Episode 36
சில மாதங்களுக்குப் பிறகு…
ஹாலில் அலெக்ஸாவின் வழியே பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா
இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே உயிரேஏ.!’
ஜெயச்சந்திரன் குரலில், ஹாலில் காதல் அந்த காலை வேளையில் மிதந்தது. மெல்ல பாடியபடி கையில் இருந்த தன் எட்டு மாத மகள் சக்ரவர்த்தினியைத் தட்டிக் கொடுத்தபடி நடந்தான் காளிதாஸன்.
“ஓஹ், அப்பாவும் பொண்ணும் காலையிலே பாட்டுக் கேட்க ஆரம்பிச்சாச்சா?” என்று கோபத்தில் கேட்டபடி சோஃபாவில் வந்து உட்கார்ந்தாள் கார்த்தி. குழந்தையுடன் காளிதாஸன் மனைவியின் அருகே உட்கார, அவளோ கண்கள் கலங்க,
“தள்ளிப்போங்க நீங்க, உங்க பொண்ணு வந்ததும் என்னை மறந்துட்டீங்க. ஒரு வாரம் கழிச்சு வந்ததும் பொண்ணைத் தூக்கி வச்சுக் கொஞ்சத் தெரியுது. என்னைப் பார்க்க முடியல” என்றாள்.
“கண்ணா! என்னடா நீ? அழாத” என்று சொல்ல, கார்த்திக்கு மனம் என்னவோ போல் இருக்க, அழுகை இன்னும் அதிகமாக மாடியேறினாள். காளிதாஸ், மகளை கீழ் அறையில் இருந்த சிவகாமி அம்மாவிடம் கொடுத்து விட்டு மாடிக்குப் போனான். கார்த்தி உண்டான போதே அவளுக்காக மகன் வீட்டோடு தங்கி விட்டார் அவர்.
கார்த்தி மெத்தையில் படுத்து அழ அவளருகே நெருங்கி மனைவியை மடியில் போட்டுக் கொண்டான் கணவன். கார்த்தியின் மனம் அலைப்பாய்ந்தது, ஒரு இறுக்கம். காரணமின்றி ஒரு அழுகை. சிறிது நேரம் அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டு அழுதவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.
“கண்ணா! இரு” என்று காளிதாஸன், அவள் கையைப் பிடிக்க,
“பாப்பா தேடுவா, கீழே போறேங்க” என்றாள் கார்த்தி.
“பாப்பாவோட அப்பா கூட தேடுறேன், தெரியலையா?” என்றதும் குறைந்த கோபம் எழுந்து விட்டது.
“வந்ததும் என்னை எழுப்பாம, உங்க பொண்ணைத் தானே தேடினீங்க? நான் யாருக்கும் தேவையில்லை” என்றவளுக்குக் கண்ணீர் கொட்ட, மனைவியை அணைத்துக் கொண்டவன்
“நம்ம பொண்ணைத் தூக்கும் போது அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க, ஆனா, பொண்ணோட அம்மாவை அப்படி என் அம்மா முன்னாடி தூக்க முடியாதே, அதான் கண்ணா” என்றான்.
“என்னைத் தூக்கலன்னு நான் கேட்டேனா?” கார்த்தியின் குரலில் எரிச்சல் இருக்க,
“உடம்பு முடியலயா? ஏன் இவ்வளவு கோபம்?” என்று காளிதாஸன் பொறுமையாகக் கேட்டான்.
“யாருமில்லாத மாதிரி இருக்கு, மனசுக்கு என்னவோ கஷ்டமா இருக்குங்க” என்று சொல்ல, மனைவியைத் தன்னை விட்டு தள்ளி நிறுத்தினான்.
“நான் இருக்கும் போது இந்த பேச்சு சரியா?” என்றான் கண்டிப்புடன்.
கார்த்தியின் அம்மா விசாலாட்சி, குழந்தைக்கு மூன்று மாதம் இருக்கும் போதே இறைவனடி சேர்ந்து விட்டார். கார்த்திக்கு அது மிகப் பெரிய பாதிப்பு, உடல் மனம் எல்லாம் சோர்ந்து போனது. அவருக்கு உடல் நிலை சீரில்லாமல் போக கார்த்தி உடனிருந்து பார்த்தாள். ஆனாலும், அம்மாவின் இழப்பு பெரிதுதானே?
“உன்னையே யோசிக்கிறியே, ராஜீவ் பத்தி நினைச்சுப்பார். அம்மா இல்லன்றது கஷ்டம். ஆனா, இருக்கவங்களை நினைச்சுப் பார்க்கணும் கண்ணா” என்றவன், மீண்டும் மனைவியை அருகே இழுத்துக் கொண்டான். கார்த்திக்கு அழுகை வந்தது.
“அழுகையா வருது, சாரி. ரொம்ப நாள் கழிச்சு வந்த உங்ககிட்ட கோபப்பட்டுட்டேன்” கார்த்தி சொல்ல,
“அதெல்லாம் இல்லைடா. குழந்தை வந்தது நமக்கு சந்தோஷம்னாலும் மனசாலும், உடலாலும் உனக்குத்தான் நிறைய மாற்றம். ஐ கேன் understand கண்ணா! வர்த்தினி தூங்க லேட் பண்ணிட்டா அம்மா சொன்னாங்க. அதான், உன்னை நான் காலையில எழுப்பல. இல்லைனா என் பொண்ணுக்கு முன்னாடி உன்னைத் தூக்கிட்டு வந்திருப்பேன்” என்றதும் கார்த்திக்கு புன்னகை வந்தது. அமைதியாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அதற்குள் கீழிருந்து சிவகாமி குரல் கேட்டது. கூடவே மகளின் ராகம்.
“வரு எந்திரிச்சிட்டா போலங்க, நான் போறேன்” என்று கார்த்தி விலகினாள். கார்த்தி பால் கொடுத்தும் குழந்தையின் அழுகை ஓயாமல் இருக்க, காளிதாஸன் கைகளில் மகளை வாங்கினான்.
“ஏன் என் பொண்ணு அழறாங்க, கண்ணம்மாவுக்கு என்னாச்சு?” என்று தட்டிக் கொடுத்தான். அழுகை குறையாமல் இருக்க,
“ஆராரோ! ஆரிரோ!” என்று அவன் தாலாட்டுப் பாடி நடக்க,
“அதே பாடாம அடுத்த லைன் பாடுடா” என்றார் சிவகாமி.
“தெரிஞ்சா பாட மாட்டாங்களாம்மா? அலெக்ஸா ப்ளே சாங்” என்றதும், அலெக்ஸாவில் பாடல் ஒலிக்க அப்போதுதான் சக்ரவர்த்தினியின் அழுகை நின்றது.
“இவரை மாதிரியே பாட்டுக் கேட்டு வருவையும் பழக்கி வச்சிட்டார் அத்த” குறை சொன்னபடி கிச்சன் பக்கம் சென்றாள் கார்த்தி.
அவளுடன் கிச்சன் சென்றவன், “இன்னிக்கு மதியம் நான் லஞ்ச் பண்றேன் கண்ணா, சமைக்கிறவங்களுக்கு லீவ் சொல்லிடு” என்றான்.
“எப்படி தனியா செய்வீங்க?” கார்த்தி கேட்க,
“ஐ வில்! நீ சொல்லிடு” என்றவன் மகளை, மனைவியிடம் கொடுத்து விட்டு, “பாட்டு கேட்டாலே சமத்தா தூங்கிடுறா பாப்பா. நீ ஹால்ல உட்கார வை, தூங்கினதும் ரூமுக்குப் போ” என்று காளிதாஸ் சொல்லவும்,
“உங்க பொண்ணு கேட்கிற பாட்டா அது?” என்று முறைத்தாள் கார்த்தி.
“அவளுக்கு அர்த்தம் தெரியாதுல, ராகம் கேட்டே தூங்கிடுவா. வேணும்னா வேற பாட்டு போடேன் கண்ணா” என்றதும் கார்த்தி, குழந்தையுடன் வெளியே போக,
“அதெல்லாம் பொண்ணுக்குப் பிடிச்ச பாட்டு இல்லை, பொண்ணோட அப்பாவுக்குப் பிடிச்சது” என்றான்.
“ஃபர்ஸ்ட் காலை சாப்பாடு செய்யுங்க” கார்த்தி புன்னகையுடன் உத்தரவிட்டு வந்தாள்.
கணவனிடம் பேசிய பின் மனம் லேசானது. பழைய உற்சாகம் மீள, குழந்தையைக் கொஞ்சினாள்.
பதினொரு மணி போல் கவினும், நித்திலாவும் வீட்டிற்கு வந்தார்கள். சிவகாமியும், கார்த்தியும் வரவேற்றுப் பேச,
“எங்க என் நண்பன்?” என்றபடி கவின் வீட்டைப் பார்க்க,
“கிச்சன்ல இருக்கார் அண்ணா” என்றாள் கார்த்தி. கிச்சன் சென்று பார்க்க காளிதாஸ் காய்கறி வெட்டினான்.
“ஒரு எம்.எல்.ஏவை இப்படி வெங்காயம் வெட்ட விட்டாங்களா?” என்று அதிர்ச்சியில் கவின் கத்த,
“அவர்தான் சமைக்கிறேன் சொன்னார்ணா” கார்த்தி சொல்ல,
“என்னடா தாஸ்? இப்படி ஆகிடுச்சே?” என்ற கவின், அவன் கர்ச்சிஃப் எடுத்து காளிதாஸின் முகத்தில் இருந்த வியர்வைத் துடைத்தான்.
“அவ்வளவு அக்கறை இருந்தா நீ வெட்டுடா வெங்காயத்தை” என்றான் காளிதாஸ். அடுத்த ஐந்து நிமிடத்தில் கவினின் கண்களில் இருந்தும் கண்ணீர் வந்தது.
“ஒரு ஆர்த்தோ டாக்டர ஆனியன் வெட்ட விட்டியே டா, உன் எலும்பை உடைக்கிறேன் இருடா” திட்டினான் கவின்.
“செஞ்சா என்ன குறைஞ்சுப் போற செய் மேன்” தாஸ் அதட்ட,
“லஞ்சுக்குக் கூப்பிட்டேன்னு உன்னை நம்பி வந்தா, லஞ்சே என்னை செய்ய வைக்கிறயே டா”
“இவர் தனியா செய்வேன்னு சொல்லும் போதே நான் யோசிச்சேன்” கார்த்தி இவர்களிடம் கிண்டலாக சொல்ல,
“ஏன் என் ப்ரண்ட் எனக்காக செய்ய மாட்டானா?” கவினை, தாஸ் சீண்ட,
“நித்தியும், உன் ப்ரண்ட் தானே?” மனைவியைக் கோர்த்து விடப் பார்த்தான் டாக்டர்.
“ப்ரண்ட்தான்! நீதானே பெஸ்ட் ப்ரண்ட், அவ செய்ய மாட்டாடா” என்று நித்தியைக் காப்பாற்றினான்.
இப்படியே பேசிக் கொண்டே இருக்க,
நித்திலா, “தாஸ்! மது ஸ்கூல்ல ஏதோ கவிதைப் போட்டியாம், நீ எதாவது நல்ல கவிதை சொல்லேன்” என்றதும், கார்த்திக்கு எண்ணங்களில் வெட்கத்தின் வண்ணம்.
கார்த்தியின் முகம் பார்த்த காளிதாஸூம், “கவிதை தானே? கார்த்திகிட்ட சொல்றேன், அவ அனுப்பி வைப்பா நித்தி” என்றான் கள்ளப் புன்னகையுடன். கணவனின் பேச்சில் தவித்தவள், வெளியே வந்து விட்டாள்.
சிறிது நேரத்தில் ராஜீவ் வந்தான்.
“டேய் வரேன்னு சொல்லவே இல்லை. உன்னை நினைச்சிட்டே இருந்தேன்” கார்த்தி கேட்க,
“மாமா வர சொன்னாங்க, உங்கிட்ட சொல்லலையா?” என்று கேட்க, கணவனை எண்ணி பெருமிதம் அவளிடம். எல்லாரும் ஒன்றாய்ப் பேசிக் கொண்டு இருக்க மெல்ல நழுவி கிச்சன் சென்ற கார்த்தி,
“தேங்க்ஸ்!” என்று காளிதாஸனின் முதுகைக் கட்டிக் கொண்டாள்.
“கண்ணா, யாராவது வருவாங்க. தள்ளிப் போ” காளிதாஸன் மனைவியின் கையை விலக்க,
“இவ்வளவு நேரம் என்னை சீண்டினப்ப தெரியலயா?” கேட்டபடி இன்னும் இறுக்கிக் கொள்ள,
“இப்படி பண்ணினா அப்புறம் நீ வேற காளிதாஸ் பார்ப்ப” செல்லமாய் மிரட்டினான்.
“எல்லாம் நான் பார்த்தாச்சு” என்றவள் முகத்தை முதுகில் இருந்து எடுக்கவில்லை.
“தேங்க்ஸ் எதுக்கு?”
“ராஜிவைக் கூப்பிடதுக்கு, எனக்குக் கூட தோனல”
“யாருக்குத் தோனினா என்ன? ராஜீவை எனக்கும் பிடிக்கும், அதுக்கெல்லாம் தேங்க்ஸ் வேண்டாம்” என்ற கணவன் மீதான காதலும், மரியாதையும் கார்த்திக்கு இன்னும் கூடித்தான் போனது.
***********
PREORDERS ARE LIVE! GET YOUR COPIES SOON!!
அன்பான வாசகர்களுக்கு வணக்கம்!
உலா பதிப்பகத்தின் முதல் வெளியீடான எழுத்தாளர்
பவித்ரா நாராயணனின் ‘நனையாத மழை நாம்’
நூலின் முன்பதிவு தொடங்கியுள்ளது.
📚 நூல்: நனையாத மழை நாம்
💰 விலை: ₹350
வெளியீடு: அக்டோபர்
நூலை முன்பதிவு செய்ய விரும்பும் வாசகர்கள், கீழ்க்கண்ட விவரங்களைப் பகிரவும்:
பெயர்:
முழு முகவரி:
தேவையான பிரதிகளின் எண்ணிக்கை:
தொடர்பு எண்(வாட்ஸப் எண்):
உங்கள் முன்பதிவு விவரங்கள் பெறப்பட்டதும் உறுதி செய்யப்படும்.
8610841651 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்.
(குறுஞ்செய்தி மட்டும்)
ulaapathippagam@gmail.com
mailmepavithranarayanan@gmail.com
என்கின்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலம் தெரிவிக்கலாம்.
அன்புடன்,
உலா பதிப்பகம்.
✅ End of Episode 36
Very nice
கவிதை தானே....எங்க