Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 34

காளிதாஸன் 34

கார்த்தி, காளிதாஸன் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் ஆகி விட்டது. சட்டசபை கூட்டம் அன்றுடன் நிறைவு பெற்றிருந்தது. அதனால் காளிதாஸன் அரசியல் வேலை எல்லாம் ஒதுக்கி, அவன் அலுவலக வேலையை வீட்டில் இருக்கும் அறையில் பார்த்தான். ராஜீவ் அவனைப் பார்க்க வந்தான்.

“வா ராஜீவ்!” என்று வரவேற்றவன்,

“கார்த்தி வீட்லதான் இருக்காப்பா, நீ பேசிட்டு இரு. ஆபிஸ் வொர்க் கொஞ்சம் இருக்கு முடிச்சிட்டு ஜாய்ன் பண்றேன்” என்றான் காளிதாஸன்.

ராஜீவ், அப்பா இறந்த பின் அவனுக்கென அவர் எழுதிய வீட்டில் அம்மாவுடன், தனியாக இருக்கிறான். செல்வா, அவர்கள் வீட்டில் இருந்தான். விவாகரத்துக்கு ஏற்பாடு செய்து விட்டனர் கயலின் வீட்டினர். கயல், கணவனை மன்னிக்கத் தயாராகவே இல்லை, அதுவே செல்வாவிற்குப் பெரிய அடி! அப்போதும் கூட அவன் திருந்தவில்லை. இன்னும் அதே போல் சுற்றினான்.

கட்சியில் தன் இடத்தைத் தக்கவைக்க முயன்றான். அதற்காக நிறைய நிறைய செலவுகள். ஃபினான்ஸ் செல்வாவின் பொறுப்பு, அவனின் பொறுப்பில்லாத நடவடிக்கையால் அது மோசமான நிலைமைக்குச் சென்று கொண்டிருந்தது.

“உங்ககிட்டதான் மாமா பேசணும்” என்றவன்,

“முன்னாடியே சொல்லியிருக்கேன், அப்பா சொத்து பிரிச்சதாலதான் அவருக்கும், செல்வாவுக்கும் சண்டை.. ப்ச். அக்கா பெயர்ல லெதர் ஃபாக்டரியில ஷேர்ஸ் இருக்கு மாமா. நெக்ஸ்ட் வீக் போர்ட் மீட்டிங் இருக்கு, அவளும் வரணும்” என்றான்.

“அதை கார்த்திட்ட சொல்லலாமே ராஜீவ், வை மீ?” என்றான் மேஜை மீது கைகளை ஊன்றி.

“அவ நீங்க சொன்னா கேட்பா…” என்று ராஜீவ் இழுக்க,

“நோ ராஜீவ்! எப்பவும் கார்த்தியோட முடிவுகளை நான் எடுக்கிறதில்லை.. பட்..” என்று நிறுத்தியவன் சிறு இடைவெளிக்குப் பிறகு,

“கார்த்தியோட ஷேர்ஸ் அவளுக்கு வேண்டாம். நீ, உன் பெயருக்கு மாத்திக்கோ, இல்லை என்னவும் செய்” என்றதும் ராஜீவ் எழுந்து விட்டான்.

“மாமா?! உங்க எண்ணம் புரியுது. ஆனா, இது அக்காவுக்கு நியாயமா சேர வேண்டியது. அப்பா, அவ பெயர்லதான் எழுதினார். கூடவே, அவளோட உழைப்பு இதுல இருக்கு” என்ற ராஜீவின் பேச்சில் காளிதாஸன் மறுப்பாகத் தலையசைத்தான்.

“நோ ராஜீவ்! அநியாயமா சேர்த்த சொத்துல என்ன நியாயமான பங்கு இருக்கப் போகுது? I may sound rude to you! பட் நோ சாய்ஸ் மேன். காளிதாஸ் மனைவி மட்டும்தான் கார்த்தி. என் மனைவிக்குத் தேவையான எல்லாம் நானே செய்வேன். ஆஃப்கோர்ஸ் ஃபினான்ஸியலி உங்க வீடு அளவு என்னால முடியாது. தேவையுமில்லை, கார்த்தி எங்கிட்ட அதெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டா” என்று அவன் முடிவில் காளிதாஸ் உறுதியாக இருந்தான்.

“உன்னோட உறவு கூட நியாயமானவன்றதால மட்டும்தான் ராஜீவ், புரிஞ்சிக்கோ” என்று காளிதாஸ் சொல்ல ராஜீவுக்குப் புரிந்தது.

“ஓகே மாமா! அப்பா சொத்து வேண்டாம். அம்மாவோட அப்பா கொடுத்த டெக்ஸ்டைல்ஸ் இருக்கு. அது அக்கா பெயர்ல இருக்கு” என்று சொல்ல, காளிதாஸனுக்குப் பிடிக்கவில்லை.

“ராஜீவ்! எனக்குக் கார்த்தி மட்டும் போதும். இதுல கூட எனக்கு இஷ்டமில்லை, உனக்கு வேணும்னா கார்த்தியோட முடிவைக் கேட்டுக்கோ” என்றான்.

ராஜீவ் அமைதியாக நிற்க, “ஹே! மேன் போ. நான் கோபமா எல்லாம் சொல்லல. இது என் முடிவு மட்டும்தான். உங்க அக்கா நீ வந்தது சொன்னா, எதாவது ஸ்பெஷலா செய்வாங்க” என்றான் புன்னகையுடன்.

தன்னை காளிதாஸன் இலகுவாக்க முயல்வது ராஜீவுக்குத் தெரிய,

“ஏன் உங்களுக்கு அக்கா ஸ்பெஷலா செய்றதில்லையா மாமா? நம்ப முடியலயே” என்றான் அவனும் புன்னகை முகமாகவே.

“ஸ்பெஷல் தானே நல்லா செய்வாங்க மேடம்” என்றவன்,

“கொஞ்சம் வொர்க் இருக்கு, நீ வீட்டுக்குள்ள போ ராஜீவ். வில் ஜாய்ன் சூன்” என்று சொல்லவும், ராஜீவ் ஹாலுக்குள் நுழைந்தான். கார்த்தி கிச்சனில் இருந்தாள்.

‘இரவில் ஒன்றே ஒன்று
மனத்தில் சென்றதென தேடி
உன்னை தேடி’  என்று ஹாலில் பாடல் ஓடியது அலெக்ஸாவின் மூலம்.

பாட்டை ஹம் செய்தபடி கார்த்தி சமையலில் மும்முரமாக இருந்தாள்.

“என்ன ஸ்பெஷல்?” என்ற குரலில் திரும்ப, ராஜீவ் நின்றான்.

“டேய்! ராஜா எப்போ வந்த?” என்று கார்த்தி, உற்சாகமாக நலம் விசாரிக்க,

“இப்போதான் மாமா கூட பேசிட்டு இருந்தேன்” என்றான்.

“என்ன காது செய்ற? இது ஆபிஸ் டைம் இல்ல?”

“ஆபிஸ்ல வேலை இல்லை. இருந்தாலும், அவர் வீட்ல இருக்கும்போது நான் ஓபி அடிச்சிருவேன் டா” என்றாள் ரகசியமாக. அதில் ராஜீவ் சிரிக்க,

“என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு? எப்போ வந்தாலும் பாட்டு அதிருதே” என்று ராஜீவ் கேட்க,

“எல்லாம் அவரோட செலெஷன்தான், செமயா வச்சிருப்பார். பழசு புதுசுன்னு. டேய்! என் வீட்டுக்காரர் ட்ரண்டிங்க்ல இருக்க பாட்டெல்லாம் வச்சிருக்கிறார்னு தானே பார்க்கிற?” என்றாள் அவனிடம் கையை நீட்டி. அதில் கத்தி இருக்க,

 “காது! கத்தியை வச்சிட்டு பேசு” என்றான் ராஜீவ் பின்னால் நகர்ந்து.

“ஹாஹா! மறந்துட்டேன்டா!” என்றவள்,

“அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள்.

“நல்லா இருக்காங்க. உன்னைக் கேட்டாங்க, ஒரு தடவ வாக்கா நீ” ராஜீவ் வருந்தி அழைக்க,

“அவங்களை வந்து என்னைப் பார்க்க சொல்லு. எனக்கு ஒன்னும் அவசியமில்லை” என்றாள் கார்த்தி பட்டென.

“சரி, என்ன விஷயமா வந்த? செல்வா ப்ரச்சனை பண்றானா?” என்றவளின் குரலில் காரம்.

லெதர் ஃபாக்டரியில் ராஜீவ், கார்த்தி, விசாலாட்சி, முகில் என  நால்வருக்கும் பங்குகள் கொடுத்தவர், செல்வாவை அதில் சேர்க்கவில்லை. ராஜீவ் அவனை சேர்க்காமல் இருக்க கட்சி ஆட்களை வைத்து குடைச்சல் கொடுத்தான். ராஜீவ், காளிதாஸிடம் சொல்ல, அவன் ஆளுங்கட்சி என்பதால் சுமூகமாக முடித்துக் கொடுத்தான்.

“இல்லை, நெக்ஸ்ட் வீக் லெதர் ஃபாக்டரில போர்ட் மீட்டிங்” என்று சொல்லி அக்காவின் முகம் பார்த்தான்.

கார்த்தியோ, “அப்படியா, சரி” என்றவள் ஒன்றும் கேட்கவில்லை.

“என்ன காது? நம்ம ஃபாக்டரி மீட்டீங், அதுல உனக்கும் ஷேர் உண்டு. நீயும் வரணும்”

“அந்த வீட்டை விட்டு வந்தப்பவே எல்லாத்தையும் உதறிட்டுத்தான் ராஜா வந்தேன் நான்” கார்த்தி அழுத்தமாகச் சொன்னாள்.

“காதுக்கா?” என்று ராஜீவ் அதிர்ந்து பார்க்க,

“லைஃப்ல என்னோட மிகப்பெரிய அஸெட் என் ஹஸ்பண்ட்தான், எனக்கு அவரோட மனைவியா இருக்கிறது மட்டும் போதும்! வேறெதுவும் வேண்டாம், புரிஞ்சதா?” என்று கார்த்தி தம்பியின் முகம் பார்க்க,

“எனக்குப் புரியுது. லெதர் ஃபாக்டரி வேண்டாம், பட் தாத்தா கொடுத்த டெக்ஸ்டைல்ஸ்கா.? உனக்குன்னு ஏதாவது இருக்கணும்ல” என்றான் தயக்கத்துடன்.

“எனக்குன்னு என் விட்டுக்கார் இருக்கார், உங்களவு பெருசா இல்லைனாலும் எங்களுக்கும் கம்பெனி இருக்கு” என்றாள் கார்த்தி.

“ஏன் காது பிரிச்சுப் பேசுற?” ராஜீவ் தாங்க முடியாமல் பேச,

“ப்ளீஸ் ராஜா! எதுவும் வேண்டாம்னு சொன்னா புரிஞ்சிக்கோ. இது பத்தி பேசாத” என்று சொல்லும் போதே காளிதாஸ் வந்தான்.

“என்ன கண்ணா? இன்னும் முடிக்கலையா? ராஜீவ்கு என்ன செஞ்ச ஸ்பெஷலா?” என்று காளிதாஸ் கேட்க, கார்த்தியோ படபடவென்று கணவனிடம் எல்லாம் சொன்னவள்,

“நீங்க நம்ம லாயரை வர சொல்லி இந்த ஷேர்ஸ் மாத்த என்ன ப்ரோசிஜர் கேட்டு வைங்க, நான் இவனுக்கு மாத்திடுறேன்” என்றதும், ராஜீவின் முகம் சுருங்கினாலும் மறுக்கவில்லை. அவன் பார்த்து வளர்ந்த அக்கா இல்லை இவள்.

இவள் காளிதாஸன் மனைவி! 

எப்படியோ சந்தோஷமாக இருந்தால் சரியென நினைத்தான்.

காளிதாஸோ, மனைவியை முறைத்தவன், “சாப்பிடுற நேரமாச்சு, இப்ப இதை பேசணுமா? அவனுக்குப் பிடிச்சதா, செஞ்சியா இல்லையா கண்ணா?” என்று கேட்க, ராஜீவ் உடனே,

“எங்கக்கா கண்ணுக்கு நானெல்லாம் தெரிய மாட்டேன் மாமா, அந்தம்மாவுக்கு நீங்க மட்டும் போதுமாம்” என்றான் கிண்டலாக. உள்ளே கொஞ்சம் வருத்தம் இருந்தது.

“அப்படியெல்லாம் இல்லை, நீ வா சாப்பிடலாம்” என்றான் சிரிப்புடன்.

மூவருமாக உண்டு முடித்த பின், கடைசியாக கார்த்தியிடம் கேட்க, அவள் பதிலில் மாற்றமில்லை.

“மாமா அப்பவே சொன்னார், நீ இதைத்தான் சொல்வன்னு” என்றான் அலுத்துக் கொண்டு.

காளிதாஸனிடம், “நீங்க அக்காவோட வீட்டுக்கு வாங்க மாமா, ப்ளீஸ். அம்மா உங்களைப் பார்த்தா சந்தோஷப்படுவாங்க. இவளைக் கூப்பிட்டா ரொம்ப பண்றா” என்றான், அக்காவை முறைத்துக் கொண்டு.

“ஏன், அவங்களுக்கு அக்கறை இருந்தா என்னைப் பார்க்கட்டும்”

“நான் மாமாவைக் கேட்கிறேன், உன்னை இல்லை. நீங்க சொன்னா அக்கா கேட்பா மாமா” என்றான் ராஜீவ்.

“அப்படின்னு யார் சொன்னா? அவர் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.

“அம்மா பார்க்கணும் சொல்றியே, அவங்களுக்கு செல்வா செஞ்சதெல்லாம் ஷாக்! கூடவே அண்ணி, முகிலோட சிங்கப்பூர் போயிட்டாங்க. அவங்க அண்ணன் வீட்டோட இருக்க. அப்பாவும் இல்லை, அவங்க பேசுறது கூட இல்லை” என்றான் உணர்ச்சிவசப்பட்டு.

“நான் கார்த்தியை அனுப்பி வைக்கிறேன் ராஜீவ்” என்ற கணவனை முறைத்தாள். அதிலே அவன் வரமாட்டான் என்று தெரிந்தது கார்த்திக்கு. ராஜீவ் கிளம்பி விட,

“உனக்கு அம்மாவைப் பார்க்கணும்னா போய்ட்டு வா கண்ணா, என்னைப் பார்க்காத” என்றான் காளிதாஸன். அவனால் என்றுமே அவர்கள் வீட்டோடு ஒட்ட முடியாது. விசாலாட்சி நல்லவராக இருக்கலாம். ஆனால், மாமியார் வீடு சென்று உறவாடும் எண்ணமெல்லாம் எள்ளளவுமில்லை.

“இல்லை, எனக்குத் தோனல. விடுங்க” என்றாலும், கார்த்தி உண்மையில் கணவனுக்காகப் பார்த்தாள்.

“நீங்க லாயர்கிட்ட பேசிட்டு சொல்லுங்க. ஷேர்ஸ் ராஜீவ்கு மாத்திடுறேன் நான்” என்றவள்,

“இந்த செல்வாவை ஏன் வெளியே விட்டு வச்சிருக்கீங்க? அவன் எவ்வளவு ப்ரச்சனை பண்றான்? பாவம் அண்ணி, நாட்டை விட்டு போற அளவு பண்ணிட்டான். ஆளுங்கட்சியா இருந்துட்டு இது கூட செய்யலன்னா எப்படி?” என்று கேட்டாள்.

“ஆளுங்கட்சின்றதாலதான் யோசிச்சு செய்யணும். எது செஞ்சாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி சொல்லிடுவாங்க. சரியான நேரத்துல அவனைக் கவனிக்கிறேன்” என்றான் காளிதாஸன் உறுதியாக.

கணவன் இல்லாத நேரமாக தம்பிக்கு அழைத்த கார்த்தி,

“உனக்கு அறிவிருக்கா டா ராஜீவ்?” என்று திட்டினாள்.

“என்னாச்சு காது? நான் என்ன செஞ்சேன்?” என்று ராஜீவ் பதறி கேட்க,

“எதுக்காக நீ என்னை அம்மாவைப் பார்க்க வர சொன்ன? இதுல அவரை வேற கூப்பிடுற?” என்று கத்த,

“ஏன் அதுல என்ன தப்பு? மாமா எதாவது சொன்னாரா?” என்று கேட்டான்.

“அவர் ஒன்னும் சொல்ல மாட்டார். ஆனா, அவர் எப்பவும் நம்ம வீட்டு மாப்பிள்ளையா வர மாட்டார். அதை உன் மனசுல பதிய வை”

“அவர் வந்தாதானே நீ வருவ, அதான் சொன்னேன். ஏன் நான் அவர் மச்சான் தானே? எனக்குக் கூப்பிட உரிமையில்லையா? நான் என்ன தப்பு செஞ்சேன்” என்று ராஜீவ் உணர்ச்சி வசப்பட்டான்.

“இதான் உன் பிரச்சனை! அவங்க இடத்துல இருந்தும் யோசிடா, நம்ம அப்பா இறந்தப்ப அவர் நல்லவரோ, கெட்டவரோ மனசு கஷ்டமா இருந்ததுதானே? அப்படியிருக்கும்போது அவரோட அப்பா இறக்கும்போது அவருக்குப் பதினைஞ்சு வயசு. அவர் அப்பா சாக காரணமா இருந்த வீட்டோட எப்படி அவரால உறவு கொண்டாட முடியும்?”

“அவர் நல்லவர்தான், அதுக்காக அவரோட உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்கணும் ராஜா. அவங்க அப்பாவைப் பத்தி பேசும்போது அவர் குழந்தை மாதிரி ஆகிடுவார்டா. அப்படி இருக்கும்போது என்னால எப்படி குற்றவுணர்வு இல்லாம நம்ம வீட்டுக்கு வர முடியும்? உன்னை அவர் வேற மாதிரியா நடத்துறாரு? அன்பா இருக்கார்தானே. அம்மாவுக்கு வேணும்னா இங்க அழைச்சிட்டு வா, நான் பார்த்துக்கிறேன். நீ எப்ப வேணும்னாலும் வா. அவரை விட்டு நான் எப்பவும் வரமாட்டேன்”

“எத்தனையோ பொண்ணுங்க அவங்க புருஷனுக்கு அது பிடிக்காது இது பிடிக்காதுன்னு நிறைய விட்டுக் கொடுத்துப் போவாங்க, அப்படி இருக்கும்போது இப்படி ஒருத்தருக்காக நான் இந்தளவு விட்டுக் கொடுக்கலனா எப்படிடா?” என்று அக்கா கேட்க, அதில் இருந்த நியாயம் புரிந்தது.

“இல்லைக்கா, மாமா  நிஜமா நல்ல டைப். எங்கிட்ட நல்லா பேசவும் உரிமையா கேட்டுட்டேன்” என்று ராஜீவ் சொல்ல,

“அவரை எனக்குத் தெரியும், அப்படி நிஜமா அவருக்கு இஷ்டம்னா அவரே என்னை அழைச்சிட்டு வருவார். எனக்காகத்தான் என்னைப் போக சொன்னது கூட! அவர் ஒன்னும் உங்களை இங்க வர கூடாது சொல்லலையே? புரிஞ்சிக்கோ ராஜா” என்றாள் கார்த்தி.

“சரிக்கா, இனி கேட்கல. தப்புதான்”

“மாமா ஒன்னு சொன்னார், நீ காளிதாஸ் மனைவி மட்டும்னு. நீயும் ப்ரூவ் பண்ற. நல்ல ஜோடி போ!” என்று சந்தோஷமாக ராஜீவ் சொல்ல,

“ஒன்ஸ் மோர் சொல்லுடா! கேட்க எவ்வளவு நல்லாயிருக்கு” என்ற கார்த்தியின் குரலிலும் சந்தோஷம் மட்டுமே!

✅ End of Episode 34
How did you feel about this episode?
❤️ 6 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Mrs Beena loganathan Reader 1 month ago

காளிதாஸ் மனைவி மட்டும் தான் கார்த்தி....

கேட்க நல்லா இருக்கு இல்ல....❤️🔥🔥🔥🔥🔥🌹🌹🌹
❤️ 2 more...
Kavi Natarajan Reader 1 month ago

💞💞💞💞💞💞💞

❤️ 1 more...
Srichitra Reader 1 month ago

Very nice 

❤️ 1 more...
Roja Saradha Mary Reader 1 month ago

கார்த்தியின் எல்லாம் காளிதாஸ்! காளிதாஸே!

❤️ 1 more...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top