Episode 16
மலர் இறங்கவுமில்லை இரங்கவுமில்லை. அவள் அழுத்தமாய் உட்கார்ந்திருக்க, ஜனாவோ
‘என்னை விட சின்னப்பொண்ணு இவ, எவ்வளவு திமிர், பெரியவன் பேசிட்டான்னு விடுறாளா பாரு ராங்கி’ என்று மனத்தினுள் கடிந்தவன் வேகமாக காரை எடுத்தான். இருவருக்குள்ளும் பேச்சே இல்லை. வீட்டில் இறக்கிவிடவும் வர்ணவியை மலர் எழுப்பப் போக,
“அவ தூங்கினா குட்டி கும்பகர்ணி, எழுப்பாத விடு. நான் சொல்லிக்கிறேன்” என்றான்.
“தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு மலர் அவர்கள் கேட்டினைத் திறக்க, அதுவரை கோபத்துடன் இருந்த ஜனாவின் மனத்தில் என்னமோ சொல்லவே முடியாத ஒரு இறுக்கம்.
சுதந்திராவின் அந்த இறுக்கமான நன்றி அவள் இயல்பில்லை என்பது புரிய, அவள் இனி தன்னுடன் சகஜமாகப் பேசுவாளோ மாட்டாளோ என்றெல்லாம் எண்ணம் போனது. இத்தனைக்கும் சின்ன விஷயம்தான், அதட்டாமல் சொல்லியிருந்தால் சுதந்திரா நிச்சயம் கேட்டிருப்பாள். பேச்சுப் பொறுக்காதவள் அவள் என்பது ஜனார்த்தனுக்கு என்றுமே தெரியாமல் போனது.
அடுத்துவந்த நாட்கள் இயல்பாக போய்விட, மலர் மட்டும் மனம் விட்டுப் போகாமல் ஜனாவின் அகமெல்லாம் சூழ்ந்திருந்தாள். அவனும் அவள் நினைவு இருக்காமல் இருக்க வேண்டும் என்று வேலையில் மூழ்க, அது கூட அவனால் முடியாமல் போனது. இயல்பைத் தொலைத்துக் கொண்டிருந்தான் அவன். அவனுக்குப் பிரசன்னாவுக்கும் சண்டை என்றாலும் கூட ஜனாவால் இயல்பாக இருக்க முடியாது, அதை சரி செய்யும் வரை அவன் சரியாகமாட்டான். அப்படி நினைத்திருக்க, அப்படியில்லை என்று அந்த வார இறுதியில் புரிந்து போனது.
அந்த வார இறுதியில் சுதந்திராவைப் பார்த்துப் பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தான். ஆனால் சுதந்திர மலர் அந்த வாரம் வராமல் போக, வர்ணவியிடம் கேட்காமலேயே பதில் கிடைத்தது. அடுத்தவாரம் இண்டர்னல்ஸ் என்று தங்கை சொல்லி இருக்க, அது முடியும் வரை அவள் வரமாட்டாள் என்று புரிய இன்னும் தவிக்க ஆரம்பித்தான்.
ஆரம்பத்தில் அவள் யாரோதானே பேசினால் பேசட்டும் என்றுதான் எண்ணியது அவனகம். ஆனால் அன்றிரவெல்லாம் உறக்கமற்றுப் போனதில் அவன் உள்ளம் அவனுக்குப் புரிந்து போனது. அவளுடன் சண்டைகள் வருவதை அவன் மனம் விரும்பவில்லை. மலருக்கும் அவனுக்குமான இணைப்பு என்பது இன்றியமையாததாக இருக்க வேண்டுமென உள்ளமெல்லாம் உந்துதல்.
நட்பா? காதலா? ஒன்றும் தெரியவில்லை. மலர் அவனுடன் இயல்பாய் இருக்க வேண்டும், எப்போதும் போல் பேச வேண்டும் என்பது மட்டுமே பெரும் விழைதலாய் இருக்க, விலகலை எல்லாம் ஏற்க மனமில்லை.
கடைசி இண்டர்னல்ஸ் தேர்வு அன்று தங்கையிடம் சென்றவன் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை அவளிடம் கொடுத்து,
“இதை உன் ப்ரண்ட் கிட்ட கொடுத்திடு, படிச்சிட்டு அவளையே வச்சிக்க சொல்லு” என்று சொல்ல, இது எப்போதும் நடப்பதுதான் என்றாலும் கூட,
“எப்பவும் படிச்சிட்டு தர சொல்லிடுவ, இது என்ன புதுசா?” என்று வர்ணவி புத்தகத்தை அவள் பையில் வைத்தவாறே கேள்வி கேட்டாள்.
இடக்கையை தலையில் வைத்துக் கடுப்பாய்த் தேய்த்தவன்,
“உன் ப்ரண்ட் படிக்கலன்னு சொன்னாளேன்னு கொடுத்தா என்னையே கேள்வி கேட்கிறியா நீ, நீ கொடுக்கவே வேண்டாம் போ” என்று புத்தகத்தை எடுக்கப் போனான்.
“இல்ல இல்ல, அவ படிக்கலையா சரி சரிண்ணா, நோ கோவம்” என்று வர்ணவி சமாதானமாய்ப் போய்விட, புத்தகத்தைக் கொண்டு போய் மலரிடம் பஸ்ஸீல் வைத்துக் கொடுக்க சுதந்திரமலர் புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள். வீட்டில் சென்று பார்க்கையில்தான் உள்ளே ‘You are Special’ என்று எழுதப்பட்ட புக்மார்க் இருக்க, அது என்னவோ சுதந்திர மலருக்கு சரியாகப்படவில்லை.
அவளின் எண்ணம் சரியென்பது போலவே அந்த வாரம் அவள் நூலகம் சென்றபோது நடந்தது.
அன்று வர்ணவியிடம் பேச்சுக்கொடுத்து சுதந்திரமலர் எப்போது நூலகம் செல்வாள் என்று தெரிந்த கொண்ட ஜனார்த்தன், அவள் வரும் முன்னே அவளுக்காகக் காத்திருந்தாள். அவளைக் கண்டதும்,
“என்ன ரொம்ப நாளா காணும்?” என்று ஜனா இயல்பாகப் பேச்சைத் துவங்கிட, மலரும் கோபத்தை எல்லாம் தூக்கி சுமக்கவில்லை.
“இண்டர்னல்ஸ் ஜனா” என்று மலரும் இயல்பாகப் பேசிவிட, மனமெல்லாம் மலர்ந்த உணர்வு, மலராய் ஆன உணர்வு. அவளுடன் பேசாமல், பார்க்காமல் இருந்த நாட்கள் தன்னை எப்படி தாக்கியிருக்கின்றன என்பது அவனுக்குத் தெள்ளத்தெளிவாய்ப் புரிந்திட மலர் எப்படி நினைக்கிறாள் என்பதுவும் தெரிய வேண்டியிருந்தது.
“அப்புறம் புக் கொடுத்தேனே படிச்சியா?”
“நான் படிச்சிட்டே இருக்கேன், அது என்ன எந்த புக் கொடுத்தாலும் கொடுப்பேன் பொன்னியின் செல்வனெல்லாம் யாருக்கும் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு அதை எனக்கே கொடுத்துட்டீங்க?” என்று சரியாக அவனைப் பார்த்துக் கேள்வியை வைக்க,
‘என்னையே தர நிலைமையில இருக்கேன், புக்கைத் தரமாட்டேனா’ என்று உள்ளே எண்ணம் போனாலும், அதெல்லாம் அதிகப்படி பேச்சு என்று தோன்றியது. தன் தங்கை வயதுப்பெண் அவள், படிக்கும் வயதில் அவளிடம் இதெல்லாம் பேசலாமா வேண்டாமா என்ற நினைப்பும் ஓடியது. நட்பென்று நம்பி பேசும் பெண்ணிடம் அதற்கு மேல் பேசவும் மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனால் அவளைக் கண்டதும் ஒரு களிப்பும் உவப்பும் அவனைக் கேளாமலே தோன்றிட, அகமெங்கிலும் அமைதி!
“உனக்குக் கொடுக்கணும்னு தோணிச்சுக் கொடுத்தேன், அதுக்கென்ன?” என்றான் ஒருவித எரிச்சலுடன். மலரின் முகம் பார்க்க அதிலும் கோபம் தெரிய,
“பின்ன என்ன மலரே? புக் கொடுத்தா படிக்கனும் சும்மா கேள்வியா கேட்கிற?” என்றவன்,
“சரி விடு காஃபி சாப்பிடலாமா?” என்றழைத்தான்.
“இல்ல வேண்டாம், எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்று சொல்லி புறப்பட்டுவிட, அவன் இதயமும் அவன் கேளாமலேயே அவளுடன் உலா போக, காதல் விழா கண்டது அவன் அகத்தினில்.
ஜனாவோ “ராங்கி!” என்று தரையை மிதித்தான்.
அடுத்த வாரமும் மலர் வந்துவிட, அவள் தினசரி பத்திரிக்கை இருக்கும் இடத்தில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்க, அவள் முன்னே வந்து உட்கார்ந்தான் ஜனார்த்தன்.
“நான் கீழ எல்லாம் உன்னைத் தேடிட்டு இருக்கேன், நீ இங்க என்ன பண்ற?” என்றான் உரிமையாக. அவன் பேச்சும் உரிமையும் புரிந்தாலும் பிடிக்கவில்லை சுதந்திர மலருக்கு.
“எதுக்கு வந்தேனோ அதைத்தான் இப்போ செஞ்சுட்டு இருக்கேன்” என்றாள் அவன் கண்பார்த்து.
“என்னைப் பார்க்கணும்னு தோணலையா?” என்று ஜனா அவனின் ஏக்கத்தை அவளிடம் கேட்க,
“நான் லைப்ரரி வரது உங்களைப் பார்க்கவா என்ன? நான் படிக்கத்தானே வரேன்” என்றவளிடம் அடுத்து என்ன பேச வேண்டும் என்பது கூட ஜனாவுக்குப் புரியவில்லை. அடுத்து பேசும் சூழலையே அவள் தரவில்லை, கத்தரித்துப் பேசினாள்.
“ஓகே லீவ் இட், ஒன்னு படிச்சேன் சொல்லவா?” என்று கேட்க
“அப்புறம் சொல்லுங்க ஜனா, இப்படி பேசிட்டே இருந்தோம்னா எல்லாருக்கும் டிஸ்டர்ப் ஆகும்” என்று அவள் மறுக்க,
“ஓகே நான் வெளியே வெயிட் பண்றேன், நீ படிச்சு முடிச்சு வா” என்று ஜனார்த்தன் வெளியே போய்விட, மலரும் படிப்பதில் கவனம் செலுத்தினாள்.
அவள் படித்து முடித்து கீழே இறங்கி வர, பார்த்தால் வெளியே கனமழை. வீட்டிற்குப் போன் செய்து மழை என்று சொல்ல, அவர்கள் நேரமானாலும் மழை விட்ட பின்னே வர சொல்லிவிட, மீண்டும் நூலகத்துக்குள் போக பார்த்தவளை ஜனா தடுத்தான்.
“என் கூட வா மலர், நான் ட்ராப் பண்ணிடுறேன்” என்று சொல்ல,
“இல்ல ஜனா தேங்க்ஸ், நான் மழை விட்டதுமே போய்க்கிறேன்” என்று அவள் நாசுக்காய் மறுக்க,
“ஓகே” என்றவன் அடுத்து ஒன்றும் பேசாமல் அவளுடன் அவளருகே நின்றான்.
அவள் தவிர்க்கிறாள் என்பது அவனுக்குப் புரிய, அவன் தவிக்கிறான் என்பது அவளுக்குத் தெரிய வேண்டி அவனும் போகாமல் இருந்தான். அந்த நூலகத்தின் வாசல் ஓரம், மழைத்தூறல்கள் பட்டுத்தெறிக்கும் நெருக்கத்தில் சுவரோரம் சாய்ந்தவண்ணம் மலர் நின்றிருக்க, தலைவனின் மனமும் அங்கேயே தங்கி தேங்கிட, மலரின் அருகேயே நின்றான்.
மழை மட்டுமே அங்கே மொழி! அதன் சின்னத்தூறலும், சில்லென்ற சாரலும் மட்டுமே அங்கே இசையாய் இருந்திட அவ்விசைக்கு இயல் சேர்த்தான் ஜனா.
“காதல்..
அதற்கென்று ஆசைகள்
எதுவும் இல்லாதது
அது நிறைவேற
வேண்டுமென்பதைத் தவிர!” என்றான் உணர்ந்து, உள்ளத்திலிருந்து. உண்மையில் காதல் பற்றி அப்போதும் பேச வேண்டும் என்று முடிவெல்லாம் இல்லை, ஆனால் மழையும் மைமலும்(மாலை) காதலைத் தீண்டி விட, தானாய் வாய்மொழிப் பேசியது.
அவன் காதல் என்று ஆரம்பிக்கவுமே மலரிடம் சிறு அதிர்ச்சி இருந்தாலும், அவன் கவிதை சொல்லவும் இவன் காதல் சொல்கிறானா? இல்லை கவிதை சொல்கிறானா இல்லை காதலாய் கவிதை சொல்கிறானா? இல்லை கவிதையாய் காதல் சொல்கிறானா என்றுதான் அவளுக்குக் குழப்பம்.
இருந்தும் அவள் அதை வெளிப்படுத்தாமல்,
“கவிதை நல்லா இருந்துச்சு ஜனா, யார் எழுதினா?” என்று கேட்க,
“கலீல் கிப்ரானோட காதலின் ஆசைகள் தமிழ்ல மொழிப்பெயர்ப்பு” என்றவன் அவள் அருகே இன்னும் நெருங்கினான்.
“நீ புத்திசாலின்னு எனக்குத் தெரியும் சுதந்திர மலர்” என்றான் கொஞ்சம் கிண்டலாக.
மலரோ அவனை இன்னும் நிமிர்வாய்ப் பார்த்தவள், அவனை விட்டு கொஞ்சம் தள்ளி முன்னே நின்று,
“தெரிஞ்சா சரி” என்றாள் கெத்தாக.
“உனக்கும் புரிஞ்சா சரி” என்றான் அவனும் அவளைப் போலவே.
இருவரும் காதல் சொல்லவில்லை, சொல்லத் தேவையுமில்லாமல் இருவருக்குமே ஒருவரை ஒருவர் புரிந்தது.
மழை கொஞ்சம் விட்டிருக்க, சின்ன சின்ன தூறல்கள்தான். மலர் உடனே தனது பையில் இருந்து ‘பொன்னியன் செல்வனை’ அவனிடம் நீட்ட, ஜனார்த்தனுக்குத் தன்னையே வேண்டாம் என்று சொல்வது போல் தோன்ற,
“ஏன் இதுவரைக்கும் நான் கொடுத்த புக்ஸை எல்லாம் வாங்கின, இதைத் திரும்பித் தர?” என்றான் கடுப்பாக.
“எல்லாமே படிக்கத் தான் வாங்கினேன், இதை படிச்சு முடிச்சிட்டேன். அதான் திருப்பித் தரேன்”
“இதை நான் உன்னையே வச்சிக்க சொன்னேன்” என்றான் அழுத்தமாக.
“எனக்கு என்னோட பொருள் மட்டும் சொந்தமா இருந்தா போதும், அடுத்தவங்களோடது வேண்டாம்” என்று அவள் இரட்டுற மொழிய,
அவளின் சினேகப் பேச்சுக்கும் சிலேடைப்பேச்சுக்கும் இத்தனை நாட்களில் வேறுபாடு புரிந்தது.
“நீ சின்னப்பொண்ணு நினைச்சேன் சுதந்திரா, ஆனா நீ அப்படியில்லை, யூ ஆர் ஜீனியஸ் அண்ட் ஐ லைக் இட் பேபி” என்றவனை முறைத்தாள் சுதந்திர மலர்.
இவனிடம் பேசினால் வேலைக்காகாது என்று புரிந்து, புத்தகத்தை அவன் பார்க்கும்போதே அங்கிருக்கும் மேஜையின் மீது வைத்தவள் அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டிற்குப் புறப்பட
“ராங்கி!” என்று அவனின் இதழ்கள் செல்லமாய் முணுமுணுத்தன. ஜனாவின் முகத்திலோ அவனை அவள் தெரிந்த கொண்ட திருப்தி.
மூன்று மாதங்கள் ஓடிப்போக, சுதந்திர மலர் ஜனாவிடம் பேச்சுவார்த்தையே வைத்துக்கொள்ளவில்லை. இடையில் அவர்களுக்கு செமெஸ்டர் தேர்வு வந்துவிட, மலர் நூலகமும் செல்லவில்லை. இது எதுவும் வர்ணவிக்குத் தெரியாது.
அப்போதுதான் செமெஸ்டர் விடுமுறை விடப்பட்டிருக்க, மலர் படம் பார்க்கலாம் என்று நினைத்து அவளது லேப்டாப்பில் அமேசான் ப்ரைமைத் திறக்க முயல, அது கடவுச்சொல் தவறு என்று காட்டியது. அவள் வர்ணவியின் கணக்கில் இருந்துதான் இத்தனை நாள் பயன்படுத்தினாள். அதனால் தன் அப்பத்தாவின் போனில் இருந்து வர்ணவிக்கு அழைத்து,
“ஹே எரும! பாஸ்வர்ட் மாத்தினா சொல்ல மாட்ட? ப்ரைம் பாஸ்வர்ட் என்னடி?” என்று கேட்டாள்.
“நான் எப்படி டி சுறுசுறுப்பா பாஸ்வர்ட் மாத்துவேன்னு நீ எதிர்ப்பார்க்கிற? நான் ஒன்னும் மாத்தல, என் அண்ணா மாத்தியிருப்பான் நினைக்கிறேன், ஒரு நிமிஷம் டி” என்றவள், ம்யூட்டில் போட்டுவிட்டு ஜனாவின் அறைக்குள் போய்,
“அண்ணா, அமேசான் ப்ரைம் பாஸ்வர்ட் மாத்தினியா? மலர் படம் பார்க்கனுமாம், பாஸ்வர்ட் சொல்லு” என்று கேட்க,
“போன்ல மலரா?” என்று கேட்டான் ஜனா.
“ம்ம், ம்யூட்ல இருக்கு” என்றதும் தங்கையிடம் போனை வாங்கி
“நானே சொல்லிக்கிறேன், ஒரு புக் பத்தி டிஸ்கஸ் செய்யணும் நீ போ” என்றான் தங்கையிடம்.
“என்னமோ நீ ப்ராடு வேலை செய்றடா அண்ணா, புக் பத்திதானே என் முன்னாடியே பேசேன்” என்று வர்ணவி அவனை ஆராய்ச்சிப் பார்வையுடன் பார்த்து சொல்ல,
“நீயும் உன் மாமனும் பேசும்போது நான் இருக்கேனா என்ன? போடி” என்று அதட்டினான். வர்ணவியின் முகத்தில் வர்ணஜாலமாய் ஒரு பொலிவு.
“அண்ணா, நிஜமாவா? உனக்கு மலரைப் பிடிச்சிருக்கா?” என்று சந்தோஷமாய்க் கேட்க,
“வருக்குட்டி ப்ளீஸ்மா, நான் பேசிட்டு சொல்றேனே” என்று கெஞ்ச, வர்ணவியும் தலையாட்டிவிட்டு போனாள்.
அதற்குள் ‘வரு வரு’ என்று கத்திய மலர் போனை வைத்திருந்தாள். மீண்டும் ஜனா அவளின் எண்ணிற்கு அழைக்க, மலரோ வர்ணவியின் என நினைத்து,
“எரும எரும! போன் பேசும்போது எங்க போன எரும?” என்று பல்லைக் கடித்தபடி பேசினாள்.
“அந்த எரும அதோட அண்ணன் எருமையைப் பார்க்கப் போச்சு” என்று ஜனார்த்தனின் குரல் கேட்கவும் ஒரு நொடி அதிர்ந்தவள்
“வரு எங்க?” என்று அவன் பேச்சைக் கண்டுகொள்ளாமல் மலர் பேசினாள். அவளின் கத்தரித்தப் பேச்சு காந்தலாய் இருந்தாலும்,
“பாஸ்வர்ட் சொல்றேன் நோட் பண்ணிக்கோ” என்றான்.
“சொல்லுங்க ஜனா” என்று அவள் சாதாரணமாகப் பேச,
“ஐ லவ் யூ” என்றான் பட்டென்று.
சாரி ப்ரண்ட்ஸ். வேற வேலையா இருந்ததால Morning upload பண்ண முடியல..Read and Share your thoughts.
✅ End of Episode 16
Nice
புத்தகம் வழியே