Episode 20
“என்னடி அப்படி பார்க்குற நீ?” என்று பிரசன்னாவின் படத்தைப் பார்த்த மலரிடம் வர்ணவி கேட்க, ஒன்னுமில்லை என்று சொல்லி அறையை விட்டு வெளியேறினாள் மலர்.
“அத்த, உங்க போன்” என்று சாத்வீ போனைக் கொண்டு வந்து மலரிடம் கொடுக்க, அவளின் அம்மாதான்.
“என்னடி வீட்டுக்கு வரவே மாட்டேங்கிற, அமிழ்தாவைப் பார்த்து எத்தனை நாளாச்சு? மாப்பிள்ளையை நாங்க ஹாஸ்பிட்டல்ல பார்த்ததோட சரி இன்னும் பார்க்கவே இல்லை”
“அப்போ வந்து பாருங்கம்மா” என்றாள் பட்டென்று.
“என்ன மலர் நீ? நாங்க எப்படி அங்க வரது?” என்றார் தயக்கமாக.
“ஏன் வந்தா என்ன?” என்று மலர் கேட்க,
“அங்க வந்தா தேவையில்லாத பிரச்சனை வரும் மலர்”
“அப்போ கடைசி வரைக்கும் இங்க வராமலே போயிடுவீங்களா? இல்ல நீங்க இங்க வரலன்றதால எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கா?” என்றாள் கோபத்துடன்.
“போதும் மலர், இப்போ என்ன நாங்க வரணும் அதானே? சரி அப்பா கிட்ட பேசுறேன். அவங்களுக்கும் நம்ம கிருஷ்ணா கல்யாணத்துக்குப் பத்திரிக்கை வைக்கனுமில்லை”என்றவர் சிறிது நேரத்திற்கெல்லாம் போன் செய்து நாளை வருகிறோம் என்று சொன்னார்.
அதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வதற்குள் அமிழ்தா அத்தையிடம் தூங்கிக் கொண்டிருந்தவள், அம்மாவிடம் எழுந்து வந்து தூக்கிக் கொள்ள சொல்லி கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
“என்ன வேணும் என் பேபிக்கு? என்ன செஞ்சாங்க என் பேபி இன்னிக்கு?” என்று மகளின் தலையை ஆசையாய் வருடினாள்.
“அமிழ்து குட்டி அம்மாவோட இருக்காங்களா?” என்றபடி ஜனாவும் அறையை விட்டு வந்தான். மூவரும் கீழே செல்ல அங்கு ஜகன், பிரசன்னா, ரெங்கநாயகி எல்லாரும் உட்கார்ந்திருக்க
பிரசன்னா அமிழ்தாவிடம்,
“அமிழ்து! மாமா கிட்ட வாங்க” என்றான். உடனே அமிழ்தாவை இறக்கிவிட்டாள் சுதந்திரமலர்.
“நீங்க சாத்வீக்கா கூட டெய்லி ஸ்கூல் போறீங்களா?” என்று குழந்தையை மடியில் உட்காரவைத்து அவன் கேட்க, மலர் என்ன சொல்வாளோ என்று எல்லாரும் அவளைப் பார்த்தனர்.
அமிழ்தா வழக்கம்போல் அம்மாவைப் பார்க்க, தந்தைக்குப் பொறாமை. ஜனாவிற்கு மகள் ஒவ்வொன்றிற்கும் தன்னை தவிர்த்து தாயைத் தேட அது தந்தையாய் ஒரு தகிப்பினைக் கொடுக்க, முகத்தினில் சோர்வு வந்து ஒட்டிக்கொண்டது. அதைக் கண்டுகொண்டான் பிரசன்னா.
“ஸ்கூல் போறேன்னு சொல்லுடா அமிழ்து” என்று மலர் சொல்லிக்கொடுக்க,
“போதேன் மாமா” என்றாள் அமிழ்தா.
சௌந்தர்யா மலரைப் பார்த்தவர்,
“உன்னை நான் காஃபி குடிக்க வர சொல்லி எவ்வளவு நேரமாச்சு மலர்? ஒன்னும் சாப்பிடாம சுத்திட்டு இருக்க” என்று திட்டினார்.
“ஸோ ஸ்வீட் அத்தை நீங்க” என்றவள் அவருடன் கிச்சனுக்குள் போக, வர்ணவி சாத்வீயை ஹோம்வொர்க் முடித்து கீழே அழைத்துவந்தாள். அமிழ்தா ரங்க நாயகியிடம்,
“அப்பத்து, கால் பெயின் போச்சா” என்று குனிந்து அவரின் கால்களைப் பார்க்க ரங்க நாயகியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.
“என் செல்ல ராசாத்தி” என்று அமிழ்தாவை அணைத்துப் பிடித்துக்கொண்டார்.
“என்னம்மா கால் வலி இன்னும் இருக்குதா?” என்று ஜகன் அம்மாவின் அருகே உட்கார்ந்திருந்தவர் கேட்க,
“என்னிக்கு அது போச்சு எனக்கு? உன் பேத்திக்கு இருக்க அக்கறை கூட இந்த வீட்ல ஒருத்தருக்குமில்லை, இதே என் பொண்ணு இருந்திருந்தா என்னைப் பார்த்திருப்பா” என்றார் கண்ணீருடன்.
“சௌந்தர்யா” என்று ஜகன் உடனே மனைவியை அழைக்க,
“என்னாச்சுங்க?” என்று வந்தார் சௌந்தர்யா.
“அம்மாவுக்குக் கால் வலி இருக்கு. என்ன கவனிக்கிற நீ?” என்று மனைவியைப் பார்த்தார்.
“அத்தை, வெந்நீர் வச்சு எடுத்தாரவா?” என்று சௌந்தர்யா கேட்க,
“ஒன்னும் வேண்டாம் சௌந்தரி, என்னமோ என் மகன் சொல்லவும் என்னை நீ கவனிக்க வேண்டாம்” என்றார் எடுத்தெறிந்து.
அதில் சௌந்தர்யா மனம் சுணங்க, கிச்சனுக்குள் போக
“என்னத்த போகும் போது நல்லா போனீங்க, இப்போ ஏன் டல்லா இருக்கீங்க?” என்றாள் மலர்.
“என்ன செய்ய எல்லாம் தலையெழுத்து அப்படி, மருமக வந்தும் மாமியார் கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கேன் நான். எங்கிட்ட கால் வலின்னு சொல்றதுக்கு என்ன, புள்ளை வந்தவுன்ன சொல்லி என்னைப் பேச்சு வாங்க வைக்கணும்” என்று புலம்பியவர் வர்ணவியிடம்,
“தோசை சுட்டு வைங்க இரண்டு பேரும், நான் இட்லி ஊத்திடுறேன்” என்றார்.
“அப்பா ரொம்ப பேசினாராம்மா?” என்று வர்ணவி பாவமாய்க் கேட்க,
“பேசுவார் பேசுவார்! வரட்டும் அப்புறம் சௌ கௌன்னு பேசிக்கிறேன் அவரை. எவ்வளவு நான் பார்க்கிறது? உன்னைப் பார்க்கணும், இவளைப் பார்க்கணும், மொத்த வீட்டையும் பார்க்கணும். எங்கப்பா என்னை பக்கத்து ஊர்ல நாலு மாடு வச்சிருக்க பண்ணையார் வீட்டுப்பையனுக்குக் கட்டித்தரேன்னு சொன்னார். நான்தான் மெட்ராஸுக்கு ஆசைப்பட்டு இந்த டார்ச்சர் ஃபேமிலில மாட்டிக்கிட்டேன்” என்று சொல்லவும் வர்ணவிக்கு இது பழையதுதான், ஆனால் மலருக்குப் புதிதாய்க் கேட்க சிரிப்புப் பிறீட்டது.
“அய்யோ அத்தை…ஹாஹா எங்க மாமாவைக் கட்டினதால பாருங்க மாடுலர் கிச்சன் உள்ள வீட்ல இருக்கீங்க” என்று சொல்லி இன்னும் அடக்கமுடியாது சிரிக்க,
“என்ன பெரிய மாடுலர் கிச்சன்? இதுங்களை எல்லாம் மேய்க்கிறதுக்கு நான் நிம்மதியா மாடு மேய்ச்சிருப்பேன்” என்று சொல்லிக் கொண்டே சட்னிக்குப் புதினாவை அரைத்தார்.
“ஏன் வரு? நாலு மாடுக்கு ஓனரா இருக்க வேண்டிய அத்தையை இப்படி நாலு கம்பெனி ஓனரா ஆக்கிக் கொடுமைப் பண்றீங்களே” என்று சிரிக்காமல் மலர் கிண்டல் செய்ய, அவளின் கிண்டலில் சிரித்தார் சௌந்தர்யா.
“இன்னும் கூட நல்ல சிரிங்க அத்தை, அப்போதான் உங்க பெயருக்கு ஏத்த மாதிரி சௌந்தர்யமா இருக்கும்” என்று அவரின் தோளை மலர் வாஞ்சையுடன் பற்றிக்கொள்ள,
“உனக்கென்னம்மா உனக்கு நல்ல மாமியார், நீ சிரிப்ப எனக்கு அப்படியா?”என்றார் சௌந்தர்யா.
“பார்த்தியா? உங்கம்மா உங்கண்ணா மாதிரி சரியான செல்ஃப் டப்பா, நல்ல மாமியார்னு சைட்ல அவங்களுக்கு செர்டிஃபிகெட் கொடுத்துக்கிறாங்க” என்றாள்.
பிரசன்னா ஜனாவை வாசலுக்கு அழைத்துவந்தவன்,
“ஏன் ஜனா இப்படி இருக்க? இவ்வளவு டல்லா?” என்றதற்கு
“அதை நானும் கேட்கலாம்டா? நீயேன் ஷேவிங் செய்யாம இருக்க?” என்றான் ஜனா.
“அது ஆபிஸ் வொர்க் நிறைய, நீ சொல்லு” என்று பிரசன்னா அவன் பேச்சை கத்தரித்தான்.
“அமிழ்தா எதுனாலும் உடனே மலர் முகத்தைத்தான் பார்க்கிறாடா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றதும் அவன் தோளில் தட்டியவன்,
“சாத்வீ கூட வர்ணவியைத்தான் எல்லாத்துக்கும் எதிர்ப்பார்ப்பா, அதுக்குப் போய் ஃபீல் பண்ணலாமா? நம்ம எப்பவும் வீட்ல குழந்தைங்க கூடவே இருக்கறதில்லை, அவங்க கூட யார் அதிக டைம் ஸ்பெண்ட் செய்யறாங்களோ அவங்களோட க்ளோஸா இருக்கறதுதானே இயல்பு” என்றான் பிரசன்னா.
“மலர் யூஎஸ் போகாம இருந்திருந்தாலும் கூட இதான் நடந்திருக்கும், ஸோ கவலையை விடு மச்சான்” என்று ஜனாவைத் தேற்றியப் பிரசன்னாவை ஜனா ஆராய்ச்சியாகப் பார்த்தான்.
“இப்போவெல்லாம் மலருக்கு ரொம்ப சப்போர்ட் செய்ற. அவளுக்கே இது தோணியிருக்கு, என்னடா மலர்ந்தும் மலராத மாலை மலர் போலவா?” என்ற ஜனாவின் முதுகில் தட்டியவன்
“அது பாதிமலர் டா இடியட்” என்றதும் ஜனா சிரித்தான்.
“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம சமாளிக்கிற இல்ல நீ” என்றான் ஜனார்த்தன்.
எல்லாரும் உண்டு முடித்து அவரவர் அறைக்குள் புகுந்து கொள்ள, மலர் ஜனாவிடம் ஒரு தைல பாட்டிலை நீட்டி,
“இதைப் போய் உங்க ஆத்தா கிட்ட கொடுத்துட்டு வாங்க” என்றாள்.
“அவங்களுக்கு ரொம்ப கால்வலின்னு அத்தை சொல்லிட்டு இருந்தாங்க, இந்த தைலம் எங்க ஆத்தா யூஸ் பண்ணினாங்க. நல்லா கேட்கும், போய் கொடுங்க” என்று சொல்லவும் அவன் பார்வையில் எப்போதும் போல் மலரின் மீதான ப்ரியங்கள் கூடிப்போக, ரசனையாய்ப் பார்த்தவன் அவளின் கன்னத்தைப் பிடித்து,
“அமிழ்தா அப்படியே உன்னை மாதிரி மலர்” என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட்டான்.
அடுத்த நாள் வழக்கம்போல் ஆபிஸ் கிளம்பிப் போனவள் ஆறு மணி போல் வர, அப்போதுதான் தன் வீட்டில் இருந்து அம்மாவும் அப்பாவும் அரைமணி நேரத்தில் வருவதாகச் சொன்னது நினைவில் வர சௌந்தர்யாவிடம் போனாள்.
“அத்தை, அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க” என்றதும் சௌந்தர்யா முழித்தார்.
“அத்தை மாமாவெல்லாம் இருக்காங்களே மலர், பிரசன்னா வேற இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவானே” என்று கவலையாய் இழுக்க,
“அதுக்காக அவங்களை வரவேண்டாம்னு சொல்லணுமா அத்த?” என்றாள் மலர் கோபத்துடன்.
“அப்படி இல்ல மலர், திடீர்னு நீ சொல்லவும்” என்று நிறுத்திவிட்டார்.
“நீங்கதானே அத்தை வார்த்தைக்கு வார்த்தை இந்த வீட்டு மருமகன்னு சொல்வீங்க, அதனால்தான் அந்த உரிமையில என்னோட அப்பா, அம்மாவைக் கூப்பிட்டேன். அவங்களும் இங்க விருந்து சாப்பிட வரல, கிருஷ்ணா கல்யாணத்துக்கு உங்களைக் கூப்பிடதான் வராங்க” என்றவள் கணவனிடமும் போய் சொல்ல, அவன்,
“அதுக்கென்ன வரட்டும்” என்றுவிட்டான். மலருக்குத் தெரியாமல் பிரசன்னாவிற்கு மெசெஜ் போட்டுவிட, இங்கே ஜகனை அழைத்துவிட்டார் சௌந்தர்யா. அரைமணி நேரத்தில் சரியாக முரளிதரனும் சாரதாவும் வீட்டிற்கு வந்தனர்.
ஜனார்த்தன் அவர்களை வரவேற்க, டீவி பார்த்தபடி ஜெயப்பிரகாஷ் ஹாலில் உட்கார்ந்திருந்தார்.
யாரென எட்டிப் பார்த்தவர் முரளிதரனைப் பார்த்துவிட்டு முறைக்க, ரங்க நாயகியும் வாசலைப் பார்த்தார். அதற்குள் முரளியும் சாரதாவும் உள்ளே வந்திருந்தனர். வர்ணவி,
“வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி” என்று வரவேற்று உட்கார சொல்ல, பேரனையும் பெயர்த்தியையும் பார்வையால் எரித்தார்கள் ரங்க நாயகியும் அவர் கணவரும்.
மலர் குழந்தைகளுடன் அப்பாவின் அருகே வந்து நிற்க,
“அமிழ்தும்மா” என்று முரளி அமிழ்தாவைத் தூக்க, சாத்வீயை சாரதா பிடித்துக்கொண்டார்.
“உட்காருங்க சாரதா” என்று சௌந்தர்யா சொல்ல,
“யாரைக் கேட்டு இவங்க இந்த வீட்டுக்குள்ள வந்தாங்க, இவ வரும்போதே தெரியும் இப்படி கொஞ்ச கொஞ்சமா எல்லாரும் உள்ளே நுழைஞ்சிடுவாங்கன்னு, என் குடும்பத்தை நாசம் பண்ணினது பத்தாதடா பாவி” என்று ரங்க நாயகி பெருங்குரலெடுத்து முரளிதரனை கத்தினார்.
அவரும் பொறுமையிழந்து,
“நான் இங்க என் பொண்ணையும் மாப்பிள்ளையும்தான் பார்க்க வந்தேன். உங்க பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல அவசியமில்ல” என்றதும் தந்தையை நினைத்து மலருக்கு மனம் வருத்தமாக, கணவனைப் பார்த்தாள்.
மனைவியைப் பேசியதும் ஜெயப்பிரகாஷ்,
“உன் பொண்ணை வச்சு இந்த வீட்டுக்குள்ள நுழைய பார்க்கிற வெட்கமாயில்ல, என்ன சௌந்தர்யா என் மகன் இல்லாத நேரமா பார்த்து இவங்களோட உறவாடுறியா?” என்றார் கர்ஜனையாக.
“தாத்தா! இவங்க என்னோட மாமனார், மாமியார். அதை மனசுல வச்சுப் பேசுங்க” என்று ஜனார்த்தன் பேச,
“டேய்! இது என் வீடு, யார் வரணும் போகணும்னு நான்தான்டா முடிவு செய்வேன்” என்றார் ஜெயப்பிரகாஷம்.
“எனக்கும் இந்த வீட்ல உரிமை இருக்குன்னு நினைக்கிறேன் தாத்தா” என்ற ஜனாவை முறைத்தவர்,
“அதுக்குன்னு கண்டவங்க எல்லாம் என் வீட்ல நுழையக் கூடாது” என்றார் ஆத்திரமாக.
“என்னோட அப்பாவைப் பேச உங்களுக்கு முதல்ல என்ன உரிமையும் தகுதியும் இருக்கு?” என்று கேட்டது சுதந்திரமலர் அல்ல, பிரசன்ன வாசன்!
அதில் மொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் உறைய, அவன் பின்னால் வந்த ஜகன் அப்படியே மருமகனின் பேச்சில் சிலையென நின்றுவிட்டார்.
✅ End of Episode 20
Nice