Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 21

காதல் 21

பிரசன்னாவின் பேச்சில் குடும்பமே திகைத்து நிற்க, மகனின் பேச்சில் தந்தையாய் மனம் குளிர்ந்தார் முரளிதரன். அவரின் கண்கள் நிறைந்திருக்க, அவரை அரைநொடி பார்த்தவனின் கவனத்தைக் கலைத்தார் ஜெயப்பிரகாஷம். அத்தனைப் பேரும் அவன் தந்தைக்குக் கொடுத்த அங்கீகாரத்தில் அகம் நிறைய நின்றிருக்க, ஜெயப்பிரகாசத்தால் மட்டும் அதனைத் தாளமுடியவில்லை, ரங்க நாயகியோ அதிர்ச்சியில் நின்றிருந்தார்.

“வாசு, என்ன பேசுற நீ? அவனாலதான் உங்கம்மா செத்தா” என்று ஜெயப்பிரகாஷம் கோபமாய்ப் பேச,

“அப்படின்னு யார் சொன்னது?” என்றான் பிரசன்னா நிதானமாக. எல்லாரும் நின்றிருக்க,

“முதல்ல எல்லாரும் உட்காருங்க” என்றான் அதிகாரமாக.

அதில் ஜகன், சௌந்தர்யா, சாரதா, முரளிதரன் எல்லாம் உட்கார்ந்திருக்க, வர்ணவி குழந்தைகளை அப்பாவின் அறையில் விட்டு வந்தாள். சுதந்திர மலரோ நடப்பதை நம்பமுடியாமல் பார்த்தாள், ஜனா அவளருகே நின்றவன் நண்பனை பெருமையாய்ப் பார்த்தான்.

“யார் சொல்லணும்? இவனாலதான் என் பொண்ணு என்னை விட்டுப் போனா” என்று முரளியைக் கைக்காட்டி ரங்க நாயகி அழுகையுடன் கத்த,

“அம்மாச்சி! போதும் இதுக்கு மேல ஒருவார்த்தை இவரை நீங்க பேசினா நான் டாலரேட் பண்ண மாட்டேன்” என்றான் பிரசன்னா.

“அம்மா அவன் தான் சொல்றான் இல்ல, நீங்க அமைதியா இருங்களேன்” என்று ஜகன் பேச,

“எல்லாரும் சேர்ந்துட்டு இவளை பேசுறீங்களா?” என்று கோபத்தில் கத்தினார் ஜெயப்பிரகாஷம்.

தாத்தாவின் முன் நின்ற பிரசன்னா,
“எங்கம்மா எதனால இறந்தாங்கன்னு அவங்களுக்கு மட்டும்தான் தெரியும். அதுக்கு என் அப்பா காரணமில்லைன்னு மட்டும் எனக்கு நல்லாவே தெரியும் தாத்தா, என்னைப் பேச வைக்காதீங்க” என்றான்.

“இத்தனை வருஷம் அறிவா தானேடா ராஜா இருந்த, எப்போ இப்படி மாறின? எல்லாம் இவ இந்த வீட்டுக்கு வந்த நேரம். என் பொண்ணு சாவுக்குக் காரணமானவனை நடுவீட்ல உட்கார வச்சுப் பேசுறீங்க” என்றார் ரங்கநாயகி அழுகையுடன். பிரசன்னாவிற்கு அவரின் மீது இளக்கம் தோன்றினாலும் இறுக்கமாய் நின்றான்.

“இப்போ நான் இந்த வீட்ல இருக்கணும்னா எதுவும் பேசாம இரண்டு பேரும் உள்ள போங்க” என்றான் பிரசன்னா. அவனின் பிடிவாதம் அறிந்த ரங்கநாயகி அழுகையுடன் அறைக்குள் போக, ஜெயப்பிரகாஷம் விடவில்லை.

“இவங்களை எல்லாம் உனக்கு முன்னாடியே எனக்குத் தெரியும் வாசு, நீ நினைக்கிற மாதிரி இவங்க கிடையாது” என்று அப்போதும் பேச,

“அம்மாச்சி!” என்று கத்தினான் பிரசன்னா.

அதில் பயந்த ரங்கநாயகி கணவரை அழைத்துக் கொண்டு போனார். அவர்கள் போனதும் பிரசன்னாவும் மாடியேறினான்.

அதைப் பார்த்த ஜகன்,
“பிரசன்னா..!” என்று அழைக்க

“மாமா! நீங்க பேசுங்க, லீவ் மீ அலோன்” என்று போனான்.

“பார்த்தியா என் மாமாவை” என்றாள் வர்ணவி மலரிடம்.

“என்ன பார்க்கணும்? பாரு பெத்த மனசு பூஸ்ட், பிள்ளை மனசு வேஸ்ட்னு காட்டிட்டுப் பேசாம போறான் அவன்” என்று வர்ணவியிடம் முணுமுணுத்தாள் சுதந்திரா.

“அய்யே” என்று வர்ணவியும் முணுமுணுக்க,

“போய் சாப்பிட எடுத்துட்டு வா வரு, என்ன நிக்கிற? நீயும் போ மலர்” என்று மகளையும் மருமகளையும் விரட்டினார் சௌந்தர்யா.

“அப்புறம் அண்ணா, கிருஷ்ணா கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது” என்று சௌந்தர்யா இயல்பாய்ப் பேச ஆரம்பித்து கணவரை ஒரு பார்வை பார்க்க, ஜகனும்

“மாப்பிள்ளை என்ன பண்றார் முரளி?” என்றார். முரளிதரனின் பார்வை இன்னும் மகன் போன திசையில் இருந்தது.

“அவனா பேசினாதான் உண்டு முரளி, நம்ம சொல்றதைக் கேட்கிற டைப் இல்ல அவன்” என்று ஜகன் சொல்ல, இது போல் பல வருடம் முன் ஜகன் சொன்னது முரளியின் நினைவில் வந்து போனது.

மகன் இந்தளவு மனம் மாறியதே பெரிது என்றுணர்ந்த முரளிதரன், சின்ன மகளின் திருமணம் பற்றிய பேச்சில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள, ஜனா அமைதியாய் அங்கே உட்கார்ந்திருந்தான்.

கிச்சனில் வர்ணவி காஃபி போட
“நல்ல காஃபியா போடு, உன் மாமனார் மாமியாருக்குப் போடுற. அது ஞாபகத்தில இருக்கட்டும்” என்று மலர் மேடை மேலேறி உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு வர்ணவியை வம்பிழுக்க

அவளோ “ அதெல்லாம் எனக்குத் தெரியும், நான் வாசு இப்படி பேசுவார்னு நினைக்கவே இல்லடி” என்றாள் சந்தோஷமாக.

“நான்தான் சொல்லிட்டே இருந்தேனே அவன் கிட்ட என்னவோ சேஞ்சஸ்னு” என்றவளின் கையைப் பிடித்துக் கிள்ளிய வர்ணவி,

“இப்போவாச்சும் அண்ணா சொல்லுடி” என்றதும் நக்கலாய் அவளைப் பார்த்தாள் மலர்.

“அவன் இப்பவும் என்னோட அப்பான்னுதான் சொன்னான், இந்த வீட்ல ஒரு மாசமா இருக்கேன் நான். என்னை அவன் தங்கச்சின்னு ஒரு நாளும் சொன்னதில்லை. அப்படி இருக்கப்ப நான் மட்டும் ஏன் சொல்லணும், இதைப் போய் உன் புருஷன் கிட்ட ப்ரஸ்ட் சொல்லு”

“அவர் கேட்பாரா தெரியலையே, மாமாவுக்கு சப்போர்ட்டா பேசினார். ஆனா அவர்கிட்ட ஒன்னும் பேசாம போய்ட்டாரே” என்று வர்ணவி யோசித்தபடி சர்க்கரைப் போட்டாள்.

“அப்போ நான் மட்டும் ஏன் கேட்கணும்?” என்ற தோழியை முறைத்தாள் வர்ணவி.

“இந்த திமிர் மட்டும் உனக்கும் அவருக்கும் அப்படியே இருக்குடி, பாவம் நானும் என் அண்ணாவும் உங்ககிட்ட மாட்டிக்கிட்டோம்” என்றதும் மேடையை விட்டு கீழே குதித்த மலர்,

“என்ன மாட்டிக்கிட்டீங்க நீயும் உன் அண்ணாவும், நாங்களா உங்க பின்னாடி வந்தோம்? அவர்தான் மலர் மலர்னு என் பின்னாடி வந்தார், நீதான் மாமா மாமான்னு அவன் பின்னாடி சுத்தின” என்றாள் தோழியிடம் கிண்டலாக.

அதற்குள் சௌந்தர்யா வெளியே இருந்து “மலர்!” என்று குரல் கொடுக்க, இருவரும் காஃபியும் திண்பண்டங்களும் எடுத்துக் கொண்டு ஹாலுக்குப் போக, மலர் அப்பாவின் அருகே உட்கார்ந்து கொண்டாள்.

“எப்படிடா சுதந்திரா இருக்க?” என்றார் முரளி மகளிடம்.

“இப்போதான் என்னை ஞாபகம் வருதாப்பா?” என்று கேட்டாள் மலர்.

“ஏன்டா அப்படி சொல்ற? அப்பாவோட செல்லப்பொண்ணுடா சுதாம்மா நீ” என்ற முரளியைப் பார்த்து செல்லமாய் முறைத்த சுதந்திரமலர்,

“அடிக்கடி சொல்லுங்கப்பா, மறந்து போகுது” என்றதும் எல்லார் முகத்திலும் புன்னகை.

மகளிடமிருந்து ஜனாவின் பக்கம் பார்த்த முரளி,
“இப்போ எப்படி இருக்கீங்க ஜனா? உடம்பு பரவாயில்லையா?” என்று விசாரிக்க, ஜனார்த்தனுக்கோ அவனின் நாடகமே நடந்த விஷயத்தில் மறந்து போயிருக்க,

“எனக்கு என்ன அங்கிள்? ஐ அம் ஃபைன்” என்றான் புரியாத பார்வையுடன்.

“ஆக்ஸீடெண்ட் ஆச்சுலப்பா, அதான் இப்போ வலியெல்லாம் பரவாயில்லையா?” என்று சாரதா கேட்க, சௌந்தர்யா தன்பக்கத்தில் இருந்த மகனின் கையை சுரண்ட, மனதுக்குள் தன்னைத் திட்டிக்கொண்டவன்,

“ஆஹ்…! எஸ் ஆன்ட்டி, இப்போ சரியாகிடுச்சு” என்றான் சமாளிப்பாக. காஃபியைப் பருகிவிட்டு பத்திரிக்கை வைத்துப் புறப்பட்டனர் முரளியும் சாரதாவும். இளையவர்களும் மாடியேறிவிட, சௌந்தர்யா கணவனிடம்,

“என்னங்க நடக்குது இங்க? என்னால நம்பவே முடியல, ஒரு பேச்சுக் கூட அப்பானு சொல்ல மாட்டான் பிரசன்னா” என்றார்.

“நான் நீ அவங்க வந்திருக்காங்கன்னு சொல்லவும் காரை எடுக்க வந்தா, நானும் வீட்டுக்குப் போறேன் வாங்க மாமான்னு என்னை அழைச்சிட்டு வந்துட்டான். இப்போதான் அவன் ஒழுங்கா நடக்கிறான் சௌ, எனக்கும் முதல்ல ஷாக்தான். பட் சந்தோஷமா இருக்கு சௌ, கொஞ்சம் மாசம் ஜனா வீட்டை விட்டுப் போனதே என்னால தாங்க முடியல, அவர் அவனை இத்தனை வருஷம் பிரிஞ்சு இருக்கார். இனியாவது எல்லாம் சந்தோஷமா இருந்தா சரிதான்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போனார்.

வர்ணவி கணவனைத் தொந்தரவு செய்யவில்லை, மனமறிந்து நடக்கும் மனைவி அவள். சின்ன வயதில் இருந்து தாயில்லா பிள்ளை என்று வீட்டினர் அவன்மீது அதிகமாய்க் காட்டும் கரிசனத்தை அண்ணனும் தங்கையும் என்றும் தவறாய் நினைக்காது, அவர்களுமே பிரசன்னாவை அதிகமாகவே தாங்குவர்.

இன்றும் அப்படியே குழந்தைகளை மலரிடம் விட்டவள் கீழே அம்மாவிற்கு உதவி செய்ய வந்துவிட்டாள். ஜனா நண்பனுடன் இருக்க, மலர் குழந்தைகளுக்கு டீவி போட்டு விட்டாள். பிரசன்னாவின் மாற்றத்தால் ஒன்றும் பெரிதாய் மகிழவில்லை. அப்பாவிற்கு அது சந்தோஷம் என்றால் அவளுக்கும் சந்தோஷம்தான்.

உடன்பிறப்பு என்று உருகிடவில்லை அவளின் உள்ளம், என்று பிரசன்னாதான் வர்ணவியின் அத்தை மகன் என்று மலருக்குத் தெரிந்ததோ அன்று போனது அவளின் நிம்மதி. ஜனாவின் பிறந்த நாளுக்காக, வீட்டில் பொய் சொல்லிவிட்டு வர்ணவியுடன் ப்ராஜக்ட் செய்கிறேன் என்று ஜனாவின் வீட்டிற்கு வந்த போதுதான் வர்ணவி பிரசன்னாவின் புகைப்படத்தைக் காட்டினாள். அதுவரை அவனை பார்க்கும் சூழ்நிலையுமில்லை.

எப்போது வர்ணவியிடம் கேட்டாலும்,
“நீ நேர்லதான் என்னோட வாசு மாமாவைப் பார்க்கணும்” என்பாள். ஜனாவும் தங்கையைப் போலவே சஸ்பென்ஸ் வைக்க, எப்படியோ வீட்டிற்கு வந்தபோது வர்ணவியுடன் மல்லுக்கட்டி அவளின் மாமனைப் பார்த்தவளுக்குப் பேரதிர்ச்சிதான்.

பிரசன்னவாசன்! அவளின் அண்ணன்! ஒருதாய் மக்கள் இல்லை, ஒருதந்தை மக்கள்!

முரளிதரன் ஜெயபிரகாஷம் ரங்கநாயகியின் மகள் ஜானகியைத்தான் முதலில் மணந்தார், அவர்களின் மகன்தான் ப்ரசன்னவாசன். முரளிதரன் அவர்களின் அளவு வசதியில்லை என்றாலும், அவர் மத்திய அரசாங்க பணியில் இருந்தார். அதைவிட அப்போது அவர்களின் வசதியும் மேல்மத்தியதரவர்க்கம்தான். இப்போது போல் நிறைய சொத்தோ, தொழிலோ கிடையாது.

ஜானகியும் முரளியும் நன்றாகவே வாழ்ந்தனர், ஆனாலும் என்னவோ ஒன்று குறைவது போல் முரளிதரனுக்கு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது, ஜானகி அவரின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசமாட்டார், எல்லா வகையிலும் நன்றாகவே நடந்துகொண்டாலும் அன்யோன்யம் என்பதோ ஒரு உரிமையோ ஜானகியிடம் இருக்காது. முரளிதரன் அதைப் பெரிதாய் நினைப்பதற்குள் குழந்தை உண்டாகிவிட, பிரசன்னா ஐந்துமாதக் குழந்தையாக இருந்தான் அப்போது. முரளி வீட்டிற்கு வர சொல்லி அழைக்க, இன்னும் ஒரு மாதம் போய் வருகிறேன் என்ற ஜானகி கடைசிவரை வரவே இல்லை. தற்கொலை செய்துகொண்டார்.

இன்றுவரை மனைவியின் மரணம் எதனால் என்று அவருக்குத் தெரியாது, அவரைப் பொருத்தவரை மிகவும் கனிவுடனும் காதலுடனும்தான் மனைவியைத் தாங்கினார். எங்கே தவறினார் என்று யோசிப்பதற்குள் மகனை மொத்தமாய் ஜெயப்பிரகாஷம் பறித்துக்கொண்டார். திருமணத்திற்குப் பின் பெண்ணுக்கு நடப்பவையெல்லாம் கணவன் காரணமாகிவிட, ஜானகியின் தற்கொலைக்கு முரளி மீது பழிவிழுந்தது.

முதலில் மூன்று மாதங்கள் குழந்தையை முரளியிடம் தராமல் இருக்க, மகளை இழந்தவர்கள் தன் மகனிடம் ஆறுதல் தேடுகிறார்கள் என்று நினைத்துப் பொறுத்து இருந்தவர் ஒரு நாள் குழந்தையைத் தன்னிடம் தர சொல்லி சண்டையிட, ஜகன்தான் பேசினார்.

“ப்ளீஸ் முரளி, ஜானகி இப்படி நம்மை விட்டுப் போவான்னு யாரும் நினைக்கல. அம்மாவால இன்னும் அதிலிருந்து மீளமுடியல, அவனைப் பார்த்துதான் ஆறுதல் அடையுறாங்க. எப்படியும் உங்களுக்கு அவனைப் பார்க்க கஷ்டம்தானே? அத்தையும் வயசானவங்க, இங்க நாங்க எல்லாம் இருக்கோம், சௌந்தர்யா நல்லா பார்த்துப்பா” என்று மிகவும் கெஞ்சுதலாகச் சொல்ல, அதனை ஏற்றார்.

தினமும் வேலை முடியவும் மகனைப் பார்த்துவிட்டுதான் வீட்டிற்குப் போவார் முரளிதரன். இதற்கிடையில் அவருக்கு குஜராத்தில் பணியிட மாற்றமாகியிருக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து மகனைப் பார்த்துப் போவார்.

பிரசன்னாவிற்கு மூன்று வயதாக, அவனைத் தன்னுடன் அழைத்து சென்று பள்ளியில் சேர்க்கிறேன் என்று முரளி வந்தபோது ஜெயப்பிரகாஷம் விடவில்லை. குழந்தையின் முன்பே

“என் பொண்ணை உன்னை நம்பி கட்டிவச்சது பத்தாதா? என் பேரனையும் கொல்லப் பார்க்கிறியா?” என்று அபாண்டமாய்ப் பேசினார் ஜெயப்பிரகாஷ். முரளிதரன் அவரைக் கண்டுகொள்ளாமல் மகனைப் பார்க்க, அவனோ தந்தையைப் பார்க்கும் விழியில் கூட விரோதம் வைத்துப் பார்த்தான். சின்ன குழந்தையின் மனத்தில் தந்தையைப் பற்றி தவறான எண்ணத்தையே விதைத்திருந்தார் ஜெயப்பிரகாஷ்.

மொத்தமாய்த் தந்தையையும் மகனையும் பிரித்துவிட்டிருந்தார். பொறுத்து பார்த்த முரளிதரன் நீதிமன்றத்தை அணுக, அப்போது ஜெயப்பிரகாஷின் செல்வாக்கு உயர்ந்திருக்க, அதனையும் விட பிரசன்னா ‘அப்பா வேண்டாம்’ என்று அவ்வளவு அடம். அப்பாவுடன் போகமாட்டேன் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிட, முரளிதரன் மனைவியும் இல்லாது, மகனும் இல்லாது உடைந்து போனார். நிழலாய்ப் போன அம்மாவிற்காக நிஜமாய் இருக்கும் தந்தையை தாத்தாவின் சூழ்ச்சியால் இழந்தான் ப்ரசன்னவாசன்.

இருந்தும் மகனின் பாசத்திற்காக முரளிதரன் போராடாத நாட்களே இல்லை, சிறிது காலத்தில் அவர் வேலையை சென்னைக்கு மாற்றல் வாங்கி தினமும் மகனின் பள்ளியில் தவமிருப்பார். பத்து நிமிட பார்வைக்கு ஏங்கி நின்று மகனைப் பார்க்க, அவனோ அவரை நின்று ஒரு நொடி கூட பார்க்கமாட்டான். அடுத்த வருடம் அவன் யூகேஜி போக, அப்போது அவனது ஆசிரியையாக வந்தவர்தான் சாரதா. என்னவோ பிரசன்னாவிற்கு சாரதா மீது பிடித்தம் உருவாக, ‘சாரதா மிஸ் சாரதா மிஸ்’ என்று அவரைப் பற்றியே பேசுவான்.

பேரனுக்குப் பிடித்த ஆசிரியர் என்பதால் பள்ளி முடிந்தபின்னும் சாரதாவின் வீட்டிற்கே பிரசன்னாவை படிக்க அனுப்பினார் ஜெயப்பிரகாஷம். மகனைப் பார்க்க அங்கேயும் விடாது சென்ற முரளிக்கும் சாரதாவிற்கும் நாளடைவில் ஒரு நல்ல உறவு மலர்ந்திருக்க, முரளிதரனுக்கு மனைவியானார் சாரதா. சாரதாவினால் மகன் தனக்கு நெருக்கம் ஆவான் என்று முரளி நினைத்திருக்க, பிரசன்னா சாரதாவையே விலக்கி வைத்தான். தாத்தாவிடம் சொல்லி வேறு பள்ளிக்கு மாறிக்கொண்டான்.

இவர்கள் உறவை வளர்க்க நினைக்க, வளர்ந்ததென்னவோ அப்பாவின் மீதான வெறுப்புதான். முரளி எவ்வளோ முயன்றும் அவன் அவருடன் உறவுக்கொள்ளவே விரும்பவில்லை. அம்மாவின் இறப்புக்கு அப்பாதான் காரணம் என்று சின்ன வயதிலிருந்தே சொல்லி வளர்த்த தாத்தாவின் போதனை அவன் உள்ளத்தில் ஊறிப்போயிருந்தது.

மொத்தமாய் அப்பாவை வெறுத்தவனுக்கு இன்றைக்கு மட்டும் என்ன ஞானோதயம் என்று யோசனைதான் மலருக்கு. அதில் அவள் மூழ்கியிருக்க, ஜனார்த்தன் வந்து அவளை உண்ண அழைக்கவும்தான் நினைவிற்கு வந்தாள்.

“என்ன யோசனை மலர்? பிரசன்னாவைப் பத்தியா?”

“ஒரேடியா உங்க ப்ரண்ட் மாறியதன் ரீசன் என்னவோ?” என்று கணவனிடம் கேட்டாள்.

“ப்ச், அண்ணா சொல்லு மலர்” என்றதும் அவனை முறைத்தவள்

“எப்பவும் நான் அப்படி சொல்லமாட்டேன் ஜனா, மத்தவங்களை விட அவனோட வறட்டுப் பிடிவாதம், கோபம் எல்லாம் என்னைதான் பாதிச்சது. அவனோட வார்த்தைகள் என்னைக்கும் எனக்கு மறக்காது, உங்க ப்ரண்ட் என்னைப் பேசினதெல்லாம் மறந்து போச்சா என்ன?” என்ற மலருக்கு அண்ணா என்று அவள் அழைத்து அவனிடம் பேசிய நாளும், அவனது உதாசீனமும் என்றும் உள்ளத்தில் ஆறா வடுதான்!

✅ End of Episode 21
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 1 month ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top