Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 31

காதல் 31

தன் தோள் சேர்ந்த தலைவியை அணைத்துக் கொண்ட ஜனா
“உன்னைப் பார்க்காம எப்படி என்னால இருக்க முடியும்னு நீ நினைச்ச? எனக்கு எந்தளவுக்கு ஈகோ இருக்கோ, அதே அளவு உன் மேல லவ்வும் இருக்கு. உனக்குத்தான் அது தெரியல” என்று சொல்ல,

மலரோ அவன் பேச பேச கடுப்பானவள் அவன் கழுத்தில் கைவைத்து,
“எதாவது பேசினா கழுத்தை நெறிச்சிடுவேன் பார்த்துக்க, பெரிய இவன்? நான் மட்டும் இவரைப் பார்க்காம ஏங்குவேனாம்…இவர் நோகாம என்னைப் பார்ப்பாராம். இதெல்லாம் விட நீ என்னை எப்படி தேடாம இருக்கலாம்னு எவ்வளவு..ச்ச…உனக்குப் புரியாது போ” என்றாள்.

“ஸாரி, அதெல்லாம் மறந்திடேன் ப்ளீஸ்” என்று ஜனா பேச மலர் ஒன்றும் பதில் பேசவில்லை, அவன் அணைப்பில் இளகியே நின்றாள்.

“என்னமோ பெருசா ஏங்கினேன் சொல்ற? ஆனா மூணு வருஷம் கழிச்சுப் பார்க்கிறவ என்னைக் கட்டிப்பிடிச்சுக் கிஸ் அடிச்சிருக்க வேண்டாமா? யாரோ மாதிரி என்னைப் பார்த்த?” என்று கேட்க,

“அதுக்கும் என்ன அவசரம்னு நீ கேட்ப?” என்ற வார்த்தைகள் மலரிடம் இருந்து பட்டென வர ஜனாவினைக் குத்தியது அந்த பேச்சு.

“தெரியாம பேசினதை நீ தெரிஞ்சுப் பேசாத மலர்” என்றவன் அவளை விட்டு விலகி அறையை விட்டு வெளியேற, அமிழ்தா எழுந்துவிட்டாள். அவளைத் தூக்கிக் கொண்டு மலரும் அவன் பின்னால் வர பிரசன்னா சாத்வீயைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாராகி அவனும் படியிறங்க ஜனாவைப் பார்த்தவன்,

“என்னடா அடி ரொம்ப போல?” என்று கிண்டலாகக் கேட்க, மலருக்கோ ஜனாவை பிரசன்னா கிண்டல் செய்தது பொறுக்காமல்,

“ஜனா யாரோ நேத்து ரொம்ப குடி போல?” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு இறங்கினாள்.

பிரசன்னாவோ ஜனாவை முறைத்தவன்,
“எல்லாம் அவகிட்ட சொல்லிடனுமா?” என்று கடுப்பில் கேட்டான்.

“அவதான் நீ குடிச்சிட்டு இருக்கன்னு எங்கிட்ட சொன்னதே”

“என்ன?” என்றான் பிரசன்னா அதிர்ச்சியாக.

“எதாவது உளறினேனா?” என்று தயக்கமாய்க் கேட்டான். அவனுக்கே அவன் நிலை வெட்கமாய்ப் போனது, இதுவரை இப்படி அளவுக்கு மீறி குடித்து உளறும் நிலைமையெல்லாம் வந்ததே கிடையாது. அதைவிட அவனின் அம்மா காதலன் இறப்புக்குத் தான் காரணம் என்ற குற்றவுணர்வில் இறந்த விஷயம் சொல்லியிருப்பேனோ என்ற பயம் வேறு.

அவரைப் பார்த்த ஞாபகம் அவனிடம் இல்லையென்றாலும் அவரின் நிழற்படம் பார்த்து வளர்ந்தவனுக்கு அன்னை மீதான அன்பு அதிகம்தான். அதுதான் தந்தையை தூர நிறுத்தியது. இதையெல்லாம் யோசிக்க யோசிக்க முகம் கசங்கி நின்றான் பிரசன்னா.

“ஒன்னும் உளறலடா” என்று அவனின் தோளில் கைப்போட்டவன்,

“உன் தங்கச்சிட்ட தான் ஓவரா பாசமா பேசின” என்றான் கிண்டலாக.

“என்னடா சொல்ற?” என்று பிரசன்னா விழி விரிக்க,

“பின்ன, நானும் எத்தனையோ பாசமலரைப் பார்த்திருக்கேன், உங்களை மாதிரி ஒரு கிராதகம் பிடிச்ச அண்ணனையும் கிறுக்குப் பிடிச்ச தங்கச்சியும் நான் பார்த்ததில்லை” என்றவன் கீழிறங்க மொத்தக் குடும்பமும் ஹாலில்தான் இருந்தனர்.

என்ன நடக்குமோ என்று பயந்தவண்ணம் இருந்தார் சௌந்தர்யா. மலர் வந்த பின் பெரிதாக மாமனாரும் மாமியாரும் குடும்பத்தினருடன் ஒன்றாய் உட்கார்ந்து உண்பதில்லை, அப்படியே உட்கார்ந்தாலும் அன்றைக்கு எதாவது ஒரு வம்பை வளர்க்காமல் இருப்பதில்லை என்று அவர் நினைத்திருக்க ஆரம்பித்தது என்னவோ சுதந்திர மலர்தான்.

“மாமா உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும்” என்று ஆரம்பிக்க எல்லாரின் கவனமும் மலரின் பக்கம் போக,

“இவ என்ன சொல்லப்போறா?” என்று சௌந்தர்யா உள்ளுக்குள் பயந்தபடி மாமனார் மாமியார் முகம் பார்க்க, ரங்க நாயகி கோபமாய் மலரைப் பார்த்தார்.

“சொல்லும்மா மலர்” என்று ஜகன் சொல்ல,

“பார்(Bar) எல்லாம் வீட்ல இருக்க வேண்டிய விஷயமில்லை மாமா” என்றதும் ஜனாவின் பார்வையும் பிரசன்னாவின் பார்வையும் சந்தித்துக் கொள்ள, ஜகனுக்குமே அப்பழக்கம் இருக்க அவரும் எப்போதாவது மாடிக்குச் சென்று மது அருந்துவார். மலர் இப்படி சொல்லவும்,

“அது இப்போ எல்லாம் சகஜம் தான்மா மலர்” என்றார் அவரின் மேல்தட்டு நண்பர்களை மனத்தில் வைத்து.

“சகஜமா இருந்தாலும் நம்ம வீட்ல வேண்டாம் மாமா, என் பசங்களுக்கு வீட்ல கிச்சன், பெட்ரூம், ஹால்னு தெரிஞ்சா போதும். வீட்லயே பாட்டிலை வாங்கி வச்சிட்டு நாளைக்குப் பசங்களை எப்படி மாமா குடிக்காதீங்க சொல்ல முடியும்? யாருக்காவது டிரிங் செய்யணும் தோணிச்சுன்னா வெளியே அதுக்கு வழிப் பார்த்துக்கோங்க, வீட்ல அது இருக்கக் கூடாது” என்றதும் ஜகன் சங்கடமாய் சௌந்தர்யாவைப் பார்த்தார். அவர் சந்தோஷமாகவே கணவனைப் பார்த்தார்.

அதுவரை அமைதியாய் இருந்த ஜெயப்பிரகாஷம்,
“இது என்ன உன்னோட வீடா? இஷ்டத்துக்கு நாட்டாமை செய்ற?” என்று நேரடியாகவே மலரிடம் கேட்க பிரசன்னாவிற்கு முன்னே ஜனா பேசிவிட்டான்.

“இது இவ வீடு இல்லாம யார் வீடு தாத்தா?” என்று ஜனா கேட்க,

“டேய் என்ன பேசுற? இவ இஷ்டப்படி இந்த வீட்டை மாத்த நினைப்பாளா? நம்ம ஸ்டேட்டஸ்க்கு அதெல்லாம் சாதாரணம்” என்று ஜெயப்பிரகாஷம் பேரனை அடக்க நினைத்தார்.

அவனோ “என்ன சகஜம்? ரோட்ல குடிச்சிட்டு விழுந்தாலும் குடிகாரன்தான், வீட்ல குடிச்சாலும் குடிகாரன்தான் தாத்தா. இந்த வீட்ல அப்பத்தாவுக்கும் அம்மாவுக்கும் எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை என் மனைவிக்கும் இருக்கு. அவ இஷ்டப்படி இந்த வீட்டை எப்படி வேணும்னாலும் மாத்துவா” என்று ஜனா உரிமைப் பற்றிப் பேசவும் ரங்க நாயகிக்குக் கோபம் வர,

“என்னமோ ஊரைக் கூட்டி கல்யாணம் செஞ்சு வந்தாளா இவ? ஓடிவந்தவ தானே?” என்று வாயை விட, ஜனா வேகமாய் எழுந்துவிட்டான்.

“ஷட் அப்!!!!!” என்று ஜனா கத்தவும் ரங்க நாயகிக்குக் கண்கலங்கிப் போனது.

“என்ன பேசுறீங்க நீங்க? உங்களைப் பேசத் தெரியாம நான் அமைதியா இல்லை, உங்க மேல வச்ச பாசத்துக்காகவும் உங்க வயசுக்காகவும்தான் அமைதியா போறேன். குழந்தைகளை வச்சிட்டு என்ன பேச்சு இதெல்லாம்? ஒருத்தியைப் பிடிக்கலனா அவ நல்லது சொன்னாலும் கேட்டுக்க மாட்டீங்களா?” என்றான் கடுப்பாக.

ஜகனும் மகனைத் தடுக்கவில்லை. வர்ணவி கூட மலர் சொன்னதில் தவறில்லை என்றே எண்ணினாள். சௌந்தர்யாவோ,
“என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு” என்ற பரவச நிலையில் இருந்தாலும் வெளியே பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டார்.

“இப்போ என்ன இது உங்க வீடு, உங்க இஷ்டப்படி பார் வச்சிக்கோங்க, க்ளப் கூட வச்சுக்கோங்க. நான் தனியா போறேன்” என்றதும் சௌந்தர்யா பதறி மகனைப் பார்க்க,

ஜகனோ “ஜனா, என்ன இது?” என்றார்.

“என்ன என்னை கேட்குறீங்க? இவங்களுக்கு என்னோட சந்தோஷம் முக்கியமே இல்லை”

“நான் அப்படி நினைப்பேனா ஜனா?” என்று ரங்க நாயகி கண்ணீர் வடிக்க ஜனா உடனே,

“அப்படி நினைக்கறதாலதான் இப்படி நடந்துகிறீங்க? கொஞ்சமும் என் மேல அக்கறை கிடையாது. இருந்தா இத்தனை வருஷம் பிரிஞ்சிருந்தவங்க ஒன்னா இருக்கட்டும்னு நினைச்சு அமைதியா இருக்கணும், இதே வருவை இப்படி பேசுவீங்களா? இவளும் உங்க பேத்தி மாதிரிதானே?” என்று இத்தனை நாள் இல்லாமல் அடக்கிவைத்த உணர்வுகள் எல்லாம் அவனையும் மீறி வெடித்து சிதறியது.

“சும்மா சும்மா என்னை மயக்கினா சொல்றீங்க? இன்னும் எத்தனை வருஷம் இதையே பேசுவீங்க? நான்தான் படிக்கிற பொண்ணு பின்னாடி சுத்தி காதலிக்கிறேன் சொன்னேன், வாசு மேல இருக்க அளவு பாசமில்லனாலும் கொஞ்சமாவது என் மேல இருக்கும்னு நினைச்சேன்”

“ஆனா அப்படி இல்லையில்லை. அவனை மாதிரி நானும் குடும்பம் குழந்தைன்னு வாழணும்னு நினைப்பிருந்தா இப்படிப்பட்ட பேச்செல்லாம் உங்களுக்கும் இவருக்கும் வருமா? எனக்காக என்ன செஞ்சீங்க நீங்க எல்லாம்? இவ எனக்காக அவ குடும்பத்தையே விட்டு வந்தா” என்று மூச்சு வாங்கப் பேசினான் ஜனா.

“இதுதான் கடைசி இப்படி பேசுறது, இப்படித்தான் இனியும் பேசுவேன்னு நீங்க முடிவு பண்ணிட்டா, நாங்க வீட்டை விட்டுப் போறோம்” என்றதும் ரங்க நாயகி பதறி அவனருகே வந்தவர்,

“வீட்டை விட்டுப் போறேன்லாம் சொல்லாத ஜனா, நான் இனி எதுவும் பேசல” என்று கண்கலங்க சொல்ல ஜனா ஒன்றும் பதில் பேசவில்லை.

ஜனா அப்படியே உண்ணாமல் அவனறைக்குப் போனான். மலரும் கணவன் பின்னே மாடியேறிவிட,

“உங்க வாய் அடங்கவே அடங்காதம்மா?” என்றார் ஜகன்.

“விடுங்க, இப்போதான் அவன் பேசினான்” என்று சௌந்தர்யா மாமியாருக்காகப் பார்த்தார். ஜனா பேசியதில் கண்கலங்க நின்றிருக்க பார்க்கவே அவ்வளவு பாவமாய் இருக்க மகனும் பேசவும், ரங்க நாயகிக்கு இன்னும் மனம்விட்டுப் போக, அவரும் உண்ணாமல் அறைக்குள் போக பார்த்தார்.

“அம்மாச்சி! முதல்ல சாப்பிடுங்க” என்று பிரசன்னா சொல்ல,

“போடா..! நான் இருக்கறது உங்களுக்கெல்லாம் பாரமா இருக்கு போல, நான் போறேன்” என்று சொல்ல,

“நீங்க இப்ப சாப்பிடலன்னா என்ன செய்வேன் எனக்குத் தெரியாது, ஒழுங்கா சாப்பிட்டு உட்காருங்க. நான் அன்னிக்கே சொன்னேன்ல அப்பா மேல தப்பில்ல, தேவையில்லாம மலர் மேல கோபம் காட்டாதீங்கன்னு” என்றவன் ஜெயப்பிரகாஷத்தை முறைத்தான்.

“அப்போ யார் மேல தப்பு? ஏன் என் பொண்ணு செத்தா? எப்படி ஆசையா வளர்த்த மக தெரியுமா?” என்றவர் அழுகை பிரசன்னாவைப் பாதிக்க,

மனமோ,
‘உங்க பொண்ணுக்குக் காதல் பெருசா போச்சு, எங்கப்பாவையோ என்னையோ நினைக்கல, ஏன் பெத்து வளர்த்த உங்களையும் நினைக்கல, நம்மதான் தேவையில்லாம அவங்களை நினைக்கிறோம்’ என்று சொல்ல நினைத்தவன் சொல்லாமல் அமைதிக் காத்தான். இந்த அழுத்தம் அவன் சாகும்வரை போகாது, தந்தைக்குத் தான் செய்த அவமரியாதைக்கு வாழ்க்கை முழுவதும் இப்படி மறுகத்தான் வேண்டும் என்று மனம் நினைத்தது.

“நீங்க சாப்பிட்டு முடிங்க, உங்க வீட்டுக்காரரை கேளுங்க. எல்லாம் அவர் சொல்வார்” என்றான் பிரசன்னா அவர் உண்ணாமல் எழ மாட்டேன் என்று உட்கார்ந்திருக்க சாத்வீயோ,

“அப்பா, ஸ்கூலுக்கு டைமாச்சு” என்று சொல்ல,

“நாங்க பார்த்துக்கிறோம் பிரசன்னா. அவ அழுதுடுவா போல, அழைச்சிட்டுப் போ அவளை” என்றார் ஜகன். பிரசன்னா பிள்ளைகளுடன் பள்ளிக்கூடம் சென்றான்.

மலர் ஜனாவின் அருகே உட்கார, “மலர், என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடு” என்றான் ஜனா.

“இத்தனை வருஷம் தனியா தானே விட்டேன்” என்று மலர் பட்டென பேசிவிட ஜனாவிற்கு சுள்ளென்று ஏற,

“மலர்” என்று அதட்டினான். உடனே அவளும் மெத்தையில் இருந்து எழ, பெருமூச்சு விட்டவன் மலரின் கைகளைப் பிடித்து இழுத்து தன்னுடன் அவளை அணைத்துக்கொண்டான்.

“ஏன் இவ்வளவு கோபம்?” என்றாள் மலர்.

“எத்தனை நாள்தான் பொறுமையா இருப்பாங்க?” என்றான் எரிச்சலுடன்.

“அதுக்காக வீட்டை விட்டுப் போவேன்னு எல்லாம் சொல்றீங்க, ஆறு மாசம் கூட அவங்களை விட்டு இருக்க முடியல ஜனா உங்களால” என்று மலர் உண்மையை அவனுக்கு உணர்த்த,

“உண்மைதான்! ஆனா மூணு வருஷம் நீயில்லாம பட்ட கஷ்டம் விட அது பெருசில்ல மலர், நீ என்னை விட்டுப் போனதும் பிரசன்னா இங்க அழைச்சிட்டு வந்துட்டான். ஒவ்வொரு நாளும் நீ எப்படி என்னை விட்டுப் போகலாம்னு நான் கோபத்துல இருந்தா, வீட்ல இருக்கவங்களும் எங்களை எல்லாம் மதிக்காம அவளைக் கல்யாணம் செஞ்ச உன்னை விட்டுப் போய்ட்டான்னு குத்திக் காட்டுவாங்க, இப்போ நீயா வந்த பின்னாடியும் இப்படி பேசினா என்ன தான் செய்ய?” என்றான் நொந்தவனாக.

“என்னால தினமும் இப்படி அவங்க கூட சண்டை போட முடியாது மலர், நல்லா யோசிச்சுதான் தனியா போயிடுவேன்னு சொன்னேன்” என்றவனை அகலவிரிந்த விழிகளுடன் ஆச்சரியமாய்ப் பார்த்தவள்,

“நான் எனக்காக நீங்க பேசலன்னு சொன்னதுக்காக இப்படி பேசுறீங்களா?”

“நீ இங்க வந்தப்போ அம்மா சொன்னாங்க, தப்பு சரின்றது மட்டும் வாழ்க்கையில்லை தப்பை சரி பண்றதும் கூட வாழ்க்கைன்னு..இப்போ அதைத்தான் நான் செய்றேன். நீ சொன்னதால இல்ல, அப்போ வீட்டை எதிர்த்துக் கல்யாணம் பண்ணினோம் அவங்க ஆசையைக் கெடுத்துட்டோம்னு ஒரு கில்ட் இருந்துச்சு, இப்போ இத்தனை வருஷம் அப்புறமும் என்ன பேச்சு ஓடிவந்தவ அது இதுன்னு? அதையெல்லாம் நான் கேட்டு அமைதியா இருப்பேன்னு நீ எப்படி நினைச்ச?” என்று மலரிடம் சண்டைக்கு நின்றான்.

“உன்னைக் காயப்படுத்தின எனக்கு என்னை நியாயப்படுத்திக்க உரிமையில்லைதான். சீஸர் வைஃப் ஷுட் பீ அபவ் சஸ்பிஷன் இல்லையா? அதுமாதிரி தானே நானும் உனக்கு இருந்திருக்கணும். நான் பேசினது தப்புதான், அதுக்கு என்னை சண்டைப் போட்டிருக்கனும் மலர், அதைவிட்டு கோபத்துல என்னை விட்டுப் போய் எல்லாருக்குமே தானே கஷ்டம்?”

“அப்போ உனக்காக நான் பேசல, உன்னை யோசிக்கல தப்புதான். அதுக்காக எப்பவும் அப்படியே இருப்பேன் நினைக்கிற?” என்றான் கண்களை மூடி.

“ஜனா அன்னிக்கு நான் ஒரு அதிகப்படியான சந்தோஷத்துல இருந்தேன், நீங்க அப்படி பேசவும் அந்த டைம்ல எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுத்துச்சு, எனக்குத் தூரமா போகணும்னு மட்டும்தான் மைண்ட்ல ஓடுச்சு”

“இனி பழசைப் பேசல ஜனா…எனக்கும் புரியுது நான் ரொம்ப அடம் பண்றேன்னு..” என்று சொன்னாலும் எப்போதும் போல் அவன் அணைத்தால் அவளிடம் வரும் ஒரு இணக்கம் நெருக்கம் இல்லை. உள்ளம் உணர்ந்த அந்த உற்றிடம் (intimacy) காணாமல் போயிருந்தது காரிகையிடம்.

தொலைத்த இடத்தில்தானே தேடல் இருக்க வேண்டும், அப்படி அந்த உணர்வுகளை பெண்ணிடமிருந்து பறித்தவன் அவன்தானே? அது புரிய,

“உனக்கு இன்னும் கோவம் போகலதானே?” என்று ஜனா கேட்க,

“இப்போ கோவமில்ல” என்றாள் உடனே.

அப்போதுதான் ஞாபகமாய்,
“நான் காலையில அடிச்சது எப்படி அவனுக்குத் தெரியும்? உடனே எல்லாம் சொல்லணுமா?” என்று கடுப்பில் கேட்க,

“சாத்வீ என்னைக் கூப்பிட ரூம் வந்தவ பார்த்துட்டு அவன் கிட்ட சொல்லியிருக்கா” என்றதும் வெட்கம் மலர மலர் அவனின் தோள்களில் முகம் பதிக்க,

“நீ இன்னும் சாப்பிடலதானே? போய் சாப்பிடு. ஆபிஸ் போகல?”என்று கேட்கவும் மலருக்குப் பயங்கர சிரிப்பு.

“என்னடி சிரிக்கிற?” என்று ஜனா அவளின் முறுவலின் முழு அர்த்தம் புரியாமல் முழித்திட

“இல்ல…கீழ அவ்வளவு பெரிய சம்பவம் பண்ணிட்டு இங்க என்னை சாப்பிடலையான்னு கேட்கிற நீ?” என்றவனின் அக்கறை அகமெல்லாம் இனிக்கவே செய்ய இனிதான நொடிகள் இருவருக்குள்ளும்.

“அதெல்லாம் அடிக்கடி நடக்கிறதுதானே? நீ போய் சாப்பிடு” என்று அவளை விட்டு விலகி அவன் படுக்க,

“யூஎஸ் போனப்போ ஏன் இந்த அக்கறை இல்லை” என்று மீண்டும் ஆரம்பித்தாள். அகத்தின் ரணங்கள் எல்லாம் உடனே அழித்து மாற்றிவிடமுடியாதவை அல்லவா? சில கணங்களில் நம்மையும் மீறி வெளிவரும்.

“அதெல்லாம் இருந்துச்சு, வருகிட்ட பேசும்போது பார்ப்பேனே நீ நல்லாதான் இருந்த…ரொம்ப அழகா முகமெல்லாம் புஷ்டியா இருந்த. நான் உன்னோட இல்லைன்ற சோகமே உங்கிட்ட இல்லை. நான் தான் உன்னை நினைச்சு நினைச்சு..”

“ம்ம்..நினைச்சு நினைச்சு பரதேசியா இருந்த..” என்று மலர் எடுத்துக்கொடுக்க

“மலரே..!” என்றவனுக்கு அவளின் விழிகள் காட்டிய பாவனையில் சிரிப்பு வந்துவிட்டது.

“அது ப்ரக்னென்டா இருந்தேன் இல்ல, அதனால கொஞ்சம் வெயிட் போட்டிருந்தேன்” என்று சிரிப்புடன் சொன்னவள்,

“என்னைத் திட்டினவன் முன்னாடி ஸ்டைலா மாஸா கெத்தா இருக்க வேண்டாமா? சோகமா இருந்தாலும் அதெல்லாம் நான் காட்டிக்க மாட்டேன்” என்றவளின் நிமிர்வு இன்னும் ரசிக்கவே தூண்டியது.

“நல்லா சொன்ன போ, நான் இவ நம்மை விட்டுப் போய் நல்லா பர்கரும் பீட்சாவும் சாப்பிட்டு சந்தோஷமா இருக்கான்னு நினைச்சேன்” என்றான் சிரிப்புடன்.

✅ End of Episode 31
How did you feel about this episode?
❤️ 5 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Mrs Beena loganathan Reader 3 weeks ago

கோபத்தில் பேசிய வார்த்தைகள்,

கூர்மையான 
கத்தியாய் இதயத்தை 
கீறிச் சென்றாலும்...

கண்கள் மட்டும்
ஒருவரை ஒருவர்
தேடுவதை நிறுத்தவில்லை....

பேசாமல் கடந்த நாட்கள்
பனித்துளி படர்ந்த
விடியலைப் போல
குளிர்ச்சியாக 
பனி விலகி பிரகாசமாய் மாற....

ஒரு சிறு பார்வை...
ஒரு தயக்கம்
ஒரு புன்னகை...
ஒரு மெதுவான நெருக்கம்...
ஒன்றில் ஆரம்பித்து
ஒன்றாகி விடும் வேளை.....


❤️ 2 more...
Srichitra Reader 3 weeks ago

Very nice.

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top