Episode 28
பிரசன்னவாசன் இதுவரை இல்லாத அளவிற்கு அன்று அதிகமாய்க் குடித்தான். எல்லாம் மறக்கவே தன்னை மதுவுக்கு அடிமையாக்கிக் கொண்டிருந்தான் அவன். மறக்கவேண்டும் எல்லாம் மறந்து போய் புதிதாய்ப் பிறந்தது போல ஒரு வாழ்வு வேண்டும். முடியுமா என்ன?
தன்னை நினைக்காமல் விட்டுப்போன அன்னை, தன்னை மட்டுமே நினைத்து தேடி வந்த தந்தை. வாழ்க்கையில் யார் முக்கியம், யார் நல்லவர்கள் என்று அறியாமல் பிறழ்ந்து பிழை செய்து இன்று எதையும் மாற்றவும் முடியவில்லை.
ஜனா மருத்துவமனையில் இருந்தபோது ஜெயப்பிரகாஷத்திற்கு சுதந்திரமலர் ஜனாவுடன் வாழ வந்துவிட்டாள் என்று தெரிந்து ஜகனிடம் கத்தினார். ஜகனோ,
“போதும், உங்களுக்குப் பயந்துதான் அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு வரவேண்டாம்னு நாங்க நினைச்சோம். நீங்க அவளை நிம்மதியா வாழ விடமாட்டீங்கன்னு தெரிஞ்சதாலதான் கல்யாணம் வேண்டாம்னு ஜனா கிட்ட சொன்னேன். ஆனா அந்த பொண்ணு இல்லாம என் பையன் இத்தனை வருஷம் பட்ட கஷ்டமெல்லாம் போதும்பா, இனிமே என் மருமக இந்த வீட்லதான் இருப்பா” என்று அழுத்தமாய்ப் பேசிவிட,
“டேய், அவ அப்பனாலதான்டா நம்ம ஜானகி செத்துப் போனா, கொஞ்சமாச்சும் உனக்கு அவ மேல பாசமிருக்கா?” என்று கத்தினார்.
“நிறுத்துங்கப்பா! ஜானுவோட சாவுக்குக் காரணம் நீங்கதான்” என்று ஜகன் வெறுப்பாய் சொல்லும்போதே தாத்தாவை சமாதானப்படுத்தி ஜனாவிற்காகவும் அமிழ்தாவிற்காகவும் மலர் இங்கே வரவேண்டுமென கேட்க நினைத்து, அப்போது வீட்டிற்கு வந்த பிரசன்னாவின் காதுகள் இந்த வார்த்தைகள் தெளிவுற விழுந்தன.
தெளிவாய் விழுந்த வார்த்தைகளினால் அவனின் அத்தனை வருட தெளிவு ஆட்டம் காண அப்படியே அந்த அறைவாசலில் நின்றுவிட்டான்.
“ஜகன், என்ன பேசுற நீ?” என்று ஜெயப்பிரகாஷம் கோபத்தில் கத்த,
“எனக்கு எல்லாம் தெரியும்பா, ஜானகி உங்க பழைய பி.ஏவோட பையனை விரும்பியிருக்கா, நீங்க அவனைக் கடத்திவச்சிட்டு அவன் பணத்தை எடுத்துட்டு ஓடிப்போய்ட்டான்னு பொய் சொல்லி ஜானகியை முரளிக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க. ஜானு இங்க டெலிவரிக்கு வந்தப்போ அந்த பையன் ஜானுக்குக் கல்யாணமானதும் சூசைட் பண்ணிக்கிட்டான்னு தெரிஞ்சு அந்த குற்றவுணர்வுலதான் என் தங்கச்சி செத்துப் போய்ட்டானு எனக்கு நல்லா தெரியும்பா” என்றவருக்கு இன்றும் தங்கையின் முடிவினால் கண் கலங்கியது.
“ஜானு இறந்த பின்னாடி உங்க பி.ஏ எங்கிட்ட எல்லாம் சொல்லிட்டார், ஆனாலும் நான் ஏன் அமைதியா இருந்தேன் தெரியுமா? முரளிக்கு ஜானுவால ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கல, அவர் இன்னொரு வாழ்க்கை அமைச்சிக்கிட்டு நல்லா வாழட்டுமேனுதான். பிரசன்னாவை நம்ம கூட வச்சிக்க உங்க காரணம் வேணும்னா அவன் அதிர்ஷ்டக்கார பேரனா இருக்கலாம், ஆனா என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு அவனும் ஜனாவும் ஒன்னுதான்” என்றதும் ஜெயப்பிரகாஷம் மகனை வெறித்துப் பார்த்தார்.
“அம்மாவோட ஆசைக்காகவும் பிரசன்னா நல்லா இருக்கணும்னுதான் அவனை நீங்க அவன் அப்பா கிட்ட இருந்து பிரிச்சப்போ ஒன்னும் செய்ய முடியாதவனாகிட்டேன். அந்த பாவம்தான் என் மகன் மனைவியையும் மகளையும் பிரிஞ்சுக் கஷ்டப்பட்டுட்டான். என் மருமகளும் பேத்தியும் இந்த வீட்லதான் இருப்பாங்க” என்றார் முடிவாக.
“டேய், என்ன பெரிய இவன் மாதிரி பேசுற? என் பொண்ணு கல்யாணத்துக்குப் பின்னாடி இன்னொருத்தனை நினைச்சு செத்தான்னு சொன்னா அது மரியாதையா இருக்குமா? அந்த முரளி ஒருவேளை என் பொண்ணை நல்லா கவனிச்சிருந்தா ஏன் அவ அப்படி ஒரு முடிவெடுக்க போறா?” என்ற அப்பாவை வெறுத்துப் பார்த்த ஜகன்,
“இப்பவும் இப்படி பேச உங்களுக்கு வெட்கமாயில்லப்பா? நான் ஒன்னும் அம்மாவோ பிரசன்னாவோ இல்ல, என்ன சொன்னாலும் அப்படியே நம்புறதுக்கு. எனக்கு முரளி ஜானுவை எப்படி பார்த்துக்கிட்டார்னு நல்லா தெரியும். அப்படி ஜானகி மேல உண்மையா பாசம் இருந்திருந்தா அவ விரும்பினவனுக்கே கட்டிவச்சிருப்பீங்க, உங்க பொண்ணோட கௌரவம் முக்கியம்னு முரளியோட கௌரவத்தைப் பறிச்சிட்டீங்கப்பா நீங்க. உங்களோட வறட்டுப் பிடிவாதமும் கௌரவமும் உங்களோட போகட்டும். இந்த வயசுல கூட திருந்தாம இருந்தா என்ன மனுஷன் நீங்க?” என்றார் வேதனையாக.
“இனிமேலாவது என் மகனை சந்தோஷமா வாழவிடுங்க” என்றவர் அறையை விட்டு வெளியேறிவிட, பிரசன்னாவிற்கு மாமாவின் வாயிலாகவே எல்லா உண்மைகளும் தெரிந்திருக்க அன்றிலிருந்து அவன் அகமெல்லாம் ஆழிப்பேரலைதான். அப்போதிலிருந்து ஜெயப்பிரகாஷத்தை அவன் மதிப்பதே இல்லை, ரங்கநாயகிக்காக மட்டுமே அவரைப் பொறுத்துப் போனான்.
தவறே செய்யாத தந்தையை இத்தனை வருடம் தள்ளி வைத்திருக்கிறேனே என்ற வேதனை ஒருபுறம், அந்த வெறுப்பை மலரின் மீது காட்டி ஜனாவின் சந்தோஷங்கள் அனைத்தையும் பறித்திருக்கிறேனே என்று நினைக்க நினைக்க அவனது வேதனைக் கொஞ்சமும் குறையாமல் நித்தம் நித்தம் பெருகிக் கொண்டே போய் பெருந்துயராய் உள்ளத்தினை தைத்தது.
யாரிடமும் சொல்லி ஆறுதல் கூட தேட முடியா அவல நிலை அவனுக்கு. எப்போதும் தன்னுணர்வுகளை அடுத்தவரிடம் அதிகம் பகிராதவனும் கூட, இதை எப்படி சொல்வான்? ஆறுமாதக் குழந்தையான அவனை அனாதையாக்கி விட்டுப் போன தாய்க்காக தன்னையே சுற்றி வந்த தந்தையை உதறித் தள்ளிவிட்டான். நினைக்க நினைக்க அவன் மீதே அவ்வளவு வெறுப்பு.
ஜனா அந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே வர, மலர் வாசலில் நின்றுகொண்டாள்.
“டேய் பிரசன்னா, என்ன இது?” என்றான் அதிர்ச்சியாக. பிரசன்னா இப்படி குடித்து ஜனா பார்த்ததே இல்லை. எல்லா விஷயத்திலும் அப்படி ஒரு நாசுக்குப் பார்ப்பவன். இப்படி கண்மண் தெரியாது குடிக்க, அவன் கையிலிருந்த பாட்டிலைப் பிடுங்க, அப்போதுதான் உணர்வுக்கு வந்தான் பிரசன்னா.
“ஜனா…” என்று போதையில் உளறியவன் நண்பனிடமிருந்து பாட்டிலைப் பறித்தான்.
“அறிவிருக்கா உனக்கு? என்ன ஆச்சுனு இப்படி குடிக்கிற நீ?” என்ற ஜனாவுக்கு டென்ஷன் ஏறியிருந்தது.
“என்ன ஆகல ஜனா” என்றவன் ஜனாவின் கையைப் பிடித்து,
“சாரி, நான் உனக்கு நல்ல ப்ரண்டே இல்ல. உன்னோட லவ்வை நான் ஏத்துக்கவே இல்ல, நான் பேசியிருந்தா உனக்கும் என்னை மாதிரி நல்லா கல்யாணம் நடந்திருக்கும்”
“என்ன்…னால தான் அமிழ்தாவைப் பத்தி உனக்குத் தெரியல, நான் சொல்லியிருக்கணும் நீ யூஎஸ் போடா போய் மலரை அழைச்சிட்டு வான்னு..” என்றான் குழறலாக.
“மச்சான், அதான் இப்போ நாங்க எல்லாம் ஒன்னா இருக்கோம்ல, அதை நினைச்சா நீ குடிக்கிற? வேண்டாம்டா இவ்வளவு குடிச்சா நீ தாங்கமாட்ட” என்று அக்கறையாய் சொன்னவன் அவனைத் தூக்க முயல,
“பாரு, நீ ரொம்ப நல்லவன். என்னை யோசிக்கிற, பட் நான் உன்னை நினைக்கவே இல்லையே, நான் மட்டும் வைஃப் குழந்தைன்னு சந்தோஷமா இருந்தேன். உன்னை மலரோட சேர்த்துவைக்காம போய்ட்டேனே” என்று அவன் தோளில் சாய்ந்தான்.
அவனை அணைத்துப் பிடித்த ஜனா,
“அது உன்னோட தப்பில்ல மச்சி, விடு. எல்லாம் சரியாகிடும், நீ வா என் கூட” என்று இழுக்க, பிரசன்னாவோ அசையவில்லை.
“என்ன சரியாகும் ஜனா? சொல்ளு…என்ன சரியாகும்? நத்திங் வில் சேஞ்ச்… என்னோட அப்பா கூட என்னால இருக்க முடியாம போச்சு, என்னோட சாரதா மிஸ் எனக்கு அம்மாவா இருந்திருப்பாங்க, அதுவும் போச்சு. எனக்கும் உன்னை மாதிரி…நோ நோ இரண்டு சிஸ்டர்ஸ் இருந்திருப்பாங்க, எனக்கு இங்க இத்தனை வருஷம் இருந்தாலும் என்னை நீங்க நல்லாவே பார்த்தாலும் ஒரு எம்டினெஸ் இருக்கும். எனக்கு குடும்பம் இல்லன்னு தோணும், எப்பவும் நான் தனின்னு ஒரு ஃபீல் மனசுல இருக்கும்டா” என்றான் கண்கலங்க.
இப்படியெல்லாம் பிரசன்னா மனம் திறந்தவன் இல்லை, அவனின் கண்கள் கலங்கிவிட ஜனாவிற்கும் விழிகள் நீரால் நிறைந்துவிட்டன.
“எப்போ வர்ணாவைக் கல்யாணம் செஞ்சேன்னோ அப்போதான் எனக்கு ஒரு ஃபேமிலி இருக்குன்னு ஃபீல் ஆச்சு. அவதான் என்னோட லைஃபை கலர்ஃபுல் ஆக்கினா, மை வைஃப். அப்படிதானே உனக்கும் மலர் இருந்திருப்பா, தட் டூ லவ் மேரேஜ்” என்று ஜனாவின் நெஞ்சில் விரலை நீட்டிப் பேசியவனை கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்தி சோஃபாவில் உட்காரவைத்தான் ஜனார்த்தன்.
சோஃபாவிற்கு நேரெதிரே ஜெயப்பிரகாஷம் கோட் சூட் போட்டு இருந்த புகைப்படம் ஒன்று இருக்க,
“அவர் ஏன்டா சிரிக்கிறார்?” என்றான் கோபத்துடன்.
“யாரு வாசு?” என்றபடி ஜனா பார்ப்பதற்குள் டீபாயின் மீதிருந்த பூஜாடியைத் தூக்கி ஜெயப்பிரகாஷத்தின் புகைப்படத்தின் மீது அடித்தான்.
சில் சில்லாய் அந்த புகைப்படம் பூஜாடியுடன் கீழே விழுந்து நொறுங்க, அதுவரை வாசலில் நின்று பிரசன்னா பேசியதைக் கேட்ட மலர் சத்தம் கேட்கவும் உள்ளே வந்து ஜனாவின் அருகே நின்றாள்.
பிரசன்னாவோ சிவந்த விழிகளுடன் ஜெயப்பிரகாஷத்தின் புகைப்படம் இருந்த இடம் பார்த்தவன்,
“எல்லாமே அவராலடா, என்னோட அம்மா சாக காரணமே இவர்தான் டா” என்றதும் ஜனா அதிர்ச்சியாகி
“என்ன சொல்ற வாசு? அத்தை சாவுக்குத் தாத்தா காரணமா?” என்றான் பதறியபடி. தன்னிலை இழந்த அந்த நிலையிலும் கூட தாயின் நிலைத்தாழ்ந்துவிடுவதை விரும்பவில்லை அவன்.
“அ..அது அவர்தான், ஆனா என்னை வேறெதுவும் கேட்காத, என்னால சொல்லமுடியாது. என்னோட அப்பாவை எங்கிட்ட இருந்து பிரிச்சது இந்த மனுஷன்தான். என் அப்பா எவ்வளவு நல்லவர் தெரியுமா ஜனா? எப்போ நான் அவரை அவாய்ட் பண்ணினாலும் என்னைத் தேடி வருவார்டா அவர், நான் கூட அப்படி இருக்கமாட்டேன்டா” என்றவன் ஜனாவின் காலரைப் பிடித்து,
“எனக்குத்தான் அறிவில்லை, நீயாச்சும் என்னையும் என் அப்பாவையும் சேர்த்து வச்சிருக்கலாமில்ல” என்று கேட்க ஜனாவிற்குத் தலைசுற்றியது.
‘அப்பான்னு சொன்னாலே என்னை எரிக்கிற மாதிரி பார்ப்பான்’ என்று மனத்தில் நினைத்தான். மலரோ எல்லாம் கேட்டவள்,
“ஜனா, முதல்ல இவனை ரூமுக்கு அழைச்சிட்டுப் போங்க” என்றதும் அப்போதுதான் மலரைக் கவனித்த பிரசன்னா,
“ஹே மலர்” என்று புன்னகை செய்ய முயன்றான்.
“யூ நோ மலர், எனக்கு உன்னைப் பிடிக்காது. இப்போ இல்ல சின்ன வயசுல அப்பா உன்னைக் காட்டினார் குட்டிப் பாப்பாவா இருந்த, சாத்வீ அப்படிதான் இருந்தா. என்னோட அப்பா உனக்கும் அப்பாவாகிட்டார், என்னோட சாரதா மிஸ் உனக்கு அம்மாவாகிட்டாங்க, அதனாலேயே உன் மேல ஒரு அவெர்ஷன்(வெறுப்பு) எனக்கு”
“அப்போதான் அப்படின்னா பெரிசானதும் என் ஜனா” என்று ஜனாவை அணைத்துப் பிடித்தவன்,
“அவனுக்கும் என்னோட வருவுக்கும் நீ முக்கியமானவளாகிட்ட, என்னால டாலரேட் செய்யவே முடியல, பட் தப்பு. அப்பா மேல இருந்த கோவத்தை உன் மேல் காட்டியிருக்க கூடாது. நீ ஏன் ஜனாவை விட்டுப் போன?” என்று மலரின் முகம் பார்த்து எழ முயன்று அவன் கேட்க, அவனை இழுத்துப் பிடித்து உட்காரவைத்தான் ஜனா.
“ஜனா, இவனுக்கு ஓவரா போச்சு. தூங்க வைங்க” என்று மலர் சொல்ல,
“நோ நோ சிஸ்டர், சொல்லு. ஏன் ஜனாவை விட்டுப் போன? இவனும் சொல்லவே இல்ல, ஆனா ஒன்னு சொல்லவா?” என்று சத்தமாய் வாய்விட்டு சிரித்தவன்,
“நீ போனதும் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன், இவனை வேற கல்யாணம் கூட செஞ்சுக்க சொன்னேன், இவனும் உன் மேல அப்போ ரொம்ப கோவமா இருந்தான்” என்றான்.
ஜனா மலரை அவஸ்தையாய்ப் பார்த்து,
“டேய் நீ தெளிவா இருந்தாலே அவகிட்ட நல்லவிதமா பேசமாட்ட, இப்போ குடிச்சிட்டு எதையும் பேசி கும்மி அடிக்காதடா” என்று அவன் வாயை மூட, ஜனாவின் கைகளைத் தட்டிவிட்ட பிரசன்னா,
“ஹேய் லெட் மீ டாக் மேன், இவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் மலர். ஹி லவ்ஸ் யூ எ லாட், நான் தப்புப் பண்ணிட்டேன். இவனை நீ போனதும் ரொம்ப வெறுப்பேத்திட்டேன், அப்படி செய்யாம உங்கிட்ட இவனை அனுப்பியிருக்கனும்” என்றான் கவலையுடன்.
“ஆனாலும் நீ எப்படி ஜனாவை விட்டுப் போகலாம்? ஜனாவையே விட்டுப் போவியா?” என்று உளற,
“டேய் நீ நல்லது செய்யலடா நாரதர் வேலைப் பார்க்குறடா, புரியுதாடா உனக்கு? முதல்ல தூங்கலாம் வா” என்று அவனை சோஃபாவை விட்டுத் தூக்கப் பார்க்க,
“தூங்க முடியலடா” என்று சொல்லி தலையை சோஃபாவின் பக்கம் சாய்த்தவனின் குரல் கரகரத்து ஒலித்தது.
“தூங்க முடிஞ்சா நான் ஏன் இப்போ குடிக்கிறேன்? மை லைஃப் இஸ் எ லை டா ஜனா, ஐ மிஸ்ட் மை ஃபேமிலி” என்றான் கண்கள் கலங்கி.
“இங்க பாரு, எதையும் நீ மிஸ் பண்ணல. இப்ப நீ போனாலும் உன்னோட அப்பா உன்னைத் தாங்குவார்” என்று ஜனா ஆறுதல் சொல்ல, மலர் எல்லாவற்றையும் அமைதியாகவே பார்த்தாள்.
“எஸ்! அவர் அப்படிதான். என்னால அப்படி சட்டுன்னு போக முடியலையே, எவ்வளவு அவரை திமிரா நடத்தியிருப்பேன்? இதோ இவகிட்ட கூட உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு எவ்வளவு பேசியிருப்பேன்” என்றதும் ஜனாவின் பார்வை மலரைத் தொட, அவன் பார்வை உணர்ந்தவள் தலையசைத்தாள்.
“இன்னும் என்னவெல்லாம் டா பண்ணிவச்ச?” என்று ஜனா கடுப்புடன் கேட்க,
“என் அப்பா கிட்ட சொல்லி மலரை உனக்குக் கட்டித் தரக்கூடாது சொன்னேன்டா மச்சான், ஐ அம் சாரிடா” என்று ஜனாவின் தோள் சாய்ந்தான்.
“கிராதகா, இது தெரியாம அந்த மனுஷனை முறைச்சிட்டு திரிஞ்சேனே டா” என்று முணுமுணுத்தான் ஜனா. மலரோ ‘அடப்பாவி’ என்று அண்ணனைப் பார்த்தாள்.
✅ End of Episode 28
நண்பனா கூட இருந்துட்டு நாரதர் வேலை பார்த்து இருக்க பிரசன்னா ..
Nice