Episode 2
சுதந்திரா தன் சுதந்திரம் உடலளவிலும் உள்ளத்தினளவிலும் தடைப்படுவது கண்டவள், இருந்த கோபத்தில், அதன் கொந்தளிப்பில் தனது ஹீல்ஸ் ஷூவினால் ஜனாவின் காலில் ஓங்கி மிதித்தாள். அதிலே அவன் தடுமாற, அப்படியே அவன் நெஞ்சில் கைவைத்து சுதந்திர மலர் தள்ளியதில் மெத்தையில் போய் விழுந்தான்.
ஹீல்ஸ் ஷூவினால் மிதிக்கப்பட்டதில் அவன் கால்களில் வலியெடுக்க, மெத்தையில் இருந்து எழ முடியாமல் இருந்தவன்,
“அடியே! ராங்கி” என்று மலரைக் கடிய, மலர் அதற்குள் கதவைத் திறந்திருந்தாள். வாசலிலே வர்ணவி நின்றிருக்க, மலருக்குக் கண்கள் கலங்கி இருந்தன. அவளது உதட்டுச்சாயம் முற்றிலும் அழிந்து போயிருந்தது. அதனைக் கண்டு எதுவும் கேட்காமல் வர்ணவி,
“நீ பக்கத்து ரூம்ல இரண்டு நிமிஷம் உட்காரு டி” என்று சொல்ல, மலர் எதுவும் பேசாமல் அடுத்த அறையினுள் நுழைந்தாள். வர்ணவியோ அண்ணன் அப்படி படுத்திருப்பதைக் கண்டவள்,
“ஏன் அண்ணா இப்படி பண்ற?” என்றாள்.
அவனோ மெதுவே எழுந்து உட்கார்ந்து கால்களைத் தேய்த்துவிட்டு, தங்கையைப் பார்த்து,
“இங்க பாரு வரு, எனக்கும் அவளுக்கும் நடுவுல நீ வராத” என்றான் எரிச்சலுடன். வர்ணவிக்கும் கோபம் வர,
“நான் வரலடா லூசே, நீ முதல்ல முகத்தைப் போய் கழுவு” என்று அண்ணனைப் போலவே எரிச்சலுடன் சொன்னவள் அடுத்த அறைக்குள் போக மலர் வாடியிருந்தாள்.
வர்ணவிக்கு என்ன பேச என்றே தெரியவில்லை. மலரோ எழுந்தவள் பாத்ரூம் போய் முகம் கழுவி, தன்னை நிதானப்படுத்தியவள்,
“நான் கிளம்புறேன் வரு” என்றாள்.
“மலர்! ப்ளீஸ்டி, வந்தவுடனே போனா எப்படி? கேக் கட்டிங் கூட முடியல. சாப்பிட்டு போகலாம் ப்ளீஸ்” என்று கெஞ்சிப் பார்த்தாள்.
“ப்ளீஸ் வரு! என்னைப் புரிஞ்சிக்கோ. ஐ அம் ஸாரி” என்றவள் அறையை விட்டு வெளியே போக, வர்ணவியின் கெஞ்சல்கள் ஒன்றும் எடுபடவில்லை.
வர்ணவி போகும் அவளையே பார்த்தபடி நிற்க, ஜனார்த்தன் புன்னகையுடன் மலரின் இதழில் இருந்து தனக்கு இடம் மாறியிருந்த உதட்டுச்சாயத்தைத் துடைத்து, முகம் கழுவி வெளியே வந்தவன் தங்கை நிற்பது பார்த்து,
“என்னடி நிக்கிற? சீக்கிரம் பேக்ஸ் எடுத்துட்டுப் போ, டைம் ஆச்சு” என்று சொல்ல, அவனை முறைத்தாள். அவனது பார்வை அறையை சுற்ற, சுதந்திராவைக் காணவில்லை என்றதும் ஏமாற்றம்.
ஆனாலும் அவளை சீண்டியதாலும் தீண்டியதாலும் அவனுக்குள் தித்திக்கும் கணங்களே!
“மலர் எங்க?” என்று ஜனா கேட்க,
“நீதான் அவளைத் துரத்தி விட்டியே, அறிவிருக்கா உனக்கு? இரண்டு வருஷம் கழிச்சு இன்னிக்குத்தான் அவளை நேர்ல பார்க்கிறேன். இப்போதான் பழையபடி பேசினா, உன்னால சாப்பிடக் கூட இல்லாம போய்ட்டா” என்ற வர்ணவிக்குக் குழந்தையின் பிறந்தநாள் என்ற உற்சாகம் இல்லாது போய்விட, தங்கையின் தோளில் கைப்போட்டவன்,
“வரு ஒன்னுப் புரிஞ்சிக்கோ. நான் அவளை எப்பவும் விட நினைக்கல, எல்லாம் உன் ப்ரண்ட் தப்பு. அண்ட் இன்னிக்கு நம்ம சாத்வீ பர்த்டே, அதை ஞாபகம் வச்சிக்கோ. உன்னை உன் புருஷன் இப்படி பார்த்தா என்ன ஏதுன்னு கேட்டு தொல்லை பண்ணுவான். அப்பவும் நீ எதுவும் சொல்லக் கூடாது” என்று அமைதியில் ஆரம்பித்து அழுத்தமாக முடித்தான்.
அண்ணனும் தங்கையும் கீழே இறங்கி வர, மகனது முகத்தில் இருந்த பிரகாசத்தில் சௌந்தர்யாவிற்கும் சௌந்தர்யம் கூடிப்போனது. அது மலரின் வருகையினால்தான் என்று அவர் மனம் சொன்னது. சீக்கிரமே எதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
கேபில் சென்ற சுதந்திராவின் மனம் தவித்தது.
‘எல்லாம் என்னோட தப்பு, வருக்காக வந்தாலும் வாயை வச்சிட்டு சும்மா இருந்திருக்கணும் நான், அவன் தாடி வைச்சா என்ன? தடிமாடா இருந்தா என்ன? பக்கத்து ரூம்ல இருந்து எல்லாம் கேட்டிருப்பான் ராஸ்கல், எவ்வளவு திமிர் அவனுக்கு? என்னை இத்தனை வருஷம் பார்க்க கூட இல்லை, பார்த்தவுடன் முத்தமிட்டால் நான் இளகிடுவேனா?’ என்று எரிச்சல் வந்தது.
‘அவனை மிதிச்சத்தோட விட்டிருக்கக் கூடாது நான், கன்னத்தில ஒன்னு வச்சிருக்கணும்’ என்று இன்னும் இன்னும் கோபம் வந்தது.
யோசிக்காதே என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் வெளியே பார்க்க, சாலையில் இன்னொரு புறம் அவளது கல்லூரிப் பேருந்து போனது. அதைப் பார்க்கவும் அவளுக்கு அந்த நாளின் நினைவுகள். முதன் முதலில் வர்ணவியை அவள் கண்டது கல்லூரிப் பேருந்தில். அன்று தொடங்கிய நட்பு இன்று உறவாய்த் தொடர்கிறது.
வீடு வந்தவள் மகளைப் பார்க்க அவள் உண்டுவிட்டு உறங்க அவளுக்கும் களைப்பாக இருக்க, அவளை அணைத்தபடி நன்றாகப் படுத்துறங்கினாள்.
விழா முடிந்து எல்லாரும் வீட்டிற்குச் செல்ல, ஜனா வெளியே போய்விட்டான். இரவு உணவு முடிந்தபின், ரங்க நாயகி வர்ணவியைப் பார்த்தவர்,
“என்ன நினைச்சிட்டு இருக்க வர்ணவி நீ? எதுக்கு அந்த பொண்ணு நம்ம வீட்டு விஷேஷத்துக்கு வரா?” என்று அதட்டலாகக் கேட்டார்.
“என் பொண்ணு பிறந்த நாளுக்கு என் ப்ரண்ட் கூப்பிட்டதுல என்ன தப்பு?” என்று வர்ணவி திருப்பிக் கேட்க,
“அது என்ன பதிலுக்குப் பதில் பேசுற பழக்கம்? எல்லாம் அவளோட சேர்க்கை. இன்னிக்கு உங்கண்ணன் ஒத்தையில நிக்க அவதான் காரணம். திரும்பவும் அவ உன்னை சாக்கா வைச்சு என் பேரனோட ஒட்டிக்கப் போறா” என்று பேசினார்.
இதையெல்லாம் வீட்டினர் வேடிக்கைத் தான் பார்த்தனர். ஜெயப்பிரகாஷ்தான் மனைவியைக் கேட்க சொல்லி இருப்பார் என்று எல்லாருக்கும் தெரியும், அது அப்படித்தான் அவர் செயல் என்றால், ரங்கநாயகி சொல்.
பாட்டியைப் பார்த்த ப்ரசன்னவாசன்,
“அம்மாச்சி! இன்னிக்கு ஒரு நாள் விட்டுடுங்க. இவ தெரியாம பண்ணிட்டா” என்று மனைவிக்காகப் பேசினான்.
உண்மையில் அவனால் மட்டுமே பேச முடியும், வேறு யார் பேசினாலும் ரங்க நாயகியிடம் எடுபடாது.
“நீ சொல்றதுனால இவளை விடுறேன்” என்றவர் அங்கு நின்ற தன் மருமகளின் பக்கம் பார்வையைத் திருப்பி,
“சௌந்தரி, இவங்க மூணு பேருக்கும் இன்னிக்கு திருஷ்டி சுத்திப் போடு” என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டு அவர் கணவருடன் அறைக்குள் போனார்.
மாமியார் சொன்னதுபோலவே திருஷ்டி எடுத்தவர், மகன் வருவதற்காகக் காத்திருந்தார். ஜனா வரவும் அவன் அறைக்கதவைத் தட்டியவர்,
“ஜனா, அம்மா வரலாமா?” என்று கேட்க,
“ம்மா, வா” என்று அவன் சொன்னதும் உள்ளே போனார். அவனருகே மெத்தையில் உட்கார்ந்தவர்,
“அப்புறம் மலர் இந்தியா வந்துட்டா, பார்த்தியா ஜனா?” என்று அவன் முகம் பார்த்துக் கேட்டார்.
“நான் பார்க்கல” என்றான் உடனே. அவனுக்கு மலரிடம் பேசாமல் வீட்டில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை, வீட்டில் எல்லாரும் இதைப் பற்றி பேசுவார்கள் என்று தெரிந்துதான் இவ்வளவு நேரம் வெளியே சுற்றி வந்தான்.
ஜனா பதில் சொல்லவும், அவனை கிண்டலாகப் பார்த்தவர்,
“டேய் ஜனா! பரதேசி மாதிரி இருந்த நீ பளபளன்னு வந்ததையும் பார்த்தேன். நீ மாடிக்குப் போனதும், வரு மலரை மாடிக்கு அழைச்சிட்டு போனதையும் நான் பார்த்தேன். மலர் சீக்கிரமே வீட்டுக்குப் போனதையும் பார்த்தேன்” என்று எல்லாம் அவர் சொல்ல,
“ம்மா, சிசிடிவியெல்லாம் தோத்துடும் போல, ஸ்டேஜ்ல நின்னுட்டே இவ்வளவு பார்த்திருக்க” என்ற ஜனாவின் முகமெல்லாம் மலர்ச்சிதான். மலர் என்றாலே மலர்ந்துதான் போவான் அவன்.
“எங்க இருந்தாலும் உன்னையும் வருவையும் கவனிக்கறதை விட எனக்கு வேற வேலை என்ன இருக்கு? நாளைக்கே போய் மலர் வீட்ல பேசலாம் ஜனா, நீ அவளை விட்டுட்ட அப்படின்னு உன் தாத்தா, அப்பத்தா எல்லாம் நினைக்கறாங்க. அப்படியிருந்தா இத்தனை வருஷம் நீ தனியா இருந்திருக்க மாட்ட, டைம் வேஸ்ட் பண்ணாதடா, திருப்பி அவ வேற எங்காவது போயிட போறா. ஈகோன்னால இழந்த வருஷம் திரும்பி வராது” என்றார் கவலையுடன்.
“ம்மா! இந்த தடவ அப்படியெல்லாம் விட மாட்டேன் நான். முதல்ல நான் அவ கிட்ட பேசுறேன்மா, அப்புறம் நீங்க பேசலாம்” என்ற ஜனாவை முறைத்தார்.
“என்ன பேசுவ நீ? இன்னிக்கு அவளை சண்டைப்போட்டு அனுப்பினியே அப்படிதானே?” என்று எரிச்சலுடன் அவர் சொல்ல,
“அம்மா! இன்னிக்கு அவகிட்ட நான் பேசவே இல்லம்மா, எங்க இரண்டு பேர் கிட்டயும் தப்பு இருக்கு. ஆனா எத்தனை தப்பு இருந்தாலும் விடக் கூடாதுன்னு புரிஞ்சிடுச்சு. விட மாட்டேன்மா அவளை, ஒரு இரண்டு நாள் டைம் கொடு, அவ கிட்ட பேசிட்டு சொல்றேன்” என்றான் நிதானமாக. அவன் பேச்சிலேயே அவருக்குப் புரிந்தது, மகன் இது பற்றி நிறைய யோசனை செய்திருக்கிறான் என.
யோசனைதான், இன்று நேற்றில்லை, என்னை எப்படி அவ்வளவு எளிதில் உதறிச் சென்றாள் என்று அவள் போன நாள் முதலே அவள் ஞாபகம்தான். ஆனால் அப்போது கோபம் மட்டுமே ப்ரதானமாக இருந்தது, இப்போது அது குறைந்து வருத்தமாக மாறியிருந்தது.
சௌந்தர்யா அவனறை விட்டுப் போனதும், சிறிது நேரத்தில் ப்ரசன்ன வாசன் உள்ளே வந்தான். வந்தவன் ஜனாவிடம் பேசாமல் அவனை உற்றுப் பார்க்க,
“என்னடா அப்படி பார்க்குற?”
“இல்ல, இத்தனை நாள் நான் சொல்லி கூட எடுக்காத தாடியெல்லாம் இன்னிக்கு திடீர்னு காணுமே, அதான் பார்க்கிறேன்” என்று நக்கலாகப் பேச,
“ப்ரசன்னா, என்ன பேசனுமோ நீ நேராவே பேசலாம்” என்றான் ஜனார்த்தன்.
“இன்னிக்கு அவ கிட்ட பேசினியா? நீ அவளைப் பார்த்திருப்பேன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றான் என்னிடம் நீ மறைக்க முடியாது என்ற தொனியில்.
“எவளைப் பார்த்தியா? என்ன பேச்சு இது அவ இவன்னு? உனக்குப் பிடிக்கலன்னாலும் அவளுக்கு நீ மரியாதைக் கொடுத்துதான் ஆகனும் ப்ரசன்னா” என்றான் கடுப்புடன்.
“உன்னை வேண்டாம்னு போனவ அப்படியென்ன அவ்வளவு முக்கியமாகிட்டா?” என்றவன் பேச்சில் எகத்தாளம்தான்.
“உன்னால வருவை விட முடியுமா ப்ரசன்னா?” என்றவனின் கேள்விக்கே மச்சானை முறைத்தான் ப்ரசன்னவாசன்.
“வருவும் அவளும் ஒண்ணா?”
“கோவம் வருதுதானே டா உனக்கு? வரு உனக்கு எப்படி ஸ்பெஷலோ, அப்படிதான் எனக்கு என் மலர் ஸ்பெஷல்” என்றதும்,
“சொல்லாம கொள்ளாம உன்னை விட்டுப் போனவளுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ற நீ” என்ற ப்ரசன்னாவிடம்,
“அவ என்னை விட்டாலும் நான் அவளை விட்டாலும் உங்க யார் வாழ்க்கையும் மாறலதானே? இப்போ சொல்றேன் மச்சான் கேட்டுக்கோ, இனிமே எனக்கும் அவளுக்கும் இடையில யாரும் வர வேண்டாம், எங்களைப் பத்தின பேச்சுக் கூட வேண்டாம்” என்றான் அழுத்தமாக.
ஆனால் அவள் விட்டுச் சென்றது இன்னமும் வலித்தது.
✅ End of Episode 2
Very nice.
பார்க்காம இருந்தும்