Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 34

காதல் 34

“டேய் இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நிக்கப் போற?” என்று மனைவியைப் பார்த்த மகனை சௌந்தர்யா அதட்டல் போட

“இதோ போயிட்டேன்” என்றபடி ஜனா வெளியே போனான். மலரோ என்ன இவன் இப்படி பார்க்கிறான் என்று யோசித்தவள் வேகவேகமாய்த் தேங்காயைத் துருவ,

“மலர், மெதுவா செய்மா. இவ்வளவு நேரம் அவன் வரலன்னு டென்ஷன்ல பண்ணின இப்போ என்ன?” என்றார்.

“இல்லத்த, அவருக்குப் பசிக்கும்ல” என்றவள் இன்னும் வேகமாய் செய்ய,

“அவன் காஃபி தானே கேட்டான், இன்னும் சாப்பிட டைம் இருக்கு. நீ பொறுமையா செய்” என்றவர் மகனுக்குக் காஃபி போட்டார்.

“உங்க பையனுக்குப் பசி வந்தா சிரங்கு வந்த சிங்கம் மாதிரி அப்படி கத்துவார், கரெக்ட் டைம்க்கு சோறு போட்டு கெடுத்து வச்சிட்டீங்க அத்த நீங்க”

மலர் முணுமுணுக்கவும் சத்தமாய் சிரித்த சௌந்தர்யா,
“சாப்பாடு விஷயத்துல நிறைய சேதாரம் போலயே, இந்த பயம் பயப்படுற?” என்றார் விளையாட்டாக.

“ம்ம், ரொம்ப சேதாரம்தான்” என்றபடி இருவரும் வேலைகளை முடிக்க, ஜனா குளித்து வந்தவன் ஹாலில் உள்ள டீவியைப் போட்டு விட்டு உட்கார,

சௌந்தர்யா மகனுக்குக் காஃபி எடுத்துக் கொண்டு வர, பின்னால் சுதந்திர மலர் வந்தாள்.

“என்னடி எங்கம்மாவை காஃபியைக் கொண்டு வர சொல்லிட்டு நீ சும்மா வர?” என ஜனா மலரை வம்பிழுக்க,

“டேய் நான் போட்ட காஃபியை நான் எடுத்துட்டு வரேன். ஏன் உன் பொண்டாட்டி கையால காஃபி கொடுத்தா தான் கொடுப்பியோ?” என்றார் நக்கலாக.

“மா, என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட, உன் மகனைப் பார்த்து எப்படிம்மா அப்படி சொன்ன?” என்று அவன் பேச,

“டேய் காஃபி ஆறதுக்குள்ள குடிடா, ஓவர் ஆக்டிங் பண்றான்” என்றபடி சௌந்தர்யா சோஃபாவில் உட்கார்ந்தார்.

“அத்தை இவருக்கும் வருவுக்கும் நம்ம ப்ரண்ட்லியா இருக்கறது பார்த்து பொறாமை, வேணும்னே என்னை மாட்டிவிட பார்த்து உங்க கிட்ட சிக்கிட்டார்” என்றவள் கணவனிடம் பழிப்புக் காட்டினாள்.

“விடு மலர், நாட்டுல மாமியார் மருமக நல்லா இல்லாம போகவே இப்படி துஷ்டசக்திதான் காரணம்” என்று சௌந்தர்யா இன்னும் வம்பு செய்ய,

“உன் மாமியாரை ஹாஸ்பிட்டல் அனுப்பிட்டு நீயும் உன் மருமகளும் ஜாலியா இருக்கீங்க” என்றதும் இருவரும் அவனை முறைத்தனர்.

அதைக் கண்டுகொள்ளாமல் ஜனா, “மா, அப்பா எங்க இன்னும் காணும்?” என்றான்.

மகன் தன்னைப் பேசவும் கடுப்பானவர்,
“கடுகு டப்பாவுல உங்கப்பாவைப் போட்டு வச்சிட்டேன், போய் அழைச்சிட்டு வா” என்றார் கடுப்பாக.

“அத்தை அவர் சும்மா விளையாட்டுக்குப் பேசிட்டார்” என்று மலர் சமாதானம் செய்தவள்,

“மாமா ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க ஜனா” என்றாள்.

“இன்னிக்கு நான் ஹாஸ்பிட்டல்ல ஸ்டே பண்ணிக்கிறேன்” என்றான் ஜனா.

அடுத்த அரை மணி நேரத்தில் பிரசன்னா வர்ணவி சாத்வீயுடன் அமிழ்தாவும் வந்துவிட்டாள். எல்லாரும் ஒன்றாய் உட்கார்ந்து உணவுண்ண, ஜகன் சௌந்தர்யாவிடம்,

“சௌ, அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்தியா?” என்று கேட்டார்.

“கொடுத்தாச்சுங்க, சாப்பிட்டுட்டார்” என்று சௌந்தர்யா சொல்லவும் டைனிங் டேபிளின் அருகே இண்டர்காம் ஒலித்தது. வர்ணவி எடுக்கவும்,

“வரு, நாயகியை எப்போ டிஸ்சார்ஜ் செய்வாங்கன்னு உன் புருஷன் கிட்ட கேட்டு சொல்லு” என்றார் ஜெயப்பிரகாஷம்.

“எப்போ அப்பத்தாவை டிஸ்சார்ஜ் செய்வாங்கன்னு கேட்கிறாங்க” என்று வர்ணவி பிரசன்னாவைப் பார்க்க,

“ஒரு வாரம் ஆகும்னு சொல்லு” என்றதும்,

“ஒரு வாரமா? சரி. நாளைக்கு அவனை என்னை அழைச்சிட்டுப் போ சொல்லு வரு” என்றார்.

“எனக்கு வேலை இருக்கு, டிரைவர் கூட அவரைப் போக சொல்லு” என்றதும்,

“டிரைவர் கூட போக எனக்குத் தெரியாதா?” என்று கடுப்புடன் ஜெயப்பிரகாஷம் போனை வைத்துவிட்டார்.

“ஏன் பிரசன்னா நான் டாக்டர் கிட்ட கேட்டேன். இரண்டு நாள்ல டிஸ்சார்ஜ் செய்யலாம் சொன்னாங்களே” என்று ஜகன் பிரசன்னாவிடம் கேட்க,

“இல்ல மாமா, கிருஷ்ணா கல்யாணம் வருது, நம்ம எல்லாம் அங்க போயிடுவோம். கல்யாணம் முடிஞ்சதும் டிஸ்சார்ஜ் செஞ்சுக்கலாம், அதுவரைக்கும் ஹாஸ்பிட்டல் மானிடரிங்தான் பெட்டர்” என்றான் முடிவாக.

“நீ சொல்றதும் சரிதான்” என்று ஜகனும் ஒத்துக்கொண்டார்.

ரங்கநாயகி ஒருவாரமாய் மருத்துவமனையில்தான் இருக்கிறார். பிரசன்னா தங்கையின் திருமண வேலையில் ஈடுபட துவங்கவுமே ரங்கநாயகி அவனைப் பிடித்துக் கத்திவிட, பிரசன்னாவும் வெடித்துவிட்டான்.

“உங்க வீட்டுக்காரரைப் போய் கேளுங்கன்னு சொன்னேன் தானே? எப்படி அவரை இவ்வளவு நம்புறீங்க?” என்றான் இத்தனை வருடம் தானும் அப்படி நம்பியவன்தான் என்பதை மறந்தவனாக.

“உங்க பொண்ணு என்னை நினைக்காம இன்னொருத்தரை நினைச்சிட்டு உயிரை விட்டாங்க, அதுக்குப் பலி எங்கப்பாவோட நிம்மதி. அதுக்கு மேல உங்க வீட்டுக்கார் என்னோட சந்தோஷத்தைப் பறிச்சிட்டார். என்னோட அப்பாவை, என் குடும்பத்தை பிரிச்சிட்டார்” என்றான் அவ்வளவு கோபமாக.

ரங்கநாயகி கணவனைப் பார்க்க, அவர் அப்போதும் அமைதியாய் இருக்க,

“இந்த மனுஷனுக்கு எவ்வளவு கல்நெஞ்சம் பாருங்க, இவர் மேலயும் இவர் பொண்ணு மேலையும் தப்பை வச்சிட்டு எங்கப்பா மேல பழி சொல்லிட்டு எப்படி இருக்கார்” என்றான் வெறுப்பாக. ரங்கநாயகி அழுதபடி கணவனிடம் கேட்க,

“என்ன செய்ய சொல்ற? எங்கிட்ட சம்பளம் வாங்குறவன் பையனை விரும்புறான்னு தெரிஞ்சும் சும்மா விட சொல்றியா, அந்த பைய கோழைத்தனமா செத்தா இவளும் நம்மை நினைக்காம போய் சேர்ந்துட்டா” என்று ஜெயப்பிரகாஷம் தன் தவற்றை உணராமல் பேசினார்.

ரங்கநாயகி “எல்லாமே நீங்க பார்த்துப்பீங்கன்னு இருந்தேனே, அவ ஆசைப்பட்டவனுக்குக் கட்டி வச்சிருந்தா கூட இப்படி ஆல்பாய்ஸ்ல போயிருக்க மாட்டாளே” என்று தாயாய் அவர் கண்ணீர் வடிக்க,

“அப்படி கண்டவனைக் கட்டிக்கிறது செத்துத் தொலைஞ்சதே பரவாயில்லை” என்றதும் ரங்கநாயகியால் தாளமுடியவில்லை. எல்லா விஷயத்திலேயும் கணவரின் விருப்பமறிந்து நடப்பவர், அவர் என்ன சொல்கிறாரோ அதையே செய்து பழகியவர். மகள் விஷயத்தில் கொஞ்சமும் குற்றவுணர்வே இல்லாது அவர் பேசவும் ரங்கநாயகி பெருங்குரலெடுத்து அழுது சண்டையிட, வீட்டினர் எல்லாருக்கும் விஷயம் தெரிந்து போக, பிரசன்னா இறுகிப்போனான்.
ரங்கநாயகி அழுதபடி சண்டையிட்டவர்,
“நம்ம பொண்ணு மேல தப்பு வச்சிட்டு முரளி மேல பழி போட்டு இப்படி அப்பாவையும் மகனையும் பிரிச்சிட்டீங்களே, என் பேரன் அப்பா இல்லாம மனசுல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்” என்ற ரங்கநாயகியின் கண்ணீரில் பிரசன்னாவிற்கும் விழிகள் கலங்கியது.

ரங்கநாயகிக்கும் கணவருக்கும் இடையில் பெரிய வாக்குவாதம். “உனக்காகத்தானே அவனை நம்ம கூட வச்சிக்க நினைச்சேன் நாயகி, நீயே இப்படி பேசுற? நான் ராஜா மாதிரி என் பேரனை வளர்த்திருக்கேன்” என்று பெருமைப் பேச எதுவும் தெரியாமல் கண்மூடித்தனமாய்க் கணவனை நம்பினோமே என்று உடைந்து போன ரங்கநாயகி மயங்கிவிட மருத்துவமனையில் சேர்த்தனர்.

அன்று கிருஷ்ணபிரியாவின் திருமணம்.

முரளிதரனின் முகத்தில் இவ்வளவு மகிழ்ச்சியை அவரின் மக்கள் கண்டதே இல்லை. மூன்று மக்கள் இருந்தும், இருவரின் திருமணத்தை அவரால் கண்டுகளிக்க முடியாத வருத்தம் இப்போது மூன்று பேரும் ஒன்றாய் இருக்க, கிருஷ்ணாவின் திருமணம் நடக்கப்போகிறது என்பதே அவரை அவ்வளவு உற்சாகமாய் வைத்திருந்தது.

நல்ல நேரத்தில் கிருஷ்ணபிரியாவின் கழுத்தில் வைபவ் தாலி கட்ட, அவர்களின் திருமணம் இனிதே நிறைவுற, அடுத்து அவ்வளவு புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினர். எல்லாம் முடிந்து பெண்ணும் மாப்பிள்ளையும் முரளியின் வீட்டிற்குப் போக முடிவு செய்ய, பிரசன்னாவும் வர்ணவியும் அவர்களுடன் போக, இங்கு மண்டபத்தில் உள்ள பொருட்களை சரிபார்த்து எடுத்துவருகிறேன் என்று சொல்லி மலர் இருந்துகொள்ள துணைக்கு ஜனாவும் இருந்தான்.

மணமகள் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் ஒழுங்கப்படுத்தினாள் சுதந்திரமலர். யாருமில்லா தனியறையில் சுதந்திரமாய் தன் மனைவியை ரசித்திருந்தான் ஜனார்த்தன்.

எல்லா பொருட்களையும் எடுத்து வைத்தவள்,
“கிளம்பலாம்” என்று சொல்லி கதவிடம் போனாள்.

“என்ன நீ எங்கிட்ட ஒழுங்கா பேச மாட்டேங்கிற?” என்ற ஜனாவின் கேள்வியில்,

“நீங்க எங்கிட்ட காலையில இருந்து சரியா பேசுனீங்களா? இல்லை பார்த்தீங்களா? அத்தை அழகா இருக்காங்க, அமிழ்தாவும் சாத்வீயும் அழகா இருக்காங்கன்னு சொல்லத் தெரியுது, எங்கிட்ட சொல்ல மனசு வரல” என்று மனம் பொறுமினாள் மலர்.

அவளின் கைப்பிடித்து தன்னருகே இழுத்தவன்,
“அட லூசே! மஜ்னுவோட கண்களுக்கு லைலா எப்பவுமே அழகுதான், அது தெரியாதா உனக்கு?” என்ற போதிலும் மலரிடம் மௌனமே. அவளின் மௌனம் படித்தவன் தனது கைப்பேசியை அவளின் கைகளில் திணிக்க, கேலரியைத் திறந்தால் எல்லாம் அவளின் படங்களே.

காலை முதல் அத்தனை புகைப்படங்கள், வெவ்வேறு கோணத்தில், எல்லாமே தற்செயலாய் அவன் எடுத்த புகைப்படங்கள்.

“இருந்தாலும் வாயைத் திறந்து சொன்னா என்னவாம்?” என்று இதழ் விரிக்க,

“வாயைத் திறந்தா சொல்றதோட என்னால நிறுத்த முடியாது” என்றான் முகம் திருப்பிக்கொண்டு.

“நான் எப்போ சொல்றதோட நிறுத்த சொன்னேன் உங்களை?” என்று அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பியபடி மலர் கேட்க,

“என்ன?” என்றவனின் விழிகளில் கோடி ஆச்சரியம் கொட்ட

“ம்ம், வெண்ண” என்றவள் முகம் திருப்ப, ஜனாவிற்கு மனைவியின் மஞ்சிமம் மோகம் கூட்ட இதழ் விரிந்து அவளைத் தீண்ட மலர் மலர்ந்தாள்.

✅ End of Episode 34
How did you feel about this episode?
❤️ 4 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 3 weeks ago

Very nice.

Mrs Beena loganathan Reader 2 weeks ago

காதல் கொண்ட மனது 

கோவத்தை பிடித்து வைத்ததில்லை....
காற்றை போல சுவாசம் கொண்ட காதல் 
கரைந்து விடும் ......
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top