Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129
Episode 18

நிலா முற்றம் 18

சர்வாவின் அணைப்பில் நின்றிருந்த ரசியின் விழிகள் கண்ணீரால் நனைந்து கன்னம் நனைத்தன.

“ரசி! என்னாச்சு ஏன் அழற நீ?” என்று சர்வா கேட்க, அவன் நெஞ்சில் நன்றாய் ஒன்றியவள்,

“நம்பவே முடியல, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சர்வா” என்றதும் அவள் தலையில் செல்லமாய்க் கொட்டியவன்,

“சந்தோஷம்னா சிரிக்கணும், அழுவாங்களா?” என்று கேட்டான் கண்களில் சிரிப்புடன்.

“உங்களுக்குப் புரியாது போங்க” என்றாள் அகம் முழுவதும் ஆர்ப்பரித்த ஆனந்த துள்ளலுடனும் நிறைந்த சந்தோஷத்துடனும்.

“அது புரியாட்டினா பரவாயில்லை ரசி, பட் ரூம்குள்ள வந்து ரொம்ப நேரமாகிடுச்சு, வெளியே போகலன்னா மிலிட்டரி இன்னொரு கன்னத்துல சப்புன்னு அப்பிடுவார். நீ முகம் கழுவிட்டு வா, போகலாம்” என்றதும்,

“அப்போ மாதிரி நான் பேசாம இருக்க மாட்டேன், நான்தான் உங்களைக் கட்டிப்பிடிச்சேன்னு சொல்லுவேன்” என்றாள் அகம் நிறைந்த காதலுடன், அது தந்த துணிவுடன்.

“பார்டா! அவ்வளவு தைரியமா? ஆனா நீ எங்கடி என்னை கட்டியிருக்க, நான்தான் உன்னைக் கட்டிப்பிடிச்சிருக்கேன்” என்றதும் அவள் விழித்தாள்.

“பேசாம நீயும் கட்டிப்பிடிச்சிடேன்” என்று சொல்லி அவள் முகம் பார்க்க, பட்டென்று அவனிடமிருந்து விலகினாள் ரசிகா.

அதுவரை மையம் கொண்டிருந்த மையலும் மயக்கமும் விடைப்பெற்றுவிட, வெட்கம் வந்து குடிகொண்டது. அப்படியே விலகி நின்றவள் தரையில் உட்கார்ந்து சந்தோஷம் தாளாமல் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“ஏன் ரசி இப்படி பண்ற?” என்று அவன் கவலையாய்க் கேட்க, கண்ணீர் நிறைந்த விழியும் புன்னகை முகமுமாய் இருந்தாள் ரசிகா.

“என்னால….எனக்கு…இப்போ..போதான் ஃப்ரியா மூச்சே விட முடியுது தெரியுமா? தேங்க்ஸ். கொஞ்சம் கூட நான் எக்ஸ்பெக்ட் செய்யவே இல்லை சர்வா” என்றவளின் குரல் கரகரத்து. காதலில் நனைந்து கண்ணீரில் கலந்து வர, மையல் கொண்ட மயிலுக்குக் கலாபம் விரித்தான் காதலன்.

அவளின் தோள்சுற்றி கைப்போட்டவன்,
“ரிலாக்ஸ் ரசி, இதுல தேங்க்ஸ் சொல்ல எல்லாம் ஒன்னுமில்லை. நீ ப்ரஷ் ஆகிட்டு வா. வெளியே எல்லாரும் இருக்காங்க” என்றான்.

இன்னும் பேசத் தோன்றினாலும் நேரம் அதற்கு உகந்ததல்ல என்று உணர்ந்து,
மறுப்பு சொல்லாமல் தலையசைத்து பாத்ரூமினுள் சென்று முகம் கழுவி வந்தவளுக்கு இப்போது வெளியே செல்ல தயக்கம்.

தலைவன் தலைவி தனிமை இத்தனை நேரம் இனிமையாய் இருந்திருக்க, இப்போது இடராய்த் தெரிந்தது.
சர்வாவுக்கு அதெல்லாம் இல்லை.

“வா வெளியே” சர்வா அவள் கைப்பிடித்து வெளியே இழுக்க, அவள் தயங்கி நிற்கவும்,

“ரசி! சும்மா காமெடி பண்ணாதடி, ஜஸ்ட் உன்னைப் பார்க்கணும் வந்திருக்காங்க, நோ ஃபார்மலிட்டி” என்றவன் அவளைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தான்.

ரசிகா சுகுமாறனையும் புஷ்பாவையும் வரவேற்க,

“என்னம்மா ரசி? கால் வலி சரியா போச்சா? இவன் இன்னிக்குத்தான் எங்ககிட்ட சொன்னான்” என்று சுகுமாறன் கேட்க,

எதை சொன்னான் இவன் காலைப் பற்றியா காதலைப் பற்றியா? கேள்வியைச் சுமந்தன அவள் விழிகள்.

“இப்போ பரவாயில்லை மாமா” என்றவளைப் பார்த்த புஷ்பா,

“கால் வலியோட ஏன் நிக்கிற ரசிகா? இங்க வந்து உட்காரும்மா” என்று சொல்ல அம்மாவை மெச்சுதலாய்ப் பார்த்த சர்வா சிவசங்கரனின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.

“அப்புறம் மாம்ஸ், எப்போ கல்யாணம் வைக்கப் போறீங்க?” என்றதும் எல்லாரும் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க,

சுகுமாறன் மகனை அதட்டினார்.
“சர்வா! நாங்க இன்னும் பேசல, அமைதியா இரு” என்றார் பல்லைக் கடித்துக்கொண்டு.

இன்னும் அவர் ஆரம்பிக்கவே இல்லை. இதற்கு முன் இப்படியான அனுபவங்கள் இல்லை, எல்லாமே அவரின் அண்ணன் பொறுப்பே! அவரைப் பொருத்தவரையில் அவருண்டு, வேலையுண்டு.
அதுவும் கேட்டு சிவசங்கரன் மறுத்துவிட்டால் என்ன என்ற எண்ணம் வேறு இருக்க, சுற்றிவளைத்துக் கொண்டிருந்தார்.

இப்போதுதான் ரசிகாவிற்கு வரன் பார்க்கவில்லையா என்று தொடங்கி இருக்க, தொடர வந்து நின்றான் அவர் மகன்.

“ஓஎம்ஜி!” என்றவன் அந்த டீபாயைப் பார்த்துவிட்டு அம்மாவையும் அப்பாவையும் ஒருசேர முறைத்தவன்,

“அப்போ இவ்வளவு நேரம் காஃபி குடிச்சிட்டு காரசேவ் சாப்பிட்டு இருந்திருக்கீங்க? இதுக்குதான் சின்னப்பசங்களை அழைச்சிட்டு வரக் கூடாதுன்னு சொல்றது”

“சர்வா” புஷ்பா மகனை முறைத்துக் கொண்டே அதட்ட,

“மா, நம்ம மாமா தானே?” என்றவன்,

“மாமா, எனக்கு ரசியை எப்போ கல்யாணம் செஞ்சு தரீங்க?” என்றான் பட்டென்று. தருகிறாயா என்று கூட கேட்காமல் எப்போது என்றவனின் பேச்சிலும் மகளின் விருப்பம் நிறைவேறிய மகிழ்விலும்,

“உனக்கு எப்போ இஷ்டமோ அப்போ” என்றார் புன்னகயுடன் சிவசங்கரன்.

ரசிகாவிற்கு எல்லாம் கனவோ என்றே தோன்றியது, சர்வா அதிரடியாய்க் கேட்டான் என்றால் அப்பா உடனே ஒத்துக்கொள்ளவும் அவளுக்கு இனிய அதிர்ச்சி! உண்மையில் தனக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா என்றே எண்ணினாள்.

“அண்ணா! இவ்வளவு சீக்கிரம் இவனுக்கு ஓகே சொல்லிட்டீங்களே, இவன் கொழுப்புக்கு கொஞ்சம் டைம் எடுத்துக்கிறேன் சொல்லிருக்கணும் நீங்க” என்று மகனைப் பார்த்தபடியே சிவசங்கரனிடம் சொன்னார் சுகுமாறன்.

“சர்வா மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்க நாங்கதான் கொடுத்து வச்சிருக்கணும்” என்று சிவசங்கரன் சொல்ல,

“எஸ், சர்வால்லாம் ஸ்டாக் ரொம்ப கம்மி, அதான் எங்க மாமா உடனே ஓகே சொல்லிட்டார்” என்றதும்,

“மாமா ஓகே சொன்னா போதுமா? ரசிகா உனக்குப் பிடிச்சிருக்கா இவனை?”

சுகுமாறன் ரசிகாவிடம் கேட்க, அவள் தலையசைத்தாள். வெட்கமோ, தயக்கமோ ஏதோவொன்று வந்து தடைப்போட்டது.

“ரசி வாயைத் திறந்து பதில் சொல்லு” சிவசங்கரன் அழுத்தி சொல்ல,

“பிடிக்கும் மாமா” என்றாள் உடனே அவரை நிமிர்ந்து பார்த்து.

“எவ்வளவு பிடிக்கும் ரசி?” சர்வா குறும்பாய்க் கேட்க,

ரசிக்கு உடனே உள்ளத்தின் கூவல் வெளியே வந்துவிட்டது.

“ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்று வேகமாய் சொல்ல, எல்லாரும் அதில் சிரிக்கவும் இன்னும் வெட்கமாகிப் போனது பெண்ணிற்கு.

அவளைப் பொருத்தவரை ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதைப் போலான கேள்விதான் அது, அதான் உடனே பதில் சொல்லிவிட எல்லாரும் சிரிக்கவும் சர்வாவைப் பார்த்து முறைத்தாள். அவன் கேள்விக் கேட்கவும் இப்படி யோசிக்காமல் பேசிவிட்டாயா என்று மனம் கடிந்தது.

அவள் நிலைக் கண்ட சர்வாவிற்கு கொஞ்சம் பெருமிதமாய் இருந்தது. எவ்வளவு வேகமாய் எல்லார் முன்னும் தன்னை பிடிக்கும் என்று சொல்லிவிட்டாள், ரசிகா எப்போதும் கொஞ்சம் அமைதி ரகம்தான், மிகவும் பிடித்தால் மட்டுமே மனம் திறப்பாள். சர்வாவைப் போல சட்டென ஒட்டிக்கொள்ளும் ரகமில்லை, இருந்தும் காதல் அவளை பேச வைத்திருக்க, ஒரு இதம் இதமாய் அகத்திற்கு அழகு சேர்த்தது.

“அட இதுக்குப் போய் சிரிப்பீங்களா? என்னைப் பிடிக்கும்னு சொல்றது ஜோக்கா உங்களுக்கு எல்லாம்?” என்று மற்றவர்களை ஓட்டினான்.

அப்படியே சிறிது நேரம் பொதுவாய்ப் பேசிவிட்டு,
“அண்ணா அண்ணி கிட்ட கூட இன்னும் இந்த விஷயம் நாங்க சொல்லல, இவன் சும்மா போய் பார்த்துட்டு வருவோம் சொன்னான், கூடவே ரசிக்கும் அடிப்பட்டிருக்குன்னு பார்க்க வந்தோம். அண்ணா கிட்ட பேசிட்டு நம்ம முறையா எல்லாம் செய்யலாம்” என்ற சுகுமாறன் சொல்ல அவர்கள் கிளம்பினார்கள்.

பெற்றவர்கள் கேட் வரை சென்றுவிட, சிவசங்கரன் இந்த முறை அவராகவே சென்று இரண்டு கேட்டையும் திறந்துவிட்டார்.

“அண்ணா, என்ன நமக்குள்ள? நாங்க திறக்க மாட்டோமா?” என்று சுகுமாறன் கேட்க,

“நீ வேற மாறன், நான் திறக்கலன்னா அவன் குதிச்சுப் போவான், ஸாரி அவர் குதிச்சுப் போவார்” என்று திருத்தம்

“அச்சோ அண்ணா, அவன் நீங்க பார்க்க வளர்ந்த பையன், இப்போ இப்படி மரியாதை எல்லாம் கொடுத்துப் பேசாதீங்க வித்யாசமா இருக்கு” புஷ்பா சொல்ல,

“அதானே” என்று சுகுமாறனும் ஆமோதித்தார்.

“என்ன மாமா ஆபரேஷன் சகஸ்ஸ் போல? கேட்டை திறந்தா என்ன? நான் சுவர் ஏறி குதிப்பேன்” என்று அவரை வம்பிழுத்தவன் வாசலில் நின்ற ரசிகாவின் பார்வையைப் பார்த்தான்.

“அப்பா கார் எடுங்க, ஜஸ்ட் எ மினிட்” என்று சொல்லி அவரிடம் கார் சாவியைத் தந்தவன் ரசிகாவிடம் போக, சுகுமாறனுக்கும் புஷ்பாவிற்கு மகனின் செயல் அதிகபடியாத் தோன்றியது.

“அண்ணா, தப்பா எடுக்காதீங்க. இவன் கொஞ்சம் அவசரப்படுறான்” என்று புஷ்பா எங்கே மகனை அவர் தவறாக நினைத்துவிடுவாரோ என்று பேச,

சுகுமாறனும், “அவசரம் எல்லாம் இல்லை, இவனுக்கு வால்தனம் ஜாஸ்தி. எல்லாம் எங்கண்ணன் அண்ணியை சொல்லணும்” என்று அவரும் பேசினார்.

“விடுங்க இரண்டு பேரும், சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தவங்க, இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? தெரியாத பொண்ணும் பையனுமே கல்யாணம்னு பேசிட்டா ஊர் சுத்த ஆரம்பிச்சிடுறாங்க. அவன் நம்ம முன்னாடிதானே சொல்லிட்டுப் பேச போறான்” என்று மருமகனுக்காகப் பேசினார் சிவசங்கரன்.

சர்வாவின் மீது சிவசங்கரனுக்கு இருந்தது ஒற்றைக் குறை, அது கறையாக இத்தனை ஆண்டு மனதில் தங்கினாலும், ஒருவார்த்தைக் கூட அதன்பின் அதை சொல்லி தன் பெண்ணைக் குத்திக்காட்டியதில்லை. அவளாக சொல்லும்வரை அவர் அவமானப்படுத்தியும் கூட அவன் சொன்னதில்லை. இதனாலேயே சர்வா மருமகன் என்பதை விட ஒரு மகனாய்த் தெரிந்தான் அவருக்கு.

ரசிகாவிடம் சென்று அவன் நிற்க, போனவன் எதற்கு மீண்டும் வருகிறான் என்று விழிவிரித்தாள் ரசிகா.

“என்ன பார்க்குற?”

“இல்லை கிளம்பிட்டீங்களே, திரும்பி வரீங்க?” என்று ரசிகா கேள்வியாய் நிறுத்த,

“இல்ல, முதல்ல இருந்த என்னமோ கேட்க நினைக்கிறியே? என்ன சொல்லு ரசி?” என்று கேட்க,

“அது இதெல்லாம் கனவா நிஜமா தெரியல, என்னால இன்னும் நம்ப முடியல” என்றதும் ஒரு நொடி பின்னால் திரும்பி பார்த்தான் அவன் அம்மா இங்கேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பாவும் மாமாவும் கார் பக்கத்தில் நின்றனர்.

தலையில் சின்னதாய்க் கொட்டு வைத்தவன்,
“வலிக்குதா?” என்று கேட்க அவன் கொட்டுவான் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை, அறையில் செய்தது போல் கட்டிக்கொள்வானோ எல்லாரும் இருக்கிறார்களே என்றே அவள் எண்ணம். அவன் கொட்டவும் அவள் முறைத்தாள்.

“பின்ன எத்தனை வாட்டி டி அதைக் கேள்வியைக் கேட்ப? வலிக்கிற வரைக்கும் தெரியும் இது நிஜம்னு, நாளைக்குக் காலேஜ்ல பார்ப்போம்” என்றவன் சிரித்தபடியே கிளம்பி சென்றான்.

அவர்கள் போனதும் மகளிடம் வந்த சிவசங்கரன்,

“இப்போ சந்தோஷமா அப்புக்குட்டி?” என்று கேட்க,

“தேங்க்ஸ்ப்பா” என்றாள் நீர் நிறைந்த கண்களுடன்.

“ச்ச், என்னம்மா அழற?” என்றவர் மகளின் கண்ணீரைத் துடைத்து அவள் கன்னத்தை தட்டிக்கொடுத்தார்.

“இல்லப்பா, நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை, நீங்க சர்வா எல்லாம் ஒத்துப்பீங்கன்னு” என்றதும்,

“எதுனாலும் சொன்னாதான் ரசிகா தெரியும், மனசுல வச்சிக்கிட்டா எப்படி தெரியும் சொல்லு? அன்னிக்கும் நீ சொல்லாம இருந்திருந்தா அப்பாவுக்கும் தெரிஞ்சிருக்காது, சர்வாவுக்கும் தெரிஞ்சிருக்காது”
என்றதும் மௌனம் அவளிடம்.

“தப்போ சரியோ தைரியமா ஃபேஸ் பண்ணு, ஒரு வார்னு வரும்போது ஓடக் கூடாது, துணிஞ்சு நிக்கணும். உலகத்துல ரொம்ப கஷ்டமான போர் யார்கூட தெரியுமா? நம்மக்குள்ளதான் நடக்கும், மனசுக்கும் மூளைக்கும். அதைப் புரிஞ்சிக்கோ. எல்லாருமே சர்வா மாதிரி இருந்திட மாட்டாங்க. எனக்கு அம்மா மாதிரி பேச வராது, ஆனா அப்பாவுக்கு நீ முக்கியம்னு கூடவா உனக்குத் தெரியாது? சர்வான்றதால உனக்கு எந்த கெட்ட பெயரும் வராம இருந்துட்டான், இதே ஸ்கூல், காலேஜ்ல வேற பசங்க அட்வாண்டேஜ் எடுத்திருந்தா? இப்போ இதெல்லாம் உனக்குப் புரியும்னு எனக்குத் தெரியுது”

“இனிமே மனசுல உள்ளதை மத்தவங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ வெளிப்படையா சொல்லிப்பழகுடா, அதான் நல்லது. மனசுல வச்சு மறுகினா நீ நினைக்கிறது சரியா தப்பான்னு கூட உன்னால தெரிஞ்சிக்க முடியாது, ஓகே அதை விடு” அவர் பேசிக்கொண்டே செல்ல, அவள் முகம் வாட நின்றாள்.

“தப்புதான்ப்பா, அப்போ தெரியல. தெரிஞ்ச பின்னாடி உங்ககிட்ட சொல்ல தைரியமில்லை. இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்ப்பா”

“அது விடுடா, சின்னதுல நடந்துப்போச்சு. அட்லீஸ்ட் சர்வா மேல விருப்பம்னு கூட சொல்லாம இருந்திட்டியே? அப்பாவுக்கு காஷ்மீர், கார்கில், வாகா மட்டும் தெரியும் நினைச்சியா? காதல் கூட தெரியும்டா, உங்கம்மா இருந்தா சொல்லியிருப்பா” என்றதும் அவர் பேச்சில் ரசிகாவிற்கு புன்னகை அரும்பியது. அவருக்குமே மனைவியைப் பற்றிய நினைவில் முகம் கனிந்து போயிருந்தது.

“இப்படியெல்லாம் நீங்க பேசுவீங்கன்னு எனக்குத் தெரியாதுப்பா” ரசிகா ஆச்சரியமாய் சொல்ல,

“நீயும் அப்பாவை முசுட்டு முசோலினின்னே நினைச்சிட்டியா டா?” கேட்கும்போதே குரல் இடறியது.

“அப்பா, அப்படி இல்லைப்பா. நீங்க கொஞ்சம் ஸ்டீரிக்ட்ல”

“ரொம்பவே ஸ்டிரிக்ட்னு சொல்லேன் அப்பு, அது உன்னை யாரும் ஒரு வார்த்தை குறை சொல்லிடக் கூடாதுன்னுதான் டா அப்பா அப்படி இருந்தேன். ஆனா உன்னோட விருப்பத்துக்குத் தடையா இருக்கணும்னு நான் நினைச்சதில்லை, இதுவரைக்கும் நடந்ததும் இல்லை” என்றதும் ரசிகாவிற்கு ஒன்று புரிந்தது.

அப்பாவிற்கு அவளின் விருப்பங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம், இவள் தெரியப்படுத்தவில்லை அதுதான் நிஜம்! அவளுக்கு ஆர்மி மாப்பிள்ளை வேண்டாம் என்ற போது அவரின் ஆசையை சொன்னாலும் கூட அவளுக்காகப் பார்த்து அப்படியான வரன்களை விட்டவர்தானே? இவள் அவரின் வார்த்தைகளை அப்படியே ஏற்று பழகியிருக்கிறாள், பிடிக்கவில்லை என்று மறுத்திருந்தால் மாறியிருப்பார் என்பது இப்போது உரைத்தது.

“இல்லப்பா, நீங்க எப்பவும் எனக்கு நல்ல அப்பாவா இருந்தீருக்கீங்க, நான் உங்களைப் புரிஞ்சிக்கல, ஸாரி” என்றாள்.

“அதெல்லாம் விடுடா நீ நல்லப் பொண்ணுதான், கல்யாணத்துக்கு உனக்கு என்ன எல்லாம் வேணும் சொல்லு? இனிமே சந்தோஷமா இருக்கணும் என் பொண்ணு” என்று தலையில் கைவைத்து ஆசிர்வாதம் போல் அவர் சிறிது நேரம் அவளுடன் பேசிவிட்டு போக, ரசிகாவிற்கு சொல்லில் வடிக்க முடியாத சந்தோஷ தருணங்கள்.

உடனே யுவிக்குப் போன் செய்து எல்லாம் சொல்ல, அவளுக்கும் ஒரே குஷியாகிப்போனது.

அடுத்த நாள் கல்லூரியில் யுவியும் ரசிகாவும் மதிய உணவு வேளையில் கேண்டீனில் இருக்கும்போது சர்வா வந்து,
“ஹாய் மேம், கொஞ்ச நேரம் அடுத்த டேபிளுக்குப் போறீங்களா?” என்று யுவியிடம் கேட்க,

“ஓஹ், நான் போனா மட்டும் என்ன பேச போறீங்க ஸர்? தக்காளி சாதத்தில் தக்காளி உள்ளது, தயிர் சாதத்தில் தயிர் உள்ளதுன்னு சொல்லப் போறீங்க, அதுக்கு ஏன் நான் அடுத்த டேபிள் போகணும்?” என்று யுவி சர்வாவை வம்பிழுத்தாள்.

“ஏன்னா அடுத்த டேபிள்லதானே நீங்க லஞ்ச் டைம்ல அடகு வச்ச உங்க அறிவு இருக்கு” என்றதும் ரசிகாவிற்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு,

“சர்வா பாவம் அவ விடுங்களேன்” என்று சொல்ல

“அவங்களையும் கொஞ்சம் பாவம் பார்க்க சொல்லேன்” என்று சர்வா சொல்லவும்,

“சரி என்னமோ பண்ணுங்க, பட் எனக்கு டிரிட் கண்டிப்பா தரனும்” என்று சொல்லி யுவி இன்னொரு டேபிளில் மாறி உட்கார்ந்தாள்.

“அப்படி அவசரமா என்ன பேசணும் சர்வா?”

“ஏன் அவசரமா இருந்தாதான் பேசனுமா? ஆமா உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? நம்மகுள்ள எது நடந்தாலும் உடனே உன் ப்ரண்ட்கிட்ட சொல்லிடுவியா?” என்றான் கடுப்பாக.

“அது நீங்க அப்போ என்ன பேசுனீங்கன்னு கேட்டா, அதான் கடுப்புல உடனே சொல்லிட்டேன்”

“அதை சொல்லல நான் என்னைக் கிஸ் பண்ணின விஷயத்தைக் கூட சொல்லியிருக்க, சரியோ தப்போ அது நம்ம விஷயமில்லையா? அது போய் சொல்லி வச்சிருக்க இடியட்” என்றான் எரிச்சலாக.

“என்ன நம்ம விஷயம்? அப்படி ப்ராட் மைண்டோட இருக்கறவர் சின்னப்பொண்ணு தெரியாம பண்ணிட்டான்னு எங்கிட்ட பேசியிருக்கலாமில்லை, அப்போ நீங்க என்னை விட பெரியவர்தானே?”

“நீங்க என்னை மொத்தமா அவாய்ட் பண்ணிட்டீங்க, எப்பவும் எதுனாலும் உங்க கூட ஷேர் பண்ணி பழகிட்டேன். உங்களை அப்பா கிட்ட மாட்டிவிட்டு அடி வாங்க வச்சுட்டேன், ஸாரி கூட கேட்கல, அந்த கில்டி கான்சியஸ் இருக்காதா? வேற யார்கிட்ட என்னோட ஃபீலிங்க்ஸ் சொல்லுவேன் நான்? சும்மா என் ப்ரண்டைப் பேசாதீங்க”

“நான் அவங்களைப் பேசல லூசே, உன்னைப் பேசுறேன் டி. ”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சிவசங்கரன் அவர்களிடம் வந்தவர்,

“சர்வா, நம்ம காலேஜ்னு நம்ம இஷ்டப்படி இருக்க கூடாது” என்றவரின் குரலில் கண்டிப்புத் தெரிந்தது.

“மாமா, ஜஸ்ட் பேசிட்டுத்தானே இருக்கோம்”

“சர்வா புரியாம பேசாத, நாளைக்கு நீங்க கல்யாணம் ஆகப்போறவங்க, சாதாரணமா இருந்தாலும் பரவாயில்லை, பசங்களுக்கு நம்ம உதாரணமா இருக்கணும். கேண்டீன்ல உட்கார்ந்து காதல் வளர்த்தீங்கன்னு சொல்லுவாங்க” என்றார் அழுத்தமாய். மகளையும் விடவில்லை,

“ரசி நீயாவது சொல்லக் கூடாதா?” என்று அவளையும் பேச,

“மாமா, நான்தான் வந்து பேசினேன். அவளைப் பேசாதீங்க” என்று எழுந்தவன்,

“மாப்பிள்ளை என்றும் பாராமல்..” என்று புலம்பியவன்,

“வாங்க, நம்ம கடமையைச் செய்வோம்” என்று சொல்லி அவரைக் கையோடு கூட்டிச் செல்ல, அவன் திட்டிய கோபத்தில் அவனை முறைத்தபடி ரசிகா பார்க்க, சிவசங்கரனுடன் இணைந்து நடந்தவன் இவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.

✅ End of Episode 18
How did you feel about this episode?
❤️ 2 more...

You must Log in or Register to react here

💬 1 Reply
Srichitra Reader 5 minutes ago

Very nice 

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top