இதை போல் ஒரு நாள் அவன் வரைந்துகொண்டிருக்க, தெரியாமல் அவள் பின்னிருந்து சென்று அவனைக் கட்டிக்கொள்ள, அவன் கத்திய கத்தல் எல்லாம் மறக்காது காயமாய்த் தங்கி விட்டிருந்தது.

“வீட்ல இருந்தா உன்னைக் கட்டிக்கிட்டும் ஒட்டிக்கிட்டும் திரியனுமா என்ன? படிச்சவதானே நீ? கொஞ்சமாச்சும் சென்ஸ் வேண்டாம், ச்ச எவ்வளவு நேரமா உட்கார்ந்து வரைஞ்ச ப்ளான் தெரியுமா?” என்று கத்தினான்.

இவன் இப்படியென்றால் இவனின் நண்பன் இவனுக்கும் மேல், என்னையும் இவனையும் சேர விடாமல் செய்ய நினைத்தவன் இப்போதோ சேர்ந்த புகைப்படத்தை அவ்வளவு பணம் இறைத்து நடுவீட்டில் மாட்டியிருக்கிறான். இப்படியே இருந்தால் பழையதெல்லாம் நினைவில் வருமென்பதால் கீழே போறேன் என்றாள் மலர்.

ஜனா அவளிடம், “காலையில பேசினதுக்குப் பதில் ஒன்னும் காணுமே?” என்றான் நக்கலாக.

“உன் ப்ரண்ட் சாப்ட்வேர் மாதிரி அடிக்கடி அப்டேட் ஆகிடுவான், என்னால அவனோட அப்டேட்டட் வெர்ஷனுக்கெல்லாம் அடாப்ட் ஆக முடியாது, அவன் ராதாரவியா ஜெயம் ரவியான்னு எனக்குத் தெரியல” என்றாள் முகம் திருப்பிக்கொண்டு.

அவளின் கரம் பற்றியவன்,
“அவன் எப்படியிருந்தாலும் என்னோட பிரசன்னா மலர்” என்று சொல்லி அவளின் கரத்தினை வருட, வெடுக்கென அவனின் கையை உதறிக் கணவனை முறைத்தாள்.

“இருந்தாலும் எங்கிட்டேயே என்னோட பிரசன்னான்னு சொல்ற இல்ல நீ? அதான் என்னைக் கடுப்பேத்துது” எரிந்து விழுந்தவள் அவனை முறைத்துக்கொண்டே அறையை விட்டு வெளியே போனாள்.

மாடியின் ஹாலில் நடுநாயகமாக சாத்வீயும் அமிழ்தாவும் கிளுக்கி சிரிக்கும் படம் மாட்டப்பட்டிருந்தது. நேற்று எடுத்த படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தவள் வர்ணவியைப் பார்க்க போனாள். சாத்வீ ஹோம்வொர்க் எழுத, அமிழ்தா அத்தை மடியில் படுத்து உறங்கியிருந்தாள்.

“ஹே! என்னடி நீ இந்த டைம்ல இவளைத் தூங்க வச்சிருக்க? நைட் தூங்க மாட்டா வரு” என்று மகளை எழுப்ப பார்க்க,

“காலையில இருந்து ஒரே ஓட்டம் இவ, தூங்கட்டும். உனக்கு என்ன வேணும் சொல்லு” என்றாள் வர்ணவி.

“ஹோ! உன் மாமனை நான் பேசினதும் மேடம் மூஞ்சிக் காட்டுறீங்களா?” என்றதும் சாத்வீயின் பார்வை புத்தகத்தில் இருந்து இவர்களைப் பார்க்கவும்,

“சாத்வீ நீ மாமா ரூம்ல போய் ஹோம்வொர்க் எழுதுடா” என்று சுதந்திர மலர் சொல்ல, சாத்வீயும் ஓடிவிட்டாள். மகள் போன பின்னும் வர்ணவி அமைதியாய் இருந்தாள்.

“உலகத்தில யாரைப் பார்த்தும் நான் பொறாமைப்பட்டதில்ல, உன் புருஷனைப் பார்த்தெல்லாம் எனக்கு ஸ்டோமெக் பர்னாகுது பாரேன். அவனை ஒருவார்த்தை சொன்னதும் மொத்தக் குடும்பமும் முறைச்சிட்டு திரியறிங்க” என்றவளின் குரலில் பொறாமை இல்லை. ஆற்றாமை அதிகம் இருந்தது.

“ஏன்? யார் பேசினாங்க உன்னை?”

“வந்தவுடனே என் மாமியார், அப்புறம் என் வீட்டுக்காரர், அடுத்து நீ” என்று மலர் அடுக்கிக் கொண்டே போனவள், பின் தலையில் தட்டிக்கொண்டு,

“அதைவிடு, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! நான் கூட இவ்வளவு அழகா ஃப்ரேம் பண்ணியிருப்பேனா தெரியல. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு எல்லா ஃபோட்டோவும், தேங்க்ஸ் ஸோ மச்” என்றாள்.

வர்ணவிக்குக் கணவனைப் புகழவும் ஒரே புன்னகைதான்.
“பார்டா! நாலு வார்த்தை உன் மாமனை புகழ்ந்தா உடனே ப்ரைட் ஆகிடுறடி நீ, அழகிடி நீ” என்று சொல்லி தோழிக்குத் திருஷ்டி எடுத்தாள் சுதந்திரமலர்.

வர்ணவி,“நெக்ஸ்ட் மந்த் ஸ்கூல் ஆரம்பிச்சிடும்டி, அட்மிஷனுக்கு அவர் சொல்லிட்டார், உங்கிட்ட சொல்ல சொன்னார்” என்றதும் மலர் பேசாமல் தலையாட்ட, வர்ணவி முறைத்தாள்.

“முறைக்காத! உங்க அவர் பேச்சை என்னோட அவர் மீற மாட்டார். அதனால நீங்க எது செஞ்சாலும் ஓகே” என்றாள் மலர். மெத்தைக்கு அருகே இருந்த பிரசன்னாவின் புகைப்படம் அவள் கண்ணில் விழ, அதை முதன்முதலில் பார்த்ததும் ஞாபகத்தில் வந்தது.

பிரசன்னா என்பவன் பிரச்சனையாக மாறிய நாளும் கூட!! தன் காதலுக்காக கண்ணீர் வடித்த நாள் அது!

Read and Share your thoughts friendsss

✅ End of Episode 19
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 1 month ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top