Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 17

காதல் 17

“ஜனா!” என்று மலர் அதிர்வில் குரல் கொடுக்க,

“நான் பாஸ்வர்ட் சொன்னேன் பேபி” என்றவனின் குரலில் குதூகலம் இருக்க, அவள் பக்கம் அமைதி.

“மலர் என்னோட பாஸ்வர்ட் உங்கிட்ட சொல்லிட்டேன், உன்னோட பாஸ்வர்ட் என்னன்னு சொல்லேன், பெயர்ல சுதந்திரம் வச்சிட்டு மனசைப் பூட்டி வச்சா எப்படி?” என்றான் ஏக்கமாக.

“நான் எதையும் பூட்டி வைக்கல, கடல் கூட ரொம்ப சுதந்திரமானது, விசாலமானதுதான். கடல் அதோட இஷ்டப்படிதான் பரந்து விரிந்து இருக்கும், அது இஷ்டப்பட்டாதான் கரையைத் தொடும்”

“சுதந்திரமான கடலை யாரும் இங்க அடக்கப்பார்க்கல, கடலோட ஆறாய் கலக்கத்தான் நினைக்கிறாங்க, நீ கடலாவே இருந்துக்கோ, நான் ஆறாய் இருந்துக்கிறேன்” என்று அவளுக்கு ஈடுகொடுத்து அவன் பேசினாள்.

“எனக்குப் பாஸ்வர்ட் வேணும் அதான் கூப்பிட்டேன், தேங்க் யூ” என்று அவள் வைக்கப் போக,

“நோ! வைக்காத. இன்னிக்கே நம்ம இதைப் பேசி ஆகனும். நீ லைப்ரரி வர, உனக்காக நான் வெயிட் பண்ணுவேன். நாலு மணிக்கு நீ அங்க இருக்க” என்றான் அதிகாரமாக.

“நீங்க என்னை என்ன நினைச்சீங்க ஜனா? வருவோட அண்ணான்னு பார்க்கிறேன். இந்த மாதிரி எல்லாம் மிரட்டினா நான் வந்துடுவேனு நீங்க நினைக்கிறீங்களா? எதுனாலும் என்னோட இஷ்டம்தான். உங்க அதிகாரமெல்லாம் எங்கிட்ட நடக்காது” என்றாள் அவனை விடவும் அதிகாரமாக.

“அப்போ எப்படி பேசினா நீ வருவன்னு சொல்லு” என்றான் அவன் விடாது.

“இப்படி பேசினா நான் கண்டிப்பா வர மாட்டேன்” என்றவளிடம் எப்படி பேச வேண்டும் என்றே ஜனாவிற்குத் தெரியவில்லை. இருந்தும்,

“பேபி, நிஜமா உன்னை எப்படி கரெக்ட் பண்றதுன்னு எனக்குத் தெரியல, நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற. அட்லீஸ்ட் என் மனசுல இருக்கறதை உங்கிட்ட சொல்லணும் மலர். என்னை உனக்குப் பெர்சனலா இரண்டு வருஷமா தெரியும்தானே? உனக்குப் பிடிக்கலனா நான் உன்னை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன். பட் ஒரு தடவை இன்னிக்கு மட்டும் வா ப்ளீஸ்” என்றான் பொறுமையாக.

அவனின் பேச்சை விடவும் அந்த பேச்சின் பாங்கு நன்றாய் வேலை செய்ய, அவன் பக்கமும் ஒரு நியாயம் இருக்க,

“நான் வரேன்” என்று சொன்ன மலர் அவன் சொன்னது போலவே அவனுக்கு முன்னே போய் காத்திருந்தாள். ஜனா மலரிடம்,

“ப்ரஸ்ட் தேங்க்ஸ் வந்ததுக்கு. எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும் மலர், நீ என்னோட மனைவியா வந்தாலும் ஓகே இல்ல நான் உன்னோட கணவனா வந்தாலும் எனக்கு ஓகே. எனக்குத் தெரியும் நீ வர்ணவியை விடவும் பத்து மாசம் கிட்ட சின்னப்பொண்ணு, உன் மனசைக் கலைக்கக் கூடாது என்னைக் கட்டுப்படுத்திதான் இருந்தேன். அக்சுவலி அன்னிக்கு நான் காதல் பத்தியெல்லாம் பேச நினைக்கல. என்னையும் மீறி வந்த வார்த்தைகள் அது. நீ கூட இருக்கும்போது எல்லாமே எனக்கு இருக்க மாதிரி ஒரு முழுமையான உணர்வு” என்றான்.

மலரோ “நான் உங்களை அப்படியெல்லாம் நினைக்கல ஜனா, நான் உங்களை வர்ணவி அண்ணாவாதான் பார்க்கிறேன்” என்றதும் வாய்விட்டு சிரித்தான் ஜனா.

“எஸ்! ஆப்வியஸ்லி பேபி! நான் வர்ணவி அண்ணாதான். உனக்கு அண்ணா இல்லை. நீ என்னை அப்படி பார்க்கவுமில்லைன்னு எனக்குத் தெரியும், நான் யாருன்னு தெரியும் முன்னாடியே நீ என்னை சைட் அடிச்ச கதை கூட எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட மலருக்கு வர்ணவி மீது அக்கணம் கோபம் வந்தாலும், ஜனா நினைத்தது போல் அவள் அசைந்தெல்லாம் கொடுக்கவில்லை.

“ஆமா சைட் அடிச்சேன், அதுக்கென்ன இப்போ?” என்று எகிறியவள்,

“இப்பவும் எனக்கு உங்களைப் பிடிக்கும்தான், அதுக்காகப் பிடிச்சவங்க எல்லாரையும் கட்டிக்க முடியுமா? எனக்கு ஹ்ரித்திக் ரோஷன், மாதவன் கூட ரொம்ப பிடிக்கும், உங்களுக்கு முன்னாடியே அவங்களைத் தான் சைட் அடிச்சேன், அவங்களைக் கட்டிக்க முடியுமா? க்ரஷுக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாது உனக்கு?” என்று மரியாதையெல்லாம் விட்டு அவனைத் திட்டினாள்.

“ஹாஹா, மாதவன், ஹ்ரித்திக் ரோஷன் எல்லாம் கட்டனும்னா அவங்க மனைவி ஒத்துக்கனும் டி ஹாஹா” என்று சிரிக்க, மலர் அவனைத் தீயாய் முறைத்தாள்.

“ராங்கி தான் டி நீ !” என்று அவள் முகம் பார்த்து ரசனையாய் சொன்னவன்,

“எப்படியும் உங்கப்பா பார்க்கிற ஒரு பையனை கட்டிக்கப் போற, அது ஏன் நானா இருக்க கூடாது? உங்க வீட்ல லவ் மேரேஜ்னா ஒத்துக்க மாட்டாங்களா?” என்று அவன் விளையாட்டை விட்டு கேட்டான்.

“அதெல்லாம் ஒத்துப்பாங்க. நான் ஒன்னும் எங்கப்பா பார்க்கிறவரை எல்லாம் கட்டிக்க மாட்டேன், எனக்குப் பிடிச்சாதான் கட்டிப்பேன்”

“அப்போ உனக்குத் தான் என்னைப் பிடிக்குமே” என்று உடனே அவனிடமிருந்து பதில் வந்தது.

“ஜனா ப்ளீஸ்! நீங்க என்னை விட பெரியவங்க. இப்படி லூசு மாதிரி உளறாதீங்க. காதல்ன்றது நீங்க சொன்ன மாதிரி கவிதையில முடியுற விஷயமில்லை, காதல் எல்லாம் கவிதைக்கும் கதைக்கும்தான் நல்லா இருக்கும். ரியாலிட்டில கஷ்டம். இப்போ என்ன உங்களுக்கு? நீங்க சொன்ன மாதிரியே நானும் உண்மையே பேசிடவா? எனக்கு உங்களைப் பிடிக்கும், ஆனா சத்தியமா கல்யாணம் செய்யணும்னு எல்லாம் நான் இப்பவரைக்கும் நினைச்சது இல்லை. உங்களை அட்மையர் பண்றேன் அவ்வளவுதான். எனக்கு ரஜினி பிடிக்கும், தோனி பிடிக்கும் அப்படி ஜனாவையும் பிடிக்கும்”

“நம்ம இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி ரசனை, சில சமயம் வேறையா இருந்தாலும் ஒருத்தர் ரசனையை இன்னொருத்தர் ரசிக்கிறோம், மதிக்கிறோம். கடல் மாதிரிதான் காதலும், கரையில நின்னு ரசிக்க அழகா இருக்கும். ஆனா தாகம் எடுத்தா அந்த தண்ணியைக் குடிக்க முடியுமா? அதுமாதிரி அடுத்தவங்க காதலிச்சா பார்த்து ரசிக்கலாம். சும்மா சைட் அடிச்சிட்டு ஜாலியா போயிடணும், என்னால லவ் பண்ணி ஸ்டரெஸ் எல்லாம் ஏத்திக்க முடியாது” என்றாள் தெளிவாக.

அந்த தெளிவும் கூட தெள்ளிதினாய் விளங்க இன்னும் இன்னும் அவள் பக்கம் ஈர்க்கப்பட்டான் ஜனா.

“மலரே! இப்படி தெளிவா பேசுற பொண்ணை எந்த மடையனாச்சும் விடுவானா சொல்லு? நீ ரொம்ப புத்திசாலி மலர் அண்ட் ஒரு உண்மையான புத்திசாலி இன்னொரு புத்திசாலியைக் கண்டுபிடிச்சிடுவான். நானும் அப்படிதான், என்ன ஸ்டெரெஸ் ஆகப்போகுதுன்னு நீ நினைக்கிற சொல்லேன், கல்யாணம் பண்ணினா பொறுப்பு அதிகமாகும், அப்போ கண்டிப்பா டென்ஷன் வரத்தான் செய்யும்”

“ஜனா நீங்க புரியாம பேசாதீங்க, கல்யாணம்னா நம்ம இரண்டு பேர் மட்டும் சேரப்போற விஷயமில்லை, இரண்டு ஃபேமிலி சம்மந்தப்பட்டது. நாங்க மிடில் க்ளால், உங்க ஸ்டேட்டஸ் எனக்குத் தெரியும். ஸோ நமக்குள்ள சரிவராது. வரு சொல்லியிருக்கா உங்க தாத்தா, பாட்டியெல்லாம் எப்படின்னு. எங்களுக்கு சமமான இடத்துல சம்பந்தம் வச்சாதான் எங்களால சகஜமா இருக்க முடியும், பெரிய இடத்துல பெருமைக்கு சம்மந்தம் வச்சிட்டு என்னால எல்லாம் பணிஞ்சுப் போக முடியாது”

‘வீட்டில வில்லியை வச்சிட்டு இவளைப் பேசி என்னவாகப்போகுது’ என்று தங்கையை மனத்தினுள் திட்டியவன், மலரிடம்,

“உன் வயசுக்கு எவ்வளவு யோசிக்கிற நீ? அண்ட் எவ்வளவு பேசுற?” என்றிட,

“அந்த பொண்ணுக்கிட்டதான் சார் நீங்க லவ் சொல்லியிருக்கீங்க?” என்றாள் மலர் நக்கலாக.

“அந்த காதல் கூட இந்த பொண்ணு நான் சொல்லாம புரிஞ்சிக்கிட்டா, இப்படி ஒரு பொண்ணு எனக்கு வேணுமே, இன்னும் அந்தஸ்து கௌரவம்னு ஏன் உளறுற நீ? இப்போ கடைசியா உன் முடிவு என்ன?”

“முடியாதுன்றதுதான் முடிவு” என்று பட்டென்று சொல்லவும்,

“ஓகே டன்!” என்று அவனும் பட்டென்று ஒத்துக்கொள்ள, மலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

அடுத்த வந்த நாட்களில் ஜனா மலரை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அவளை நூலகத்தில் கண்டாலும் கூட தலையசைப்புடன் கடந்துவிடுவான். ஒரு அதிகப்பார்வையோ செயலோ ஒன்றுமே இல்லாமல் இருக்க, மலருக்கு இவன் காதலின் காலம் அவ்வளவுதானா? என்று கூட தோன்றியது.

இப்போது மலரும் வர்ணவியும் நான்காவது ஆண்டில் இருந்தனர். வர்ணவி அண்ணனின் காதல் தனக்குத் தெரியுமென்று மலரிடம் காட்டிக்கொள்ளவில்லை. ஜனாவை விடவும் அவளிடம் எதிர்ப்பார்ப்புகள் அதிகம் இருந்தன. அப்படியே நாட்கள் நகர ஒரு நாள் மலராகவே ஜனாவின் எண்ணிற்கு அழைத்தாள். புது எண்ணாக இருக்கவும் யோசித்தபடியே ஜனார்த்தன் எடுக்க

“நான் மலர் பேசுறேன் ஜனா, எப்படி இருக்கீங்க?” என்று சகஜமாக உரையாடினாள்.

“நல்லா இருக்கேன். என்ன புது நம்பர்? உன் பாட்டி நம்பர் மாத்திட்டாங்களா?”

“இல்ல இல்ல என்னோட நம்பர், போன் வாங்கிட்டேன்” என்றாள்.

“என்ன விஷயம்?”

“அது வர்ணவிக்கு நெக்ஸ்ட் வீக் பர்த்டே வருதுல, நாங்க எல்லாம் அவளுக்கு சர்ப்பரைஸா கேக் கட் பண்ண ப்ளான் பண்ணியிருக்கோம். அவளை என்ன சொல்லி வெளியே கூப்பிடுறதுன்னு தெரியல, நாங்க கூப்பிட்டா கண்டுபிடிச்சிடுவா. நீங்க அவளை நாங்க சொல்ற இடத்துக்கு அழைச்சிட்டு வரீங்களா?” என்று கேட்டதும் ஜனாவிற்கு சுறுசுறுவென ஏறியது. இவளுக்கு எப்பவும் போஸ்ட் மேன் வேலைப் பார்க்கத்தான் நானா? என்று எரிச்சல் மிக அமைதியாக இருந்தான்.

“ஜனா?” என்று அவள் அழைக்க, மலர் கேட்டு மறுக்க முடியாமல்,

“அழைச்சிட்டு வரேன்” என்றான். அவர்கள் சொன்ன இடத்திற்கு தங்கையை அழைத்துப் போனான். ஹோட்டலில் வர்ணவியை இறக்கிவிட்டவன் மீண்டும் அவள் அழைக்கும்போது போக, வர்ணவிக்கு மலரை எப்படியாவது ஜனாவுடன் சேர்க்க ஆசை. அதனால் அவர்கள் பேசட்டும் என்று நினைத்தவள் மலரைத் தங்களுடன் வரக் கட்டாயப்படுத்தினாள். மலர் மறுக்க, வர்ணவி பிடிவாதம் பிடிக்க பார்த்த ஜனாவிற்குப் பற்றிக்கொண்டு வர,

“உன் ப்ரண்டு நம்ம அவளைக் கடத்திட்டுப் போய்டுவோமோன்னு பயப்படுறா போல வரு, நீ வா போகலாம்” என்று நக்கல் செய்தான்.

“அண்ணாவை டென்ஷன் பண்ற நீ, ரொம்ப பண்ற பக்கீ நீ “ என்று வர்ணவி கோபிக்க, அது பிடிக்காமல் மலரும் அவர்களுடன் போக, முதலில் வர்ணவியை வீட்டில் இறக்கிவிட்டவன் அதன்பின் மலருடன் தனியாகப் பயணப்பட, அவன் எதாவது பேசுவானோ என்று மலர் யோசிக்க ஒருவார்த்தை கூட பேசவே இல்லை. அவள் வீட்டின் அருகே வந்துவிடவும் வண்டியை நிறுத்தியவன் மலரிடம் திரும்பி,

“என்ன இவன் ஒன்னுமே பேசாம வரான்னு ரொம்ப யோசிக்கிற போல? நமக்குள்ள இந்த காதல் எல்லாம் செட் ஆகல, நேரா கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன். அதுக்கு உன்னைக் கேட்கிறதைவிட உங்கப்பாவைக் கேட்டுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றான் ஜனா.

“எங்கப்பா ஒத்துக்கலன்னா? ரொம்பத்தான் உங்களுக்கு நம்பிக்கை ஜனா” என்று கிண்டல் தவழும் குரலில் பேச, அதனை கொஞ்சமும் ரசிக்கவில்லை ஜனா. எரிச்சலான குரலில்,

“ஷட் அப் மலர்! ஒருத்தனோட ஆசையை உணர்வை ஈசியா கேலி பண்ற நீ? இப்படி எதிர்மறையா பேசி என்னை எரிச்சல் பண்றியா டி? நீ என்னோட இடத்துல இருந்து பார்த்தாதான் என் வலி உனக்குப் புரியும். உன்னால காதலை ஏத்துக்க முடியாது சொல்லிட்ட, அது உன்னிஷ்டம்னு உன்னைத் தொந்தரவு செய்றேனா நான்? எல்லாமே இருந்தும் நீ இல்லன்னா எனக்கு சந்தோஷம் இல்லன்னு சொல்றேன். புரிஞ்சிக்காட்டியும் இப்படி பேசாத சுதந்திரமலர்” என்றான் அழுத்தமான குரலில். அவ்வளவு கோபம் அவனிடம்.

அடுத்ததாக மலர் இறங்கிக்கொள்ள, ஜனா இரங்கவில்லை. அதன்பின் முன்பு போலவே நாட்கள் நகர்ந்தது. வசந்த காலத்தின் மாலைப்பொழுது ஒன்று, நூலகத்தில் ஜனா கட்டிட கலை சம்பந்தமாய் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தான். சுதந்திர மலர் அவனைத் தேடியவள், அவன் முன் போய் நிற்க, நிமிர்ந்து ஒரு நொடி அவளைப் பார்த்தவன் புத்தகத்தில் கவனம் வைக்க, மலர் அவன் அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

“கொஞ்சம் பேசணும் ஜனா” என்று சொல்லி அவன் முகம் பார்க்க,

“காது ஃப்ரீயா இருக்கு, பேசு கேட்கும்” என்றான்.

“என்ன திமிர் காட்டுறீங்களா? என்னை விட ஸ்மார்ட்டா இருந்தா, அழகா இருந்தா, வசதியா இருந்தா நீங்க லவ் சொன்ன உடனே ஒத்துக்கணுமா என்ன? எல்லாம் எனக்கா பிடிச்சதான் சொல்ல முடியும்” என்றாள் முறைத்துக்கொண்டு.

“உனக்கு வேணும்னா நான் ரொம்ப அழகாத் தெரியலாம், ஆனா ஒன்னு சொல்வாங்க மஜ்னுவோட கண்கள் வழியாப் பார்த்தா லைலாதான் பேரழகியாம், அப்படிதான் நீயும் எனக்கு”

“மஜ்னுன்னா பைத்தியக்காரன்”

“Love makes fools of us all, Darling, கேள்விப்பட்டதில்லை நீ? பைத்தியக்காரனாவே இருந்துட்டுப் போறேன், சரி நான் மஜ்னுன்னா நீ லைலான்னு ஒத்துக்கிறியா?” என்றதும் அவசரமாகத் தலையசைத்தவள் வெளியே எழுந்து போய்விட்டாள்.

“ஓய் லைலா! என்ன வெளியே வந்துட்ட?” என்றபடி ஜனா வெளியே வர,

“நான் லைலா எல்லாமில்ல, நான் சுதந்திர மலர்” என்றாள் கடுப்பாக.

“சரி சுதந்திர மலர், என்ன சொல்ல வந்த?”

“என்னோட பாஸ்வர்ட் கூட ஐ லவ் யூ தான்” என்று உதிர்ந்த கிடந்த கொன்றை மலர்கள் மீது நின்று மலரோடு மலராக மலர் சொல்ல,

“உன் பாஸ்வர்ட் சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்தியா?” என்று அவன் நக்கல் செய்ய, மலர் அவனை முறைத்தபடி நடந்தாள்.

“ஏய் ராங்கி! என்னை மட்டும் இரண்டு வருஷம் டென்ஷன் பண்ணின? மேடம் இரண்டு நிமிஷம் கூட பொறுக்க மாட்டீங்களோ” என்று அவளுடன் சேர்ந்து நடந்தவன்,

“கடல் காத்து என்ன இந்த ஆத்துப் பக்கம் வீசுது?” என்று கேட்டான்.

“அதெல்லாம் தெரியாது, முன்னாடியெல்லாம் எல்லாரையும் ஜாலியா சைட் அடிக்க முடியும், இப்பொவெல்லாம் என்னவோ மனசு உறுத்துது. ஜனாவைத் தவிர யாரும் அழகா தெரியலை. முன்னாடியே உங்களை ரொம்பப் பிடிக்கும், அப்போ திட்டினப்போ போடா வெண்ணன்னு நினைச்சிக்கிட்டேன், இப்போ அன்னிக்கு நீங்க பேசினதும் கஷ்டமா ஆச்சு”

“அது நடந்து ஆறு மாசம் ஆச்சே, இவ்வளவு நாளா இதை சொல்ல?”

“நினைச்ச உடனே எல்லாம் சொல்ல முடியாது, இன்னும் மூணு மாசம் செம் முடிஞ்சிடும், கேம்பஸ்ல செலெக்ட் ஆகிட்டேன். எனக்குன்னு ஒன்னு செஞ்சிட்டுதான் சொல்லணும்னு நினைச்சேன், இன்னும் கூட ஆறு மாசம் கழிச்சு சொல்லியிருப்பேன், டிரெயினிங்லாம் போகனுமே சார் ஃபீல் பண்ணுவாரேன்னு இப்போ சொல்றேன்”

“அம்மாடி! இரண்டு வருஷம் ஃபீல் பண்ணினது எல்லாம் கண்ணுக்குத் தெரியல, ஆனா இப்பவும் நான் அதே ஜனா தான், எதுவும் மாறல, ஐ மீன் நீ சொன்ன அந்தஸ்து எக்செட்ரா எல்லாம்”

“ஆனா நான் அதே மலர் இல்லையே, இப்போ ஜனாவை ரொம்ப பிடிக்குது. பிடிச்சவங்க கிட்ட குறையெல்லாம் பெருசா தெரியாது” என்றதும் ஜனாவிடம் அவ்வளவு சந்தோஷம்.

“நீ எப்போ கல்யாணம் பண்ணலாம் சொல்லு, உன் இஷ்டம்தான் பேபி. உன் வீட்ல எப்போ பேசணும்னு சொல்லு நான் வந்து பேசுறேன்” என்று திட்டங்களாகச் சொல்ல,

“இன்னும் மூணு மாசம் இருக்கு, எக்ஸாம் முடியட்டும். நானே அப்பா கிட்ட சொல்றேன்” என்று மலர் சொன்ன நாளும், அன்றைய கொன்றை மலர் வாசம் கொஞ்சமும் மாறாது அவன் நினைவில் நின்றது.

அப்படி காத்திருந்து காதல் செய்த மனைவி தன்னிடம் என்ன குறை என்று போனாள் என்று அவனுக்குப் புரியவில்லை. அவள் தன்னை விட்டுப் போயிருந்தாலும் தானாவது அவளைத் தேடி போயிருக்க வேண்டும் என்ற உறுத்தல் மட்டும் அவனிடம் இப்போது தோன்றியது.

“இனி உன்னை விட மாட்டேன்டி ராங்கி” என்றபடி தூக்கத்தில் இருந்த மலரை இறுக்கியணைக்க,

“என்ன ஜனா?” என்றபடி அவனை விட்டு விலகப்பார்த்தாள்.

“இந்த கடலோட ஆறு சேர்ந்த கதையை நினைச்சேன்” என்று சிரிக்க,

“ஓஹோ…” என்று இழுத்தவள் நேரத்தைப் பார்த்துவிட்டு,

“என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேன், அமிழ்தா எங்க?” என்று கட்டிலை விட்டு இறங்கினாள்.

“அவ வரு கூட இருக்கா, நீ ரெடி ஆகிட்டு கீழ வா சாப்பிடலாம்” என்று சொல்லி கீழே போக, வீட்டினர் எல்லாரும் இரவு உணவுக்குக் கூடியிருந்தனர். பிரசன்னா வந்தவன் சௌந்தர்யாவிடம்,

“அம்மாச்சிக்கும் தாத்தாவுக்கும் சாப்பாடு கொடுத்தீங்களா அத்தை” என்று கேட்டான்.

“அவங்க சாப்பிட்டு தூங்க போய்ட்டாங்கப்பா” என்ற சௌந்தர்யா படிகளில் இறங்கி வந்த மகனைப் பார்த்து,

“என்னடா பண்ணிட்டு இருந்த இவ்வளவு நேரம்? மலர் எங்க? பிரசன்னா நீ நாளைக்கு இவனை அழைச்சிட்டுப் போய் டாக்டர்ட்ட ஒருதடவை காட்டிட்டு வந்திடு அடிக்கடி தலைவலின்றான்” என்றார்.

மலர் ஜனாவிற்கு உணவு பரிமாற,

“நான் வைக்கிறேன் மலர், நீ வேலைக்குப் போய்ட்டு வந்து இன்னும் சாப்பிடல, நீயும் உட்காரு” என்று சொல்லி அவர் பரிமாற, ‘அம்மா’ என்றபடி அமிழ்தா வந்தாள். மகளைத் தூக்கி மடியில் உட்காரவைத்த மலர் பேசியபடி ஊட்ட அமிழ்தா அப்படியே சுற்றி முற்றியும் பார்த்தாள்.

“வேடிக்கைப் பார்க்காம சாப்பிடு அமிழ்துக்குட்டி” என்று சௌந்தர்யா சொல்ல,

“அப்பத்தா, என் போட்டோ இல்ல” என்று ஹாலில் மாட்டியிருந்த சாத்வீயின் பிறந்த நாள் போட்டோவைக் காட்டிக் கேட்டாள் அமிழ்தா. அதில் சாத்வீகா, பிரசன்னா, வர்ணவி மூவரும் சிரித்தபடி இருந்தனர்.

அமிழ்தாவின் கேள்வியும் ஏக்கமும் புரிய, எல்லார் பார்வையும் மலரைப் பார்த்தது, குற்றச்சாட்டுடன்!

✅ End of Episode 17
How did you feel about this episode?
❤️ 3 more...

You must Log in or Register to react here

💬 2 Replies
Srichitra Reader 1 month ago

Nice 

Mrs Beena loganathan Reader 1 month ago

பிடித்தம் சொல்லியும்

பிடிவாதம் பிடித்து
பேசாமல் சென்று 

பார்வையில் படாமல் 
பரிதவிக்க வைத்தாய்....
பிரிவும் பொறுமையும்
பாவையின் மனதில் 
பிரியம் தொடங்கிட
புரிந்த காதல் நெஞ்சம்
பிரிந்தது ஏனோ ...
Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top