கல்லூரியில் வைத்து அதன்பின் சர்வா ரசிகாவிடம் பேசவில்லை. சிவசங்கரனிடம் மட்டும் சொல்லியிருந்தான்,
“சாரி மாமா, நான் பசங்க கவனிப்பாங்கன்னு நினைக்கல, ஜஸ்ட் நார்மல் பேச்சுதானே அப்படி நினைச்சுட்டேன், இனிமே இப்படி நடக்காது” என்று சொல்ல சிவசங்கரனுக்கு நிறைவாய் இருந்தது.
“கோவமில்லையே உனக்கு?” என்று கேட்க,
“இல்லைன்னு சொல்ல ஆசைதான்” என்று சிரித்துவிட்டுப் போக, ‘இவன் இருக்கானே’ என்று நினைத்து அவருக்கு புன்னகை அரும்பியது.
அன்று மாலை சக்திவேலின் இல்லத்தில் எல்லாரும் கூடியிருந்தனர். சுகுமாறன் இன்று அண்ணனிடம் பேச முடிவு செய்திருந்தார். அதற்கு முன் சக்திவேலனிடம் சிவசங்கரன் ரசிகாவிற்கு சர்வாவிற்கும் பிடித்தம் இருப்பதாய் சொல்லிவிட, அவருக்கும் மகிழ்ச்சிதான்.
“வீட்ல பேசிட்டு சீக்கிரமே செஞ்சிடலாம் சிவா” என்று சொல்லியிருந்தார்.
சர்வா முன்பே பத்ரியுடன் பேசிக்கொண்டு வீட்டில்தான் இருந்தான், கூடவே அன்று விடுமுறை என ரேஷ்மியும் இருக்க, சுகுமாறன் வேலை விட்டு வரவும் மனைவியை அண்ணன் வீட்டில் பேச அழைத்துப் போனார்.
சுகுமாறன் விஷயத்தை சொல்லவும் உமா அதிர்ந்து போய் சர்வாவைப் பார்த்தார், சத்தியமெல்லாம் செய்தானே இவன் என்பது போல.
“என்ன தம்பி சொல்றீங்க, நிஜமாவா? இவனுக்கு உண்மையில பிடிச்சிருக்கா?” என்று சர்வாவை வைத்துக் கொண்டே கேட்க,
“என்ன கேள்வி இது உமா? சர்வாவுக்கும் ரசிகாவுக்கும் பிடிச்சிருக்குன்னு சிவாவே எங்கிட்ட காலையில சொன்னான். பிடிக்காமலா இவன் பேசும்போது அமைதியா இருக்கான்?” என்று சக்திவேல் கேட்க உமாவின் பார்வையின் அனல் மொத்தமும் சர்வாவிடம்தான்.
அவனோ அவர் பார்ப்பது தெரிந்தாலும் அலட்சியமாய் இருந்தான். அவனுக்கு இன்னும் அவர் மீதான வருத்தம் போகவில்லை. அவன் பக்கத்தில் உட்கார்ந்த பத்ரி,
“டேய் எங்க கூடவே சுத்துனியேடா? எப்போ டா நடந்துச்சு?” என்று ஆச்சரியமாய்க் கேட்க,
“உங்க கூட சுத்துனேனா? நீ அண்ணி கூட சுத்துன, நான் அவ கூட தானே சுத்தினேன்?” என்று கேட்டான்.
“இருந்தாலும் சிவா அங்கிள் பொண்ணை தைரியமா லவ் பண்ணியிருக்க சர்வா நீ?” என்று ரேஷ்மி சிரிக்க,
“பேசிட்டு இருக்கும்போது நீங்க என்ன தனியா பேசுறீங்க?” சக்திவேல் சின்னவர்களிடம் காய, அவர்கள் மூவரும் கண்களால் சிரித்துக் கொண்டே அமைதியாகிவிட்டனர்.
சர்வா பார்ப்பான் என்று உமா பார்க்க அவனோ கண்டுகொள்ளவே இல்லை. சக்தி தம்பியிடம்,
“நெக்ஸ் மந்த் செம் எக்ஸாம் முடியவும் கல்யாணம் வைப்போமா டா? இரண்டு மாசம் போதும்தானே?” என்று கேட்க,
சர்வா உடனே மறுத்தான்.
“அண்ணிக்குக் குழந்தைப் பிறந்த பின்னாடி வச்சிக்கலாம், என்ன அவசரம்?” என்றான்.
“டேய் அதுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு , அதுக்கு அப்புறமும் குழந்தையைக் கவனிக்கணும். இப்பவே பண்ணிடலாம்” என்று சக்தி சொல்ல,
“அவன் இஷ்டப்படியே செய்வோமே அண்ணா, என்ன அவசரம் இரண்டு மாசத்துல செய்யனும்னு?” சுகுமாறன் மகனுக்காகப் பேசினார்.
புஷ்பா கடுப்பாகிவிட்டார், “ஏன் பத்ரி கல்யாணம் உன்னைக் கேட்டு வச்சாங்களா? ஒருவாரம் கூட உனக்கு லீவ் இல்லாம நாலே நாள்ல போற மாதிரி இருந்துச்சு, இப்போ நீ ஏன் ரேஷ்மிக்குக் குழந்தைப் பொறக்கற வரை வெயிட் பண்ணனும்ங்கிற?” என்று மகனைத் திட்டிவிடம்
“அண்ணா கல்யாணம்தான் அப்படி டக்குன்னு ஃபிக்ஸ் ஆகிடுச்சு, என் கல்யாணம் பொறுமையா செஞ்சா என்ன?” சர்வா எரிந்து விழுந்தான்.
“அதெல்லாம் பொண்ணுதான் உன்னிஷ்டம், கல்யாணமெல்லாம் எங்க இஷ்டப்படிதான் செய்வோம்” புஷ்பா மகனை விட பிடிவாதமாய்ப் பேசினார்.
“என்ன கல்யாணம் உங்க இஷ்டம்? பொண்ணைக் கல்யாணம் செய்யப் போறது நான், அப்போ எல்லாம் என்னோட இஷ்டம், எங்க இஷ்டம்” அவனும் விடாமல் அடம் செய்ய,
“சர்வா! சும்மா இருடா, அண்ணிக்கு டெலிவரி ஆன பின்னாடி சிக்ஸ் மந்த்ஸ் வரை கஷ்டமாதான் இருக்கும், அதை யோசிக்காத, பொண்ணு இவதான்னு தெரிஞ்ச பின்னாடி எதுக்குத் தள்ளிப்போடுற, இப்போ மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணினா கூட அண்ணியால நல்லபடியா கல்யாணத்துல கலந்துக்க முடியும். இல்லனா ஒரு வருஷம் ஆகிடும்”
விட்டால் இவர்கள் சண்டையிடுவார்கள் என்று பத்ரி அவசரமாய் தம்பியை அடக்கினான்.
“பத்ரி சொல்றது ரைட் சர்வா, சிவாக்கும் பொண்ணு கல்யாணம் செய்ய ஆசையா இருக்காதா? எந்த ரீசனும் இல்லாம ஏன் தள்ளிப்போடணும் சொல்லுடா, இவனுக்குப் பிள்ளை பொறந்து பெயர் வச்சுத்தான் கல்யாணம் செய்யனும்னு எல்லாம் பார்க்காத. அப்புறம் நெக்ஸ்ட் செமெஸ்டர் வந்துடும், அது முடிஞ்சாதான் ஃப்ரீயா இருக்க முடியும்” சக்திவேலன் சொல்லவும்,
“ஓகே பெரியப்பா” என்று ஒத்துக்கொண்டான். அதுவே புஷ்பாவிற்குக் காய்ந்தது, அவர் சொன்னதை ஒத்துக்கொண்டான் என்பதைவிட, அவர் சொல்லி ஒத்துக்கொள்ளவில்லை என்று கோபம் கொண்டார்.
சக்தி அடுத்து,
“நிச்சயம் எல்லாம் வேண்டாம் டா, எப்படியும் இரண்டு மாசத்துல கல்யாணம், கல்யாணத்துக்கு முன்னாடி நாள் வச்சுக்கலாம் என்ன?” என்று தம்பியிடம் கேட்க,
“அதுவும் சரிதான் அண்ணா” சுகுமாறன் ஒத்துக்கொள்ள,
புஷ்பாவோ,
“என்ன சரி? உங்க தம்பி சரி சொல்லிட்டா போதுமா மாமா? என்னைக் கேட்க மாட்டீங்களா? என்று கோபமாய்க் கேட்டார்.
“இல்ல..புஷ்பா” சக்திவேலன் தடுமாற,
“பத்ரிக்கும் மட்டும் நிச்சயம் வச்சீங்க இல்லையா? எங்களை கேட்டா வச்சிங்க? சர்வாவோட கல்யாணம் என்னோட ஆசைப்படி நடக்கணும், என் பையனுக்கு அப்படி செய்யனும் இப்படி செய்யனும்னு ஆசை இருக்காதா?” என்று புஷ்பா சொல்ல,
சர்வாவோ,
“அப்படி செய்றேன் இப்படி செய்றேன்னு நல்லா வச்சு செய்யப்போற ம்மா” என்றான் நக்கலாக.
“சர்வா!” என்று அதட்டினார் சக்தி.
“பெரியப்பா, அண்ணாவுக்கு ஆறு மாசம் கழிச்சுக் கல்யாணம் வச்சீங்க, ஸோ நிச்சயம் பண்ணுனாங்க, அதையே எனக்கும் செய்ய சொல்றது நல்லாவா இருக்கு?” என்ற அம்மாவைப் பார்த்தவன்,
“உனக்கு என்ன என்ன ஆசை இருக்கோ எல்லாம் சொல்லும்மா, நம்ம இரண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு அப்புறம் எல்லார்கிட்டவும் சொல்லுவோம், டீல்?” என்று புஷ்பாவிடம் பொறுமையாகப் பேச,
“இல்லை, இல்லை. நீ ஏமாத்துவ, நான் சொல்றதெல்லாம் கேட்டுட்டு உன்னிஷ்படி மாத்திடுவ நீ” என்று புஷ்பா பட்டென சொல்லிவிட,
“நல்ல சர்டிஃபிகெட் டா உனக்கு?” என்றான் பத்ரி சிரித்துக்கொண்டே.
“உன்னை தனியா சமாளிக்க முடியாதுன்னு இங்க வச்சுப் பேசுறா டா உங்கம்மா” என்று சுகுமாறனும் சொல்லி சிரிக்க,
“ஓகே உங்க அஜெண்டா என்னனு சொல்லிடுங்க, நான் பார்த்துட்டு ஃபைனல் பண்ணிடுறேன்” என்றபடி சர்வா எழ,
“டேய் கல்ச்சுரஸா நடத்துற? கல்யாணம் டா” என்று சக்தி பேச,
“இரண்டுமே ஒன்னுமாதிரிதான் தெரியுது பெரிப்பா எனக்கு, இதெல்லாம் கேட்டா நீங்க ஒன்னு சொல்ல, நான் ஒன்னு சொல்ல வீண் டென்ஷன். நீங்க முடிவு பண்ணி எல்லாம் சொல்லுங்க, அப்புறம் சேஞ்சஸ் இருந்தா நான் சொல்றேன்” என்றதும்,
“நீ ஒன்னு சொன்னா பரவாயில்லை சர்வா, ஓராயிரம்ல சொல்லுவ” என்று ரேஷ்மி சொல்ல,
“அட ரேஷ்! ஹைஃபை” என்றான் பத்ரி.
‘ஓராயிரம்’ என்ற வார்த்தையில் ரசிகாவின் நினைவு வந்தது. அவள் தயங்கி தயங்கி பாடிய பாடலும் கூட நெஞ்சமதில் நினைவாய் வீச, அந்த நினைவூட்டலில் முகம் இன்னும் புன்னகைக் கொண்டது.
“ஓகே நீங்க பேசுங்க, எனக்கு வேலை இருக்கு பை” என்று சர்வஜனன் வெளியேறினான்.
இவர்கள் எல்லாம் பேச உமாவிற்கு பொறுக்கவில்லை, சர்வா சிரித்தபடி வெளியே போக,
“நில்லு சர்வா? அன்னிக்கு ரசிகாவை லவ் பண்ணலன்னு சொன்ன?” என்று உமா வெளியே வந்து யாருக்கும் கேட்கா வண்ணம் மெதுவாய்க் கேட்க,
“ஆமா சொன்னேன்” என்றான் கைகளைக் கட்டிக்கொண்டு.
“சத்தியமெல்லாம் செஞ்சியே டா”
“சத்தியம்தான் செஞ்சேன், சப்பாத்தியா செஞ்சேன்?” என்றான் நக்கலாக.
“சர்வா பொறுப்பா பேசுடா, இப்போ என்ன திடீர்னு அவளை லவ் பண்றேன்னு சொல்ற?”
“நான் லவ் பண்றேன்னு சொல்லவே இல்லை, அவளைக் கல்யாணம் செய்யப்போறேன்னுதான் சொன்னேன்” என்றான் அழுத்தமாக.
“சர்வா! பிடிக்கும்னுதானே கல்யாணம் செய்றவரைக்கும் போற?” என்ற உமாவைப் பார்த்தவன்,
“என்ன பிரச்சனை பெரிம்மா உங்களுக்கு? அவளைக் கல்யாணம் செய்யறதுல என்ன கஷ்டம் ஆர் நஷ்டம் உங்களுக்கு?” என்றான் கடுப்பாக.
“இல்லடா அன்னிக்குப் பிடிக்கல சொன்னியே? திடீர்னு” என்று இழுக்க,
“அன்னிக்கு சொன்னேன், இன்னிக்கு இல்லை ஓகே!” என்றான் இன்னும் கடுமையாக.
“என்ன எங்கிட்ட கோவப்படுற, அன்னிக்கு தப்பு செஞ்சது நீ? என்னமோ என் மேல தப்புன்றது மாதிரி நடக்குற” உமாவிற்கு அவனின் பேச்சுப் பிடிக்கவில்லை. சர்வாவிற்கு உண்மையை சொல்ல மனமில்லை, சொல்லித்தான் என்னை இவர் நம்புவாரா என்ற எண்ணம்.
உடைந்தது உடைந்ததுதான்!
“எஸ், தப்பு செஞ்சிட்டேன். அது தெரிஞ்சும் என்னை அடிச்சாரே உங்கண்ணன் மிலிட்டரி அவரே பொண்ணு கொடுக்கிறார். இதுல உங்களுக்கு என்ன?” என்றவன் கோபமாய் அவன் வீட்டிற்கு காம்பவுண்டைத் தாண்டிக் குதித்து சென்றான்.
அதுவரைக்கும் வேறு மாதிரி சிந்தனையில் இருந்த உமாவின் அறிவு இறுதியாய் சர்வா சொல்லிவிட்டு போனதில் நிலைத்தது. தனக்கே சர்வாவின் மீது இன்னும் கோபம் இருக்கும்போது, அண்ணன் எப்படி ஒத்துக்கொண்டார் என்பதே அவரின் யோசனையாய் இருந்தது.
*****************
“ரசி மேடம் கோபமா இருக்கீங்களா?” என்று இவன் அழைப்பை ஏற்றவளிடம் கேட்க,
“சர்வா போன் பண்ணினதுல ரசி மேடம் ஹாப்பியோ ஹாப்பி” என்று இந்த பக்கம் உற்சாகம் சொட்ட சொட்ட பேசினாள் ரசிகா.
“இல்ல டி உன்னைக் காலேஜ்ல வச்சுப் பேசிட்டேன்ல, சமாதானப் புறாவைப் பறக்க விடுறதுக்குள்ள மிலிட்டரி பரெட் நடத்திட்டார்” என்றவன்,
“அது நீ உன் ப்ரண்ட்கிட்ட எல்லாம் சொல்லவும் ஒரு டென்ஷன், முன்னாடியே அந்த கோவம் இருந்துச்சு, இப்பவும் நீ சொல்லவும் கோவம் எனக்கு”
“பெரிய ரகசியம், தக்காளி சாதம் நல்லாயிருக்குன்னு சொன்னீங்க” என்று ரசிகா சொல்ல,
சத்தமாய் சிரித்த சர்வா, “தக்காளியோ வெங்காயமோ நம்ம பேசினது நமக்குள்ளதான் இருக்கணும் ரசி, இப்போ மேரேஜ் பண்றதால சொல்லல, ஒருவேளை உன்னோட அந்த க்ரஷ் லவ்வா மாறாம இருந்து வேற யாரையும் மேரேஜ் செய்யற மாதிரி இருந்தாலும் இதைத்தான் நான் சொல்லுவேன். உன்னோட ப்ரண்ட் நல்லவங்களாவே இருக்கட்டும், ஆனாலும் உன்னை மத்தவங்க ஜட்ஜ் பண்றது எனக்குப் பிடிக்காது” என்றான் அழுத்தமாய்.
அவன் அக்கறையில் அகமும் அவள் விழியும் கசிந்தது.
“தேங்க்ஸ்” குரல் கமற வந்தது பெண்ணிடமிருந்து.
“லவ் பண்றன்னு சொல்ற, லவ் சொல்றியோ இல்லையோ தேங்க்ஸ் மட்டும் நிறைய சொல்ற ரசி நீ”
“சர்வா நீங்க ரொம்ப ஆசைப்பட்டு கிடைக்காம எதாவது விஷயம் இருந்திருக்கா?” என்று ரசிகா அவன் கேள்விக்குப் பதில் கேள்வி கேட்க,
“நாட் அட் ஆல், நம்ம வீட்ல யாராவது ஒருத்தங்க கண்டிப்பா நிறைவேத்திடுவாங்க, ஏன்?”
“அதான் உங்களுக்கு என்னோட ஃபீலிங் தெரியல, ஆஸ்கார் வைல்ட் சொன்னது சொன்னீங்களே, ஹெல்ன் கெல்லர் என்ன சொல்லியிருக்காங்க தெரியும் the best and most beautiful things in the world cannot be seen or even touched – they must be felt with the heart, அப்படியான ஒரு ஃபீலிங் எனக்கு”
“என்னமோ அலாவூதினுக்கு அற்புத விளக்கு கிடைச்சிட்ட மாதிரி இருக்குடி நீ எனக்குக் கொடுக்கிற பில்டப்” கிண்டல் செய்தான் சர்வா.
சில உணர்வுகள் சொல்லில் எழுத்தில் வடித்தோ வரையறுத்துவிடவோ முடியாது, அதை உணர்வதே ஒற்றை வழி!
“அலாவூதின் விளக்குன்னே வச்சிக்கோங்க, நம்ம ரொம்ப ரொம்ப விரும்புற ஒரு விஷயம், கிடைக்காதுன்னு அதை விட உறுதியா தெரியும். ஆனா அதை மனசு அவ்வளவு நேசிக்கும். அப்படித்தான் சர்வா நீங்க எனக்கு. சின்னதா கூட நீங்க என்னை கல்யாணம் செய்ய ஒத்துப்பீங்கன்னு நான் நம்பவே இல்லை. அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சு கத்துனப்ப கூட ஐ ஃபெல்ட் பெட்டர், ஒரு விடுதலை உணர்வு. ஆனா இப்போ ஒரு முழுமையான உணர்வு. நீங்க வீட்டுக்கு வந்த பிடிச்சிருக்கு சொல்லவும்தான் எனக்கே உங்களை நான் எவ்வளவு எதிர்ப்பார்த்திருக்கேன் தெரியுது”
“அற்புத விளக்குன்னு சொல்லிட்டு டெய்லி என்னை தேய்ச்சிட்டு இருக்க கூடாது புரியுதா?” என்றவனின் பேச்சில் ரசிகா சிரித்துவிட்டாள்.
“தேய்க்காமதானே இருந்துட்டா போச்சு” ரசிகாவும் கிண்டல் செய்தாள்.
“நான் உணராத ஃபீலிங்க்ஸை நீ சொல்ற ரசி, நீ இவ்வளவு விரும்பற அளவு நான் என்ன செஞ்சேன்னு எனக்குத் தெரியல”
சர்வா நினைத்ததைப் பேச,
“அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல நீங்க நான் பேசினதைக் கேட்டீங்களான்னு கூட தெரியல எனக்கு, காது போச்சோன்னு கூட நினைச்சேன்” ரசிகா கொஞ்சம் கடுப்பில் சொல்ல,
“ரசிம்மா எப்படியும் யாரோ ஒரு பொண்ணைக் கல்யாணம் செய்யணும் நான், அது நீயா இருந்தா ஐ அம் ஹாப்பிதான், உனக்கு என்னைப் பிடிக்கும்னு தெரிஞ்ச பின்னாடியும் உன்னைக் கஷ்டப்படுத்தி வேற கல்யாணம் செய்ய எனக்கு இஷ்டமில்லை”
“கஷ்டப்படுத்தாம இருக்கணும்னு நினைக்கிறது காதல் இல்லையா?” ரசிகா மெல்லமாய்க் கேட்க,
“எது காதல்? எது காதல் இல்லைன்னு ஆராய்ச்சியெல்லாம் நமக்கெதுக்கு? நான் என்ன செய்றேன்னோ அதான் உனக்குக் காதல், நீ என்ன செய்றியோ அதான் எனக்குக் காதல், சிம்பிள்” என்றவனின் பேச்சில் இன்னும் காதல் மீகியது ரசிகாவிற்கு.
Very nice.
நான் என்ன செய்றேனோ