Episode 34

‘ப்ரியத்தம்மா ப்ரியத்தம்மா
பளிக்கினதி ஹிருதயமே சரிகம..’

என்று சின்மயி உருகிப் பாடிக்கொண்டிருந்தார். தெலுங்கு சேனலில் பாட்டு ஓட சிரஞ்சீவியும் கூட சேர்ந்து பாடினான். கல்கியின் குழப்பம் தீரந்தவுடன் தான் இவனுக்குமே நிம்மதியாய் இருந்தது.

இஷ்டமாயின சக்குடா
ஒக்க சாரி சுடுரா பிள்ளா” என்று சின்மயின் குரலுடன் சிரஞ்சீவியின் குரலும் கல்கி வரும் திசைப் பார்த்து பாடியது.

கல்கி அவன் தெலுங்கில் பாடவும் முறைத்தாள்.

“ஏமிரா? லவ் சாங் பாடினா கூட முறைக்கிற?” என்று சிரஞ்சீவி முறைத்தான்.

“புரியற மாதிரி பாடனும்” என்றவள் ரிமோட்டை எடுத்து தமிழ் சேனலில் வைக்க

“ஸ்ரீங்காரிச்சின மஞ்சி
பங்காரு உய்யலாலோன” என்று நித்யஸ்ரீ மகாதேவனின் குரல் ஒலிக்க கல்கி தமிழ் சேனல்தானா என்று உற்றுப் பார்க்க சிரஞ்சீவிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“மேடம்காரு, இது தமிழ் சேனல்தான். இந்த பாட்டுல இப்படி முதல்ல தெலுங்கு லிரிக்ஸ் வரும்” என்றதும் அவனைப் பார்த்தவள் தட்டில் சப்பாத்தியை வைத்தாள்.

“நெல்லாடிய நிலம் எங்கே
சொல் ஆடிய அவை எங்கே?” என்று பாடலுடன் இவனும் சேர்ந்து பாட

“பெரிய சோழ நாட்டு மன்னன்? இவ்வளவு நேரம் பங்காரம் சிருங்காரம்னுட்டு இப்ப என்ன நிலம் எங்கே? நீர் எங்கேன்னு பாடுறீங்க?” என்று கடுப்புடன் கேட்டாள்.

“அவுனா? ஏன் நாங்க சோழ நாடா இருக்க கூடாதா?” என்று சிரஞ்சீவி கிண்டலாய்க் கேட்க

“சோழர்கள் தமிழ் பேசுவாங்க. நீங்கதான் பங்காரம் ஆச்சே” என்றதும் வாய் விட்டே சிரித்தான் சிரஞ்சீவி.

“ஹிஸ்டரில மேடம் ரொம்ப வீக் போல, குலோத்துங்க சோழன் தெரியுமா? அவரோட அப்பா தெலுங்கு, அம்மா தமிழ். என்னை மாதிரி. அவரோட ராணி கூட தமிழ்தான், உன்னை மாதிரி” என்று அவன் சொல்ல கேட்டிருந்தவளுக்குக் கவிதையாக இருந்தது.

“இப்போ தமிழ் பாட்டு பாடலாமா சோழ ராணி?” என்று அவன் கேட்க கண்கள் சிரிக்க தலையசைத்தாள் கல்கி. அவனுடன் பேசும் முன் இருந்த அத்தனை இறுக்கங்களும் மொத்தமாய் மாயமான உணர்வு. இன்னும் இன்னும் அவன் பேச்சைக் கேட்க ஆவல் எழுந்தது.

“கல்கி நாளையில இருந்து வசந்திக்கா கிட்ட சப்பாத்தி வேண்டாம் சொல்லு. மூணு நாளா டெய்லி சப்பாத்தி, எப்பவும் மாத்திதானே செய்வாங்க, நீ சொல்றதில்லையா?” என்றதும் கல்கி முழித்தாள்.

“ஏன்ட்டிம்மா? என்ன லுக் இது?” என்று சிரஞ்சீவி சப்பாத்தியை உண்டு கொண்டே கேட்க

“அது தோசைன்னா சூடா நான் ஊத்தனும், உங்களைப் பார்க்கணும்” என்று கல்கி தயங்கி தயங்கி சொல்ல

“ஓஹ் அம்மடூவோட ப்ளானா? சால பாகுந்திம்மா” என்றான் பல்லைக் கடித்து.

“ஸாரி, கோவப்படாதீங்க. இப்போ தோசை சுட்டு தரட்டுமா?” கல்கி இரங்கி வந்து கேட்க

“இன்னிக்கு வேண்டாம்” என்றவன்

“உனக்கு இந்த குழப்பம் வந்தப்பவே நீ எங்கிட்ட பேசியிருக்கலாம் கல்கி. எங்கிட்ட உனக்கு என்ன தயக்கம்?” என்று கேட்டான்.

“இல்லை, அது நீங்க என்னைப் பிடிக்கும்னு சொல்றவரைக்கும் ஒன்னும் தெரியல. பட் சொன்ன பின்னாடி என்னவோ இது நடக்கனுமேனு ஒரு பயம், டென்ஷன். எனக்கு என்ன செய்றது யார்கிட்ட சொல்றதுன்னே தெரியல. உங்க கிட்ட சொன்னா இதெல்லாம் முன்னாடியே தெரியாதுன்னா நீங்க கோவப்படுவீங்க நினைச்சேன்”

“கோவப்பட்டாலும் என்ன இப்போ? உன் மனசுல இருக்கறதை சொல்லாம தேவையில்லாத டென்ஷன் கல்கி. சரி விடு” என்று அந்த பேச்சை விட்டான்.

டீவி பார்த்தவன் “யாரோ தெலுங்குப் படமெல்லாம் பார்த்தாங்க, இப்போ என்னாச்சு அவங்களுக்கு?” என்று கல்கியை சீண்ட

“அது ரொம்ப கஷ்டமா இருக்கு, நான் பொறுமையாவே கத்துக்கிறேன். அதுவரைக்கும் அவுனு வச்சே ஒட்டிக்கிறேன்” என்றாள் கல்கி. இப்படியே ஒரு இயல்பு நிலை அவர்களிடையே திரும்பியது.

ஒரு வாரம் அப்படியே அமைதியாக போய்விட்டது. அன்று இரவு சிரஞ்சீவி வந்தவன் கல்கியிடம்

“கல்கி! நான் இங்க டெபுடேஷன்லதான் வந்தேன். த்ரீ இயர்ஸ்ல அது முடியப்போகுது இன்னும் டூ மந்த்ஸ்ல, பட் இப்போ நான் எந்த கேஸும் ஹாண்டில் செய்யல. அதனால நான் ஹோம் கேடரே மறுபடி போக கேட்டிருக்கேன். ஸோ நெக்ஸ்ட் வீக் நான் குண்டூர் போயிடுவேன்” என்று அவன் முடிக்கும்போதுதான் கல்கிக்கு அவன் சொல்ல வருவதே புரிந்தது.

“இங்க நான் இருந்தா உன்னால இயல்பா இருக்க முடியாது கல்கி. எதாவது நினைச்சு நீ உன்னைக் குழப்பிக்குவ. இன்னும் ஒரு வருஷம், நல்லபடியா படிச்சு முடி. மாமா உன் கல்யாணம் பேசும்போது நான் பேசுறேன். எனக்குமே கொஞ்ச தள்ளி இருந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் ஆகுது” என்றதும்

“தள்ளி இருக்கனும்னா முன்னாடியே இருக்க வேண்டியதுதானே? உன்னை யார் குண்டூர்ல இருந்து கும்பகோணம் வர சொன்னா?” என்று உணர்ச்சிவசத்தில் கத்தியவள் கதவை அடைத்துக் கொண்டாள். தினமும் அவனைப் பார்த்து பழகியவளுக்கு அவனில்லாமல் எப்படி இருக்க முடியும் என்று தெரியவில்லை.

கல்கிக்குத் தன்னால் எந்த குற்றவுணர்வும் வேண்டாம் என்று நினைத்தான் வரப்ரசாத். படிப்பிற்காக அவள் அவ்வளவு போராடியிருக்க கொஞ்சம் கவனச் சிதறல் வந்தாலும் அது தன் காதலுக்கு மரியாதையில்லை என்று நினைத்தான்.

நங்கையை விரும்புவதென்றால் அவளின் நலம் விரும்புவதுதானே!அதனால் இந்த பிரிவு தேவை என்று முடிவு செய்துகொண்டான். அப்பாவிடமும் சொல்ல, அவருக்குமே அதுதான் சரியென பட்டது. முன்பு உறவினர்களாய் இருப்பது வேறு, இப்போது காதலர்களாய் இருப்பது என்பது வேறல்லவா? சூர்ய நாராயணன் மகனின் கருத்துக்கு முழு சம்மதம் தெரிவித்தார். எல்லாம் அடுத்து வேகமாய் நடந்தன.

யமுனாவிடம் மகனின் டெபுடேஷன் முடிந்தது என்று சொல்ல, கல்கி தனியாக இருப்பாள் என்றவர் கணவனிடம் பேசி தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். கல்கி ஏன் என்னால் உங்களுக்கு சிரமம்

“ஹாஸ்டல் போகிறேன்” என்றதற்கு யமுனா மறுத்துவிட்டார்.

“முன்னாடியே உனக்காக நான் வரேனுதான் சொன்னேன். அம்மாவும் சிருவும் இருந்தாங்க விட்டேன். அப்படியெல்லாம் தனியா விட முடியாது” என்றுவிட்டார் முடிவாக. சிரஞ்சீவி நினைத்திருந்தால் இங்கேயே சில காலம் இருந்திருக்க முடியும், மினிஸ்டர் ஒருவரிடம் அவனுக்கு நல்ல பெயர் இருந்தது.

இதோ எல்லா ஏற்பாடுகளும் முடிந்து சிரஞ்சீவி இன்று குண்டூர் செல்ல வேண்டும். யமுனாவும் சூர்யாவும் சென்னை வந்துவிட்டனர். யமுனாவை விட்டு விட்டு மகனை அழைத்து செல்லப்போகிறார் சூர்யா. அவருக்குத்தான் மனைவியைப் பிரிவது கடினம். ஆனால் மனைவியின் வார்த்தைகள் முக்கியம், மகனின் மனம் முக்கியம் என்பதால் ஒத்துக்கொண்டார்.

கல்கிக்கும் சிரஞ்சீவிக்கும் பிரிவின் துயர் நிறைய இருந்தது. கிளம்பும் முன் சூர்யாவும் யமுனாவும் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்க, கல்கி அவள் அறை வாசலில் நின்றாள். அவள் கையைப் பற்றிய சிரஞ்சீவி

“நல்லா படி, டவுட்ஸ்னா அம்மா கிட்ட கேளு. எம்பிஏ என்ட்ரன்ஸ் க்ளாசுக்குப் போக ஆரம்பி. அப்புறம்… டேக் கேர்” என்றான்.

“எப்படி இத்தனை நாள் நீங்க இல்லாம இருந்தேன் தெரியல எனக்கு. உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றாள் கல்கி.

“ஐ டூ ஃபீல் தி ஸேம். பட் ஒரு வருஷம்தான், ஜர்னலிஸ்ட் ஆனதுமே மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றான்.

“எம்மேல கோவம் எதுவுமில்லையே?” கல்கி சில நாட்களாய் அவனிடம் பிரிவின் துயர் தாங்காமல் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள்.

“அதெல்லாம் இல்லடா” என்றவன் செல்லமாய் அவள் நெற்றியில் முட்ட யமுனா மகனுக்கு இட்டிருந்த குங்குமம் அவள் நெற்றிக்கு இடம்பெயர், இன்று கல்கியின் முகத்தில் எந்த கலக்கமும் இல்லை. கண்கள் சிரிக்க நின்றிருந்தாள்.

“அம்மாவைப் பார்த்துக்கோ, பத்திரமா இரு. எமெர்ஜன்ஸினா பரத்கிட்ட சொல்லு” என்றான்.

“டைம் ஆச்சு, அப்பா வெயிட் பண்ணுவார். நான் கிளம்புறேன், எதுனாலும் மெசெஜ் பண்ணு” என்று அவன் கைகளை விலக்கிக்கொள்ள, கல்கியோ அவன் எதிர்ப்பாரா வகையில் அவனை ஒற்றைக்கையால் கட்டிக்கொண்டாள்.

“அம்மடூ!” என்று அவன் ஆச்சர்யம் கொள்ள அவளோ தன் கண்ணீரால் அவன் சட்டையை நனைத்தாள். அந்த நேரம் அவனின் அணைப்பு மிகவும் தேவையான ஒன்றாய் இருந்தது.

“அம்மா வந்துடுவாங்க கல்கி, விடு” என்றவனின் வாயை தன் வலக்கையால் மூடியவள் ஒரு நிமிடம் முழுக்க அவன் நெஞ்சில் சாய்ந்து அதன் பின் தான் அவனை விட்டாள்.

“அம்மடூ, நில்லு” என்று அவன் சிரிப்புடன் அழைக்க, அவளோ வேகமாய் கீழே இறங்கிச் சென்றுவிட்டாள்.

“என் ப்ரியத்தம்மாவை பத்திரமா பார்த்துக்கனும் பாப்பா” என்று சூர்யா கல்கியிடம் சொல்ல

“என்னைப் பாப்பான்னு சொல்லுங்க, ஆனா அப்பாவும் பிள்ளையும் என்னையைத்தான் எங்கத்தையைப் பார்க்க சொல்றீங்க” என்றாள் கிண்டலாக.

“அதெல்லாம் நாங்க பத்திரமா இருந்துப்போம். சூர்யா நீங்க ப்ரசாதைப் பார்த்துக்கோங்க” என்றார் யமுனா.

“அதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம் அத்த, பங்காரத்தை மாமா அப்படி பார்த்துப்பார்” என்றாள் கல்கி. சிரிப்புடன் அவர்கள் விடைப்பெறவும் கல்கி அவர்கள் போவதையே பார்த்து நின்றாள். சிரஞ்சீவி என்னமோ எல்லாம் சரியாக செய்துவிட்டதாக நினைத்து போக, இடரும் இக்கட்டும் கூடிய விரைவில் அவனின் காதலையும் கல்கியையும் அவனிடமிருந்து பிரிக்க போகிறதென அறியவில்லை அவன்.

 

song link

✅ End of Episode 34
How did you feel about this episode?
❤️ 7 more...

You must Log in or Register to react here

💬 4 Replies
Srichitra Reader 2 weeks ago

Very nice.

❤️ 1 more...
Kavi Natarajan Reader 2 weeks ago

Very nice ud ma 

❤️ 1 more...
maheswari Reader 2 weeks ago

next ud eppo varum nu thavika vidaringa. sema flow la poguthu story. love it

Sathya Velusamy Reader 1 week ago

சிங்காரம் நீ அவ்வளவு ஈசியா கல்கியை கல்யாணம் பண்ண கனவு காணாத மேன்

Log in or Register to reply

🔗 Insert Link

Scroll to Top