Episode 32
“ஜனா! வரேன்னு சொல்லவே இல்லை” என்று உற்சாகமாகச் சொல்லி மலர் அவனை உள்ளே அழைத்தாள். அன்று காலையில் வீட்டில் நடந்த களேபரத்தில் வேலைக்குப் போகாத காரணத்தினால் மலர் அமிழ்தாவைத் தூக்கிக் கொண்டு முரளியின் வீட்டிற்குச் சென்றிருந்தாள்.
சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்ற கணவனைக் காணவும் மலர் அவனை வரவேற்க,
“வாங்க மாமா” என்று கிருஷ்ணப்ரியாவும் அக்காவின் பின் நின்று அழைக்க, அவனோ அவனுக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தான். அங்கே பிரசன்னாவும் வர்ணவியும் ஒன்றாய் வர, அண்ணனைப் பார்த்த கிருஷ்ணப்ரியா,
“அப்பா! அண்ணா!” என்று என்னவோ அதிசயம் கண்டது போல் ஆர்ப்பரித்து அவனிடம் போக,
கிருஷ்ணாவின் சத்தம் கேட்டு எல்லாரும் வாசலுக்கு விரைய, பிரசன்னா தயக்கத்துடன் நின்றிருந்தான். பிரசன்னாவிற்கு மனத்தில் பெரும் உறுத்தல், பெயரில்லா ஒரு தயக்கம், வலியும் கூட!
கணவன் தன்னைப் பார்க்கவரவில்லை என்பதால் கடுப்பாய் நின்றிருந்தாள் சுதந்திரமலர்.
இதில் வடிவு வேறு, பிரசன்னாவை வாசலில் வழிமறித்து ஆரத்தி எடுத்துக்க சொல்ல சாரதாவும் புன்னகையுடன் எல்லாம் செய்து அவனை உள்ளே அழைக்க, பிரசன்னாவிற்கு ஒவ்வொரு நொடியும் குற்றவுணர்வு ஏறிக்கொண்டே போனது அவர்களின் செயலினால்.
உள்ளே நுழையவும் முரளியின் கைப்பிடித்தவன் கண்கள் கலங்க,
“சாரிப்பா” என்று சொல்லி நிற்க,
“விடு பிரசன்னா, அப்பாவுக்கு உன் மேல எந்த கோவமும் இல்லை” என்று சொல்ல சுதந்திராவுக்கு சுருக்கென்றது.
“நீ வந்து உட்காரு” என்று சொல்லி மகனைத் தன்னுடன் அவர் அமர்த்திக்கொண்டார். ஜனாவைப் பார்த்த சாரதா,
“வாங்க ஜனா, உட்காருங்க. வரு இப்போதான் உனக்கு வீட்டுக்கு வர முடிஞ்சது இல்லை” என்றதும் அவள் பார்வை கணவனைப் பார்த்தது. பிரசன்னா சாரதாவின் முன் நின்று அவரின் கையைப்பற்றி மன்னிப்புக் கேட்க, சாரதா புன்னகை முகமாய் அவன் கன்னத்தில் தட்டியவர்,
“விடு கண்ணா” என்றார். வடிவு பேரனை விட்டு நகரவில்லை அவனைப் பிடித்து வைத்துக் கதைப் பேசினார். எல்லாரும் பெரிய மனத்தோடு இருக்க அது இன்னும் பிரசன்னாவை சிறுமையாய் உணரவைத்தது நிஜம்!
இதில் எதுவும் கலந்துகொள்ளாமல் நின்றிருந்தாள் சுதந்திரமலர்,
“என்ன மலர் யோசிக்கிற?” என்று அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் கேட்டான் ஜனா. கணவனை முறைத்த மலர் அவளின் அறைக்குள் புகுந்துகொள்ள, ஜனாவும் அவளின் பின் போனாள்.
“உனக்கு பிரசன்னா வந்ததுல சந்தோஷமில்லையா?” என்று அவளிடம் நேருக்கு நேராய்க் கேட்டான் ஜனா. மலரோ உறங்கும் தன் மகளைப் பார்த்தவள்,
“சந்தோஷமில்லன்னு சொன்னா என்ன செய்யப் போறீங்க?” என்றாள் மெதுவாக.
“என்ன மலர் இப்படி பேசுற?” என்று ஜனா அதிர்ச்சியுடன் பார்க்க,
“வேறு எப்படி பேசணும்? நான் கூட உங்களைப் பார்த்தவுடனே எனக்காக வந்தீங்களோன்னு நினைச்சிட்டேன். என்னைத் தேடி அமெரிக்காவுக்கே வராத என் ஹஸ்பண்ட் அப்பா வீட்டுக்கு வருவார்னு நினைச்சது தப்பு” என்றாள் கோபத்துடன்.
அவளருகே உட்கார்ந்த ஜனாவும் மகளின் தூக்கம் கெடாத குரலில்,
“இப்ப அந்த விஷயம் இழுக்கனுமாடி நீ? பிரசன்னாவைப் பத்திதானே பேசுறோம்” என்றான் வருத்தமாக.
“அவன் தன்னோட தப்பை உணர்ந்து வந்திருக்கான், மத்தவங்களுக்கு எப்படியோ நம்ம இரண்டு பேருக்கும் தெரியும்ல, அவன் குடிச்சிட்டு எவ்வளவு ஃபீல் பண்ணி பேசினான்னு” என்றான் நண்பனுக்கு ஆதரவாக.
“அவன் தப்பை உணர்ந்து வரல ஜனா, அப்பா மேல தப்பில்லைன்னு தெரிஞ்சதால வந்திருக்கான். இரண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு. இத்தனை வருஷத்துல ஒரு நாளும் அவன் அப்பாவுக்காக யோசிக்கவே இல்லை” என்றவளை இடை நிறுத்திய ஜனா,
“அவன் அப்போ சின்னப்பையன் மலர், அந்த வயசுல தாத்தா சொல்றதைதானே அவன் நம்புவான்” என்றவனைப் பார்த்து பல்லைக் கடித்தவள்,
“எத்தனை வருஷம் அவன் தாத்தா பேச்சை நம்புவான்? ஒரு செகண்ட் அவன் யோசிச்சிருக்கனும் ஜனா, இல்லாத அம்மாவை அவ்வளவு நம்பினான். அந்த நம்பிக்கையில் ஒரு பெர்சண்ட் அப்பா மேல ஏன் வைக்கல?” உணர்ச்சிப் பொங்க பேசிய மனைவியிடம் பதில் கூற அவனிடம் வழியில்லை.
“உங்கப்பா எவ்வளவு சந்தோஷமா இருக்கார் பார்த்ததானே மலர், அதை நினைச்சிப் பார்” என்றான் அவளை சமாதானம் செய்யும் நோக்குடன்.
“பார்த்தேன், அதுதான் இன்னும் கடுப்பாகுது எனக்கு. நான் என்ன தப்பு பண்ணினேன் ஜனா? உங்களைப் பிடிச்சிருக்குன்னு நேர்மையா அப்பா கிட்ட சொன்னேன், அவர் ஒத்துக்கல. எங்கூட கிட்டத்தட்ட ஒருவருஷம் பேசல அவர், இப்போ உங்க கூட நான் சேர்ந்து இருக்க ஆரம்பிக்கவும்தான் பழையபடி பேசுறார் தெரியுமா?”
“இப்போ மகன் வந்ததும் அவன் இத்தனை நாள் மதிக்காம நடந்தது எல்லாம் அவங்களுக்கு மறந்துடுச்சு. அவன் கல்யாணத்துக்குக் கூட கூப்பிடல எங்களை, அப்படி ஒதுக்கிவச்சான். அவனுக்கு என்னையோ கிருஷ்ணாவையோ அடையாளம் கூட தெரியாது, அப்பா அவனை எங்களுக்கு எப்பவும் மறக்கவிட்டதில்லை அவனைப் பத்திப் பேசிட்டே இருப்பார்” என்றாள் ஆற்றாமையுடன்.
“டென்ஷன் ஆகாத மலர், லெட் இட் கோ” என்று சொல்லி அவளின் கையை வருடிக்கொடுக்க,
“எப்படி டென்ஷன் ஆகாம இருக்க முடியும்? உங்களை விட்டு வந்த பின்னாடி என்னைப் பேசினது அதிகம். ஏன் லவ் மேரேஜ் பண்ணினவங்க லைஃப்ல பிரச்சனைனு ஒன்னு வரக்கூடாதா?” என்றாள் மலர்.
“இப்படியே எல்லா பிரச்சனையையும் ரவுண்ட் கட்டி ஞாபகப்படுத்தி உன்னை டென்ஷன் பண்ணி என்னையும் டென்ஷன் செய்யாத” என்று சொல்ல,
“அப்போ நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றாள் மலர். ஜனா சொல்லியும் கேட்கவில்லை.
யாரிடமும் சொல்லாது மலர் வெளியே போக, “அவளுக்கு ஆபிஸ் கால் இருக்காம், நாங்க கிளம்புறோம் மாமா. அமிழ்தாவை நான் அப்புறம் வந்து அழைச்சிட்டுப் போறேன்” என்றான் ஜனா.
முரளியோ உட்கார்ந்தவர் எழுந்துவிட்டார்.
“என்னாச்சு ஜனா சுதந்திராவுக்கு?” என்று அவனிடம் கேட்க,
“ஒன்னுமில்ல மாமா, ஆபிஸ் வொர்க். நான் அவளை அப்புறம் அழைச்சிட்டு வரேன். மாமா நீங்க உங்க மகனைப் பாருங்க, என் மலரை நான் பார்த்துக்கிறேன், ரிலாக்ஸ்” என்று சொல்லி மலரைக் காரில் ஏற சொல்லி காரைக் கிளப்பினான்.
“நீ ஒன்னும் சொல்லாம வந்துட்ட, அங்க உன் அப்பா டென்ஷன் ஆகுறார்”
“அவருக்குதான் அவர் மகன் இருக்கானே” என்றாள் மலர்.
“அதேதான் நானும் சொன்னேன், உங்க மகனை நீங்க பாருங்க. என் மலரை நான் பார்க்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன், இப்ப எங்க போகலாம் சொல்லு மலர்” என்று தெருமுனையில் காரைத் திருப்பியவண்ணம் ஜனா கேட்க,
“எனக்கு கோவம் வராத மாதிரி எங்காவாச்சும் அழைச்சிட்டுப் போங்க” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.
காதலும் காதல் நிமித்தமுமாய் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவள் இயல்பைக் கொஞ்சம் மாற்றியிருந்தன.
பிரசன்னாவை இயல்பாய் ஏற்கவே முடியவில்லை, எல்லாரும் அவனை அப்படியே ஏற்றுக்கொள்ள, ஏற்கமுடியா இவள் நிலை இவளுக்கு ஒருவித அழுத்தம் தந்தது.
“இதுதான் எனக்குக் கோவம் வராதா இடமா?” என்று காரை நிறுத்திய கணவனைப் பார்க்க,
“நம்ம தாஜ்மஹால் பார்க்கும்போது உனக்குக் கோவம் வருமா என்ன?” என்றான் சிரிப்புடன்.
கணவனுடன் காரை விட்டு இறங்கி அங்குக் கொட்டிக் கிடந்த கொன்றைப் பூக்களை ரசித்தவண்ணம் கன்னிமாரா நூலகத்தினுள் அடியெடுத்துவைத்தாள் சுதந்திரமலர்.
“பாதாம் மில்க் வாங்கிட்டு வரவா?” என்று கேட்டு அவளுக்கு வாங்கித் தந்தவன், அருங்காட்சியகம் இருந்த பகுதியில் அவளை உட்காரவைத்தான்.
சுதந்திரமலருக்கு என்னவோ வருடங்கள் பல பின்னோக்கி சென்ற உணர்வுதான், அந்த இடம், அது நல்கிய அமைதி, கூடவே ஜனா. தொலைந்து தொலைவாய்ப் போன இசை இன்று அகமருகில், அவளருகில்!
மலராகவே மனம் உவந்து ஜனாவின் கரம்பற்றியிருந்தாள். ஜனாவும் அவளின் கையை அழுத்தமாய்ப் பற்றியவன் ஒன்றும் பேசவில்லை. இருவரும் இத்தனை வருட நெடுநல்வாடை பொழுதை கொஞ்சம் கொஞ்சம் களைந்து கொண்டிருந்தனர். மலராகவே இதழ் விரித்தாள்.
“Location has energy னு ஜெய் ஷெட்டி ஒரு புக்ல சொல்லியிருப்பார், இந்த இடத்துக்கு நிறைய என்ர்ஜி இருக்கு ஜனா, எனக்கு என்னமோ ரொம்ப வருஷம் முன்னாடி நானும் நீங்களும் இந்த புக்ஸுமா ஒரு உலகத்தில இருந்தோமோ அதுக்குள்ள போன மாதிரி இருக்கு, தேங்க்ஸ் இங்க அழைச்சிட்டு வந்ததுக்கு” என்றாள் மலர்.
ஜனா அவள் கையை அழுத்தியவன் “நீ என் வாழ்க்கையில் வரதுக்கு முன்னாடி எங்கிட்ட எல்லாமே இருந்துச்சு மலர், பட் நீ போன பின்னாடி எதுவும் எங்கிட்ட இல்லை. you broke me into pieces, நான் நானா இருக்கறதே உன்னாலதான்” என்றான் உள்ளத்திலிருந்து.
உள்ளத்தின் குரலா அவன் உயிரின் குரலா என்றே பாகுபடுத்த முடியவில்லை பாவையினால். அப்பா, பிரசன்னா என்று அலைப்பாய்ந்த அகத்தினிலே எல்லா கரையிலும் இப்போது ஜனாவும் அவனின் காதலுமே! அவனின் வார்த்தைகள் வஞ்சியை வருடிக்கொடுக்க, அதை உணராது இன்னும் பேசினான்.
“நீ எங்க இருக்க தெரியாம இருந்திருந்தா நான் உன்னைத் தேடியிருப்பேன் மலர். நீ வரு கூட எப்பவும் போல பேசிட்டே இருந்த, அதனால மனசுக்கு நீ நல்லா இருக்கன்னு ஒரு திருப்தி. அதே நேரம் என்னை விட்டுப் போய்ட்டான்னு கோபம்” என்றான் கண்கள் மூடி.
“ஒரு நல்ல ஹஸ்பண்டா உனக்கு இல்லாம போய்ட்டேன் மலர், ஐ அம் சாரி” என்றவனின் விழியோரம் ஈரம்.
“ஜனா, ப்ளீஸ்” என்று மலர் அவனின் விழியோரம் இருந்த நீரைத் துடைத்தவள்,
“கோபத்தை விட நம்ம காதல் பெருசு ஜனா, அது புரிய இத்தனை வருஷம் ஆகிடுச்சு அவ்வளவுதான். நீங்க எனக்கு சொன்னதுதான் சொல்றேன் நானும். லெட் இட் கோ” என்று மலர் மொழிய, அந்த மொழியின் அர்த்தம் மிகவும் ஆழமென அவனுக்கும் அவளுக்கும் புரிந்தது.
ஜனாவிற்கு காதல் செய்த பெண்ணை இப்படி காயப்படுத்தியிருக்கிறாயே என்ற உணர்வு வாட்டியது.
அவன் அப்படி இருப்பது பிடிக்காத மலர் “விடுங்க ஜனா, எப்படியும் நீங்க என்னை இந்த எக்மோர் தாண்டி எங்கேயும் அழைச்சிட்டுப் போயிருக்க மாட்டீங்க, நானே சோலோவா அமெரிக்கா சுத்திப்பார்த்திட்டேனே” என்றாள் கண்ணடித்து. அவள் செயலில் மனம் கனிந்தது. இருவரும்
காரில் போகும்போது,
“அன்னிக்கு ஆபிஸ்ல என்ன நடந்து நான் டென்ஷன் ஆனேன் தெரியுமா?” என்று ஜனா கேட்க,
“இப்போ எதுக்கு அதெல்லாம், மறப்போம் மன்னிப்போம்” என்றாள் மலர்.
“இல்ல, என் சோகத்தை யார்கிட்ட சொல்ல நான்?” என்று புலம்பினான். மலரும் சொல்லட்டும் என்று விட்டுவிட,
“அன்னிக்கு நீ கால் பண்ணிட்டே இருந்த, நான் அப்போ ஒரு ப்ரசண்டேஷன் செய்ய வேண்டி இருந்துச்சு, நீ போன் செஞ்ச ஞாபகத்துல அதுவே மைண்ட்ல ஓட, மலர்னு டைப் செஞ்சு என்னவோ சொதப்பிட்டேன், பார்த்தா மலரே நின்னை சாங் ஓடுது. அவ்வளவுதான் சோலி முடிஞ்சுப் போச்சு” என்றவன் சொல்ல சொல்ல அவன் பேச்சும் பாவமும் அன்றைய நிலைமை கண்முன் தோன்ற அடக்க முயன்றும் ஒரு ஆர்ப்பாட்டமான சிரிப்பு மலரிடம்.
“ஜ…ஜனா…அப்படி லூசுத்தனமா யாராவது செய்வாங்களா? அதுவும் ஆபிஸ்ல போய்..அய்யோ அய்யோ” என்று மலர் விடாது சிரிக்க,
“இப்போ நம்ம வேற வேலையில இருக்கும்போது தீடீர்னு நம்ம கவனத்தை திசைத் திருப்புற மாதிரி நடந்தா, அப்படிதான் நீ போன் செய்யவும் உன்னை நினைச்சு என்னவோ மைண்ட் ப்ளாங் ஆகி சொதப்பிட்டேன்”
மலரோ விடாது சிரிக்க,
“என்னை மஜ்னு ஆக்கிட்ட டி நீ” என்றான். அமிழ்தா வர்ணவியுடன் வீட்டிற்குப் போய்விட்டாள் என்று தெரிய, இவர்களும் நேரே வீடு சென்றனர்.
ஜனாவும் மலரும் உள்ளே நுழைய, பிரசன்னா மலரை நிறுத்தினான். வர்ணவியோ அண்ணனிடம்,
“அண்ணா! இந்த எம்ஜியார், நம்பியார் ஃபைட்ல சிக்கிடாத. அப்புறம் சாண்ட்விச்தான்” என்று எச்சரித்தாள்.
✅ End of Episode 32
மனம் விட்டு பேசினால்
Nice