Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 13

காதல் 13

மலர் இறங்கி வந்தவள் ஏதோ பேசியபடி தன் காதில் இருந்த ஏர்போட்ஸைக் கழட்டி கையில் எடுத்து, ஜனாவை ஆராய்ச்சியாகப் பார்க்கவும்தான் அவனுக்கு உயிரே வந்தது.

“என்ன ஜனா என்னமோ டென்ஷனா இருக்கீங்க?” என்றபடி மலர் அருகே வர,

“நீ என்ன கோவமா பார்த்துட்டு வர?” என்று ஜனார்த்தன் கேட்டான்.

“அது ஆபிஸ் வொர்க், க்ளையண்ட் கிட்ட பேசணும்னு மேனேஜர் சொன்னார், உங்களுக்கு என்ன ஆச்சு?” என்று அவள் மீண்டும் அழுத்திக் கேட்க, முயன்றுத் தன்னைக் கட்டுப்படுத்தி

“ஒன்னுமில்ல, கொஞ்சம் தலைவலி” என்று சமாளித்தான். அன்று ரங்கநாயகியும் ஜெயப்பிரகாஷும் கூட அங்கேயே உணவருந்திக் கொண்டிருக்க, சுதந்திரா வேலைக்குச் செல்வதைப் பார்த்த ஜெயப்பிரகாஷ் உடனே,

“என்ன ஜனா இதெல்லாம்? உன் மனைவி வேலைக்குப் போய்தான் இந்த குடும்பம் நடக்கனுமா என்ன?” என்று சத்தமாகக் கேட்டார்.

ரங்க நாயகி மருமகளிடம்,

“யாரைக் கேட்டு உன் மருமக வேலைக்குப் போறா?” என்று சௌந்தர்யாவிடம் எகிற,

‘யாரைக் கேட்கணும்?’ என்று சௌந்தர்யாவின் மனம் கேட்டாலும்,

“அது அவ முன்னாடியில இருந்து போய்ட்டுத்தானே இருக்கா அத்தை”என்றார். ரங்க நாயகி அதற்கும் பதில் பேசுவார் என்றறிந்த பிரசன்னா,

“அவ சம்பாரிச்சு இந்த குடும்பத்துக்குத் தரேன்னு சொன்னாளா தாத்தா?” என்று கேட்டுவிட, கேட்டு இருந்த எல்லாருக்குமே அதிர்ச்சி. ஜெய்ப்பிரகாஷும் பிரசன்னாவை ஒரு பார்வைப் பார்த்தவர் அமைதியாகிவிட்டார். மலர் எதாவது இடக்காய்ப் பேசிவிடுவாளோ என்று அவள் கையைப் பிடித்து அருகே நின்றாள் வர்ணவி. அவளிடம் மெல்லமாக மலரோ,

“ஏன் டி இவன் நம்பியாரா எம்ஜியாரா? எப்படி இப்படி பல்டி அடிக்கிறான்?” என்று கிசுகிசுக்க,

“ஏன் எரும சொல்றதுதான் சொல்ற ஒரு விக்ரம் வேதான்னு சொல்லாம இன்னமும் நம்பியார் எம்ஜியார்னு… என் புருஷன் உனக்கு நம்பியார் மாதிரியா தெரியுறார்?” என்று வர்ணவியும் பேசினாள்.

“நான் என்ன சொல்றேன் நாயே நீ என்ன பேசுற?” என்று தோழியை சுதந்திரா கடிய, அதற்குள் ஜனா மலரைக் காப்பாத்த,

“நீ சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பு மலர்” என்று சொல்ல,

“டைம் ஆச்சு ஜனா, நான் அங்க போய் சாப்பிட்டுக்கிறேன், பேபி பை” என்றவள் கிளம்பிவிட்டாள். அவள் போகும்வரை காத்திருந்தவன் தாத்தா, அப்பத்தா எல்லாம் அறைக்குள் போய்விட, அதுவரை அகத்தில் ஆழியென எழுந்த அவ்வளவு சீற்றத்தையும் அடக்கி வைத்திருந்த ஜனா, வர்ணவியிடம்

“வரு நீ பேபியை உன் ரூம் அழைச்சிட்டுப் போ” என்று சொல்ல, வர்ணவியும் அண்ணன் மகளை ஆசையாகத் தூக்கிப்போனாள். ஜகன் வாசல் பக்கம் போக,

“அப்பா நில்லுங்க!” என்று ஜனா கத்த அவர் நின்றார்.

“உங்களுக்கு என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஆசையா? இல்ல நாசமா போகணும்னு நினைக்கிறீங்களா?” என்று சத்தம் போட்டு பேச, சௌந்தர்யா உடனே மாமனாரின் அறையைப் பார்த்தார். அந்த கதவு மூடியிருக்கவும் மகனைப் பார்த்தவர்,

“ஏன் ஜனா இப்படி கத்துற? அப்பா கிட்ட இப்படிதான் பேசுவியா?” என்று மகனைத் திட்ட, அவருக்கு நடந்த எதுவும் தெரியாதே.

ஜனாவோ அம்மாவின் பேச்சில் இன்னும் தூண்டப்பட்டு,

“வேற எப்படி பேச சொல்றம்மா? நானே மலர் என்னை அப்ரூவ் பண்ணுவாளா மாட்டாளான்னு தவிச்சிட்டு இருக்கேன், இவர் வந்து ப்ளாட்ஸ்க்கு அப்ரூவல் வாங்கிட்டியான்னு கேட்கிறார்” என்று மூச்சிரைக்க கத்தினான். சௌந்தர்யா கணவனைப் பார்க்க,

“அப்போ மலர் இல்ல சௌ, ரொம்ப அர்ஜண்ட் விஷயம். இவன் கிட்டதான் அந்த வேலைக்கொடுத்தேன். அதனாலதான் கேட்டேன்” என்று ஜகன் விளக்கம் கொடுக்க,

“மலர் இல்லையா? அவ அப்போதான் நடந்து வந்துட்டு இருந்தா, அவ ஆபிஸ் கால் பேசலன்னா அவ்வளவுதான். வர்ணவி இங்கதானே இருந்தா, அவ கண்டிப்பா சொல்லுவா, ஆமா நீதான் இவருக்கு சொன்னியாம்மா?” என்று குற்றஞ்சாட்டும் பார்வையை அப்பாவிடமிருந்து அம்மாவிடம் திருப்பினான்.

சௌந்தர்யா,
“அது அப்பா ஃபீல் பண்ணினார்டா, அதான் சொன்னேன்”

“ஆஹா! ரொம்ப நல்லா ஃபீல் பண்றார், நான் பொறுமையா எனக்குத் தெரியாது பிரசன்னா கிட்ட கேளுங்கன்னு சொல்றேன். அப்பவும் புரிஞ்சிக்காம பேசிட்டே இருக்கார், வரு சொல்லியும் நிறுத்தல, ரொம்ப அக்கறைம்மா உங்க இரண்டு பேருக்கும்” என்று பேசிக்கொண்டே இருக்க பிரசன்னா குறுக்கிட்டான்.

“போதும் ஜனா, நிறுத்து. மாமா தெரியாம பேசிட்டார்” என்று அமைதியாகப் பேசியவன்,

“நீங்க வாங்க மாமா ஆபிஸ் போகலாம், அந்த வேளச்சேரி ப்ளாட்ஸ்க்கு பெர்மிஷன் வாங்கியாச்சு, காப்பி எங்கிட்ட தான் இருக்கு” என்று அவரை அழைத்தவன் நண்பனிடம்,

“டேய் இதெல்லாம் கண்டுக்காத, போய் உன் பொண்ணோட டைம் ஸ்பெண்ட் பண்ணு” என்றான்.

“நீ போ பிரசன்னா நான் வரேன்” என்ற ஜகன்,

“அக்கறை இல்லாமத்தான் நாங்க போய் மலர் வீட்ல பேசினோமா?” என்று மகனிடம் முறைத்தபடி பேச, அவன் அமைதியாக நிற்க,

“இப்படி பேசிதான் நீ அந்த பொண்ணை போக விட்டுருப்ப” என்று சொல்ல, அது அவனைக் காயப்படுத்தியது. அதையும்விட கோபம் கொள்ள வைக்க,

“யார் நான் அவளை போக வச்சேன்னா? எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான், லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னா கேட்டீங்களா? எவ்வளவு பேசினீங்க, சரி கல்யாணம் பண்ணிட்டேன்னு விட்டீங்களா? உங்கப்பா என்னை ஆபிஸ்ல எவ்வளவு அவமானப்படுத்தினார், ஒரு நாள் அவரைத் திருப்பிக் கேட்டிருப்பீங்களா?” என்று இத்தனை நாள் ஆவேசமெல்லாம் ஒன்றாய் சேர கத்தினான் ஜனா.

“எனக்கு உன்னை மாதிரி எங்கப்பா கிட்ட எடுத்தெறிஞ்சு பேச வரலடா” என்று ஜகன் மகனைக் குத்திப் பேச, சௌந்தர்யா நொந்து போனவர்,

“விடுங்க நீங்க, அவன் டென்ஷன்ல பேசுறான். கூட கூட பேசுறீங்க, கிளம்புங்க” என்று கணவரிடம் சொன்னவர்,

“ரொம்ப பேசுற ஜனா நீ” என்றார் கண்டிப்புடன். அவன் அமைதியாக சோஃபாவில் உட்கார்ந்து விட ஜகன் போகும்போதும் மனைவியிடம்,

“நான் எதார்த்தமா தான் சௌ கேட்டேன், என்னமோ நமக்கு அக்கறையே இல்லன்ற மாதிரி எப்படி பேசுறான்” என்று வருத்தமாகப் பேச கணவனை சமாதானம் செய்து அனுப்பியவர் மகனிடம் வர, சௌந்தர்யா அவனருகே உட்காரவும் அவர் தோளில் சாய்ந்துகொண்டான் மகன்.

“ஏன் ஜனா இவ்வளவு கோவம்? அப்பா எவ்வளவு ஃபீல் பண்றார் தெரியுமா? எத்தனை தடவ உங்கிட்ட நான் கேட்டிருப்பேன் மலர் கிட்ட பேசுறேன்னு, அப்போவெல்லாம் அவதானே போனா அவளே வரட்டும்னு தானே சொன்ன. அப்பா வெளியே காட்டிக்கலனாலும் உள்ள உன் லைஃப் நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணுவார் தெரியுமாடா உனக்கு?”

“மா, அதெல்லாம் சரிதான். ஆனா இன்னிக்கு அவர் என்னை எவ்வளவு டென்ஷன் பண்ணிட்டார் தெரியுமா, மலரைப் பார்த்தவுடனே அய்யோ மாட்டினோம்னு நினைச்சிட்டேன். அவ கால் பேசிட்டே வரதுல இதை கவனிக்கல” என்று புலம்பிய மகனைப் பார்த்து புன்னகைத்தவர்,

“ஏன் டா மகனே! எப்பவும் இப்படி சிக்காம இருக்கவா முடியும்? ஒரு நாள் சிக்கி சிக்கன் 65 ஆகத்தானே போற? அப்படி நினைச்சிக்கோ” என்றதும் அம்மாவை முறைத்தான்.

“தானா மாட்றதுக்கும் நானா சொல்றதுக்கும் வித்யாசம் இருக்கும்மா, இன்னும் கொஞ்சம் க்ளோஸ் ஆனதும் நானே அவ கிட்ட சொல்லிடுவேன்”

“ஆமா ஆமா, லவ் பண்ணி கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு, இனிதான் க்ளோஸ் ஆகனுமாம், மட சாம்பிராணிடா நீ” என்று மகனைத் திட்ட,

“மா, உன் மருமக கூட சேராத, பாரு மிசஸ்.ஜகன் இந்த வார்த்தையெல்லாம் பேசலாமா? உன் மாமனார் கேட்டா அப்படியே ஷாக் ஆகிடுவார்” என்று அம்மாவை வம்பிழுத்தவன் பின் நேராக உட்கார்ந்தான்.

“பிரசன்னா அப்பவே சொன்னான் இரண்டு பேருக்கு இடையில இருக்க வரைதான் அது ரகசியம்னு. அது சரிதான் இல்ல, பாரு உனக்குத் தெரிஞ்சது உடனே அப்பா கிட்ட சொல்லிட்ட” என்று மீண்டும் அதையே பேச,

“ஜனா இப்படியே நீ ஒன்னு மாத்தி இன்னொன்னு யோசிச்சா டென்ஷன்தான் மிஞ்சும், நீ போய் அமிழ்தாவோட இரு. உன் பொண்ணு உன்னை விட்டுப் போகாம இருந்தா உன் மனைவியும் போக மாட்டா” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.

மலர் வேலை முடிந்து வீட்டுக்கு வர, ஏழு மணி ஆகியது. அவள் வந்த போது வர்ணவி, ஜனா, சாத்வீ, அமிழ்தா எல்லாரும் தியேட்டர் ரூமில் உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மலர் அவர்கள் அறைக்குச் சென்று உடைமாற்றி விட்டு கீழே இறங்கி கிச்சனுக்குள் நுழைய, சௌந்தர்யா இரவு உணவுக்குக் காய் நறுக்கிக்கொண்டிருந்தார். மலரிடம் காஃபியை நீட்டவும் அதை வாங்கிப் பருகியவளுக்கு ஜனாவிடமிருந்து போன் வந்தது. இதோ நான்காவது முறையாக அவனிடமிருந்து அழைப்பு வர சலிப்புடனே பேசினாள்.

“நான் வீட்டுக்கு வந்துட்டேன், கீழ காஃபி குடிக்கிறேன், நானே மேல வரேன் ஜனா” என்று சொல்லி அவள் வைக்க, சௌந்தர்யா மருமகளை குறுகுறுவென பார்த்தவர்,

“என்ன ரொம்ப சலிச்சிட்டுப் பேசுற மலர்?” என்று கேட்டார்.

“ம்ம், அமெரிக்காவுல இருந்தப்ப ஒரு நாள் கூட கால் பண்ணினதில்ல, இப்போ ஆபிஸ் போய்ட்டு வரதுக்குள்ள இவ்வளவு கால் செய்றார் உங்கப் பையன்?” என்றாள் கொஞ்சம் எரிச்சலுடனே. அலுவலகம் முடிந்த நேரம் தொட்டு அவன் அழைத்துக் கொண்டே இருக்க, இத்தனை வருடம் எங்கே போனது இந்த காதல் எல்லாம் என்று அவள் எண்ணம் அங்கே போனது.

சௌந்தர்யா மருமகளின் முகம் பார்த்தவர்,

“அவனை ரொம்பத் தேடுனியா மலர்?” என்று ஆழ்ந்த குரலில் கேட்க, அதைக் கேட்டதுமே மலருக்குக் கண்கள் கலங்கி விட்டன. காதலும் தேடலுமாய்க் கழிந்த காலங்கள் மனத்தில் உலா போக, கண்களை மூடிக்கொண்டாள் அவள்.

“மலர்” என்று சௌந்தர்யா அவளை அசைக்க,

“ம்ம்” என்றவளின் கண்ணீர்த்துளி அவரின் கரம் மேல் விழ

“அட என் மருமக இப்படி குழந்தை மாதிரி அழுவாளா? எனக்குத் தெரியல நீ அழுமூஞ்சின்னு” என்றவர் அவளை சமாதானம் செய்தார்.

“நீங்க யாருமே என்னைத் தேடல அத்த” என்று தேம்பியவள்,

“இதே நீங்க பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச பொண்ணா இருந்தா போன்னு அப்படியே விட்டிருப்பீங்களா?” என்று அவளது இத்தனை வருட வேதனையை சொல்லி அழுதுவிட, சௌந்தர்யாவுக்கும் மனம் பிசைந்தது. அவள் சொல்வது உண்மைதானே? அவர் பார்த்து திருமணம் செய்துவைத்திருந்தால் கண்டிப்பாக விட்டிருக்க மாட்டார் தானே? மகன் தங்களை மதிக்காமல் பிரிந்து செல்ல மலர் ஒரு காரணம் என்ற எண்ணம் அவர் அடிமனத்தில் உண்டு.

“உண்மைதான், நாங்க பார்த்துக் கட்டி வச்சிருந்தா விட்டிருக்க மாட்டோம்தான், நீங்களா அமைச்சுக் கிட்ட வாழ்க்கை நீங்களே சரி பண்ணுக்குவீங்கன்னு நம்பினோம் மலர்” என்றவரின் வார்த்தைகள் அவள் காதில் விழவே இல்லை. ஜனாவின் தேடல் இத்தனை வருடம் ஏன் தேடவில்லை என்ற ஏக்கத்தை, எண்ணத்தை அவளுள் எழச் செய்ய அழுகையாய் வந்தது. அழும் மருமகளை சௌந்தர்யா அணைத்து ஆறுதல் படுத்த, அப்போது பார்த்து ஜனா உள்ளே வந்தவன்,

“அது எப்படி என் பொண்டாட்டியை என்னைத் தவிர எல்லாரும் கட்டிக்கிறீங்க? ஒன்னு உன் பொண்ணு கட்டிக்கிறா, இப்போ நீயாம்மா?” என்றான் விளையாட்டாக.

மகனுக்குக் கண் காட்டி சௌந்தர்யா ‘அவ அழறா’ என்றார் வாயசைத்து.

ஜனாவின் பேச்சு அப்படியே நிற்க,
“அதுக்கென்னடா இந்தா கட்டிக்கோ இவளை” என்று மகன் பக்கம் வேகமாகத் தள்ளிவிட, மலர் விழாமல் அவளைத் தாங்கிப் பிடித்த ஜனா அம்மாவை முறைத்தான். அதற்குள் சுதந்திரா சுதாரித்தவள்,

“அத்த” என்று சிணுங்க,

“போங்க போங்க, இது கிச்சன், உங்க ரொமான்ஸ்க்கு இங்க இடமில்ல” என்றார் சௌந்தர்யா.

“மா, என்ன பேசுற நீ” என்று ஜனாவும்,

“அத்த ரொம்ப வாய் உங்களுக்கு” என்று மலரும் சொல்ல,

“ஹலோ! ஹலோ! நான் 2கே மாமியார் டா, போங்கடா போய் புள்ளை குட்டியைப் படிக்க வைக்கிற வழியைப் பாருங்க” என்று விரட்டிவிட்டார்.

ஜனாவும் மலரும் புன்னகையுடன் மாடியேற, அறைக்குள் போனதும் மலர்,

“நான்தான் வரேன்னு சொன்னேனே, அதுக்குள்ள ஏன் வர நீ? அமிழ்தா எங்க?” என்று கேட்க,

“வரேன்னு சொல்லி அவ்வளவு நேரமாச்சு, அமிழ்தா சாத்வீ கூட படம் பார்க்கிறா” என்றான் ஜனா.

“பொண்ணைக் கவனிக்கறதை விட வேற என்ன வேலை உனக்கு?” என்று திட்ட,

“வரு பத்திரமா பார்த்துப்பா டி, பொண்ணைக் கவனிக்க நிறைய பேர் இந்த வீட்ல இருக்காங்க, பொண்ணோட அம்மாவைக் கவனிக்க நான் மட்டும்தானே இருக்கேன்” என்றவன் அவளின் இடையில் கையிட்டு இதமாய்ப் பிடித்துக் கொண்டான்.

“என்ன நீயும் உன் மாமியாரும் கொஞ்சிட்டு இருந்தீங்க?” என்று விசாரிக்க,

“ஏன் நீயும் உன் மாப்பிள்ளையும் கூட தான் கொஞ்சிக்கிறீங்க, நாங்க கேட்கிறோமா என்ன?”

“ஹாஹா, பொசஸீவ் நெஸா?” என்றவன் சிரிக்க,

“புடலங்கா” என்று அவள் முகம் திருப்பினாள். இப்படி இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்க பிரசன்னாவிடமிருந்து போன் வந்தது.

“பேசிட்டு வரேன்” என்றபடி ஜனா வெளியேறினான். சாத்வீயையும் அமிழ்தாவையும் அழைத்துக்கொண்டு வர்ணவி ஜனாவின் அறைக்குள் நுழைய

“அம்மா” என்று அமிழ்தா மலரிடம் தாவினாள்.

“அத்த, நானும் பாப்பாவும் அப்பா கூட ஐஸ்கீரிம் சாப்பிட போகவா?” என்று சாத்வீகா அத்தையிடம் கேட்க, மலர் வர்ணவியைப் பார்த்தாள்.

“குழந்தையைக் கேட்க வச்சா நான் ஒத்துப்பேன் நினைக்கிறியா?” என்று பல்லைக் கடிக்க,

அமிழ்தாவும் சாத்வீயும் அவளின் இருபக்கமும் நின்று கையைப் பிடித்துக் கெஞ்சி கொஞ்ச,

“சரி சரி போய்ட்டு வாங்க, அமிழ்து ஒன்லி ஒன் ஐஸ்கீரிம் சாத்வீ ஓகேவா?” என்று சாத்வீயின் கன்னம் கிள்ளினாள்.

குழந்தைகள் இருவரும் குதூகலமாக ஓடிவிட,

“வாசு முன்ன மாதிரி இல்லடி” என்று வர்ணவி ஆரம்பிக்க,

“வரு, பிரசன்னா உனக்கு ஹீரோவா இருக்கலாம், எல்லாருக்கும் அப்படி இருக்கணும்னு நினைக்காத, உங்க கல்யாணத்தப்போ அவன் என்ன பேசினான்னு இன்னும் மறக்கல எனக்கு” என்றவளின் கோபம் அவள் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

வர்ணவியின் முகம் அதில் வாடிவிட,
“இங்க பாரு, அமிழ்தா மேல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு, உனக்கு இருக்க உரிமை பிரசன்னாவுக்கும் இருக்கு” என்றதும் வர்ணவியும் சிரித்தபடி சென்றுவிட, மலரின் முகம் தெளியவில்லை.

பழையன எல்லாம் கழியாமல் காலத்தினால் அழியாமல் காதோரம் ரீங்காரமிட, அவள் அசையாமல் உட்கார்ந்திருக்க, நண்பனிடம் பேசிவிட்டு உள்ளே நுழைந்த ஜனா,

“என்னடி ஏன் அமைதியா இருக்க?” என்றபடி அருகே வந்தான்.

“உன் ப்ரண்ட் அமிழ்தாவை ஐஸ்கீரிம் அழைச்சிட்டுப் போக பெர்மிஷன் கேட்டான். உனக்குத் தெரியுமா?” என்று கூர்மையுடன் அவனைப் பார்க்க,

“ம்ம், போன்ல எங்கிட்ட சொன்னான், நீதான் ஒகே சொல்லிட்டியே, அவங்க கிளம்பிப் போயாச்சு” என்றான்.

“அவன் கல்யாணம் அப்போ பேசினது எதுவும் எனக்கு மறக்கல” என்றதும்,

“ஆனா எனக்கு எல்லாமே மறந்துபோச்சே மலர்” என்று ஜனா பாவமாகச் சொல்ல,

“நடிக்காத ஜனா, நான் சொன்னது அவன் கல்யாணம் அப்போ, நம்ம கல்யாணம்தானே உனக்கு மறந்தது?” என்று அவன் முகத்தை விட்டு பார்வை அகற்றாது மலர் கேட்டாள்.

இப்படி பயந்து பயந்து உண்மை மறைப்பதற்குப் பேசாமல் சொல்லிவிடலாம் என்று முடிவுக்கு வந்தான் ஜனா.

✅ End of Episode 13
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 2 months ago

Nice 

❤️ 2 more...
Mrs Beena loganathan Reader 2 months ago

கோவங்கள்கள் இன்னும் 

கரை சேராமல் 
காதல் கொண்ட மனம்
கைகோர்க்க முடியாமல்
காரிகை தடுமாற....
கணவனின் நிலை 
கண்டும் எதுவும் செய்திடாது
கண்ணீர் வந்தும் எதுவும்
கூறிட முடியாது
கரையும் நெஞ்சம்.....
❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top