Episode 35
சுதந்திர மலரால் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை, உடலெல்லாம் ஒரு பரபரப்பு, உள்ளத்தில் துறுதுறுப்பு. ஜனா இப்போதுதான் குளிக்கப் போனான். அவனிடம்தான் முதலில் சொல்ல வேண்டும் என்று முடிவாய் இருக்க, எப்படி சொல்ல வேண்டுமென்று போன யோசனையை நிறுத்திவைத்தாள்.
பழைய காயங்கள் அகத்தில் மூலையில் இருந்தாலும் பெரிதாய் தாக்காத வண்ணம் ஒரு வாழ்வுதான் இருவருக்குமே. அமிழ்தா இப்போது எல்.கே.ஜி போகப் போகிறாள், வருடம் ஒன்று ஓடியதே தெரியவில்லை, அவ்வளவு வேகம்! ஆனால் அத்தனை வேகமாய் சென்ற நாட்களிலும் கூட நாயகனின் காதல் குறையவில்லை, கூடவே செய்தது.
கோபங்கள், சண்டைகள் எல்லாம் இல்லாமல் இல்லை, இருந்தும் இருவரும் பொறுமையாய் அதனை ஏற்று தீர்க்கப் பழகியிருந்தனர்.
இப்போது அவர்கள் தோட்டத்தில் புது வரவு, உறவு! பிரிவின் பின் பூக்கப் போகும் புதுமலர் மலரினுள் உதித்திருக்க, காலையில் வீட்டிலே டெஸ்ட் செய்தவளுக்குப் பூரிப்புதான். ஜனாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவள் நடப்பதை நிறுத்திவிட்டு பாத்ரூம் கதவைத் தட்டினாள்.
“ம்ம், மலர் சொல்லு” என்று அவன் உள்ளிருந்து கேட்க,
“ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்.
“குளிச்சிட்டு வந்ததும் சொல்லு மலர்” என்ற ஜனாவின் பதிலில்
“ஒன்னும் பெரிசில்லை, அப்படியே கேளுங்க” என்றாள்.
“என்னடி” என்று அவன் சலிப்பாய்க் கேட்க,
“நீங்க மறுபடியும் அப்பாவாகப் போறீங்க” என்று சொன்னவள் அவன் பதில் சொல்லும் முன்னே அறையை விட்டு கீழே இறங்கினாள்.
இன்று விடுமுறை என்பதால் கிச்சனில் சௌந்தர்யாவுக்கு உதவி செய்யத்துவங்கினாள் மலர். அமிழ்தாவை காலையில் பிரசன்னா வந்து அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான்.
பிரசன்னா இப்போது அப்பாவின் வீட்டில்தான். எப்போதுமே பிரசன்னாவிற்கு உரிமை உணர்வு அதிகம்! சின்ன வயது முதலே ஜெயப்ப்ரகாஷின் பெயரனாய்ப் பெருமையுடன் அந்த வீட்டில் முழு உரிமையுடன் வலம் வந்தவன்தான்.
ஆனால் எல்லாம் அகம் அது அவனின் இடம் என்று சொல்லும்வரையில்தான்! அவனுக்குமே குழப்பங்கள், கூடவே தயக்கங்கள்! முரளிதரனுக்கும் மகன் கூடவே இருக்க ஆசைதான், காட்டிக்கொள்ளவில்லை. அவர் கேட்டு மகன் மறுத்துவிட்டால் என்ற எண்ணம்.
பிரசன்னா அதையெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. கிருஷ்ணாவின் திருமணம் முடிந்த சில நாட்களில் ரங்கநாயகி உடல் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்தவுடனே அவனின் முடிவை சொல்லிவிட்டான். ரங்கநாயகிக்கு மிகுந்த வருத்தம்.
“அம்மாச்சி! இத்தனை வருஷம் நான் அப்பாவை விட்டு இருந்திட்டேன். இனியாவது மகனா என்னோட கடமையை செய்ய ஆசைப்படுறேன். என்னை சந்தோஷமா அனுப்பிவைங்க” என்று பேரன் சொல்லிவிட, ரங்கநாயகிக்கும் அவனின் ஏக்கம் புரிய அரைமனதாய் ஒத்துக்கொண்டார்.
வர்ணவியிடம் மட்டுமே போகும் முன் கேட்டான்.
“உனக்கு அங்க போக ஓகேவா வரு?” என்று. வர்ணவி மறுப்பேதும் சொல்லவில்லை. வார இறுதியினால் இங்கேயோ அங்கேயோ சேர்ந்துதான் இருப்பார்கள்.
மலர் என்னவோ சொல்லப் போகிறாள் என காத்திருந்து கேட்ட ஜனாவுக்கு எதிர்ப்பாரா செய்தியே. இருந்தும் அவனகம் எதிர்ப்பார்த்த ஒன்றுதானே! எவ்வளவு பெரிய விஷயம் இப்படியா குளிக்கையில் சொல்வாள்? உண்மையில் செவித் தீண்டிய செய்தி உண்மைதானா? இல்லை உள்ளமதில் உலாவும் அவன் எண்ணமும் எதிர்ப்பார்ப்பும் அப்படி நினைக்க வைக்கிறதா என்று பெரும் குழப்பம்.
வேகமாய் ஷவரைத் திறந்துவிட்டு அவசர குளியலை முடித்து பாத்ரோபை அணிந்தவன் அறைக்குள் பார்க்க மலர் இல்லை, மாடியிலிருந்து கத்தினான்.
“மலர்,மேல வா” என்று அவன் கத்திக் கொண்டே இருக்க, ரங்கநாயகி ஹாலில் உட்கார்ந்து டீவி பார்த்தார்.
பெரும்பாலும் அவரின் அறைக்குள் முடங்குவதில்லை, கணவனே கண் கண்ட தெய்வம் என வாழ்ந்து, பெற்ற பெண்ணைப் பறிக்கொடுத்த மனம் ஆறவில்லை. இப்போதும் கூட மனம் இரங்காமல் கௌரவத்திற்காகப் பெற்ற பெண் இறந்தது கூட பரவாயில்லை என்று சொல்லும் மனிதர் மேல் பற்றில்லாமல் போக அமிழ்தாதான் அவரின் ஆறுதல்.
ஜனா கத்துவதைக் கேட்டவர்,
“சௌந்தரி, உன் மருமக எங்க? என் பேரன் கூப்பிடுறது காதுல விழலையா?” என்று இவர் கத்த எல்லாம் கேட்டாலும் மலர் அசையாமல் நின்றாள்.
“மலர் என்ன ஆச்சு? அவன் கூட சண்டையா என்ன?” என்று சௌந்தர்யா கேட்க,
“சண்டையெல்லாம் இல்லத்த, சும்மாதான். கூப்பிட்டவுடனே போனா கிக்கா இருக்காது” என்றாள். அதற்குள்ளாக ஜனா இன்னும் கத்த,
“அவன் எப்படி கத்துறான், இந்த பொண்ணு போறாளா பாரு” என்று முணுமுணுத்தார் ரங்கநாயகி. அவருக்கும் மலருக்கும் இன்னும் இயல்பான பேச்சுவார்த்தைக் கிடையாது, மகளுக்காக இந்த பெண்ணை நிறைய பேசிவிட்டோமே என்ற மனவருத்தம் உண்டென்றாலும், அதனை அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை.
மலர் மெல்ல படியேறி செல்ல, சௌந்தர்யாவை அழைத்தார்.
மருமகள் வரவும், “என்ன சௌந்தரி நீ? உன் மருமகளைக் கொஞ்சம் கண்டிச்சு வை, என் பேரன் அவ்வளவு தரம் கத்துறான், போகாம என்ன செஞ்சா உள்ள?” என்று கேட்க,
“அது காய்கறி வெட்டிக்கொடுத்தா அத்த” என்றார்.
“பேசாம ஒரு ஆள் வச்சுக்கோ சமையலுக்கு ஒத்தாசைக்கு, உனக்கும் வயசாகுதுல” என்றவர்,
“எனக்கு நியூஸ்ல வச்சிக் கொடுத்துட்டு போ” என்றார்.
மலர் மேலே சென்றவள் ஜனா இன்னும் பாத்ரோபில் இருப்பது கண்டு நகைக்க,
“ஏய் என்ன சொல்லிட்டுப் போன நீ?” என்றான் ஆவலாய், அவசரமாய்.
அவன் குரலில் பேராவல் பெருக்கெடுக்க பெருமுவகைக்கான காத்திருப்பு அவனிடம் நன்றாகத் தெரிய, இதெல்லாம் அமிழ்தா உருவான போது மலர் அவனிடம் காண நினைத்த காண முடியா காட்சிகள்! ஜனாவின் முகபாவனையும் விழியசைவும் ரசிக்க அத்தனை பிடிக்கும் அவளுக்கு.
“மலர்! சொல்லுடி” என்று அவள் தோள் தொட்டு உலுக்க,
“அப்பாவாகப் போறீங்கன்னு சொன்னேன் ஜனா” என்றாள் இயல்பாக. உள்ளே அவ்வளவு உற்சாகம் இருந்தாலும் வார்த்தைகள் என்னவோ சாதாரணமாய் வெளிவர,
“எவ்வளவு சந்தோஷமான விஷயம்? இப்படியா சொல்லுவடி நீ?” என்றவன் அவளை இறுகியணைத்தான்.
“நீங்க தானே நீ மட்டும் அன்னிக்கு டக்குன்னு ஜனா அப்பாவாகப் போறன்னு வந்தவுடனே சொல்லியிருந்தா சீனே வேற, நீ தேவையில்லாம கிஸ்லாம் கொடுக்க ஆரம்பிச்சதாலதான் நான் டென்ஷன் ஆனேன். கண்டேன் சீதையை மாதிரி சட்டுன்னு விஷயத்தை சொல்லணும்” என்று விழியுயர்த்தினாள்.
ஜனாவும் மலரும் பிரிவைப் பற்றிப் பேசுகையில் வலிகள் மறைந்தபின் வடுக்கள் மிச்சமிருக்கும் பொழுதுகளில் இப்படி சொல்லியிருக்கிறான்.
மலரின் வினாவில் அவள் நெற்றியில் செல்லமாய் மெல்லமாய் முட்டியவன்,
“அதுக்காக இவ்வளவு சப்புனு சொல்லுவாங்களா” என்றவன்,
“எப்போ தெரியும்? டாக்டர்ட்ட போகலாமா?” என்று கேள்வியாய்க் கேட்டவன் அவளை நகரவிடவில்லை. அணைப்பு இறுக்கமாய் இருக்க, மலர் அசைய முயல,
“அசையாதடி! இந்த மொமண்ட் நான் மிஸ் பண்ணின, மறுபடி மிஸ் பண்ணவே கூடாதுன்னு நினைச்ச மொமண்ட், ப்ளீஸ்” என்றவனின் குரலில் அவ்வளவு நெகிழ்ச்சி.
சில நொடி அவசரம்! சில நொடி ஆத்திரம்! அதுதானே இத்தனைக்கும் காரணம், என்னதான் காதல் நலமாய் வளமாய் இருந்தாலும் பொறுமையின்மையும் அவசரமும் தானே அவசியமில்லா ஒரு இடைவெளியை இருவருக்குள்ளும் உருவாக்கியது. இருவரில் ஒருவர் பொறுமையாய் இருந்திருக்கலாம். அதனுடன் கூடிய நீ இறங்குகிறாயா நான் இறங்குகிறேனா என்ற போட்டி! ஒற்றை சொல்லில் ‘ஈகோ!’ அதனால் கிடைத்தது என்ன? தனிமையும் வெறுமையும்! அந்த வருத்தம் இருவரிடமும் மேலோங்க அணைத்து ஆறுதல் செய்தனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, “நான் உங்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றதும் பூரிப்பும் புன்னகையுமாகப் பூத்திருந்த முகத்துடன்,
“சொல்லுங்க ஜனா” என்றாள் மலர்.
“நீ அம்மாவாகிட்ட மலர்” என்றவனின் தாய்மொழி மென்மொழியாய் அவன் தேன்மொழியைத் தாலாட்ட, அடுத்து
“என்னையும் அப்பாவாகிட்ட, தேங்க்ஸ் அண்ட் ஸாரி” என்றவன் பேசிய வார்த்தைகளை மலர் ரசித்து முடிக்கும் முன்னே அவளின் இதழில் பேசினான். மெய் மொத்தமும் சிலிர்த்தது ஜனாவின் ஸ்பரிசத்தில்!
“நீ இப்படி சொல்லத்தானே ஆசைப்பட்ட” என்றவன் அவளின் தலையை வருடி,
“நீ சொன்னா என்ன? நான் சொன்னா என்ன?” என்றான்.
“அதெல்லாமில்லை, நானும் சொல்லுவேன்” என்று மலர் மல்லுக்கட்ட, மீண்டும் இதழ்கள் பேசின!
*************
ஐந்து வருடங்களுக்குப் பிறகு…
அந்த அறையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தது “அம்மா” என்ற அழைப்பு. இப்படி சத்தம் போடுவது அந்த வீட்டில் இருவரே, ஒன்று ஜனா, இன்னொருவர் ஜனாவின் மகன். அப்பாவைப் போல் அவனுக்கும் சத்தம் அதிகம்.
‘ஜெயந்த் ப்ரணவன்’ அவனின் பெயர்.
“கத்தக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கேன்ல ஜெய்” என்று அறையை விட்டு வெளியே வந்து கேட்டாள் மலர்.
“மா, நான் கத்தல. உன்னைக் கூப்பிட்டேன்” என்றதும்,
‘இந்த கொழுப்பெடுத்த பேச்சு அப்படியே அவன் மாமா மாதிரி’ என்று நினைக்கத் தோன்றியது.
“எதுக்குக் கூப்பிட்ட?” மலர் மகனின் கைப்பிடித்து கீழிறங்கியபடி கேட்க,
“அக்காவும் மாமாவும் செஸ் விளையாடுறாங்க, எல்லாரும் பார்க்கிறாங்க. நீங்களும் அப்பாவும்தான் இல்லை” என்று அவளை இழுத்துப்போக ஹாலில் உட்கார்ந்து பிரசன்னாவும் அமிழ்தாவும் செஸ் விளையாட, வர்ணவியும் சாத்வீயும் வேடிக்கைப் பார்த்தனர்.
“பேபி! அப்பாவை எப்படியாச்சும் வின் பண்ணிடு, அப்போதான் இந்த வாரம் நம்ம பெங்க்ளூர் போகலாம்” என்று மாமன் மகளை உற்சாகப்படுத்தினாள் சாத்வீகா. அவர்கள் ஜெயித்தால் பெங்களூர் அழைத்துப் போகிறேன் என்று சொல்லியிருந்தான் பிரசன்னா. சுற்றி ஜகன், சௌந்தர்யா, வர்ணவி, கிருஷ்ணபிரியா அவளின் ஐந்து வயது மகன் சைதன்யா என்று எல்லாரும் இருந்தனர்.
இந்த சத்தமும் கூச்சலும் கேட்ட ஜெயப்பிரகாஷிற்கு ரங்கநாயகி மறைந்த பின் தனிமை இன்னும் வாட்டியது. அவரின் அந்தஸ்தும் கௌரவமும் குன்றவில்லை. இருந்தும் உறவுகளை, அவர்களின் மெய்யன்பை இழந்துவிட்டார். அப்போதும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
“நீ ஹார்ஸை அந்த ப்ளேஸ்ல வை அமிழ்தா” என்று சாத்வீ விளையாட வழி சொல்லிக் கொண்டிருக்க, புன்னகையுடன் தனது காய்களை நகர்த்திக் கொண்டிருந்தான் பிரசன்னா.
அவனின் நகர்வைப் பார்த்த மலர் அவன் பக்கமாய் நின்று கொண்டு, மகள் தனது காயை நகர்த்தவும் அடுத்து பிரசன்னாவிற்கு முன் காயை நகர்த்தி அமிழ்தாவின் சிப்பாயை வீழ்த்த,
“மா” என்று அமிழ்தா கத்த,
“அத்தை, நோ! அப்பா மட்டும்தான் விளையாடணும், அதான் எங்க கேம்” என்றாள் சாத்வீ.
“அப்போ நீ மட்டும் அமிழ்தாவுக்கு ஹெல்ப் செய்ற? அது என்னவாம்?” என்றதும்,
“மா, நாங்க வின் பண்ணினா மாமா எங்களை பேங்க்ளூர் அழைச்சிட்டுப் போவாங்க, நீங்க இரண்டு பேருமே பெரியவங்க இல்லையா? எப்படி நானும் சாத்வீ அக்காவும் உங்களுக்கு ஈகுவள் ஆவோம்?” என்றாள் மலரின் மகள்.
“கேம் இஸ் கேம்! நீங்க வின் பண்றதுதான் ரூல்ஸ். ஆப்போஸீட்ல எத்தனை பேர் விளையாடுறோம்னு முக்கியமில்லை, நீ ஜெயிக்கனும்னா நீ எப்படி விளையாடுற அது மட்டும்தான் மேட்டர். உனக்கு என்ன பயமா?” என்று சீண்டிவிட,
“எங்களுக்கு பயமில்லை அத்த” என்று சாத்வி சொல்ல,
“அப்போ நீங்கதான் மூவ் செய்யணும்” என்றாள் மலர்.
பிரசன்னாவோ பேசமுடியாமல் மலரை முறைத்தான். மலரோ அவனுக்கும் மேல் முறைத்தாள்.
இத்தனை வருடங்களில் நிறைய மாற்றங்கள் இருந்தபோதிலும் பிரசன்னா மலர் உறவில் மட்டும் மாற்றமில்லை, இருவருமே மாற்ற முனையவில்லை. மலருக்கு அவனுடனான கசப்பான உரையாடல்கள் மறந்தாலும் மன்னித்தாலும் மீண்டும் அவர்கள் உறவை புதிதாய் மலரச் செய்ய முடியவில்லை, பிரசன்னாவுக்கும் அதேதான்! அவனால் மலரிடம் கிருஷ்ணபிரியாவிடம் இருப்பது போல் அன்பான அண்ணனாய்த் தன்னை நிலை நிறுத்த முடியவில்லை.
கிட்ட இருந்தும் ஒட்டா உறவுதான்! அதற்காக முன்பு போல் எதற்கெடுத்தாலும் ஒருவரை ஒருவர் சீண்டுவதில்லை. அந்த அளவிற்கு குடும்பத்தினருக்கு நிம்மதி.
“செக்மேட்!” என்றாள் சுதந்திரமலர்.
குழந்தைகள் இருவரின் முகமும் மாறிவிட்டது.
“மாமா” என்று அமிழ்தா சோகமாய் பிரசன்னாவைப் பார்த்தாள். மற்ற பிள்ளைகளை விடவும் பிரசன்னாவிற்கு அமிழ்தா மிகவும் ஸ்பெஷல், அதனாலேயே அவளுக்காக அவன் விட்டுக்கொடுத்து விளையாட, மலர் அதனைக் கண்டுகொண்டவள் ஆட்டத்தையே மாற்றிவிட்டாள்.
“மாமா கண்டிப்பா நெக்ஸ்ட் வீக் உங்களை எல்லாம் பேங்க்ளூர் அழைச்சிட்டுப் போவேன், ப்ராமிஸ்” என்றதும் குழந்தைகள் எல்லாம் குஷியாகிவிட,
“ரொம்ப நேரம் விளையாண்டாச்சு, முதல்ல சாப்பிடுங்க” என்று சொல்லி வர்ணவி எல்லாருக்கும் ஜூஸ் கொடுத்தாள்.
“சித்தி, எனக்குப் படம் போட்டுவிடுங்க” என்று ஜெயந்த் கிருஷ்ணாவிடம் கேட்க,
“நீ தியேட்டர் ரூம் அழைச்சிட்டுப் போ கிருஷ்ணா” என்றாள் வர்ணவி.
குழந்தைகள் கிருஷ்ணாவுடன் மாடியேறிவிட, பிரசன்னாவோ
“ஹேய் வரு! இந்த அதிகப்பிரசங்கித்தனமெல்லாம் செய்ய வேண்டாம் சொல்லுடி” என்றான்.
வர்ணவியோ பாவமாய் அம்மாவைப் பார்க்க,
“என் மகன் வந்திடுவான், நான் சமைக்கனும்” என்று சௌந்தர்யா கிச்சனுக்குள் நழுவ, வர்ணவி அப்பாவைப் பார்த்தாள்.
ஜகனோ, “நான் அப்படியே கொஞ்சம் வாக்கிங் போய்ட்டு வரேன்” என்று அங்கிருந்து நகர்ந்தார்.
“வரு, குழந்தைகளுக்கு வெற்றி தோல்வி எல்லாம் பழக்கம் செய்யணும், வீட்ல நம்ம விட்டுக்கொடுப்போம், வெளியே அப்படியே நடக்குமோ?” என்று சுதந்திரமலர் கோபமாய்க் கேட்டாள்.
“உங்களை சமாளிக்க என் அண்ணனாலதான் முடியும்” என்று சொல்லும்போதே ஜனாவின் கார் சத்தம் கேட்க,
“என் தெய்வம் வந்துடுச்சு” என்று சொல்லி வர்ணவி வாசல் பக்கம் பார்க்க,
ஜனா வாசலில் பிரசன்னாவின் கார் இருப்பதைப் பார்த்துவிட்டான். இன்று எல்லாரும் வந்திருப்பார்கள் என்று சந்தோஷமாய் உள்ளே நுழைய,
“அண்ணா, கலியுக கண்ணா. வந்துட்டியா? இந்த வீட்டோட ஐ நா சபையே…எப்படியாச்சும் இந்த இந்தியா பாகிஸ்தான் கிட்ட இருந்து காப்பாத்திவிடுடா அண்ணா” என்று வர்ணவி புலம்ப,
“என்ன என் தங்கச்சியை இரண்டு பேரும் சேர்ந்து கொடுமை செய்றீங்களா?” என்ற ஜனா பிரசன்னாவின் அருகே வந்து உட்கார்ந்தான்.
“என் மேல தப்பில்லைடா ஜனா” என்று பிரசன்னா சொல்ல உடனே மலர் அவனை பார்க்க,
“நீயும் தப்பாவே இருக்க மாட்ட மலர்” என்று ஜனா உஷாராக உடனடியாகச் சொல்லவும் வர்ணவி பக்கென்று சிரித்துவிட்டாள். சௌந்தர்யா காஃபி எடுத்துக் கொண்டு வந்து மகனிடம் கொடுத்தவர்,
“வந்ததும் என் பையனை பஞ்சாயத்து செய்ய வைக்கனுமா?” என்றார் மலரை முறைத்தபடி.
“அத்த நான் இல்லை, இவ” என்று வர்ணவியைக் கை காட்ட சௌந்தர்யா சிரித்துவிட்டார்.
இரவு உணவை எல்லாரும் இங்கேயே முடித்துவிட்டு கிளம்பினர். கிருஷ்ணபிரியாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு வர்ணவியும் பிரசன்னாவும் அவர்கள் வீட்டிற்குப் போகும் வழியில் வர்ணவி கேட்டாள்.
“விளையாடுறதுக்கு முன்னாடியே அவளை விளையாடக் கூடாதுன்னு சொல்லாம அது என்ன எல்லாம் முடிஞ்சு ஒரு சண்டை, எங்களுக்காக தானே?” என்று அவனை வம்பிழுக்க,
“என்ன உங்களுக்காக?” என்றான் மனைவியிடம். சாத்வீ பின்னால் உட்கார்ந்து உறங்கியிருக்க மகளைப் பார்த்துகொண்டே வர்ணவி,
“இல்ல எத்தனையோ பாசமலரைப் பார்த்த இந்த உலகம் இப்படியொரு பாசமலரைப் பார்த்திருக்காது, தங்கச்சி வந்து விளையாடவும் அண்ணனுக்கு ஒரே குஷிதான்” என்றாள் கிண்டலாக.
“என்ன குஷி?” என்று பிரசன்னா எதிர்கேள்வி கேட்டாலும் அவனின் அகத்தில் சாரல் அடிக்கவே செய்தது. அதனைக் காட்டாமல் மறைத்தான்.
“ஒன்னுமில்ல, உங்க இரண்டு பேர் கிட்டவும் பேச முடியுமா?” என்று வர்ணவி வாயை மூடிக்கொள்ள,
“இப்படி சொல்லிட்டு எங்க பின்னாடிதான் சுத்துற வர்ணா நீ” என்றான் பிரசன்னாவும் சிரிப்புடன்.
அமிழ்தா உறங்கிவிட ஜெய்ந்த் உறங்காமல் அறைக்குள் அவனது புதிய பேட்டரி காரினுள் உட்கார்ந்து ஓட்டிக்கொண்டு இருக்க,
“ஜனா, அவனை வந்து தூங்க சொல்லுங்க. அப்புறம் அடிச்சிட்டேன் சொல்லக் கூடாது” என்றாள் மலர்.
“ஜெய், அம்மா சொல்றாங்க இல்ல. வந்து தூங்குடா” என்று மகனை அழைக்க, அவன் கேட்கவே இல்லை.
ஜனா பொறுமையாய் இருந்தவன், காரில் உட்கார்ந்திருந்த மகனை அப்படியே தூக்கி வந்து மெத்தையில் படுக்க வைக்க அவனோ அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.
எப்படியோ கெஞ்சி கொஞ்சி மகனை உறங்க வைத்து மனைவியைப் பார்க்க,
“பரவாயில்ல ஜனா, எல்லாரையும் இந்த வீட்ல சமாளிக்க முடிஞ்ச ஒரே ஆள் நீங்கதான்” என்று மலர் பாராட்டினாள்.
“உன்னையும் உன் உடன்பிறப்பையும் சமாளிச்சா போதும்டி, எத்தனை பேரை வேணும்னாலும் சமாளிக்கலாம்” என்றவனின் தோளில் அடித்தவளை தோளோடு சேர்த்தணைத்தணைத்தான்.
“அப்புறம் இந்தியா பாகிஸ்தானுக்கு இன்னிக்கு என்ன ப்ராப்ளம்?” என்று மலரிடம் கேட்க மலர் நடந்ததை சொல்ல,
“அமிழ்து நல்லாதான் விளையாடிருப்பா, உங்கண்ணன் விட்டுக்கொடுத்துதான் என் பொண்ணு ஜெயிக்கணுமா என்ன? என் குழந்தையை ஏமாத்தி நீ அவனுக்கு ஹெல்ப் பண்ணியிருக்க. நான் இருந்திருந்தா..”
“இருந்திருந்தா?” என்று மலர் இழுக்க,
“என் பொண்ணை வின் பண்ண வச்சிருப்பேன்” என்றான் ஜனா.
“அய்யே! ரொம்ப ஆசைதான். அவனுக்கு அமிழ்தா ஜெயிக்கணும்னு விட்டுக்கொடுத்தான், உங்களை எல்லாம் ஈசியா ஜெயிச்சிடுவான். செஸ் விளையாடுறதுல நீங்க அவன் முன்னாடி நிக்க முடியாது, சும்மா ரீல் சுத்த கூடாது” என்றாள் மலர்.
அவனின் மலர் பிரசன்னாவை புகழ்ந்து பேசுகிறாள், கேட்கவே இனித்தது. அண்ணன் தங்கை இருவருக்குமே பாசம் இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
“ரீல் சுத்தல, உன்னை சுத்தவா?” என்ற ஜனா அவள் நெற்றியில் முட்ட மலர் அவனை நெருங்கிப்படுத்துக் கொண்டாள்.
“அழகா இருக்க மலர்” என்றவன் கண்முகிழின் மேல் மென்மையாய் முத்தம் பதிக்க,
“மஜ்னுவோட கண்ணுக்கு லைலா எப்பவும் அழகுதான்” அவன் சொல்வதை அவள் சொல்ல, அதில் சத்தமாய் சிரித்தவனின் வாயை மூடினாள்.
காதலுடன் இப்போது புரிதலும் அதிகமாயிருக்க ஜனாவுக்கு அவனின் மலர் மலர்வனம்தான். மலருக்கு அவனின் ஜனா அகமாய்! ஜகமாய்!
✅ End of Episode 35
நலமுடன் காதல்
Very nice story ma.