Episode 30
ஜனா கண்ணீருடன் மலரை அணைக்க, அவளால் அந்த அணைப்பை ஏற்கமுடியவில்லை, அகத்தினில் எழுந்த ஆவேசத்துடன் அவனை உதறினாள்.
“எல்லாருக்கும் உணர்வுகள் பொதுதானே? ஆனா அதையே நான் செஞ்சா தப்பா? அன்னிக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? உங்கிட்ட சொல்லணும்னு ஒவ்வொரு நிமிஷமும் அப்படி தவிச்சேன். உங்கிட்ட சொல்ல முடியாம போனதால் கடைசி வரைக்கும் நான் யார்கிட்டயும் சொல்லவே இல்லை, என்னோட அத்தைப் பொண்ணு டெலிவரிக்காக அத்தையும் அப்பத்தாவும் யூஎஸ் வந்திருந்து என்னோட வயிறு பார்த்துதான் கண்டுபிடிச்சாங்க”
“என்னோட டெலிவரிக்காக அம்மா அங்க வந்தாங்க, என்ன பிரச்சனைன்னு கேட்டப்பவும் என்னால சொல்ல முடியல. அதுக்கும் என்னை அடங்காத மகளாதான் அவங்க பார்த்தாங்க ஜனா” என்று இப்போது அழுகையை நிறுத்தி அடக்கப்பட்ட கோபத்துடன் பேசினாள்.
ஜனாவோ,
“மலர்! உன்னைப் போய் நான் தப்பா பேசுவேனா? ஐ டிண்ட் மீன் இட், என்னை நம்பு” என்று உணர்ந்துப் பேச,
“நீ மீன் செய்யலனாலும் அதுக்கு மீனிங் அதுதான் ஜனா, அந்த ஒருதடவ மட்டும் நீ சொல்லல ஒரு நாள் நீ ஏதோ ப்ளான் வரையும்போது அதைப் பார்க்காம நான் வந்து ஹக் பண்ணினப்பவும் நீ இதையே தான் பேசின. நீ மட்டும் மூணு வருஷம் கழிச்சுப் பார்க்கிற எங்கிட்ட என்னோட விருப்பம் கூட இல்லாம கிஸ் பண்ணுவ, அதையே நான் செஞ்சா நான் தப்பா? உன்னோட தேடலுக்கு அர்த்தம் காதல்னா? அப்போ என்னோடதும் அதே காதல்தானே? எப்பவும் நாங்க ரீசிவிங் எண்ட்ல இருக்கணுமோ? உன்னோட உணர்வுகளை நான் தாங்கணும். என்னை நான் எக்ஸ்பிரஸ் செஞ்சா தப்பு” என்றவளின் வார்த்தைகளில் அனல்!
“மலர் நிஜமா உன்னை இவ்வளவு ஹர்ட் பண்ணியிருக்கேன்னு எனக்குத் தெரியலம்மா, சாரி” என்று அவன் கரகரப்பான குரலில் சொல்ல, மலர் விடவில்லை.
“எப்படி ஹர்ட் ஆகாம இருக்கும் ஜனா? உனக்கு ரொம்ப கர்வம் அதிகம் ஜனா, என்ன பார்க்கிற? அதான் உண்மை. உனக்காக நான் வீட்டை விட்டு வந்ததும் நீ என்ன செஞ்சாலும் நான் தாங்கிப்பேன் நினைச்சிட்ட, அது மாதிரி அன்னிக்கு உன்னைப் பார்க்க உன் அப்பத்தா வந்தாங்க, அப்பவும் நீ எனக்கு சப்போர்ட் செய்யல” என்றதும்,
“மலர், அவங்க வயசானவங்கடா” என்றவனை கொலைவெறியுடன் பார்த்தவள்,
“அப்போ எனக்கு வலிக்காதா? எங்கப்பா உன் அத்தையைக் கொன்ன மாதிரி நான் உன்னைக் கொன்னுடுவேன்னு சொன்னாங்க, அதைக் கேட்டு எப்படி அமைதியா இருக்க?” என்று கத்தினாள்.
“மலர், இப்படி அவங்க பேசினாங்கனு எனக்குத் தெரியாது” என்றவனை கடுமையாக முறைக்க,
“இரண்டு பேரும் கத்தவும் நான் சண்டையை ஸ்டாப் பண்ணனும்னு நினைச்சுதான் உன்னைப் பேசாத சொன்னேன். இவ்வளவு பேசுவாங்கன்னு தெரியல மலர்” என்றான் வருத்தமாக.
“எப்பவும் என்னோட சைட் நீ கேட்கறதே இல்ல ஜனா, அவங்களும் பிரசன்னாவும் எப்பவும் நான் உன்னை மயக்கிட்டேன் அப்படி இப்படின்னுதான் பேசுவாங்க…அப்படி இருக்கும்போது உன்னோட பேச்சை என்னால எப்படி தாங்க முடியும்?”
ஜனாவிற்கு அவளின் உணர்வு புரிய “மலர்! ஐ அம் சாரி” என்று அவளின் கரம்பற்ற, அதனை உதறியவள்,
“கோவத்துல நான் உன்னை விட்டுத்தள்ளிப்போனேன் ஆனா நீ என்னை மொத்தமா தள்ளி வச்சிட்ட இல்ல” என்றாள்.
“என்னை மன்னிச்சிடு மலர், உன்னை என்னையறியாமலேயே நிறையக் கஷ்டப்படுத்தியிருக்கேன் புரியுது. நீ சொன்ன மாதிரி எனக்குக் கர்வம்தான் என்னோட மலர் எனக்காக வந்துட்டான்னு ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு. நீ சண்டைப்போட்டு என்னை விட்டுப் போனதும் என்னால அதை ஏத்துக்கவே முடியல, என்னோட காதலுக்கும் கர்வத்துக்கும் பெரிய அடி”
“பின்ன சண்டைப் போட்டு நான் போறேன் சொன்னா, நீ எங்க வேணும்னாலும் போ சொல்லுவ, நான் அப்படியே இருப்பேனா?” என்றாள் இப்போதும் அந்த கோபத்தைக் காட்டியவளாக.
“உண்மையை சொல்லணும்னா நீ அதைப் பெருசா எடுத்துப்பேன்னு ஒரு பெர்சண்ட் கூட நான் நினைச்சதில்ல, வீட்டை எதிர்த்து உன்னைக் கல்யாணம் செஞ்சேன். எனக்காக நீ எல்லாம் விட்டு வந்த, என்னை விட்டுப் போவேன்னு எப்படி நினைப்பேன் சொல்லு?” என்றான் காதல் வலியில்.
“இந்த பேச்சுப் பேசினா போகாம என்ன செய்வாங்க?” என்று கடுப்புடன் மலர் கேட்டாள்.
“எங்கூட இருந்து சண்டைப் போட்டிருக்கலாமில்ல” என்று அவள் விழிகள் பார்த்துக் கேட்க,
“இப்போ தோணுது போயிருக்க வேண்டாம்னு. இங்க இருந்து உன் மண்டையை உடைச்சு நான் அமெரிக்க போனதுக்குப் பதில் உன்னை ஹாஸ்பிட்டல் அனுப்பியிருக்கணும். அது சரியா இருந்திருக்கும்” என்றாள்.
“இப்பவும் உன் கோவம் தீரலன்னா மண்டையை உடைச்சிடு” என்று அவள் கையைப் பிடித்து அவன் சீரியசாக சொல்ல, அவன் கையைத் தட்டிவிட்டாள்.
“இப்பவும் சொல்றேன் மலர், ஒரு நொடி கூட உன்னை என் மனசுல நான் குறைவா நினைச்சதில்ல. அது அந்த நிமிஷ டென்ஷன், ஆபிஸ்ல கொஞ்சம் சொதப்பிட்டேன். அதனாலதான்” என்று ஜனா தன்னை விளக்க,
“ஆபிஸ் டென்ஷன் ஆண்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கெல்லாம் கிடையாதா? உனக்கு அந்த ஆபிஸ் பிடிக்கலைன்னா படிச்சிருக்க தானே வேற ஜாப் போயிருக்கலாம், பட் எப்பவும் உனக்கு உன் குடும்பம் முக்கியம். அவங்க உன்னை ஏத்துக்கனும்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அந்த டென்ஷன் என் மேல காட்டின” என்று மலர் படபடவென பொரிந்தாள்.
“தப்புதான் மலர், வீட்ல என்னைத் தள்ளி வைப்பாங்கன்னு நான் நினைக்கல. அம்மா கூட என்னை அவாய்ட் பண்ணினாங்க அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்று ஜனா சொல்ல,
“என் அப்பா கூட எங்கிட்ட பேசல ஜனா, அந்த வருத்தம் நான் உங்கிட்ட காட்டியிருக்கேனா? நீ நம்ம கல்யாணத்தை ஏதோ பெத்தவங்களுக்குச் செஞ்ச துரோகமா பார்த்த போல, நான் அப்படி இல்ல! உன்னைக் காதலிக்கறது தப்புன்னா அந்த தப்பை ரொம்பவே ரசிச்சு செய்வேன் நான்!” என்றவளை எப்படி காதலிக்காமல் இருக்க முடியும்?
இம்மியும் இடைவெளியின்றி இறுக்கமாய் அணைக்க வேண்டும் என்று பேரலை எழுந்தாலும் அவளின் உணர்வுகளை இனியும் காயம் செய்யக் கூடாதென நினைத்தவன் அமைதியாய் அவள் முகம் பார்த்தான்.
“நான் உன்னை நிறையப் பேசியிருக்கலாம்…காயப்படுத்தியிருக்கலாம் மலர், ஆனா உன்னைத் தவிர யாரையும் ஒரு செகண்ட் கூட நான் நினைச்சதில்ல. நீ சொல்ற மாதிரி எனக்குக் கர்வம் ஜாஸ்திதான். அதுவும் உன்னால…உன்னோட காதல் கொடுத்த கர்வம்தான் மலர்! அதுதான் என்னை ரொம்ப காயப்படுத்திடுச்சு. எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும் மலர்” என்று ஜனா அகத்தின் உணர்வை அப்படியே காதலாய் அவளிடம் கடத்த அவனைப் பார்த்து சோர்வாய்ப் புன்னகை செய்தவள்,
“உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு எனக்கு நல்லா தெரியும் ஜனா, காதலுக்கு அன்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு மரியாதையும் முக்கியம் ஜனா. ஒரு வேளை காதலிக்கு அது முக்கியமில்லாம இருக்கலாம் பட் உங்க மனைவியாய் மரியாதை எனக்கு முக்கியம். யார் முன்னாடியும் என்னை விட்டுக்கொடுக்க கூடாதுனு நினைச்சேன் ஜனா, ஏன்னா நான் அப்படித்தான் இருக்கேன் இப்போவரைக்கும்” என்றவளின் காதல் அவனைக் காயம் செய்தது.
என்ன மாயம் செய்து மாற்றம் செய்யப் போகிறான் அவன் என தெரியவில்லை.
“எனக்கு உன் மேல மரியாதை இல்லைன்னு சொல்றியா மலர்?”
“மரியாதை இருக்கலாம், பட் மரியாதையா நடத்தல சொல்வேன்” என்றாள் உறுதியாக.
“எல்லாமே என்னோட தப்பா இருக்கட்டும், இப்போ நான் என்ன செஞ்சா நீ என்னை மன்னிப்ப மலர்?” என்று ஆசையைத் தேக்கி அவன் அவசரமாய்க் கேட்க,
“நான் உன்னை மன்னிச்சிட்டேன் ஜனா, என்னால மறக்கத்தான் முடியல” என்றாள் மலர்.
“சத்தியமா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, எனக்குப் பழையபடி உரிமையோட உன்னோட வாழமுடியுமா தெரியல, உன்னை விட்டும் என்னால இருக்க முடியாது” என்று சொல்லவும் ஜனா வெறுமையாய் மனைவியைப் பார்த்தான்.
இருவரிடையே மீண்டும் ஒரு அமைதி. மலர் ஜனாவைப் பார்க்க அவனின் விழிகள் நீரில் நிலைத்து இருந்தன. பிரசன்னாவின் செய்கையினால் ஏற்கெனவே ஒருவித அழுத்தத்தில் இருந்தவன், இப்போதும் அண்ணனைப் போல் தங்கையும் அவள் அகப்பாரத்தை இறக்க வைத்திருக்க, அவன் பாரம் ஏறிக்கொண்டது.
ஜனா அப்படி இருப்பது பொறுக்க முடியாத மலர்,
“தூங்கலாம் ஜனா” என்று சொல்லி எழ அவன் எழவில்லை.
“ஜனா, உன்னோட காதல்ல குறை சொல்லவே முடியாது. என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்கிட்ட, என்ன உன்னோட வாசுவும் சரியில்ல வாயில வாஸ்துவும் சரியில்ல நிறைய பேசிட்ட. போனா போகுது ஜனா இரண்டு பேரும் தனியாதானே இத்தனை நாளா ஃபீல் பண்ணியிருக்கோம். இப்ப வாங்க சேர்ந்தே ஃபீல் பண்ணுவோம்” என்று மனம் கேளாமல் மலர் அவனிடம் சகஜமாய்ப் பேசி அழைக்க அவனோ,
“இல்ல மலர், எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு. கொஞ்சம் தனியா இருக்கணும். நீ போடா” என்று சொல்ல ஜனாவின் பேச்சில் மகிழமுடியவில்லை மலரால். இருந்தும் அவன் அவ்வளவு வருத்தமாய்ப் பேச அவனை தனியே விட்டு இவள் கீழே வந்து மகளுடன் உறங்கிப்போனாள்.
அடுத்த நாள் சுதந்திரமலர் ப்ரஷ் ஆகிவிட்டு வெளியே வர ஜனாவின் கையில் காஃபியைப் பார்த்துவிட்டு,
“ரூம்கே காஃபி எடுத்துட்டு வந்துட்டீங்களா தேங்க் யூ ஜனா” என்று சொல்லி அவள் அவன் கையில் இருந்து வாங்கிக் கொண்டான். ஜனாவும் சிரித்தபடி,
“எஸ் எஸ் குடி பேபி” என்றவன் பெருமூச்சுடன் கீழே இறங்கிப் போனான். அது ஹாங் ஓவரினால் பிரசன்னா அவதிப்படுவானே என்று நினைத்து அவன் மாடிக்கு எடுத்துப் போக மனைவி வழிமறித்துக் கேட்கும்போது என்ன சொல்வான்? சாதாரணமாய் இருந்தால் பரவாயில்லை, பிரசன்னாவுக்கு என்றால் மலர் புயலாகிவிடுமே?
அதனால் மீண்டும் அம்மாவிடம் காஃபி கேட்டான்.
“இப்போதான ஜனா வாங்கிட்டுப் போன” என்ற சௌந்தர்யா,
“நீ ஒழுங்கா தூங்குறியா இல்லையாடா? இரண்டு மூணு நாளா டயர்டா தெரியற” என்று கவலையாகச் சொன்னவர் இன்னொரு காஃபி கலக்கி அவனிடம் நீட்டினார்.
“உனக்குக் கொடுத்தது எங்க?” என்று கேள்வி எழுப்ப,
“அது மலருக்குக் கொடுத்துட்டேன்மா” என்ற மகனைப் பார்த்து சந்தோஷம் அவருக்கு.
காஃபியுடன் பிரசன்னாவைப் பார்க்க போக, அவனோ எழுந்து தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். ஜனா அவன் முன் காஃபியை நீட்ட,
“எப்படி நான் இங்க வந்தேன்? நீ எப்படி ஜனா கரெக்டா காஃபி எடுத்துட்டு வர?” என்ற பிரசன்னாவிற்கு இரவு பேசியது எதுவும் நினைவில் நிற்கவில்லை.
“முதல்ல காஃபியைக் குடிச்சு உன் தலைவலியை சரி செய். அப்புறம் கேள்வி கேட்கலாம்” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு ஜனா அவன் பக்கத்தில் அமர,
ஜனாவின் பேச்சில் தெரிந்த கோபம் பிரசன்னாவிற்குப் புரிய,
“கொஞ்சமாதான் குடிச்சேன், எப்படி இப்படி ஆச்சுன்னு தெரியல” என்றான்.
“கொஞ்சமாவாடா எரும குடிச்ச? என் கண் முன்னாடியே ஒரு பாட்டிலை சாய்ச்சுக்கிட்டியே” என்று திட்ட அதிர்வுடன் ஜனாவைப் பார்த்தான் பிரசன்னா. கொஞ்சமாய்க் குடிக்க ஆரம்பித்தது மட்டுமே நினைவில் நிற்க தலையில் கைவைத்தான்.
ஜனாவோ அதைக் கண்டுகொள்ளாமல் “நீ ப்ரஷ் ஆகிட்டு காஃபியைக் குடி. இன்னிக்கு நானும் ஆபிஸ் வரேன்” என்றான்.
கீழே இறங்கி ஜனா சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு கிச்சன் பக்கமாய்ப் போன வர்ணவியை அழைத்து,
“வரு, ஒரு காஃபி” என்றான். அவனுக்கு இரவெல்லாம் உறக்கமில்லை.
“மா, அண்ணாவுக்கு ஒரு காஃபி” என்று வர்ணவி வந்து சொல்ல சௌந்தர்யா கோபமாக வெளியே வந்தவர்,
“டேய் ஜனா! எத்தனை காஃபி குடிப்ப நீ? இப்ப கொடுத்த காஃபி எங்க?” என்று மகனிடம் கேட்க,
ஜனாவிற்கு ஏற்கெனவே சோர்வு, அவனால் பிரசன்னாவிற்குக் காஃபி கொடுத்தேன் என்று சொல்ல முடியாது.
“காஃபி கேட்டது தப்பாம்மா? கொடுக்கலன்னா போங்க” என்று அவன் கோபமாய் சொல்ல,
“சரி சரி கோச்சுக்காத கண்ணா” என்றவர் காஃபி கலக்கி வந்து ஜனாவிடம் கொடுத்தார். வர்ணவி பிரசன்னாவிற்குக் க்ரீன் டீ எடுத்துக் கொண்டு போனாள்.
எப்போதும் போல் வர்ணவி மாடியேற ஜனாவிற்கு சங்கடம். ஜகன் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, அவர் கருத்தைக் கவராமல் மெல்லமாய் ஏறி வர்ணவி பின்னே மாடிக்கு வந்தவன்
“வரு, அவன் லைட்டா டிரிங் பண்ணியிருக்கான். ஜிம்ல இருக்க மாட்டான், கெஸ்ட் ரூம்ல இருக்கான்” என்று தயங்கி தங்கையிடம் சொல்ல வர்ணவியின் முகம் ஒரு நொடி வாடியது.
“என்ன அண்ணனும் தங்கையும் மீட்டீங்கா?” என்றபடி மலர் இவர்கள் இருவரும் ஒன்றாய் இருப்பது பார்த்து வர,
ஜனா மலருக்குக் கண்காட்ட, சுதந்திரமலரும்,
“என்ன டீயைக் கையில வச்சிட்டு இருக்க. போ போ உன் மாமா கிட்ட கொடு” என்று சொல்ல வர்ணவியும் பிரசன்னாவிடம் போனாள்.
பிரசன்னவாசன் வர்ணவியை சங்கடமாய்ப் பார்த்தவன்,
“சாரி வரு, கொஞ்சமா நேத்து டிரிங் பண்ணிட்டேன்” என்று சொல்ல,
“என்னாச்சு மாமா? வீட்லயே ஏன்?” என்று வருந்திப் பேசிய வர்ணவியிடம் ஒன்றும் சொல்ல முடியாதவன் அவளை இழுத்து அணைத்தான்.
“சாரி வர்ணா, கொஞ்சம் அப்செட்டா இருந்தேன்மா” என்று சொல்ல,
“அண்ணா மலரை விட்டு வருஷக்கணக்கா பிரிஞ்சு இருந்தான், அவனுக்கில்லாத சோகமா? அவன் குடிச்சானா? குடிக்கறதுக்குக் காரணம் சொல்லாதீங்க” என்றாள் கடுப்பாக.
“கோவமா?” என்று பிரசன்னா அவளை இன்னும் இறுகயணைத்து கேட்க,
“எனக்கு இது பிடிக்கவே இல்ல” என்று சொல்ல
“இனிமே குறைச்சிக்கிறேன்” என்று அவள் கன்னம் தட்டியவன்,
“டீ வேண்டாம், ஜனா எனக்குக் காபி கொடுத்துட்டான். என்னை கொஞ்சம் லேட்டா எழுப்பு” என்று சொல்லி உறங்கிப்போனான்.
இங்கு மலரோ ஜனாவைப் பிடித்து உலுக்கினாள்.
“என்ன அண்ணா நீ? உன் மாப்ள குடிக்கிறான், அவனுக்குக் காஃபி கொடுத்து கவனிக்கற?” என்றதும் அவன் முழிக்க,
“அத்தைப் பேசினது கேட்டுச்சு எனக்கு, அந்த காஃபி கூட எனக்கில்ல போல” என்றாள் நக்கலாக.
“ஹே! அவனுக்கு ஹேங் ஓவர் ஆகியிருக்கும்ல மலர்” என்று ஜனா பேச,
“குடிச்சிட்டு வரவனுக்குக் காபி கொடுத்துக் கவனிச்சா எப்படி மாறுவான்? வரு ஃபேஸ் பார்த்த தானே நீ?” என்று ஆரம்பிக்க,
“என்னடி என் அண்ணா கிட்ட காலையில சண்டைப் போடுற?” என்றபடி வர்ணவி வர, ஜனாவிற்கு மலரை நினைத்து சிரிப்பு வர அடக்கிக் கொண்டான்.
“சண்டையா? நாங்க எப்ப போட்டோம்?” என்று ஜனா மலரின் தோள் மீது கைப்போட்டு பேச,
“டேய் அண்ணா! எங்கிட்ட ஹெல்ப் வாங்கினதெல்லாம் மறந்திட்டு ஓவரா பண்ற நீ?” என்று வர்ணவி கிண்டல் செய்ய,
“என்ன ஹெல்ப்?” என்றாள் மலர்.
‘சொல்லாத’ என்று ஜனா வாயசைக்க,
“அது…நீ என்னோட வீடியோ கால் பேசுவ இல்லை, அப்போ எல்லாம் இவனும் எங்கூட உட்கார்ந்து உனக்குத் தெரியாம உன்னைப் பார்ப்பான். நீ பேசுறதெல்லாம் கேட்பான்” என்று சொல்லிவிட பாவை பார்வையின் அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை.
கணவனிடம் இருந்து தன் பார்வையை தோழியிடம் திருப்பியவள்,
“இத்தனை வருஷமா நீ இதை எங்கிட்ட சொல்லல? உங்க அண்ணாவுக்கு மட்டும் உதவி பண்ணியிருக்க, போடி” என்றாள் கோபமாக.
“ஹேய்! என்னடி சொல்ற? அவனுக்கு மட்டும் உதவி பண்ணியிருக்கேன்னா உனக்கு செய்யலன்னு சொல்றியா?” என்று வர்ணவி ஆச்சரியமாய்க் கேட்க மலர் முறைத்தாள்.
“ஏன் பிசாசே! அவன் எங்கிட்ட எப்ப மலர் பேசினாலும் எங்கிட்ட சொல்லுன்னு சொல்வான், நீ இவனைப் பத்திப் பேசினாலே அவனுக்கும் எனக்கும் ஒன்னுமில்ல, என் ப்ரண்டா பேசு அவன் தங்கையா பேசாதன்னு கத்துவியே டி?” என்று வர்ணவி குழப்பமாய்க் கேட்க,
“போ…எப்பவும் நீ அவன் தங்கச்சிதான்” என்று மலர் கோபமாய் அவர்கள் அறைக்குள் போக,
“அண்ணா என்ன சொல்றா இவ?” என்று வர்ணவி ஒன்றும் புரியாமல் முழிக்க,
“விடுடா, நான் பார்த்துக்கிறேன்” என்று சொன்னவன் மலரிடம் போக அவளோ அவன் அருகே வரவும் அவன் கன்னத்திலேயே பட்டென அடித்தாள்.
“எவ்வளவு திமிர்டா உனக்கு?” என்றவளின் கோபங்கள் ஆறவில்லை.
“இப்போ என்னாச்சு மலர்?” என்ற ஜனாவிடம்,
“உன்னோட மண்டையை உடைக்கனும்னு தோணுதுடா…” என்றவளின் முகத்தில் அளவுக்கு மீறிய கோபம், கண்களும் கலங்கின.
“உன்னைப் பார்க்காம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் நான்? அதுவும் அமிழ்தா வயித்துல இருந்தப்போ உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா நான்? யார்கிட்டவும் சொல்லவும் முடியல… ஆனா நீ என்னை அடிக்கடி பார்த்துட்டு இருந்திருக்க“ என்றவளின் முகத்தை காதலாகப் பார்த்தவன்,
“எஸ்! பார்த்தேன் மலர், வரு உங்கூட வீடியோ கால் பேசும்போது நானும் உட்கார்ந்து இருப்பேன். உன்னைப் பார்க்காம எப்படி என்னால இருக்க முடியும் சொல்லு?” என்று கேட்டு வைக்க, அது இன்னும் அவளின் கோபத்தை ஏற்றித்தான் விட்டதே தவிர கொஞ்சமும் குறைத்திடவில்லை.
“நான் மட்டும் உன்னைப் பார்க்காம கஷ்டப்பட்டேன், நீ மட்டும் என்னைப் பார்த்துட்டு இருந்திருக்க?” என்று கேட்க,
“நான் வரு கிட்ட கேட்ட மாதிரி நீயும் கேட்டிருக்கலாமில்ல, நீ அவ கிட்ட என்னைப் பத்தி பேசவே மாட்ட” என்றான் ஆற்றாமையுடன்.
“என்ன பேச சொல்ற? நீ என்னைப் பேசினதை பேச சொல்றியா? இவ்வளவு பேசுறியே ஒரு நாள் எங்கிட்ட பேச ட்ரை பண்ணியிருக்கலாமில்ல? உனக்கு அவ்வளவு அழுத்தம், செல்ஃபிஷ் டா நீ ராஸ்கல்” என்று இருகைகளாலும் அவன் இருபக்க தோளிலும் அடித்தாள். ஜனாவோ அவளை ரசனையாகப் பார்த்திருந்தவன் கொஞ்சம் கூட தடுக்கவில்லை.
சாத்வீயோ அப்போதுதான் அப்பாவைக் காலையில் இருந்து பார்க்காதவள் மாடியேறி பிரசன்னாவை எழுப்பிவிட்டிருந்தாள். குழந்தையின் வரவால் விழித்தவனுக்கு உறக்கம் களைந்துவிட, அவனே குழந்தையைப் பள்ளியில் விட்டுவிடலாம் என்று நினைத்து சாத்வீயுடன் கீழே இறங்கி வந்தவன்,
“மாமா கிட்ட அப்பாவே உன்னை ட்ராப் பண்றேன் சொல்லிட்டு வாடா” என்று சொல்லியனுப்ப, மாமாவின் அறைவாசலில் வந்து நின்ற சாத்வீயின் விழிகளில் அத்தை மாமாவை அடிப்பது விழ உடனே அப்பாவிடம் சொல்லிவிட்டாள்.
“அப்பா, அத்தை மாமாவை அடிக்கிறாங்க” என்று. பிரசன்னாவோ,
“அது சும்மா விளையாட்டுக்கு இருக்கும்டா, நீ போய் ரெடியாகு” என்று குழந்தையை விரட்டியவன் இன்று மலரிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டான், நேற்றிரவு பேசியது ஒன்றும் நினைவில் இல்லாதவனாக.
அறையில் இருந்த மலரோ,
“உன்னைப் பார்க்காம என்னால முடியல… இந்த மாதிரி ஐடியாவெல்லாம் எனக்குத் தோணலையே, அப்ப கூட திருட்டுத்தனமா என்னைப் பார்த்தியே அவ்வளவு காதல் இருந்தா நேராவே பார்த்திருந்தா நானும் உன்னைப் பார்த்திருப்பேன்ல” என்று சொல்லி சொல்லி அடித்து அப்படியே அவனின் தோளில் சாய்ந்தாள் மலர்.
Read and Share your thoughts friendss
✅ End of Episode 30
காதல் என்பது கைப்பற்றுவது அல்ல... காயப்படுத்தாமல்
Nice