Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 18

காதல் 18

“அ…அது டா அமிழ்து உன் போட்டோ எல்லாம் தாத்தா வீட்ல இருக்கு, அம்மா அப்புறம் போய் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லவும் அம்மா சொன்னால் உடனே கேட்கும் பழக்கம் அமிழ்தாவிற்கு உண்டென்பதால் அமைதியானாள்.

“மா…ஆ” என்று சாப்பாடு கேட்கத்துவங்க, மகளின் கேள்வியின் தாக்கம் மலரை அசைத்துப் பார்த்தது. வினையெல்லாம் செய்கையில் யோசிக்காதவள் இப்போது மகளின் வினாவில், அதற்குரிய விடையில் தவித்துத்தான் போனாள்.

மருமகளின் நிலைப்பார்த்த சௌந்தர்யா,
“மலர்! முதல்ல அவளுக்குச் சாப்பாடு கொடு” என்று சத்தமாய்ப் பேசவும்தான் உணர்வுப்பெற்றவள் அமைதியாக மகளுக்கு ஊட்டி முடிக்க, ஜனார்த்தன் மகளை வாங்கிக் கொண்டான்.

“நீ சாப்பிட்டு வா” என்று சொல்லி மகளைத் தூக்கிக்கொண்டு போக, கூடவே சாத்வீயும் மாமனுடன் போனாள். எல்லாரும் உண்டு முடித்து அவரவர் அறைக்குள் போக, சௌந்தர்யா கிச்சனில் எல்லாம் எடுத்துவைக்க, மலரும் அவருக்கு உதவி செய்தாள். மருமகளின் முகம் பார்த்தவர்

“நம்மளைப் பெத்தவங்களுக்குப் பதில் சொல்லாம இருந்திடலாம், ஆனா நம்ம பெத்த பசங்க கேள்வி கேட்குற அளவுக்கு வச்சிக்கக் கூடாது” என்றார் கடுமையாக. அவருக்கு பேத்தியைப் பற்றி சொல்லாத வருத்தம் இன்னும் வற்றாமல் இருந்தது.

“இந்த பேச்செல்லாம் எனக்கு மட்டும்தான் இல்லையா அத்த?” என்றாள் சுதந்திர மலரும் கோபமாக. அத்தனைப் பேரும் அவளையே குற்றம் சொல்ல தீராத உளைச்சலுக்கு ஆளானாள் அவள்.

“எங்க வீட்ல எப்பவும் நீயா தேடின வாழ்க்கைதானேன்னு பேசுறாங்க, நீங்களும் என்னையே குறை சொல்றீங்க? உங்க பையன் இதுல எங்கேயுமே இல்லை அப்படித்தானே? என்னை விட்டுப்போனன்னு ஒவ்வொருதடவையும் குத்திக்காட்டுறீங்களே அவரும்தானே என்னை விட்டு இருந்தார்?” என்றாள் தாங்கமாட்டாமல்.

“அவனைப் பேசலன்னு நீ பார்த்தியா என்ன? இப்பவும் நான் அவனைப் பேசிடுவேன் தான், ஆனா நீயே என்னைக் கேட்ப என் புருஷனை நீங்க எப்படி பேசலாம்னு? என்ன பிரச்சனைம்மான்னு எத்தனை தடவ உங்கிட்ட கேட்டுப்பார்த்துட்டேன் நான். சொன்னியா நீ?” என்றார் அவளுக்குக் கொஞ்சமும் குறையா கோபத்துடன்.

“இப்பவும் உன்னையோ அவனையோ குறை சொல்றோம்னு நினைக்காத மலர், நாங்களும் சரி உன் அம்மா அப்பாவுக்கும் நீயும் அவனும் சந்தோஷமா இருக்கணும்னு மட்டும்தான் எண்ணம். வேறெதுவுமே இல்லடா, இன்னிக்கு அமிழ்தாவுக்குத் தெரியாத புரியாத நிறைய விஷயங்கள் இன்னும் கொஞ்ச நாள் ஆனா புரிஞ்சிடும்… நீங்க பிரிஞ்சிருந்த இந்த விஷயமெல்லாம் எப்பவும் உன் பொண்ணுக்குத் தெரியாம பார்த்துக்கோ. சீக்கிரம் அவனும் நீயும் மனசொத்து வாழனும். எல்லாத்தையும் மறந்திடு, மன்னிச்சிடு” என்றவர் அவள் உம்மென்று நிற்பதைக் கண்டு,

“இப்படியே நின்னுட்டு இருந்தா அவன் திரும்பி உன்னைத் தேடி வந்துடுவான் மலர்” என்று சிரிப்புடன் சொல்ல, மலரும் தலையசைத்து மாடியேறினாள்.

அங்கு பார்த்தால் அப்பாவின் மேல் தன் சின்னஞ்சிறு கால்களை வைத்து, ஏதோ கதை சொல்லிக்கொண்டிருந்தாள் அமிழ்தா. பெயரைப்போலவே மகளின் மொழியும் அமிழ்தெனவே இருந்திட, மெல்லமாய் கணவனருகே போய் அவள் உட்கார, அவனோ முழு கவனத்தையும் பிள்ளையின் மீது வைத்திருந்தான்.

“ஐஸ்க்ரீம் சாப்பிட்டேனாப்பா, காத்ல நின்னுட்டே வந்தோம் நானும் அக்காவும் எல்லாம் பார்த்தோம்” என்று சன் ரூஃப் வழியே வேடிக்கைப் பார்த்ததை மகிழ்வுடன் மழலைமொழி பேச, தாய்மொழியும் தந்தைமொழியும் அங்கே மௌனமொழிதான்!

அமிழ்தா முன்பை விட இப்போது வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டாள். அதிலும் அம்மாவிற்குப் பிறகு அப்பாவையே அதிகம் தேடினாள். மகளின் இந்த சந்தோஷத்தையெல்லாம் பறிக்க நினைத்தாயே என்று மனது சாட, அப்படியே கணவன் மீது மெல்லமாய் சாய்ந்துகொண்டாள்.

அவனோ மகளின் மஞ்சிமத்தில் லயித்து இருந்தான். அவனுக்குமே தங்கை மகளைப் பார்க்கும் போதெல்லாம் ஒருவேளை பிரியாமல் இருந்திருந்தால் தங்களுக்கும் இந்த நேரம் ஒரு குழந்தை இருந்திருக்குமே என்ற ஆவல் அதிகமாய் இருக்கும். அப்போதெல்லாம் எதிர்ப்பார்ப்புகள் ஏகமாய் இருந்தது அவனுக்கு. என்று மகள் இருக்கிறாள் என்று தெரிந்ததோ அப்போதே எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமாய், ஏக்கமாய் உருமாறி இருந்தன.

கோபத்தைக் காட்ட முடியாத இயலாமை அவனை வாட்ட, இப்போது சுதந்திரமலர் அவன் மீது லேசாய் சாய்ந்து படுத்திருக்க, அவனுக்குமே அவளின் வாட்டம் பிடிக்காமல் இருக்க,

“இவ செம க்யூட்டா பேசறா இல்லடி?” என்றான் மகளைப் பார்த்தவண்ணம்.

அவளோ அதைக் கேளாதவளாக,
“சாரி…இவ..இவளோட யூஎஸ்ல இருந்ததாலதான் உன்னோட அவளுக்குப் போட்டோஸ் இல்ல ஜனா” என்றாள் சோகமாக. அதனையும் விட நான் இன்னும் இவனிடம் எவ்வளவு பொய் சொல்ல வேண்டி இருக்குமோ என்ற வேதனை வேறு. ஜனாவுக்கோ அவள் பேச்சைக் கேட்கவும் மனதுக்குள் சிரிப்பலை எழுந்தது.

‘என்னம்மா சமாளிக்கிறா இந்த ராங்கி’ என்று நினைத்துக்கொண்டவன்,

“அதனால என்ன? சின்னகுழந்தையெல்லாம் ரொம்ப ஃபோட்டோஸ் எடுக்க கூடாது. அவ பர்த்டே வரப்போகுது இல்ல, அப்போ நம்ம ஃபோட்டோ எடுத்து ஃப்ரேம் பண்ணி வச்சிக்கலாம், சிம்பிள் டி” என்று அவன் சிரிக்கவும்தான் அவளுக்கும் கொஞ்சம் மனது இதமானது.

இன்னும் மகள் கதைகதையாய்ப் பேச,
“ஜனா இவ பேசினா வர்ணவி மாதிரி வெளியே தான் சைலெண்ட், பிடிச்சவங்களை விடாம பிடிச்சு வச்சு இப்படி கதைப் பேசிட்டே இருப்பா. அவளைத் தூங்க வைக்கலன்னா அப்புறம் காலையில நல்லா விளையாட மாட்டா, டல்லடிப்பா” என்று மலர் சொல்ல,

“பேபி தூங்கிடுடா” என்று சொல்லி மகளைத் தன் மீது போட்டுக்கொண்டு அவன் தட்டிக்கொடுத்தான்.

“இவ்வளவு பெரிய பெட் இருக்குல்ல, அது மேல தூங்க வை, உனக்கும் வலிக்கும்” என்று சொல்ல மகளை உடனே விட மனமில்லாதவனாக,

“கொஞ்ச நேரம் தட்டிக்கொடுக்கிறேன் டி, இப்போதானே எங்கிட்ட இவ ஒட்டுறா” என்று சொல்ல, மலர் புன்னகைத்தவள் ஒன்றும் பேசவில்லை.

“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, நான் வெளியே ஹால்ல உட்கார்ந்திருக்கேன் ஜனா. நீ தூங்கு” என்றவள் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். அவர்களின் முதல் மாடி மிகவும் விஸ்தாரமானது. மொத்தம் ஐந்து அறைகள், பெரிய பால்கனி, அறைகளுக்கு நடுவே லிவிங் ஏரியா சோஃபா, டீவி எல்லாம் உண்டு. அங்கிருந்த சோஃபாவில் மலர் வந்து உட்கார்ந்து வேலைப்பார்க்க, வர்ணவி அறையைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.

சுதந்திர மலர் சுற்றம் மறந்து வேலையில் ஆழ்ந்திருக்க, வர்ணவியைக் கவனிக்கவில்லை.

“ஏன் டி தூங்காம இதையா இப்போ செய்ற? கடையில கொடுத்தாலே செஞ்சிக் கொடுப்பாங்களே” என்ற குரலில் பதறித் திரும்பினாள் மலர்.

“எரும மாடே! சொல்லிட்டு வர மாட்ட? பயந்திட்டேன் டி நாயே” என்று திட்ட,

“நான் ரூம் விட்டு வெளியே வரப்போறேன் அப்படின்னு இனிமே அனௌன்ஸ்மெண்ட் பண்றேன் போடி லூசே” என்று பதிலுக்குத் திட்டினாள்.

“என் கூட தானடி படிச்ச? எப்போ இந்த ஃபோட்டோஷாப் எல்லாம் கத்துக்கிட்ட?” என்றாள் திரையில் பார்வை வைத்தபடி. அதில் ஜனாவின் புகைப்படம் ஒரு பக்கம் இருக்க, அமிழ்தாவின் சின்ன வயது புகைப்படம் இன்னொரு பக்கம் இருந்தது.

“அது கத்துக்கிட்டேன் நானாவே” என்றவள் தோழியின் முகம் பார்த்து கொஞ்சம் உள்ளே சென்ற குரலில்,

“அமிழ்தா அப்பா அம்மா கூட ஃபோட்டோ இல்லன்னு கேட்கவும் மனசு கேட்கல, அதான் இப்படி எடிட் பண்றேன்” என்றவளின் மீது பெருங்கோபம்தான் வர்ணவிக்கு. நிஜத்தைத் தொலைத்து நிழல் தேடுகிறாளே இவள் என கோபம் வந்தபோதிலும் அவளை மேலும் வருத்த வேண்டாம் என்று நினைத்து நின்றாள்.

“ஏன்டி பேயே இந்த நேரத்துல என்ன இங்க உலாத்துற? உன் மாமா தூங்கியாச்சா என்ன?” என்று தோழியைப் பார்த்து மலர் விளையாட்டாய்க் கேட்க,

“இங்க ஒரு பிசாசு உலாத்துறதா கேள்விப்பட்டேன், அதான் வந்தேன்டி” என்றதும் மலர் முறைத்தாள்.

“ஹாஹா, சாத்வீக்குக் கொஞ்சம் த்ரோட் சரியில்ல, வெண்ணீர் கொடுக்கலாமேனு வந்தா நீ லைட் போட்டு இங்க உட்கார்ந்திருந்த, அதான் பார்த்தேன்” என்றதும்,

“அப்புறம் ஏன் இங்க நிக்கிற? போய் சாத்வீயைப் பாரு” என்றதும் வர்ணவி உள்ளே சென்றவள் சிறிது நேரத்திலேயே வெளியே வந்தாள்.

“மலர்ர்…” என்று அவள் இழுக்க,

“என்னடி இழுக்குற?” என்றாள்.

“நீ இப்படி ஃபோட்டோஸ் எடிட் பண்றேன்னு மாமா கிட்ட சொன்னதும் அவர் நீ எடிட் பண்ணினதை பென் டிரைவ்ல போட்டுத் தர சொன்னார். நாளைக்கே ஃப்ரேம் பண்ணிடலாம்ன்றார்”

தோழியை முறைத்த சுதந்திர மலர் “அவன் கிட்ட நான் கேட்டேனா ஹெல்ப் வேணும்னு, நானே எடிட் பண்ணி கடையில கொடுத்துக்கிறேன்” என்றதும்,

“ஏன் டி உன் கோவத்தை இந்த விஷயத்துல காட்டுற? வாசு அவருக்குத் தெரிஞ்ச இடத்துல சொன்னா உடனே பண்ணிக் கொடுத்துடுவாங்க. அமிழ்து கேட்கும்போது எனக்கே எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? நீதானே சொன்ன அமிழ்தா மேல எல்லா உரிமையும் எனக்கும் அவருக்கும் இருக்குன்னு, அமிழ்தாவுக்காகத்தானே கேட்கிறோம்.” என்றாள் படபடவென்று.

தோழியைக் கையெடுத்துக் கும்பிட்டவள்,
“எம்மா தாயே! நான் எடிட் பண்ணித் தரேன்டி. நீயே உன் மாமன் கிட்ட கொடுத்துடு. உன் புருஷன் உன்னை நல்லா டிரெயின் பண்ணி அனுப்பி இருக்கான்னு எனக்குத் தெரியுது” என்றாள் நக்கலாக.

“நீ எனக்கு எடிட் பண்ணிட்டுக் கொடு மலர். ரொம்ப நேரம் தூங்காம இருக்காத, அப்புறம் கூட பண்ணலாம்” என்று சொல்லிப் போனாள். ஆனால் மலர் ஒன்று நினைத்தால் முடிக்காமல் விடமாட்டாள், அந்த உறுதி எல்லா விசயத்திலும் அவளுக்கு உண்டு. அதனால் மகளின் புகைப்படங்களில் எல்லாம் கணவனுடன் இருப்பது போல் எடிட் செய்த பின்னே தான் உறங்கினாள். அதுவும் இருந்த களைப்பிறகு எழவும் முடியாமல் லேப்டாப்பை ஷட் டவுன் செய்தவள் அந்த சோஃபாவில் அப்படியே உறங்கிப்போனாள்.

பிரசன்னா ஜிம் ரூம் செல்ல காலையில் வெளியே வரும்போது மலர் அப்படி களைப்பில் உறங்கக் கண்டவன் கொஞ்சம் கோபத்துடன் ஜனார்த்தனின் அறைக்குள் புகுந்தான். அவனும் அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவன் தோள் மீது பட்டென்று அடிபோட, அவன் கத்திக்கொண்டே பிரசன்னாவைப் பார்க்கவும்,

“என்னடா காலையில அடிக்கிற?” என்று கைகளை நீட்டி மடக்கி எழுந்து மெத்தையில் உட்கார்ந்தவனின் பார்வை அருகே அமைதியாய் உறங்கும் அமிழ்தாவை வாஞ்சையுடன் வருடியது. செல்லமாய் மகளின் கன்னத்தைக் கிள்ளியவனைப் பார்த்த பிரசன்னாவிற்கும் கண்கள் நிறைந்தன.

“டேய் ஜனா உன் பொண்ணைக் கொஞ்சினது போதும், எங்கே உன் மலர்?” என்று கேட்கவும் அவனின் முகத்தில் கிண்டலாய் ஒரு பார்வை.

பிரசன்னா கண்களினாலே ‘என்ன’ என்று கேட்க,

“இல்ல உன் வாயில இருந்து உன் மலர்னு கேட்க அப்படியே கிஸ்ஸாவா இருக்கு மச்சி” என்றவனின் விழிகள் மனைவியைத் தேட இரவெல்லாம் அவள் செய்த வேலையை சொன்னவன்,

“அப்படியே மேடம் அங்கேயே தூங்கிட்டாங்க, போய் எழுப்பி உள்ள தூங்க சொல்லு” என்றதும் ஒரு மார்க்கமாய்த் தன் நண்பனைப் பார்த்தான்.

“என்னடா அக்கறையெல்லாம் ரொம்ப அதிகமா இருக்கு?” என்றான்.

பிரசன்னாவோ “இருந்தா என்ன தப்பு?” என்றான் பட்டென்று. இதற்கு மேல் எதாவது பேசினால் பிரசன்னா கோபம் கொள்வான் என்று ஜனாவும் ஒன்றும் பேசாமல் மனைவியிடம் வந்து அவளை எழுப்ப, உறக்கத்தினில் கண்களையே திறக்க முடியவில்லை மலரினால்.

“உள்ள வந்து தூங்கலாம் மலர்” என்று மெதுவாய் அவன் சொல்லி எழுப்ப, மலரும் முயன்று எழ முடிந்தால் தானே? இரவெல்லா உறங்கா விழிகள், கூடவே ஒரே இடம் உட்கார்ந்து வேலை செய்ய முதுகெல்லாம் வலி, தாங்கவே முடியவில்லை. எழ முயன்றவளின் கண்கள் கலங்கிப்போக,

“முடியல ஜனா” என்று கண்களை மூட, சுற்றிப்பார்த்தவன் பட்டென மனைவியைத் தூக்கிக்கொண்டான். அறைக்குள் செல்லப்போகையில் இது வர்ணவியின் பார்வையில் விழ,

“டேய் அண்ணா!” என்று அவள் கொஞ்சம் துள்ளலாய்க் கத்திவிட, மனைவியின் சத்தம் கேட்டு வெளியே வந்த பிரசன்னாவுக்கும் அக்காட்சியைக் கண்டு மனம் குளிர, மனைவியைப் பார்த்தான்.

“ஏன் டி இப்படி கத்துற? கத்துற கத்துல எல்லாரும் வந்துடுவாங்க, உன் ப்ரண்ட் வந்ததும் உன் வாய்ஸ்ல வால்யூம் கூடிப்போச்சு வர்ணா” என்றான் ஸ்டிரிக்ட் ஆபிஸராக.

“என் வாய்ஸை இத்தனை நாள் அவ கிட்ட வாடகைக்கு விட்டேன் பாருங்க, ஒரு ஜோஷ்ல கத்தக் கூட கூடாதா?” என்று கொஞ்சம் கடுப்பாக சொன்னவள் குழந்தையை எழுப்பி ஸ்கூலுக்குக் கிளப்பினாள்.

அறைக்குள் வந்த ஜனா மலரை படுக்க வைக்க, மலரோ ஜனாவின் கைகளை விடவில்லை. நன்றாய் அவனுள் சுருண்டுகொண்டாள். அவனை நகர விடாமல் நங்கை பிடித்து உறங்க,

“டார்ச்சர்டி ராங்கி நீ!” என்று செல்லமாய் சொல்லி அவளைக் கட்டிக்கொள்ள, அமிழ்தா எழுந்து அம்மாவிடம் செல்ல, ஜனா மகளைப் பல் துலக்க வைத்தவன் அவளை அழைத்துக்கொண்டு கீழே போனான்.

“மா, பாப்பாவுக்குப் பால் எடுத்துட்டு வா” என்று சொல்லி சோஃபாவில் உட்கார,

“தாத்தா, நானு” என்று சொல்லி அப்பாவிடமிருந்து செய்தித்தாள் வாசித்த தாத்தாவிடம் தாவப்பார்த்த மகளைப் பிடித்தான் ஜனா.

“பேபி! நீ பால் குடிச்சிட்டு படிக்கலாம்” என்று சொல்ல, சௌந்தர்யா பேத்திக்குப் பால் எடுத்து வந்து மகனிடம் கொடுக்க, சாத்வீ பள்ளி சீருடையில் தாத்தா என்று ஓடி வர,

“வாடா கன்னுக்குட்டி” என்று பேத்தியைத் தூக்கி மடியில் உட்காரவைத்தார் ஜகன்.

“சாத்வீ ஸ்கூலுக்கு டைமாச்சு, முதல்ல சாப்பிடு, அத்தை சாப்பாடு ரெடியா?” என்று கேட்டப்படி தனது டையைக் கட்டிக்கொண்டு மகளிடம் வந்தான் ப்ரசன்னவாசன்.

“எல்லாம் ரெடி, சாத்வீ வாம்மா” என்று பேத்தியை அழைத்து டைனிங் டேபிள் மீது உட்கார வைத்து ஊட்ட,

“அத்தை அவளை சேர்ல உட்கார வச்சு ஊட்டுங்க” என்று சொல்ல,

“மாமா…!” என்று பல்லைக் கடித்தபடி வந்தாள் வர்ணவி.

“எனக்கு சாப்பாடு வை வரு, இவளை ஸ்கூல்ல விட்டு நான் போகணும்” என்று சொன்னவன் மகளைப் பார்க்க, சாத்வீ உடனே சமத்தாக அப்பாவின் அருகே நாற்காலியில் உட்கார்ந்தாள்.

இதனைப் பார்த்த அமிழ்தா, “அப்பா, நானு ஸ்கூல்?” என்று கேட்க,

“சீக்கிரம் மாமா உன்னை ஸ்கூல் சேர்த்துவிடுறேன் டா பேபி” என்றான் பிரசன்னா.

“அப்பா என் ஸ்கூல் என் ஸ்கூல்” என்று சாத்வீகா உற்சாகமாய்க் கத்த,

“ஓகே ஓகே உன் ஸ்கூல்ல பாப்பாவை சேர்ப்போம்” என்றான் பிரசன்னா.

அப்போது அமிழ்தாவின் ‘அம்மா’ என்ற அழைப்புக் கேட்க திரும்பிப் பார்த்தால் சுதந்திர மலர் வந்துகொண்டிருந்தாள். உடனே பேச்செல்லாம் நின்றுவிட அமிழ்தா அம்மாவிடம் ஓடிப்போய்,

“மா, நானு அக்கா ஸ்கூல் மாமாவோட போறேன்” என்று சந்தோஷமாய் மிழற்றினாள்.

காலையில் எழும்போதே மலருக்கு முதுகு வலி, ஆனால் அதையும் தாண்டி இன்று அலுவலகத்தில் முக்கிய வேலை அவளுக்கு. அதனால் கடினப்பட்டு கண்விழித்து தயாராகி வந்தால், மகளின் முதல்பேச்சே பிரசன்னாவைப் பற்றியதாய் இருக்க, ஜனா எப்போதும் இப்படித்தான். பிரசன்னாவைக் கேட்கணும், பிரசன்னாவுக்குப் பிடிக்கும் என்று சொல்வான். இன்று மகளும் அப்பாவைப் போல் பேச, அந்த பேச்சில் கொஞ்சமும் பிடித்தமில்லை. அதனால் உடனே,

“என் பொண்ணை ஸ்கூல்ல சேர்க்கிறதைப் பத்தி மத்தவங்க முடிவெடுக்க வேண்டாம்” என்று சொல்லிவிட, பிரசன்னாவின் முகத்தைத்தான் அனைவரும் பார்த்தனர். அவன் அமைதியாக இருக்க, வர்ணவிக்குக் கணவனை சொல்லவும் பொறுக்கவில்லை, அவள் பேச நினைக்கும் முன் ஜனா பேசியிருந்தான்.

“அது என்ன என் பொண்ணு? நம்ம பொண்ணைப் பத்தி முடிவெடுக்க பிரசன்னாவுக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்றான் மலரைப் பார்த்து அழுத்தமாக.

✅ End of Episode 18
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 1 month ago

Nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top