Episode 23
“ஏன்ட்டீம்மா?” என்று வரப்ரசாத் கேட்க
“ஒருத்தங்க உண்மையா ஜெயிக்கனும்னு நினைச்சா அவங்களை ஜெயிக்க வைக்க என்ன செய்யனுமோ அதை செய்யணும். விட்டுக்கொடுத்தா ஒருதடவதான் ஜெயிக்க முடியும். கத்துக் கொடுத்தா காலத்துக்கும் ஜெயிக்கிற வழி தெரியும் அவங்களுக்கு. மீன் கொடுக்கிறதை விட மீன் பிடிக்க கத்துக்கொடுக்கிறதுதான் பெஸ்ட்னு மிஸ்டர் காரம் உங்களுக்குத் தெரியாதா?” என்றாள் நிதானமாக.
கல்கியின் பேச்சு இந்த முறையும் அவனை கவர்ந்து இழுத்தது. அவள் சொல்வது உண்மையென புரிந்தது.
“இனிமே விட்டுக்கொடுக்கல , கத்துக்கொடுக்கிறேன் ஓகே கல்கி?” என்று வரப்ரசாத்
கேட்க
“அன்னிக்கு ஏன் அப்படி பண்ணுனீங்க? இப்போ உங்களை வின் பண்ணினேன்னு அத்தை மாமாகிட்ட பெருமையா சொன்னா, எவ்வளவு பங்கமாகிடுச்சு உங்களால” என்று அவனை திட்ட
“ஹே! அம்மடூ ஒரு நாள் நிஜமா நீ வின் பண்ணி உன் அத்தை மாமா கிட்ட சொல்லு. டீல்” என்றதும்தான் கல்கியின் முகம் தெளிந்தது.
பேசுக்கொண்டிருக்கையில் ஜெகதீஷிடமிருந்து கல்கிக்கு அழைப்பு வந்தது.
தீபாவளி விடுமுறை முடிந்துவிட்டது. கல்கி ஊருக்குச் சென்று நான்கு நாட்கள் இருந்து வந்தாள். சற்குணம் இறந்துவிட்டதால் அவர்களுக்கு இந்த வருடம் பண்டிகை இல்லை. ஆனாலும் சாமி கும்பிட்டு பங்காளி வீடுகளில் இருந்து பலகாரமெல்லாம் வந்து இருந்தது. கல்கி வெகு மாதம் கழித்து சென்றதால் அங்கை பெண்ணை இன்னும் நன்றாய் கவனித்தார். உதயமூர்த்தியும் கூட மகளை ஒன்றும் பேசவில்லை. தையல் நாயகி மட்டும் பேரனின் நலத்தை ரொம்பவே கேட்டார். ஜெகதீஷும் கல்கியுடன் சென்றிருக்க, இங்கு சிரஞ்சீவி மட்டும் தனியே இருந்தான்.
அங்கு சூர்யாவுக்கும் விடுமுறை இல்லையென்பதால் யமுனாவும் சென்னை வரவில்லை. சிரஞ்சீவிக்கு என்னவோ கல்கி இல்லாமல் வீடே நன்றாக இல்லைபோல் ஒரு உணர்வு. இயல்பில்லா நிலை!
கல்கி ஊருக்குப் போகிறேன் என்று சொன்னபோது ஒன்றும் தோன்றவில்லை. அனுப்பிவிட்ட வந்த பின் தனிமை பலமாய்த் தாக்கியது.
எப்போதும் ஜாக்கிங் செல்லும்போது இயல்பாய் அவன் எதிர்ப்பக்கம் நடக்கும் கல்கியின் மீதே பார்வை வைத்து பழகியவனுக்கு இன்று அவள் இல்லை என்பது என்னவோ வித்யாசமாய் இருந்தது.
தனியாய் இருக்கும் தருணங்கள் எல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தவை. வீட்டில் இருக்கும்போது இஷ்டப்பட்ட பாடலைக் கேட்டுக்கொண்டு கேஸுக்காக யோசித்துக் கொண்டு இருந்தவனின் வழக்கங்களையும் பழக்கங்களையும் கல்கி இத்தனை மாதங்களில் மாற்றி இருந்தாள்.
இரவு உணவு அவன் உண்ணும்போது அவள் கதை சொல்ல, கேட்டுக்கொண்டுதான் உண்பான். அன்றாட நிகழ்வில் அவள் அவனுடன் கலந்திருக்க, அவள் இல்லாத தனித்த பொழுதுகள் தனிமை பொழுதுகளாயின!
யமுனாவிடம் பேசும்போது இது குறித்து சொல்ல,
“எப்பவும் வீட்ல இருந்துட்டு இப்ப ஆள் இல்லைன்னா அப்படித்தான் இருக்கும்” என்று இயல்பாய் சொல்ல, அப்படித்தான் இருக்குமோ என்று நினைத்தான் சிரஞ்சீவி வரப்ரசாத்.
ஆனால் அது அப்படியில்லை என்று அவனுக்கு கூடிய விரைவிலேயே புரிந்து போனது. சரி நாலே நாட்கள் தானே என்று எப்படியோ ஓட்டிவிட்டான். பெரும்பாலும் அலுவலகத்திலேயே கழித்து விட அவனுக்கு அது ஒன்றும் சிரமமாய் இருக்கவில்லை.
கல்கி ஊரில் இருந்து காலைப்பேருந்தில் கிளம்பி மாலை ஆறு மணி போல்தான் வீடு வந்தாள். அவள் வருகிறாள் என்பதற்காகவே அன்று சீக்கிரமே கிளம்பிவிட்டான். என்னவோ அவளை நினைத்தாலே ஒரு இன்பமயம்! இனிய தாள லயம் அவனுள் இசைத்தது!
வீட்டிற்கு உற்சாகமாய் வந்தவன்,
“அப்புறம் என்ன கல்கி, ஊருக்குப் போய்ட்டு ஒரே ஜாலி போல, அம்மம்மாவை அழைச்சிட்டு வரனும் சொன்ன, ஏன் வரல?” என்று கேட்டான்.
“உங்க அம்மம்மா எனக்காகவா வந்தாங்க? அவங்க டார்கெட் எம்ஜியார் சமாதி பார்க்கணும். பீச், கோவில்னு அவங்களுக்குத் தெரிஞ்ச சென்னையை சுத்திப் பார்த்துட்டாங்க. அதனால ஊர்ல செட்டில் ஆகிட்டாங்க. அவங்களுக்கு இங்க கஷ்டம், ஊர்னா ஆடு மேய்ச்சிட்டு அடுத்த வீட்டு கிழவிங்க கூட கதைப்பேசிட்டு எங்கம்மாவை ஆர்டர் போட்டு ஜாலியா இருப்பாங்க. இங்க காற்றோட்டமும் இல்லை. பொங்கல் முடிஞ்சு வரேன்னு சொல்லியிருக்காங்க பார்ப்போம்” என்றாள் கல்கி.
இவன் அவளைத் தேடியது போல் அவளும் தேடினாளா என்று கேட்க நினைத்தவன்
“அப்புறம் சென்னையை மிஸ் பண்ணினியா?” என்று கேட்டான்.
“ஆமா, மிஸ் பண்ணினேன்தான். என்னோட காலேஜ், பேக்கிங் க்ளாஸ், என் ப்ரண்ட்ஸ் எல்லாம் மிஸ் பண்ணினேன்” என்றவள் வேண்டுமென்றே வரப்ரசாத்தைப் பற்றி சொல்லவில்லை.
உண்மையில் கல்கிக்கு ஊருக்குச் சென்ற பின் இங்குள்ள ஞாபகங்கள் பெரிதாய் இல்லை. நாலு நாள் விடுமுறையில் அம்மாவுடன் சுற்றவே பொழுதுகள் சரியாய் இருந்தன. இதில் தீபாவளி முடிந்த அடுத்த நாள் அஞ்சனா யுகனுடன் வந்துவிட கல்கிக்கு வேறு எண்ணமே இல்லை.
அவனை மிஸ் செய்யவில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட சிரஞ்சீவி கடுப்பானவன் ஒன்றும் பேசவில்லை. அத்துடன் விட்டுவிட்டான். ஒரு பத்து நாட்கள் கழித்து அன்றிரவு சிரஞ்சீவி ஒன்பது மணிபோல் வீடு வந்தவன் போன் வரவும் பாதி உணவிலேயே எழுந்து கொண்டான்.
“என்னாச்சு?” என்று கல்கி கேட்க
“ஒரு கேஸ், நான் வர லேட்டாகும். நீ லாக் பண்ணிட்டு தூங்கு கல்கி” என்று சொல்லி அவசரமாய்ப் போய்விட அவன் வரும்வரை கல்கிக்கு உறக்கமே இல்லை. என்னவோ ஒரு பயம், பதட்டம்.
இதில் நேரம் கெட்ட நேரத்து நினைவாய் சூர்யா அவருக்கு புல்லட் பாய்ந்த கதையை சொன்னது ஞாபகத்தில் வர தவித்துப்போனாள் கல்கி. எப்போதும் அவனுடன் உண்டு, இரவில் கதைத்துப் பழகியவளுக்கு இன்று அவன் வராமல் உறங்கப்பிடிக்கவில்லை. நேரம் நள்ளிரவு இரண்டைக் கடந்திருக்க, அப்போதும் வரப்ரசாத் வரக் காணும். பயந்தவள் அவனின் அலைப்பேசிக்கு அழைக்க, அவன் எடுக்கவில்லை.
அவன் எங்கே எடுப்பது? வழக்கில் சம்மந்தப்பட்ட ஒருவன் வெளி நாடு தப்பித்து செல்ல திட்டமிட்டிருக்க, அவனைப் பிடிக்கும் வேளையில் தீவிரமாய் இருந்தனர். அவன் விமானம் ஏறும் முன் எப்படியோ பிடித்தும் விட்டனர்.
இரண்டு மணி ஆகியும் அவன் வரவில்லையென்றதும் கல்கி யோசிக்காமல் பரத்வாஜிற்கு அழைத்துவிட்டாள். அவன் சிரஞ்சீவியிடம் சொல்ல மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்தவன் அவளைப் பிடித்துக் கத்திவிட்டான்.
“அறிவு இல்லை கல்கி உனக்கு? உன்னைத்தான் அமைதியா தூங்க சொன்னேன் இல்ல. எதுக்குடி அத்தனை போன் பண்ற? நான் தப்பிச்சுப் போறவனைப் பிடிக்கப் பார்ப்பேனா உனக்குப் பதில் சொல்லுவேனா?” என்றான் எரிச்சலாக.
“இல்லை போய் ரொம்ப நேரம் ஆச்சுல, அதான் பயந்துட்டேன்” என்று கல்கி சொல்ல
“என்ன பயம் உனக்கு? எதுக்கு பரத்க்கு எல்லாம் கால் செய்ற நீ? லிமிட் க்ராஸ் செய்ற நீ!” என்று அவன் வேலை நேரத்தில் இவள் அழைத்ததற்கு வைத்து வாங்க, கல்கியோ பொறுத்தவள் சீறிவிட்டாள்.
“எதுக்குக் கத்துறீங்க? மிட் நைட் ஆகியும் வரலன்னா எனக்கு டென்ஷன் ஆகாதா? கேஸ்னு சொல்லிட்டுப் போய்ட்டீங்க என்னாச்சோன்னு பதட்டம் இருக்காதா?”
“நான் என்ன குழந்தையா நீ பயப்பட? சொல்லிட்டுத்தானே போனேன் இடியட். மணி என்னாகுது இட்ஸ் த்ரீ, இனிமே எப்போ தூங்கி எப்போ காலேஜ் போவ நீ?” என்றான் கடுமையாக.
“சும்மா கத்தாதீங்க! ஏன் நான் இவ்வளவு நேரம் வெளியே சுத்திட்டு வந்தா நீங்க கேட்க மாட்டீங்களா? எனக்கு மட்டும்தான் ஆபத்து வருமா? உங்களுக்கு எதுவும் ஆகாதா? எனக்கு உங்க மேல் அக்கறை இருக்க கூடாதா?”
“என்ன அக்கறை? இன்னும் டூ இயர்ஸ் இங்க இருப்ப. அதுக்கு அப்புறம் நான் எப்போ வரேன் எப்போ போறேன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்றான் எரிச்சலுடன். அவனையும் மீறி அவளின் மீதான ப்ரியமும் பிடித்தமும் வெளிப்பட்டது. அவளைத் தேடும் தனது மனதை இந்த காரணம் சொல்லியல்லவா கட்டுப்படுத்திக் கொள்கிறான்.
“ஏன் படிப்பு முடிஞ்சு போய்ட்டா நீங்க என்னை அப்படியே விட்டுடுவீங்களா? மாமா பொண்ணுன்னு கொஞ்சமும் அக்கறை பாசம் எல்லாம் இல்லாம போய்டுமா?” என்று கல்கியும் பதிலுக்குக் கத்தியவள்
“அப்போ உங்க வீட்ல இருக்கறதாலதான் இந்த அக்கறை எல்லாம் அப்படித்தானே? பட் நான் அப்படி இல்லை, எப்பவும் அத்தை பையன்னு உங்க மேல எனக்குப் பாசம் இருக்கும். லேட்டா வந்தா நான் கேட்பேன் தான்! நான் கேட்க கூடாதுன்னா நீங்களும் என்னைக் கேட்காதீங்க” என்றாள் கோபத்துடன்.
அக்கறை எல்லாம் ஆந்திரா காரருக்குதான் இருக்கனுமா? எனக்கு இருக்கக் கூடாதா என்று முணுமுணுத்தவள் அறையை கோபத்தில் அறைந்து சாற்றிக்கொண்டாள்.
அடுத்த நாள் எல்லாம் கல்கி அவனிடம் பேசவே இல்லை. அவனுக்கும் பேச நேரமில்லை. அப்படியே இருவரும் ஈகோவைப் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
கல்கி பேசவில்லையே தவிர, அவன் இரவு எந்த நேரம் வந்தாலும் அதுவரை உட்கார்ந்திருப்பாள். அவளுக்கு செமெஸ்டர் தேர்வுகள் வேறு நெருங்க, நள்ளிரவு வரை படிப்பாள். இவன் வரவும் முறைத்தபடி அறைக்குள் போய்விடுவாள்.
சிரஞ்சீவிக்கு மனதில் ஒரு பயம், கல்கியை அவன் மனம் அதிகமாய்த் தேடியதே அதற்குக் காரணம். பேசாமல் இருந்து பார்ப்போமே, இவளென்ன என்னோடு ஆயுள் முழுக்க இருக்கப்போகிறவளா என்ற எண்ணம்.
அவளின் செமெஸ்டர் தேர்வின் முதல் நாள் அவனாகவே தன் பிடிவாதம் விட்டு
“ஆல் தி பெஸ்ட் கல்கி! எக்சாம் நல்ல பண்ணு” என்று வாழ்த்தினான். அவளும் ‘தேங்க்ஸ்’ என்றதுடன் முடித்துவிட்டாள்.
கல்கிக்கு அவனை போல் மனதில் தேடலில்லை! காதல் இல்லை! ஆனால் அத்தை மகன் என்ற அக்கறை இருந்தது. அவள் கண்ட ஆண்களில் அவன் வித்தியாசமானவன், அவன் மீது மரியாதையும் அன்பும் நிறைய இருக்க, அவன் மட்டும் என்னிடம் அக்கறை காட்டுவான் நான் காட்டினால் என்னைப் பேசுவானா என்ற கோபம் அவளிடம்.
ஒருவழியாக செமெஸ்டர் தேர்வுகள் முடிந்துவிட, கல்கி அன்று ஊருக்குக் கிளம்பிவிட்டாள். சிரஞ்சீவிக்கு அவளின் பிரிவை ஏற்கவே முடியவில்லை.
அந்த தேடல் காதலாகி அவனை மிகுதியாய் சோதனை செய்யத் துவங்கியது. இன்னும் பதினைந்து நாளில் வந்துவிடுவாள் என்று மனதை சமாதானம் செய்தாலும் சமனாகிவில்லை அவன் மனம்.
கல்கியைக் காண வேண்டும், அவளிடம் கதைக்க வேண்டும் என்ற பரிதவிப்பு பெருந்தவிப்பாய் அவனை ஆள, மொத்தமாய் அவனை ஆட்கொண்டாள் கல்கி!
காதல் கூட கோபமும் கூடியது. என்னமோ அக்கறை என்றாள், ஊருக்குப் போனதும் என்னை மறந்துவிட்டாள் என்று மனது மங்கையை சாடியது. அவளுக்கு அழைத்துப் பேசலாமா என்று பார்க்க மணி பதினொன்று. இந்த நேரம் அழைத்து என்ன பேசுவான்? அவள் ஊருக்குச் சென்றதும்
‘நான் பத்திரமா வந்துட்டேன்’ என்று மெசெஜ் செய்திருந்தாள். அப்போது அவன் வேலையாய் இருக்க, அதனைப் பார்த்துவிட்டு ‘ஓகே’ என்றதுடன் முடித்துவிட்டான். இப்போது பேசிவிடு என்ற உள்ளத்து உந்துதலைத் தடுக்க முடியாமல் தவித்தான்.
எதனால் எப்படி ஏன்? என்று அத்தனை வினாவுக்குமான விடையாய் இருந்தாள் ‘கல்கி’. ரசித்து ரசித்து பாவையைப் பார்த்தவனுக்கு அவனையும் மீறி ரசனை காதலாகிவிட்டது.
முன்பாவது நாலு நாள் ஓடிவிட்டது. இப்போதோ பதினைந்து நாட்கள். அவள் தன்னில் இந்தளவு கலந்துவிட்டாளா என்று அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் மனம் அவளைத் தேடியது. அம்மாவிடம் பேசினால் நன்றாக இருக்கும்போல் தோன்ற அவரிடம் பேசியும் மனம் அமைதியடையவில்லை.
இவன் இப்படி காதலால் தவிக்க, அவனைத் தவிக்கவிடாமல் கல்கியே போன் செய்தாள். அவளிடம் இருந்து இந்த நேரம் போன் வரவும் பயந்து போனாலும் ஒருவித பரவசம் அவனிடம்!
“சொல்லு கல்கி! என்ன இந்த டைம்ல?” என்று அவன் கேட்க, அவள் பதிலால் காதலாய் இருந்தவனை காரமேற்றினாள் கல்கி!
‘இனியெல்லாம் காதல் மாயம் , எனை கொன்றாய் இந்த யுகம்
சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா’
✅ End of Episode 23
Nice
கோவம் வருதா....
நல்லா தேடி தவிச்சிட்டே இருப்பா சிங்காரம்