யுவியின் கேள்விக்குப் பதில் தெரிந்தாலும் தன் மனதை வெளிக்காட்டாத ரசி,
“எனக்கு இப்போ க்ளாஸ் இருக்கு” என்று சொல்லி வகுப்பறையினுள் நுழைந்து கொண்டாள்.
அன்று மாலையும் யுவி வருவதற்காகக் காத்திராமல் ரசிகா வீட்டுக்கும் சென்றுவிட்டாள். யுவிக்கு தோழி மீது கோபம் வந்தாலும் அவளுக்குப் போனில் தொடர்பு கொள்ள முயல, ரசிகா அதனையும் எடுக்கவில்லை.
கரம் வைத்து மறைத்தால் கதிரவன் மறையுமோ? காதலும் அப்படியே!!
ரசிகாவிற்கு யுவியை எதிர்கொள்ள அச்சமாய் இருந்தது. இந்த உலகில் தானாய் நாம் வாழ்வில் தேடிக்கொள்ளும் முதல் உறவு ‘நட்பு’. ஆயிரமாயிரம் வேற்றுமை இருந்தாலும் நட்பிற்கு அது எதுவும் கண்ணில் தெரியாது.
காதல் எந்தளவு உன்னதமோ புனிதமோ அதனையும் விட ஒரு படி மேல்தான் நட்பெனும் உணர்வு! காதலைப் போலவே எவ்வுயிர்க்கும் பொதுவான உணர்வு. சிலரிடம் கோபம் காட்டவே முடியாது, காட்டினாலும் வெகு நேரம் நீடிக்காது. அப்படியொருத்திதான் யுவராணி.
ரசிகாவின் கல்லூரித் தோழி, காதல் மட்டும் ஜென்ம ஜென்ம உணர்வுத் தருமா என்ன? நட்பு கூட தரும் என்று நினைக்க வைத்தவள். இயல்பாய்த் தொடங்கிய நட்பு இத்தனை ஆண்டுகளில் நெருக்கமாய் மாறிவிட்டிருந்தது.
மறு நாள் கல்லூரிக்குச் சென்றால் இவளுக்கு முன்னே வந்து காத்திருந்தாள் யுவராணி. ஸ்டாப் ரூமில் யுவியைக் கண்டு இவள் திகைத்துப் போனாள், இவ்வளவு சீக்கிரம் வரும் ஆளா இவள்?
“என்ன இன்னிக்கு எப்படி எங்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறதுன்னு பார்க்கிறியா நீ?” என்ற யுவியின் கேள்விக்கு ரசிகாவோ புன்னகையுடன்,
“உன்னை விட்டு எஸ்கேப் ஆகுற ஐடியா எல்லாம் எனக்கு இல்லையே” என்று சொல்ல,
“நல்லா நடிக்கிற நீ, ஒழுங்கா நேத்து கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு?” என்று யுவி பிடிவாதமாய் இழுக்க,
“இன்னிக்கு வெள்ளிக்கிழமை, கேண்டீன்ல சூடா மசால் வடை போட்டிருப்பாங்க, வந்தா வாங்கித் தரேன்” என்றதும்,
“ஓ மை காட்! வெள்ளிக்கிழமையா? எப்படி மறந்தேன் மசால் வடையை” என்று சொல்லிக் கொண்டே யுவி வேகமாய் எழ, ரசிகாவும் ஒரு ரகசியப் புன்னகையுடன் கூடவே சென்றாள்.
மசால் வடையை வாங்கி இருவருமாக உண்ணும்போதே,
“மசால் வடையெல்லாம் ஓகே, என் கேள்விக்கு என்ன பதில்?” என்று யுவி அதிலேயே நிற்க,
“என்ன கேள்வி?” என்றாள் ரசிகா, ஒன்றும் தெரியாததைப் போல்.
“நீ சர்வா ஸாரை லவ் பண்றியா?” மீண்டும் அழுத்தமாய் வந்த கேள்வியில்,
“இல்லை” என்றாள் ரசிகா.
“பொய் சொல்ற டி நீ”
யுவி நம்பவில்லை.
“பொய் சொல்லி என்னாவாகப் போகுது?” ரசிகா கடுப்பாய்க் கேட்க,
“அதே அதே! பொய் சொல்லி என்ன ஆகப்போகுது? உண்மையை சொல்லு. நீ லவ் பண்றன்னு எனக்குத் தெரியுது”
“எப்படி தெரியுது”
“அதை ஏன் நான் சொல்லணும்?” என்றாள் யுவி அலட்சியமாக.
“யுவி! உனக்குப் புரியலடி. இது காதலான்னு எனக்குத் தெரியல, அப்படியே இருந்தாலும் அது வேண்டாம்” என்றாள் உறுதியாய்.
“ஏன் வேண்டாம்?” என்ற யுவி வித்தியாசமாய்த் தெரிந்தாள் ரசிகாவிற்கு.
“பார்த்தியா? இதே லுக் இப்படிதான் நீ சர்வரை சைட் அடிக்கிற” என்று சிரித்த யுவி இன்னும் வேறாய்த் தெரிந்தாள்.
“என்னடி இப்படி பார்த்து வைக்கிற? மூணு மசால் வடை தின்னது குத்தமா? கண்ணு வச்சுத் தான் நான் இளைச்சுப் போய்ட்டேன்” என்றதும்,
“இல்ல முன்னாடி நீ எப்படி பேசின? இப்போ இப்படி பேசுற?”
“முன்னாடியும் முன்னாடிதானே வாய் இருந்துச்சு, தலைக்குப் பின்னாடியா இருந்துச்சு? சேம் வாய்! சேம் டாக்” என்று தன் முகத்தையும் வாயையும் சுற்றி காற்றில் வட்டம் போட்டு யுவி சொல்ல,
“கிண்டலா?”
“இப்ப நான் சுண்டலான்னு கேட்பேன், நீ ரைமிங்கா மெண்டல்னு சொல்லுவ” யுவி பாட்டிற்கு அவள் இஷ்டம் போல் பேச,
“முன்னாடி இந்த லவ் எல்லாம் பாஸீங் க்ள்வுட்ஸ், இந்த வயசுல வரதுதான். அப்போ ரசிச்சிட்டு அப்படியே கடந்து போய்டனும்னு சொல்லிட்டு இப்போ என்னடி என்னை நோண்டி நோண்டி கேள்வி கேட்கிற?” என்ற ரசிகாவின் முகம் பார்த்தவள்,
“அது அப்போ! எத்தனை வருஷம் ஆகுது, அப்போ இருந்த ரசிகா நீ இல்லை, சர்வாவும் அதே சர்வா இல்லை. நான் என்னைக்குமே காதல் தப்புன்னு சொன்னதில்லை”
“சினிமாவுல சொல்ற மாதிரி காக்கா குருவிக்குக் கூட காதல் இருக்கு, இவ்வளவு ஏன் மசால் வடைக்குக் கூட தேங்காய்ச் சட்னிதான் சரியான ஜோடி, மாறினா நல்லா இருக்குமா சொல்லு. இட்லி சாம்பார், பூரி கிழங்கு, இடியாப்பம் பாயான்னு சாப்பிடுறது கூட ஜோடியா இருக்கும்போது காதல் எப்படி தப்பாகும்?”
“யுவி! இது காதலான்னு தெரியல, எனக்குப் புரியலடி நிஜமா” ரசிகாவிற்கு அவளை விட்டால் ஆளே இல்லை தன் அகம் திறக்க, அதனால் உள்ளத்தை உடைத்துவிட்டாள்.
இது போலவே அவர்கள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, ஒரு பொன்மாலைப் பொழுதில் தானாய் மனம் திறந்து சர்வாவை முத்தமிட்டதை சொல்லி வருந்தியபோது யுவி சொன்னது இன்றும் அழியாமல் நினைவில் நின்றது.
“இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரா? நான் கூட நீ ஏதோ தேச துரோகம் செஞ்சிட்டியோன்னு நினைச்சிட்டேன், அவ்வளவு சோகத்துல மூஞ்சியை வச்சிருந்தியே?”
“அப்போ நான் செஞ்சது தப்பில்லையா?”
“தப்புதான்! பட் அப்போ என்ன லெவந்த் படிச்சிருக்க, உன் கூட சேர்ந்த எல்லாம் அட்வான்ஸ்ட் அரைமெண்டலா இருந்திருக்கு. அதனால நீ அப்படி இருந்திருக்க, ஏதோ சர்வா நல்ல பையன்றதால் உங்கிட்ட அட்வாண்டேஜ் எடுக்கல. ஆனா நீ இவ்வளவு ஃபீல் செய்யவே தேவையில்லை”
“நான் உண்மையை மறைச்சிட்டேனே யுவி, என்னால அதை மறக்கவே முடியல”
“இங்கதான் நம்ம முக்கியமான விஷயத்தைக் கவனிக்கணும், அப்படி சர்வாவுக்கு உன்னை மாட்டிவிடனும்னு எண்ணமிருந்திருந்தா அவர் அப்பவே உண்மையை சொல்லியிருப்பார். சொல்லாம இருக்கார்னா உன்னை அவர் காட்டிக்கொடுக்க விரும்பல, நீயும் அப்படியே அந்த விஷயத்தை மறந்திடு.”
“கொடுத்தது தான் கொடுத்த ஒரு ப்ரஞ்ச் கிஸா அடிச்ச, ஒரு கன்னத்து முத்தம். அதுக்கு இந்த சீன்” என்றதும், ரசிகாவின் மனம் சுணங்க, முகம் அதனையே வெளிக்காட்டியது.
“நீ கெட்டப் பொண்ணெல்லாம் இல்லடி, அந்த ஏஜ், இந்த ஹார்மோன்ஸ் அட்டகாசம் பண்ணிருக்குங்க, அண்ட் முத்தம் ஒரு அன்பு பரிமாற்றம், நீ அதை ஸ்குயர் க்யூப்பெல்லாம் செஞ்சு பெருசாக்காத. இதையெல்லாம் நினைச்சு ஃபீல் செய்யாம அழகா இருக்கனவனைப் பார்த்தோமா ரசிச்சிசோமான்னு போய்ட்டு இருக்கணும்” என்று இயல்பாய்ப் பேசி ரசிகாவின் மன இறுக்கத்தைத் தன்னால் முடிந்தவரையில் தளர்த்தியவள் யுவி.
அவளே இன்று இப்படி பேச ரசிகா குழம்பிப் போனாள்.
“தெரியலன்னா அப்போ இது வேறென்ன? யோசி. சில கேள்விக்கெல்லாம் விடை நம்ம கிட்ட தேடணும்”
“அப்போ எங்கிட்ட எதுக்கு அப்படி கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணின?”
“நான் டார்ச்சர் பண்ணினேனா? என்னமோ எல்கேஜி புள்ள மாதிரி நேத்துல இருந்து ஒளிஞ்சிப் புடிச்சு விளையாடின பன்னாட நீ? என்னை சொல்றியா டி?” என்றாள் கடுப்பாக.
“காலேஜ்ல என்ன பேசுற நீ?” என்று ரசிகா பல்லைக் கடிக்க,
“ப்ரோஃபஸர்னா ப்ரோஃபஷனலா பேசுவேன் நினைச்சியோ? உங்கிட்ட என் பேச்சு அப்படித்தான் வரும், ஒழுங்கு மரியாதையா ஒத்துக்கோ” யுவி மிரட்டலில் இறங்க,
“யுவி! எனக்கே சரியா தெரியாத ஒன்னை எப்படி ஒத்துக்க முடியும்? முன்னாடி மாதிரி இப்பவும் இது சும்மா ஈர்ப்பா இருந்தா?” என்றவளின் விழிகளில் அவ்வளவு குழப்பம்.
ரசிகாவின் குழம்பிய மன நிலைக் கண்டு யுவிக்கு வருத்தமாய்ப் போய்விட,
“இங்க பாரு ரசிம்மா! அப்போ உனக்கு மெச்சுரிட்டி இல்ல, அது வேறடி. அதை இங்க எல்லாரும் கடந்து வராங்க. அதையும் இப்ப உனக்கு வந்திருக்க இந்த உணர்வையும் போட்டு குழப்பிக்காத”
“அப்போ இது காதலா?” என்று ரசிகாவின் விழிகள் ஆர்வமாய் தோழியிடம் கேட்க,
“இது காதலா? அது காதலா? என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்? காதலை முடிவு பண்ண வேண்டியது காதலிக்கறவங்கதான், நான் இல்ல”
“அப்போ சர்வா கிட்ட போய் கேட்க சொல்றியா?”
“ஆமா” என்றதும்,
“லஞ்ச் டைம்ல அடகு வைக்குறதுக்கு முன்னாடியே அறிவை இப்பவே அடகு வச்சிட்டியா? சர்வாவுக்கு எங்கிட்ட அப்படியான ஃபீலிங்க்ஸே இல்லை”
“ஓஹ்! பார்டா, உன் ஆள் கூட சேர்ந்து கவுண்டர்லாம் கொடுக்கிற”
“யுவி அந்த வைஷு லூசு மாதிரி நீயும் உன் ஆள் அப்படின்னு எல்லாம் பேசாத, ஏன் நீ கவுண்டர் கொடுக்க மாட்டியா?” என்று ரசிகா வேகவேகமாய்ப் பேசினாள்.
“நான் கொடுத்தப்ப எல்லாம் நீ பதிலுக்குக் கொடுக்கலையே? ஏய் நானும் வைஷுவும் ஒன்னா? சும்மா உன்னோட உண்மையான ஃபீலிங்க்ஸை மறைச்சு என்ன செய்ய போற நீ?”
“யுவி! யுவி!! உனக்கு??“ என்று தன் கை இரண்டையும் பிடித்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்த ரசிகா
“சர்வா டிஸர்வ்ஸ் பெட்டர் பெர்சன், என்னை விட நல்ல பொண்ணு அவருக்குக் கிடைக்கட்டும், ஐ அம் நாட் எ குட் சாய்ஸ். அதைவிட மறுபடியும் என்னால சர்வாவைக் கஷ்டப்படுத்த முடியாது, ஒரு தடவ நான் செஞ்ச தப்பால அவர் இன்னும் உமா அத்தை கிட்ட பேசுறதில்லை, அதைவிட அப்பா”
“உன்னைத் தவிர ஆதார் கார்ட்ல இருக்க அத்தனை இந்தியன்ஸையும் யோசிப்ப போல”
“அன்னிக்கு என்னை மட்டும் யோசிச்சு, அப்பா கிட்ட அடிவாங்க கூடாதுன்னு அவரை மாட்டிவிட்டது போதாதா?”
“கொய்யாலே! ஓசியில மசால் வடை வாங்கிக் கொடுத்தா நீ சொல்றதெல்லாம் கேட்டுக்கணுமா? முதல்ல சர்வா கிட்ட பேசுடி, உன்னோட உணர்வை நல்லவிதமா சர்வா கிட்ட சொல்லு”
“சர்வாவுக்குப் பிடிக்கலைன்னா?”
“பிடிக்கலைன்னா… உனக்கு வாய்ச்சது அவ்வளவுதான், பெட்டர் லக் நெக்ஸ்ட் ஜென்மம்னு சொல்லிடு”
“அதெல்லாம் வேண்டாம் யுவி, விட்டுடு. எனக்கே புரியாத ஒரு விஷயத்தை நான் சர்வா கிட்ட திணிக்க விரும்பல, என்ன நடக்குதோ நடக்கட்டும். ப்ளீஸ் நீ இதைப் பத்தி இனி பேசாத” என்றாள் தீர்மானமாக.
அன்று சனிக்கிழமை, எல்லாரும் சக்தியின் வீட்டில் இருந்தனர். சுகுமாறனும் புஷ்பாவும் கூட ரேஷ்மியைப் பார்க்கவென ஒன்றாய் வந்திருக்க, சர்வா மட்டும் எங்கோ வெளியே சென்றிருந்தான்.
ரேஷ்மியிடம் வாங்கி வந்த பழங்களைத் தந்த புஷ்பா உமாவிடம்,
“நீங்க காலகாலத்துல பத்ரிக்குக் கல்யாணம் பண்ணி வச்சு, பாட்டி ஆகிட்டீங்க கா, எனக்குத்தான் இன்னும் அமையல” என்றார் ஆற்றாமையுடன்.
“ஏன் சித்தி? என் குழந்தைக்கு நீங்களும் பாட்டிதானே?” என்று பத்ரி சொல்ல,
“அதானே?” என்றார் சுகுமாறனும்.
“அது சரிதான், சர்வாக்கும் சீக்கிரம் கல்யாணம் செய்யனும்னு பார்த்தா அவன் ஒத்துக்க மாட்டேன்னு நிக்கிறான்” என்று புஷ்பா புலம்பினார். உமா சொன்னால் மகன் கேட்பான் என்ற எண்ணம் அவருக்கு.
“இந்த பேச்சை விட மாட்டியா புஷ்பா நீ?” என்று சுகுமாறன் கடுப்பாய்க் கேட்க,
சக்தியோ, “விடு மாறா, சர்வாக்கும் நம்ம பார்க்கணும்தானே” என்று சொல்லவும்,
“நல்ல சொல்லுங்க மாமா, இவரும் அவனோட சேர்ந்துட்டு ஈடு கொடுக்க மாட்டேங்கிறார். இப்போ இருந்து பார்த்தா தானே ஆறு மாசமோ ஒரு வருஷமோ நல்ல வரனா அமையும்”
“ஒருவேளை அவன் யாராவது லவ் பண்றானோ?” என்று சக்தி யோசனையாய் முகம் சுருக்கினார்.
“அதெல்லாம் இருந்தாலும் பரவாயில்லையே மாமா, அவன் அப்படி இல்லைன்றான்”
“விடும்மா புஷ்பா, நான் அவன் கிட்ட பேசுறேன். நானும் பார்க்க ஆரம்பிக்கிறேன்” என்று சக்தி முடிவெடுக்க,
“அண்ணா, சர்வா கல்யாணம் செய்ய மாட்டேனு எல்லாம் சொல்லல, ரேஷ்மிக்குக் குழந்தைப் பொறக்கட்டும், அப்புறம் கொஞ்சம் நிதானமா செய்யலாம்னு சொன்னான். இவதான் அவசரப்படுறா” என்று சுகுமாறன் அண்ணனிடம் சொல்ல,
“இது என்ன அவசரம் தம்பி? புஷ்பா சொல்றது சரிதானே? இப்போ இருந்து பார்க்க ஆரம்பிச்சா ரேஷ்மிக்கு குழந்தைப் பொறந்தவுடனே கல்யாணத்தை நல்லபடியா செஞ்சிடலாம், என்னங்க?” என்று உமா சக்தியிடம் கேட்க, அவரும் தலையசைத்தார்.
புஷ்பாவிற்கு எங்கு தன் மருமகளையும் அவர்களே தேர்ந்தெடுத்துவிடுவார்களோ என்ற பதற்றம், கவலை. அதனால்,
“பார்க்கறதெல்லாம் நான் நிறைய பார்த்துட்டேன். எல்லாமே நல்ல படிச்ச பொண்ணுங்க, நமக்கு செட் ஆகுற மாதிரி. புதுசா எல்லாம் பார்க்கணும்னு இல்லை. அவன் பொண்ணைப் பார்த்து எந்த பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னா மேற்கொண்டு பேசலாம், இல்லையா அடுத்த பொண்ணு பார்க்கலாம்” என்று புஷ்பா வேகமாய் சொல்ல,
“சின்னத்தை மருமக தேடுறதுல செம ஃபாஸ்ட் போல” என்று ரேஷ்மி கிண்டல் செய்தாள்.
“பின்ன நானும் இவங்களை மாதிரி ஸ்லோவா இருந்தா முடியுமா ரேஷ்மி?” என்று புஷ்பா சொல்ல,
“சித்தி! சொல்லிட்டீங்க இல்லை. சர்வாவை சீக்கிரமே ஓகே சொல்ல வைக்கிறேன்” என்றான் பத்ரி.
சிறிது நேரம் பேசிவிட்டு புஷ்பாவும் சுகுமாறனும் சென்றுவிட ரேஷ்மிக்கு பழம் கொண்டு வந்து கொடுத்த உமா,
“ரேஷ்மி, நாளைக்கு ஃப்ரீன்னா நம்ம ரசிகாவை வெளியே எங்காச்சும் அழைச்சிட்டுப் போறியாடா?” என்றார்.
“போகலாமே அத்த, ஏன் அவ உங்க கிட்ட கேட்டாளா?” என்று ரேஷ்மி கேட்க சிவசங்கரன் பேசியதை சொல்ல,
“ஓஹ், ரசி அழுதாளா?” என்று பத்ரி இதனை காதில் வாங்கியவன் கேட்க,
“ஆமா பத்ரி, ரசி அழுதுட்டா போல, அதனால அண்ணா ரொம்ப கவலைப்பட்டார். ரேஷ்மி கிட்ட ரசி நல்லா பேசுவா தானே? அது மட்டுமில்லாம அவ பெரியவங்க கிட்ட மனசு விட்டு பேச மாட்டா. கொஞ்சம் அவளுக்கும் நல்லா இருக்கும்” என்று உமா கவலையாகப் பேசினார்.
“ம்மா, நாளைக்கு நாங்க ரசியை வெளியே அழைச்சிட்டுப் போறோம், நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்றான் பத்ரி.
“சீக்கிரமே அவளுக்கும் சர்வாவுக்கும் நல்ல வரனா பார்க்கணும்” என்று சக்தி சொல்ல,
“ஏங்க பேசாம ரசியை சர்வாக்குப் பேசினா என்ன?” என்றார் உமா.
அவருக்கு இன்னமும் சர்வா ரசியை விரும்பவில்லை என்பதில் நம்பிக்கையில்லை. விருப்பமில்லாமலா அவளை அணைத்துக் கொண்டு நின்றான்? அவரின் எண்ணம் அதிலேயே நிலையாய் இருந்தது.
“என்ன பேச்சு உமா? அப்படி எல்லாம் அவங்க பழகல. அதைவிட சிவாக்கு அப்படி விருப்பமிருந்தா அவனே டிரைக்டா கேட்டிருப்பான்” என்று சக்தி நண்பனை அறிந்தவராய்ப் பேச,
“ஒரு வேளை அண்ணா எப்படி கேட்கறது தயங்கினா?” என்ற உமாவின் பேச்சை மறுத்த சக்தி,
“யாரு அவன் தயங்குவானா? அவன் மனசுக்கு பட்டுச்சுன்னா பட்டுனு பேசிடுவான், யாரு எவருன்னு எல்லாம் பார்க்க மாட்டான். நீயேன் இவ்வளவு ஆர்வமா இருக்க?” என்று சக்தி மனைவியை தீவிரமாய்ப் பார்த்து கேட்டார்.
“அது நம்ம பார்த்து வளர்ந்த பொண்ணு, அதனால ஒரு ஆசையில கேட்டேன். அவ்வளவுதான்” என்றவரால் எப்படி அன்றைய நிகழ்வை சொல்ல முடியும்?
அடுத்த நாள் சிவசங்கரனிடம் சொல்லிவிட்டு ரசிகாவை வெளியே அழைக்க, அவளுக்கு எங்கு போகவும் மனமில்லை.
எங்கே போனாலும் மனம் உடன் வரும்தானே? அகத்தை விட்டு அகிலத்தில் எங்கு சென்று ஒளிய முடியும்?
ஆனால் சிவா விடவில்லை.
“லீவ்தானே அப்புக்குட்டி, போய்ட்டு வாடா. உனக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்” என்று வற்புறுத்தி அனுப்பினார்.
ரேஷ்மியும் பத்ரியும் இவளுக்காக மாலில் காத்திருக்க, ரசிகா வந்தவுடன் ரேஷ்மி எதைப் பற்றியும் துருவாமல் இயல்பாய் பொதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தாள். அதில் ரசிகாவும் கொஞ்சம் மனத்துக்கு இலகுவாக அவளுடன் சிரித்துப் பேச, அகமெல்லாம் நிறைந்தவன் அவள் முன் வந்து நின்றான்.
“டேய் சர்வா, கரெக்டா படம் ஆரம்பிக்கிற டைமுக்கு வர” என்று பத்ரி திட்ட,
“தூங்கிட்டேன் டா திரி, அட ரசிகா மேடம்லாம் வந்திருக்காங்க” என்று சர்வா இவளை ஆச்சரியமாய் எதிர் நோக்க, அவனை நோக்க முடியாமல் நொந்து போனாள் பெண்.
ரசிகா இவனை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவள் பார்வையில் தெரிய, ரேஷ்மியே சொன்னாள்.
“சர்வாவும் வரேன்னு சொன்னார், நாங்க உங்கிட்ட சொல்ல மறந்துட்டோம் ரசி. படம் பார்க்கும்போது ஜாயின் பண்றேன்னு சொன்னாரா அதான்” என்று ரேஷ்மி விளக்கம் கொடுக்க,
“ஒஹ், சரி சரிக்கா” என்று சொன்னவளின் மீதே தன் பார்வை வைத்திருந்தான் சர்வஜனன்!
பத்ரியும் ரேஷ்மியும் முன்னே அந்த மாலில் இருக்கும் தியேட்டர் பக்கம் நடக்க, அவர்களுக்கு பின் ரசிகாவும் சர்வாவும் நடக்க, ரசிகா சர்வாவை விட்டு முன்னே நடக்கவும், அது இயல்பான செய்கையாய் இல்லாது இருக்க சர்வாவின் பார்வையில் நன்றாய் விழுந்தது.
“எதுக்கு ரசி என்னைப் பார்த்து ஓடுற?” என்றவனின் கேள்வியில் நங்கையின் நடை நின்றது.
“உன்கிட்ட தான் ரசி கேட்கிறேன்” என்றான் மீண்டும் அழுத்தமாய், அவளின் மௌனம் அப்படி கேட்க வைக்க, அவள் அவனைப் பார்த்து நின்றாளே தவிர பேசவில்லை.
‘யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது ‘
Very nice
இப்போ பாதிக்கு மேல் அட்வான்ஸ்ட் அரை மெண்டல்கள் தான்....😂😂😂😂
யுவி சூப்பர்
தெரிந்து கொண்ட தோழியின் கேள்வியில்