Episode 17
சர்வஜனன் சிறுவயது முதலே சேட்டைக்காரன், அதனால் அவன் தன்னிடம் இப்போது விளையாடுவதை எந்த வகையில் சேர்ப்பது என்று ரசிகாவிற்குக் குழப்பம். அதனையும் விட ரசிகாவின் மனம் சர்வஜனனை எப்போதும் ரசிக்கும்!
அதுவும் இப்போதெல்லாம் அது மிக மிக அதிகம். தள்ளி நிற்கலாம் என தத்தை நினைத்தாலும், அவன் அவளை ஈர்த்துக் கொண்டும் தன் பக்கம் இழுத்துக் கொண்டும் இருந்தான்.
தவிக்க வைத்தான் பெண்ணை, அவளும் தவித்துப் போனாள். அன்பை அடைத்து வைத்து அகத்தினில் ரசிகாவிற்கு வெளியே சொல்ல முடியாத அழுத்தம். இருந்தும் சர்வாவின் முன் இன்னொரு முறை உடைந்துவிடக் கூடாதென தெளிவாய் இருந்தாள் ரசிகா.
அந்த வார இறுதியில் புஷ்பாவே மகனிடம் வந்து ரசிகா பற்றிப் பேசினார். அவரிடம் சர்வா ஒரு வாரமாய் சரியாகப் பேசவில்லை, மீண்டும் மகன் தன்னை விட்டு விலகுகிறானோ என்ற அச்சம் அவரிடம் தென்பட்டது. இப்போது சில நாட்களாகத்தான் அவருடன் அதிக நேரமிருக்கிறான். முன்பெல்லாம் உமாவின் வீட்டிற்குப் போனால் அங்கேயே உணவை முடித்து வந்துவிடுவான்.
இப்போது அங்கே எவ்வளவு நேரம் அண்ணனுடன் அரட்டை அடித்தாலும் கூட உணவுக்கு அவன் வீடுதான் என்று மாறியிருந்தான்.
“எப்போ இருந்து உனக்கு ரசிகாவைப் பிடிக்கும் சர்வா?” என்று டீவி பார்த்துக் கொண்டிருந்த அவன் பக்கத்தில் உட்கார்ந்து கேட்க,
“எப்பவும் பிடிக்கும்தான், இப்போ கொஞ்ச நாளா கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைக்கிற அளவு பிடிக்குது, ஆமா இதை நீங்க ஏன் கேட்குறீங்க?” என்றதும் புஷ்பா முறைத்தார்.
“பின்ன உங்க இஷ்டப்படி மருமக வேணும்னு சொன்னீங்க, ரசிகாவை சாய்ஸ்ல கூட சேர்க்காத ஆளுதானே நீங்க” என்றான் வேண்டுமென்றே.
சுகுமாறன் மனைவியிடம் எடுத்துக் கூறியிருந்தார்.
“ரசிகா ரொம்ப நல்ல பொண்ணு, அமைதியான பொண்ணும் கூட. இப்போ நீ அவளுக்கு வேண்டியதை செஞ்சு அவளை நல்லா பார்த்துக்கிட்டாலே போதும் உனக்குப் பிடிச்ச மருமகளா அவ இருப்பா. சும்மா உன்னை நீ அண்ணி கூட கம்பேர் செய்யாத புஷ்பா, சர்வா நம்ம மகன். அவனோட சந்தோஷம் நமக்கு முக்கியமில்லையா? அதை மட்டும் யோசி” என்று நிறைய பேசி கரைத்திருக்க அது நன்றாய் அவரிடம் வேலை செய்தது.
“ரொம்ப பண்ணாதடா, உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்ற, அதனால ஒத்துக்கிறேன்” என்று அவர் ஒருவாறாக ஒத்துக்கொள்ள,
“இப்போ இப்படி சொல்லிட்டு நாளைக்கு அவளைக் கொடுமை செஞ்சா?” என்று சர்வா புருவம் உயர்த்த,
அவனின் முதுகில் அடித்தவர்,
“என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?” என்றார் கோபமாக.
“எல்லா அம்மாவும் நல்ல அம்மாதான், ஆனால் எல்லா மாமியாரும் நல்ல மாமியார் கிடையாது” என்றதும்,
“ஓவரா பண்ணாதடா” என்று அவர் இன்னும் முறைக்க,
“ஹாஹா, சும்மா சொன்னேன்மா” என்று சிரித்தவன் அவரின் தோளில் சாய்ந்துகொண்டு,
“உங்களுக்கு ரசியைப் பிடிக்கும் ம்மா, வரீங்களா போய் பார்த்துட்டு வருவோம்” என்று கேட்டான்.
“டேய்! பெரியப்பா கிட்ட கூட இன்னும் சொல்லல. அதுக்குள்ள அவசரப்படுற” என்றார் அவர் மகனின் வேகம் கண்டு.
“என்னை அவங்களை முக்கியமா நினைக்காதன்னு சொல்லிட்டு, இப்போ நீங்க என்னவாம்?” என்றதும்,
“ம்க்கும், நீங்க என்னை அப்படி பழக்கி வச்சிருக்கீங்க”
புஷ்பா நொடிக்க,
“மா, சும்மா போய் பார்த்துட்டு வருவோம். அவளுக்கு லாஸ்ட் வீக் ஒரு மைனர் ஆக்ஸீடெண்ட், கால்ல சுளுக்கு ஆயிடுச்சு. காலேஜ்ல பார்த்து சரியா பேச முடியல. அதான் கேட்கிறேன்”
“ஏன் அவ கிட்டவும் இப்படி ஓவரா பேசினியா?” என்றதும்,
“அய்யே! அவ என்னைப் பேசவே விடமாட்டா, அவங்கப்பா மிலிட்டரி மாதிரி அவ ரூல்ஸ் போடுவா. காலேஜ்ல அவங்க ஸ்டாஃபாம். ஸோ எங்கிட்ட பேச மாட்டா” என்றான் கடுப்பாக.
“லவ் பண்ற உங்கிட்ட கூட பேச மாட்டாளா?” புஷ்பா ஆச்சரியத்தைக் கண்களை விரிக்க,
“அவ எங்க லவ் பண்ணினா? இது அரெஞ்ச் மேரேஜ்தான்” என்று குழப்பினான்.
“டேய் பிடிச்சிருக்குன்னு சொன்ன, அவளுக்கு உன்னைப் பிடிக்காதா அப்போ?” என்று புஷ்பா புரியாமல் முழிக்க,
“மா, நீங்க அரெஞ்ச் பண்ணுங்க, லவ் நான் பண்ணிக்கிறேன்” என்றதும் இன்னும் அவர் முறைத்துப் பார்த்தான்.
“பிடிச்சிருக்குன்னா இவளைக் கல்யாணம் செய்யணும்னு ஆசை, அதுக்காக லவ் எல்லாம் சொல்லிக்கல. இனிமேதான் சொல்லணும்” என்று சர்வா சொல்லவும் புஷ்பாவின் முகம் கவலையாகிவிட்டது.
“சர்வா அப்போ ரசிகாவுக்கு உன்னைப் பிடிக்கலைனா?” என்று கவலையாய்க் கேட்டவர் அடுத்த நொடியே,
“பேசாம பெரியப்பாவை விட்டுப் பொண்ணு கேட்போம்டா, அப்போ சிவா அண்ணா ஒத்துப்பார்” என்றார் அவசரமாக.
தனது விருப்பத்தின் மேல் தாய்க்கு எத்தனை விருப்பம் என்று புரிந்தவன், அவரின் கன்னத்தைப் பற்றியவன்,
“மை ஸ்வீட் அம்மா, அதெல்லாம் சர்வாவை பிடிக்காம இருக்குமா? ரசிகாவுக்கு என்னைப் பிடிக்கும், ஆனா சொல்ல மாட்டா. நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்றவன் சோஃபாவில் இருந்து எழுந்து
“நீங்களும் சீக்கிரம் போய் ரெடியாகி வாங்க, சும்மா போய் உங்க மருமகளைப் பார்த்துட்டு வருவோம்” என்றவன் அறைக்குள் புகுந்து கொள்ள, மகன் பேச்சை புஷ்பாவால் மறுக்க முடியவில்லை அவரும் கிளம்பி நிற்க, சுகுமாறன் வந்துவிட்டார்.
“என்ன புஷ்பா? எங்க கிளம்பிட்டீங்க?” என்று அவர் கேட்க, புஷ்பா எல்லாம் சொல்லிவிட,
“அப்போ நானும் வரேன்” என்று அவரும் கிளம்பினார்.
“போலாமா?” என்று சர்வா வந்து நிற்க,
“இரு டா அப்பாவும் வரார்” என்றதும்,
“அப்போ பொண்ணு பார்க்கத்தான் போறோம் போல” என்று சொல்லி சிரித்தவன்,
“அப்போ வந்து நீங்க இன்னிக்கே பேசிடுங்கம்மா” என்றான் அதிரடியாக.
“டேய்! சும்மா பார்க்கலாம்னு சொன்னியே டா, பெரியப்பா வீட்ல சொல்லாம எப்படி?” என்று சுகுமாறன் கேட்க,
“பா, ஜஸ்ட் ஆரம்பிச்சு விடுங்க. நீங்க வேஸ்ட், ம்மா நீங்க ஆரம்பிச்சு விடுங்க” என்று புஷ்பாவைப் பார்த்து கண்ணடித்தான் சர்வா.
“சர்வா விளையாடாதடா” சுகுமாறன் கண்டிப்புடன் பேச,
புஷ்பாவும், “தெளிவா சொல்லு சர்வா, என்ன நினைக்கிற நீ? என்ன செய்யணும் நாங்க?” என்று கண்டிப்புடன் கேட்டார்.
“மா, அப்பா! அவளுக்கு சின்ன ஆக்ஸீடெண்ட் ஆச்சு, ஒரு வாரம் ஆச்சு நான் அவங்க வீட்ல அவளைப் பார்த்து. இப்போ வரைக்கும் என்னோட விருப்பம் சொன்னதில்லை. நீங்க இன்னிக்கு ஜஸ்ட் இப்படி சர்வாவுக்கு ரசியைப் பிடிக்கும்ன்ற மாதிரி மாமா கிட்ட பேசுங்க. அப்புறம் நம்ம பெரியப்பா கிட்ட பேசலாம்”
“இவ்வளவு சீரியஸ் ஆகாதீங்க இரண்டு பேரும்” என்று அவன் சீரியஸாகப் பேச,
“இதுல ரசிகாவோட விருப்பம் இருக்கு சர்வா, சிவாண்ணா என்ன சொல்வார் தெரியல” என்று சுகுமாறன் சொல்லவும்,
“அப்பா, அதெல்லாம் தெரியாமலா நான் பேசுறேன். ரசிக்கும் என்னைப் பிடிக்கும், நீங்க அதை நினைச்சுக் கவலைப்படாதீங்க” என்று பேசி அவர்களை ரசிகாவின் வீட்டிற்கு அழைத்துப் போனான்.
சிவசங்கரன் இவர்களின் வரவை எதிர்ப்பார்க்கவே இல்லை. உமாவும் சக்தியும் இப்படி வந்து போய் இருப்பார்களே தவிர சுகுமாறனும் புஷ்பாவும் ரசிகா பெரிய பெண் ஆனபோது ஒன்றாய் வந்ததுடன் சரி. அதனால் அவர் ஆச்சரியமாய்ப் பார்த்தவர், அவர்களை உள்ளே அழைக்க வீட்டிற்குள் நுழைந்தவுடனே சர்வா சிவசங்கரனிடம்,
“மாமா, ரசிகாவைப் பார்த்துட்டு வரேன்” என்று சொல்ல சிவசங்கரன் தலையாட்ட, சுகுமாறன் மகனை முறைத்தார்.
‘இவனுக்கு அதிகப்பிரசங்கித்தனம் ஜாஸ்தி’ என்று மனைவியிடம் முணுமுணுக்க,
“அவனுக்கு செல்லம் கொடுத்துட்டு இப்போ பேசுங்க” என்று புஷ்பாவும் கணவனைத் திட்டினார்.
சிவசங்கரனுக்கு மனதிற்கு என்னவோ நல்லதாகப்பட்டது. அவர் சமையல் வேலை செய்யும் பெண்ணிடம் சொல்லி இவர்களுக்குக் குடிக்க கொண்டு வர, சுகுமாறனும் சிவசங்கரனும் பொதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தனர்.
“ஹலோ ரசி!” என்றபடி கதவைத் தட்டிவிட்டு உள்ளே போனான் சர்வஜனன்.
“சர்வா! வரேன்னு சொல்லவே இல்லை” என்றவளைக் கிண்டலாய்ப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்தவன்,
“ஒருத்தி மனசுக்குள்ள நான் வந்தேன்னு சொல்லாம இருக்கா, நான் வீட்டுக்குள்ள வரேன்னு சொல்லணுமோ?” என்று புருவம் உயர்த்தினான்.
“சர்வா..?” என்ற ரசிகாவிற்குப் படபடவென வந்தது. நங்கையினுள் நடுக்கம், கண்களில் கலக்கம்.
“எதுக்கு வந்தேன்னு கேட்பியே நெக்ஸ்ட்? ரைட்?” என்று அவளைப் பார்க்க அவள் இன்னமும் இவன் தந்த அதிர்ச்சிகளில் இருந்த மீளவே இல்லை.
“கேளு ரசி” என்று அவன் சிரிக்க,
“என்ன சர்வா?” என்று ரசிகா கேட்க,
“பொண்ணு பார்க்க வந்திருக்கேன்” என்று அவன் கண்சிமிட்ட, அந்த கண்களுக்குள் தொலைந்துபோக நினைத்தவளுக்கு, இவன் தன்னுணர்வுகளுடன் விளையாடுகிறான் என்று கோபமும் சேர்ந்தே வந்தது.
கடினப்பட்டு காதலைக் கட்டுப்படுத்தி இவள் வைத்திருக்க, இவன் ஒவ்வொரு முறையும் சீண்டிக் கொண்டிருக்கிறானே என்ற எரிச்சல் மிக,
“விளையாடுறதுக்குன்னு ஒரு அளவு இருக்கு சர்வா” என்றவளுக்கு விழிகள் சிவந்து போக, வார்த்தைகளில் அவ்வளவு கோபம். முகம் முழுவதும் அந்த கோபம் விரவி இருந்தது.
“ஹேய் ரசி! ஏன் இவ்வளவு டென்ஷன்” என்று அவளின் கையைப் பிடிக்க, அவள் அதனை உதற,
“ரசி! நிஜமா உன்னைப் பொண்ணு பார்க்கத்தான் வந்திருக்கேன். நம்பலன்னா வெளியே வந்து பாரு அப்பா, அம்மா வந்திருக்காங்க” என்றதும் அவளுக்குப் பேச்சே எழவில்லை.
“எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு ரசி” என்றதும் உள்ளுக்குள்ளே உணர்வலைகள்! ஆனந்தம் அழுகை எல்லாம் கலந்த ஒரு நிலை.
பேசா மடந்தையானாள் பெண்!
“ரசி! என்ன அமைதியாட்ட?” சர்வா அவளைத் தன் முகம் பார்க்க வைத்துக் கேட்க,
“அப்போ அன்னிக்கு நான் பேசினதைக் கவனிச்சிருக்கீங்க அப்படித்தானே?”
“காது நல்லாதானே கேட்கும் எனக்கு, காதுல உன் காதல் நல்லா கேட்டுச்சு” என்றதும்,
“அதனால இப்போ பிடிச்சிருக்கு சொல்றீங்களா?” ரசிகாவிற்கு என்ன திடீர் காதல் என்ற கேள்வி ஓடியது. அது கேள்வியாகவும் வர,
“எஸ்” என்றதும் அவனை விட்டுத் தள்ளி நின்றவள் தீவிரமான குரலில்,
“அப்படி ஒன்னும் என்னைப் பிடிக்க வேண்டாம், இந்த ஃபீல் எல்லாம் மியுச்சுவலா இருக்கணும்” என்ற ரசிகாவின் பேச்சைக் கேட்டவன்,
“இப்ப என்ன உன் ப்ராப்ளம்? லூசு மாதிரி செய்யாதடி” என்றான் கடுப்பாக. அவள் முகம் அவன் பேச்சில் வாடிவிட,
“ரசி, காதல்னா இரண்டு பேருக்கும் அட் தி ஸேம் டைம் வரணும்னு இல்லை. ஒருத்தர் சொல்லி இன்னொருத்தர் அக்செப்ட் பண்ணிக்கிறதும் இருக்கு, ஆனா நீ சொல்லவும் இல்லை” என்றான் அழுத்தமாக.
அவன் அப்படி சொல்லவும் ரசிகாவின் விழிகள் அவனைப் பார்க்க,
“அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சு கோவத்துல கத்துனியே அதெல்லாம் கணக்குல சேராது” என்றான் நக்கலாக.
“நீ என்னை லவ் பண்ற, நான் உன்னை மேரெஜ் பண்றேன். புரிஞ்சதா?” என்று கேட்க அவள் விழித்தாள் அவனின் பேச்சில்.
“உன்னைப் பொருத்தவரைக்கும் இது லவ் மேரேஜ், எனக்கு அரெஞ்ச் மேரேஜ். அதாவது எனக்குப் பிடிச்ச பொண்ணை நான் கல்யாணம் பண்றேன்” என்றான் தெளிவாக.
சர்வா விளக்கமாய் சொன்னாலும் விழித்து நின்ற பெண்ணைப் பார்த்தவன்,
“ரசீ!! இம்சை பண்ணாதடி, உனக்கு லவ் வந்தா உடனே எனக்கும் லவ் வருமா? ஆஸ்கர் வைல்ட் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? To define is to limit(ஒன்றை விவரிப்பது அதனை வரையறுப்பது) அது மாதிரி இந்த காதல் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது, அது எனக்குள்ள இருக்கான்னும் தெரியாது. பட் எனக்கு ரசி ஹாப்பியா இருக்கணும்” என்று சொல்லும்போதே ரசிகாவின் கன்னங்கள் கண்ணீரில் நனைந்தன.
தனக்காக தன்னை ஏற்கிறான் இவன் என்பது நெஞ்சில் உரைக்க வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு அவளிடத்தில்.
சரியா தவறா என்ற நிலையெல்லாம் மாறி சர்வமும் சர்வா என்ற நிலை!
“நீ ஹாப்பியா இருக்கணும்னு சொன்னா அழுவியா நீ?” என்று அதட்டியவன்,
“உன்னை அழுமூஞ்சியா நான் நிறைய டைம் பார்த்திருக்கேன், பட் உன் மாமனார் மாமியார் உன்னைப் பார்க்க ரொம்ப ஆசையா வந்திருக்காங்க, ஸோ கொஞ்சம் முகம் கழுவிட்டு வரியா?” என்று கேட்க,
“நிஜமா வந்திருக்காங்களா?” என்று அவள் வெளியே எட்டிப்பார்த்தாள்.
“அடிப்பாவி என்னை நம்பலையா நீ?” என்று அவன் கேட்க,
“எனக்கு எதையும் நம்ப முடியல, இதெல்லாம் நிஜமா?” என்றாள் நம்ப முடியாதவளாக. அத்தனை அளவிடா முடியா ஆனந்தம் அகம் தாங்கவில்லை, நம்பவும் முடியவில்லை.
அவள் சர்வா இனி அவளின் சர்வாவா?
தித்தித்தது பெண் மனம்!
“நிஜம்தான் ரசி” என்றவன் அவள் எதிர்ப்பார்க்கா வண்ணம் இழுத்து அணைத்திருந்தான்.
**********************
சாரி மக்களே, வெளியே போய்ட்டேன்.. அதனால போட முடியல. இனி ரெகுலரா ஷெட்யூல் பண்ணிடுவேன்.
✅ End of Episode 17
💬 0 Replies
Log in
or
Register
to reply