Episode 24
ஜனாவின் பாவனைப் பார்க்க முரளியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“மாமா, எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்றான் ஜனா பாவமாக.
“நான் எங்க கண்டுபிடிச்சேன், நீதானே சொன்ன?” என்றவருக்கு இன்னும் சிரிப்புதான். அவர் சொன்னதைக் கேட்டு ஜனா தன் கையால் தலையில் தட்டிக்கொள்ள,
“நீ ரொம்ப சீரியஸா மலரைப் பார்த்த, அப்புறம் என்னைப் பார்த்திட்டே இருந்த. அமிழ்தா பத்தி தெரிஞ்சு நீ வீட்டுக்கு வந்து சண்டைப் போட்டப்போ இருந்த அதே ரியாக்ஷன். ஒரு டவுட்ல சும்மா கேட்டேன். நீ சொல்லிட்ட” என்றவர் அவனின் கைகளில் தட்டிக்கொடுத்தார்.
“ஏன் ஜனா இப்படியெல்லாம்? மலருக்குத் தெரிஞ்சா ரொம்ப கோவப்படுவா” என்றார் மகளை அறிந்தவராக.
“பிரசன்னா சொன்ன ஐடியா மாமா” என்றவன் எல்லாம் சொல்ல,
“என்ன இருந்தாலும் மலரா கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி நீங்களே சொல்றது நல்லது, அவ உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சுன்னு தெரிஞ்சதும் அவ்வளவு தவிச்சா, அப்படியொரு அழுகை” என்றார்.
“சொல்லணும்தான், ஆனால் நீங்களே கண்டுபிடிச்சிட்டீங்க, மலர் கொஞ்சமும் என்னை சந்தேகப்படலை” என்று யோசனையாக ஜனா சொல்ல,
“என் பொண்ணுக்குக் காதல் கண்ணை மறைக்குது போல, அவ உங்க ஹெல்த் மேல ரொம்ப கான்சியஸா இருக்கறதால யோசிக்கல, ஒருவேளை ஜனா அப்படியெல்லாம் செய்ய மாட்டார்னு அவ நம்பலாம்” என்றார் முரளிதரன்.
சில நேரம் சொல்லிவிடலாம் என்று ஜனாவுக்குத் தோன்றும், ஆனால் உண்மையை சொல்லி அவள் மீண்டும் சண்டையிடுவாளோ என்ற பயம். இன்னொரு பிரிவையெல்லாம் அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.
“என்னதான் ஜனா உங்களுக்குள்ள பிரச்சனை?” என்று முரளிதரன் நேரடியாக ஜனாவிடம் கேட்டார். அவர் மகள் அவனுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை என்றாளே தவிர என்ன விஷயம் என்று சொல்லவில்லை. அவ்வளவு பிடிவாதமாய் இருந்தாள், இருக்கிறாள்!
“கொஞ்சம் மிஸ் அண்டர் ஸ்டாண்டிங். அவ்வளவுதான்”
“அப்புறம் ஏன் அவளை இத்தனை நாளா பார்க்கல?” என்றவரின் பேச்சில் கோபம், அவன் பதில் சொல்லத் தயங்கினான்.
அவள் மீது எந்தளவு காதல் இருக்கிறதோ அதே அளவு கோபமும் இருக்கிறது. தன்னிடம் ஒருவார்த்தைக் கூட சொல்லாமல் வெளிநாடு போனாள். குழந்தைப் பற்றி சொல்லியிருக்க வேண்டுமல்லவா? எதை மன்னித்தாலும் மறந்தாலும் அது மட்டும் மறக்கவில்லை.
“தப்புத்தான் மாமா, ஐ அம் சாரி” என்றவனின் தோளில் கைப்போட்டு தட்டிக்கொடுத்தவர்,
“சரியாகிடும்பா” என்றார். அப்போது பார்த்த உணவுண்ண அழைக்க வந்த மலரின் கண்களில் அப்பா கணவனைத் தோளோடு அணைத்த காட்சி விழ, அவள் கண்கள் சிரித்தன.
“என்ன ஒரே கொஞ்சல்ஸா இருக்கு?” என்று மலர் கேட்க,
“அதெல்லாம் எங்களுக்குள்ள” என்று கண்சிமிட்டினான் கணவன்.
அதன்பின்பேச்சும் சிரிப்புமாக உண்டு முடித்தவர்கள் வீடு சென்றனர். ஒரு பக்கம் நிறைவாய் உணர்ந்த மலரின் மனம் இன்னொரு பக்கம் குறைவாய் உணர்ந்தது. இன்னும் எதுவும் சரியாகவில்லைதானே?
தங்கையின் திருமண வேலைகள் பார்க்கையில் தனது திருமண தருணங்கள் நினைவில் நின்றது, எவ்வளவோ பேசிப்பார்த்தும் இருவீட்டிலும் சம்மதமில்லையென்றதும் ஜனா பிடிவாதமாய் மலரைத் திருமணம் செய்துகொண்டான்.
பிரசன்னாவிடம் கூட ஜனா சொல்லவில்லை. அதில் பிரசன்னாவிற்கு அவ்வளவு வருத்தம், அந்த கோபமும் மலர் மீதே திரும்பியது. ஜனாவின் வீட்டில் ஜகனுக்கும் மகனின் செயலில் வருத்தம், சௌந்தர்யாவுக்கு மகன் தங்களிடம் சொல்லாமல் திருமணம் முடித்துவிட்டான் என்பதை அவரால் ஏற்கமுடியவில்லை. அந்த கோபத்தில் ஜனாவின் வீட்டில் யாரும் அவர்களை ஏற்கவில்லை.
என்ன காதல்? என்ன திருமணம்? என்று ஒரு சலிப்பு சிந்தையில் ஓடியது. அதற்காக திருமண வாழ்வு இனிக்காமல் எல்லாமில்லை, திகட்ட திகட்ட ஒரு காதல் வாழ்க்கைதான்! கூடவே சில கசப்பான தருணங்களும்.
————————————————————–
திருமணமான புதிதில் ஒன்றிரண்டு மாதங்கள் பெரிதாய் எந்த பிரச்சனையுமில்லை, அப்படியே வாக்குவாதங்கள் வந்தாலும் கூட இருவருமே சேர்ந்தே கடந்தனர். மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் ஜனாவின் வீட்டில் அவனை ஏற்கவில்லை, பிரசன்னாவும் முகம் திருப்பினான்.
அலுவலகத்திலோ தாத்தா, அப்பா, பிரசன்னா என்று எல்லாரும் அவனை ஒதுக்கிவைத்தனர், சொன்ன வேலையை மட்டுமே செய்தான். அவனிடம் கலந்தாலோசிப்பதோ கருத்துக் கேட்பதோ ஒன்றுமே இல்லை.
சில நேரங்களில் வீட்டினர் காட்டிய ஒதுக்கம் பற்றி வருத்தமாய் ஜனா மலரிடம் பகிர்வதுண்டு. அப்படியான நேரங்களில்,
“என்னை கல்யாணம் செஞ்சதாலதான் இப்படி ஆகிடுச்சுன்னு ஃபீல் பண்றீங்களா?” என்று கேட்டு அவனின் பிபியை ஏற்றுவாள். அதில் நொந்தவன் அந்த பேச்சையே எடுக்கமாட்டான், ஆனால் மனத்தில் அந்த அழுத்தமிருக்கும்.
ஒரு முறை ஜனாவிற்குக் காய்ச்சல் கண்டது. மலருக்கு அன்று பார்த்து அலுவலகத்தில் தவிர்க்க முடியாத வேலை, அவள் போயாக வேண்டிய கட்டாயம். ஜனாவைப் பார்க்க,
“நான் மேனேஜ் பண்ணிப்பேன்டா, நீ போய்ட்டு வா” என்று சொன்னான். அதனால் சுதந்திரமலர் அன்று வேலைக்குப் போய்விட்டு வர, சரியாய் அந்த நேரத்தில் பிரசன்னாவின் கார் அவர்களின் ப்ளாட் முன் நின்றது. இவள் போவதைப் பார்த்தவன் அவனும் காரை விட்டு இறங்க, கூடவே ரங்கநாயகியும் வந்தார்.
சில நாட்களாக பிரசன்னா ஜனாவிடம் பேசத்துவங்கியிருக்க, ஜூரம் என்று கேள்விப்பட்டவன் அவனைப் பார்க்க கிளம்பினான். ரங்கநாயகியிடம் பேச்சுவாக்கில் சொல்லிவிட அவருக்குமே ஜனாவைப் பார்க்க ஆசை. மாதங்கள் ஆகிற்று அவனைப் பார்த்து. இவர்களைப் பார்த்தாலும் மலர் ஒன்றும் பேசாமல் அவர்களின் ஃப்ளாட்டிற்குப் போக, அவள் பின்னேயே அவர்களும் வந்தார்கள்.
“உள்ள வாங்க பாட்டி, உட்காருங்க” என்று மட்டும் சொன்னாள். பிரசன்னாவும் ரங்கநாயகியும் அங்கிருந்த சோஃபாவில் உட்கார,
“ஜனாவைக் கூப்பிடுறேன்” என்று உள்ளே போக அவன் உறங்கியிருந்தான். எழுப்ப மனமின்றி காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப்பார்க்க குறைந்து இருந்தது.
“அவர் நல்லா தூங்குறார் பாட்டி” என்று சொல்ல,
“அவனே எழட்டும். வேலைக்குப் போய்ட்டு வரியா நீ?” என்று ஆரம்பித்தார் ரங்கநாயகி. அவள் ஆமாம் என்றதும் பொங்கிவிட்டார்.
“என் பேரனுக்கு உடம்பு சரியில்லாம போச்சுன்னு கவலையில்லாம நீ பாட்டுக்கு வேலைக்குப் போய்ட்டேன்ற” என்றார் கோபத்துடன்.
“அவர் மேனேஜ் பண்ணிப்பேன் சொன்னார், ஆபிஸ்ல முக்கியமான வேலை இருந்துச்சு பாட்டி” என்று மலர் பொறுமையாகவே பேசினாள். ரங்கநாயகிக்கு முரளி மேல் இருந்த துவேஷம் அவரின் மகளான சுதந்திராவிடம் வெடிக்க வைத்தது.
“அவன் அப்படிதான் சொல்வான், பெரிய வீட்டுப் பையனை மயக்கி கல்யாணம் பண்ணினா மட்டும் போதாது. அக்கறையோட பார்த்துக்கணும், எங்க வீட்ல இருந்திருந்தா அவனை எப்படி ராஜாவாட்டம் பார்த்திருப்போம் நாங்க. எல்லாம் உன்னாலதான்” என்று சாடினார்.
“பாட்டி கொஞ்சம் யோசிச்சுப் பேசுங்க” என்றாள் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு. பிரசன்னாவோ கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவனுக்கென்ன என்பது போல இருக்க, மலருக்கு மனம் கசந்தது.
“என்ன யோசிக்கணும் நான்? உண்மையைத்தானே சொன்னேன். இதுவரைக்கும் எங்களை மீறி ஒன்னும் செய்யாத எங்க ஜனா இன்னிக்கு உன்னைக் கட்டியிருக்கான்னு அதுக்குக் காரணம் என்ன? எல்லாம் அப்பனும் மகளும் போட்ட திட்டம். உன் அப்பன் என் பொண்ணைக் கொன்னான், நீ என் பேரனைக் கொல்லப்போறியா?” என்றார் விஷமாய். மலரால் பொறுக்க முடியவில்லை.
“நிறுத்துங்க! சும்மா பேசிட்டே போறீங்க, அவ்வளவுதான் மரியாதை” என்றாள் குறையா கோபத்துடன். அந்த சத்தத்தில் தூக்கம் களைந்து எழுந்தான் ஜனார்த்தன்.
மலரின் குரல் கோபத்துடன் ஒலிக்க யாரைக் கத்துகிறாள் என்று பார்க்க ரங்கநாயகியும் பிரசன்னாவும் இருக்க, மலர் வயதில் பெரியவரை மரியாதையின்றிப் பேசியதை ஜனாவால் பொறுக்கமுடியவில்லை! அவர் பேசியது அறியாமலே,
“மலர்! ஷட் அப்” என்றான். அவனின் குரலில் எல்லாரும் அவனைப் பார்க்க, மலரின் முகம் வாடிப்போனது.
“ஜனா இப்போ ஃபீவர் எப்படி இருக்கு? ஓகேவா?” என்று பிரசன்னா அக்கறையில் கேட்க,
“பரவாயில்லைடா” என்றான் ஜனா.
“உன்னை ஏன் கவனிக்கலன்னு கேட்டா இவ என்ன பேச்சுப் பேசுறாடா ராஜா?” என்று ரங்கநாயகி மலரை முறைத்துக் கொண்டே பேசினார். அவர் என்ன பேசினாலும் அவள் கேட்டுக்கொண்டிருப்பாள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார், மலர் அதட்டிப் பேசவும் தாங்க முடியவில்லை அவரால்.
“அப்பத்தா விடுங்க அவ தெரியாம பேசிட்டா, இப்போதான் என்னைப் பார்க்க வர தெரிஞ்சதா?” என்று ஆசையும் ஏக்கமும் இழையோட அவன் பேச, சுதந்திர மலருக்குச் சுருக்கென்றது.
‘நான் என்ன தெரியாம பேசினேன்?’ என்று மனம் மறுகிட, தன்னை விட்டுக்கொடுத்துப் பேசியவன் மேல் கோபம் பெருகியது.
“நீதான் இவ பின்னாடி போய்ட்டியேடா, எல்லாம் அவங்கப்பன் புத்தி” என்று ரங்கநாயகி விடாது பேச,
“போதும் விட்டா பேசிட்டே போறீங்க, வந்தீங்களா உங்க பேரனைப் பார்த்தீங்களான்னு இருங்க. தேவையில்லாம பேசினா அவ்வளவுதான்” என்று மலர் கோபத்தைக் காட்ட, ஜனா மலரின் கையைப் பிடித்து அவளை அடக்கினான்.
“மலர்! முதல்ல உள்ளே போ” என்று அவளை அறைப்பக்கம் திருப்பினான். மலரும் உள்ளே சென்றுவிட, பிரசன்னாவும் ரங்க நாயகியும் ஜனாவுடன் சிறிது நேரம் பேசிவிட்டே சென்றனர். மலர் பேசியதற்கு ஜனா மன்னிப்புக் கேட்க, மலர் உள்ளம் கொதிக்க உட்கார்ந்திருந்தாள்.
“இதுக்குதான் அவன் பொண்ணு வேண்டாம்னு சொன்னேன் நான், கேட்டியா ஜனா? அவ நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டா டா” என்று ரங்கநாயகி பேச,
“ப்ளீஸ் அப்பத்தா அப்படி பேசாதீங்க” என்று பொறுமையாகச் சொல்லி அவரை அனுப்பிவைத்தான்.
கணவனாக மலரின் மனத்தில் அவன் முதன்முதலாய்த் தோற்ற கணம் அது! மலர் கோபமாய் இருக்க, அவளிடம் வந்தவன்,
“அவங்க பெரியவங்க, என்னவோ வருத்தம் பேசுறாங்கன்னு விட்டா என்ன மலர் உனக்கு? என்று அவனாகவே ஆரம்பிக்க மலர் அவனை முறைத்தாள்.
“அவங்க என்ன பேசினாங்கன்னு தெரியாம பேசாதீங்க ஜனா” என்று பல்லைக் கடித்துப் பேச,
“எல்லாம் எனக்குத் தெரியும், அதுக்காகப் பதிலுக்குப் பதில் வயசுக்குக் கூட மரியாதை இல்லாம பேசுற நீ?” என்று திட்டினான்.
அவன் ‘எனக்குத் தெரியும்’ என்று பேச்சுக்காக சொல்லியிருக்க, அவர்கள் பேசியதைக் கேட்டும் என்னை அடக்குகிறானா என்று சுதந்திராவின் சுதந்திர மனம் அதன் தளைகளை உடைத்தது.
“என்னைப் பொருத்தவரைக்கும் வார்த்தைக்குத்தான் மரியாதை மதிப்பு எல்லாம்! வயசுக்கு இல்லை ஜனா” என்றாள் கோபத்துடன்.
“சொன்னா புரிஞ்சிக்க மாட்ட இல்ல நீ?” என்று ஆயாசமாக சொன்னவன் அப்படியே கட்டிலில் வந்து உட்கார்ந்துகொண்டான்.
மலர்தான் வாழ்க்கை என்று வந்துவிட்டாலும் குடும்பத்தினாரின் ஒதுக்கம் ஜனாவால் தாங்கமுடியவில்லை. அந்த வருத்தம் மலரிடம் கூட பகிரமுடியாமல் போக அழுத்தமாய் மாறி அவ்வப்போது இப்படி வெடிக்கத் தொடங்கியது.
“நான் என்ன புரிஞ்சக்கணும்? என்னைப் பேசுனாங்க ஓகே, என்னோட அப்பாவைப் பேசுறாங்க, என்னால எப்படி பொறுமையா இருக்க முடியும்?” என்றாள் கோபத்துடன்.
“கத்தாதடி! அவரால எங்க அத்தை இறந்தாங்க, அதனால்..” என்றவனைப் பேசவிடாது,
“ஜனா!” என்று கத்தியவள்,
“எங்கப்பா எந்த தப்பும் செய்யல, இன்னொருதடவை இப்படி பேசீனீங்க” என்றாள் மூச்சீரைக்க. விழிகளும் கலங்கி நின்றாள்.
“ஓகே! அவங்க அப்படி நினைக்கிறாங்க, அந்த கோபம் இருக்கும்தானே? அதைப் புரிஞ்சிக்கோ” என்று இன்னும் ஜனா அவன் வீட்டினருக்காகப் பேச மலரால் தாளமுடியவில்லை.
“அவங்களோட தப்பான கண்ணோட்டத்தால எங்கப்பாவை இஷ்டப்படி பேசுவாங்களா? எங்கப்பா உங்களுக்கு மாமனார், அவரை எப்படி வேணும்னாலும் பேசட்டும்னு விடுவீங்களா நீங்க?” என்று இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
“உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா மலர்? இப்போதான் பிரசன்னா எங்கிட்ட பேச ஆரம்பிச்சிருக்கான், கொஞ்ச கொஞ்சமா நம்ம வீட்ல எல்லாரும் நம்மை ஏத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க, இப்படி நீ அப்பத்தா கிட்ட மரியாதையில்லாம பேசினா காலத்துக்கும் நம்மை ஏத்துக்க மாட்டாங்க” என்று ஜனா அவன் பக்க நியாயம் பேச,
“மத்தவங்க ஏத்துக்கனும்ன்றதுக்காக என்னோட மரியாதையை எங்கேயும் என்னால குறைச்சிக்க முடியாது” என்றாள் மலர்.
“நான் உன்னை மரியாதையைக் குறைச்சிக்க சொல்லல, விட்டுக்கொடுத்துப் போ, பேசினா கண்டுக்காதன்னு தான் சொல்றேன்” என்று அவன் கொஞ்சம் தணிந்தான்.
“அதுதான் என்னால முடியாது” என்று சுதந்திரமலர் தன் மரியாதையை விட்டுக்கொடுக்காமல் பேச,
“ஓகே, லெட் இட் பீ! உன்னோட அம்மா, தங்கச்சி, அப்பத்தா எல்லாம் உங்கிட்ட பேசுறாங்க, என் அம்மா எங்கிட்ட பேசி நாலு மாசமாச்சு. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பெருசாக்கினா அவங்க நம்மை ஏத்துக்கவே மாட்டாங்க, உனக்கும் அதுதான் விருப்பம் போல” என்றான் கோபத்துடன்.
அடுத்தவந்த நாட்கள் சில உரசல்களுடனும் ஊடல்களுடன் கழிய, கூடலில் கோபங்கள் கரைந்தன.
அன்று விடுமுறை தினம் மலருக்கு. உடலில் சில மாற்றங்கள் உணர்ந்தவள் வீட்டில் டெஸ்ட் எடுத்துப் பார்த்திருக்க, அவள் நினைத்தது போலவே உண்டாகியிருக்க, அந்த சந்தோஷத்தை முதலில் ஜனாவிடம் சொல்லவேண்டும் என்ற பேராவலுடன் காத்திருந்தாள்.
ஒவ்வொரு அணுவிலும் அவ்வளவு உற்சாகம், உவகைத் துள்ளல்! எப்படி அவனிடம் இதனைப் பகிர்வது என்ற பரபரப்பு பெண்ணிற்கு.
இதில் ஒருவாரமாய் இருவருக்கும் பேச்சுவார்த்தை அவ்வளவாய் இல்லை. அவன் அலுவலகத்தில் அதிக வேலையிருக்க, பேசினாலும் இருவருக்குள்ளும் வார்த்தைகள் முற்றி வாக்குவாதங்களாய் மாற கொஞ்சம் இடைவெளி இருவருக்குள்ளும். ஆனால் அக்கணம் அகத்தின் அத்தனை இடங்களிலும் இனிமை மட்டும்!
ஜனா மீது எவ்வளவோ வருத்தங்கள், மனஸ்தாபங்கள் இருந்தாலும் கூட அப்போது எதுவும் நினைவில் இல்லை.
அவனோடு சமாதானமாகி, சந்தோஷ செய்தியைப் பகிர வேண்டும் என்று மிதமாய் அலங்காரம் செய்து அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
அன்று சனிக்கிழமையாக இருந்தபோதிலும் அவர்களது சொந்த தொழில். கட்டுமான நிறுவனம் வைத்திருந்தனர். பிரசன்னா சிவில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு வெளி நாட்டில் மேற்படிப்பும் முடித்திருக்க, ஜனா ஆர்கிடெக்ட் படித்தான். ஆனால் கட்டிட பணிகளை மேற்பார்வை செய்யுமளவிற்கு அவனுக்குமே அனுபவம் உண்டு. பிரசன்னாவும் ஜனாவும் படித்த முடித்த பின் ஜெயப்பிரகாஷமோ ஜகனோ சைட் பக்கமெல்லாம் செல்வதில்லை. பெரியவர்கள் அலுவலக வேலையை மட்டும் பார்க்க, மற்ற வேலை எல்லாம் பிரசன்னாவும் ஜனாவும் பார்த்துக்கொள்வார்கள்.
அப்போது மணி மூன்று. ஜனாவிடம் சொல்லாமல் யாரிடமும் பகிர பாவைக்கு மனமின்றி போக, காத்திருந்து பார்த்தவள் அவனுக்குக் கால் செய்தாள்.
ஜனா அப்போது அலுவலகத்தில் ஒரு முக்கிய மீட்டீங்கில் இருந்தான். மலரிடம் இருந்து அழைப்பு வரவும் கட் செய்தான். ஜெயப்பிரகாஷம் ஜனாவை அலுவலகத்தில் தினமும் உண்டில்லை என்று ஆக்கிக்கொண்டிருந்தார். பேரன் என்றும் பார்க்கவில்லை, ஜகனும் ஒன்றும் பேசவில்லை. அதற்கேற்றார்போல் ஜனாவும் வேலையில் சொதப்பிக் கொண்டிருந்தான்.
கட்டிடம் கட்ட அவன்தான் இப்போதெல்லாம் ப்ளான் டிசைன் செய்வது, ஆனால் மலருடனான மனஸ்தாபங்களினால் அவன் மனத்தில் அமைதியின்றி போக, அது எல்லாம் வேலையில் பிரதிபலிக்க வாங்கிக் கட்டிக்கொள்வான். மீட்டீங்கில் பிரசன்னா பேசிக்கொண்டிருக்க,
‘மலரே…மௌனமா?’ என்று ரிங்டோன் ஒலியெழுப்ப அத்தனைப் பேரின் பார்வையும் அவன் மீதுதான். ஜெயப்பிரகாஷ் பேரனை முறைக்க, ஜகன் கண்டிப்புடன் அவனைப் பார்த்தார். மீண்டும் அழைப்பு வர உடனே போனைக் கட் செய்தவன் ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.
தாய்மையடைந்த தன்னிலையைத் தலைவனிடம் சொல்ல ஆவலும் காதலுமாய்க் காத்திருந்த மலருக்கு ஒவ்வொரு நொடியும் யுகமாய் செல்ல, ஆறுமணி போல் ஜனா வர, கதவைத் திறந்து அவனைப் பார்த்தவளுக்கு அத்தனை நேரம் காத்திருப்பு எல்லாம் காற்றாய் கரைய, கண்களில் ஜனா மட்டுமே நிறைந்திருக்க, மிகுதியான மகிழ்வுடன் இதழில் நிலைத்திருந்த வெட்கமுறுவலுடன் உள்ளே நுழைந்த கணவனைக் கட்டிக்கொண்டாள்.
அலுவலகத்திலிருந்து நொந்து போய் வந்தவன் மனைவியின் திடீர் அணைப்பில் சில நொடிகள் தன்னைத் தொலைத்தாலும், கீழே அவனுக்காகக் காத்திருக்கும் பிரசன்னா நினைவில் வர, அவளை விலக்கப்பார்த்தான்.
மலரோ அவனை விட்டு அசையாதவள், அவளின் சந்தோஷம் பகிர நினைத்து அவனிதழ் நெருங்கி மென்தீண்டலாய் முத்தம் பதிக்க, ஒரு நிமிடம் உணர்வலைகளில் உள்ளம் சிக்க, அதில் கரைந்து போக முனைந்தாலும் வேலை நினைவில் வர, முத்தம் தந்தவளை வேகமாய் விலக்கினான்.
“இப்ப ரொம்ப முக்கியமா இது? வந்ததும் வராததுமா” என்று எரிந்து விழ, மலருக்குச் சுருக்கென்றது.
“ஏன் நீ கொடுத்ததே இல்லையா?” என்று கோபத்துடன் கேட்க,
“என்னை டென்ஷன் பண்ணாம போய்டு மலர், அறிவிருக்காடி உனக்கு? அதான் உன் கால் கட் பண்றேன்ல, புரிஞ்சிக்காம திரும்பத் திரும்ப கூப்பிடுற?” என்று திட்டியவன் அறைக்குள் போக அவனின் கைப்பிடித்தாள் மலர்.
“சாரி ஜனா, ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னுதான்..” என்று கொஞ்சம் தயங்கி அவள் பேச, பிரசன்னா கால் செய்தான்.
“டென் மினிட்ஸ் இருடா வந்திடுறேன்” என்று சொல்லியவன்
மலரின் கையை வேகமாக உதறி,
“அப்படி என்ன உயிர் போற விஷயம்? மனுஷன் டென்ஷன் புரியாம?” என்று திட்டியபடி அவன் சூட்கேஸில் துணிகளை அடுக்க, மலரால் குழந்தை விஷயத்தை சொல்ல முடியவில்லை, இப்படி எரிந்து விழுகிறானே இவன் என்று எரிச்சல் தோன்றியது.
அதனால் கொஞ்சம் பொறுமையாகவே,
“ஜனா ப்ளீஸ், நான் சொல்றதைக் கேளு” என்றாள்.
“எனக்கு டைம் சுத்தமா இல்ல மலர், நான் அவசரமா மும்பை போகணும். அப்புறம் பேசலாம், உங்கூட சண்டை போட எனக்கு நேரமில்லை” என்று அவன் பேசிவிட,
மலருக்கு மனத்தில் அதுவரை இருந்த பேராவல் நீங்கி, ஒரு வெறுமை தோன்றியது. அதையும்விட அவன் மும்பை போகிறானே என்று அவனைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில், ஏற்கெனவே குழந்தை உண்டாகியிருந்த சந்தோஷத்தைப் பகிர முடியாமல் தவித்தவளுக்கு அவன் சில நாட்கள் தன்னுடன் இருக்க மாட்டான் என்று புரிய, அகத்தின் அலைப்புறுதலை அடக்க முடியவில்லை.
காலை முதல் கரை காணா மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தவளுக்குக் கணவனின் உதாசீனம் உள்ளத்தினில் உருவமற்ற வலியை உண்டாக்கியிருக்க, கர்ப்ப கால உடல் நிலை மாற்றங்கள் வேறு அவளை சோர்வாக்கியிருக்க, ஜனாவை அணைத்துக்கொள்ள வேண்டும் போல ஒரு உந்துதல்.
துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவன் பின் நின்று கட்டிக்கொள்ள, ஜனாவிற்கு அவளின் உணர்வுகள் விளங்கவில்லை. அலுவலகத்தில் ஏற்கெனவே தாத்தா அவனை கண்டபடி எல்லார் முன்னும் பேசியிருக்க, மலரின் அருகாமையில் அவன் தடுமாற, அந்த தடுமாற்றம் அவனுக்குப் பிடிக்கவில்லை.
இவ்வளவு பேசியும் இந்த நேரத்தில் இப்படி செய்கிறாளே என்ற எரிச்சலில் அவளை முன்னே இழுத்து விட, அவனின் வேகம் தாங்காதவள் முன்னிருந்த மெத்தையில் விழ, மலரின் கைகள் வயிற்றைப் பிடித்தது.
ஜனா அவனுக்கிருந்த அலைப்புறுதலில், சற்று முன் அலுவலகத்தில் நடந்த அவமானங்களில் வார்த்தையை விட்டான்.
“எப்பவும் உனக்குக் கட்டிக்கிட்டும் கொஞ்சிட்டும் இருக்கனுமா? இடியட்” என்றான் கோபக்குரலில்.
“வீட்டுக்குள்ள நுழையும்போதே கிஸ் பண்ணிட்டு, நான் ஊருக்குப் போகணும்னு சொல்றேன், அப்படியும் என்ன அவசரம் உனக்கு? ச்ச” என்றவனின் பேச்சில் திகைத்தே போனாள் மலர்.
அதற்குள் மீண்டும் பிரசன்னா அழைக்க,
“டேய், நீயும் ஏன்டா படுத்துற? வரேன் இரு” என்று அவனிடமும் காய,
“ப்ளைட் போச்சுன்னா அவ்வளவுதான், சீக்கிரம் வா” என்று அவனும் பதிலுக் கத்த,
ஜனா தனது ட்ராலியைத் தள்ளிக்கொண்டு போக பார்க்க, மலரால் அவனின் பேச்சுகளை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
“ஜனா..” என்ற மலருக்கு வார்த்தைகள் வற்றிப்போனது. கண்ணீர் கூட வர மறுத்தது. அதுவும் அவனின்,
‘அப்படி என்ன அவசரம் உனக்கு? ச்ச’ என்ற வார்த்தைகளைத் தாளவும் முடியாமல் தாங்கவும் முடியாமல் போக உடல் கூசியது.
“என்னடி?” என்றான் ஆயாசமாக. ஜனாவிற்கு ப்ளைட்டை பிடிக்க இருந்த டென்ஷன் மலரிடம் அவனை சாதாரணமாகப் பேசவிடவில்லை. இப்போது ப்ளைட்டை விட்டால் அதற்கும் சேர்த்து அவனைப் பேசுவார்கள் என்று புரிய அவசரப்பட்டான்.
“எப்படி இப்படியெல்லாம் என்னைப் பேச முடியுது ஜனா?” என்றவளுக்கு அந்த வார்த்தைகளை சொல்லக் கூட பிடிக்கவில்லை. அவனுக்கான தேடலை அல்லவா கொச்சைப்படுத்திவிட்டான். அவள் அவசரம் காட்டியது எதற்கு என்று உணராமலேயே அவளின் உணர்வுகளை அவன் கீழ்த்தரமாய்ப் பேசியிருக்க, மலரால் வார்த்தைப் பொறுக்கமுடியவில்லை.
“மலர், உனக்கு சொல்றது புரியுதா இல்லையா? எனக்குப் ப்ளைட்டுக்கு லேட்டாச்சு, அப்புறம் பேசுறேன்” என்றான்.
“இனிமே பேச என்ன இருக்கு ஜனா? என்னைப் பேசவிடாம எல்லாம் பேசிட்ட, என்னைவிட உனக்கு உன் ஆபிஸ் முக்கியமா போச்சா?”
“தேவையில்லாம பேசாத”
“யார் தேவையில்லை நானா?” என்றாள் வலியுடன். காலையில் இருந்த சந்தோஷத்தைத் துளியும் பகிர முடியாத துக்கம், அவனின் வார்த்தைகளின் தாக்கம் எல்லாம் சேர்ந்து மலர் தன்னிலை இழந்தாள்.
அவன் நிலையறியா அவளும், அவள் நிலை புரியா அவனுமென சூழ்நிலை சுழலில் சிக்கியிருக்க, வார்த்தைகள் சிதறிப்போக, அவர்கள் வாழ்க்கை சிக்கலாகிப் போனது.
“உங்கிட்ட பேச எனக்கு டைம் இல்ல” என்று மீண்டும் மீண்டும் அவன் அதையே சொல்ல மலருக்கு மனம் விட்டுப்போனது.
✅ End of Episode 24
Nice
ஆசையுடன் அவள் காத்திருக்க