கல்லூரியில் பணி செய்யும் ஹெச்ஓடியின் மகனின் திருமண விழா, அதற்காக சக்தியும் உமாவும் சென்றிருக்க, சிவசங்கரனும் அவர்களுடன் ஒன்றாய்க் காரில் போய்விட்டார். ரசிகா வீட்டில் தனியே இருக்க வேண்டாம் என்று நினைத்து இங்கு ரேஷ்மியுடன் விட்டுச் சென்றிருந்தார்.
ரேஷ்மியும் ரசிகாவும் வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கதைப் பேசிக் கொண்டிருக்க, பத்ரி அப்போதுதான் டியுட்டி முடிந்து வந்தவன்,
“அட டா! என்ன ரசிம்மா ஸர்ப்பரைஸ் தர? சர்வா எங்க அவனைக் காணும்?” என்று உள்ளே போகாமல் வாசலில் நின்று கதைப் பேச,
“சர்வாக்கு இவ வந்தது தெரியாது, அவன் வரட்டும். சர்ப்பரைஸா இருக்கட்டும். சிவா அங்கிள் அத்தை மாமா கூட ரிஷப்ஷன் போயிருக்காங்க. அதான் ரசி இங்க வந்துட்டா” என்று கணவனிடம் சொன்னாள் ரேஷ்மி.
“உள்ளே போய் டிரஸ் மாத்திட்டு அமைதியா வாங்க, உங்க தம்பிக்குப் போன் பண்ணீங்க, அவ்வளவுதான்” ரேஷ்மி செல்லமாய் மிரட்ட,
“என் தம்பி என் கார் சத்தம் கேட்டே வந்துடுவான், நீ வேணும்னா பாரு” என்று சொல்லி அவன் உள்ளே போனான்.
“அக்கா, அவரும் நானும் டெய்லி காலேஜ்ல பார்த்துட்டுதானே இருக்கோம். என்ன ஸர்ப்ரைஸ் இதுல?” என்று ரசிகா சிரித்தாள்.
ஆம், இருவரும் கல்லூரியில் பார்த்துக் கொண்டாலும் சின்னதாய் ஒரு தலையசைப்பு. அதுவும் கூட அரிதே, பேச்சே இருவருக்குள்ளும் கிடையாது. சர்வா தான் இருக்கும் பொறுப்புக்கு ஏற்றபடி பொறுப்பாய் நடப்பான். ரசிகாவிற்கு அவனைக் கண்ணாரக் கண்டாலே போதும். அவள் நாள் பூத்துவிடும்.
“அதெல்லாம் இருக்கட்டும், உங்க லவ் ஸ்டோரியை இன்னிக்கு சொல்ற, அத்தை மாமா இரண்டு பேரும் இல்லை. எனக்கும் பத்ரிக்கும் தலையே வெடிக்குது. அவனும் சொல்லாம எஸ் ஆகிடுறான், நீயும் ஆளைக் காணும்” என்றாள் ரேஷ்மி ஆர்வமாக.
“அவர் வருவார், அவரே கேளுங்க க்கா” என்று சொல்லி ரசிகா அமைதியாகிவிட்டாள்.
அவளுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை. அவனானால் எதாவது சொல்லி சமாளிப்பான் என்று நினைத்திருக்க, பத்ரி உடைமாற்றி வரவும் சரியாக சுவரில் ஏறி அப்படியே அதன்மேல் உட்கார்ந்தான் சர்வா. அவன் அப்படி வந்தது அவளுக்கு ஆச்சரியமென்றால், அவள் வந்தது அவனுக்கு ஆச்சரியம்.
“ரசி சொல்லவே இல்லை வரன்னு” என்று அவன் விழிகள் ஆவலாய் அவளிடம் கதைப் பேச,
“பார்த்தியா? சர்வா எப்படி எக்சைட் ஆகுறான்னு, நீ என்னமோ சொன்ன?” என்று ரேஷ்மி வம்பு செய்ய,
“என்ன சொன்னாங்க மேடம்?” என்று ரேஷ்மியைப் பார்த்தான்.
“நீங்க இரண்டு பேரும் டெய்லி காலேஜ்ல பார்த்திருப்பீங்களாம், அதனால் நீ இவளைப் பார்த்தாலும் பெருசா ரியாக்ட் செய்ய மாட்டன்னு சொன்னா” என்றதும் ரசிகாவின் பக்கம் பார்த்தவன்,
“நீ என்னைப் பார்க்கிறன்னு வேணும்னா சொல்லு, காலேஜ் கரெஸா போனதால் நான் கெத்தை மெயிண்டெய்ன் பண்றேன்னு உன்னை எங்க பார்த்தேன்?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.
பத்ரியும் தம்பியைப் போலவே தாவி காம்பவுண்டின் மீதேறி உட்கார்ந்தவன்,
“அந்த பஞ்சாயத்தை எல்லாம் அப்புறம் வை ராசா, முதல்ல உங்க காதல் கதையை சொல்லு” என்று தோள் மீது கைப்போட்டு கேட்க, ரசிகா என்ன சொன்னாளோ என்று சர்வா அவளைப் பார்க்க, ரேஷ்மி உடனே,
“அவளைக் கேட்டுப் பார்த்துட்டேன், சும்மாவே கொஞ்சம்தான் பேசுவா. மேடம் வெட்கப்படுறாங்க நினைக்கிறேன்” என்று ரேஷ்மி சிரித்தாள்.
“என்ன ரேஷ்ணி உங்களுக்கு எங்க காதல் கதைதானே வேணும், டேய் திரி உனக்கும் வேணுமா?” என்று அண்ணனிடமும் கேட்க, அவர்களை விடவும் சர்வாவை ஆவலுடன் என்ன சொல்வான் அவன் என ரசிகாவின் விழிகள் பார்த்தன.
சர்வாவோ மிகவும் இயல்பாக,,
“அது என்னடா காதல் இருந்தா கதை இருக்கனுமா? இது என்ன மணிரத்னம் படமா?” என்றதும் பத்ரியை ரேஷ்மி முறைத்தபடி,
“பத்ரீ” என்று கத்த,
“டேய் உன் அண்ணி டென்ஷன் ஆகுறா பாரு, உண்மையை சொல்லேன் டா” பத்ரி கெஞ்சினான்.
“கூடவே தானேடா சுத்துனீங்க, எப்போ இந்த லவ் வந்துச்சு. எங்களுக்குத் தெரியாம ஒரு வார்த்தைக் கூட பேசி நான் பார்க்கலையே டா” என்றான் பத்ரி.
“உன் முன்னாடி பேசணுமா என்ன? வீட்ல அம்மா கல்யாணம் செய்யணும்னு சொன்னப்போ ரசிகாவை மட்டும்தான் மனசு நினைச்சது. அதனால் கல்யாணம் செய்றேன் போதுமா?” என்றதும்,
“அப்போ ரசிகாவுக்கு?” ரேஷ்மி ரசிகாவைப் பார்க்க,
“எனக்குப் பிடிச்சது நான் சொன்னேன். அவளுக்குப் பிடிக்குமா கேட்டேன் பிடிச்சதுன்னு சொல்லிட்டா” என்றான் கூலாக.
“இதுல எங்கடா காதல் வந்துச்சு?” பத்ரி கடுப்பாகத் தம்பியைக் கேட்டான்.
“இதோ” என்று அவன் விரல்கள் ரசிகாவை நோக்கிக் காட்ட,
“ஆஹான்!” என்று ரேஷ்மி உற்சாகமாய்க் கத்த,
“ஹே! சத்தமா சிரிக்காத ரேஷ்” என்ற பத்ரி,
“உன்னையெல்லாம் நம்பி கதைக் கேட்டேன்ல என்ன சொல்லணும், நீங்க பேசுங்க. நாங்க வாக்கிங் போய்ட்டு வரோம்” என்று பத்ரி ரேஷ்மியுடன் அவர்கள் வீடு இருந்த தெருவில் நடைபயின்றனர்.
ரசிகா இன்னும் ரசித்தவண்ணம் இருந்தாள் சர்வாவை. கண்களில் லேசாய் நீரும் கூட. தன்னை எங்கேயும் எப்போதும் அவன் விட்டுக்கொடுத்ததில்லை, காதல் இல்லையென்று சொன்னாலும் இத்தனை தூய்மையான அன்பு அவன் காட்ட அதில் நனைந்து போனாள் நங்கை.
“ரசீ! என்ன பார்த்துட்டு இருக்க?” என்று சர்வா கேட்கவும் ஒன்னுமில்லை என்று தலையசைத்தாள் ரசிகா.
“என்கிட்ட சொல்ல என்ன டி?” என்றான் சலிப்பாக. அவளை பார்த்தவன்
“இங்க வந்து உட்காரு ரசி, ஜாலியா இருக்கும். அங்க பாரு பத்ரியும் அண்ணியும் வாக்கிங் போறது கூட தெரியுது. அழகா இருக்கு வா” என்று அழைத்தான்.
ரசிகாவோ முழித்தாள். காம்பவுண்ட் சுவர் மேல் ஏறி உட்காருவதா, இவன் உட்காருவதற்கே இவளுக்குப் பயமாய் இருக்கும். ஆனால் ஆசையாகவும் இருந்தது.
“வா ரசி” என்று அவன் மீண்டும் அழைக்க,
“அப்பாவுக்கு இப்படி உட்கார்ந்தா பிடிக்காது சர்வா” என்றாள் மெல்லமாக.
“உனக்குப் பிடிக்கும்தானே? மாமா கிட்ட நான் சொல்லிக்கிறேன், நீ சின்னப்புள்ளையில இப்படி உட்கார்ந்தா திட்டதான் செய்வாங்க. இப்போ என்னடி பயம். வா நீ” என்றான் விடாப்படியாக.
“ஓகே, அட்வைஸ் பண்ணாதீங்க. வரேன்” என்றவள் உட்கார்ந்திருந்த நாற்காலியை சுவரோரமாய்ப் போட்டு அதன் மேல் ஏற சர்வஜனன் சிரித்தே விட்டான்.
“ஹாஹா, என்னடி பண்ற நீ? சும்மா குதிச்சு ஏறு” என்று இன்னும் சிரிக்க,
“ம்ஹூம், எனக்குப் பயமா இருக்கும். நான் இப்படியே ஏறுறேன்” என்றாள்.
“நான் வேணும்னா தூக்கி உட்கார வைக்கவா?” கிண்டலாக சர்வா கேட்டான். அதற்குள்ளாகவே ரசிகா நாற்காலி மீது ஏறி சுவரில் உட்கார்ந்துவிட்டாள். இருவருக்கும் இடையே இடைவெளி பெரிதாய் இல்லை, கொஞ்சம் நகர்ந்தால் தோள்கள் இடித்துக்கொள்ளும்.
“தேங்க்ஸ்” என்றாள் அவனைப் பார்த்து.
“ஏன் இந்த தேங்க்ஸ்?”
“இல்லை, நீங்க அண்ணா கேட்டப்பவும் ஒன்னுமே சொல்லல இல்லையா? என்னவோ சொல்லி சமாளிச்சிட்டீங்க” என்றதும் சர்வஜனன் முறைத்தான்.
“சமாளிச்சேனா?” என்று கேட்டவன்
“என்ன சமாளிச்சேன் நான்?” என்றான் கோபமாக.
“காதல் கதை கேட்டா நீங்க என்னைக் காட்டினீங்க” ரசிகா மெல்லமாய் முணுமுணுக்க,
“ஆமா, காட்டினா சமாளிக்கறதா? எனக்கு லவ் சொன்ன பொண்ணு நீதானே? அப்போ உன்னைத்தான் காட்ட முடியும் ரசி. காதலுக்கு உருவம் இருக்கா என்ன? இருந்தா அதைக் காட்டுறவங்கதானே காதல்?” என்று கேட்க ரசிகா பேச்சற்று அவனைப் பார்த்திருந்தாள்.
“அவன் காதல் கதை கேட்டா நான் என்ன மணிரத்னமா இல்லை ஜிவிஎம்மா கதை சொல்ல? எனக்கு காதல்னா ஃப்ரஸ்ட் ஞாபகம் வரது ரசிகாதான்” என்றான் அழுத்தமாக. அதனையும் விட இன்னும் அழுத்தமாய்,
“எல்லாம் விட எந்த தக்காளி வெங்காயம்னாலும் நம்மக்குள்ளதான். அது முன்னாடி நீ ஜஸ்ட் என் ப்ரண்டா இருந்தப்பவும் சரி மனைவியான பின்னாடியும் அதேதான். புரிஞ்சதா?” என்று கேட்க அவள் கண்களில் இருந்து நீர்த்துளி திரண்டு கன்னங்கள் நனைக்க,
உடனே தன் கரத்தால் துடைத்த சர்வா, “என்னாச்சு ரசி? ஏன் அழற? உன்னை இப்படி பார்த்தா பத்ரியே என்னை அடிப்பான்” என்றான் சீரியசாய்.
“இல்லை, ஐ அம் ஹாப்பி” என்றவள் மனதில் எந்த அழுத்தமும் இல்லை.
அந்த மஞ்சள் மாலையும் கொஞ்சும் காற்றும் கொள்ளைக் கொள்ளும் காதலனும் செவ்வானமும் எல்லாம் சேர அத்தனையும் மங்கைக்கு மஞ்சிமம் கூடிய பொழுதுகள் ஆயின. அந்த இத உணர்வில் அப்படியே சர்வாவின் தோளில் சாய்ந்துகொள்ள, அதனை சர்வா எதிர்ப்பார்க்கவில்லை. இருந்தும் உடனே அவனின் கரங்கள் அவளை சூழ்ந்து கொண்டன.
“நிஜமா நீங்க இல்லைன்னா நான் இவ்வளவு ஹாப்பியா ஒரு நிறைவான ஃபீல் இருந்திருக்காது சர்வா எனக்கு. எனக்கு உன் கூட இருக்கும்போது அம்மா கூட இருக்கற மாதிரி இருக்கு. எனக்கு.. வார்த்தையால சொல்ல முடியல. என்னோட மனசு எல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சர்வா” என்றதும்,
“வார்த்தையால சொல்ல முடியலன்னா டோண்ட் வரி ரசி, ஹக் கிஸ்னு அதர் வேஸ் இருக்கு” என்றான் குறும்பாக.
அவனில் மனம் லயித்திருந்த ரசிகாவும் லாளிதமாய் புன்னகைத்து,
“அதர் வேஸ்ல சொல்லக் கூட ஆசையாத்தான் இருக்கு” என்றாள் முதன் முறையாக வாய்த் திறந்து.
“ரசி!” என்று ஆச்சரியமாய்ப் பார்த்தான் சர்வா.
“நிஜமா தோணுது” என்றாள் மீண்டும்.
“தோணினா உடனே செஞ்சிடனும். லாங் லாங் அகோ ஒரு கிஸ் கொடுத்தியே பச்சக்னு அது மாதிரி ஒன்னு கொடேன்” என்று சர்வா கேட்கவும் ரசிகாவின் முகம் மாறிவிட்டது. அந்த நிலா முற்றத்து முத்தம் அவள் நினைவுகளை கிளறிவிட்டது.
உடனே சர்வா அவளின் கையைப் பிடித்து,
“இப்படி இருக்காத ரசி, நான் விளையாட்டாதானே சொன்னேன். இதே இப்பவும் நம்ம ப்ரண்ட்ஸா மட்டும் இருந்திருந்தா அந்த டாபிக்கே பேசியிருக்க மாட்டேன். இப்ப நம்ம கல்யாணம் செஞ்சுக்க போறோம் ஒரு ஜாலிக்காக சொல்லிட்டேன், அந்த ஏஜ்ல தெரியாம செஞ்ச விஷயம் அது. உன்னை இவ்வளவு ஹார்ஷா நீயே நடத்தாத. தப்புன்னா ஐ அம் ஸாரி” என்றான் மிகவும் பொறுமையாக.
“இல்லை என் மேல தானே தப்பு. நீங்க ஜோவியலா பேசினீங்க, நான் தான் ஓவர் திங்க் பண்ணிட்டேன், இப்போ நான் ஓகேப்பா” என்று சொல்லி புன்னகை செய்ய,
“நான் நம்ப மாட்டேன், நீ தீடீர் சந்திரமுகியா மாறிடுற டி” என்றான் அவன்.
“நிஜமா சர்வா, இனிமே இப்படி எல்லாம் யோசிக்க மாட்டேன். ப்ராமிஸ் எந்த தக்காளி வெங்காயமானாலும் நமக்குள்ளதான் இனி” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு ரசிகாவும் பேச,
வீட்டுப்பக்கமாகத் தானே நடந்து கொண்டிருந்தனர் பத்ரியும் ரேஷ்மியும், அவர்கள் கண்ணில் இந்த காட்சி விழுந்தது.
“அடேய்! உடன் பிறந்தவனே என்னடா செய்ற? உன்னை நம்பி விட்டுப்போனேனே என்னை வந்து மிலிட்டரி மாமா கழுவி ஊத்தவா? டிஸ்டன்ஸ் மெயிண்டெய்ன் பண்ணுடா பக்கி” என்றான் பத்ரி.
“நீ மட்டும் அண்ணி கையைப் பிடிச்சிப்பியாம்? நான் ஏன் டா டிஸ்டன்ஸ் மெயிண்டேய்ன் செய்யனும்?” என்றவன் வேண்டுமென்றே ரசிகாவின் தோளில் கைப்போட்டான்.
Very nice.
Lovely epi
காதல் என்றால் நீ தான்