Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 25

காதல் 25

இருவருக்குள்ளும் பேச்சு தடிக்க மலர் கோபத்தில்

“நான் எங்க வீட்டுக்குப் போறேன்” என்று சொல்ல,

“எங்க வேணும்னாலும் போ” என்றான்.

மும்பை சென்றதும் ‘வந்துட்டேன் மலர்’ என்று மெசெஜ் செய்திருக்க, அதைப் பார்த்தாலும் மலர் பதில் சொல்லவில்லை. ஜனாவும் அவள் கோபத்தில் இருக்கிறாள் எனப் புரிந்து வேலையில் கவனம் வைத்தான். இப்போது பேசி சண்டையானால் இருவருக்குமே வருத்தமாகிப் போகும், வேலை முடிந்தவுடன் மொத்தமாய் மன்னிப்புக் கேட்டு சரண்டர் ஆகிடுடா ஜனா என்று அவனுக்கு சொல்லிக் கொண்டான்.

அவர்களின் நிறுவனம் இன்னும் ஒரே மாதத்தில் அந்த கட்டுமான பணியை முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். மும்பை என்பதால் அங்கிருக்கும் ஆட்களை விட்டு மேற்பார்வை செய்ய சொல்ல, அவர்கள் சரிவர வேலையை முடிக்காமல் இருக்க, அந்த பணியை ஆரம்பித்தில் இருந்து செய்தவன் ஜனார்த்தன்தான்.

இன்னும் பல வேலைகள் மிச்சமிருக்க, ஜகன் மகனை விளாசிவிட்டார். அவரைப் பொருத்தவரையில் வேலையில் கவனம் பிறழக் கூடாது, ஏற்கெனவே மகன் தங்களை மீறி திருமணம் செய்துவிட்டானே என்பது அவர்களின் நம்பிக்கைக்குப் பெரிய அடி. அந்த கோபமெல்லாம் சேர்ந்து மொத்தமாய் மகன் மேல் காட்டிட, ஜனாவோ பொறுக்கமாட்டாமல்,

“இப்போ என்ன? அந்த பில்டிங் வொர்க் ஒரு மாசத்துல முடிக்கணும்? நானே மும்பைப் போய் அதை முடிச்சிட்டு வரேன், போதுமா? முடிக்கலன்னா அப்புறம் என்னைக் கேளுங்க” என்று கத்திவிட்டிருந்தான். கூடவே மீட்டிங் நடக்கும்போது வேறு அவன் சொதப்பியிருக்க, ஜெயப்பிரகாஷம் பேரனை எல்லார் முன்னும் பேசிவிட்டார்.

இந்த அவமானமெல்லாம் சேர்ந்து ஜனாவை வேலையில் கவனம் கொள்ள வைக்க, மனைவியைக் கவனிக்கத் தவறிவிட்டான். ஐந்து நிமிடம் அவளிடம் பொறுமையாக நடந்ததை சொல்லியிருந்தால் அவளே புரிந்து கொண்டிருப்பாள். அவனின் அவமானங்கள் நிதானமாய் யோசிக்கவிடவில்லை. இந்த வேலையை சிறப்பாய் முடித்துவிட்டு உங்களைப் பேசிக்கிறேன் என்று மனத்தில் உறுதியெடுத்தவன் மனைவியை மறந்தான்.

மலருக்கோ நான் அவனுக்கு முக்கியமில்லாமல் போய்விட்டேன் என்ற எண்ணம் பெரிதாய் உருவாக உள்ளத்தில் பெருங்காயம்!

ஆறாத வடுவாக அவனின் பேச்சு இருக்க, நினைக்க நினைக்க அழுகை வந்தது. அவன் மன்னிப்பு கேட்டிருந்தலாவது மனம் ஆறியிருக்குமோ என்னவோ? என்னை என்ன பேசினாலும் நான் பொறுத்துப் போய்விடுவேன் என்று நினைத்து விட்டானா? என்று உள்ளம் கொதித்தது. ரங்கநாயகி பேசியபோதும் அவன் அவள்பக்கம் நிற்கவில்லைதானே?

‘எங்கே வேண்டுமானாலும் போ’ என்ற வார்த்தைகள் அவளின் தன்மானத்தை சீண்டியிருக்க, ஆன்சைட் வாய்ப்பு வரவும் அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா பறந்துவிட்டாள்.

அவளின் வீட்டில் அமெரிக்க போகும் முன்னே சில நாட்கள் இருந்தபோது, அவள் சண்டை போட்டு வந்தது தெரிந்து,

“நீயே தேடின வாழ்க்கைதானே?” என்று நித்தமும் ஏதோவொரு சூழ்நிலையில் அவளின் அம்மா சொல்லிக் காட்டிவிட, அப்பாவின் பார்வையும் கூர்மையாய் அதையே உணர்த்த, அது இன்னும் வலித்தது.

நான் தேடிய வாழ்க்கை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசுவார்களா என்று மனம் நொந்தது. பெருங்கோபம் பிரளயமாய் மனத்தில் உருவாக, வீட்டில் உள்ளவர்களிடம் கூட குழந்தை உண்டான விஷயத்தை சொல்லவில்லை.

ஜனாவிடம் சொல்ல முடியா செய்தியை மற்றவரிடம் சொல்ல மனமில்லை! அது இன்னும் வேதனையாய் இருந்தது. உன்னைக் கண்டுகொள்ளாதவன் மீது ஏன் இத்தனைப் பித்தாய் இருக்கிறாய் என்று அவள் மீதே கோபம்.

ஜனா அவளின் கோபம் தெரிந்தும் கூட அழைக்காமல் இருக்க, அவனால்தானே பெற்றவர்களிடம் இந்த பேச்சு என்ற எல்லா கோபத்திற்கும் அவனே எல்லையாகிப் போனான்.

அவர்களின் காதலில் எங்கோ சின்னதாய் ஒரு விரிசல் விழுந்திருக்க, அது பெரும் விலகலாய் மாறி பிரிவில் வந்து நின்றது.

எங்காவது தூரமாய்ப் போக வேண்டும், அவனின் பேச்சின் தாக்கம் தன்னை தாக்காத இடமாக, அம்மாவின் குற்றப்பார்வையும் பேச்சும் இல்லா இடம் என்பதே இலக்காய் இருக்க பறந்துவிட்டாள்.

பிரிவை அவள் தொடங்கி வைக்க அதனை நெடுங்காலம் நீட்டித்தான் நாயகன். பிரிந்து சென்றபோதிலும் கூட அவள் பிரிவை விரும்பவில்லை, தன்னைத் தேடி அவன் வருவான் என நம்பி நித்தமும் அவனை எதிர்ப்பார்க்க, அவ்வளவு ஏமாற்றம்!

மொத்தமாய் தோற்ற உணர்வுதான் மலரினுள்! அமிழ்தாவிற்காக அன்று அத்தனைக் கோபமாய் வீட்டிற்கு வந்து சண்டையிட்டானே, இத்தனை ஆண்டுகள் என்னைக் கொஞ்சமும் தேடவில்லையே என்று நினைக்க நினைக்க காயம்பட்ட காதல் மனம் விழிகளைக் கசிய வைக்க, அமிழ்தாவின் சிணுங்கலில் நிகழ்காலத்திற்கு வந்தவள் கண்களைத் துடைத்துவிட்டு கணவனைப் பார்த்தாள்.

அவன் சிரிப்புடன் சாத்வீயிடம் பேசியபடி வீட்டிற்குப் போகும் தெருவினுள் வண்டியை வளைத்து ஓட்டினான். மகளின் சிணுங்கலில் மனைவியைப் பார்க்க, அவளின் பொலிவிழந்த முகம் கண்டு,

“என்னாச்சு மலர்? பேபி முழிச்சிட்டாளா?” என்று கேட்க,

“ஒன்னுமில்ல, தூக்கத்துல முழிச்சா மறுபடியும் தூங்கிட்டா” என்று சொல்ல வீடு வந்துவிட்டது.

சுதந்திரமலர் இறங்கி அவனுடன் உள்ளே நடக்க, அதற்கு வீட்டிற்குள் ஓடிய சாத்வீ அப்பாவிடம்,

“அப்பா, நீங்களும் அத்தையும் ப்ரதர் சிஸ்டரா? எனக்குத் தெரியாது, உங்களுக்கு டூ சிஸ்டர்ஸா?” என்று இன்று கண்ட புது உறவுகள் குறித்து அவனிடம் கேட்டது. அவன் தலையசைக்க,

“அப்பா, அப்போ எனக்கும் டூ தாத்தா, டூ பாட்டி இல்ல” என்று சந்தோஷமாய் சொல்ல அதற்கும் பிரசன்னா தலையசைத்தான்.

“அப்பா அப்போ சாமி கிட்ட இருக்க ஜானகி பாட்டி?” என்று சாமியறைப் பக்கமாய்ப் பார்த்து சாத்வீ கேட்க, ஜனா உடனே,

“அது ஜானகி அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லாம சாமி கிட்ட போய்ட்டாங்க சாத்வீம்மா, அதனால் சாத்வீக்கு இன்னொரு அப்பத்தாவை சாமி அனுப்பினார்” என்று சொல்ல,

“ஓகே மாமா” என்றாள் குழந்தை.

“மா” என்று ஜனா கிச்சனில் இருந்த சௌந்தர்யாவிடம் வந்தான். கிச்சன் மேடைபக்கமாய் சாய்ந்து வாசலைப் பார்த்தபடி அவன் நிற்க,

“என்ன ஜனா? மாமனார் வீட்ல ஒரே கவனிப்பு போல” என்று கிண்டலாய்க் கேட்க,

“ஏன்மா நீ வேற?” என்றவன் எல்லாம் சொல்ல,

“ஹாஹா, அய்யோ நீ இருக்கியேடா” என்று அடக்கமுடியாமல் சிரித்தார். ஜனா முறைக்க,

“என்னை ஏன் முறைக்கிற? உன் பெர்மான்ஸ் அந்தளவுக்கில்லன்னு எனக்கு நேத்தே தெரிஞ்சுப் போச்சு, நேத்து அவர் உங்கிட்ட உடம்பு எப்படியிருக்குன்னு கேட்டப்பவே முழிச்சியேடா நீ” என்றார்.

“ஒருத்தரை ஏமாத்துறது ரொம்ப தப்பு ஜனா, ஒரு மாசம் ஆகிடுச்சு. இப்போ அவ கிட்ட உண்மையை சொல்லிடு” என்று சௌந்தர்யா அறிவுறுத்த,

“சொல்லத்தான் நினைக்கிறேன்மா” என்றவனை பாதியில் நிறுத்தியவர்,

“டேய் ஜனா! சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்னு பாட்டெல்லாம் பாடாதடா” என்றார் கிண்டலாக.

“கொஞ்சமாச்சும் உனக்குக் கவலை இருக்காமா? பையன் இப்படி ஃபீல் பண்றானே நினைக்காம ஜாலியா கலாய்க்கிற” என்று குறைப்பட,

“அடப்பாவி மகனே! கவலைப்பட்டா அப்புறம் இந்த பிபி, சுகர் அதெல்லாம் வந்துடும்டா. நான் ஏன் கவலைப்படணும்? சொல்ற பேச்சு கேட்டு நடக்கணும். இல்லனா இப்படிதான்” என்று கொட்டு வைக்க

“குத்திக்காட்டுறீங்களா?” என்றான் கடுப்பாக.

“குத்திதான் காட்டுறேன் என்ன இப்போ? எத்தனை நாள் சொல்லி இருப்பேன் மலரைப் போய்ப் பாரு, அவகிட்ட பேசி சமாதானம் செய்னு” என்று சீரியசாய்ப் பேசினார்.

“எவ்வளவு கோவம் உனக்கு? அப்படி பேசின அப்போ. ஏன் பொம்பளைங்கதான் விட்டுக்கொடுத்துப் போகணுமா? நீ விட்டுக்கொடுத்தா குறைஞ்சிடுவியா? பிரசன்னா உங்க தாத்தா வளர்ப்புனா நீ உங்க தாத்தா ரத்தம், அதான் அவர் மாதிரியே திமிரு உனக்கு” என்று திட்டித் தீர்க்க,

“இப்போ நீ என்னைத் திட்டுறியா? இல்ல தாத்தாவை திட்டுறியா?”

“இந்த வெங்காய கேள்விக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, போய் மலர்கிட்ட உண்மையை சொல்லிடு, அப்புறம் அதுக்கும் கோவப்பட்டானு வந்து நிற்காத” என்றார் முடிவாக.

“சொல்ல முடிஞ்சா சொல்ல மாட்டேனா? அவ பக்கத்துல போனா சொல்லவே வரமாட்டேங்குது” என்று எரிந்து விழ,

“நான் ஒரு ஐடியா சொல்லவா?” என்று சௌந்தர்யா கேட்க, ஆர்வமாய்ப் பார்த்தான்.

“பேசாம மலரோட காலைப் பிடிச்சிட்டு மன்னிச்சிடுன்னு கேட்டுடு” என்று புன்னகையை அடக்கிக் கொண்டு சௌந்தர்யா சொல்லவும் ஜனா முறைத்தான்.

“என்ன நடந்தாலும் அவ உன்னை விட்டு இனிமே போகமாட்டா, இப்படி எல்லாரும் சேர்ந்து அவளை ஏமாத்துறோம்னு தெரிஞ்சா அவ கஷ்டப்படுவா தானே? நீயே ரொம்ப சுமாரா ஆக்ட் பண்ற, அதையும் அந்த பொண்ணு நம்புறான்னா அவ உன் மேல் வச்சிருக்கிற நம்பிக்கை அது. இனிமே எதுனாலும் இரண்டு பேரும் பொறுமையாப் பேசுங்க, சரியாகிடும்டா எல்லாம்” என்று சொல்லி அனுப்ப, அம்மாவைக் கட்டிக்கொண்டவன்,

“தேங்க்ஸ்ம்மா, இப்ப கொஞ்சம் நல்லா இருக்கு எனக்கு. டென்ஷனா இருந்தேன். முன்னாடியே உங்க பேச்சைக் கேட்டிருக்கனும்னு இப்போ தோணுது” என்று மனதார உரைத்தவன் மாடியேறிப் போனான்.

அடுத்த நாள் அமிழ்தா சாத்வீயுடன் விளையாடிவிட்டு அவர்களின் அறையிலேயே உறங்கிவிட, குழந்தையைத் தூக்கிச் செல்ல பார்த்த மலரைத் தடுத்தாள் வர்ணவி.

“இங்க தூங்கட்டுமே மலர்” என்று சொல்ல,

“இல்லடி, நடுராத்திரியில என்னைத் தேடுவா” என்று மலர் மறுக்க,

“ரொம்ப பண்ணாதடி, நான் இந்த விஷயத்துல சீனியர், நானும் ஒரு தாய்தான்” என்று வர்ணவி சொல்லிய விதம் மலருக்குச் சிரிப்பை வரவழைத்தது.

“அதுக்கு?” என்று சிரிப்புடன் கேட்க,

“நான் பார்த்துக்கிறேன், அப்படி அழுதா வந்து விடுறேன். என் அண்ணன் பொண்ணை நான் பார்க்க மாட்டேனா?” என்று பேசியே மலரை தனியே அனுப்பிவிட, இரவு உறங்க அறைக்குள் வந்த ஜனா,

“பேபி எங்க?” என்றபடி மெத்தையில் உட்கார்ந்தான்.

“அவ வர்ணவி ரூம்லயே தூங்கிட்டா, வரு விடல” என்று சொல்லி மலர் கண்களை மூட, ஜனாவிற்கு பல வருடங்களுக்குப் பின் கிடைத்த மனைவியுடனான தனிமை. மகள் இல்லையென்றதும் மனைவி அருகே வந்து படுத்துக் கொண்டான், அருகாமையில் அவன் இருக்கிறான் என்பதே பெரும் அவஸ்தை மலருக்கு.

அவன் பேசிய வார்த்தைகள் இன்றும் மறக்காமல் இருக்க, அவனுடன் இணங்க முடியுமென இம்மியும் தோன்றவில்லை. அதனால் விழிகளை இறுக மூடி தூங்குவது போல் நடித்தாள். அவனோ இயல்பாய் அவளை அணைத்துக் கொள்ள, அதை உதறவும் முடியாமல் உரிமையாய் ஏற்கவும் முடியா உணர்வு அவளை வதைத்தது.

ஜனாவோ அணைத்தால் போதுமென நினைத்தவனுக்கு அதற்கு மேலும் போக ஆவல் பெருகியது. மலரின் அமைதி அவனை இன்னும் தூண்டி விட விழிகள் மூடியிருந்த மலரின் மலரிதழ் அவன் வசமாகிவிட, மலர் கொஞ்சமும் அதனை எதிர்ப்பார்க்கவே இல்லை. ஒரு நொடி உருகியவளின் புறத்தை அகத்தில் அவன் செய்த காயங்கள் தடுத்துவிட, அவனின் நெஞ்சில் கைவைத்துத் தள்ளிவிட்டாள்.

“மலர்” என்றவனின் ஆசைக்குரல் ஒன்றும் அவள் அகம் சேரவில்லை.

“தூங்கும்போது கிஸ் பண்ணுவீங்களா?” என்று கோபமாய்க் கேட்க,

அவனோ மிகவும் உற்சாகமாய்,
“A stolen kiss is always the best kiss than a legal one, நீ சொல்றதுதானே” என்று சொல்லி கண்ணடித்தான்.

சுதந்திர மலருக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை, இது இந்த வாக்கியம் அவள் சொல்வதுதான், திருமணம் முடிந்த பின் அவன் எதிர்ப்பாரா தருணங்களில் முத்தங்களை அவள் தொடங்கி வைக்க, அவன் முடித்து வைப்பான்.

“என்னடி இது?” என்று வெட்கப்புன்னகையுடன் நிற்பவனின் காதுகளில் இப்படி கிசுகிசுப்பாய் சொல்லி மீண்டுமொரு முத்தம் வைப்பாள் மலர். மலருடனான மலரும் நினைவுகள் லயித்து ரசித்து அவளைப் பார்த்தவனுக்கு அப்போதுதான் ஒன்று புரிந்தது.

‘அடேய் உனக்கு நடிக்கவே வரலைடா’ என்று மண்டையில் உரைக்க, அருகே இருந்த அவனின் டீஷர்ட்டைப் பிடித்து இழுத்தவளின் அகன்ற விழிகளில் அதிர்வு தெரிய, கண்களில் நீர் பிறக்க,

“நான் இதை சொன்னது நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்தான், அப்போ உனக்கு எதுவும் மறக்கலதானே ஜனா?” என்று கலங்கிய குரலில் கேட்டவளை அணைக்க முயல, அவனிடம் இருந்து விலகி எழுந்து நின்றாள் மலர்.

முகத்தில் ஒரு தீவிரமிருக்க,

“நடிச்சிருக்க இல்லையா?” என்று கேட்க, ஜனாவும் ஒரு முடிவுடன் எழுந்து ஆமோதிப்பாய்த் தலையசைத்தான்.

“ஏன் ஜனா எப்பவும் என்னோட உணர்வுகளைக் கொல்லணும்னு நினைச்சிட்டே இருப்பீங்களா? இந்த ஒருமாசமா எவ்வளவு தவிச்சிருப்பேன், உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆனப்போ என் உயிரே எங்கிட்ட இல்ல” என்றவள் அழ,

“ஆக்ஸீடெண்ட் ஆனதாலதானே வந்த நீ? ஆக்ஸிடெண்ட் உண்மைதான், பட் அம்னீசியா மட்டும் பொய்” என்று பதில் பேசினான்.

“உங்களால என்னை ஏமாத்த முடியும்னு இப்போதான் ஜனா தெரியும் எனக்கு” என்றாள் மிகவும் வேதனையாக.

“மலர், ப்ளீஸ் சொல்றதைக் கேளு, உன்னை ஏமாத்தணும்ன்றது எண்ணமில்லை. உங்கூடவும் அமிழ்தா கூடவும் இருக்கணும்னுதான் அப்படியொரு பொய் சொன்னேன்”

“உனக்குப் பொண்ணு கூட இருக்கணும்னு சொல்லு ஜனா, எங்கூட வாழனும்னு எண்ணம் கொஞ்சம் உங்கிட்ட இருந்திருந்தா நீ எப்பவோ என்னைத் தேடி வந்திருப்ப” என்றதும் ஜனாவிற்கும் கோபம் வர வேகமாய் எழுந்தவன்,

“என்னை விட்டுப் போனது நீதான் மலர், ஒருவார்த்தை கூட சொல்லாம அமெரிக்கா போன நீ” என்றான் கடுமையாக.

“விட்டுப்போனேன் விட்டுப்போனேன், அதையே எல்லாரும் சொல்லுவீங்களா? விட்டுப்போகாம நீ என்ன பேசினாலும் கேட்டு இருக்கனுமா நான்?” என்று கத்த,

“கோபத்துல நாலு வார்த்தைப் பேசினா உடனே உங்கம்மா வீட்டுக்குக் கிளம்பிடுவியா நீ? குழந்தைப் பொறந்தது கூட எங்கிட்ட சொல்லாம மறைச்சிட்ட நீ” என்று ஜனாவின் குற்றச்சாட்டுகள் இன்னும் தூண்டிவிட,

“என்னால யார் என்ன பேசினாலும் பொறுத்துக்க முடியாதுதான், என்ன இப்போ? நீயா ஒன்னும் இப்போ என்னைத் தேடி வரலைதானே? நான்தானே வந்தேன்” என்று மலரும் உணர்ச்சிவசப்பட்டு கத்தினாள்.

தாளமுடியவில்லை அவனின் பேச்சுகளை, தாய்மையை ஆசையுடன் பகிர வந்தவளை அமிலம்போல் சொற்கள் பேசிக் காயப்படுத்தியவன் அவன் தானே?

“நான் ஏன் வரணும்? வேண்டாம்னு விட்டுப்போனது நீதானே? அப்படி பொறுமையில்லாதவ இப்போ மட்டும் ஏன் வந்த?” என்று ஜனா சௌந்தர்யா சொன்ன அறிவுரைகளை அகத்தில் ஏற்றாமல் அந்த நேர உணர்ச்சிகளில் சிக்குண்டு பேசி இருக்கும் சூழ் நிலையை இன்னும் சிக்கலாக்கினான்.

“தப்புதான், உன்னைக் காதலிச்சது தப்பு. எங்கப்பா பேச்சைக் கேட்காம உன்னைக் கல்யாணம் செஞ்சது தப்பு, உனக்கு ஆக்சிடெண்ட் ஆச்சுனதும் கொஞ்சமும் யோசிக்காம வந்தது தப்பு. உன்னோட நடிப்பை இத்தனை நம்பி ஏமாந்தது தப்பு, எல்லாமே என்னோட தப்புதான்” என்று கண்ணீரைத் துடைத்தபடி வேகமாய் சொன்னவள்,

“விட்டுட்டுப் போனேன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றீங்களே எல்லாம், விட்டுத்தான் போனேன். நீ என்னைத் தேடிவருவன்னு ஒவ்வொரு நாளும் நம்பினேன். வந்தியா நீ? என்னைத் தேடல தானே? செத்தா போய்ட்டேன் நான்?” என்றவளுக்கு அப்படியொரு கோபம்.

அவனுடன் இருந்த நாட்களை விடவும் அவனைப் பிரிந்த நாட்களில் பெருகிய நேசத்தை அகமெல்லாம் சுமந்து தாங்க முடியாமல் தவித்தவள் அல்லவா? இவன் கொஞ்சமும் தன்னைத் தேடவில்லை என்பது எப்போதும் அவளுக்குத் தீரா காயமே!

அவளின் வார்த்தைகள் தாங்காதவன்,
“மலர்!” என்று அதட்டினான்.

அவளோ அவனைக் கண்டுகொள்ளாமல்,
“இப்போ வந்ததும் தப்புன்னு நீ சொல்லிட்ட இல்ல, நான் போறேன்” என்று கோபமாய் அறையை விட்டு வெளியே போக, ஜனா சில நிமிடங்கள் உறைந்து நின்றான். அவள் சொன்னதன் அர்த்தம் புரிய வேகமாய் வெளியே வர வீடு முழுவதும் தேட அவளைக் காணவில்லை என்றதும் கீழே இறங்கிப் போக, வாட்ச் மேனிடம்,

“அண்ணா, யாரும் இப்போ வீட்ல இருந்து வெளியே போனாங்களா?” என்று பதட்டமாய்க் கேட்க,

“இல்லையே தம்பி. இங்கேயேதான் நான் இருக்கேன்” என்றதும் பெருமூச்சுடன் மீண்டும் வீட்டினுள் நுழைந்தவன் மொட்டை மாடியில் தேட, அங்குதான் ஒரு ஓரமாய் அழுதபடி மலர் இருக்க, மனம் விட்டுப்போனது ஜனாவிற்கு.

காதல் செய்து கைப்பிடித்த பெண்ணை இப்படி கலங்க வைக்கிறோமே என்ற கழிவிரக்கம் தோன்ற கனத்த மனத்துடன் அவளருகே போனவன்,

“மலர்” என்று மென்மையாய் அழைத்து அவளருகே முட்டியிட்டு உட்கார, அவன் முகம் பார்த்தவள்,

“போகணும்னுதான் இப்பவும் தோணுது, ஆனா இப்போ ஒரு குழந்தைக்கு அம்மாவாகிட்டேனே. கூடவே பெரிய இவளாட்டம் அத்தைக்கிட்ட உன்னை விட்டுப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டேன்” என்று கண்ணீருடன் சொல்லவும் அம்மாவிற்காகவும் அமிழ்தாவிற்காவுமா என்னை பொறுத்துக் கொள்கிறாள் என்ற எண்ணம் வலித்தது.

மலரோ இன்னும் அழுகையுடன்,
“உங்கூட இருக்கற நேரம் நீ இப்படி பேசி எனக்கு வலிக்கறதை விட, உன்னைப் பிரிஞ்சு இருக்கப்ப ரொம்ப வலிக்குதே, உன்னை விட்டுப் போக கூட நினைக்க முடியல, சொரணை இல்லாம போச்சு எனக்கு” என்று அழுதாள்.

அவள் அப்படி சொல்லவும் ஜனாவின் மனம் குளிர, அவளின் இருப்பக்கமும் அணைவாய்ப் பிடித்தவன்,

“சொரணை இல்லாம இல்ல, என் மலருக்கு காதல் ஜாஸ்தியாகிடுச்சு, என்னாலதான் அதை ஹாண்டில் பண்ண முடியல” என்று கண்ணீர் நிறைந்த விழிகளுடன் மொழிய , மலர் முறைத்தாள்.

✅ End of Episode 25
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Mrs Beena loganathan Reader 4 weeks ago

கோவம் முன் வருது

காதல் பின் வருது
சண்டை முன் வருது
சமாதானம் பின் வருது
ஆவேசம் முன் வருது
அமைதி பின் வருது
பயம் முன் வருது 
புரிதல் பின் வருது
புத்தி முன் வருது 
பொண்டாட்டி பின் வருது 
புயலாக..........
புரிஞ்சு நடந்துக்கோ
புருஷா....ஜனா....
❤️ 1 more...
Srichitra Reader 4 weeks ago

Nice 

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top