அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள் ப்ரண்ட்ஸ்
“பரவாயில்லையே திரும்புனமேனியாவுக்கே திரும்பின இடமெல்லாம் கண்ணு போல, இதை கூட நோட் பண்ணியிருக்கார்” என்று நினைத்தவள் மறு நாள் அவன் சொன்னது போல் குளிருக்கு இதமான ஆடையாய்ப் பார்த்துப் போட்டுக்கொண்டாள்.
கிட்ட தட்ட ஒருவாரமாய் இதுவே வழக்கம், கல்லூரி இருந்தபோதிலும் நடைபயில்வதை நங்கை விடவில்லை. கல்கி கல்லூரி சேர்ந்து இருவாரங்கள் கடந்திருக்கும். அந்த வார இறுதியில் யமுனாவும் சூர்யாவும் சென்னை வந்தனர். அவர்கள் வந்தபோது சீரஞ்சீவி வீட்டில் இல்லை.
“கல்கி, எப்படிடா இருக்க? எல்லாம் செட் ஆச்சா? ப்ரசாத் நல்லா பார்த்துக்கிறானா?” என்று யமுனா கேட்க
“ம்ம், எல்லாம் சூப்பரா செட் ஆச்சு அத்தை” என்றாள். நல விசாரிப்பெல்லாம் முடிய உணவுக்குப் பின் எல்லாரும் ஹாலில் உட்கார்ந்திருக்க, தையல் நாயகி டீவியையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அதில் என்.டி.ஆர் நடித்த படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்க மருமகன் அதனைப் பார்க்க இவருக்கு வேறு வழியில்லாமல் அதனையே மொழி தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
கல்கி அதனைப் பார்த்தவள் யமுனாவிடம்
“அத்த, அப்பத்தாவைப் பார்த்தீங்களா மாமாவை சேனல் மாத்த சொல்ல முடியாம எப்படி முழிச்சிட்டு இருக்குன்னு” என்று கல்கி சிரிக்க
யமுனாவுக்கும் தையல் நாயகி முழிப்பதைக் கண்டு சிரிப்புதான்.
“என்ன கிழவி? உன்னோட நாடகம் பார்க்கிறியா?” என்று கல்கி கிண்டல் செய்ய
“அடியே! சும்மா இருடி. மருமகன் பார்க்கிறாப்ல. நாடகம் எங்க போவுது, நாளைக்குப் பார்த்துக்கிறேன்” என்று சொன்ன தையல் நாயகி மகளைப் பார்த்து
“ஏன் டி யமுனா? இந்த பாஷை எனக்குப் புரியலையே. நீ மட்டும் எங்கிட்டு இருந்துடி மருமகனைப் பிடிச்சிப் போய் கல்யாணம் கட்டின?” என்று கேட்டார்.
“அது உம்மவள இங்கிலிஷ் படிக்க வச்சல அப்பத்தா, மாமாவும் அத்தையும் இங்கிலிஷ் பேசி காதலிச்சிருப்பாங்க, என்ன அத்தை?” என்று கேட்டு சிரிக்க
சூர்யா இவர்களின் பேச்சு சத்தத்தில் திரும்பியவர்
“என்னாச்சு கல்கி?” என்று கேட்க
“அது இது அப்பத்தா சீரியல் பார்க்கிற டைம் மாமா, அதான் அவங்களுக்குப் புரியாம இதைப் பார்க்குறாங்க” என்று டீவியைக் காட்டினாள்.
உடனே சூர்யா தமிழ் சேனலில் வைத்தவர்
“சொல்ல வேண்டியதுதானே அத்த, நான் மாத்தியிருப்பேனே” என்றவர் எழுந்துகொள்ள
“அய்யோ மாப்பிள்ள, இவ கிடக்குறா. நீங்க உங்க இஷ்டம்போல பாருங்க” என்று பரபரப்பாய் சொன்னார் தையல் நாயகி.
“இல்லை நீங்க பாருங்கத்தை” என்று சூர்யா எழுந்து டைனிங் டேபிளில் சென்று உட்கார்ந்துகொண்டார். யமுனாவும் அவர் பின்னே போக, கல்கி உடனே அவளுக்குப் பிடித்த நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க, தையல் நாயகியோ
“ஏட்டி, எனக்காகத்தான் மாப்பிள்ளை டீவியை மாத்திட்டுப் போனார். ஒழுங்கா மாத்தி வைடி” என்று கல்கியை மிரட்டினார்.
“ஓஹ், மாப்பிள்ளை பார்க்கும்போது நாடகம் எங்கப்போவுதுன்னு அந்த பேச்சுப் பேசின இப்போ மட்டும் என்னவாம்? நான் பார்க்கிறதைப் பாரு” என்று அவரை அதட்டினாள்.
தையல் நாயகி பாவமாய்ப் பார்க்க, கல்கியும் சிரித்தபடி சேனலை மாற்றியவள்
“இந்தா மூஞ்சீயை நீட்டாத ஆத்தா, உன்னிஷ்டம் போல பாரு” என்றவள் அறைக்குள் போக சூர்யா
“கல்கி இங்க வாம்மா” என்று அழைத்தார்.
இவளும் போக யமுனா அவளை முறைத்தபடி உட்கார்ந்திருந்தார்.
“என்னாச்சுத்த? ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கல்கி கேட்க, அப்போதும் யமுனா வாய்த் திறக்கவில்லை.
“மாமா, எதாவது ப்ராப்ளமா?” கல்கி சூர்யாவைப் பார்க்க
“ஏன் பாப்பா? உங்கப்பா கிட்ட அப்படி சொன்ன?” என்றதும் அவளுக்குப் புரிந்து போனது. யமுனா கல்கியைப் பார்த்தவர் கோபத்துடன்
“அத்தை வீட்ல தங்க நீ காசு கொடுப்பியா? அப்போ அங்க வந்து நான் தங்கினாலும் காசு கொடுத்து தங்கனுமா? என்னோட அம்மாவை நான் பார்க்க கூடாதா?” என்றார் கோபத்துடன்.
“என் அண்ணன் பொண்ணுக்கும் அம்மாவுக்கும் சோறு போட முடியாத நிலைமையில நான் இருக்கேன், நான் சம்பாரிக்கிறேன். என்ன பார்க்கிற? இத்தன வருஷம் பார்க்கலைன்னு பார்க்கிறியா?” என்றவர் இன்னும் கோபத்துடன்
“இத்தனை வருஷம் நீங்களும் நான் என்ன ஆனேன் பார்க்கல, இவர் நல்லவர் சரி அப்படியில்லன்னா என்னோட நிலைமை. எக்கேடோ போகட்டும்னு விட்டீங்க தானே? இப்பவும் நீங்க முழு மனசா ஏத்துக்கல அப்படித்தானே?” என்று கேட்கும்போதே யமுனாவிற்குக் கண்களில் நீர். சூர்யா உடனே
“ஏன்ட்டி ம்மா இதி? ப்ரியத்தம்மா அழாதடா” என்று சமாதானம் செய்ய யமுனா அழவும் கல்கிக்கும் மனதிற்குக் கஷ்டமாகிவிட்டது.
அவள் தான் அப்பாவிடம்
“ப்பா, எங்களால அத்தைக்கு நிறைய செலவு இருக்கும்ல, எப்படி சும்மா தங்குறது. ஹாஸ்டல்ல தங்கினாலும் காசு கொடுக்கனும்ல, நீங்க அத்தைக்கிட்ட காசு கொடுங்கப்பா” என்று சொல்லியிருந்தாள்.
“இல்லத்த, உங்களுக்கு ஏன் கஷ்டம்னு தான் நான் சொன்னேன். ஏன் இதுக்குப் போய் அழறீங்க?” என்று சமாதானம் செய்ய
“ஏன் இப்படி சொன்ன நீ? என்ன கஷ்டம் எனக்கு? ப்ரசாத் எதாவது கஷ்டம் சொன்னானா? உன்னை எதாச்சும் சொன்னானா அவன்?” என்று யமுனா கேட்க
கல்கி உடனே தலையசைத்து வேகமாய் மறுத்தாள்.
“அச்சோ! அவங்க எங்களை ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க அத்த” என்றாள்.
“அப்புறம் ஏன் இப்படி பேசுற? இனி இப்படி பேசவே கூடாது. ப்ரசாதே உன்னை எதாச்சும் சொன்னாலும் என்னோட அத்தை வீடு நான் இருப்பேன் உனக்கென்ன கேட்கனும் நீ” என்றார்.
எப்படியோ அவரை ஒருவழியாக சமாதானம் செய்தவள் அன்று மாலை அவளுக்குப் பேக்கிங் க்ளாஸ் இருக்கு என்று சொல்ல, யமுனாவோ
“அப்படியா நீ சொல்லவே இல்லை” என்றார் ஆச்சர்யமாக.
“உங்க பங்காரம் சொல்லவே இல்லையா?” கல்கி அவரை விடவும் ஆச்சர்யமாய்க் கேட்டாள். அவனோடு அவ்வளவு சண்டைப்போட்டும் எப்படி சொல்லாமல் இருந்தான் என.
இன்றுதான் அவளுக்கு முதல் வகுப்பு. அதனால் அவளும் போகும்போது சொல்லலாம் என்று நினைத்திருந்தாள்.
“இல்லையே கல்கி” என்றதும் அவள் எல்லாம் சொல்லிவிட்டாள். யமுனா ஒன்றும் மறுப்பு சொல்லவில்லை.
“எல்லாம் கத்துக்கிறது நல்லதுதான், பார்த்து போய்ட்டு வா அவ்வளவுதான். இன்னிக்கு மாமா கூட போ” என்றார். சூர்யாவும் மறுப்பு சொல்லவில்லை அவளை அழைத்து சென்றார்.
அன்று முழுவதும் ஒரே ஒரு எண்ணம் மட்டும் கல்கியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. எப்படி இவன் அத்தையிடம் கூட சொல்லாமல் இருந்தான் என, அதற்கான விடையை அவனிடம் கேட்டபோது ப்ரசாதின் மற்றுமொரு பரிமாணம் கண்டாள் பெண்.
அது அவளுக்குப் பிடித்துப் போனதுதான் அதிசயம்!!
கல்கியின் வகுப்பு முடியும்வரை சூர்யா அங்கேயே காத்திருந்தார். ஒரு மணி நேரம் கழித்து கல்கி வெளியே வர, சூர்யா காரில் அங்கு காத்திருக்க
“என்ன மாமா? அதுக்குள்ள வந்துட்டீங்க, செம ஷார்ப் டைமிங்க்ஸ்ல நீங்க” என்று சொல்லியபடி காரில் உட்கார்ந்தாள்.
“நான் வீட்டுக்கே போகல கல்கி, இங்கதான் வெயிட் பண்ணினேன்” என்றதும்
“ஏன் மாமா? ஒன் ஹவர் தேவையில்லாம ஏன் வெயிட் பண்ணீங்க? நானே வரேன் சொன்னேனே?” என்றாள்.
“விடு பாப்பா, ஃபர்ஸ்ட் டே அதான் வெயிட் பண்ணினேன். வீட்ல நாக்கு பணி லேதம்மா, ஐ மீன் வேலை இல்லை” என்று திருத்தி சொல்ல கல்கி சிரித்துவிட்டாள்.
“மாமா போகும்போது முப்பது நாளில் தெலுங்கு பேசுவது எப்படினு புக் வாங்கிட்டு போகலாம்” என்றதும் சூர்யாவும் சிரித்தவர்
“க்ளாஸ் எப்படி போச்சு கல்கி?” என்று கேட்டார்.
“சும்மா பேஸீக்ஸ் சொல்லிக் கொடுத்தாங்க மாமா, ஒன்லி தியரிதான். நல்லா இருக்கு” என்றாள் புன்னகையுடன்.
வரும்வழியில் ஒரு பேக்கரியில் நிறுத்தியவர் அவளிடம்
“பாப்பா, என்ன வேணுமோ வாங்கிக்கோ” என்றார்.
“மாமா எனக்கு ஒன்னும் வேண்டாம்” கல்கி மறுக்க
“ஏன்ட்டிம்மா? மாவய்யா வாங்கிக் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா? அத்தை சொன்னாதான் வாங்கிப்பியா?” சூர்யா விடாது கேட்க
“மாமா! அதெல்லாம் இல்லை. எனக்கு ஸ்வீட்ஸ் பிடிக்காது. காரம்தான் பிடிக்கும், அதான் வேண்டாம் சொன்னேன். எங்கத்தை ஏற்கனவே என் மேல டென்ஷன்ல இருக்காங்க, நீங்க வேற கிளப்பி விடாதீங்க” என்றதும்
“ஹாஹா! சரி சரி. யமுனாவுக்கு ஸ்வீட்ஸ் பிடிக்கும். கொஞ்சம் வாங்கிப்போம்” என்றதும் கல்கி கிண்டலாய்ப் பார்த்தவள்
“ஓஹ் ஒஹ்” என்றாள். சிரித்தபடி யமுனாவுக்கு இனிப்புகள் வாங்கியவர்
“உங்க பாட்டிக்கு என்ன பிடிக்கும் பாப்பா? வயசானவங்க சாப்பிடுற மாதிரி சொல்லுடா” என்று கேட்டார்.
“அப்பத்தா நல்லி எலும்பையே நல்லா கடிக்கும், பல்லு அவ்வளவு ஸ்ட்ராங்” என்றவள்
“கேக் வாங்கிக்கலாம் மாமா, அப்புறம் ஸ்வீட் பன் பிடிக்கும்” என்றதும் தையல் நாயகிக்கு அதனை வாங்கியவர் அருகில் இருந்த இன்னொரு பெரிய ஸ்வீட் ஸ்டாலில் கல்கிக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு வாங்கியவர் சிரஞ்சீவிக்கும் சேர்த்து வாங்கினார்.
“உன்னை மாதிரி சிருவுக்கும் காரம்தான் பிடிக்கும். எனக்கும் காரம்னா இஷ்டம்” என்றவர் எல்லாம் வாங்கிக் கொண்டு அவளுடன் வீடு வந்து சேர்ந்தார்.
இவர்கள் வந்த போது ஸோஃபாவில் உட்கார்ந்திருந்த தையல் நாயகி மருமகன் வரவும் பொசுக்கென்று கீழே இறங்கிவிட்டார்.
“ம்மா, ஏன் மா?” என்று யமுனா அவரருகே உட்கார்ந்திருந்தவர் கேட்க
“மருமகப்பிள்ள முன்னாடி மேல உட்காரலாமா?” என்று கேட்டவர் கீழே காலை மடக்கி உட்கார்ந்து கொள்ள
“அப்பத்தா, அதெல்லாம் மாமா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீ காலையாச்சும் நீட்டி உட்காரு” என்றாள் கல்கி.
சூர்யா மனைவியிடம் என்ன என்பதாய்ப் பார்க்க “மாப்பிள்ளை முன்னாடி மேல உட்கார கூடாதாம் சூர்யா, ஊர்ல இப்படித்தான் செய்வாங்க” என்றதும்
“இன்னமுமா இப்படி?” என்ற சூர்யா தையல் நாயகியிடம்
“நீங்க இஷ்டம் போல உட்காருங்க அத்த, இது உங்க பொண்ணு வீடு இல்லை. உங்க வீடுன்னு நினைச்சிக்கோங்க” என்றார் சூர்ய நாராயணன்.
“இருக்கட்டும்ங்க மாப்பிள்ளை” என்ற தையல் நாயகி காலை மடக்கியே உட்கார்ந்திருந்தார். அவர் வீடானால் நீட்டிக்கொண்டுதான் டீவி பார்ப்பார், இங்கு கூட சூர்யா வரும் முன் ஒன்று சோஃபாவில் உட்கார்ந்திருப்பார் இல்லையா காலை நீட்டி சோஃபாவில் சாய்ந்தவண்ணம் உட்காருவார்.
கல்கிக்குத் தெரியாதா தையல் நாயகிப் பற்றி? மெதுவே தன் அத்தையிடம்
“மாமா இங்க உட்கார்ந்திருக்க வரைக்கும் இப்படித்தான் பில்டப் கொடுப்பாங்க உங்கம்மா, நம்ம அந்த பக்கம் போய்ட்டா கிழவி காலைத் தானா நீட்டிடும்த்த” என்றதும் சூர்யாவை இழுத்துக் கொண்டு டைனிங் டேபிளுக்குச் சென்றுவிட்டார் யமுனா.
கல்கியும் பின்னால் செல்ல யமுனா வாங்கி வந்ததை எல்லாம் தட்டில் வைத்துக் கொண்டிருந்தார்.
“இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் அத்த, உங்கம்மாக்காக மாமாவை இழுத்துட்டு வந்துட்டீங்க” என்று வம்பிழுக்க
“நான் இழுக்கலன்னாலும் உங்க மாமாவே என் பின்னாடி வந்திருப்பார்” என்று யமுனா சிரிக்க, சூர்யாவும் சிரித்துவிட்டார்.
“ஓவர் லவ்ஸுப்பா” என்று கையை ஆட்டி ராகம் பாடிய கல்கி
“அத்த ஒரு டவுட்” என்றாள்.
“கேளும்மா”
“அது உங்களுக்குத்தான் தெலுங்கு தெரியாதே, மாமா கூட எப்படி லவ் வந்துச்சு. இங்கிலிஷ்ல பேசினீங்களா?” என்று நீண்ட நெடு நாளையை சந்தேகத்தைக் கேட்டு வைத்தாள்.
யமுனா பதில் சொல்லும் முன் சூர்யாவே பேசினார்.
“கல்கி பாப்பா! லவ் பண்ண மொழியெல்லாம் தேவையில்லை. நான் காலேஜ் படிக்கும்போது மெட்ராஸ் வந்தேன், வாங்க போங்க சாப்பிட்டீங்களா தவிர ஒன்னும் தெரியாது. இதுல உங்கத்த இங்கிலிஷ் சுத்த மோசம்” என்றதும் யமுனா கணவரை முறைத்தார்.
“ஊர்ல எல்லாம் அவ்வளவு நல்லா சொல்லிக் கொடுக்க மாட்டாங்க கல்கி. இவர் எங்கிட்ட இங்கிலிஷ்ல பேசினாலும் எனக்குப் புரிஞ்சாலும் பதில் சொல்ல வராது. ரொம்ப கஷ்டமா இருக்கும்”
“அவுனு அவுனு” என்றதும் யமுனா கணவரைப் பார்க்க
“உங்கிட்ட தான் பேசக் கூடாது பாப்பா கிட்ட பேசலாம், என்ன பாப்பா?” என்று கல்கியிடம் சூர்யா கேட்க
“ஆமா ஆமா, அப்போதான் உங்க பையன் என்னை தெலுங்குல திட்டினா எனக்குத் தெரியும் அத்த” என்றாள் கல்கி.
“என்ன அவன் உன்னைத் திட்டுறானா?” யமுனா சட்டென கேட்க
“அச்சோ மாமா? இந்த அத்தை என்ன எல்லாத்துக்கும் கொஸ்டின் கேட்கிறாங்க, உங்க சிங்காரம் அப்படியே உங்களை மாதிரி” என்று பேச்சுவாக்கில் சொல்லிவிட்டாள். சிங்காரம் என்றதும் யமுனா சிரித்து
“இப்பவும் அவனை அப்படி சொல்றியா நீ?” என்று கேட்டார் யமுனா.
“இல்லை இல்லை!” என்று அவசரமாய் மறுத்தவள்
“உங்க கிட்ட சொல்றேன், அவர்கிட்ட எல்லாம் எஸ் ஆர் நோ தான். எக்ஸ்ட்ரா எல்லாம் கல்கி பேசுறது இல்லை” என்றாள்.
“என்ன அது சிங்காரம்?” என்று சூர்யா கேட்க யமுனா விளக்கம் சொல்ல
“கொண்ட்டே அம்மாயி” என்று சொல்லி சூர்யா சிரித்தவர்
“நா கொடுக்கு உனக்கு சிங்காரமா? அவன் என்னோட செல்ல பங்காரம்” என்றார் முகம் முழுவதும் நிறைந்த புன்னகையுடன். பெருமையும் கூட மகனைப் பற்றி பேசும்போது.
“பங்காரம் இல்லை அவர் பயங்கர காரம் மாமா” என்றாள் கல்கி விடாமல்.
“இப்ப என்ன எதையோ கொண்டார சொன்னீங்களே என்ன மாமா?” என்றும் கேட்க
“ஹாஹா, கொண்ட்டே அம்மாயின்னா வாலுப்பொண்ணு” என்றார் இன்னும் விரிந்த புன்னகையுடன்.
“மாமா, போதும் உங்க கதையை சொல்லுங்க எத்தனை வருஷ டவுட் தெரியுமா?” என்றதும் யமுனா
“அப்போ என்னை நினைச்சிருக்கியா கல்கி?” என்றார் எதிர்ப்பார்ப்புடன்.
“நினைக்காமலா? உங்களைத் துவச்சுத் தொங்கப்போடாத நாளே கிடையாது அத்த. அதனால நானும் அஞ்சுவும் அடிக்கடி நினைப்போம். ஆனா எங்க டவுட் என்னன்னா எப்படி அத்தை ஆந்திராக்காரங்களை லவ் பண்ணியிருப்பாங்கன்னுதான்” என்று விரலைத் தாடையில் வைத்து யோசித்தாள்.
கல்கி சொன்ன முன்பாதியில் கலங்கினாலும் பின்பாதியில் அதனை ஒதுக்கியவர்
“காதலிக்க மொழியெல்லாம் தேவையே இல்லை. உங்க மாமா என்.எஸ்.எஸ்ல இருந்தாங்க, நிறைய பேருக்கு ஹெல்ப் செய்வார். பொண்ணுங்களை ரொம்ப மதிச்சு நடப்பார், கூடவே அவரோட தமிழ் சிரிப்பா வரும். இவர் எங்கிட்ட இங்கிலிஷ்ல பேச ட்ரை பண்ண எனக்கு வரல, என்னோட கூட இருந்தவங்களாம் இங்கிலிஷ் வரலன்னு என்னைக் கிண்டல் செய்வாங்க”
“உங்க மாமா என்ன செஞ்சார் தெரியுமா? சில புக்ஸ் கொண்டு வந்து கொடுத்து இதையெல்லாம் படிங்க, இங்கிலிஷ் ஒரு மொழிதான் அறிவில்லைன்னு சொல்லிட்டுப் போய்ட்டார்”
“அப்புறம் என்னாச்சு?” என்றாள் கல்கி ஆர்வமாய்.
“அப்புறம் என்ன இவர் என் பின்னாடி ப்ரியத்தம்மா ப்ரியத்தம்மான்னு சுத்தி வந்தார், அதுவும் எங்கிட்ட காதலை சொல்றேன்னு ஒரு அஞ்சு நிமிஷம் தெலுங்குல பேசினார்”
“உங்களுக்குப் புரிஞ்சதா அத்த?”
“புரியல, ஆனா அவரோட காதல் என்னால ஃபீல் பண்ண முடிஞ்சது. காதல்ன்றது உணர்தல் கல்கி. அவர் பேசின மொழி புரியல, அவரோட கண்ல எனக்கான காதல் நிறைய இருந்துச்சு” என்றவரின் கண்கள் காதலாய் கணவனை நோக்க அவரின் பார்வையும் மனைவியின் மீதுதான்.
Very nice.