Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 3

மாலை ஐந்து மணி போல், ஏதோ ஒரு பஞ்சுபொதி தன் மேல் இருப்பது உணர்ந்த சுதந்திரா, தன் மகள் அமிழ்தா என்பது புரிய,

“பேபி! என்ன வேணும்? சாரி டா அம்மா தூங்கிட்டேன்” என்று குழந்தையைக் கட்டிக்கொண்டாள்.

“மா, வெதலலாமா?” என்று கேட்க

“அம்மா டயர்ட் பேபி, நாளைக்கு விளையாடலாம்” என்று சொல்லிவிட்டு, அவள் முகம் கழுவி உடை மாற்றி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.

“என்னடி வந்ததும் சாப்பிடாம தூங்கிட்ட? ரொம்ப கவனிப்போ?” என்று சாரதா கேட்க,

“டயர்டா இருந்துச்சும்மா, கிருஷி எங்க?” என்று தங்கையை விசாரித்தாள்.

“அவ மாப்பிள்ளை கூட போன் பேசுறா” என்று சொன்னவர்,

“அமிழ்துக்கு பால் கொடுத்தேன், உனக்கு என்ன வேணும் டீ குடிக்கிறியா இல்ல பசிச்சா சாதம் இருக்கு சாப்பிடு” என்றார்.

“டீயே கொடும்மா” என்றவள் டீவி முன் போய் குழந்தையுடன் அமர்ந்து கொண்டாள்.

அவள் அப்பா முரளிதரன் உடை மாற்றி தங்கள் அறையில் இருந்து ஹாலுக்கு வந்தவர், மகளின் அருகே அமர்ந்து கொண்டு பேத்தியைப் பார்த்து,

“அம்முப் பொண்ணே தாத்தாட்ட வாங்க” என்று கை நீட்ட, அமிழ்தா அவரையே தயக்கமாகப் பார்த்தாள். பின் லேசாகத் தலைசாய்த்து மலரைப் பார்த்தாள். தாத்தாவுடன் வீடியோ காலில் பேசி இருந்தாலும் இன்னும் ஒரு ஒட்டுதல் குழந்தையிடம் வரவில்லை.

“பேபி, தாத்தா கூப்பிட்டா போகணும்” என்று சொல்ல, உடனே தாத்தாவின் அருகே போய் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு ஓரக்கண்ணால் அவரையே பார்க்க, அவர் பேத்தியை அள்ளிக் கொஞ்சினார். அமிழ்தாவைக் கொஞ்சியபடியே,

“அப்புறம் சாத்வீ பர்த்டே எப்படி போச்சுடா? சாத்வீயைப் பார்த்தியா?” என்று முரளி மகளிடம் ஆவலாய்க் கேட்டார்.

“பார்த்தேன்ப்பா, அவளுக்கு என்னை நல்லா அடையாளம் தெரியுது” என்றாள் பெருமையாக.

“வேற யாரைப் பார்த்த?” என்ற அவரின் கேள்விக்கு

“அங்க இருந்தவங்க எல்லாரையும் பார்த்தேன்பா” என்ற மகளை கூர்மையாகப் பார்த்தவர்,

“ஜனாவைப் பார்த்தியா? பேசினியா?” என்றதற்கு ‘இல்லை’ என்பதாக அவள் தலையசைத்தாள்.

“அவன் உங்கிட்ட பேசினானா?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார். அதற்கும் அவள் இல்லையென பொய் சொல்ல,

“எப்போ நீ அமிழ்தா பத்தி அவன் கிட்ட சொல்லப்போற?” என்றார் அழுத்தமாக, பதில் வேண்டும் என்ற கட்டளைத் தொனியில்.

“ஏன் சொல்லணும்பா?” என்றவள், “ நான் சொல்லப்போறதில்ல, ஆனா வருவுக்கு சொல்வேன், அவகிட்ட இனி என்னால மறைக்க முடியாது, இனி அதுக்கு அவசியமுமில்லை, அவ மூலமா ஜனாவுக்குத் தெரியட்டும்” என்ற மகளைப் புரியாது பார்த்த முரளிதரன்,

“நீ என்ன பேசுற சுதா? வருகிட்ட சொல்வ, குழந்தையோட அப்பா ஜனா அவன் கிட்ட சொல்ல மாட்டியா?” என்றார் கோபத்துடன்.

அமிழ்தாவின் முன் பேச விரும்பாத மலர் தன் அப்பத்தாவை அழைத்து அமிழ்தாவைத் தூக்கிப் போக சொல்ல, அதன்பின் அப்பாவிடம்

“வரு என்னோட க்ளோஸ் ப்ரண்ட், நான் இல்லாத டைம்ல கூட அவ சாத்விக்கிட்ட என்னைப் பத்தி சொல்லி இருக்கா, ஆனா நான் சொல்லாம இருந்திட்டேன், அது எனக்கு ரொம்ப கில்டியா இருக்குப்பா”

“ஜனாவுக்கு சொல்லாம இருக்கறது உனக்குக் கில்டியா இல்லையா?” என்று அவர் பட்டென கேட்டார்.

“அப்பா! எனக்காக வராதவர் அமிழ்தாவுக்காக வரதை நான் ஏத்துக்கமாட்டேன். எப்படியும் வருவுக்குத் தெரிஞ்சா அவ ஜனாகிட்ட சொல்லத்தானே போறா”

மகள் பேசுவதில் அவரது கோபம் சகட்டுமேனிக்கு எகிறியது. பெயரினில் சுதந்திரம் தந்து, வாழ்வினில் சுதந்திரம் தந்தால் இவள் பேசுவது எவ்வளவு அபத்தம் என்ற ஆத்திரம் அவருக்கு. இவளது பிடிவாதம் கண்டவருக்கு அவ்வளவு வருத்தம், அவளது பிடிவாதம் அடக்கும் பிடிமானம் எதுவென அவருக்குத் தெரியவில்லை.

அதற்குள் தன் இளைய மகள் கிருஷ்ணப்ரியாவிற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் அப்பா வந்துவிட, மலர் ஆசுவாசமாக உணர்ந்தாள்.

சுதந்திராவைப் பார்த்து விசாரித்தவர்,
“உன்னைப் பார்த்தாச்சும்மா, உன் ஹஸ்பண்ட் எப்ப காட்டப் போற?” என்று கேட்க, மலரை முறைத்த அவளின் அப்பா சம்பந்தியிடம்

“மாப்பிள்ளை கொஞ்சம் வேலையில பிஸீ, சீக்கிரமே வந்துடுவார்” என்றவர் வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தார். அப்பா அவருடன் பேச, மலர் நழுவி மகளிடம் வந்துவிட்டாள். அப்போது பார்த்து வர்ணவி அழைத்தவள்,

“ஏய் பக்கி, நீ சாப்பிடாம வந்துட்ட, எனக்குக் கஷ்டமா போச்சு, அதனால நைட் டின்னர் எல்லாருக்கும் ஆர்டர் பண்ணிட்டேன், சீன் போடாம ஒழுங்கா எல்லாரும் சாப்பிடுங்க” என்று மிரட்டினாள்.

“கண்டிப்பா சாப்பிடுறோம் மேடம், இப்படி சாப்பாடு ஆர்டர் செய்ற ப்ரண்ட் கிடைக்க என்ன தவம் செய்தேனோ?” என்று சுதந்திரா சிரித்தபடி சொல்ல,

“அப்படியே தவம் பண்ணிட்டே இருடி, இன்னிக்கு நாம சரியா பேச முடியாம போயிடுச்சு, நாளைக்கு ஈவினிங் நானும் நீயும் மட்டும் தனியா மீட் பண்றோம், பேசுறோம், சாப்பிடுறோம், ஒன்லி அவர் டைம், எந்த வேலையும் வச்சிக்காத” என்று வர்ணவி கட்டளையாகச் சொன்னாள்.

அது ஜனாவை நினைப்படுத்தியதில் காலையில் நடந்த நிகழ்வு நினைவில் ஆடி, தடுமாறச் செய்த போதிலும் வர்ணவியிடம் ,

“எந்த வேலையும் வச்சிக்க மாட்டேன், உனக்குத் தான் ஒரு சர்ப்பரைஸ் இருக்கு” என்றாள்.

“என்னடி சர்ப்பரைஸ்? அச்சோ சஸ்பென்ஸ் வைக்காம சொல்லு” என்று வர்ணவி கேட்க,

“அதெல்லாம் வெயிட் பண்ணி நாளைக்குப் பாரு” என்று சொல்லி மலர் வைத்துவிட்டாள்.

முரளி அடுத்து கிருஷ்ணாவின் திருமண வேலைகள் பார்க்க, மலரிடம் நாளை பேச நினைத்தார். மலர் வர்ணவி எல்லாருக்கும் உணவு ஆர்டர் செய்திருப்பதை சொல்ல, வீட்டில் யாரும் மறுக்கவில்லை.

இரவெல்லாம் தூக்கமின்றி தவித்தாள் சுதந்திர மலர். வாழ்க்கையில் எப்போதும் துணிவுடன் இருந்த பெண் அவள், இப்போதும் அப்படியேதான் இருக்கிறாள். ஆனால் வர்ணவியிடம் அமிழ்தா பற்றி எப்படி சொல்வதென்று யோசித்து யோசித்துத் தலையே வெடித்தது. வர்ணவி பற்றி நினைத்தாலே ஜனாவின் நினைவும் வந்தும் ஒட்டிக்கொள்ள, உறங்கா இரவாகிப் போனது மலருக்கு.

அங்கு ஜனாவிற்கும் மலரின் நினைவுதான். இரண்டு வருடங்களுக்கு மேலாக அவளை விட்டு இருந்தவனுக்கு இனியும் இருக்க முடியுமென்று தோன்றவில்லை. புரண்டு படுத்தவனுக்குக் கால்களில் வலியெடுத்தது, எழுந்து காலைப் பார்க்க, மலர் மிதித்ததில் அவன் கால்கள் சிவந்து போயிருந்தன, அதற்கு மருந்திட்டவனுக்கு மலருடன் முத்தமிட்ட நொடிகள் நினைவில் ஆடின.

‘முத்தம் கொடுத்தேன்னு என்னை மிதிக்கிறியா இருடி ராங்கி உன்னைப் பார்த்துக்கிறேன்’ என்று கருவிக்கொண்டான். இன்று அவள் கோபபட்டிருந்தாலும், அவளாகவே அவனை முத்தமிட்ட நொடிகளும் உண்டுதான்.

அப்படிதான் ஒரு நாள் ஜனா அவளிடம் பிரசன்னா பற்றி பேசிக்கொண்டிருந்தான். மலருக்கு அவனை சுத்தமாகப் பிடிக்காது, அவனுக்கும் அப்படித்தான்.

“ரொம்ப நாள் கழிச்சு அவனைப் பார்த்தேன் மலர், அவன் கூட பேசின அப்புறம்தான் எனக்கு ரொம்ப நல்லாயிருக்கு” என்று ஜனா பேசுவதைக் கேட்ட மலருக்கு கோபம் மிகுதியானது.

அதைக் கேட்கவும் பொறுமையில்லாதவள், அவனை அணைத்துக்கொண்டு அவன் பேச்சை நிறுத்த முத்தமிடத் துவங்கினாள்.

ஜனா அவளின் செயலை ரசித்தாலும்,

“என்ன மலர், பேசிட்டு இருக்கிறேன் தானே?” என்று ஜனா சொன்னதிற்கு,

“மிஸ்டர் ஜனா! உனக்கு வேண்டாம்னா எனக்கொன்னுமில்லை, நீ பேசு, நான் கேட்கிறேன்” என்றவளை திரும்ப ஜனா பேசவிடவேவில்லை. அதை நினைத்து ஜனா விட்டத்தைப்பார்த்தான்.

அடுத்த நாள் மாலை ஒரு மூன்று மணி இருக்கும், அமிழ்தாவை ரெடி செய்துவிட்டு அம்மாவிடம் போனவள்,

“மா, நான் கிருஷ்ணாவையும் அமிழ்தாவையும் அழைச்சிட்டு மால் போயிட்டு வரேன்” என்றவள் சிறிது இடைவெளி விட்டு,

“வர்ணவியைப் பார்க்க போறேன்மா” என்றாள்.

“போய்ட்டு வா மலர்” என்றவரிடம் முரளி நேற்றே மகளிடம் பேசியதை சொல்ல, அவருக்கும் கோபம்தான். என்ன காட்டிக்கொள்ளவில்லை.

“அமிழ்தாவை பத்திரமா பார்த்துக்கோங்க இரண்டு பேரும், நீயும் வருவும் பேசுவீங்க, கிருஷ்ணா கிட்ட நான் சொல்லி வைக்கிறேன்” என்றார்.

அதன் பின் கிருஷ்ணா ஸ்கூட்டியை எடுக்க, நடுவே அமிழ்தாவை உட்காரவைத்து பின்னால் மலர் உட்கார்ந்து கொண்டாள்.

மால் வந்துவிட, அமிழ்தாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் உண்ண வாங்கிக் கொடுத்தவள் வர்ணவியின் வரவை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள்.

சுதந்திரா அங்கே இருந்த ஒரு மேஜையில் கைகளை ஊன்றி அதில் தலைவைத்திருந்தாள். அவளின் பின் பக்கம் போய் அவள் கண்களை மூடிய வர்ணவியின் கையைப் பிடித்த மலர்,

“தெரியுது வா” என்று இழுத்து அருகே உட்கார வைத்தவள் ‘என்ன சாப்பிடுற?’ என ஆரம்பிக்க,

“பொறுமையா சாப்பிடலாம், ஐ மிஸ்ட் யூ ஸோ மச்” என்று அவளைத் தோளோடு அணைத்த வர்ணவிக்கு ஜனாவைப் பற்றி பேச வேண்டி இருந்தது. எப்படியாவது அண்ணனையும் அவளையும் இணைத்திடவே அவள் எண்ணம்.

“பேசிட்டு அப்புறம் சாப்பிடலாம், சொல்லு எப்படி இருந்து உன் அமெரிக்கா?” என்று வர்ணவி பேச்சைத் துவங்க, வர்ணவியின் கைகளைப் பிடித்துக் கொண்ட மலர்

“அமெரிக்காவுக்கு என்ன நல்லா இருக்கு, உனக்கு ஒரு சர்ப்பரைஸ் சொன்னேன் இல்ல” என்றாள். பரபரப்பான வர்ணவி சுற்றிப் பார்த்து,

“என்னடி வாங்கினே சொல்லு, என்னால கெஸ் பண்ணவே முடியல” என்று கேட்க,

“அது பொருள் இல்ல, என் லைஃப்ல உள்ள ஒரு முக்கியமான ஒருத்தர் பத்தி உங்கிட்ட சொல்லணும்” என்றதும் வர்ணவியின் இதயம் துடித்தது.

“அண்ணாவை விட முக்கியமா?” என்ற வார்த்தைகள் வேகமாக வர, மலரோ ஒரு அலட்சியத்துடன்,

“எஸ், கண்டிப்பா” என்றதும் வர்ணவிக்கோ ‘அய்யோ அண்ணா தாங்கவே மாட்டானே’ என்றுதான் தோன்றியது.

அதுவும் மலரை நேற்று பார்க்க அவள் இன்னும் பொலிவுடன் இருக்க, அவளுக்கு ஜனாவைப் பற்றிய நினைவு இருப்பதாக வர்ணவிக்குத் தெரியவில்லை. ஆனால் ஜனாவைத் தெரியுமே அவளுக்கு, இவள் இல்லாமல் அவன் எப்படி மாறிவிட்டான் என. அடுத்து என்ன பேசுவது, பேசக்கூடாது என்று கூட தெரியாமல் அவள் பயத்துடன் சுதந்திராவைப் பார்க்க, அவளோ தங்கையைப் போனில் அழைத்தாள்.

அந்த ஃபுட் கோர்ட்டின் உள்ளே கிருஷ்ணா அமிழ்தாவுடன் நுழைய, வர்ணவிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் அருகே வர வர அகத்தின் ஓசை அவளுக்கே கேட்டது. அமிழ்தா அப்படியே அத்தையின் ஜாடை.

மகள் உடனே “மா, கித்தி எனக்கு கார்ன் வாங்கிக் கொடுத்தாங்க” என்று சொல்லி அவளைத் தூக்க சொல்ல, வர்ணவியின் கைகளை விட்ட மலர் மகளைத் தூக்கி வர்ணவிக்கும் தனக்கும் இடையில் நிற்க வைத்து,

“அமிழ்தா, இது அம்மா ப்ரண்ட் வரு ஆன்டி” என்று சொல்ல புது முகம் என்பதால் அம்மாவிடமே ஒட்டிக்கொண்டு நின்றாள் குழந்தை. வர்ணவிக்குக் கைகள் தானாக குழந்தையிடம் போக, அமிழ்தாவோ அம்மாவின் மேல் நன்றாக சாய,

“அவ புதுசா யார்கிட்டையும் போக மாட்டா வரு, உன்னை மாதிரி அவ ஷை டைப்” என்ற மலரை வர்ணவி பார்த்த பார்வையில் குற்றச்சாட்டு அப்பட்டமாக இருந்தது. வர்ணவியின் கண்கள் கலங்கி இருந்தன.

“பரவாயில்லை! உன்னை மாதிரி உன் பொண்ணு இல்ல, ஈஸியா பழகி ஈஸியா உதறிட்டுப் போற மாதிரி” என்றதும் மலருக்கு சுருக்கென்றது, வர்ணவி என்றுமே அவளை பேசியதில்லை. அவள் அமைதியாக இருக்க கிருஷ்ணப்ரியாவிற்கு அக்காவை சொன்னதும் கோபம் வர,

“என்ன அக்கா ஈஸீயா உதறினா சொல்றீங்க?” என்று சண்டையிட்ட தங்கையின் கைப்பிடித்தாள் மலர்.

“அமிழ்தாவைத் தூக்கிட்டுப் போ, மால் சுத்திக் காட்டு” என்றவள் மகளைத் தூக்கி தங்கையிடம் கொடுத்து,

“அம்மா பேசிட்டு வரேன், நீ சித்தியோட இரு, அவ கையை விடக் கூடாது” என்று சொல்லி அனுப்பினாள்.

“அப்போ நீ யூஎஸ் போகும்போதே கன்சீவா இருந்த அப்படித்தானே?” என்று வர்ணவி கேட்க, மலரின் தலை அசைந்தது.

“ஏன் நீ எனக்கு சொல்லாம இருந்த, என்னை விடு ஏன் ஜனா கிட்ட சொல்லல?” என்றாள் ஆற்றாமையுடன்.

“ஏன் சொல்லணும்?” என்ற மலரின் பேச்சில் வர்ணவியின் மென்மை தொலைந்து போனது. அது திமிரான பேச்சாக அவளுக்குத் தெரிய,

“ஏன் சொல்லணுமா? உனக்கும் அவனுக்கும்தானே பிரச்சனை, ஆனா குழந்தை என்ன பண்ணினா? அதை நீ சொல்லணுமா இல்லையா? நீதான் சொல்லாம இருந்திட்ட, உன் வீட்ல இருக்கறவங்களுக்குக் கூட அறிவில்லையா?” என்று திட்ட,

“ஏன் நாங்க சொல்லணும்? என்னை வேண்டாம்னு விட்டுப்போனவன் கிட்ட நான் ஏன் சொல்லணும்? நானே சொல்ல வேண்டாம் நினைக்கும்போது எங்க வீட்ல உள்ளவங்க ஏன் சொல்லணும்? அவன் எனக்கும் வேண்டாம், என் குழந்தைக்கும் வேண்டாம்” என்றபோது மலர் மீண்டிருந்தாள்.

காதலின் காயம் அவளை அப்படி பேச வைக்க, வர்ணவிக்கு உள்ளம் கொதித்தது.

“வேண்டாம் வேண்டாம் சொல்றியே, குழந்தைப் பெத்துக்க மட்டும் என் அண்ணா தேவைப்பட்டானா உனக்கு?”

மலருக்கு அந்த வார்த்தைகள் வலி தர, வர்ணவியின் கண்ணீர் கன்னம் தொட்டுவிட்டது.

“இந்த மாதிரி நீங்க எல்லாம் பேசுவீங்கன்னு எனக்குத் தெரியும் வரு, அவன் தங்கையா நீ பேசுற, என் ப்ரண்ட் என்னை இப்படி பேசமாட்டா” என்று மலர் வலியுடன் சொல்ல,

“எங்க வீட்டு கிழவி அப்பவே சொல்லிச்சு, உன்னாலதான் உன் அண்ணா ஒத்தையில நிக்கிறான்னு. இப்ப தோணுதுடி ஏன் உங்கூட ப்ரண்டா ஆனேன்னு, என் அண்ணா லைஃப் நானே கெடுத்துட்டேன்” என்றாள் அழுகையுடன். வர்ணவிக்கு இவ்வளவு பெரிய விஷயம் தன்னிடம் மலர் மறைத்துவிட்டாளே என்ற வேதனை தாங்கவே முடியவில்லை. அதனையும் விட அண்ணன் எப்படி தாங்குவான் என்று தெரியவில்லை. உடனே அண்ணாவிடம் இதை சொல்லவேண்டும் என்று தோன்ற, இங்கே ஒரு கலாட்டா வேண்டாம் என நினைத்து,

“நீ உன்னிஷ்டப்படி செய்ற எல்லாம் சரின்னு நினைக்காத மலர், அண்ணா இதைக் கேட்டா எவ்வளவு ஃபீல் பண்ணுவான் தெரியுமா?” என்ற வர்ணவியிடம்,

“தப்பா இருந்தாலும் நான் அதைத் தான் செய்வேன்” என்றாள் சுதந்திர மலர். வர்ணவியின் வார்த்தைகள் அவளை அப்படி பேச வைக்க, மலரின் பேச்சு வர்ணவியை இன்னும் தூண்டி விட்டது. அழுகையை அடக்கிய வர்ணவி

“உங்கிட்ட பேசுறதே வேஸ்ட்” என்றவள் விறுவிறுவென இறங்கி கணவனிடம் போனாள். அவன் அவள் சீக்கிரம் வந்துவிட்டாளே என்று திருப்திபட்டு காரை எடுக்க, காருக்குள் அமர்ந்தவள் தேம்பி தேம்பி அழ, பிரசன்னா புரியாமல் அவளைப் பார்த்தான்.

✅ End of Episode 3
How did you feel about this episode?
❤️ 6 more...

You must Log in or Register to react here

💬 3 Replies
Srichitra Reader 2 months ago

Nice 

Mrs Beena loganathan Reader 2 months ago

மகள் இருப்பதையே

மறைத்து வைத்த 
மலர்....
மறைத்தததை எண்ணி 
மறுகும் தோழி.....
Kavi Natarajan Reader 1 month ago

Nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top