ரசிகாவின் மௌனத்தில் இன்னும் கோபம் பெருகியது சர்வாவுக்கு. இருந்தும் இருக்குமிடம் உணர்ந்தவன்,
“மேம், இப்படியே எவ்வளவு நேரம் நிக்கப் போறீங்க?” என்றான் எரிச்சலுடன். அதற்குள் வகுப்பில் மாணவர்களின் பேச்சுக்குரலும் அதிகமாகிவிட சர்வாவிடம் பேச வேண்டாம் என்று நினைத்தவள்,
“சைலென்ஸ்!” என்று கத்தியபடி உள்ளே நுழைந்தவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பாடத்தை தொடங்கினாள். வெளியே வெளியேறத் துடித்த தன் பார்வையைக் கட்டாயமாய்க் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அவனைப் பார்க்க வேண்டும் என்பது இத்தனை ஆண்டு ஏக்கம்தான்!
எண்ணங்களில் எல்லாம் அவன்தான்! இருந்தும் அவள் நினைத்தது எல்லாம் நினைத்தாற் போலவே செய்ய முடியாதே, அப்படி நினைத்ததை உடனே செய்ய நினைத்து, அதற்காக இன்றளவும் தன்னை நிந்தித்துக் கொள்ளும் நிலை ரசிகாவிற்கு.
ரசிகா வகுப்பினுள் நுழைந்தவுடன் சர்வாவும் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
சர்வா!
சர்வஜனன் சக்திவேலின் தம்பி சுகுமாறனின் மகன். வெளி நாட்டில் படித்து முடித்து அங்கேயே சில காலம் வேலை செய்து இப்போதுதான் இங்கே வந்திருக்கிறான்.
அவன் மிகவும் சுறுசுறுப்பு என்பதை விடவும் துறுதுறுப்பானவன். எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பான், சோம்பல் என்பதே இல்லாதவன். நேற்று நள்ளிரவுதான் இந்தியா வந்தான், இதோ காலையில் கிளம்பி கல்லூரி வந்துவிட்டான்.
அந்த ப்ளாக்கை கடந்துதான் முதல்வரின் அறைக்குப் போக வேண்டும். வந்தவுடன் ரசிகாவை அவன் அங்கே எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால் பார்க்கவும் சும்மா விடவும் மனதில்லை. அவளுடனான நினைவுகள் ஓரமாய், தூரமாய் போனாலும் பார்க்கையில் எல்லாம் பக்கமாய் வந்து சேர பாவையைப் பார்க்கவும் கொந்தளித்துவிட்டான்.
இப்போது பெருமூச்சுவிட்டவன் அவளையும் அவள் நினைவுகளையும் தூர வைத்தவன், சந்தோஷமானதொரு மகிழ்வுடன் அந்த கல்லூரியைச் சுற்றிப் பார்வையை செலுத்தினான். முன்பை விட பொலிவுடன் காணப்பட்டது.
இந்த இடத்தில் சிறுவனாய் விளையாடிய ஞாபகங்கள் நெஞ்சினில் உதிக்க ரசிகாவினால் இடர்ப்பட்ட அவனின் இதம், மீண்டும் இதயத்தில் வந்து சேர இனிமை கூடிய உணர்வுடன் தனது பெரியப்பாவின் அறைக்குள் நுழையப் போகும் முன், கதவைத் தட்டினான்.
“எஸ், கமின்” என்று சக்திவேல் அனுமதி தரவும் இவன் உள்ளே நுழையவும்,
“டேய் சர்வா! வாட் எ சர்ப்ரைஸ்? இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட” என்று உற்சாகமாய்ப் பேசினார்.
“கம் கம் சிட்” என்றதும் புன்னகையுடன் உட்கார்ந்தவன்,
“என்ன ப்ரின்சி செம ஜாலியா இருக்கார் போல” என்றவன் அங்கிருக்கும் பென் ஸ்டாண்டை எடுத்து நோண்ட,
“இன்னும் இந்த பழக்கமெல்லாம் போகலையா உனக்கு?” என்று அவனைப் பார்க்க, அவனோ
“ம்ம், நல்ல செட்டப். குட்” என்றான் அறையை சுற்றிப் பார்த்து ரசித்தவனாக.
“அது விடு, ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வந்திருக்கலாமில்லை, வரேன்னு சொல்லவும் இல்லையே”
“நன்றே செய் இன்றே செய்னு சொல்லிக் கொடுத்த என் அருமை பெரியப்பாவா இப்படி பேசுறது?” என்று கேள்வி கேட்டவனைப் பெருமையாய்ப் பார்த்த சக்தி,
“எப்பவும் உன்னை நினைச்சு என்னைப் பெருமைப்பட வைக்கிற டா நீ? என்றதும்,
“உன்னை நினைச்சு எவ்வளவு பெருமைப்பட்டேன் நான், இப்படி செஞ்சிட்டியே?” என்ற பெரியம்மாவின் வார்த்தைகள் காதில் விழ உள்ளத்தினுள் உறுத்தலாய் ஒரு உணர்வு.
எப்போதாவது இப்படி வரும் உணர்வுதான், ஆனால் லண்டனில் இருக்கையில் இப்படி அடிக்கடி வராது, இங்கு இப்போது ரசிகாவைக் கண்ட நொடி முதல் கடந்த கால கசப்புகள் தடம் மாறாமல் தன்னைத் தாக்க முயன்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டான்.
“ஓகே! உனக்கு என்ன விருப்பம் அதை சொல்லு, டீச்சிங்கா? மேனேஜ்மெண்டா? எப்படியும் அடுத்த மூணு மாசத்தில புது ப்ரின்ஸீபால் அப்பாயிண்ட் செய்யனும்டா, எனக்கு ரீடையர் ஆகுற வயசாகிடுச்சு. அதுக்காக நல்ல ஆளா பார்க்கிறோம். ஸோ நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப் போறேன், நீ மேனேஜ்மெண்ட் பார்க்கிறியா?” என்று கேட்க,
“இப்போ நீங்க எனக்கு என் விருப்பம் கேட்டுட்டு உங்க விருப்பத்தை சொல்றமாதிரி இருக்கு பெரியப்பா” என்றதும்,
“இல்ல சர்வா, டீச்சிங் ஸ்டாஃப் நமக்குப் போதுமான அளவு இருக்காங்க, நிர்வாகம் சிவா மட்டும்தான் பார்க்கிறான், அவனுக்கும் வயசாகுதுடா. டீச்சிங் அதுக்கு ஆளுங்க வெளியே இருந்து கூட எடுக்கலாம், ஆனா மேனேஜ்மெண்ட் அவ்வளவு ஈசி இல்லை, டீச்சிங் ஸ்டாஃப் நான் டீச்சிங் ஸ்டாஃப், ஸ்டூடன்ட்ஸ்னு எல்லாரையும் பார்க்கணும். கூடவே இந்த ஈபி, தண்ணின்னு அவ்வளவு இருக்குடா. இதெல்லாம் நீ கத்துக்கிட்டா தானே நமக்கு நாளைக்கு நல்லா இருக்கும்”
“போதும் பெரியப்பா லிஸ்ட் பெருசா போகுது, என்னோட ப்ரதர் என்ன பண்றார். அவனுக்கும் கொஞ்சம் வேலைக் கொடுங்களேன்” என்றவனைப் பார்த்து மறுப்பாய்த் தலையசைத்தவர்,
“அவன்தான் டாக்டர் ஆகனும்னு இந்த லைனே வரலையே டா, அவனை எப்படி கூப்பிடுறது, நீதானே டா பெரியப்பா சொன்னா கேட்ப” என்றார் கொஞ்சலாய்.
“போதும் பிக் நைனா, அப்புறம் உங்க தோஸ்த் பொண்ணு இங்க வேலை செய்றா போல, எப்படி உங்க மிலிட்டரி இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டார்?” என்றான் கொஞ்சம் நக்கலாக.
“சர்வா அவளையும் எல்லார் மாதிரி இண்டர்வியூவெல்லாம் வச்சுதான் செலெக்ட் பண்ணினான் டா, அதெல்லாம் சிவா ரொம்ப ஸ்டீரிக்ட். அதென்ன உங்க ப்ரண்ட் பொண்ணு, நீயும் ரசிகாவும் ப்ரண்ட்ஸ்தானே?” என்று அவர் புருவம் உயர்த்த,
“ப்ரண்ட்ஸா இருந்தோம், இப்போ டச்ல இல்லை” என்றவன்,
“ஓகே பெரியப்பா, எனக்கு டெய்லி ஒரு ஒன் ஹவர் க்ளாஸ் எடுக்கிற மாதிரி அலாட் செய்யுங்க, மீதி டைம் மேனேஜ்மெண்ட் பார்க்கிறேன்” என்றான் முடிவாக.
“சரிப்பா, நான் விபி கிட்ட பேசிட்டு சொல்றேன், நீ கரெஸ் ரூம்ல வெயிட் பண்ணு, இல்லையா காலேஜ் சுத்திப் பாரு” என்றதும் சம்மதமாய் தலையசைத்தவன் அறையை விட்டு வெளியேறினான். அரைமணி நேரம் கழித்து சிவசங்கர் அறைக்குள் நுழைய அவரிடம் சர்வாவின் வருகைப் பற்றி சொல்ல,
“சின்ன பையனுக்கு என்ன எக்ஸ்ப்ரியன்ஸ் இருக்கும்னு நீ இப்படி முடிவெடுத்த?” என்றார் சட்டென.
இதுவரை சிவசங்கர் சக்தியின் எந்த முடிவுக்கும் இப்படி பட்டென மறுப்பு சொன்னதில்லை, மறுப்பு இருக்கும். ஆனால் பொறுப்புணர்ந்து பொறுமையாய் யோசித்துதான் தன் கருத்தை சொல்வார். அதனால் நண்பன் நடவடிக்கையின் காரணம் புரியாமல் சக்தி குழப்பமாய்ப் பார்த்தவர்
“என்ன சிவா இப்படி சொல்ற? அவன் ஆக்ஸ்ஃபோர்ட்ல படிச்சிருக்கான். ஹி இஸ் டாக்டரேட்” என்றபோது மகனின் மீதான மீகிய பெருமை வெளிப்பட்டது.
“அதுக்காக எக்ஸ்ப்ரியன்ஸ்னு ஒன்னு வேண்டாமா?” என்றதும் கொஞ்சம் கடுப்பாய்ப் பார்த்தவர்,
“டேய் அவன் அங்கேயும் கொஞ்ச நாள் டீச் பண்ணிட்டுதான் வந்திருக்கிறான், அதைவிட அவன் இங்க ஃபுல் டைம் ப்ரோபஸரா இருக்கப் போறதில்லை மேனேஜ்மெண்ட்தான் பார்க்க போறான். நீ கூட இருந்து எல்லாம் சொல்லிக்கொடு” என்றவர் இண்டர்காம் மூலம் அழைத்து சர்வாவை வர சொன்னார். சர்வஜனன் வந்தவன் சிவசங்கரைப் பார்த்தவன்,
“எப்படி இருக்கீங்க மாமா?” என்றதும்,
“என்னை அப்படி கூப்பிடாத” என்று அவர் பட்டென சொல்ல, சக்தி அதிர்ச்சியில் சிவாவைப் பார்த்தவர் பின் அவரே ஆசுவாசம் அடைந்தவராய்,
“அது ஒன்னுமில்லை சர்வா, ஸாருக்கு கேம்பஸ்ல உறவு முறை வச்சுப் பேசுறது பிடிக்காது, அதானே ஸர்?” என்று கிண்டலாய் அவர் சிவாவைப் பார்க்க சிவசங்கருக்கும் நண்பருக்காகப் புன்னகை செய்தார்.
“சரி நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருங்க, நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்” என்று வெளியேறவும்,
சிவசங்கர் கோபமாக சர்வாவைப் பார்த்தவர் வெளியேறப் பார்க்க, “மாமா, என்ன நீங்க பாட்டுக்குப் போறீங்க, என்ன என்ன வேலை செய்யனும் சொல்லுங்க” என்றவன் நாற்காலியில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.
அவனை முன்பே அவருக்குப் பிடிக்காது, இப்போது இப்படி அவன் நடக்க இன்னுமின்னும் அந்த பிடித்தமின்மை கூடிப்போக,
“ஏன் எல்லா வேலையும் உனக்கு சொல்லிக் கொடுத்தாதான் தெரியுமா என்ன? போடா பொறுக்கி” என்றதும் வேகமாய் நாற்காலி விட்டு எழுந்தவன் பார்வையில் அந்த அறையில் சிவசங்கரும் சக்திவேலனும் ஒருவர் தோள் மீது ஒருவர் கைப்போட்டு புன்னகைத்தபடி இருக்கும் புகைப்படம் விழ முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் மனத்துக்கு சொல்லியது.
‘அவர் சொன்னால் நீ அப்படியாகிவிடுவியா என்ன?’ என்று.
“மிஸ்டர் மிலிட்டரி உங்களை விட மோசமா பேசவும் நடக்கவும் எனக்குத் தெரியும், பட் நான் அப்படி செய்ய மாட்டேன். உங்களுக்கு முரட்டுத்தனம் இருக்கும்னு எனக்குத் தெரியும், கூடவே முட்டாள்த்தனம் இருக்குன்னு அடிக்கடி எனக்குப் புரூவ் செய்யாதீங்க ஜி, உங்க கிட்ட நல்ல பெயர் வாங்கன்னும் எனக்குக் கொஞ்சமும் அவசியமில்லை. ஸோ வேலைக் கத்துக்கொடுக்கிற உங்க வேலையை மட்டும் பாருங்க” என்றான் நிதானமாக.
அப்படி சொல்பவனிடம் வேறென்ன பேச முடியும்? சிவசங்கரன் அதனால் கல்லூரியின் நிர்வாகம் பற்றி அவனிடம் விளக்கி சொல்ல, சர்வாவும் பொறுமையாய்க் கேட்டுக்கொண்டான்.
மதிய உணவு நேரத்தில், ரசிகாவும் யுவராணியும் கேண்டீனில் உணவுண்ண உட்கார்ந்திருக்க இருவரும் கொண்டுவந்த உணவை யுவராணி ஆர்வமாய்ப் பிரிக்க ரசிகாவோ யோசனையாய் இருந்தாள்.
“அய்யயோ வெண்டைக்காய், நீயே சாப்பிடு டி இதை” என்று யுவராணி அவள் கொண்டுவந்த வெண்டைக்காயை தோழியிடம் நீட்ட,
“வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வளரும் சாப்பிடு” என்றாள் சலிப்பாக.
“ஹேய் சில்லி கேர்ள்! அதெல்லாம் இல்லாதவங்களுக்கு, எனக்கு இதை சாப்பிட்டு ஓவரா வளர்ந்து ஓவர் ஃப்ளோ ஆச்சுனா அப்புறம் பூமியே இப்படி ஒரு அறிவாளிக்கு இடம் கொடுக்க முடியுமா நான் மார்ஸ்க்குப் போகவேண்டியாதாகிடும், அப்புறம் மார்ஸ் வந்துதான் நீ என்னைப் பார்க்கணும்” என்று பேசிக்கொண்டே போக ரசிகாவிடம் அசைவே இல்லை.
எப்போதும் யுவராணி என்ன சொன்னாலும் உலகின் தலைசிறந்த பேச்சைக் கேட்பது போல ஒரு பாவத்தில்தான் ரசிகா ரசித்திருப்பாள். இப்போதோ இவள் பூமியில் இருப்பது போலவும் அவள் செவ்வாய்க் கிரக வாசி போல வேறு உலகில் சஞ்சரிக்க அவளின் தோளில் இடித்து,
“என்ன ஆச்சு டி? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று யுவராணி கேட்க,
“சர்வா வந்துட்டார். இன்னிக்குக் காலேஜ்ல பார்த்தேன்” என்றவள் காலையில் நடந்த எல்லாம் சொன்னாள்.
“விடுடி விடுடி கத்திரிக்கா போட்டா காரக்குழம்பு கறி போட்டா கறிக்குழம்பு டி” என்றதும் ரசிகா அவளை முறைக்க,
“முழுசா கேளு, அது மாதிரி உன்னைப் பார்த்தா சர்வா கோவப்படனும், அதான் டி லா அஃப் பிச்சிக்கிச்சு”
“பிச்சுக்கிச்சா?”
“அதான் இரண்டு பேருக்கும் சண்டை இல்லையா?”
“ப்ச், சண்டை இல்லை இது, புரியாம பேசாத” என்று ரசிகா குற்றவுணர்வில் தன்னைக் குறைவாய் நினைத்துப் பேசினாள்.
“சண்டையில்ல, அதுக்கு மேலையா? சரி பெரிய சண்டை வச்சிக்கோ” என்றவள்,
“இங்க பாரு, நீ அப்போ செஞ்சது தப்புதான். அதையே எத்தனை வருஷம் நினைச்சு ஃபீல் செய்வ? சர்வா கிட்ட போய் சாரி கேளுடி” என்று சொல்ல,
“கேட்கணும்தான், ஆனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உன்னை மாதிரி ஒரு ப்ரண்ட் எனக்கு அப்போ கிடைக்கலயே?” என்றாள் மிக மிக வருத்தமாக.
ஆறுதல் சொல்லவும் அறவழி நடக்கவும் யுவராணி போல் ஒரு தோழி இருந்திருந்தால் இந்த குற்றவுணர்வெல்லாம் இவளுக்கு இல்லையே.
“என்ன செய்றது என்னை மாதிரி யுவராணியை எல்லாம் அவ்வளவு ஈசியா மீட் செய்ய முடியுமா? உனக்கு இப்போதான் ப்ராப்தம் கிடைச்சிருக்குனு நினைச்சிக்கோ ராகா” என்றவள்,
“சீக்கிரம் சாப்பிட்டு முடி, அப்புறம் லஞ்ச் டைம் முடிஞ்சு கேண்டீன்ல உட்கார்ந்தா முசோலினி கிட்ட திட்டுதான்” என்றவள் உணவில் கவனம் வைக்க யுவராணி தன்னால் முயன்றளவு தோழியின் மன நிலை மாற்ற பேசிக்கொண்டிருக்க ரசிகாவின் இதழில் இள நகை தவழ்ந்தது.
அந்த நேரம் பார்த்து சர்வஜனன் அவளைப் புன்னகை முகமாய்ப் பார்த்துவிட அதை இல்லாமல் செய்ய வேண்டி அவளருகே போனான்.
—————————————–
Read and Share your thoughts friends. முதல்முறை படிக்கிறவங்க கமெண்ட்ல சொல்லுங்க.
Nice
நான் முதல் முறை படிக்கிறேன் மா 💐
சிறு வயது தவறு
அப்போ சிறு வயது தவறு எப்படி சொன்னிங்க 🤔🤔
@Pavithra Narayanan correct 💯 taa....😂😂😂😂👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻super super.... அவ தான் சொன்னாலே தோழி கிட்ட... சி வரிசையில் கவிதை எழுத அதை எழுதினேன்....😘😘
@Mrs Beena loganathan 👏
@Pavithra Narayanan 🧚🏻♂️ இதுவும் நானே 🧚🏻♂️🧚🏻♂️😂😂😂🫣
Very nice epi
Thank you 😊